எழுதாக் கவிதை

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

அனந்த்


ஓடும் நதிமகளும் – அவள்
…. உள்ளக் களிப்பினில் துள்ளிக் குதித்தங்கு
ஆடும் புனல்பெருக்கும் – அதன்
…. ஆடலில் சாய்ந்திடும் வாடா மலர்களைத்
தேடி மதுவருந்தும் – வண்டுச்
…. சேர்க்கையும் பக்கலில் ஆர்த்துத்தன் பேடையை
நாடும் பறவைகளும் – நம்முள்
…. நாளும் எழுதிடும் பாடல் குவியலை

ஏட்டினில் வார்த்திடத்தான் – இங்கு
…. எத்தனை ஆயிரம் எத்தர் கவிஞர்கள்
போட்டிதாம் போட்டிருப்பார்! – ஒரு
… போதா கிலும்அவர் போராடி ஓலையில்
தீட்டிய பாடல்களைத் – தாங்கள்
…. தேர்ந்த தலைப்பினைச் சார்ந்த எழில்முன்னே
காட்டத் துணிந்திருந்தால் – அவை
….கைகொட்டி எள்ளிட மெய்பொத்தி நாணுவர்!

மெல்லிளம் மங்கையரின் – மல்லி
….மேனி அழகினில் மானின் விழியினில்
சொல்லெது மேமொழியாக் – கவிச்
…. சித்திரக் காப்பகம் ஒத்திடும் பாலரில்
நல்லம னம்படைத்த – அன்பு
…. நண்பரில் கண்படும் நற்கவி ஓர்ந்திட
வல்லமை உள்ளவர்கள் – ஒரு
…. வார்த்தையைத் தேடி மயங்குதல் வேண்டுமோ ?

எழுதாக் கவிதையென – இன்னும்
…. எத்தனை யோபல முத்துக்கள் யாவையும்
முழுதும் தருவதற்கு – வெறும்
…. மூளைக்கே ஆகுமோ ? மூலைமு டுக்கெலாம்
வழியும் உணர்வுகளை – உள்ளம்
… வனைக்கும் விதத்தை நினைத்துப்பின் யாவுமே
அழிந்த நிலையினிலே – மோன
…. ஆன்மக் கவிதையின் மேன்மை தெரிந்திடும்!

——————————————————————————————————————
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்