நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

அரவிந்தன் நீலகண்டன்


பிரெட் ஆலன் வூல்ப் ஒரு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் உலகம் சுற்றும் விரிவுரையாளர். க்வாண்டம் இயற்பியலுக்கும் தன்னுணர்வுக்குமான தொடர்பு குறித்து விவாதத்துக்குள்ளாகும் பல கருதுகோள்களை அவர் முன்வைத்துள்ளார். அவரது முக்கியமான பிறநூல்கள் ‘Taking the Quantum Leap ‘, ‘The Eagle ‘s Quest ‘ மற்றும் ‘Parallel Universes ‘. ‘கனவு காணும் பிரபஞ்சம் ‘ எனும் இந்நூலில் உளவியல், உயிரியியல் மற்றும் க்வாண்டம் இயற்பியலின் துணையுடன் ஆஸ்திரேலிய பழங்குடிகளின் பிரபஞ்சவியல் முதல் இன்றைய நவீன கனவு ஆராய்ச்சிசாலைகள் வரை என பற்பல கண்டடைவு முறைகளில் கிட்டும் சித்திரங்களை தொடர்புபடுத்தும் ஓர் பிரயாணத்தில் அவர் வாசகரை அழைத்துச் செல்கிறார். கனவு காண்பதென்பது செமிக்காத இரவுணவின் விளைவா ? அல்லது பிரபஞ்ச இருப்பிலும் இயங்கலிலும் இன்றியமையாது இணைந்ததோர் இயற்கையா ? அதற்கும் தன்னுணர்வுக்குமான தொடர்பென்ன ? கனவின் எல்லைக்கோடுகள் எவை ? கனவுகள் எங்கே தொடங்கி எங்கேமுடிகின்றன ? பல பண்பாட்டுப் பார்வைகளில் அவற்றின் பிரபஞ்சக்கதையாடலில் கனவுகளின் இடம் என்ன ? தன்னுணர்வு குறித்த நம் ‘அறிவியல் ‘ அறிதலில் கனவின் இயற்கை குறித்த நம் அறிவு எத்தகைய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது ? என பல கேள்விகளுக்கான விடைகளினை தேடும் முயற்சியாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் பல கருத்துக்கள் துணிகரமானவை. எனினும் அவற்றை நிரூபிக்க அல்லது பொய்ப்பிக்க முயலும் எந்த முயற்சியும் நமக்கு மேலும் பல உண்மைகளை தரக்கூடும்.

பெஞ்சமின் லிபெட் எனும் நரம்பியல் ஆய்வாளர் (சான்பிரான்ஸிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம்) கால ஓட்டத்தின் எந்த புள்ளிகளில் நமது தன்னுணர்வு வெளியுலகிலிருந்து நாம் பெறும் உணர்வு-உள்ளீடுகளுடன் தொடர்பு கொள்ளுகிறது என்பது குறித்து சில முக்கியமான கண்டுபிடிப்புகளை 1970களில் முன்வைத்தார். இக்கண்டுபிடிப்புகளின் சாராம்சம் மூளையிலும் அதன் நரம்புப்பின்னல் மண்டலத்திலும் ஒருவித ‘காலத்தில் பின் சென்றறிதல் ‘ எனும் நிகழ்வு நடக்கிறது. அதுவே நம் உடனடியாக விஷயங்களை உள்வாங்கி எதிர்வினையாற்றும் ‘ திறனுக்கு காரணம் என்பதாகும். இந்த வியக்கதகுத்தன்மை நம் மூளையில் எவ்வாறு ஏற்படுகிறது ? இதன் இயக்க கோட்பாடு என்ன என்பது ஆராய்ச்சிக்குரிய மர்மமாக உள்ளது. வூல்ப் க்வாண்டம் இயற்பியலின் தன்மைகளை இவ்வியக்க நிகழ்வில் காண்கிறார் (பக்.89-102). இது குறித்த வூல்பின் ஆய்வு ‘Journal of Theoretical Biology ‘ யில் வெளியானது. இந்த ஆய்வுதாள் அதாவது லிபெட்டின் பரிசோதனை முடிவுகளை க்வாண்டம் இயற்பியல் அடிப்படையில் வூல்ப் விளக்க முற்படுவது குறித்து லிபெட் சில கேள்விகளை எழுப்புகிறார். அக்கேள்வி களுக்கான விளக்கங்களுடன் லிபெட்டின் ஆய்விலிருந்து நாம் அறிபவற்றிலிருந்து கனவுகளின் இயற்கை குறித்தும் வூல்ப் சில ஊகங்களை செய்கிறார். நம் அனைத்து செயல்களுக்குமான வேர் நனவிலியிலிருந்து பெறப்படுகிறதென்பதை லிபெட்டும் ஒத்துக்கொள்கிறார். புற உலகு நம் மூளைக்கு அளிக்கும் உள்ளீடுகளை மூளை முழுவதுமாக பெறுவதற்கு முன்பாகவே எதிர்வினை (நனவிலியிலிருந்து ?) உருவாகிறது ஆனால் அதன் முழுமையான செயல்பாட்டு வெளிப்பாடு உள்ளீடுகளை மூளை முழுவதுமாக பெற்றபின் அதற்கேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. வூல்ப் இந்த இடத்தில்தான் ‘புற ‘ உலகுக்கும் கனவுலகுக்குமான கோடும் கலவியும் ஏற்படுவதற்கான தோற்றப் புள்ளிகள் இருப்பதாக கருதுகிறார். (பக். 100)

