விடியும்! – நாவல் – (36)

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


பழைய விணாத்தாள்களைப் புரட்டித் துருவி ஆராய்ந்து பரீட்சைக்குக் கட்டாயம் வருமென ஊகித்து நித்திரை முழித்துப் பாடமாக்கி தயாராகிக் கொண்டு போனவனுக்கு வந்ததோ நினைத்தே பார்த்திராத ஒன்று. தமிழ் சமூகத்தில், பெண்பிள்ளைகளுக்கு கல்யாணம் இழுபடுகிறதென்றால், முற்றிப் போன குமர்கள் மூக்கைச் சீறிக் கொண்டு மூலையில் கிடக்கிறதென்றால் மற்ற எதனையும் விட முழுமுதற் காரணம் சீதனக்கொடுமை என்று பால்குடிக் குழந்தையும் சொல்லும். தமிழ்ச் சமூகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் சாதிக்கு அடுத்ததாக நெருக்கியடித்துக் கொண்டு நிற்பது சீதனம். எத்தனையோ அண்ணன்மார்களைப் போல் இந்தக் கொடுமையால் நேரடியாகவே பாதிக்கப்பட்டவன் செல்வம்.

இரண்டு குமர்களைக் கரையேற்ற அவனுக்கு முப்பத்தேழு வருடங்கள் பிடித்திருக்கிறது. தலையில் வெள்ளிக்கம்பிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டன. பசுவின் பாலை கன்றுக்குக் கூட மிச்சம் வைக்காமல் அடிவரைக்கும் கறக்கிற மாதிரி வீடுவளவு, போடப்பட்ட நகை, கைரொக்கம் என்று கறந்து விட்டார்கள்.

சீதனக் கோரிக்கைகளில் முதலிடம் வகிப்பது வீடுவளவு. ஐந்தெழுத்து வார்த்தைதான் – கேட்டு விட்டாலோ, ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போகும். பத்து வருசங்களுக்கு முந்தி திருகோணமலையில் ஒரு பேர்ச் காணியின் விலை பத்தோ பதினைந்தாயிரம். இப்ப இரண்டு லட்சம் போகிறது. பத்து பேர்ச் காணி வாங்கி வீடும் கட்டுவதற்கு நேர்மையான உழைப்புள்ள ஒரு மனிதனின் முழு ஆயுளும் பத்தாது. இந்த லட்சணத்தில் ஒன்றுக்கு மேல் பெண் பிள்ளைகள் இருந்துவிட்டால் – கதை கந்தல்!

எத்தனை அண்ணன்மார்களை அவன் டொறொன்டோவில் கண்டிருக்கிறான். வீட்டுக்கு வீடு தினசரி பேப்பர் போடுகிறவர்கள், ஹோட்டல்களில் எச்சில் கோப்பை கழுவுகிறவர்கள், குப்பை லொறிகளில் தொற்றிக் கொண்டு போகிறவர்கள், பெற்றோல் செட்களில் நாள் முழுக்க நிற்பவர்களுமான பல அண்ணன்மார்களோடு, தன்னைப் போலத்தான் அவர்களுமென்று அடையாளம் கண்ட நெருக்கத்தில், அவன் சுகதுக்கம் பகிர்ந்திருக்கிறான். அவர்களுக்குத் தப்பாமல் ஒன்றுக்கு மேற்பட்ட தங்கச்சிமார்கள் இருக்கிறார்கள். தாய்தகப்பன்மார் கொழும்பில் வந்து லாட்ஜ்களில் மாதக்கணக்கில் தங்கி நின்று காசு கேட்டு டெலிபோன் செய்கிறார்கள். ஒவ்வொரு முறை டெலிபோன் வரும்போதும் நெஞ்சு திக்கென்றிருக்கும்.

மேலை நாடுகளில் உண்மையாகவே காசுமரம் இல்லை. நித்திரை கொள்ளும் நேரத்தைக் குறுக்கி சனி ஞாயிறென்றும் பாராமல் மேலதிக வேலைகள் செய்து வியர்வை சிந்தி அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்க்கிற பணம் யாரோ முகம் தெரியாத எதிர்கால மச்சான்களுக்காக சேமிக்கப்படுகிறது.

தங்கைகளுக்காக படுகின்ற கஷ்டங்களுக்கு தியாக முலாம் பூசிக்கொண்டு செல்வம் இறுமாந்திருக்க, வெள்ளைக்கார நண்பர்கள் சிலர் அவனைப் பார்த்து சிரித்தார்கள். தமிழ்ச்சமூகத்தின் கல்யாணச்சந்தைப் பேரங்களை அவர்கள் ஒரே வார்த்தையில் எள்ளிநகையாடினார்கள், இது கல்யாணமல்ல – வியாபாரம் என்று.

உங்கள் நாட்டில் சீதனம் வழக்கில் இல்லையா என்று அப்பாவித்தனமாக கேட்டான் செல்வம். இருந்தால் கொடுத்துவிட்டுப் போகிறோம். கேட்டால் அது ஆணுக்கு இழிவு. பெண்ணின் திருமணத்திற்கு நாங்கள் செய்வதெல்லாம் எங்கள் செலவில் ஒரு இரவு விருந்து, தம்பதிகளுக்கு நல்லதொரு திருமணப் பரிசு – இதைவிட வேறென்ன செய்ய வேண்டும்!

சீதனத்தை இந்த அளவிற்கு தமிழ்ச் சமூகம் வலியுறுத்துவதை வைத்துப் பார்க்கையில் காலங்காலமாக ஆண்களில் தங்கி வாழ்கிறவர்களாக இருக்கும் பெண்களை தொடர்ந்தும் அதே நிலையில் வைத்திருக்கவே விரும்புகிறது எனப் புரிகிறது. இரத்தத்தில் கொலஸ்ரோல் கொழுப்பு சிறிது சிறிதாகக் கூடிக் கொள்கிற மாதிரி தமிழ்ச் சமூகத்தில் சீதனத்தடிப்பு கூடிக் கொண்டே போகிறது. கொலொஸ்ரோலை மட்டுப்படுத்த உணவில் பத்தியமும் கொழுப்பை வெட்டுகிற மருந்தும் தேவை, கண்டிப்பான வைத்தியரின் மேற்பார்வையில். விடுதலைப் புலிகள் வந்தால் ஒருவேளை இது சாத்தியமாகலாம்!

செவ்வந்தியின் எழுத்தை தைப்பூசத்துக்குள் முடித்து விடவும் சித்திரை பிறக்க தாலிகட்டை காளி கோயிலில் வைத்துக் கொள்ளவும் மாப்பிள்ளை பொம்பிளை இரு பகுதியாரின் ஏகோபித்த ஏற்பாடாயிருந்தும் சித்திரை பிறந்த பின்னும் சத்தம் சலாரைக் காணோம். தம்பியின் பிரச்னை இந்தா முடியும் அந்தா முடியும் என்ற நம்பிக்கையிலும் கவலையிலும் காலம் உருண்டதை யாரும் பொருட்படுத்தவில்லை. சின்னம்மாதான் ஒருநாள் செல்வத்திடம் சொன்னாள்.

“எழுத்து இழுபட இழுபட பயமாயிருக்குத் தம்பி. வீடுவளவு, மார்ப்பதக்கம் சங்கிலி, நெக்லஸ் போடப்பட்ட நகையோட ரொக்கமும் பதினைஞ்சு கேட்டவையள். பிறகு மாமா கதைச்சு பத்துக்கு ஓம் பட்டது. இப்ப நீ வந்து நிக்கிறதால இன்னம் கூடக் கேக்கலாம் என்டு நெக்கினமோ தெரியேல்லை.”

“பரவாயில்லை சின்னம்மா. கடைசிப் பொம்பிளைப் பிள்ளை, இனி ஆருக்குக் குடுக்கப் போறம். ‘

கனடாவிற்குத் திரும்ப முன் செவ்வந்தியின் எழுத்தை நடத்தி முடித்துவிடக் கங்கணம் கட்டிக் கொண்டதும், மாப்பிள்ளை பகுதி எவ்வளவு சீதனம் கூட்டிக் கேட்டாலும் அதைத் தருகிறேன் என்று முகத்தலடித்த மாதிரி சொல்வதற்கு தயாரான நிலையிலேயே அவன் அங்கு வந்திருந்தான். முகத்தில் அடி விழுந்தது அவர்களுக்கல்ல, அவனுக்கு. அதுகூடப் பரவாயில்லை, அதைச் சொல்லிவிட்டு அவர் இருந்த தோரணை அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது. தம்பியின் புலி சகவாசத்தைக் காரணமாகக் காட்டி, ஏற்கனவே கொடுத்திருந்த வாய்மொழி நாணயத்திலிருந்து இலேசாக கழன்று கொள்ள நினைக்கும் அவர்களின் பயத்தை விட அதில் கலந்திருக்கும் சுயநலம் அவனுக்கு அருவருப்பை உண்டாக்கிற்று.

சுற்றுமதிலை உயரமாகக் கட்டி கதவு ஜன்னல்களைப் பூட்டிக் கொண்டு விட்டால், சமூகத்தின் ஒட்டுமொத்தமான பிரச்னை வீட்டிற்குள் வந்து விடாது என நம்பிக் கொண்டிருக்கும் அவர்களது அறியாமை அவனுக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. அவர்களை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை. அவனும் அப்படித்தானே! எவ்வளவுதான் புலிகளை உள்ளுர ஆதரித்தாலும் தனக்குத் தனக்கு என்று வருகிற போது எதிர்கால விளைவுகளைப் பற்றிய பயத்தினால் எதிலும் பட்டுக்கொள்ளாது ஒதுங்கி நிற்கத்தானே பார்க்கிறான். விட்டெறிந்து விட்டுப் போவதற்கு ஆத்திரம் வந்தது. செல்லமாக வளர்த்த தங்கச்சியின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விசயம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆகிவிடக் கூடாது. செல்வம் சுதாரித்துக் கொண்டான்.

“ஐயா, உங்களுக்கு ஒரு பாதிப்பும் வர நாங்க விடமாட்டம். நீங்க அதைப் பற்றி யோசிக்காதீங்க.”

“எப்பிடித்தம்பி யோசிக்காம இருக்கிறது. கடவுள் அறிவைத் தந்திருக்கிறார் பாவிக்கிறதுக்கு. ஆழமென்டு தெரிஞ்சு கொண்டு காலை விடக்கூடாது. நீங்க குறை விளங்காம வேற இடம் பாருங்க.”

“ஐயா, தம்பி போன கவலை ஒரு பக்கம். தங்கச்சியின் விசயமும் இப்படியென்டு கேள்விப்பட்டா வீட்டில இன்னம் நொந்து போயிருங்கள். தயவு செய்து எனக்காக ஒருக்கா யோசிச்சுப் பாருங்க. குமர் காரியத்தில அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. உங்களுக்கு ஒரு கஷ்டமும் வராம நான் பாத்துக் கொள்ளுறன்.”

“நீங்க கனடாவிலயிருந்து உடன ஓடி வரப் போறீங்களா தம்பி ? இப்ப பிடிச்சா பயங்கரவாதத் தடைச்சட்டத்தில வழக்கே போடேலாது. போட்டாலும் ஒன்டும் நடக்காது.”

“இப்பிடி ஒரேயடியாச் சொன்னா எப்படியய்யா, பேச்சுக்கால் முடிஞ்சு எழுத்து நேரத்தில முறிஞ்சு போச்சுதென்டு சனம் அறிஞ்சா எங்கட மானமே போயிரும்.”

“அதுக்கு நாங்க என்ன தம்பி செய்யிறது. இது உங்கட பிரச்னை. வர விட்டிருக்கக்கூடாது. அசண்டையா இருந்திட்டாங்க. ஒழுங்கா வளத்திருந்தா இந்தக் கஷ்டம் வந்திருக்குமா ?”

அவன் பணியப் பணிய அவர் மேலே மேலே போனார். எதையாவது ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்லி அவனை உடனடியாக அனுப்பி விடவே அவர் விரும்பினார். மாப்பிள்ளையும் நான் இதில் சேர்த்தியில்லையென்பது போல நடுநிலை வகித்துக் கொண்டிருந்தான். கடைசி வரைக்கும் பொறுமையாகக் கதைத்து கிழவரை வென்றெடுக்கவே செல்வம் விரும்பியிருந்தான். ஒழுங்காக வளர்த்திருக்க வேனும் என்று அவர் பேசிய வார்த்தைகள் அவனைக் காயப்படுத்தின. வளர்ப்பு சரியில்லை என்று சொல்கிற அளவிற்கு வந்தபின் தொடர்ந்து பணிந்து போகிற பொறுமையை அவன் இழந்து போனான். ரோச நரம்பு புட்டுக்கொண்டு நின்றது.

“எங்கட அப்பா மிரிச்ச புல்லுக்கூட சாகாது என்டு சொல்லுவாங்க அயலில. அவர் வளர்த்த வளர்ப்பில நாங்க யாரும் பிழையான வழியில போகேல்லை.”

“அப்ப தம்பி மாத்திரம் எப்பிடிப் போனான் ? இன்டைக்கும் இவ்வளவு படிச்சுப் பெரிசா வந்தாப்பிறகும் நில்லுடா என்டா சொன்ன இடத்தில நிக்குங்கள் எங்கட பிள்ளைகள். சொல்லாம கொள்ளாம ராவோட ராவா வீட்டை விட்டுப் போற அளவுக்கு பிள்ளை வளக்கக் கூடாது. நெருப்பில கையை வைச்சா சுடும் என்டு சொல்லிக் குடுத்து வளக்க வேனும். ஆழம் தெரியாம காலை விடுறது ஆபத்து என்டு தெரியவேனும்.”

