ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

வேதா


என்
கூட்டுப்புழு பூச்சியாகித் தன்
கனவோடு பறக்கிறதோ ?
பூக்கள் கொடுத்த தேனெல்லாம் – எனக்குள்
புதைத்த சேதி மறக்கிறதோ ?

கண்மூடிய என் உலகில்…..
புதைத்ததையும், புதைந்ததையும்
உன் புன்சிரிப்பு தெளுக்கிறது!
உன் நினைவைத் தாங்கிய குளிராய்
என்
சின்ன இதயம் சிலிர்க்கிறது!

சிரித்தும் சிறைவைத்தும் – எனக்குள்
உன் உயிரைச் சிந்துகிறது….
மதிபூத்து மலர் சொரிய
ஒற்றைவண்ணத்தில்
என் உலகமெலாம் நிறைகிறது!

அத்திபூக்கும் அதிசயமாய்,
வளைந்து போகும் வானம் ஒன்று….
உன் பார்வை பரிசளிக்கும்!

உன் மவுனங்கள்,
எனக்குள் மழை பொழிக்கும்!

உன் பார்வையில் நானும்,
என் வார்த்தையில் நீயும்
கலந்திருக்கும் காலமெல்லாம்
நினைக்க நினைக்க, சுகம் சுரக்கும்!

……
ம்ஹும்,
புதிதுபுதிதாய் காலங்கள்
புரியாத நேரங்கள்
பூத்துப் பூத்துக் காத்திருந்து
என்ன செய்வேன் தனியாக ?

நீயும்
இறக்கை உதிர்க்கிறாய் – எனக்குள்
ஈரம் நிறைக்கிறாய்!
தளிரை துளிர்க்கவிட்டு
துறவாய் நிற்கிறாய்!

எனக்கான
பகிர்தலுக்கும் , பாசத்துக்கும்,
உண்மையாய்
என் உள்ளக்குமுறலுக்கும்,
புரிந்துபோகாத அவசரமாய்
இந்த வாழ்வோடு ஓடுகிறாய் நீ…..
என் நினைவையும்
உன் மணிக்கட்டில் சேர்த்துக்கட்டிக்கொண்டு!!

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா