பால் கடன்

This entry is part of 30 in the series 20050909_Issue

நளாயினி தாமரைச்செல்வன்.


என் மார்பின்
பால் வாசனையில்
கண்வளர்ந்தவளே!
இன்று நீ அகதியாய்
அன்னிய தேசத்தில்.

தொப்பிள் கொடி
இன்னமும் பச்சையாய்.
உன்னை நினைக்கும்
போதெல்லாம் -என்
கருப்பைச் சுவர் கூட
விம்மி எழுகிறது.

வயசு தான் போட்டுது
ஆனால் இன்னமும்
கருப்பைச்சுவர் உன்
ஸ்பாிசத்தை மறக்கவில்லை.

உன் உணர்வைச்
சுமந்து வரும் கடிதம் பாக்க
கண் கூட இசைவதில்லை.

உன் புகைப்படத்தைக் கூட
பள்ளிக்கப்போகும் போது
உன்னை அழைத்துச்சென்ற
விரல்கள் தான் தடவிப்பார்த்து
மகிழ்ந்து கொள்கிறது.

படலைக்குள் அரவம் கேட்டால்
நீ வந்து நிப்பதாய்
ஓர் பிரமை.

பிறகென்ன கேக்கவே வேணும்.
கண்ணின் வில்லை கூட
உன் வருவுக்காய்
ஒருமுறை சுருங்கி விாியும்.

அன்று முழுவதும்
சொட்டுத் தண்ணி கூட
நாவிறங்கா.

ஊாில் எல்லாரும்
மகளின் வெளிநாட்டுக்காசில்
கிழடுக்கு உல்லாச வாழ்வு எண்டு
போற்றுவதாய் உமிழ்ந்து மெல்வர்.

முகம்மலர கேட்டுவிட்டு
உன் நினைவால் மனம்
பித்த்துப்பிடித்ததை யார் அறிவர். ?

சாவோ
என் வாசலில்
தலைவிாித்த நிக்கிறது.

உன் ஸ்பாிசம் பட்டால் தான்
இந்த அம்மா உயிர்போகுமம்மா.
ஓடோடி வந்து என்
பால்கடனைத்தீர்த்துவிடு.
—-
nalayiny@hotmail.com

Series Navigation