முன்னேற்றமா! சீரழிவா!!

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்


இஸ்லாமிய மதத்தின் பெயரால் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், பெண்களை கொடுமைகள் செய்வதாகவும், பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

மேற்கூறிய கருத்தை சில முஸ்லிம்களே எழுப்புகிறார்கள் என்று நினைக்கும் போது கவலையை விட சிந்திக்கவே தூண்டியது, அவரகளின் கூற்று உண்மையாக இருக்குமோ என என் மனம் ஆராய்ந்து பார்க்க சொல்கிறது.. சிலரது கேள்விகளுக்கு பதில் சொல்வது போல் என் கருத்துக்கள் அமைந்தாலும் எல்லோரும் சேர்ந்து சிந்திப்போம் என்ற அடிப்படையிலேயே இங்கு எழுதப்படுகிறது..

முதல் கேள்வி- பெண்களில் ஏன் நபி இல்லை ? அதாவது அல்லாஹ் ஏன் பெண்களை தனது தூதராக தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை ?- அப்படி என்றால் பெண்களுக்கு அந்த தகுதி இல்லையா ?- சகோதரர்கள் கேட்கிறார்கள்.. நான் சமீபத்தில் தளபதி என்ற ஒரு படம் பார்த்தேன்- அந்த படத்தில் கலெக்டராக நடிக்கும் ஒருவர் ஒரு கிராமத்துக்கு தண்ணீர் வசதி செய்து கொடுப்பார்- அவர் அறிமுகமாகும் ஆரம்ப காட்சி அது- அந்த ஊர் மக்களெல்லாம் அந்த கலெக்டரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள்- ஒரு மூதாட்டி அந்த கலெக்டரின் தாயிடம், ஒரு புள்ளையோட நிறுத்திட்டாயேம்மா என்று அந்த கலெக்டரின் தாய்க்கு புகழாரம் சூட்டுவார்கள்- இது தான் காட்சி- நபி என்பவர் அனைவரும் ஆண்கள் தான் என்பது உண்மை தான்- ஆனால் அந்த நபியெனும் நன்முத்துக்களை ஈன்றெடுத்தது பெண்கள் தான்- ஒரு பெண்ணுக்கு தான் ஒரு நபியாக இருந்தேன் என்பதை விட ஒரு நபியை இந்த உலகுக்கு தந்தேன் என்ற மகிழ்ச்சி இருக்கிறதே அது அந்த தாயாக இருந்து பார்த்தால் தான் அந்த மகிழ்ச்சியை உணற முடியும்- அது தான் தாயின் சிறப்பு- அது தான் தாய்மையின் சிறப்பு- அந்த பெண்மைக்கே சிறப்பு- பெண்களுக்கு அந்த தாய்மை எனும் அந்த உயரிய பட்டத்தை கொடுத்தானே அந்த அல்லாஹ் அவன் ஞானமுடையவன்-

பெண்களை நபியாக அனுப்ப வில்லை என்பதற்காக பெண்களை அல்லாஹ் உயர்த்தி வைக்கவில்லை என்று பொருளல்ல- கண்ணியத்திற்குறிய இறைஞானி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் ஒரு நூலில் இப்படி எழுதி இருப்பார்கள்- நண்பனை கைவிட்டு விடாதே என்றால் பெற்றோர்களை நடுத் தெருவில் விட்டு விட வேண்டும் என்று அர்த்தமல்ல-

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்- ஜகரிய்யா(அலை) அவர்கள் நபியாக இருந்த காலத்தில் அன்னாரை நபியென ஏற்று வாழ்ந்த இம்ரான் எனும் நல்லடியாரின் மனைவி ஹன்னா(ஜன்னத் என்றும் கூறப்படுகிறது) ஜெருசலேம் நகரின் புனித பள்ளிக்குச்(பைத்துல் முகத்தஸ்) சென்றார்- அவரும் ஆண்களை போல் இறைபணியில் முழுக்க முழுக்க ஈடுபட வேண்டு மென்று விரும்பினார். இம்ரானின் மனைவியாக அவரின் கீழ் கட்டுப்பட்டு இருப்பதால் முடியவில்லை- அப்பொழுது அல்லாஹ்விடம் ஆண் மகவுக்காக இறைஞ்சினார்- அதன் பிறகு அவர் கருவுற்றார்- மேலும் அவர், என் கருவிலிருப்பதை உனக்கு முற்றிலும் அர்ப்பணித்து விட நேர்ந்து கொண்டேன் என்று அல்லாஹ்விடம் வேண்டினார்- ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை- இந்த நிகழ்ச்சியை அல்லாஹ் தனது திருக்குரானில் இம்ரானின் சந்ததியினர் எனும் மூன்றாவது அத்தியாயத்தில் 35,36 வசனங்களில் சொல்லிக் காண்பிக்கிறான்-

3-36: பின்னர், அதனை அவள் (தன் விருப்பத்திற்கு மாறாக ஒரு பெண் குழந்தையாகப்) பெற்றபோது, ‘என் இரட்சகனே! நிச்சயமாகவே நான் பெண்ணையே பெற்றுள்ளேன் ‘ என்று கூறினாள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்; ஆயினும் ஆண், (இவள் பெற்றெடுத்திருக்கும் இந்தப்) பெண்ணைப் போன்றதல்ல….

-என்று அந்த திருமறை வசனம் ஒரு பெண்ணைப் பற்றித் தான் மேலாக சொல்கிறது- அந்த பெண் வேறு யாருமல்ல- கிருஸ்தவ நண்பர்களால் மதர் மேரி என்று அழைக்கப்படும் அண்ணை மர்யம் அவர்கள் தான்-

கிறிஸ்தவ நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார், உங்கள் இஸ்லாத்தில் ஏன் தலை துண்டு அணிய வேண்டுமென்று பெண்களை கட்டாயப் படுத்துகிறீர்கள், இது பெண்களை அடிமைப் படுத்துவதாக ஆகாதா ? என்றார்.. நான் சொன்னேன், உங்கள் மதத்தில் கூட கன்னியாஸ்திரிகள் என்பவர்கள் தலை துண்டு அணிகிறார்களே- அவர்களை என்ன நீங்கள் அடிமையா படுத்தி விட்டார்கள் ? இல்லையே- மாறாக சிஸ்டர் என்றல்லவா மரியாதையாக அழைக்கிறீர்கள் அது போலவே நாங்கள் இஸ்லாத்தில் எல்லா பெண்களையுமே மரியாதையாக நடத்த வேண்டும் என எண்ணி தான் தலை துண்டு அணிய சொல்கிறோமே தவிர அடிமைப் படுத்த அல்ல என்று விளக்கினேன்-

ஒரு முறை பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள், அவர்களுடன் ஒட்டகத்தில் அன்னாரின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் அமர்ந்து வந்து கொண்டு இருந்தார்கள், ஒட்டகத்தை வழி நடத்தி சென்றவரிடம் பெருமானார் அவர்கள் இப்படி சொன்னார்கள்- பார்த்து கவனமாக செல்லுங்கள் ஒட்டகத்தின் மேலே பளிங்கு குமிழ் உள்ளது என்று- இதை விட பெண்களைப் பற்றி அழகாக சொல்ல முடியாது- பளிங்கு பொருளை ஜாக்கிரதையாக கையாள வேண்டும், அதை கடினமாகவும் பிடிக்கக் கூடாது, லேசாக நினைத்து விட்டு விடவும் கூடாது அப்படி விட்டால் உடைந்து விடும்-

கையேயி என்ற பெண் இந்திரனின் நிழலை பார்த்து அவன் அழகில் மயங்கினாளாம், குடம் உடைந்தது கற்பே போய் விட்டது என்றார்களாம். ஆனால் இப்பொழுது ஒரு பெண் தன் கணவனை வைத்துக் கொண்டு இன்னொரு ஆண் நண்பனிடம் நான் இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு உன்னை பண்ணியிருக்கலாம் என்கிறாள்- அந்த கணவன் உள்பட எல்லோரும் சிரிக்கிறார்கள்- கேட்டால், சொல்கிறார்கள் அதில் தவறு ஒன்றும் இல்லை மனசுல எதையும் வைச்சுக்குறதில்லை, வெளிப்படையா பேசுகிறோம் அதனால குத்தமில்லை என்கிறார்கள்- மனதில் அப்படி சொல்ல தூண்டியதே அதுவே தவறில்லையா ? அதுவே குற்றமில்லையா ?

ஒரு காலத்தில் ஆணும், பெண்ணும் பார்த்துக் கொண்டாலே தவறு என்று இருந்தது- அதன் பிறகு பேசினால் தவறு என்றார்கள்- அதன் பிறகு பழகினால் தான் தவறு என்றார்கள்- இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்து டேட்டிங், டிஸ்கோ கூட போகலாம் தவறில்லை என்றாகிவிட்டது- ஒரு பெண் வானொலியில் விருப்பப் பாடலை கேட்கிறாள், எனக்கு இந்து படத்திலிருந்து சமைஞ்சது எப்படி ? என்ற பாட்டு வேணும், இந்த பாட்டை நான் எங்க அம்மா, அக்கா, அண்ணி இவங்க எல்லோருக்கும் விரும்பி கேட்கிறேன் என்று- இப்பொழுது எது தான் தவறு ? கல்யாணத்துக்கு முன்னால் பிள்ளை பெற்றுக் கொண்டாலும் தவறு இல்லை என்கிறார்கள் போலும்- எது தான் எல்லை ? அதை யார் தான் நிர்ணயிக்க வேண்டும் ?

பள்ளிக் கூட வாத்தியார் தன்னிடம் படிக்கும் மாணவியிடம் தகாத முறையில் நடந்துக் கொள்வதாக தலைப்புச் செய்தி வருகிறது- காவல் நிலையத்தில் கன்னியர் கற்பு பறி போவதும் முக்கிய செய்தியாக வந்தவை தான்- இதை விட மிகக் கேவலமான உண்மைச் செய்திகள் எல்லாம் உள்ளன, ஆனால் அதை எழுத என் கைகள் மறுக்கிறது- அந்த வரிசையில் பெண்களை பள்ளிவாசலுக்கு அழைத்து ஒருவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டார் என்று வையுங்கள்- என்னாகும் ? அந்த முக்கிய செய்தி தலைப்புச் செய்தியானால் இறை இல்லத்துக்கு அர்த்தம் தான் என்ன ? என் ஆள் இன்னைக்கு தொழுகைக்கு வருது அதனாலே தான் வந்தேன் என்பான் ஒரு காதலன்- வழிபாட்டு தளங்கள் காதலர்கள் கள்ளத்தனமாக சந்திக்கும் பூங்காவா ? அல்லது கடற்கரையா ?

விதி என்ற ஒரு தமிழ் படம் உண்டு- அந்த படத்தில் பணக்கார வக்கீல் ஒருவரின் மகன், ஏழை குமாஸ்தா ஒருவரின் மகளை காதலித்து கட்டில் வரை சென்று கர்ப்பமாக்கியும் விடுகிறான், அவளோ கோர்ட்டில் கேஸ் போடுகிறாள்- வக்கீல் அப்பாவே மகனுக்காக வாதாடுவார்- கோர்ட்டில் அந்த பெண்ணை நிறுத்தி தாறுமாறாக கேள்வி கேட்பார், உனக்கு அவர் கை மேலே படும் போது இன்னும் வேணும்னு இருந்துச்சா, இல்லை வேணாம்னு தோணுச்சா, எப்படி இருந்துச்சு என்று கேட்பார்- அந்த பெண்ணால் பதில் சொல்ல முடியவில்லை நாணி கோணுகிறாள்- வக்கீலோ விடுவதாக இல்லை- இது படத்தோட கதை- கதையில் வரும் ஒரு காட்சி- சிந்தித்து பாருங்கள்- ஒரு பெண்ணுக்கு வேண்டும் என்று இருக்குமா ? இருக்காதா ? அவள் என்ன கல்லா, மண்ணா ? பெண்ணப்பா அவள்- ஆனால் எனக்கு ஒரு விடை வேண்டும் ? அந்த பெண் தனக்கு வேண்டும் என்று தான் இருந்தது என்று சொல்கிறாள் என்று வைத்துக் கொள்வோம் அந்த ஆணை தண்டிக்கலாமா ? கூடாதா ? அல்லது அந்த பெண் கருவை கலைத்து விட்டு பெரிசா ஒரு தவறும் நடக்காதது போல் வேறொரு ஆணை மணக்கிறாள் என்று வையுங்கள்- உங்கள் பார்வையில் அது பெண்களின் முன்னேறமா ? அல்லது சீரழிவா ?

இது போல் உண்மை சம்பவம் ஒன்று நடந்தது- ஒரு பெண் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சொல்லி ஒரு கயவன் மீது வழக்கு தொடுத்தாள்- அவனோ இரண்டு பேரும் விரும்பித்தான் உடல் கூடினோம் என்றான்- விசாரித்த நீதிபதி- குற்றம் சுமத்தப்பட்ட ஆணின் உடம்பில் காயங்களோ, கீறல்களோ இல்லாததால் அவரை விடுதலை செய்கிறேன்- என்று தீர்ப்பளித்தார்- இதில் உங்களுக்கு உடன்பாடா ?

ஒரு ஆண் ஒரு பெண்ணின் கற்பை அழிக்க நினைத்தால்- அவள் மயங்கிய நிலையில் இருக்கும் போது கூட அவளது கற்பை அழித்து விடலாம்- ஆனால் அதே பெண் ஒரு ஆண் மயங்கிய நிலையில் இருக்கும் போது வெறியை தீர்த்துக் கொள்ள முடியாது- ஆணும் பெண்ணும் சமமுமல்ல அதற்காக ஆணுக்கு பெண் அடிமையுமல்ல- எல்லோருக்கும் ஒரே இரத்தம் என்கிறோம் அது வர்ணத்தில் ஒரே நிறமாக இருப்பதால் ஆனால் அதிலும் A, B,O என்றெல்லாம் பல பிரிவுகள் உண்டு- ஒன்றோடு ஒன்று சேராது- அது போல் தான் ஆணும் பெண்ணும் இருவரும் மனிதன் என்ற அடிப்படையில் ஒன்று தான் என்றாலும் பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது- மறுக்க முடியாது-

பெண்களை கவுரவப்படுத்த நினைப்பவர்கள் எல்லாம் பெண்களை அரை குறை ஆடையில் பூனை நடை நடக்க விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது பெரிய வேடிக்கை- உடுத்த துணி இல்லாத ஏழை பெணகள் தனது கிழிந்த ஆடையை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறாளே அது தான் கவுரவம்- நன்றாக இருக்கும் ஆடையை அங்கங்கள் வெளியே தெரிய அங்கங்கே கிழித்து விட்டு ஃபேஷன் என்று சொல்கிறார்களே- இது தான் முன்னேற்றமா ?

தாய், பிள்ளை உறவை சொல்ல தொப்புள் கொடி உறவு என்பார்கள்- ஆனால் தொப்புளில் முட்டை, கொத்துப் புரோட்டா எல்லாம் போட்டு பொறித்து உறவை சொன்ன இடத்தில் உணவு சமைத்து சாப்பிடுகிறார்கள், பம்பரம் விட்டு விளையாடுகிறார்கள்- பெண்கள் இவர்களது விளையாட்டு திடலா ? கைவினைப் பொருளா ? வியாபார உலகில் வாழும் ஒரு இயக்குனர், ஜனங்க விரும்புறதை தான் நாங்க கொடுக்கிறோம் என்கிறார்- ஜனங்க கள்ளச் சாராயத்தை விரும்புறாங்க என்பதற்காக அதை காய்ச்சி கொடுத்து விட முடியுமா ? யோசித்து சொல்லுங்கள்-

இராணுவத்தில் சேருகிறீர்கள் என்று வையுங்கள்- நீங்கள் உங்கள் இஷ்டப்படி முடி கூட வெட்ட முடியாது நிற்பதிலிருந்து, நடப்பது, உட்காருவது உள்பட எல்லாவற்றுக்கும் ஒரு முறை உண்டு ஒரு பயிற்சி உண்டு-அதற்காக நான் இராணுவத்தில் அடிமையாக இருக்கிறேன் என்றா சொல்வீர்கள் ? மாறாக இராணுவ வீரன் என்றல்லவா மார்தட்டிக் கொள்வீர்கள்- காரணம் அது அடிமைப் படுத்துவது அல்ல- கட்டுப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது. புரிந்தே இருக்கிறது அனைவருக்கும்.

பெண்களை ஆண்களுக்கு சபலம் ஏற்படுத்தக் கூடிய பகுதிகளை மூடி மறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதும் ஒழுங்குபடுத்தத் தான்- புரிந்து கொள்ள வேண்டும். பந்தயத்தில் பங்கேற்க தயாரிக்கப்படும் காராக இருந்தாலும் பிரேக் இல்லாமல் தயாரிக்க முடியாது-

மேலை நாடுகளில் உள்ளது போல் பெண்கள் ஆடை அணிய வேண்டும், வெளியே வர வேண்டும் இவை தான் முன்னேற்றம் என்று கூறுபவர்கள் அங்குள்ள மாணவிகள் பலர் படிக்கும் காலத்திலேயே கெட்டுப் போய் விடுகிறார்களாம்- இதை அங்குள்ள காவல் துறை அதிகாரிகளே சொல்கிறார்கள்- கேட்டுக் கொள்ளுங்கள்-

இப்பொழுது தான் பெண்கள் சதவிகிதம் அடிப்படையில் உரிமை கேட்டு போராடுகிறார்கள், பெண்கள் உரிமை வேண்டி போறாடாத அந்த காலத்திலேயே என்னென்ன சலுகைகள் எங்கள் இஸ்லாத்தில்- உதாரணமாக ஒரு பெண்ணை மணமுடிக்க ஆண் அந்த பெண்ணுக்கு மணக் கொடை கொடுக்க வேண்டும்- அந்த மணக் கொடையை பெண் தான் நிர்ணயிக்க வேண்டும்- அந்த மனைவி அனுமதி கொடுக்காமல் கணவன் அந்த பெண்ணுக்கு அளித்தவற்றிலிருந்து ஒரு துரும்பை கூட எடுத்து செலவு செய்ய முடியாது- தெரிந்துக் கொள்ளுங்கள்-

ஒரு கணவன் கருத்து வேறுபாடினால் தனது மனைவியை விவாகரத்து செய்ய நினைக்கிறான் என்று வையுங்கள்- நீதி மன்றத்தை நாடுவான்- எதை சொன்னால் விவாகரத்து கிடைக்கும் என்று பார்ப்பான், கடைசியாக ஒரு பெரிய அணு குண்டை தூக்கி போடுவான் அந்த பெண் நடத்தை கெட்டவள் என்று- விவாகரத்து கொடுப்பதற்கு இது தான் தேவை என்று நிர்ணயம் செய்தாள் அதை அந்த பெண்ணின் மீது பழியாக சுமத்தி களங்கப்படுத்தி நம்பவைத்தும் விடுவான்- இது முறையாகுமா ? விவாகரத்து சட்டம் சுலபமானது இஸ்லாமிய சட்டத்தில் இதனால் தான்- எந்த பெண்ணையுமே களங்கப்படுத்தி பார்க்கக் கூடாது என்று நினைக்கிற இஸ்லாத்தில் உலகின் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் அன்னையராக ஏற்றுக் கொண்டவர்களை களங்கப் படுத்தி பேச ஒருவனுக்கு எப்படி மனம் வரும் ? எழுதியவன் மீது எங்களுக்கு கோபம் வராமல் எப்படி இருக்க முடியும் ?

