அஃது

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

நரேந்திரன்


அவன் இறந்து போயிருந்தான்.

பதினைந்து செகண்டுக்கு முன்னால் பள பளவென்று இருந்த கார், இப்போது ஓங்கிக் குத்திய தகர டப்பா மாதிரி பக்கவாட்டில் அமுங்கி, விண்ட் ஷீல்டின் கண்ணாடி நொறுங்கிக் கல்கண்டுகளைப் போல அவன் மேலெல்லாம் சிதறிக் கிடந்தது. ரத்தச் சகதியுடன் பாசஞ்சர் சீட் வரை பரவி….

அவன் ‘அது ‘வாகிச் சிறிது நேரமாகி விட்டிருந்தது.

தவறு அவன் மீதுதான். சிக்னலில் சிகப்பு மினுக்கிக் கொண்டிருந்தது. நின்று, இருபக்கமும் பார்த்த்து, நிதானித்துப் போயிருக்க வேண்டும்.

அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் போதே இரவு பதினொன்றரை மணியாகி விட்டிருந்தது. முடித்தே ஆக வேண்டிய வேலை. இதற்கென பத்து புரோகிராமர்கள் பெங்களூரில் காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கான்ஃபரன்ஸ் கால் பேசியதில் மிகவும் ஆயாசமாக இருந்தது. இந்திய ஆங்கிலம் புரிவதில் மேலாளருக்குத் தடுமாற்றம் இருந்ததால் அவனும் உட்கார்ந்தே ஆக வேண்டிய கட்டாயம். மீண்டும் காலை ஏழு மணிக்கு அலுவலகம் வந்தாக வேண்டும்.

என்ன வாழ்க்கை இது ? இயந்திரத்தனமாக…நிற்காமல்…நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு.

அங்கொன்றும், இங்கொன்றுமாக விரையும் சில கார்களைத் தவிர வெறிச்சோடிக் கிடந்தது சாலை. லேசாகக் குளிர ஆரம்பித்திருந்தது. இலையுதிர் காலம் முடிவுற்று குளிர்காலம் ஆரம்பிப்பதற்கான அறிகுறி காற்றில் தெரிந்தது.

பசியும், தூக்கக் கலக்கமும் கண்களைச் சுழற்ற, இந்த இரவு நேரத்தில் யார் வரப் போகிறார்கள் என்ற அசட்டுத் துணிச்சலில் நிறுத்தாமல் ஆக்ஸிலேட்டரை அழுத்தினான். அவனை எதிர்கொள்ள எமன் எதிரே வந்து கொண்டிருந்ததை அறியாமல்.

பக்கவாட்டில் திடாரென ஒரு ஒளிவெள்ளம்.

கிறீச்….டமார்…

கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது.

மோதிய வேகத்தில் கார் மூன்று, நான்கு முறை தட்டாமாலை சுற்றி எதிர் பிளாட்பாரத்தின் மேல் ஏறி 360 டிகிரி திரும்பி நின்றது. அவன் மேல் மோதிய டாட்ஜ்-செமி டிரக் ஆசாமி கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி நூறு அடிக்கப்பால் ஒரு விளக்குக் கம்பத்தில் மேல் மோதி நின்றான்.

கொட…கொடவென்று திசைக்கு ஒன்றாய் பிய்த்துக் கொண்டு சென்ற கார் பாகங்களின் சத்தம் சட்டென்று நின்று போய், ஒருவிதமான மயான அமைதி.

அவனுக்கு உடல் லேசாகி அந்தரத்தில் மிதப்பது போன்ற உணர்வு. திடாரென்று காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். வலி எதுவும் தெரியாதது ஆச்சரியமாக இருந்தது. எப்படி காருக்கு வெளியே வந்தேன் என்று குழப்பமாக இருந்தது. அப்படியானால் காருக்குள் இருப்பது யார் ?

ஆ…தலைசுற்றுகிறதே…

தூரத்தில் இரண்டு மூன்று பேர் தங்கள் வண்டிகளை நிறுத்தி விட்டு ஓடி வந்தார்கள். அவனது காரிலிருந்து வழிந்த ரத்தத்தைக் கண்டு சடாரென ப்ரேக் அடித்தது போல நின்றார்கள். காருக்கருகில் நின்று கொண்டிருந்த அவனை அவர்கள் கண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அதிர்ச்சியும், அசூயையும் அவர்கள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

பெருங்குரலெடுத்துக் கத்தினான் அவன். ‘ஹேய்…இங்கே…மரம் மாதிரி நின்று கொண்டிருக்கிறேன். பார்க்காமல் போகிறாயே…உனக்கென்ன கண் குருடாகி விட்டதா ?..லுக் ஹியர் மேன்… ‘

ம்ஹூம்…அவர்கள் அவனைக் கவனித்தது போலத் தெரியவில்லை. ஒருவேளை கவனிக்காதது போல நடிக்கிறார்களோ ?

கடோத்கஜனைப் போலிருந்த டாட்ஜ் வண்டியிலிருந்து ஒரு வெள்ளைக்காரக் கிழவனை நான்கைந்து பேர் வெளியே இழுத்துப் போட்டார்கள். மேலெல்லாம் சிறு காயங்கள். அதிகம் அடிபட்டது போலத் தெரியவில்லை. தலையை அப்படியும், இப்படியும் ஆட்டிக் கொண்டு ‘ஐ கான்ட் பிலீவ் இட்…ஒ மை காட்…ஐ கான்ட் பிலீவ் இட் ‘ என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். கை, காலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.

ஒரு செந்தலையன் அவசர உதவி மையத்தினருடன் பதற்றமாக செல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான்.

‘ஆமாம்…செயிண்ட் ஜோசப் அவனியூவும், லாயிட் சாலையும் சந்திக்கு இடத்தில்தான்… ‘

….

‘டொயோட்டா கேம்ரியும், டாட்ஜ் செமியும்….கேம்ரி அப்பளமாக நொறுங்கிக் கிடக்கிறது. அதில் வந்த ஆசாமி பிழைத்திருக்க வாய்ப்பில்லை… ‘

என்னது! நான் பிழைக்கவில்லையா ?!!…அப்படியானால்…அப்படியானால்….!!!

‘டாட்ஜில் வந்த ஆசாமிக்கு வெளிப்படையான சிறிய காயங்கள்தான்…ஒன்றும் ஆபத்தில்லை…ஹி இஸ் ஓ.கே… ‘

தூரத்தில் சைரன் சத்தம் கேட்டது….நீலமும், சிகப்புமாக வெளிச்சம் மினுக்க ஒரு ஷெரிஃப் டிபார்ட்மெண்ட் வண்டி சடன் பிரேக்கடித்து நிற்க, அதிலிருந்து இரண்டு டெபுடிக்கள் வெளியே குதித்து அவன் காரை நோக்கி ஓடிவந்தார்கள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த இடம் ஒரு போர்க்களம் மாதிரி ஆகி விட்டிருந்தது. எங்கு நோக்கினும் போலிஸ்காரர்களும், ஸ்டேட் ட்ரூப்பர்களும், ஷெரிஃப் டெபுடிக்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ‘விய்ங்…விய்ங் ‘ என்று சத்த மிட்டுக் கொண்டே ஆம்புலன்ஸ் ஒன்று, ஃபயர் சர்வீஸ் லாரி பின் தொடர வந்து நின்றது.

அமெரிக்காவில் எந்தவொரு எமர்ஜென்ஸி அழைப்பிற்கும் வெறும் ஆம்புலன்ஸ் மட்டுமே வருவதில்லை. போலிஸ், ஃபயர் சர்வீஸ், ஆம்புலன்ஸ் என்று ஒரு பெரும் படையே ‘விய்யாங்…விய்யாங் ‘ என்று கதறிக் கொண்டு வந்து நிற்கும். அது பள்ளத்தில் விழுந்த நாய்க் குட்டியைப் காப்பாற்றுவதானாலும் சரி அல்லது பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல் போரடித்துப் போன சீனியர் சிட்டிசன் கிழவி அழைத்தாலும் சரி. அத்தனை பேரும் வரிசையாக வந்து நிற்பார்கள்.

அவனொரு ‘பூட்ட கேஸ் ‘ என்பது அப்பட்டமாகத் தெரிந்ததால், அனைவரும் டாட்ஜ் கிழவனை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

‘This guy never stopped the car at the intersection…He was just flying through…Oh my Goodness! ‘ என்று கிழவன் புலம்பியதில் இன்சூரன்ஸ் பணம் ‘பணால் ‘ என்று புரிந்தது அவனுக்கு. கேஸ் போட்டாலும் கோர்ட்டில் நிற்காது.

அது சரி. யார் கேஸ் போடுவார்கள் ? அவன்தான் செத்துப் போய்விட்டானே!

டெபுடி ஒருவர் கருமமே கண்ணாக கிழவன் சொல்வதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தார்.

‘இஸ் ஹி ஆல்ரைட் ? ‘ என்றார் டெபுடி.

‘ஆபத்தாக ஒன்றுமில்லை. ஜஸ்ட் ஷாக்தான். எதற்கும் மருத்துவமனைக்குக் கொண்டுபோய் ஒரு எக்ஸ்-ரே எடுத்துவிடலாம். உள் காயம் எதுவும் இருந்தால் தெரிந்துவிடும் ‘ என்றான் நீலச் சட்டை மருத்துவ உதவியாளன்.

சடாரென புஷ்பாவின் நினைவு வந்தது அவனுக்கு. என்ன செய்து கொண்டிருப்பாள் அவள் ?

இன்னும் அரை மணி நேரத்தில் அவன் இறந்து போனதை யாராவது போலிஸ் டிபார்ட்மெண்ட் ஆசாமி நேரடியாக அவனின் வீட்டிற்குப் போய்த் தெரிவிப்பார்.

தொப்பியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு, ‘Madam, we regret to inform you that your husband…ப்ளா..ப்ளா…. ‘ என்பார்கள் சோக முகத்துடன். அமெரிக்கச் சம்பிரதாயம்!

அமெரிக்காவில் எழவு சொல்லும் ஃபார்மலிட்டியில் கூட புரொஃபஷனலிசம்தான்.

‘நான் இறந்து போனதை நினைத்து புஷ்பா அழுவாளா ? சந்தோஷப்படுவாளா ? எனக்கென்னவோ சந்தோஷப்படுவாள் என்றுதான் தோன்றுகிறது.. ‘

நினைக்க நினைக்கத் துக்கம் தொண்டைய அடைத்தது அவனுக்கு.

ஐயோ புஷ்பு! புஷ்பு! மை டார்லிங்!

எத்தனை முறை உன்னை மிருகத்தனமாக அடித்திருப்பேன் ? எத்தனை முறை சாப்பாட்டுத் தட்டை உன் மீது வீசி எறிந்திருப்பேன் ? எத்தனை முறை உன் மனதை சுடு சொற்களால் ரணப்படுத்தியிருப்பேன் ?

உன் தகப்பனாரின் சென்னை வீட்டை என் பெயருக்கு எழுதிவைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் உன்னை சாப்பிட விடாமலும் தூங்க விடாமலும் கொடுமைப் படுத்தினேனே. அதைச் சொல்வதா ?

அல்லது கர்ப்பமாயிருந்த உன்னைக் காலால் நான் எட்டி உதைத்தில் கர்ப்பம் கலைந்து போனதே…ஹாஸ்பிட்டலில் கேட்டதற்கு தவறி கீழே விழுந்து விட்டேன் என்று எனக்காகப் பொய் சொன்னாயே…அதை சொல்லவா ? அமெரிக்கா அழைத்து வந்தும் உன்னை அடிமை போல நடத்தினேனே அதையா ?

எதைச் சொல்லி, எதை விட ?

இந்த பாவியை மன்னிக்க மாட்டாயா புஷ்பம் ?

‘ஓ ‘வென்று குரலெடுத்து அழ வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அடக்கிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தான். ஏப்பம் விடுவதற்கே ‘எக்ஸ்க்யூஸ்மி ‘ கேட்கிற தேசத்தில், ஓங்கி அழுதால் உதைக்க வருவார்களோ ?

வாட் த ஹெல்! நடப்பது நடக்கட்டும். அடக்க மாட்டாமல் அடிவயிற்றிலிருந்து அழுகை பீறிட்டுக் கிளம்பியது.

யாரும் சட்டை செய்தது மாதிரி தெரியவில்லை.

செத்துப் போனவனின் அழுகை யாருக்குக் கேட்கப் போகிறது ?

மோதலில் சிக்கி இறுகிப் போயிருந்த கதவை இரண்டு ஃபயர் சர்வீஸ் ஆசாமிகள் பிய்த்து இழுத்துத் திறந்தார்கள். கையுறை அணிந்த போலிஸ்காரர் ஒருவர் அவன் பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டுத் துளாவி, பர்சை எடுத்து, லைசன்சை உருவினார். ரத்தத்தில் நனைந்து போயிருந்தது பர்ஸ்.

‘சீஃப். என்னால் இந்தப் பெயரைப் படிக்க முடியவில்லை. Some kind of asian name…. ‘

சீஃப் எனப்பட்டவர் லைசன்சை நுனிவிரலில் வாங்கி, டார்ச்சடித்துப் பார்த்துப் புருவம் நெரித்து, ‘ப்ச்…ஆல்ரைட்….இந்தியனைப் போலத் தெரிகிறது. லெட் அஸ் கால் ஹிம் Bob! Indian Bob! ‘ என்றார்.

சங்கரநாராயணன் ராமசுப்பிரமணியன் என்ன அழகான தமிழ்ப் பெயர் ? பத்து செகன்டில் Bob ஆக்கிவிட்டார்களே படுபாவிகள்! அம்மாவுக்குத் தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவாள். அவள் ஆசையுடன் வைத்த தாத்தாவின் பெயராயிற்றே ? இப்படி Bob ஆக மாறிப்போனது தெரிந்தால் என்ன நினைப்பாளோ ?

அம்மா!

‘டேய் ராஜா! அப்பாவுக்கு தினமும் இன்சுலின் போட வேண்டியதாயிருக்கு. எனக்கும் கால்ல நீர் கோர்த்துக்கிட்டு நடக்க முடியாம முட்டிக்காலெல்லாம் ஒரே வலி. டாக்டர் செலவுக்கு ஒரு பத்தாயிரம் ரூபா அனுப்பி வையேண்டா! புண்ணியமாப் போகும் ‘

‘பணம் என்ன மரத்துலயா காஞ்சு தொங்குது ? எப்பப் பாத்தாலும் பணம் கேட்டுகிட்டு! அண்ணா என்ன பண்றான் ? அவங்கிட்ட கேக்க வேண்டியதுதானே ? ‘

‘பாவம் அவன் என்னடா பண்ணுவான் ? வர்ற சம்பளத்துல ரெண்டு கொழந்தைகள வச்சுகிட்டு மல்லாடுறதுக்கே அவனுக்கு பணம் போதலே…அதனாலதான்…தயவு பண்ணு… ‘

‘உன்னோட பெரிய நியூசென்சாப் போச்சும்மா! போனாப் போகுதுன்னு செலவு பண்ணி உனக்கு ஃபோன் பண்ணுணா, பணம் பணம்னு புடுங்குறியே…ஃபோன வெய்யி கீழே… ‘

ஐயோ அம்மா! என்னைப் பெற்று வளர்த்த உன் வைத்திய செலவுக்கு ஒரு இருநூற்றைம்பது டாலர் அனுப்பாமல், ஐந்தாயிரம் டாலருக்கு ப்ளாஸ்மா டி.வி. வாங்கிப் பார்த்த இந்தப் பாவியை மன்னிப்பாயா அம்மா ?

கழிவிரக்கத்தில் குமுறிக் குமுறி அழுகை வந்தது அவனுக்கு.

இறைவா எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுப்பாயா ?

டெலிவிஷன் ஸ்டேஷன் வண்டி ஒன்றில் வந்த காமிரா குழுவினர், விபத்தைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். நாளை காலை லோக்கல் டி.வி. நியூசில் செய்தி வரும்.

‘Fatal accident at Lloyd. Car smashed. One dead… ‘

அவன் கம்பெனிக்கு தகவல் தெரிவிப்பார்கள். இன்ட்ராநெட்டில் கம்பெனி முழுமைக்கும் தகவல் போகும்.

‘Oh! that weird Indian guy! I know him… ‘ என்று ஐந்து நிமிடம் பேசிவிட்டு அப்புறம் மறந்து போய்விடுவார்கள்.

அமெரிக்கா!

ஆம்புலன்ஸ் டிரைவர் பெண்மணி மிக அழகாக இருந்தாள். இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்க வேண்டும் அவளுக்கு. இந்த நடுநிசி நேரத்தில் கூட முகம் நிறைந்த மேக்கப்புடன், செவ செவ என லிப்ஸ்டிக் தீற்றி ‘பம்சிக்க ‘ என்று இருந்தாள். இந்தச் சூழ்நிலையிலும் அவள் கன்னத்தைக் கிள்ளியே ஆக வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

மெதுவாக அவள் கன்னத்தை நிமிண்டினான். ஆச்சரியம்! எந்தத் தொடு உணர்ச்சியும் அவன் விரல்களில் உண்டாகவில்லை. ஏதோ புகைக்குள் கை நுழைக்கும் உணர்வு.

ஐயோ! இது என்ன அவள் கன்னத்திற்குள்ளேயே என் விரல் நுழைகிறதே! இந்தக் கன்னத்தில் நுழைந்து அந்தக் கன்னம் வழியாக விரல் தெரிகிறதே! வாவ்!…திஸ் இஸ் இண்டரெஸ்டிங்…இடது கன்னம்…வலது கன்னம்….அய்ந்தப் பக்கம்…இய்ந்தப் பக்கம்…இ..பக்கம்…அ…பக்கம்….

அவள் எதையும் உணராதவள் போலக் கையைக் கட்டிக் கொண்டு, சூயிங் கம் மென்று கொண்டிருந்தாள்.

மருத்துவ உதவியாளர்கள் அவனைக் காரிலிருந்து கீழிறக்கி, ஸ்ட்ரெச்சரில் கிடத்த முயன்று கொண்டிருந்தார்கள்.

ஸ்ட்ரெச்சரில் ஏற்றி வைக்க மேலே தூக்குகையில், நசுங்கிக் கூழாகிப் போயிருந்த இடது கை ‘சொத் ‘தென்று தரையில் விழுந்தது.

அவனுக்கு வலிக்கவேயில்லை.

***

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்