வெங்கட்சாமிநாதனின் ‘இன்னும் சில ஆளுமைகள்’ – ஒரு பார்வை

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

வே.சபாநாயகம்


சங்கீத உலகில் இசை விமர்சகர் சுப்புடுவுக்கு நிகரான பிரபல்யம், இலக்கிய உலகில் ஒருவருக்கு உண்டென்றால் அது இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன் அவர்கள்தான். இருவரும் தங்களது தாட்சண்யமற்ற
விமர்சனங்களால் பலரது அதிருப்தியையும் விரோதங்களையும் சம்பாதித்துக் கொண்டவர்கள். கடந்த 40 வருஷங்களுக்கு மேலாக தில்லியில் இருந்து இலக்கிய, நாடக விமர்சனங்களை தமிழ் மற்றும் ஆங்கில ஏடுகளில் எழுதிவந்த சாமிநாதன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவர் கடந்த காலங்களில் ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’, ‘பேட்ரியட்’.
‘நேஷனல் ஹெரால்ட்’ போன்ற ஆங்கில ஏடுகளிலும், தமிழ் ‘இந்தியா டுடே’, ‘அமுத சுரபி’ போன்ற தமிழ்ப் பத்திரிகை
களிலும் மற்றும் ‘தமிழ் சி·பி.காம்’ போன்ற இணைய இதழ்களிலும் எழுதிய விமர்சனங்கள், பல்வேறு இலக்கிய நிகழ்வு
களில் படித்த கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்த 27 கட்டுரைகளை ‘எனி இந்தியன் பதிப்பக’த்தார் ‘இன்னும் சில ஆளுமைகள் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்கள்.

எப்போதும், இப்போதும் சாமிநாதன் தமிழ் இலக்கிய உலகில் பிரச்சினக்குரிய, சூடான விவாதங்களைக்
கிளப்புகிறவராகவே பேசப் படுகிறவர். அவரது விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட, எரிச்சலுற்ற பல குழுவினர் அவரைக் கடுமையாய் விமர்சித்திருக்கிரார்கள். இடதுசாரிக் கருத்துக்களுடைய கலாநிதி கைலாசபதி போன்றோர் அவரை
CIA ஏஜண்ட் என்றும், ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காவல் நாய்’ என்றும் இழித்தும் பழித்தும் வந்திருக்கிறார்கள்.
முற்போக்கு எழுத்தாளர் குழு அவர் ‘பார்ப்பன வெறியர்’ என்று முத்திரை குத்தினார்கள். ஒரு தடவை அவர் திராவிட இயக்கங்களின் இலக்கியப் பங்களிப்பு பற்றி ‘இந்தியா டு டே’ யில் கடுமையாய் விமர்சிக்கப்போய், அ.மார்க்ஸ் குழுவினர் அவர் எழுதிய பக்கங்களில் மலம் துடைத்து ‘இந்தியா டுடே’க்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரிதும் பேசப்பட்டதுண்டு. முன்பு அவரைப் பாராட்டி எழுதிய இலங்கையைச் சேர்ந்த நு·மான், சுந்தர ராமசாமி போன்றோர் பின்னாளில் அவரை மறுத்தும் எதிர்த்தும் எழுதியதுண்டு. ஆனால் சாமிநாதன் அவர்கள் சுப்புடுவைப் போலவே எந்த சலசலப்புக்கும் அஞ்சாது, எந்த மிரட்டலுக்கும் பணியாது, எந்த சதிச்செயலுக்கும் கவலைப் படாது, ‘போற்றுபவர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்…………என் வழியில் தொடர்ந்து செல்வேன், நில்லேன் அஞ்சேன்” என்று தனது விமர்சனப்
பணியைத் தொடர்கிறவர்.

இத்தொகுப்பில் அவர் சந்தித்த, படித்த, பழகிய, அறிந்த பல்வேறு ஆளுமைகளை – இலக்கியம், அரசியல்,
ஆன்மீகம் எனப் பல்துறையைச் சார்ந்தவர்களையும் – பாராட்டியும், கடுமையாய் விமர்சித்தும் எழுதியிருக்கிறார். அவருக்கு
எதிரான விமர்சனங்களைப் படித்து அவர்மீது கசப்பான எண்ணங்களையும் வெறுப்பையும் வளர்த்துக் கொண்டிருப்பவர் கள், இங்கு மொத்த வாசிப்பில், மேலோட்டமில்லாத ஆழ்ந்த தளங்களில் செயல் பட்டு – தான் முன்பின் அறியாத புதிய எழுத்தாளர் சோ.தர்மன் போன்றவர்களை உளமாறப் பாராட்டி, விமர்சித்திருப்பதைப் படித்து மனம் மாறக்கூடும்.

முதல் கட்டுரை பாரதிதாசனைப் பற்றியது. ஆரம்பகாலத்தில் பாரதியின் பாதிப்பில் சமுகப் பிரக்ஞைனை யுடனான இயற்கை வண்ணங்களை, பெண்மை அழகை வியந்து போற்றுகிற அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசுவில் பல இடங்கள், புரட்சிக்கவி, எதிர்பாராத முத்தம் போன்ற கவிதைகளை எழுதிய பாரதிதாசன் பின்னாளில் அரசியல்
சார்பான, இனத்துவேஷத்தின் வெளிப்பாடுகளான கவிதைகளை எழுதியதைக் குறிப்பிட்டு, ‘ஜாதி வேற்றுமைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து எழும் அவரது கோபம் நியாயமானதே, ஆனால் இதற்கெல்லாம் காரணமாக அவர்
சாடுவது ஹிந்து சமூகத்தில் ஒர் குறிப்பிட்ட வகுப்பினரைத்தான்’ என்று ஆதங்கப்படுகிறார். ‘இதன் விளைவாக,
பாரதிதாஸன் என்ற கவிஞரை, அவரது பிற்கால எழுத்துக்களில் காணமுடியாது போயிற்று. தமிழச்சியின் கத்தி, குறிஞ்சித் திரட்டு, தமிழ் இயக்கம் போன்ற இன்னும் பலவற்றில், நாம் பார்ப்பது உரத்த குரலில் சீறும் ஒரு துண்டு பிரசாரகரைத் தான். கவிஞரை அல்ல’, என்றும் ‘பாரதிதாஸனைக் கவிஞராக்கியது, என்னுடைய அபிப்பிராயத்தில் – ஏதும் கவித்துவ உணர்வுகளோ, ஆழ்ந்த சிந்தனைகளோ, ஏதும் அவரதேயான மகத்தான தரிஸனங்களோ அல்ல. இவை ஏதும் அவரிடம் இருந்ததில்லை’ என்றும் கடுமையாய் விமர்சிக்கிறார்.

அடுத்து, ‘பாரதி என்னும் பன்முக மேதை’ என்னும் கட்டுரையில் பாரதியை பலவாறு விதந்து போற்றுகிறார். ‘ரஷ்யப் புரட்சியை முதன்முதலில் இந்தியாவில் வரவேற்றுப் பாடிய ஒரே கவிஞர் பாரதிதான். அதுவே அவரைப் பற்றி
விசேஷமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்’ என்று பாராட்டுகிறார். பார் புகழும் பாரதியை நம்மூர் ‘ஈ.வே.ராவும் சரி, அவரது சீடர்களும் சரி ஒரு கவிஞனாகவே அங்கீகரித்தது இல்லை.ஏனெனில் பாரதி பிராமணன்’ என்பதுதான் என்கிறார். பாரதியின் முற்போக்குச் சிந்தனைகளையும் பன்முக மேதைமையையும் பட்டியலிடுகிறவர் அவர் தன் மனைவியிடம்
காந்திஜியைப் போல ஆணாதிக்க மனப்பான்மையுடன் தன் அதிகாரத்துக்குப் பணிய வைக்க கடுமையாக நடந்து
கொண்டதையும் குற்றச்சாட்டாகக் கூறுகிறார்.

‘திலீப்குமார் மொழியின் எல்லைகளைக் கடந்து’ என்கிற கட்டுரையில், தாய்மொழி குஜராத்தி என்றாலும் அற்புதமாகத் தமிழில் எழுதும் இவரைப் போன்ற எழுத்தாளர்கள் அபூர்வ ஜீவன்கள், தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவர்கள் என்று பாராட்டுகிறார். ‘அவரது ஆளுமையிலும், உணர்வுகளிலும் தமிழ்நாட்டின் பொதுஜனக் கலாச் சாரத்திலிருந்து அவரை அன்னியப்படுத்தும் கூறுகளும் உண்டு’ என்பதையும் பதிவு செய்கிறார்.

‘வ,ராவின் நூற்றாண்டு நினைவில்’ என்கிற கட்டுரை ‘வ.ரா பேசக்கிடைத்த மேடைகளில் எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் மகாகவி பாரதி என ஸ்தாபிப்பதிலேயே தீவிரமாக இருந்தார். இன்று அந்த விவாதங்களைப் பற்றி நினைக் கும்போது. “இந்த விஷயத்திற்கு இவ்வளவு போரும் புழுதி கிளப்பலும் தேவையா?”என்று ஆச்சரியப்படத் தோன்றும். தேவையாகத்தான் இருந்தது அந்தச் சூழலில்’ என்று, வ.ரா உணர்ச்சிவசப்பட்டு சண்டைத் தொனியில் பாரதிக்காக
வாதிட்டதை வியந்து பேசுகிறது. ‘வ.ரா பிராமண குடும்பத்தில் பிறந்தாலும் சாதி, மத விஷயங்கள்பற்றிய பேச்சு எழுந்தால் முள்ளம் பன்றி சிலிர்த்தெழுவது போலச் சீற்றம் கொள்வார்’ என்பதையும், ’40களில் தீவிர பிராமண எதிர்ப்பும், சாதி
ஒழிப்புப் பிரச்சாரமும் செய்து வந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பாராட்டி ஒரு சிறு புத்தகம் எழுதி, அது பிராமணர்
களிடையே மட்டுமல்லாது, உயர்ஜாதி இந்துக்கள் பெரும்பான்மையோரது எதிர்ப்பையும், கசப்பையும் சந்திக்க வேண்டி வந்தது’ என்பதையும் வெ.சா, வ.ராவின் பெருமையாகக் குறிப்பிடுகிறார். இன்னும் தன்னைப் பற்றிய கண்டனங்களை அவர் பொருட்படுத்தாததையும், அவரது எளிமையான எழுத்து நடையையும், அவரது இலக்கிய சாதனைகளையும்
பற்றியெல்லாம் இதில் பதிவு செய்திருக்கிறார்.

‘லா.ச.ராமாம்ருதம் – கலாச்சாரம் ஒரு கலைச் சிமிழுக்குள்’ என்ற கட்டுரையில், ‘ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாய் ஒரே கதையைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்’ என்கிற க.நா.சு.வின் விமர்சனத்தைக் குறிப்பிட்டு,
‘ராமாம்மிருதம் இதை சந்தோஷத்துடன் ஒப்புக் கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள் என்னைப்பற்றித்தான் என இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறேன்” என்பார் என்று எழுதுகிறார். ‘ராமாம்ருதம் எழுதும்
போதும், நண்பர்களிடம் பேசும்போதும் அவர் உணர்வு மேற்பட்ட மனிதர்தான்’ என்கிறவர், ‘என்னதான் உணர்ச்சிகளின் வெப்பமும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாம்ருதத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும், அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் தெய்வநிலைக்கு உயரும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான்’ என்று
பாராட்டுகிறார்.

‘அம்பை’ பற்றி ‘ ‘அம்பை – பெண்மையின் அழகும் பெண்மையின் சீற்றமும்’ என்றொரு கட்டுரை எழுதி
யுள்ளார். அம்பை எழுதத் தொடங்கியபோது, தமக்கென புதிதாகச் சொல்ல ஏதுமில்லாமல், பணத்திற்காகவும்,
எழுத்தாளராகப் பேசப்பட வேண்டும் என்பதற்காகவும் பெரும் அளவில் வந்த பெண் எழுத்தாளர்கள் போலன்றி, தனக்கென சொல்வதற்கு இருப்பதை எழுத நினைப்பவராக, இடதுசாரிச்சிந்தனையாளாராக, தீவிரப் பெண்ணியவாதியாக போராளியாக அம்பை தன் இருப்பை உணர்த்தியதை வெ.சா பாராட்டுகிறார். ‘அம்பை எழுதிய கதைகளில் அவரது பெண்ணியச் சிந்தனைகள் பெண்ணின் வாழ்க்கைக் களன் முழுவதையும் தன் பார்வைக்கு எடுத்துக் கொள்வதையும் அவர் எழுத்தின் அடிநாதம் காலம் காலமாக உலகெங்கும் காணும் அடக்குமுறைக்கு எதிரான குரலாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். ‘இதுதான் அம்பையின் எழுத்துக்க¨ளை மற்ற பெண் எழுத்தாளர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது’ என்றும் கருதுகிறார்.

‘கி.ராஜநாராயணன் தொடரும் வாய்மொழிப் பண்பு’ என்னும் கட்டுரை கி.ராவின் வாய்மொழி மரபு எழுத்தைப்பற்றிப் பேசுகிறது. அவர், கதை சொல்லும் தாத்தாவின் வார்ப்பில் தன்னைக் காண்பவர் என்றும், அவரது எழுத்து வாய்மொழி மரபின் அடையாளங்களான – கிராமத்து விவசாயியின் அட்டகாசச் சிரிப்பைக் கிளறி ரகளை செய்யும் கிண்டல், அவ்வப்போது வெளிப்படும் பாலியல் கவர்ச்சி ஆகியவற்றைக் கொண்டவை என்றும், அவருடைய உலகமே அவரது மக்கள் வாழ்ந்த சிறிய வட்டத்துக்குள் அடங்கியதுதான், அதைவிட்டுத் தாண்டியதில்லை என்றும்
விமர்சிக்கிறார்.

ஜெயமோகனைப் பற்றிய கட்டுரை, ‘வாழ்க்கையின் புதிய உண்மைகளை ஆராயும், புதிய அனுபவத் தளங்
களைக் காணும், அத்தளங்களில் மறைந்திருக்கும் ஆழங்களைக் காணும் உந்து சக்தியை, புதிய வடிவங்கள், புதிய நடை, புதிய மொழி எனத் தேடிச் செல்லும் அவரது சோதனை முயற்சிகளைப்பற்றிப் பேசுகிறது. ‘அவரது எழுத்துக்கள் ஓரோர் சமயம் விளையாட்டுத்தனமாகவும், கேலி செய்வனவாகவும், துன்புறுத்தாத நகையாடலாகவும், அழகிய கவித்துவத்தோடும், உருக்கமான நாடகமாகவும், உயர்ந்த தளத்தில் மேலெழுந்த தத்துவர்த்தமாகவும், சமயத்திற்கேற்ப வெவ்வேறு குணங்கள்
கொண்டதாகக் காணப்படுவதை’யும் சொல்கிறது.

‘காதுகள்’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது எம்.வி.வெங்கட்ராம் அவர்களுக்கு வழங்கப்பட்டபோது எழுதியுள்ள பற்றி கட்டுரையில் ‘அவரது எழுத்துக்கள் மனித வாழ்கையின் மனித உணர்வுகளின் ஒரு விஸ்தாரமான தளத்தைத் தம் கருவாக நிகழ்களனாகக் கொண்டவை’ என்றும், ‘புராண இதிகாசங்களிருந்தும் தன்னைக் கவர்ந்த
பாத்திரங்களைத் தன் பார்வையில் மீட்டுருவாக்கம் தந்தவர்’ என்றும், அவர் படைப்புகளில் ‘மயக்க நிலை அனுபவங்கள், பயங்கர சொப்பன அவஸ்தைகள், அதியதார்த்த வண்ணக்கோலங்கள், கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட அனுபவங்கள், வாழும் அவஸ்தைகள், பயங்கள், வறுமையில் காலம் தள்ள நேரும் காலத்திய சோகங்கள், உடல் ஊனத்தினால் ஏற்படும் வதைபடும் வாழ்க்கை, இவற்றின் இடையே அவ்வப்போது தன் இஷ்டதெய்வம் முருகனிடத்தில் தன்னை அற்பணித்துவிடும் கணங்களில் கிடைக்கும் மனச்சாந்தி – இவையெல்லாம் உறவாடுகின்றன’ என்றும் குறிப்பிடுகிறார்.

அடுத்தது நமக்கு அதிகமும் தெரியாத – நாடகத்துறையில் ஆழ்ந்த அனுபவமும் அறிவும் கொண்டிருந்த
நேமிஜெயின் என்பவரைப் பற்றிய அறிமுகம்.

‘எழுதும் முனைப்போ ஆர்வமோ இல்லாத எழுத்து மேதை மௌனியைப்பற்றி என்ன சொல்ல?’ என்று
தொடங்குகிறது ‘மௌனியின் உலகு’ என்ற கட்டுரை. ‘அவர் ஒன்றும் எழுதிக் குவிப்பவர் இல்லை. அவர் முதலில் எழுத ஆரம்பித்ததே இதில் ஏதும் உருப்படியாகச் செய்ய முடியுமா என்று பார்க்கத்தான்’ என்கிறார் வெ.சா. அக்காலத்திய
மற்ற எழுத்தாளர்களைப் போல மௌனியின் போராட்டம் மொழியை ஒரு ஆற்றல் பெற்ற சாதனமாகக் கையாளுவதில் மட்டுமில்லை, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதும், தனக்கே உரியதுமான தன் உள்ளுலகை வெளியிடுவதற்கு ஏற்ற
வெளியீட்டு மொழியைக் காண்பதற்கும் அவர் சிரமப்பட வேண்டி இருந்தது’ என்று அவரது தனித்தன்மை பற்றிக்
குறிப்பிடுகிறார்.

‘ந.பிச்சமூர்த்தி நூற்றாண்டு நினைவு’ கட்டுரை, அவரை நவீன சிந்தனையாளராகவும், பழமைவாதியாகவும்
காட்டும் முரண்பாட்டைச் சொன்னாலும், முரண்பாடுகளாகக் காண்பவற்றை ஒருமைப்படுத்தியுள்ள அவரது ஆளுமையின்
இசைவைப் பற்றியும், எதையும் விசாரணைக்கு உட்படுத்தும் மனவோட்டம் பற்றியும் பேசுகிறது. ‘எழுத்து என்பது அவ்வளவு முக்கியமானதல்ல. வாழ்க்கைக்குப் பிறகுதான், இரண்டாம் பட்சமாகத் தான் இலக்கியம் இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார்’ என்பதையும் வெ.சா எடுத்துக் காட்டுகிறார்.

‘திரிலோக சீதாராம் – சப்தங்களின் உலகோடு ஒரு மீள் பரிச்சயம்’ என்கிற கட்டுரையில், அவர் ‘வாழ்ந்ததே கவிதை என்னும் ஒலி உலகில்தான், அச்சிட்ட உலகில் அல்ல’, சப்தலோகங்களுடன் வாழ்ந்த அவர் புது சப்த
லோகத்தைச் சிருஷ்டிப்பவராகவும், அதிலேயே வாழ்பராகவும் இருந்தார் என்பதை வெ.சா சொல்கிறார்.

‘ஜானகிராமன் எழுத்து அத்தனையையும் ஒரே ஒரு வார்த்தைச் சிமிழுக்குள் அடைக்க முடியுமானால் அந்தச் சிமிழுக்குப்பெயர் ‘வியப்பு’ என்று தி.ஜானகிராமனைப் பற்றி வியந்து பேசும் வெ.சா, க.நா.சு பற்றியும் அவரைப் பற்றிய
தனிக்கட்டுரையில், இலக்கிய விமர்சனத்தை ஒரு இயக்கமாகவே அவர் கையாண்டதும், அவரது விமர்சனங்கள் வெறும் அபிப்பிராயங்கள் தான் என்ற பலரது எழுத்தைக் காப்பாற்றி இன்றுவரை ஜீவிக்க வைத்துள்ளவர் அவர்தான் என்பதும்
பற்றி விரிவாகப் பேசுகிறார்.

‘சே.ராமானுஜம் நாற்பது ஆண்டுகளாக’ என்கிற கட்டுரையும், ‘தமிழ்நாட்டில் மறுபடியும் ஒரு அதிசயம்’
என்கிற கட்டுரையும் ராமானுஜம் என்கிற நாடக இயக்குனரின் சாதனைகளைச் சொல்கிறது.

சேலத்தில் ‘காலச்சுவடு’ நடத்திய சி.சு.செல்லப்பா கருத்தரங்கில், சாதாரண – ஆனால் அசாதாரணங்கள்
நிறைந்த அவரது தனித்தன்மை வாய்ந்த ஆளுமைகள் பற்றி வெ.சா மிக உயர்வாகப் பேசியது – ‘சி.சு.செல்லப்பா
என்றொரு ஆளுமை’ என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள விசேஷமான கட்டுரை.

தில்லி ராமகிருஷ்ணா மடத்தின் தலைவரான ரங்கதானந்தா பற்றியும், ஒரு வித்தியாசமான ஆன்மீக
வாதியான விவேகானந்தர் பற்றியும், கர்நாடக இலக்கியவாதி கே.வி.சுப்பண்ணாவின் இழப்பு பற்றியும் நாம் அறியாத பல புதிய தகவல்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் அறிகிறோம்.

‘சுந்தரராமசாமி பற்றிய நினைவுகள்’ அவரோடு இணக்கமாய் வெ.சா இருந்த காலகட்டத்தையும் பிறகு அவரோடு சு.ரா பிணங்கிய காலகட்டத்தையும் உள்ளடக்கிய சில கசப்பான நினைவுகளைச் சொல்கிறது. ஆரம்பத்தில் சு.ராவின் கதைகளையும் பாராட்டிய வெ.சா அவருடன் நடத்திய ஒரு வானொலிப் பேட்டியில், ‘அவரிடம் திட்டமிடல் இருந்தாலும் spontaneaty இல்லை, அவரது observation- களில், கிண்டலில், வெகு கரிசனத்தோடு நம் கவலைகளைப் பகிர்ந்துகொள்வது – பின்னாட்களில் மெதுவாக மறையத் தொடங்கி விட்டனவோ?’ என்று கேட்டபோது, சு.ரா மறுத்திருக்கிறார். பின்னர் வெ.சாவுக்கு ‘இயல் விருது’ கிடைத்தபோது உற்சாகத்தோடு பாராட்டியவர், நு·மான் வெ.சாவுக்கு அவ்விருது கொடுக்கப்பட்டதைக் கண்டித்த போது அதை அங்கீகரித்த அளவுக்கு உணர்வுகள் குறுகிவிட்டதைக்
குறிப்பிட்டு ‘எது உண்மை?’ என்ற வினா எழுப்பி, ‘இரண்டுமே உண்மைதான்’ என்று முடிக்கிறார்.

