This entry is in the series 20110109_Issue

ரவிஉதயன்


சிறுவர்கள் காட்டிவிளையாடுகிற
கண்ணாடியில் சிறு மேகத்தோடு
தரைக்கு வந்து விடுகிறது சூரியன்
அவர்கள் ஏந்திக் களிக்கும் திசை எங்கும்
துண்டு வெயிலாய்த் துள்ளித் திரிகிறது
இருளடர்ந்த வீட்டுச் சந்துகளில்
மின்மினியாகி மினுங்கி மறைகிறது
எதிர் பாரத் தருணமொன்றில்
அவ் வெளிச்சத்தைக் கடக்கிற காக்கையொன்று
வெண் பறவையாய் மாறிப் பறக்கிறது.
இளைஞன் ஒரு கணம்
நரை தலையோடு
வயோகிதத்தை அடைந்து மீள்கிறான்.
தெருவில் விழுந்து நகரும்
சதுர வெயிலைத் துரத்திப்பிடிக்க முயன்று
தோற்று ஓய்கின்றன தெரு நாய்குட்டிகள்.
விடுமுறைப் பகற்பொழுதுவெளிச்சத்தை
தீப்புள்ளிகளாக்கி பாடபுத்தகத்தின்
பக்கங்களைஎரியூட்டுகிறார்கள்
பள்ளிச்சிறுவர்கள்

.ரவிஉதயன் raviuthayan @ gmail .com

Series Navigation