கவிக்கட்டு 13 -திறந்து விடு

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

சத்தி சக்திதாசன்


இதயத்தைக் கொஞ்சம் திறந்து விடு
இருட்டழிந்து ஓளி வரட்டும்
அன்பு எனும் அந்த அகல் விளக்கை
சிறிதாய்த் தன்னும் ஏற்றி வை
மின்சாரம் மறைந்து போனால்
விளக்குத்தானே வெளிச்சம் தரும்.

எங்கே ஒடுகிறாய் ?
எத்தனை காலத்திற்கு ஓடப் போகிறாய் ?
கால்கள் தளரும் போது
தாங்க உனக்கு நிலம் வேண்டும்
நிலத்தை மிதிக்கும் போது
நிதர்சனமற்றவனே
நிச்சயமாய் இதை
நினைவிற் கொள்

ஒளித்து இருந்து கொண்டே
உலகத்தை விலைக்கு
வாங்கலாம் என
இலவசமாய்க் கனவு காணும்
சித்திரக் குருடனே
சிதைந்து போன உணர்வுகளால்
உறவுகளுக்கு உயிர் கொடுக்க
முடியுமா ?

திறந்து விடு !

உண்மைகள் தேடிவரும் போது
உள்ளத்தில் நிறைவாக தேக்கிவிடு
கலைந்து போன
காவியங்கள் கண்ணீரால்
கழுவப்பட்டது சரித்திரமே!
உன்னையே நீ
உணர்ந்து கொள்ள
தவறி விட்டால்
சத்தியத்தின் எடை
சற்றே தாழ்ந்து விடும்

உன் இதழ்களைத் திறந்து விடு !

புன்னகையின் தோற்றம்
பூவுலகின் மாற்றம்
சிங்காரம் கலைந்த
சித்திரத்தைக் கண்டு விட்டால்
அதை உடைத்து
கருங்கல்லாய் மாற்றிவிடு
மீண்டும் ஒரு சிற்பம் அமைக்க
சிற்பி ஒருவன் அதோ
உன் பின்னால்
வந்து கொண்டேயிருக்கிறான்

உன்னை நீ கேள்வி கேட்க
உத்தரவு யாரிடம் எதிர்பார்க்கிறாய் ?
நாளைய உலகில் நீ ஒர்
பாரிய பங்கெடுக்க வேண்டுமென்றால்
பதுங்கியது போதும்
பாய்ந்தெழுந்து முன்னே வா!

உலகம் உனது வரவை
உன்னிப்பாய் கவனிக்கிறது
உன் பங்கு அளிக்காமல்
லாபத்தில் ஓர் பங்கு
எந்த
வியாபாரத்தில் நீ அடைவாய்

ஒன்றே ஒன்று மட்டும்
ஒரே தடவை நான் கேட்பேன்

திறந்து விடு தோழா உன்னிதயத்தை
அன்புக்குத்
திறந்து விடு !

0000

காதலாகி

சத்தி சக்திதாசன்

ஏடெடுத்தேன் அதில் உன் பூமுகத்தின் எழில் வடித்தேன் – யான்
எனை மறந்து உன்னினைவில் உலகிழந்தேன் பூங்கொடியே

யாழெடுத்தேன் உன் தேன்குரலின் சுவையாற்றும் பண்ணிசைத்தேன் – உனை
யாசித்தேன் ; உன் இதயத்தை பூவாக நேசித்தேன் தேன் மொழியே

வாளெடுத்தேன் உனைக் குறை கூறும் வீணர் தமை வீழ்த்திட்டேன் – மானே
விழி கொண்டு நீயென் இதயத்தை ஏன் புண்ணாக்கினாய் வான்நிலவே

படையெடுத்தேன் தூக்கம் கலைக்கும் இரவுகளை வெற்றி கொள்ள – கிளியே
படர்ந்தாய் குளிர் மேகமாய் என் கொதிக்கும் நெஞ்சத்தின் ஓரத்தில் கவிக்குயிலே

கவியெடுத்தேன் கன்னியுந்தன் மீது யான் கொண்ட காதல் விளக்க – மயிலே
கலையாத மேகமாய் எனவானில் நீ வலம் வர வேண்டிப் பூஜித்தேன் மலர்வனமே

பிறப்பெடுத்தேன் மீண்டும் பிறப்பெடுப்பேன் என்றும் உன் வாழிவில் ஒளியாக – கனியே
பிரிவென்ரொரு வார்த்தை உன் வாயிலிருந்து பிறக்குமுன்னே பிரியுமெந்தன் உயிர் தமிழ்மகளே

—-

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்