ஒழுக்க சீலர்கள் மட்டுமல்ல மடா குடி காரர்களும் கூடியிருந்த ஒரு சபையினிலே இனி மேல் யாரும் மது அருந்தக் கூடாது என்று பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்- சொல்லி 1424 ஆண்டுகள் ஆகி விட்டது- அவர்கள் எந்த நகரில் அமர்ந்து சொன்னார்களோ அந்த நகருக்குள் இன்றைய தேதிக்கு யாராவது மது அருந்தினால் தண்டனை உண்டு- இது அல்லவா உலக அதிசயம்- இவர் அல்லவா உலக தலைவர்- ஆணுக்கு பெண்ணை அடிமையாக்கியதாக குற்றம் சுமத்துகிறீர்களே பெருமானார் காலத்தில் ஆணுக்கு ஆணே அடிமையாக இருந்தார்கள் தெரியுமா செய்தி ? அரேபியர்கள், யாருக்காவர்து அரபி பேச தெரியாது என்றால் அவனுக்கு வாயே கிடையாது என்றார்கள்- பெருமானார், அரேபியரை விட அஜமி(அரேபியரல்லாதோர்) சிறந்தவர் அல்லர், அஜமியை விட அரேபியர் சிறந்தவருமல்லர் எல்லோரும் சமம் தான் என்றார்கள்- அவ்வளவு தான் அடிமை விலங்குகள் அந்த சக்தி மிக்க வார்த்தைகளால் தூள் தூளாக்கப்பட்டுவிட்டது- முதலும் கடைசியுமான ஹஜ் பயணத்தின் போது, அரபாத் மைதானத்தில் மக்களிடையே பெருமானார் பேசும் போது ஆண், பெண், அரேபியர், பார்ஸி, கறுப்பர் என அனைவரும் இருந்தார்கள், அவர்கள் சொன்ன செய்தி அனைவருக்கும் தான்- யாரும் யாருக்கும் அடிமை அல்ல- எல்லோரும் இறைவனின் அடியார்களே- இறைவனுக்கு நெருக்கமாகி நல்லடியார்களாவது அவரவர் பயிற்சி, அவரவர் முயற்சி மற்றும் அவரவர் செல்லும் பாதைகளை பொறுத்தது-

தந்தை பெரியாரிடம் ஒருவர் கேட்டாராம், கடவுள் இல்லைங்கறீங்களே, கடவுள் உங்கள் முன்னாடி தோன்றினால் என்ன செய்வீர்கள் என்று- அதற்கு பெரியார், அப்பொழுது கடவுள் இருக்கிறாருன்னு சொல்லிடுவேன் என்று சொன்னாராம் சாமர்த்தியமாக- சரி, போகட்டும், உண்மையிலேயே அப்படி கடவுள் அதாவது அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து காத்து வரும் கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரின் தன்மைகள் என்னவாக இருக்கும் ?

Define God ? இந்த கேள்வியை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். மாறாத, மாற்றம் தேவைப்படாத திருக்குரான் பற்றிய புத்தகங்கள் வாங்கி படித்து பாருங்கள்- மாற்றம் யாருக்கு தேவை என்பது விளங்கி விடும்- நம்பிக்கை உடையவராக மாறியதற்காக அப்பொழுது இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தக் கூடும்- மனதை புண்படுத்த இங்கே எழுத வில்லை பண்படுத்தவே எழுதுகிறேன்-

உலகில் பல அநியாயங்கள் பெண்களை முன்நிறுத்தி தான் நடக்கிறது உதாரணமாக பெண்களிடம் நகை பறித்தல், பெண்களை ஈவ் டாசிங் செய்தல், பெண்களை கற்பழித்தல் இன்னும் பல- இவைகள் எல்லாம் தடுத்து நிறுத்தப் பட வேண்டுமா ? காவல் துறை இல்லாமல், நீதி மன்றம் இல்லாமல் தடை செய்யப் பட வேண்டுமா ? பெண்களே! நீங்கள் பர்தாவை அணியுங்கள்- ஆண்களே!! நீங்கள் பெண்களை நீதியுடன் நடத்துங்கள்- இது உங்களை படைத்து, வாழ அவகாசமும் கொடுத்த அந்த ஏக அல்லாஹ்வின் கட்டளை என்பதை ஒரு போதும் மறவாதீர்கள்.

Dul_fiqar@yahoo.com.sg

நபிமொழி:

கல்வி ஆண் பெண் இரு பாலருக்குமே கடமையாகும்-

மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமை போன்றே கணவன் மீது மனைவிக்கும் உண்டு-

———————————-

Series Navigation

அ.முஹம்மது இஸ்மாயில்

அ.முஹம்மது இஸ்மாயில்