திரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள்

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

சின்னக்கருப்பன்


எஸ் வி ராஜதுரையில் வரிகளில்

‘ பி. யு. சி. எல். அமைப்பின் முதன்மையான நோக்கம் அரசியல் சட்டத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள ஜனநாயக, சிவில், மனித உரிமைகளைக் காப்பதாகும். உயிர் வாழும் உரிமை, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், குற்றங்கள் அனைத்தையும் முறைப்படியான சட்டவழிகளில் மட்டுமே கையாளவேண்டும் என்பன அரசியல் சட்டத்தில் உள்ளன. எனவே இவற்றைப் பாதுகாக்கும் கடமையும் பொறுப்பும் அரசுக்குத்தான் உள்ளனவே தவிர அரசுக்கு எதிராகப் போராடும் அரசியல் சக்திகளுக்கு அல்ல. மேலும் அரசின் வன்முறையின் அளவும் நக்சலைட் குழுக்கள் போன்றவற்றின் வன்முறையின் அளவும் ஒன்றல்ல. எனினும் இதன் பொருள் பி. யு. சி. எல். வன்முறையை ஆதரிக்கிறது என்பதல்ல. ஓர் அரசியல் கட்சி அல்லது குழு அமைதி வழியைப் பின்பற்ற வேண்டுமா அல்லது வன்முறையைப் பின்பற்ற வேண்டுமா என்று தீர்ப்புக் கூறும் அரசியல் மேடையல்ல பி. யு. சி. எல். ‘

பலமுறை வலதுசாரிகளால், பி யு சி எல் அமைப்பு நக்ஸலைட்டுகளின் முகமூடி என்று வசைபாடப்பட்டுள்ளதை, அதுவல்ல, பி யூ சி எல் அமைப்பு உண்மையிலேயே இந்திய அரசியல் சட்டத்தின் சார்பாக தீவிரமாக நிற்கும் ஒரு அமைப்பு என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் திரு எஸ் வி ராஜதுரை.

இந்திய மக்கள் தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கொண்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சரிவர எல்லாச் சூழ்நிலைகளிலும் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் குழு மட்டுமே பி யூ சி எல் என்பதையும் விளக்கியிருக்கிறார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வன்முறையைப் பிரயோகம் செய்கிறது. உண்மைதான். ஆனால் அது வரைமுறையற்ற வன்முறை அல்ல. அது ஒரு சட்டதிட்டங்களுக்கு அடங்கிய வன்முறை. ஒருவரது நடமாடும் சுதந்திரத்தை மறுப்பதும், அவரை ஒரு சிறையில் அடைத்து அவரது வாழ்நாட்களை அவர் விரும்பும் வகையில் நடத்தவிடாமல் செய்வதும் ஒரு வன்முறையே. ஆனால் இது சட்டத்திற்கு உட்பட்டு, ஒரு குற்றத்திற்கு தண்டனையாக வழங்கப்படுவதால் குற்றவியல் சட்டத்திற்கு அடங்கியது. இந்தசட்டத்திற்குப் புறம்பாக, ஒருவர் குற்றம் சாட்டப்பட்டால், அல்லது தண்டனையை நீதிமன்றம் வழங்கும் முன்னால் , காவல் துறை சித்திரவதை செய்தால் பி யு சி எல் போன்ற அமைப்புகள் அவற்றைத் தட்டிக் கேட்க வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பி யூ சி எல் அமைப்பு எவ்வாறு அறிந்து கொள்கிறது என்பதை வைத்து ஒரு சட்டம் சரியல்ல என்று கருதவும் அதற்கு இடம் இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு முரண்பாடாக மரணதண்டனை இருக்கிறது என்று கருதி, மனித உயிரை எடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்ற புரிதலில், மரணதண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து எடுத்துவிடவேண்டும் என்றும் பி யு சி எல் போராடிக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்கிறேன்.

அது தவிர, இந்திய அரசின் தூணாக இருக்கும் நீதித்துறை கொடுக்கும் வன்முறையை பி யூ சி எல் எதிர்க்கவில்லை. அந்த வன்முறைகள், இந்திய சட்டம் வகுத்துள்ள வரைமுறைகள் சட்டங்கள் படியே வழங்கப்படுகின்றனவா என்பதும், அந்த வன்முறைகள் சரியான முறையில் பரிசோதிக்கப்பட்டு, அந்த வன்முறைக்கு ஒருவர் தகுந்தவராக ஒரு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு வழங்கப்படவேண்டும் என்பதே பி யூ சி எல்லின் நோக்கமெனப் புரிந்து கொள்கிறேன்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஒரு சில ஒழுங்குகளை மக்களிடம் கோருகின்றது. எவ்வாறு உங்களது அரசியல் வேலைகளைச் செய்யலாம் என வரையறை செய்கிறது. உங்களது கருத்துக்களை மற்றவர்களிடம் சொல்லும் உரிமை, பொதுவாக ஒரு இடத்தில் அமைதியான முறையில் கூடும் உரிமை, பேசும் உரிமை எழுதும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்கிறது. வன்முறை மூலமாகவோ அல்லது தீவிரவாதம் மூலமாகவோ தங்களது கோரிக்கைகளை நிலை நிறுத்த ஒரு குழு முனையுமெனில் அது இந்திய அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என கருதி இந்திய அரசியல் சட்டம் அவர்களைத் தண்டிக்க முயல்கிறது. அப்படிப்பட்ட தண்டனையின் போதுகூட, சட்டத்துக்கு புறம்பாக இந்திய அரசின் பிரிவுகள் (போலீஸ், அதிகாரிகள், ராணுவம், நீதித்துறை போன்றவை ) தண்டனை தர முயலக்கூடாது என்பதும், அப்படிப்பட்ட நிலைகளின் போதுகூட சட்டத்தின் வழியிலேயே தண்டனை தரவேண்டும் என்பதும் ஒரு சிவில் சமூகத்தின் வரையறைகள். இந்த சட்டபூர்வமான வரையறைகள் சரியாய்ச் செயல்படுத்தப் படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பது தான் பி யு சி எல்லின் பணியாக இருக்க முடியும்.

இது பி யு சி எல் பற்றிய இன்னொரு கேள்விக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அது : பி யு சி எல்லிற்கென்று ஒரு கருத்து இருக்க வேண்டுமா, இருக்கலாகாதா என்பது பற்றியது அந்தக் கேள்வி. உதாரணமாக, சமூக மாற்றத்திற்கு எந்த வழி சிறந்தது என்பதைப் பற்றி பி யு சி எல் ஏதும் கருத்துக் கொண்டிருக்க வேண்டுமா ?

மேற்கண்ட மேற்கோளின்படி எஸ் வி ராஜதுரை , பி யு சி எல் தன்னளவில் எது பற்றியும் சார்பு நிலை எடுக்கமுடியாது என்று தெளிவாகவே கூறுகிறார். அரசாங்கமும் , அரசு நிர்வாகமும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்புரிகின்றனவா இல்லையா என்பதைக் கண்காணிக்கும் ஒரு மேற்பார்வை அமைப்பாகத் தான் பி யு சி எல் இயங்க வேண்டும் என்று இதனை நான் புரிந்து கொள்கிறேன். வன்முறையை கையில் எடுத்துக்கொண்டதற்காக நீதி சொல்லும் நிலையிலோ அல்லது ஒரு குழு அமைதி வழியைப் பின்பற்ற வேண்டுமா அல்லது வன்முறையைப் பின்பற்ற வேண்டுமா என்று தீர்ப்புக்கூறும் மேடை அல்ல பி யூ சி எல் என்று கூறுகிறார் எஸ் வி ராஜதுரை.