பின்னர் கனவு குறித்த பல அறிவியலாளர்களின் ஆய்வுகள் முன்யூகங்கள் ஆகியவற்றை தொகுத்தளிக்கிறார் வூல்ப். ஜோனதன் வின்சனின் விலங்குகளின் கனவு குறித்த பரிசோதனைகளில் தூக்கத்தில் ஏற்படும் கண் வேக அசைவு (REM-Rapid Eye Movement) நிலையினை அடிப்படையாக கொண்டு நனவிலி செயலியக்கம் விலங்கின உலகில் பரவலாக காணப்படுவதாகவும் விலங்கின ஜீவித்தலுக்கு இந்த நனவிலி இயக்கம் அவசியமானதெனவும் அவர் முடிவுக்கு வருகிறார். நனவிலியும் சரி தன்னுணர்வும் சரி பெளதீக இயற்கையில் இருப்புடையவை என்றும் தொடர்ச்சியுடையவை என்றும் டெஸ்கார்ட்டாய மன-உடல் பகுப்பு தவறென்றும் அவர் கூறினார். இங்கிருந்து பயணத்தை துவக்குகிறார் வூல்ப். கிப்போகாம்பஸ், அமைக்தாலா ஆகிய மூளை அமைப்புகளின் பங்கு விவரிக்கப்படுகிறது. ஒரு சோகமான பாடல் நமக்கு ஒலி உள்வாங்குதல் எனும் நிலைக்கு அப்பால், அந்த ஒலிக் கூட்டம் சோக இசையாக உணர்ச்சியேற்றப்பட்டு மாற்றப்படுவது, சோகமாக்கப்படுவது அமைக்தாலாவால் இருக்க கூடும். அமைக்தாலா உணர்ச்சிகளின் உறைவிடமாக நரம்பியல் ஆராய்ச்சியாளர்களால் அறியப்படுகிறது. அமைக்தாலா, கிப்போகாம்பஸ் இவை எல்லாம் நம் பரிணாமத்தில் புராதன காலத்தில் எழுந்தவையாகும். இன்று பல கனவு ஆய்வகங்களில் நமக்கு கிடைக்கும் சித்திரம் அவை பொருளுடையவை ஆனால் ப்ராயிடும் உங்கும் கூறிய பொருளில் அல்ல என காட்டுவதாக வின்ஸன் அவரது பரிசோதனைகள் அடிப்படையில் அமைக்கும் கோட்பாடு அமைகிறது என்கிறார் வூல்ஃப் (109). நினைவுகளை உருவாக்கும் இயக்கமாக LTP (Long Term Potentiation) கண்டறியப்பட்டுள்ளது. இது ஹிப்போகாம்பஸுடனும் மூளையின் தீட்டா ரித இயக்கத்துடனும் தொடர்புடையதாகும். விலங்குகளில் அவை அவற்றின் வாழ்க்கையில் உயிர்வாழ இன்றியமையா அன்றாட தேவையான இயக்கங்களில் அவ்விலங்குகள் ஈடுபடுகையில் தீட்டா ரிதம் உருவாகிறது. உதாரணமாக எலிக்கு – அது இடங்களுக்குள் நுழைகையில் தீட்டா ரிதம் உருவாகிறது; பூனைக்கோ வேட்டை இயக்கத்தில் தீட்டா ரிதம் உருவாகிறது. வின்சன் தீட்டா ரிதம் உருவாகும் செல்லமைப்புகள் ஹிப்போகாம்பஸில் இருப்பதை கண்டுபிடித்தார். இவை அழிக்கப்பட்ட எலிகள் வெளி குறித்த நினைவை இழந்துவிடுகின்றன. விழிப்புநிலையில் LTP நிகழ்வுகளில் ஏற்படும் தீட்டா ரிதங்கள் தூக்கத்தின் REM நிலையிலும் ஏற்படுவதை வின்ஸன் அறிந்தார் பிரைமேட்களில் தீட்டா ரிதம் காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டுகிறார் வின்ஸன். ஆனால் அதற்கு இணையான மற்றோர் நரம்பியக்கம் இருக்ககூடும்.உயிர்வாழ்வதற்கான இயக்கமுறைகளில் முக்கியமான தகவமைப்புகளில் ஒன்றே கனவுகாண்தல். மனிதர்களை பொறுத்தவரையில் நனவிலியிலிருந்து தகவல்களை பெறும் உயிரியக்கமாக கனவினை காணலாம் என்கிறார் வின்ஸன். (பக். 112)

அடுத்ததாக புகழ்பெற்ற கிரிக் மிட்சிஸன் ஆய்வுகள் ஆராயப்படுகின்றன. நம் கனவுகள் நாம் சிலவற்றை மறப்பதற்காக ஏற்பட்ட உயிரியக்கமாக இருக்க கூடும். மேலும் கற்றவை களைதல் (unlearning) எனும் பண்பு மாறும் சூழலில் உயிர்வாழ மிகவும் அவசியமானதாக இருக்கலாம். அதற்கான ஒரு இயக்கமாக கனவு விலங்கினங்களிலும் மானுடர்களிலும் ஏற்பட்டிருக்கலாம். இதுவே கிரிக்-மிட்சிஸன் ஆய்வு முடிவுகளின் சாராம்சம். கணினிகளின் நியூரல் நெட்வொர்க்களிலிருந்து பெறும் ஆராய்ச்சி தகவல்களிலிருந்து இத்தகைய கழிவு நினைவுகள் மற்றும் கற்றவையகற்றல் ஆகியன குறித்து சில புதுவித பார்வைகள் பெறப் படுகின்றன (பக்115-123). சில வியக்கத்தகு விலங்குலக விந்தைகளும் விவாதிக்கப் படுகின்றன.உதாரணமாக டால்பின்களில் REM இயக்கம் காணப் படுவதில்லையாம். ஆனால் அவற்றின் மூளைகள் மிகப்பெரியவை. ஒருவேளை REM இல்லாத நிலையில் கழிவு நினைவுகள் மற்றும் கற்றவையகற்றலுக்கு பெரிய அளவில் நியூரானிய கட்டமைப்புக்கள் தேவைப்படலாம் என்கிறார் வூல்ப்.

அடுத்ததாக ஆலன் ஹாப்சனின் ஆராய்ச்சி முடிவுகளும் அவர் முன்வைக்கும் முடிவுகளும் வூல்பினால் விவரிக்கவும் விவாதிக்கவும் படுகின்றன. ஹாப்சன் கனவின் ஐந்து தன்மைகளை குறிப்பிடுகிறார்,

1. தீவிர உணர்ச்சிகள்

2. பகுத்தறிவுக்கு, நம் காலவெளி குறித்த சாமன்ய தன்மைக்கு, நாமறிந்தவர்களின் இயல்புக்கு – புறம்பானதாக, நம் நனவுலகின் விதிகளுக்கு அப்பாற்பட்ட தன்மையில் அமைவது.

3. ஏற்கனவே நாம் அனுபவித்த உணர்ச்சிகளை மீளனுபவித்தல்

4.இவையனைத்தையும் எவ்வித கேள்வியுமில்லாமல் ஏதோ ஒருவிதத்தில் ஏற்றுக் கொள்ளுதல்

5.கனவு உடனடியாக பதிவு செய்யாத பட்சத்தில், கனவின் உட்கிடப்பினை நினைவு படுத்துவதில் நாம் பொதுவாக சிரமம் கொள்ள வேண்டியிருப்பது.

ஹாப்சன் குறியீட்டு விளக்கங்கள் (ப்ராயிட்), முன்னறிவிப்பு விளக்கங்கள்(prophetic) ஆகியவற்றை நிராகரிக்கிறார். ‘பலவிதங்களில் உளநோய் மாதிரியாக கனவு அமைகிறது. ஆனால் கனவு ஒரு உளநோய் அல்ல. கனவு காண்பவர் உளநோயாளி அல்ல. ஆனால் கனவு உளநோய் என்றால் என்ன என்று உணர்த்துகிறது ‘ (பக்.128) என்பது ஹாப்சனின் நிலைபாடு. நமது மூளையின் போண்டினே செல்களை கனவின் நரம்பியல் இருப்பிடமாக ஹாப்சன் கண்டறிகிறார். இதில் ஏற்படும் கோலிங்கரிக் தாண்டல் எனும் இயக்கம் வூல்ப்பால் விளக்கமாக விவரிக்கப்படுகிறது.நமது நரம்பு மண்டலத்தில் அமினெர்ஜிக் மற்றும் கோலிங்கரிக் என இரு அமைப்புகள் காணப்படுகின்றனவாம். முன்னதன் செயலியக்க நிலை நம் விழிப்பு. அச்சமயம் கோலிங்கரிக் அமைப்பு செயல்படுவதில்லை. அமினெர்ஜிக் அமைப்பு ஓய்வடைகையில் நாம் துயில்கிறோம். அப்போது கோலிங்கரிக் அமைப்பு செயல்பட ஆரம்பிக்கிறது. இனி REM நிலைக்கு வருகையில் மூளையில் ஏற்கனவே அமினெர்ஜிக் அமைப்பு செயலற்று உள்ளது அதேசமயம் போன்டோ-ஜெனிகுலோ-ஆசிபிட்டல் மின்னதிர்வுகள் மூளையில் அலை மோதுகின்றன. நம் நனவுலக இயற்கையிலிருந்து வேறுபடும் கனவின் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கு இவை காரணமாக இருக்கலாமா ? ஹாப்சன் கனவுகள் இயக்கத்துடன் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். கருவிலிருக்கும் குழந்தைகளின் கண்ணின் வேக அசைவு குறித்த ஆராய்ச்சியுடன் இப்பகுதியை முடிக்கிறார் வூல்ப். இனி நாம் இந்த கனவு பிரயாணத்தில் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புனித சடங்குகள் மற்றும் புராணங்களின் உலகுக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம்.

வூல்ப் பழங்குடியினருடன் இருந்து கிரகித்த பல விஷயங்கள் குறிப்பாக பிரபஞ்ச தோற்றம் மற்றும் மானுட இனத்தின் தோற்றம் ஆகியவை குறித்த இம்மக்களின் புனித கதைகளில் கனவின் மையப்பங்கு நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. கடும் அறிவியலின் (Hard science) கனவு ஆராய்ச்சி ஊகங்களிலிருந்தும் முடிவுகளிலிருந்தும், பழங்குடியினரின் புனிதக்கதையாடல்களில் கனவுகளின் மையத்தன்மைக்கு நாம் அழைத்து வரப்படுகையில் ஒருவித தாவல் நம் மனதில் ஏற்படுகிறது. அத்தாவலில் சில சொல்ல இயலாத உச்சங்களை நம்மால் உணர முடிகிறது. உதாரணமாக இந்த மேற்கோளை படித்துப்பாருங்கள், ‘ஆஸ்திரேலிய பழங்குடிகள் இருவித காலங்களின் இருப்பினை நம்புகின்றனர். இரு இணையாக ஓடும் இயக்கம். ஒன்று நீங்களும் நானும் பங்கு கொள்ளும் புறவய அறிதலுக்கு இணங்கும் ஒரு கால ஓட்டம். மற்றதோ கனவுக்காலம். முடிவிலி ஆன்ம சுழற்சியான இக்காலம் நனவுலக காலத்தினைக் காட்டிலும் உண்மை செறிந்தது. இக்கனவுகாலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளே ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புனித குறியீடுகள், மதிப்பீடுகள் மற்றும் வாழ்க்கை நடைமுறை விதிகள் ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. அதீத ஆன்மிக ஆற்றல் வாய்ந்த சிலர் இப்புனித கனவுக்காலத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர். ‘

கனவுகாலம் என்பது கூட வெள்ளையரின் பதம் தானாம், வூல்ஃப் கூறுகிறார். ஆதிவாசிகளை பொறுத்தவரையில் கனவு என்பது நனவுலகுடன் இணைந்தியங்கும் ஒரு இருப்பு என்கிறார். (அருந்தா அல்லது அரண்தா எனும் ஆதிவாசி இனத்தாரின் ‘அல்கெரிங்கா ‘ எனும் பதத்தை ஸ்டானர் என்பவர் கனவுகாலம் என மொழிபெயர்த்தார்.)

ஆதிவாசிகளின் புராண நாயகர்கள் வீர புருஷர்கள் தம் சாகஸங்களை இந்த அல்கெரிங்காவிலேதான் செய்கின்றனர். ஆதிவாசி புராணங்களை ஆய்வு செய்த காரெட் பர்டெனின் வார்த்தைகளில் ‘அனைத்து புராணங்களும் உண்மையானவை ஏனெனில் அவை புனிதமானவை ‘. ஆனால், வூல்ஃப் வினவுகிறார், ‘எந்த அளவுக்கு கனவுகாலம் என்பது போன்ற ஒரு புராண ரீதியிலான கற்பனை உண்மையாக இருக்க முடியும் ? இது நுட்பமான விதத்தில் அணுகப்பட வேண்டிய பிரச்சனை. புராண சம்பவங்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ நாம் அணுகுகையில் அவைகளில் காணப்படும் காலமானது நாம் நேர்கோட்டில் அறியும் காலமல்ல. சூரியனை பூமி சுற்றிவருவதாலோ அல்லது பாரிஸில் ஒரு பரிசோதனை சாலையிலுள்ள ஒரு சீசியம் அணு ஒளிச்சிதைவடைவதையோ அடிப்படையாக கொண்டு நாம் அனுபவிக்கும் காலமல்ல புராணம் நிகழும் காலத்தின் இயற்கை ‘(பக் 149). வரலாற்றின் கால ஓட்டத்தையும் புராணத்தின் கால ஓட்டத்தையும் (கனவுகாலம்) வூல்ப் இங்கு வேறுபடுத்துகிறார். ஆனால் நெடுநீள வரலாற்றுக் கால ஓட்டத்துடன் புராண கால ஓட்டமும் இணைந்து ஒருவித இழையோட்டமாக விளங்குவதே மானுட சமுதாயங்களின் வரலாற்றில் நாம் காண்பது. ஆதிவாசியை பொறுத்தவரையில் புராணங்கள் நிகழும் கனவுக்காலம் மீண்டும் மீண்டும் நிகழும் தன்மையுடன் என்றென்றும் புதிப்பிக்கப்பட்டவாறே உள்ளது. நம்முடைய புராணம் எனும் பதமும் புராதனமானது கூடவே நவமானது எனும் பொருள் படும் பதச் சேர்க்கையே (புராண்+அபி+நவம்). வூல்ப் தான் ஆதிவாசிகளுடன் (பிந்துபி) வாழ்ந்து பழகிய அனுபவங்களூடே அவர்களது வாழ்க்கைக்கும் கனவுகளுக்கு அவ்வாழ்க்கையிலிருக்கும் முக்கிய இடத்துக்கும், நனவுலகும் கனவுலகும் ஒன்றுடனொன்று மேலோடும் தருணங்களையும் விவரிக்கிறார். (பக் 140-156) ஒரு பெருங்கனவின் பகுதிகளாக நம்மை காணும் நவீன அறிவியல் கதையாடலின் போக்கும் ஆதிவாசிகளின் புனித கதையாடலின் போக்கும் குவியும் ஓரிடம் – நாம் இப்பெரும் கனவின் பாகமெனில் இக்கனவின் நோக்கமென்ன ? ஆதிவாசிகளை பொறுத்தவரையில் ஓர் கனவின் அங்கமெனும் உணர்வில் உறவுகளில் அன்பினை வளர்த்தல்தான் இப்பெரு பிரபஞ்ச கனவில் உள்ளோடும் பொருள்.

கருவிலிருக்கும் சிசுவின் வளர்ச்சியில் கனவின் பங்கு முக்கியமானதென அண்மையில் நடத்தப்பட்ட சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கனவுகளின் அதீத உணர்ச்சித்தன்மை ‘கனவு மர்மத்தில் ‘ முக்கியமான ஒரு தடயமாக இருக்கலாம். பொதுவாக அதீத உணர்ச்சிக்கு பரிணாம செயல்பாடு இருக்கும். எனவே கனவுகள் பரிணாமத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கலாம். பிரபஞ்ச கனவிலும் அதீத உணர்ச்சிகள் செயல்படுகின்றனவா ? எனும் கேள்வியை வூல்ப் அடுத்து எழுப்புகிறார். (பக்.159) கனவின் மர்மம் குறித்த பல முடிச்சுகளை க்வாண்டம் இயற்பியல் முடிச்சவிழ்க்கும் என வூல்ப் நம்புகிறார். (இங்கே ஒரு விஷயம் சொல்லப்பட வேண்டும். பல உயிரியலாளர்கள் மற்றும் மூளை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சூசன் பிளாக்மோர் போன்ற டார்வினிய உளவியலாளர்கள் இத்தகைய க்வாண்டம் இயற்பியலாளர்களின் முயற்சிகளை சந்தேக கண்ணுடனேயே பார்க்கிறார்கள். தேவையில்லாமல் ஒரு க்வாண்டம் மர்மத்தை இங்கே இயற்பியலாளர்கள் உருவாக்குவதாக குற்றச்சாட்டு. இந்த சர்ச்சை குறித்து விளக்கமாக அறிந்து ஈடுபடுவது நம் ஆய்வாளர்களை அறிவியலின் அறிதல் விளிம்பிலிருந்து அதை முன்னகர்த்த உதவும்.) அடுத்ததாக மன அமைப்பின் ப்ராயிடிய பாகங்களில் க்வாண்டம் தன்மையினை காண்கிறார் வூல்ப். அவை அ-தர்க்க அமைப்புகள் (alogical structures-க்வாண்டம் இயற்பியலில் இத்தகைய அ-தர்க்க அமைப்பாக ஹில்பர்ட் வெளி அறியப்படுகிறது) என்கிறார். உதாரணமாக ப்ராயிடின் ‘id ‘ குறித்த விளக்கம், ‘ தர்க்க விதிகளுக்கு ‘இத் ‘ -க்கு பொருந்தாது….மாறாக உணர்ச்சி துடிப்புகள் ஒன்றை ஒன்று அழித்து விடாமல், ஒன்றினை ஒன்று குறைத்து விடாமல் ஒன்றினருகே ஒன்றாக வாசம் செய்கின்றன. ‘ க்வாண்டம் இயற்பியலின் ஹில்பர்ட் வெளி போன்றே ப்ராயிடிய ‘இத் ‘ -தும் காலம் துலங்கும் ஓரு வெளியல்ல. (பக்.169) பெரும் பிரபஞ்ச கனவில் ‘நான் ‘ தொடங்குவது எங்கிருந்து ? முடிவது எவ்விடம் ? ‘ஒருங்கிணைந்த காரண-காரியத் தொடர்பற்ற உறவுகள், க்வாண்டம் இயற்பியல் நிகழ்ச்சிகள் இவையே தன்னுணர்வினை உருவாக்குகிறது எனில் இத்தன்னுணர்வு என்னுள் எங்கோ ஓரிடத்தில் இல்லை, இப்பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளது…இவ்விதத்தில் முரண்நிலையாக ‘நான் ‘ இல்லவே இல்லை…அத்துடன் நானே சர்வமும்….நானே அனைத்து பிரபஞ்சமும், என உணரும் அளவு ‘நான் ‘ பரிணமித்தால். ‘ (பக்.174)

