தீம்தரிகிட தலையங்கங்கள்

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

ஞாநி


வரவேற்போம்

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தபிறகு இந்துத்துவா கொள்கையில் இனி தொடர்ந்து உறுதியாக இருக்கப்போவதாக அறிவித்துள்ளது.

குஜராத்தில் முஸ்லிம் படுகொலைகளுக்குக் காரணமான முதலமைச்சர் நரேந்திர மோடியைப் பதவியிலிருந்து விலகச் சொல்லப் போவதில்லை என்றும் பாரதிய ஜனத உறுதியாக முடிவு எடுத்திருக்கிறது,

பாரதிய ஜனதாவின் உயர் தலைவர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டு எடுத்துள்ள இந்த முடிவுகள் இரண்டு விஷயங்களை தெளிவாக்கிவிட்டன. கூட்டணி தந்திரங்களுக்காக என்ன பேசினாலும், எத்தனை விதமாக மாற்றி, திரித்து, வளைத்து பேசினாலும், ஆளுக்கொரு குரலாக ஒலிப்பது போல பாவனை காட்டினாலும், பாரதிய ஜனதாவின் அடிப்படைக் கொள்கை ஆர்.எஸ்.எஸ்சுடைய கொள்கைதான். ஒற்றை பண்பாடு என்ர பெயரில் இதர மதங்களையும் கலாசாரங்களையும் அழித்தொழிப்பதுதான் அந்தக் கொள்கை.

மிதவாதி, ஜெண்ட்டில்மன், ரைட் மேன் இன் தி ராங் பார்ட்டி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு நம் மீது பிரதமராக சுமத்தப்பட்டிருந்த வாஜ்பாய், கோவிந்தாச்சார்யா சொன்னது போல முகமூடிதான் என்பது தெளிவாகிவிட்ட இன்னொரு விஷயம். மோடி விலகல், குஜராத் கலவரம் பற்றியெல்லாம் விவாதிக்கப் போவதாக வீரம் காட்டிய இரண்டாம் நளே வாஜ்பாயியின் பேச்சு மாறிவிட்டது. ஒரு வாரத்துக்குள் மூன்று முறை முன்னுக்குப் பின் முரணாகப் பேசி தன்னை மிகக் கேவலமாக அம்பலப்படுத்திக் கொண்டார் வாஜ்பாய்.

முகமூடியின் உதவியால் ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்து இந்தியாவின் சகல துறைகளிலும் மத வெறி என்ற விஷத்தை விதைத்துள்ள கட்சி, இப்போது முகமூடியின் பயன் தீர்ந்துபோய்விட்டதால், அவரை பீஷ்மர் பதவியிலிருந்து ஆஸ்தான் கோமாளிப் பதவிக்கு அனுப்பிவிட்டது.

பாரதிய ஜனதா தான் வேறு, ஆர்.எஸ்.எஸ் வேறு அல்ல என்று இப்போது பகிரங்கமாக அறிவித்துவிட்டதை வரவேற்போம். மறைமுக எதிரிகளை விட நேரடி எதிரிகளை சந்திப்பது எளிது. இனி பாரதிய ஜனதாவுடன் உறவு கொள்ளும் இதர கட்சிகள் எல்லாமே ஆர்.எஸ்.எஸ்சின் வேலையாட்களகவே கருதப்பட வேண்டும்.

டாக்டருக்கு சிகிச்சை தேவை

ஆங்கிலத்தில் புகழ் பெற்ற சொற்றொடர்களில் ஒன்று Physician, heal thyself என்பதாகும். மருத்துவரே, முதலில் உம்மை குணப்படுத்திக் கொள்ளும் என்ற இந்த வாக்கியத்தைத்தான் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் அய்யா அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

நடிகர் விஜய்காந்த்தின் விமர்சனங்களைத் தாங்கமுடியமல் பாட்டாளி மக்கள் கட்சியினர் செய்து வந்த அராஜகங்களும் வெளியிட்ட அறிக்கைகளும், டாக்டர் அய்யாவை தமிழ்நாட்டின் பால் தாக்கரேவாக அவர்களும் கருதி, நம்மையும் ஏற்கச் செய்யும் முயற்சியாகவே தெரிகிறது. மும்பையில் அரசியல்வாதிகளை சினிமக்காரர்கள் விமர்சித்தால் என்ன ஆகும் தெரியுமா என்று அறிக்கையிலே இதை பெருமையாக வேறு சுட்டிக் காட்டிக் கொள்கிறார்கள்.

