This entry is in the series 20100905_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


நகரத்தின்
எந்தச்சுவரும்
சும்மா இல்லை

எதைஎதையோ
பேசிக்கொண்டுதான் இருக்கிறது

விடிவெள்ளி
எதிர்காலம், வரலாறு,
சரித்திரமே,
நட்சத்திரமே,
நம்பிக்கையே,
மாவீரன்,
தளபதி, புயல்,புரட்சி,
தெரசாவே,

இப்படிச்சொற்களைக்
காணும்போதெல்லாம்
இதயத்துடிப்பும்
குருதிக்கொதிப்பும்
கூடுகிறது.

வரலாற்றில் விளைந்த
சாதனைச்சொற்கள்
சாவியாய் விளைந்து
சாதாரணமாய்ச் சுவரில்…

வரலாறும் தெரியாமல்
வருங்காலம் உணராமல்
விளம்பரமாய் எல்லாம்
வெளிச்சமாகிறது.

ஒரு நிலையில் இல்லாத
நானும் மனமும்
ஒரு நிலைக்குவர
வெகுநேரமாயிற்று

அழுக்கு ஆடையுடன்
ஒப்பனை இல்லாமல்
தூரிகை எடுத்து
வண்ணம் குழைத்து
எழுதிக்கொண்டிருந்தான்
ஒரு சுவரில்…

எல்லாம் பொய்
எனினும்
இவன்
கால்வயிறு நிறைவது
என்னவோ மெய்

Series Navigation