ஆக மொத்தம், ஒரு குழு, அது கிராமத்தில் இருக்கும் நில உடமையாளர்களைக் கொல்லும் நக்ஸலைட்டாக இருக்கட்டும், அல்லது காஷ்மீரில் இந்துக்களை கொன்ற தீவிரவாதிகளாக இருக்கட்டும், அல்லது கோத்ராவில் ரயிலில் பயணம் செய்த ராமபக்தர்களைக் கொன்றவர்களாக இருக்கட்டும், அல்லது குஜராத்தில் முஸ்லீம்களை கொளுத்தியவர்களாக இருக்கட்டும், அல்லது கேரளாவில் இந்துக்களை மராத் ஊரில் கொன்ற முஸ்லீம்களாக இருக்கட்டும், அல்லது திரிபுராவில் இந்துக்களை கடத்திக்கொல்லும் கிரிஸ்துவத் தீவிரவாதிகளாக இருக்கட்டும், அல்லது மிஜோரமில் இந்து ரெஹாங் இனத்தவரை கொன்று துரத்தும் கிரிஸ்தவர்களாக இருக்கட்டும், யாராக இருப்பினும், அரசு குற்றவாளிகள் என்று கை காட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டு அதன் பின்னரே தண்டனை வழங்கப்படவேண்டும். இந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பக்கமே பி யூ சி எல் இருக்க முடியும். அரசின் பக்கம் ஒருபோதும் இருக்கமுடியாது.

பி யூ சி எல்லின் இதுவரை நிலைப்பாடு என்ன ? இதுவரை எந்த வழக்குக்களில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டவர்களின் ஆதரவாக நின்றிருக்கிறது ?

நக்ஸலைட்டுகளின் வன்முறையை கண்டிக்க மறுத்த பி யூ சி எல், சங் பரிவார அரசியல்வாதிகளின் வன்முறை அரசியலைக் கண்டித்திருக்கிறது.

திரிபுராவில் கிரிஸ்துவர்களைக் கண்டிக்காத பி யூ சி எல், மிஜோரமில் கிரிஸ்துவத் தீவிரவாதிகளைக் கண்டிக்காத பியூ சிஎல், குஜராத்தில் முஸ்லீம்களைக் கொன்ற இந்துக்களைக் கண்டித்திருக்கிறது.

**

சுதந்திரக் கருத்து வெளிப்பாட்டுக்கு ஆதரவாக இருக்கவேண்டிய பி யூ சி எல், இந்துக்களின் ஓட்டு இந்துக்களுக்கே என்று வாதிட்ட சில சிவசேனை அரசியல்வாதிகளை எதிர்த்து நீதி மன்றத்துக்குச் சென்றிருக்கிறது. ஆனால், வெளிப்படையாக முஸ்லீம் லீக் இவ்வளவு காலம் இந்தியாவில் அரசியல் நடத்தியும் இதுவரை ஒரு முறைகூட அவர்களை எதிர்த்து நீதி மன்றத்துக்குச் சென்றதில்லை. கிரிஸ்துவர்கள் ஓட்டு கிரிஸ்துவர்களுக்கே என்று கோவாவிலும், மிஜோரமிலும் தெளிவாக பொதுமேடையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியிருந்தும், அது இதுவரை அந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்றதில்லை.

***

பி யூ சி எல் அமைப்பு, நக்ஸலைட்டுகளுக்கு ஆதரவாகவும் அவர்களது விடுதலைக்காகவும், நீதிமன்றத்தில் பலமுறை ஆஜராகி இருக்கிறது. பி யூ சி எல் ஆஜராகி வழக்காடிய நக்ஸலைட்டுகளில் பலர் உண்மையிலேயே குற்றம் புரிந்தவர்கள், பலரைக் கொன்றவர்கள் என்பதாகவே இருக்கட்டும். அவர்களில் சிலர் பி யூ சி எல் வாதிட்டதால் விடுதலை ஆகிவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது பி யூ சி எல் அமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் ?

பி யூ சி எல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அவர்களின் பிரதிநிதியாக இருந்து, நீதிமன்றத்தில் வழக்காடும் உரிமைக்காக அவர்களுக்காக வாதாடியது. அவர்கள் விடுதலை ஆனால், அது பி யூ சி எல் அமைப்பின் பிரச்னை அல்ல. அவர்கள் உண்மையிலேயே குற்றம் புரிந்தவர்களாக இருந்தாலும், அது பி யூ சி எல் அமைப்புக்குத் தேவையில்லாதது. அது அவர்களது உரிமையைப் பாதுகாக்கிறதே தவிர, யார் குற்றம் புரிந்தவர்கள் அல்லது குற்றம் புரியாதவர்கள் என்ற தீர்ப்பை வழங்கும் பொறுப்பில் பி யூ சி எல் அமைப்பு இல்லை. இது போன்ற ஒரு வாதத்தையே மேலே எஸ் வி ராஜதுரை அவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது ஒரு தொழிற்சங்கம் தன் உறுப்பினருக்குப் பாதுகாப்பு வழங்கும்போது, அவர் சார்பாக வாதிடும்போது அவர் குற்றம் செய்தாரா இல்லையா என்று பார்ப்பது கிடையாது. சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் சங்கம் தரும் பாதுகாப்பு, வாதங்கள் இவற்றிற்கு அவருக்கு உரிமை உண்டு என்பது தொழிற்சங்கத்தின் நிலைபாடு.

மேற்கண்ட வாதத்தின் கீழ், எப்படிப்பட்ட நிலையிலும் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்களின் சார்பாகத்தான் பி யூ சி எல் அமைப்பு நிற்க முடியுமே தவிர, பி யூ சி எல் அமைப்பில் இருப்பவர்கள் யார் உண்மையான நிரபராதிகள் என்று நினைக்கிறார்கள் என்பதை வைத்து அவர்கள் சார்பாக நிற்க முடியாது. எல்லா தடயங்களையும் சரியான முறையில் நீதிமன்றமோ போலீஸோ கொடுக்கிறதா அல்லவா என்பதும் கூட பி யூ சி எல் அமைப்புக்குத் தேவையில்லாதது.

பி யூ சி எல் அமைப்பைப் பொறுத்த மட்டில் அது தீர்ப்பு கூறும் நிலையில் இல்லை என்று சொன்னால் சரியானது.

ஆனால், பல நேரங்களில் முன்னதாகவே தானே எழுதிக்கொண்ட தீர்ப்பின் சார்பில் அது நீதிமன்றத்துக்குச் சென்று இன்னாருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா ? பெஸ்ட் பேக்கரி கேஸில் நீதிமன்றம் சரியான முறையில் செயல்படவில்லை என்று மறு விசாரணையை கோரியிருக்கிறது. அல்லது கொடுத்த தண்டனை போதாது என்று வாதாடியிருக்கிறது. ஆனால், நீதிமன்றத்தில் சரிவர குற்றம் சாட்டப்படாமல் விடுதலை ஆன நக்ஸலைட்டுகள் விஷயத்தில் அப்படி ஏதும் வாதாடவில்லை.

பெஸ்ட் பேக்கரி வழக்குப் போன்றவற்றிற்காக Communalism Combat போன்ற அமைப்புகளும் , இந்துத்துவ எதிர்ப்பு அமைப்புகளும் வாதிடுகின்றன. அந்த அமைப்புகளின் செயல் திட்டத்தில் இதற்கு இடம் இருக்கலாம். ஆனால் பி யு சி எல் போன்ற அமைப்புகளின் செயல் திட்டத்தில் இந்துத்துவ ஆதரவோ அல்லது எதிர்ப்போ இல்லை, இருக்கவும் முடியாது. அதாவது நக்சலைட்களின் செயல்திட்டத்தில் இருக்கும் வன்முறையைப் பற்றிய நிலைபாட்டை பி யு சி எல் எடுக்காது என்றால், அது இந்துத்துவாவின் வன்முறைக்கும், முஸ்லிம் தீவிரவாதிகளின் வன்முறைக்கும் கூடப் பொருந்தும். நக்ஸலைட்டுகள் வன்முறை என்பது கொள்கை ரீதியாக தங்களுக்கு ஏற்கப்பட்ட வழிமுறை என்றே பேசி வருகிறார்கள். அது பற்றிக் கருத்துச் சொல்லும் உரிமை பி யு சி எல்லிற்கு இல்லை என்று கூறும் பி யு சி எல், இந்துத்துவா அமைப்பை எதிர்த்து வழக்குப் போடுகிறது.

பி யு சி எல் அரசாங்கம் – தனி மனிதன் இவர்களுக்கிடையே நிகழும் முரண்பாட்டில் தனிமனிதன் சார்பாகவும், அரசாங்கம் – குழு இவர்களுக்கிடையே நிகழும் முரண்பாட்டில் குழுவினைச் சார்ந்தும் தான் இயங்க வேண்டும். அந்தத்தனிமனிதனின், குழுவின் கொள்கை பற்றி எந்த நிலைபாட்டையும் பி யு சி எல் எடுக்க முடியாது.

**

அமெரிக்காவில் ஏசிஎல்யூ என்ற அமைப்பு இருக்கிறது. அது யாருடைய அரசியல் சட்ட உரிமைகள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சார்பாக வாதாடுகிறது. அது அந்த அமைப்பை எதிர்ப்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்காக வாதாடியிருக்கிறது. உதாரணமாக, ரஷ் லிம்பா என்ற வலதுசாரி பேச்சாளரின் மருத்துவ குறிப்பேடுகள் அவர் தொடர்ந்து வலி நீக்கும் மருந்துக்களுக்கு அடிமையாக இருக்கிறாரா என்பதை கண்டறிய பொதுவில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ( ரஷ் லிம்பா, நமது இந்துத்வா பேச்சாளர்களை எல்லோரையும் விட பல மடங்கு அதிக தீவிரத்துடன் வலதுசாரி கிரிஸ்துவராக இருப்பவர். ) அதனை எதிர்த்து, ரஷ் லிம்பாவுக்கு ஆதரவாக, ஏசிஎல்யூ அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஒருவரது மருத்துவக்குறிப்பேடுகள் அவரது அந்தரங்க தனிச்சொத்து, அவற்றை பொதுவில் வைக்க அரசாங்கத்துக்கு உரிமை கிடையாது என்று வழக்குத் தொடுத்தது. இதுதான் உண்மையான மனித உரிமைப் பாதுகாப்புக்குழு.

அமெரிக்க மனித உரிமைக் குழு மிக முக்கியமாய்ப் போராடுவது அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான தணிக்கை முறையை எதிர்த்து. மதச் சின்னங்களை அரசு இடத்தில், அரசு ஆதரவுடன் பயன்படுத்துவதை எதிர்த்து. ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு அரசு தரும் ஆதரவை எதிர்த்து. தனிமனித உரிமைகளைச் சிதைக்கும் வண்ணம் தனிமனிதர் உடைமைகளைப் பரிசீலிப்பதையும், அவர்கள் வீட்டுக்குள் சோதனை போடுவதையும் எதிர்த்து. விசாரணையில்லாமல் காவலில் வைப்பதை எதிர்த்து. எழுத்துச் சுதந்திரத்தைத் தடை செய்வதை எதிர்த்து.

உதாரணமாக ஆரிய தேசம் என்ற வெள்ளை மேலாண்மை அமைப்பு, கறுப்பர் விரோத அமைப்பு தன் பிரசுரங்களை வெளியிடும் சுதந்திரம் வேண்டும் என்று இந்த மனித உரிமை அமைப்புப் போராடியிருக்கிறது. நாஜிக் கட்சி தன் பிரசாரத்தைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று போராடியிருக்கிறது. ஆபாசமான புத்தகங்களை விற்பனை செய்யத் தடை செய்ததை எதிர்த்துப் போராடியிருக்கிறது. சரியான கருத்துகளுக்குத் தான் சுதந்திரம் என்ற நிலைபாடு தவறு எல்லாக் கருத்துகளும் சுதந்திரமாய் வெளிப்படவேண்டும் என்று போராடியிருக்கிறது.

சரியான கருத்துக்கான சுதந்திரத்தை ஆதரிப்பேன் என்றால் அது சுதந்திரம் அல்ல. ஏனெனில் சரியான கருத்து எது என்று சொல்லும் உரிமை மனித உரிமைக் கழகங்களுக்கு இல்லை. அதுபோலவே பி யூ சி எல் அமைப்புக்கும் இல்லை. உதாரணமாக, பஜ்ரங் தள் தலைவர் கேர்ள்பிரண்ட் படத்தை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வெளியிட அவருக்கு இருக்கும் சுதந்திரத்துக்காக பி யூ சி எல் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், அந்தப் படத்தை அரசாங்கம் தடை செய்தால், அந்த தடைக்கு எதிராக பி யூ சி எல் வாதாட வேண்டும். இது முரண்பாடாகத் தெரிந்தாலும், இதுதான் பியூசிஎல் அமைப்பின் போராட்ட அடிப்படையாக இருக்க வேண்டும்.

**

பி யூ சி எல் அமைப்பு உண்மையிலேயே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆதரவாகத்தான் நிற்கவேண்டுமே தவிர, அது ஒரு குறிப்பிட்ட கொள்கை, மற்றும் கட்சி அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானது என்ற கருத்து நிலைப்படுவது சரியல்ல. பி யூ சி எல் அமைப்பின் இதுவரை வேலைகள் நக்ஸலைட் வன்முறைக்கு வக்காலத்து வாங்குவதாகவும், இந்துத்வா வன்முறைக்கு எதிரானதாகவும் இருக்கின்றன. இந்துக்கள் மீது நடக்கும் வன்முறையை கண்டு முகம் திருப்பிக்கொள்ளும் பி யூ சி எல் அமைப்பு, இதர குழுவினர் மீது நடக்கும் வன்முறையை மட்டுமே கண்டுகொள்கிறது. பி யூ சி எல் அமைப்பைப் பொறுத்த மட்டில் இவர் பெரும்பான்மை இவர் சிறுபான்மை என்பதற்காக தனித்தனி நிலைப்பாடு எடுக்க முடியாது. அதே போல இந்தக் கொள்கை நல்ல கொள்கை இந்தக் கொள்கை தவறான கொள்கை என்ற நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது. ஆனால் அப்படிப்பட்ட பாரபட்சமான நிலைப்பாட்டையே பி யூ சி எல் இதுவரை எடுத்து வருவதால், இது தொடர்ந்து மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் குழுக்களின் முகமூடியாகவும், சில இடங்களில் காங்கிரஸ் கட்சியின் முகமூடியாகவுமே வேலை செய்து வருவதைக் காணலாம்.

பி யூ சி எல் அமைப்பு நம் நாட்டுக்கு மிகவும் தேவை. கவர்ச்சி கரமான high-profile வழக்குகளைத் தவிர்த்து, அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க பி யு சி எல் பல வழிகளில் பணியாற்றியிருக்க முடியும். இன்னமும் காவல் துறையினர் பெருமளவில் பொதுமக்களை உதாசீனம் செய்தும் அவமதித்தும் நடப்பது பி யு சி எல் போன்ற அமைப்புகள் போராடி மாற்றியிருக்க முடியும். சித்திரவதை விசாரணைகளை நீக்கப் போராடியிருக்க முடியும். சொல்லப்போனால், ஒரு தனி நபர் பஸ் நிலையத்தில் சுத்தமான இடத்தில் தனியாக தன் காலைக்கடன்களைக் கழிப்பது கூட மனித உரிமைகளில் ஒன்றுதான். அதன் சார்பாக அரசின் மீது வழக்குத் தொடுப்பது கூட முக்கியமான விஷயம்தான். திமுக ஒரு நாளில் ஊர்வலம் செல்லவிருப்பதை அரசு மறுக்கும்போது, திமுக (அல்லது வேறெந்த கட்சி)க்கும் ஆதரவாகத்தான் பி யூ சி எல் அமைப்பு இருக்க வேண்டும். நள்ளிரவு கைதுகளை எதிர்த்து அது அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். காவல்துறை கைது செய்து விசாரிக்கும் போது, கைது செய்யப்பட்டவரின் வழக்குரைஞர் இல்லாமல் விசாரணை செய்யலாகாது என்ற உரிமைக்காகப் போராடியிருக்க வேண்டும்.

மனித உரிமைகளுக்கான முயற்சி ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ இல்லை. அது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவாகவும், எல்லா மக்களின் உரிமைகளுக்கும் ஆதரவாகவும், எல்லா அரசுகளுக்கும் எதிராகவும்தான் இருக்க முடியும்.

**

karuppanchinna@yahoo.com

**

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்