This entry is in the series 20030904_Issue

நளாயினி தாமரைச்செல்வன்


அந்த வீதியில்
நீயும் ,நானும்
நட்பாய் தொிந்த
முகம் ஒன்று.
நானோ நட்பாய்
சிாித்து வைத்தேன்.
ஆனால் நீயோ
அவனைப்பார்த்து
என்ன இழிப்பு ?
என கூறிய போது
ஏனோ அதிகம்
இடிந்து போனது
நம் காதல் தான்.
உனக்கான
காத்திருப்பில்
நீ வரப் பிந்தியதால்
உன் நண்பனோடு
சிாித்துக் கதைத்தேன்.
ஆனால் நீயோ
என்ன கதைத்தாய் என
என்னைக் குடைந்தெடுத்து
குற்றக் கூண்டில்
நிறுத்தினாய் பார்
அப்போ என் மனம்
நீ என் மீது வைத்துள்ள
காதலையும், நம்பிக்கையையும்
ஆய்வு செய்து
அறிக்கை எழுத
தவற வில்லை.
என் கூந்தலை
வெட்டியதற்காய்
எப்படி எல்லாம்
திட்டித் தீர்த்தாய்.
நான் உன்னில் இருந்து
விலகிப் போகவல்லா
செய்து விட்டாய்.
காதல் என்றால்
என்ன வென்று தொியுமா
உனக்கு. ?
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் , நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பது தான்.
அதற்காய்
என் வாழ்வை
என் விருப்பு வெறுப்பை
எல்லாம் துறந்து
உனக்காய் மட்டும்
உன் விருப்பு வெறுப்போடு
உனக்காய் வாழ
எனக்கு இஸ்டமில்லை.
நீ நினைக்கும்
குருட்டு
செவிட்டு
ஊமைக்காதலியாக
நான் இருப்பேன் என
நினையாதே.
என்னை சிதை ஏற்றாமல்
என்னை எனக்கே
திருப்பித் தந்துவிடு.
போதும் நீ
என மீது வைத்த
காதலும்
அதன் மீதான நம்பிக்கையும்
போனால் போகிறது
நான் உன் மீது
கொண்ட காதலை
புதைத்து
மீண்டும்
புதிதாய்
பிறந்து விட்டுப் போகிறேன்.

நளாயினி தாமரைச்செல்வன்
nalayiny@hotmail.com

Series Navigation