சினிமா மோசமாகத்தான் இருக்கிறது. உங்கள் அரசியல் சந்தர்ப்பவாதம் எந்த அளவுக்கு மோசமோ அதே அளவுக்கு சினிமாவும் மோசமாகத்தான் இருக்கிறது. உண்மைதான். அதைத் திருத்த திரைப்படத் தணிக்கைக் குழு முறைப்படி செயல்பட வேண்டும். மக்கள் மத்தியில் திரைப்படக்கலை பற்றிய மாற்று சிந்தனைகளை வளர்க்க வேண்டும். உலகம் முழுவதும் இருக்கும் நல்ல படங்களை கேரளாவின் ஒடிசி இயக்கம் மாதிரி பட்டி தொட்டியெல்லாம் தமிழாக்கம் செய்து மக்களுக்குப் போட்டுக் காட்ட வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி இந்த ஆக்கப்பூர்வமான மாற்று எதையும் ஊக்குவிக்கவும் இல்லை. உருவாக்கவும் இல்லை. பாபா பட சமயத்தில் பா.ம.க சார்புள்ள பண்பாட்டு இயக்கம் சினிமா பற்றி நடத்திய கருத்தரங்கில் டாக்டர் பார்வையாளராக அமர்ந்திருக்கையில் இந்த யோசனைகள் எல்லாவற்ரையும் நாம் மேடையில் முன்வைத்துப் பேசினோம். ஆனால் அடுத்த இரண்டாண்டுகளில் இதற்கு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ம.கவினர் தொடர்புள்ள தொலைக்காட்சியால், ஒரு மாற்று தரமான தொலைக்காட்சியாகத் தன்னை உருவாக்கிக் கொள்ளக் கூட முடியவில்லை. எந்த படங்கள் எல்லாம் மோசம் என்று டாஅக்டர் சொல்கிறாரோ அதையே தன் அத்தனை சேனல்களிலும் தினமும் இரவு பகலாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் சன் டிவியைப் பற்றி வாயையே திறப்பதில்லை.

இதையெல்லாம் செய்யாமல், விஜய்காந்த் போன்றோர் செய்யும் அரசியல் விமர்சனங்களுக்கு நேர்மையான பதில் சொல்ல முடியாமல், படத்தை வெளியிட விடமல் தடுப்பது, கொட்டகைகளை மிரட்டுவது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயக விரோதமானவை. பா.ம.க பின்பற்றும் அரசியல் வழிகள் தவறானவை என்று கருதும் வேறொரு வலிமையான இயக்கம் நாளை உருவாகி, இதே போல, இந்த வழிமுறைகளை மாற்றிக் கொள்ளமல் தைலாபுரம் தோட்டத்தை விட்டு வெளியிலே காலடி எடுத்து வைக்க விட மாட்டோம்; பா.ம.க பொதுக் கூட்டம் நடத்த விட மாட்டோம் என்று மிரட்டலில் இறங்கினால் அது எவ்வளவு அராஜகமானதோ, எப்படி எம் போன்றோரால் கண்டிக்கப்படுமோ, அதே அளவு அராஜகமானவை விஜய்காந்த் பட எதிர்ப்பு நடவடிக்கைகள்.

ரஜினிகாந்த்தின் முதிர்ச்சியற்ற மக்கள் ஆதரவற்ற அரசியல் அமெச்சூர்தனத்தை எதிர்த்து வெற்றி பெற்றது போல விஜய்காந்த் விஷயத்தில் இயலாது என்று (இந்த இதழ் அச்சாகும் வேளையில் ) உணர்ந்தோ அல்லது பன பலம் மிகுந்த சினிம துறையுடன் சமரசம் ஏற்பட்டதாலே விஜய்காந்த் எதிர்ப்பு போரட்டங்களை பா.ம.க நிறுத்தி வைத்திருப்பது புத்திசாலித்தனமான பின்வாங்கலாகும்.

பெரியாரும் காமராஜரும் வாழ்ந்த சமூகஹ்தில் பால் தாக்கரேக்கள் உருவாக முயற்சிப்பது ஆபத்தானது. முளையிலேயே எல்லா ஜனநாயகவாதிகளாலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும். கூட்டணி தர்மத்துக்காக, தி.மு.க முதல் இடதுசாரிகள் வரை இதில் வாய் மூடிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு.

டாக்டர் அவர்களே. உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்திருக்கிற ஏராளமான ஏழை வன்னியர்களுக்கும் இதர ஜாதி ஏழைகளுக்கும் எட்டாத கனியாக இருக்கிறது மருத்துவ வசதி. ஒரு தனியார் டாக்டரிடம் காய்ச்சலுக்குக் ஆலோசனை பெற்று மருந்துகள் வாங்கவே குறைந்தபட்சம் இருநூறு ரூபாயாகிவிடுகிறது. வேறு எந்த வியாதியானாலும் ஆயிரக்கணக்கான ரூபய் செலவில்லாமல் சிகிச்சை இல்லை. இந்தக் கொள்ளை டாக்டர்கள்- மருத்துவமனைகள்-மருந்து கம்பெனிகளின் கூட்டுக் கொள்ளையாகும். உங்கள் அதிகாரத்தையும் உங்கள் வாரிசுக்கு அளிக்கப்பட்டுள்ள அமைச்சர் பதவியையும் முதலில் இந்தக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பயன்படுத்துங்கள். உங்களை தமிழ்ச் சமூகமே போற்றும். மருத்துவத் துறையின் ஊழல்களை ஒழித்த பிறகு சினிமாவைப் பார்த்துக் கொள்ளலாம்.

தீம்தரிகிட ஜூலை 2004

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி