வெள்ளித் துளிகள்

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

கரு.திருவரசு


சட்டச் சடவெனக் கொட்டியதே – மழை
குட்டை குளக்கரை முட்டியதே
கொட்டி முடித்திட நினைத்ததுபோல் – மழை
கொட்டுக் கொட்டெனக் கொட்டியதே

குறையாக் கொள்களன் வானத்திலே – அது
கொட்டி நனைக்குது ஞாலத்தையே
வரையா தளிக்கும் வள்ளலைப்போல் – அது
வாரி இறைக்குது மேகத்தினால்

உண்டுகழிக்கும் நீரையெல்லாம் – நாம்
ஊற்றிக் கெடுக்கும் நீரையெல்லாம்
கொண்டு நிறைத்தது மழையெனவே – பின்
கொட்டிப் புரக்குது பாரையெல்லாம்

வெள்ளித் துளிகள் இறைத்ததுபோல் – அதை
அள்ளிச் சலித்தே இறைப்பவரார்
கொள்ளையடித்த பொருளைப்போல் – அதைக்
கொட்டிக் கொட்டிச் சிரிப்பவரார்

***
thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு