ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

கோமதி நடராஜன்


வினைகளை விரட்டும் விக்னேஷ்வரா போற்றி
கர்மங்களைத் தொலைக்கும் காருண்யா போற்றி
புத்திக்கு வழி சொல்லும் சித்தி விநாயகா போற்றி
கலக்கங்கள் அகற்றும் கணநாதா போற்றி -4

பெற்றோரே உலகனெச் சுற்றி வந்தோனே போற்றி
உற்றவராய் உள்ளிருந்து உயர்த்துபவனே போற்றி
கற்றவர்க்குத் துணை போகும் சங்கத் தமிழே போற்றி
அற்றவர்க்கும் அருள் பாலிக்கும் தந்த முகனே போற்றி -8

வேண்டி எவர் வந்தாலும் வேழமுகம் காட்டுவாய் போற்றி
வேண்டியவர்க்கெல்லாம் வேண்டியவனானாய் போற்றி
பிடித்து வைத்தால் செல்லப் பிள்ளையாராவாய் போற்றி
பிடித்தவர்க்கெல்லாம் பிடித்தவனானாய் போற்றி -12

ஆற்றங்கரையில் அரசு புரிந்தாய் போற்றி
அரச மரத்தடியை அரியணையாக்கினாய் போற்றி
முச்சந்தியில் முதல்வனாய் நின்றாய் போற்றி
எம் சந்ததியை இனிதே வாழவைப்பாய் போற்றி -16

தினம் தொழுதால் தீமை அகற்றுவாய் போற்றி
வலம் வந்தால் வரம் அருள்வாய் போற்றி
மனதில் இருத்தினால் மாயை அகற்றுவாய் போற்றி
நினைத்த கணத்தில் நேரில் வருவாய் போற்றி -20

உகரத்துக்கு உயர்வு தந்தவனே போற்றி
கருமைக்குப் பெருமை சேர்த்தவனே போற்றி
எருக்கம் மலரை ஏற்றி வைத்தவனே போற்றி
அருகம் புல்லுக்குள் அற்புதம் படைத்தவனே போற்றி -24

ஐங்கரமும் அபயக் கரம் என்றாய் போற்றி
ஆறோடும் இடமெல்லாம் எனதென்றாய் போற்றி
ஏழேழு பிறவிக்கும் என்னோடு வருவாய் போற்றி
எட்டுத் திக்கிலும் எமைக் காத்து நிற்பாய் போற்றி -28

கவலைகளைக் களையும் கரிமுகனே போற்றி
வேதனைகளை விரட்டும் வேழமுகனே போற்றி
கஷ்டங்களைக் கரைக்கும் கஜமுகனே போற்றி
யாதும் ஆகி நிற்கும் யானை முகனே போற்றி -32

சிவசக்திக்கு மைந்தனானாய் போற்றி
சகல ஜ“வனுக்கும் ரட்சகனானாய் போற்றி
ஆண்டிக்கு அண்ணனானாய் போற்றி
அகிலத்துக்கு இறைவனானாய் போற்றி -36

‘ஓம் ‘காரத்தில் ஒலிக்கும் ஒற்றைக் கொம்பனே போற்றி
‘ரீங்காரத்தில் கலந்தத் தும்பிக்கை ஐயனே போற்றி
ஒளவைக்கு முதுமை தந்த மூத்தோனே போற்றி
வியாசருக்குத் தந்தம் தந்த ஆசானே போற்றி -40

மலைக் கோட்டையில் மணிமுடி தரித்தாய் போற்றி
வல்லக் கோட்டையில் வழி காட்டினாய் போற்றி
வக்கிரத்துண்டராய் வாழெடுத்தாய் போற்றி
முக்குருணிப் பண்டத்தில் மூழ்கினாய் போற்றி -44

பாலென்று பகர்ந்தால் பக்கம் நிற்பாய் போற்றி
தேனென்று சொன்னால் தேடிவருவாய் போற்றி
பாகோடு பருப்பும் படைத்தால் பரிவோடு காப்பாய் போற்றி
நாலும் கலந்து தந்தால் தமிழ் மூன்றும் தருவாய் போற்றி -48

சிம்மவாகனத்தில் žறி வருவாய் போற்றி
மூஷ’க வாகனத்தில் துள்ளி வருவாய் போற்றி
எள்ளிலும் இருக்க இடம் பிடிப்பாய் போற்றி
ஏழ்கடலையும் ஐங்கரத்தில் அள்ளுவாய் போற்றி -52

அன்னையில் மடியில் துயில் கொள்வாய் போற்றி
குந்துமணியில் கண்விழிப்பாய் போற்றி
தந்தை மடியில் தவழ்ந்திடுவாய் போற்றி
எந்தன் மனதில் தங்கிடுவாய் போற்றி -56

நித்திரையின்றிப் பக்தரைக் காப்பாய் போற்றி
பக்தரையின்றிப் பாவிகளையும் அணைப்பாய் போற்றி
சித்திரைச் சூட்டில் தென்றலாய் வருடுவாய் போற்றி
மார்கழிப் பனியில் கணப்பாய் வருவாய் போற்றி -60

அள்ளி வைத்த அருகம் புல்லில் அகமகிழ்வாய் போற்றி
தெள்ளு தமிழ் பாடலுக்குத் தலையசைப்பாய் போற்றி
பொள்ளிவைத்தப் பொன்னிலும் புகுந்திடுவாய் போற்றி
கிள்ளி வைத்த வெல்லத்திலும் பூரித்திடுவாய் போற்றி -64

ஆலமரத்துக்கு வேராய் நின்றாய் போற்றி
பாவிகளுக்கிடையே வேறாய் நின்றாய் போற்றி
அந்திசாயும் மாலைக்குக் குளுமை தந்தாய் போற்றி
அடுக்கித் தொடுத்த மாலைக்குள் நாராய் நின்றாய் போற்றி -68

மோதகத்துக்கு முந்தி வருவாய் போற்றி
அப்பத்துக்கு ஆடிவருவாய் போற்றி
மாங்கனிக்குச் சுற்றி வருவாய் போற்றி
தேங்கனிக்குள் தேனாய் இனிப்பாய் போற்றி -72

முக்காலும் உணர்ந்தவனே போற்றி
முழுமுதற் கடவுளே போற்றி
ஒருக்காலும் உனை மறவேன் போற்றி
எக்காலமும் எமைக் காப்பாய் போற்றி -76

வானம் வசப்பட வாயாற வாழ்த்தினேன் போற்றி
துன்பம் பறந்தோடத் துதித்து நின்றேன் போற்றி
பாவம் பொடிபட பாதம் தொழுதேன் போற்றி
சங்கடம் சருகாக வரம் வேண்டி வந்தேன் போற்றி -80

பிறவியெனும் பட்டத்துக்கு நூலானாய் போற்றி
வாழ்க்கையெனும் பாடத்துக்கு நூலானாய் போற்றி
நல்லாட்சி மன்னர்க்குச் செங்கோல் ஆனாய் போற்றி
நற்றமிழ் கற்றவர்க்கு எழுதுகோல் ஆனாய் போற்றி -84

இயற்றமிழில் இனித்திடுவாய் போற்றி
இசைத்தமிழில் ஒலித்திடுவாய் போற்றி
நாடகத்தமிழில் நடம் புரிந்திடுவாய் போற்றி
மழலைத்தமிழில் மனம் லயித்திடுவாய் போற்றி -88

துடிக்கும் இதயத்தைத் தொட்டிடுவாய் போற்றி
கவிதையாய் மனதில் கொட்டிடுவாய் போற்றி
நினைக்கும் நெஞ்சத்தில் நீடிப்பாய் போற்றி
எழுதும் கரத்தை இயக்கிடுவாய் போற்றி -92

உயிர்மெய் எழுத்துக்கு உயிர் தந்தாய் போற்றி
ஏடும் எழுத்தாணியும் நீயானாய் போற்றி
குருவின் குரல் வழி வந்தாய் போற்றி
கலைவாணியைக் கண்முன் நிறுத்தினாய் போற்றி -96

காவிரியைக் கரை புரளவைத்தாய் போற்றி
தேவிக்குத் தலைமகனாய் வந்தாய் போற்றி
பூமிக்குப் புதுப்பொலிவூட்டுவாய் போற்றி
மாந்தர்க்குள் புத்துணர்ச்சி புகுத்திடுவாய் போற்றி -100

மின்னலாய்த் தோன்றினாய் போற்றி
இன்னலைக் களைந்தாய் போற்றி
சடுதியில் வந்தாய் போற்றி
சங்கடம் தீர்த்தாய் போற்றி -104

வானவில்லின் ஏழு வண்ணங்களானாய் போற்றி
வாரத்தின் ஏழு நாட்களுமானாய் போற்றி
ராகத்தின் ஏழு ஸ்வரங்களானாய் போற்றி
லோகத்தின் ஏழு கண்டங்களுமானாய் போற்றி -108
—-
நன்றி நவிலல்
—-
என் அகத்தில் அழகாக அமர்ந்தாய் போற்றி
எண்ணத்தில் பாடலாய் உருவானாய் போற்றி
எழுத்தைச் žராக்கித் தந்தாய் போற்றி
எழுதவைத்தப் பாமாலையை ஏற்றுக் கொண்டாய் போற்றி –

—-கோமதி நடராஜன்
***
komal@ambalam.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்