காவிரி மண் வாக்காளர்களே….!

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

வாக்களிக்கும் முன் நினையுங்கள்..!


ஆடியிலே பெருக்கெடுத்து
ஆடிவரும் காவிரி என்று
ஆடி மகிழ்ந்த எம் பெண்கள்…!!!

கோவிலும் தேரும் தாண்டி
கல்லணைக் கட்டிய
எங்கள் மன்னன் கரிகாலன்..!!!

காலம் பல ஆனாலும்
பட்டிமன்றத்திலும் பரிசலிலும்
காவியமான பூம்புகார் வரலாறு…!

கொலுசு சத்தம் சந்தமாக
பாத்தியில் தாவி வரும் கால்கள்-
தலைகளோ சுமந்து வரும் கதிர்மணிக் கட்டுகள்-
குலுங்கும் அதிர்வில்
சிந்தும் நெல்மணிள்-
உணவாகும் பல கிராமத்திற்கு..

சோழநாடு சோறுடைத்து – என்ற
பெருமை…!!

எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்
ஆனதடா…

கரைபுரண்டு ஓடும்
காவிரி எழிலில்
கவிதை வாழ்வு வாழ்ந்த
நம் தமிழன் –
இதோ
எலிக்கறித் தின்று கொண்டு…!!!

காவிரிக் கரையோரம் நிழல் தரும் மரங்கள்
நம் பாட்டன் காலத்தில்
அம்பு கொண்டு மீன் பிடித்த காலம் சொல்லும்..!!

வளைந்து நெளிந்து ஓடி
வரப்பு மறைய நெல் தந்த
காவிரித் தண்ணீர்-
இன்று… ?

வானம் பொய்த்ததா.. ?
வையகம் வறண்டதா.. ?
என்றே கேட்டால்…

காவிரி அன்னை
முன்னை தோன்றிய இடத்தில்-
புதிதாய் முளைத்த
வரம்பு மீறிய அணைத் தடைகளால்-
சிறைப் பட்டு..

வற்றிய வயிறும்
பதறும் நெஞ்சுமாய்-
கரை புரண்டு ஓடிய காவிரிக்கரையில்
கண்ணீர் ததும்பும் மனமுடன்..!

வரப்புகளில் நடக்கும் கால்கள் – நடுக்கமுடன்..!!
கரும்பு வெட்ட மூன்றாவது கையான அரிவாள்
மூலையில் –

தளராதே.. அரிவாளை
உற்றுப் பார்..!
பேசுவது கேட்கும்-

‘மூடனே..!
எத்தனை நாள் இந்த ஈனப் பிறப்பு… ?
வருடம் ஐம்பது ஆனாலும்
வறண்டு போன நாட்கள் தான் கூடுகிறது..
உரிமைக்கு யாசகமா.. ?
நீயும் நானும் ஒன்றேயெனச் சொல்பவர்கள்
காவிரி எனும் ஒன்றை மட்டும் ஏன் மறந்தார்கள்.. ‘
நீயோ அழுது கொண்டு
அவனோ அணைகளைத் தொடர்ந்து
கட்டிக் கொண்டு..!!

இதோ
தேர்தலில் வாக்கு கேட்டு வார்த்தைச் சித்தர்கள் வருகிறார்கள்

அவர்களிடம்-
– நீ இத்தாலியா என்று கேட்காதே…!
காவிரி இந்தியாவிலா ஆரம்பிக்கிறது எனக் கேள்..!

– இந்தியா ஒளிர்கிறதா என்று கேட்காதே…!
ஐயா.. ? காவிரிக்கு என்ன ஐ.நா செல்லனுமா எனக் கேள்..!

– பீச்சாண்டே காணமல் போன கண்ணகி பற்றி கேட்காதே..!
பீச் மணலாய் காவிரி ஆனக் காரணம் கேள்…!

– துபாயாக மாற்றுவேன் என்று சொல்வது
தண்ணீரில்லாமல் பாலைவனமாகவா.. ? எனக் கேள்..!

இன்று
காவிரி நீர் கேட்டால்
கங்கை காவிரி இணைப்பு என்பர்..!
நாளை
கங்கை காவிரி இணைப்பு முன்-
கங்கை அமேசான் இணைப்பு என்பர்…!

வீட்டைப் பற்றி
தெருவைப் பற்றி
நகரைப் பற்றி-
பேச்சு ஏதுமில்லை அவர்களிடம் –
ஆனால் வாயோ
ஒட்டு மொத்தமாய்
இந்தியா உயரும் என்ற பொய்மை மட்டும்…!

உரத்த குரல் கொண்டு கேள்..!!
-காவிரிக்கு என்ன தீர்வு என்று..!
இல்லையேல்
கரும்பு வெட்டிய அரிவாளுக்குத் தெரியும்
அறுப்பு என்னவென்று….!!!

இன்னும் எத்தனை நாளடா
எம் தமிழர் ஏமாந்த நிலையில்.. ?
நேற்று நம் முன்னோர் கண்களில்
இன்று நம் கண்களில்-
தொடர வேண்டுமா கண்ணீர் – நாளை
நம் செல்லப் பிள்ளைகள் கண்களிலும்… ?

மணலான காவிரி தழுவிச்
சூடான காற்று-
உன்னைச் சுட்டு சொல்லும்
மொழி புரியவில்லையா.. ?

அழுது சிவந்த
நம் கண்கள் இனி
அராஜகத்தின் தன்மை கண்டு
கோவைப் பழமாகட்டும்..!

ஐயா… என்று
ஏந்திய கைகள்
ஓங்கினால் தான் – நீசர்கள்
‘ஐயோ ‘ என்று ஓடுவார்கள்..!

கைகள் கூடி இணைந்தால்
விலங்கான அணைகள்
உடையும் தானாக..!

உடையும் அணைகளில்
ஒன்றாகும் தேசம் மேலாக..
இல்லையேல்-
ஆகும் துண்டு துண்டாக..!!

உடைந்த அணையின்
ஊடே புகுந்து
மீண்டு(ம்) வருவாள்
காவிரிச் சிலிர்ப்பாக…!!!

ஆகா என்று ஒரு நாள் எழும் பார்,
காவிரிப் புரட்சி..!!!!
அதற்கு ஆரம்பமாக
இருக்கட்டும் நீ கேட்கும் கேள்வி…!!!

கோச்சா @ கோவிந்

gocha2004@yahoo.com

Series Navigation

கோச்சா

கோச்சா