2005ல் தனது 86ஆம் வயதில் மறைந்த பஞ்சாபி பெண்ணியக் கவிஞர் அம்ரிதா பிரீதம் பற்றி சுவாரஸ்யமான
தகவல்களை ஒரு கட்டுரையில் வெ.சா பதிவு செய்திருக்கிறார். நிறைந்த புகழும், தன் வாழ்நாளிலேயே வெற்றியும் பெற்ற அம்ரிதா பிரீதத்தின் கவிதை ஆளுமை பற்றியும், பெண்ணியம் fashionable-ஆன லேபிள் ஆகும் முன்னரே
பெண்ணிய வாழ்க்கை வாழ்ந்த பெண்ணிய ஆளுமை பற்றியும் விரிவாகப் பேசுகிறது கட்டுரை.

சோ.தருமன் பற்றிய கட்டுரை அவரைப் ‘பார்ப்பன வெறியர்’ என்று பழி சொன்னவர்க்குப் பதில் போல அமைந்திருக்கிறது. சோ.தருமனைப் பற்றி முன்னதாக ஏதும் – அவர் ஒரு தலித் என்பது போன்ற ஏதும் அரியாத நிலை
யிலேயே ‘கதாவிருது’க்கு அவரது ‘நசுக்கம்’ கதையைச் சிபாரிசு செய்ததையும், அதை நம்பாத கோவில்பட்டி எழுத்தாளர்கள் மேற்கண்ட பழிச்சொல்லைச் சொன்னதையும் குறிப்பிட்டு, சோ.தருமன் ‘தான் பிறப்பால் தலித், எழுத்தால் அல்ல’ என்பவராகவும், இடதுசாரிக் கோணல் பார்வையில் தலித்துகளை ஒரு பக்கச் சார்புடன் காட்டி வந்ததை மறுத்து
தலித்துகளின் பன்முக வளர்ச்சி, ஆன்மா இவைகள் பதிவு செய்யப்படவேண்டும்’ என்பராகவும் விளங்குவதையும் வெ.சா இக்கட்டுரையில் சொல்கிறார். அதோடு அவரது ‘தூர்வை’ நாவலைப் பற்றியும் அவரது இலக்கிய ஆளுமை பற்றியும்
சிறப்பித்துச் சொல்கிறார்.

அடுத்து நாம் மறந்துவிட்ட – ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் எழுத்தாளர் ஆ.ர்.கே.நாராயணனின் இலக்கிய ஆளுமை பற்றியும், பசுவையாவின் ‘கை நகத்தை வெட்டி எறி, அழுக்குச் சேரும்’ என்ற ‘எழுத்து’ கவிதைக்கு எதிர்
வினையாக, ‘சிந்தி எறி. மூக்கைச் சிந்தி எறி, சளிவரும்’ என்று கவிதை எழுதி அதைப் போட மறுத்த செல்லப்பாவிடம்
சண்டைக்கு நின்ற சிட்டியின் எழுத்தாளுமை பற்றியும், பேச்சும், சிந்தனையும், வாழ்வும் ஒன்றாக இருந்த ம.பொ.சி யின்
தமிழுணர்வு, அரசியல் நேர்மை, ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ எழுதி தமிழக அரசின் பரிசு பெற்ற எழுத்தாளுமை பற்றியும் எழுதியுள்ள கடைசி மூன்று கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை.

இப்படிப்பட்ட தனது பதிவுகளை வெ.சா தனித மனித அபிப்பிராயங்கள் என்று சொன்னாலும், அவரது
பார்வைகள் வெறும் அபிப்பிராயங்கள் அல்ல, அவை அவர் கருத்துக் கோர்வைகளின் முன் வைக்கப்பட்ட ஆளுமைகளின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனமும் கூட என்பதுடன், இப்பதிவுகள் பலரது ஆளுமைகள் பற்றியது மட்டுமல்ல வெங்கட் சாமிநாதனின் ஆளுமை பற்றியது கூடத்தான் என்னும் பதிப்பாசிரியர் கோ.ராஜாராமின் கருத்தை இந்நூலைப் படித்து முடித்த பிறகு வாசகரும் ஏற்பார்கள். 0

நூல்: இன்னும் சில ஆளுமைகள்.
ஆசிரியர்: வெங்கட் சாமிநாதன்.
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

Series Navigation