அடுத்ததாக கனவு டெலிபதி குறித்த சில பரிசோதனைகளும் அதன் முடிவு குறித்து போமின் இயற்பியல் சித்தாந்த துணையுடன் சில விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பதிலேயே இந்த இடம்தான் நூலின் மிக பலவீனமான பகுதி என நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.(பக்175-189). பிரெடரிக் வான் ஈடென் முதன்முதலாக லூசிட் கனவுகள் எனும் பதத்தை உருவாக்கினார். ஏறக்குறைய விழிப்பு நிலை கனவுகள்,கனவுகள் போலவே நம் அறிதலில் மர்மமாக இருந்துள்ளன. இக்கனவுகளில் பெரும்பாலும் நாம் கனவு காண்பதை குறித்த உணர்வுடனேயே இக்கனவில் நாம் பங்கேற்கிறோம் மேலும் கனவின் போக்கையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஹோலோகிராம் செயலியக்க அடிப்படையில் இவற்றை விளக்க வூல்ப் முற்படுகிறார் (பக். 201)

அடுத்ததாக கனவுடல் குறித்து. அர்னால்ட் மிண்டெல் உடல் உபாதைகளின் சைகைகளாக கனவுகளை அறிந்ததிலிருந்து கனவுடல் எனும் ஒரு கோட்பாட்டினை அவர் உருவாக்கினார். க்வாண்டம் சாத்திய புலமாக கனவுடலையும் ஒரு குறிப்பிட்ட பருப்பொருட் அடர்வாக (சரியாக சொன்னால் collapse ஆக ? அவ்வார்த்தையை வூல்ப் பயன்படுத்தவில்லை) நனவுடலையும் வூல்ப் காண்கிறார். (பக். 215-16)

அடுத்த 125க்கும் சற்றே அதிகமான பக்கங்களில் பறக்கும் தட்டுக்களை கண்டவர்களின் உளவியல், ரஷிய கலைகளில் கனவு வெளிப்படும் விதம், வூல்ப்காங்க் பவுலியின் கனவுகள் மற்றும் அவை குறித்து அவரும் உங்கும் நடத்திய ஆய்வுகள் மற்றும் கடித போக்குவரத்து ஆகியவை விவரிக்கப்படுகின்றன.இந்நூலின் முடிவில் ஆலன் வூல்ப் தன் ‘LSD ‘ அனுபவத்தை விவரிக்கிறார். ‘என் கரத்தை பிடித்து கடவுள் ‘ நீ உண்மையாகவே காண விரும்புகிறாயா ? நீ உண்மையாகவே இம்மாயைக்கு அப்பால் நான் உன்னை அழைத்துச் செல்ல விரும்புகிறாயா ? ‘ என கேட்டதைப்போல நான் உணர்ந்தேன். என்னைச் சூழ்ந்த அனைத்தும் பெரும்பொருள் பொதிந்தவை ஆயின. ஒரு மாயா சிருஷ்டி. பொருளற்றவை அல்ல. சாதாரண கணங்களில் இத்தகு உணர்வை வெகு அரிதாகவே நான் பெற்றிருக்கிறேன். என் வாழ்வில் நான் சந்தித்த சிலருடன் இவ்வுணர்வை பெற்றிருக்கிறேன். ஒரு ஆழ்ந்த உணர்வு…கண்மூடித்தனமான நம்பிக்கையல்ல, ஒரு ஆழமான உணர்ச்சி. என் வாழ்வின் வாழ்வதன் அதி உன்னத பொருளே இந்த உணர்வினை பெறுவதுதான்…. என்னால் அவ்வுணர்வை ‘நானே இப்பிரபஞ்சமனைத்துமென உள்வாங்க முடிகிறது.இது ஒரு கனவென்றாலும் கூட. ‘ (பக் 351)

