கலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே ?

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

ஞாநி


அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு,

வணக்கம்.

முரசொலியில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் புதையல் இணைப்பின் உதவியாசிரியனாக ஓராண்டு பணியாற்றிய என்னைப் பற்றி கார்ட்டூன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறீர்கள். இது வேறு எந்த பத்திரிகையாளனுக்கும் கிட்டாத கெளரவமாகும். நன்றி.

வழக்கம் போல உங்கள் புத்திக் கூர்மை அதில் பளிச்சிடுகிறது. பிற்போக்குக் கருத்துக்களின் ஆதரவாளரான துக்ளக் ஆசிரியர் சோவையும் அத்தகைய கருத்துக்கள் எந்த இடத்திலிருந்து வந்தாலும் எதிர்க்கும் என்னையும் ஓரணியாக்கிக் காட்டியிருக்கிறீர்கள். தமிழ் செம்மொழியாவது குறித்து அவர் வயிறெரிவதாகவும் தயாநிதி மந்திரியானது பற்றி நான் வயிறெரிவதாகவும் சித்திரித்திருக்கிறீர்கள்.

என் கண்ணெதிரே குங்குமம் நிறுவனத்தில் டான் ஏஜ் வயதில் அப்ரெண்ட்டிசாக நுழைந்து வளர்ந்த இளைஞர்கள் கலாநிதியும் தயாநிதியும் வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து எனக்கு வயிறெரிய ஏதுமில்லை. உங்கள் குடும்பம், என் குடும்பம் மட்டுமல்ல, எல்லா குடும்பங்களிலும் உள்ள இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதை எப்படி சாதிக்கிறார்கள், எந்த வழியில் சாதிக்கிறார்கள் என்பது பற்றிய சமூக அக்கறையும் விமர்சனமும் நீங்கள் விரும்பினல்கும் விரும்பாவிட்டாலும் என் போன்றோரால் செய்யப்படும்.

தயாநிதி மாறனும் அன்புமணியும் அமைச்சர்களாக்கப்பட்ட விதத்தைதான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது, உட்கட்சி ஜனநாயகம் இல்லாத கட்சிகள்தான் பாசிசத்தின் ஊற்றுக்கண் என்பதே என் விமர்சனம். இதை எதிர்கொள்ள உங்களால் இயலவில்லை. ஏனென்றால் உங்கள் முடிவுகள் நேர்மையற்றவை. எனவே வழக்கம் போல உங்களுடைய நேர்மையின்மையை மறைக்க உங்கள் புத்திசாலித் தனத்தைப் பயன்படுத்துகிறீர்கள்.

தமிழ் செம்மொழியாவதும், தயாநிதி அமைச்சராவதும் உங்கள் கார்ட்டூனில் சமமாக்கிக் காட்டப்படுவதுதான் உங்கள் சாமர்த்தியம். இரண்டும் ஒன்றா ? முன்னது கோடிக்கணக்கான தமிழர்களின் கொண்ட்டாட்டத்துக்குரியது. பின்னது உங்கள் திருக்குவளை குடும்ப வகையறாக்களின் இல்லத் திருவிழாவுக்கான விஷயம்.

என் விமர்சனங்களில் நான் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளுக்கு இப்போது கூட நீங்கள் பதில் சொல்லலாம்.

பிறப்பின் அடிப்படை தவிர தயாநிதியை எம்.பியாக்கி அமைச்சராக்கி நீங்கள் மகிழ வேறு என்ன அரசியல் தகுதி அவருக்கு உண்டு ? ஸ்டாலின் போலப் பதவிகளுக்கு வரும் முன்பு கட்சிப் பணியில் பத்தாண்டுகளாவது உழைத்தாரா ?

பிறப்பு தவிர வேறு தகுதிகள் உண்டென்றால், அந்தத் தகுதிகள் உடைய வேறு இளைஞரே கட்சியில் இல்லையா ?

சிறுபான்மை, தலித் நலனுக்காக உழைப்பவர் என்று ஓயாமல் சொல்லிவருகிறீர்களே, அப்படியானால், ஆயிரம் விளக்கு உசேன், பரிதி இளம் வழுதி போன்றோரை ஏன் மத்திய அமைச்சராக்கிட உங்கள் மனதில் எண்ணமே எழுவதில்லை ?

நீங்கள் எத்தனை சமாதானங்கள் சொன்னாலும், தயாநிதி மட்டும் உங்கள் பேரனாக இருந்திராவிட்டால், அவர் தற்போது எம்.பியாகக் கூட ஆகியிருக்கமாட்டார் என்பதுதானே உண்மை ? எனவே பிறப்பின் அடிப்படையிலான அரசியல் செய்யும் நீங்கள் அல்லவா பார்ப்பனீயத்தின் பாதுகாவலர் ?

இந்த சுடுகிற உண்மைகளை சுட்டிக்காட்டியதற்காக என்னை ஏகடியம் பேசி நீங்கள் கார்ட்டூன் வெளியிட்ட அதே முரசொலி இதழில் உடன்பிறப்புக்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில் ‘அரசியல் புரட்சியுடன் அறிவுப்புரட்சியும் தொடர ‘ பெரியார் வழியில் பகுத்தறிவைப் பரப்ப வேண்டுமென்று, எம்.பி, மந்திரி பதவிகள் எந்த நாளிலும் கிடைக்கும் வாய்ப்பற்ற லட்சோபலட்சம் கழகக் கண்மணிகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறீர்களே ? இந்தப்பகுத்தறிவுப் புரட்சியிலிருந்து தயாநிதி, ஸ்டாலின்களுக்கு மட்டும் விதி விலக்கு ஏன் ? பத்திரிகைப் புகைப்படங்களிலே அம்மன் கோவிலில் ஏற்றிய சூடத்தைக் கண்ணில் ஒற்றி தயாநிதியும் ஸ்டாலினும் வழிபடுவதைக் கண்ட பகுத்தறிவாளர்கள் கேட்கிறோம் – ஏன் நீங்கள் இதே உபதேசத்தை அவர்களுக்குச் செய்வதில்லை ? விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று தயாநிதியின் திறமைகளை வீட்டுக்குள் கண்டறிந்த நீங்கள், மூட நம்பிக்கைச் சேற்றிலே அந்த செந்தாமரை உழல்வதைக் கண்டு ஏன் மனம் பதைக்கவில்லை ?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேர்மையான பதில் உங்களிடமிருந்து கிட்டும் என்ற நம்பிக்கை தற்போது எனக்கில்லை.ஐம்பதில் வளையாததா எண்பதில் வளையப் போகிறது ? நியாயமான விமர்சனங்கள் வைக்கப்படும்போதெல்லாம் அந்த எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை அவதூறு செய்வதும் அச்சுறுத்துவதும் கேலி பேசுவதும் உங்களுடைய பழைய உத்தி. எழுத்தாளர் ஜெயமோகனின் விமர்சனத்துக்கு பதிலாக யானையின் காலில் நசுங்கிவிடுவாய் என்று மிரட்டல் கவிதை எழுதினீர்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் டி.என்.கோபாலனின் விமர்சனத்துக்கு பதிலாக முரசொலி ஆண்டி போண்டியில் கோபாலன் ஜெயலலிதாவிடம் சூட் கேஸ் வாங்கிவிட்டதாக அவதூறு செய்தீர்கள். இப்போது எனக்கு வயிற்றெரிச்சல் என்று கேலிச்சித்திரம் வெளியிடுகிறீர்கள்.

பி.ஜே.பியுடன் உறவு கொண்டு பரதேசிப் பண்டாரக் கட்சியை நீங்கள் வளர்க்கத்தொடங்கிய கல்ம் முதல் நிஜமாகவே வயிறெரியும் எனக்கு , தி.மு.கழகம் திருக்குவளை பாதையிலிருந்து ஈரோட்டுப் பாதைக்குத் திரும்ப வாய்ப்பே இனி இல்லையோ என்று வருத்தம் கொண்ட எனக்கு- ஆறுதலாக அமைந்தது என்ன தெரியுமா ?

முரசொலி, அண்ணா அறிவாலய வளாகங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல மூலைகளிலிருந்தும் உங்களுடைய பல உடன்பிறப்புகள் என் விமர்சனத்தைப் பாராட்டியல்ல, நன்றி தெரிவித்து நேரிலும் தொலைபேசியிலும் சொன்ன வார்த்தைகள்தான். ‘ நாங்கள் சொல்ல முடியாமல் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் எழுதிவிட்டார்கள். நன்றி ‘ என்ற அந்த வார்த்தைகள் கழகத்துக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கும் உள்ளக் குமுறல்களை உங்களுக்கு இனியெனும் உணர்த்தினால் சரி.

உங்களுடைய அறிவுக் கூர்மையை, எழுத்தாற்றலை, பேச்சாற்றலை மதித்தவர்கள், அவற்றிலே மயங்கியவர்கள் கூட இப்போது அவையெல்லாம் உங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்கான அரசியலை மூடி மறைக்கும் கவசமாகவே பயன்பட்டுவருவதை உணர்ந்து வருகிறார்கள். இந்த விழிப்புணர்வையும் மீறி உங்களுக்கு அளிக்கப்படும் மரியாதையெல்லாம், உங்கள் நேர்மைக்காக அல்ல, உங்கள் முதுமைக்காக மட்டுமே என்று தயவு செய்து உணருங்கள்.

அன்புள்ள

ஞாநி

தீம்தரிகிட ஜூலை 2004

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி