This entry is in the series 20030822_Issue

கற்பகம்.


திரும்பாம கூட போறாடா – என்று
தோழனிடம் நீ
திரும்பிச் சொல்லும் நேரம்.
என்னைத் தொட்டுப்போகும்
உந்தன் முரட்டு மீசை!
அழகா…
அது உனக்கும் தெரியாது
அவனுக்கும் தெரியாது!

தெருவின் தூசி துரத்திக்கொண்டு
ஓடும் பேருந்தில் தொற்றுகிறாய்
புத்தகங்களை அழுத்தமாய்
அணைத்துக்கொள்கிறேன்
உன் வாசத்தோடு…
என் பாசத்தையும்
சேர்த்து!

வாசல் பார்த்து
நான் காத்திருப்பது…
பூக்கார தாத்தாவுக்கா ?
தூரத்தில் உன் தலை தெரிந்ததுமே
நான் உள்ளே ஓடி ஒளிவது –
ஜன்னலோரச் சீலைகளில்
உன் முத்துமுக வியர்வை
துடைக்கத்தான்.

மாமா கருப்பா இருக்கேனாம்மா…
எதிர்வீட்டு பாப்பாவிடம் வினவுகிறாய்.
காத்தாடும் கருநீலத் தாவணியும்
கருவிழியோரம் பூக்கின்றன கவிதைகளும்
படித்துப்பார்….
என் இனிய சிநேகிதனே
என் ஆசை நிறமது என புரிந்துகொள்வாய்!

m_karpagam@hotmail.com

Series Navigation