இந்நூல் அறிவியலின் மிகக் கட்டுப்பாடான ஆய்வுகளையும், அறிவியலின் உதாசீனப்படுத்தப்படும் விளிம்புகளில் உள்ள சில துறைகளிலிருந்தும் தரவுகளை தன் கதையாடலில் இணைவிப்பதும், ஆதிவாசிகளின் புராணங்களிலும், பீட்டர்ஸ்பர்கின் வெண்கல குதிரைவீரன் குறித்த பாடலிலும் ( ‘பின்தொடரும் நிழலின் குரலில் ‘ இவ்வெண்கல வீரன் சிலையின் குதிரை குளம்பொலியை கேட்கமுடியும்.), இன்றைய ரஷிய நகர அமைப்பிலும்,கார்க்கியின் வீட்டிலும், பரிணாமத்திலும் துயின்றெழும் கனவுகளை நமக்கு அடையாளம் காட்டி கனவினை நம் இருப்பின், பிரபஞ்ச இருப்பின் ஓர் முக்கிய இயங்கு படிமமாக காட்டுகிறார்.21 பகுதிகள் கொண்ட இந்நூல் நம்மை அழைத்துசெல்லும் பிரயாணம், அது நமக்கு காட்டும் பிரபஞ்ச தரிசனம் நம்மை ஆழப்படுத்துகிறது, இந்நூலின் பல முடிவுகளை ஒருவர் ஏற்காவிட்டாலும் கூட.கனவுகளுக்கும் புராணங்களுக்குமான ஒரு ஒற்றுமையை பல ஆய்வாளர்கள் உணர்ந்துள்ளனர்.புராணங்கள் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. அனைத்து சமூகங்களிலும் அவை உருவாகிய வண்ணமே உள்ளன. எத்தகைய மனநிலை, எத்தகைய மனச்செயலாக்கம் புராணங்களை உருவாக்குகிறது ? ஏன் சில புராணக் கருக்கள் உலகெங்கும் காணப்படுகின்றன ? ‘புராணம் ஒரு பொதுவான கனவு. கனவு ஒரு தனிமனித புராணம் ‘, என்பார் காம்பெல். எனில் ஒரு பொதுவான கூட்டுக்கனவு சமுத்திரமதில் ஆங்காங்கே கொப்பளித்தெழுந்து, பெருங்கனவினை தன்னில் பிரதிபலித்து பின் அக்கனவினுள்ளேயே ஒடுங்கும் சிறுகுமிழகளா நம் வாழ்வும், நம் வாழ்வின் அனைத்தும் ?

நூலிலிருந்து சில மேற்கோள்கள்: (ஆலன் வூல்ப் ரஷியாவில் உறையும் கனவுகள் குறித்து)

‘மரண-அருகாமை-அனுபவங்கள், இனம் அறியா பறக்கும் வஸ்துகள் போன்றவை வழக்கு கதைகளிலும் அதீத கற்பனையிலும் வெளியாகும் சில அடிப்படை அமைப்புகள் வயப்பட்டவை என நான் கருதுகிறேன். ஒரு கனவுருவாக்கத்தில் ஆழ்ந்த தன்னுணர்விலிருந்து அவை வெளியாவதாக இருக்கலாம்….நம் கனவின் பொருள் எவ்வாறு புறவய உருவாக்கம் அடைகிறது என்பது குறித்து நாம் அறியாதவர்களாக உள்ளோம். ‘ (பக். 218)

‘எஸ்ரா பவுண்ட் கூறுவது போல கலைஞர்களே பரிணாம மாற்றங்களுக்கு முதன்முதலாக தங்களை ‘இணைத்துக் ‘ கொள்ளுகிறார்கள் ..அதீத கற்பனை (Fantasy) ரஷிய கலைகளில் ரஷிய கலைஞர்கள் வரைய ஆரம்பித்த காலம் தொட்டே, கட்டடங்களை வடிவமைத்த காலம் தொட்டே, சிற்பங்களை செதுக்கிய காலம் தொட்டே ஜீவித்து வந்துள்ளது. ஸ்லாவிக் கலையின் தொல் வரலாற்று வேர்களிலிருந்தே,அதன் சடங்கு சிற்பங்களிலும் சரி, விலங்கு ஆவிகளை காட்டும் குகை ஓவியங்களிலும் சரி, உலோக பொருட்களின் மேலுள்ள கலைவேலைப்பாட்டிலும் சரி, ஒருவித கனவின் வெளிப்பாட்டுத்தன்மையை கொண்டுள்ளது. ‘ (பக்.275)

‘தேவதை கதைகளில் நாம் பலவித ரஷிய புராண உருவாக்கங்களை சந்திக்கிறோம். பாதி மானுட பாதி குதிரையான கித்தோவ்ராக்கள் தீப்பறவை (அதே பெயர் கொண்ட ஸ்ட்ராவின்ஸ்கியின் இசை நாடகத்தில் வருவது போல) எனும் மகிழ்வின் குறியீடு, பல்தலை பூத நாகம் கோரின்ச் – தீமைகளின் உறைவிடம், சாவற்ற தீய மந்திரவாதி காஷ்சேய், புகழ்பெற்ற சூனியக்காரி பாபா-யாகா, (தாய்கோவ்ஸ்கியின் ‘அன்ன ஏரி ‘யால் புகழ் பெற்ற) அழகிய அன்ன இளவரசி என பல. ‘ (பக் 276)

‘வெற்றியின் உருவாக்கங்கள் புனித பீட்டர்ஸ்பர்க் நகரெங்கும் நிறைந்துள்ளன. ஆனால் பயணம் நின்றுவிட வில்லை. ஒவ்வொரு வெற்றியும் அதனுள் ஒரு போலித்தனத்தின் வளையத்தை தன்னில் கொண்டுள்ளது. கலைஞன் எனும் சமுதாயத்தின் ஆதி ஆராதனையாளனிடமிருந்து (Shaman) புதிய ஆடைகளணிந்த இப்பேரரசரின் ஆடையின்மையை காட்டும் முதல் குரல் எழுகிறது. ‘ (பக் 277)

‘தன் சமுதாய -அரசியல் -ஆன்மிக கனவுகளில் மூழ்கிய ஒரு சமுதாயம் அக்கனவுகளுக்கு ஒவ்வாத மற்றொரு கலாச்சார பார்வையை ஒரு புதுப்புலம் அளிக்கையில் எவ்வாறு அதனை பொறுத்துக்கொள்ள முடியும் ?…ஜெர்மனியில் பிறந்த ரஷிய கலைஞர் ப்யோதார் ஷெகெதெல் மாஸ்கோவில் நிகோலாய் ரியாபுஷ்ன்ஸ்கி எனும் ஒரு செல்வந்தருக்காக ஒரு மாளிகையை வடிவமைத்தார். புரட்சியின் பின் ரியாபுஷ்ன்ஸ்கி ஓடிவிட்டார். பின் இவ்வீடு அரசு சொத்தாக்கிக் கொள்ளப்பட்டு அங்கு முதல் உள பகுப்பாய்வு மையம் லியோன் ட்ராஸ்கியின் உத்தரவின் பேரில் நிறுவப்பட்டது. 1920 இல் உள பகுப்பாய்வு சித்தாந்தத்திற்கு ஒவ்வாத விஷயமாகிவிட்டது.அம்மாளிகை மாபெரும் பாட்டாளி வர்க்க கவிஞர் மாக்ஸிம் கார்க்கிக்கு அரசால் அளிக்கப்பட்டது. கார்க்கி என்றைக்கும் அம்மாளிகையை விரும்பியதில்லை. புரட்சியின் பொன்னுலக கனவுகளுக்கும் அம்மாளிகையில் உறையும் இருண்ட நனவிலிக்குமிடையிலான வேறுபாட்டில் அவர் வாழ்ந்தார்- அவரது மர்மமான மரணம் வரையில்….நான் அவ்வீட்டுக்குள் நுழைந்த போது கார்க்கி அம்மாளிகையில் வாழ இஷ்டப்படாததிற்கான காரணத்தை உணர்ந்தேன். அது முரணியக்க பொருள்முதல்வாதத்தின் மாளிகையல்ல, இருண்ட கனவுகளின் மாளிகை. ‘ (பக். 281-82)

லிபெட்டின் ஆய்வுகளின் தொடர்ச்சியாக நாம் ரோடின் மற்றும் அண்மையில் நடத்தப்பட்ட

டிக் பெயர்மான் ஆகியோரின் ஆய்வுகளை காணலாம். (Conscious and Anomalous Nonconscious Emotional Processes: A Reversal of the Arrow of Time ?, டக்ஸன் 2002) முழு ஆய்வுத்தாளும் இணையத்தில் கிடைக்கின்றன. (Cognet Library)

ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் கனவுக்காலம் குறித்த தொகுப்பு: www.dreamtime.net.au இல் கிட்டுகிறது.

‘The Dreaming Universe ‘, ப்ரெட் ஆலன் வூல்ப், Touchstone Book, 1995, இந்திய விலை (1998 இல்) ரூபாய் 295/- (இக்கட்டுரையில் காணப்படும் படங்கள் நூலில் உள்ளவை அல்ல.)

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்