நெருப்பில் செத்தல்மிளகாயை போட்ட மாதிரி அவனுக்கு எரிச்சல் வந்தது. தேவையற்ற ஒரு விவாதத்தில் தான் இழுபடுவதாகத் தெரிந்தாலும் பிள்ளை வளர்ப்பில் பீஎச்டி பெற்றவராகத் தன்னைக் காட்டிக் கொள்கிற அந்தப் பெரிய மனிதரை சும்மாவிட்டுப் போக அவனுக்கு மனசில்லை. தம்பியில் மனக்குறை இருந்தது உண்மைதான். இப்போது அந்த இடத்தில் சிறிது சிறிதாகப் பெருமிதம் சேர்ந்திருக்கிறது. அவன் வீரன். அந்த வீரனின் மரியாதையை இந்த சுயநல மனிதரிடம் விட்டுக் கொடுத்து தங்கையின் மாங்கல்யதாரணத்தை நிறைவேற்றிக் கொள்வது நியாயமாகப் படவில்லை.

“ஐயா, நீங்க தேவையில்லாம எது எதுக்கோ முடிச்சுப் போடுறீங்க. எங்களை அப்பா அம்மா ஒழுங்காத்தான் வளர்த்திருக்கினம். நாங்களும் படிப்பில சோடை போகேல்லை. என் தம்பி இன்டைக்கு மாவட்டத்திலேயே இரண்டாவதா வந்திருக்கிறான். நாளைக்கு பெஸ்ட்கிளாஸ் எஞ்சினியரா வரவேண்டியவன் அவன். நீங்க சொல்றது போல சும்மா எடுபட்டுப் போன பிள்ளையில்லை. எல்லாத்தையும் தீர ஆராய்ந்து தீர்மானித்த பிள்ளை. நெருப்பில கையை வைச்சா சுடும் என்று அவனுக்குத் தெரியும். சுட்டுப் பொசுங்கினாலும் பரவாயில்லை என்றுதான் போயிருக்கிறான். ஆழமாயிருந்தாலும் நீந்திக் கரை சேருகிற வல்லமையோடுதான் இறங்கியிருக்கிறான். ஏதோ அவன் போனதால உங்களையெல்லாரையும் கொண்டு போய் பொலிஸ் கொடுமைப் படுத்தப் போகிற மாதிரி பொறுப்பில்லாமக் கதைக்காதீங்க.”

இன்னும் இருந்தால் நிறையப் பேசி விடுவான் போலிருந்தது. என்ன பேசினாலும் இந்தக் கிழத்திற்கு உறைக்காது. இதற்குப் பிறகும் தங்கச்சிக்கு இந்த வீட்டில் நிச்சயமாகும் என்ற நம்பிக்கை அவனிடமிருந்து முற்றாகக் கழன்று போய் விட்டதால் போவதற்கு முன் கிழவருக்கு இன்னும் நல்லாக உறைக்கிற மாதிரி கொடுத்து விட்டுப் போகும் துடிப்பில் இருந்தான்.

“உங்களை விட்டா வேற ஆளில்லை என்டு மட்டும் நினைச்சிராதீங்க. எதிலயும் வாய் நாணயம் வேனும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேனும். எல்லாம் பேசி எழுத்துக்கு நாளும் குறிச்சுப் போட்டு இப்ப இப்படிப் பேசுறதுக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களை அப்பா அம்மா அப்படி வளக்கேல்லை. நான் வாறன்.”

அவன் மாப்பிள்ளையைப் பார்த்தான். நீயுமா என்று கேட்பது போல அர்த்தபுஷ்டியோடு அந்தப் பார்வை இருந்தது. விறுக்கென்று எழுந்தான். கிளம்பினான். செல்வம் போனபின்னும் அவனது பார்வையின் கனதி தாங்காமல் சிவலோகநாதன் கூனிக் குறுகி வியர்வையில் குளித்திருந்தான்.

வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மிச்சம், கிழவர் வாயடைத்துப் போயிருந்தார். வெளியே செல்வம் தெருக்கதவைத் திறக்கும் சத்தமும், அவனைப் பின்னால் விட்டு நாய் குரைத்ததும் கேட்டது. தாயும் மகளும் ஜன்னலால் எட்டிப் பார்த்துவிட்டு வந்து செற்றியில் இருந்தார்கள். நேரம் நொண்டிக் கொண்டு நகர்ந்தது.

என்னன்டாலும் நீங்க அவரோட அப்படிக் கதைச்சிருக்கக்கூடாதப்பா என்றான் சிவலோகநாதன்.

“அப்படி என்ன கதைச்சனான்“

பிள்ளை வளர்ப்புச் சரியில்லையென்டு.”

“உண்மையைத்தானே சொன்னனான்.”

“புலியில சேர்ந்ததுக்காக தாய் தகப்பனுக்கு உதவாத பிள்ளைகள் என்டு சொல்றது சரியில்லையப்பா.”

“பின்ன எப்படிச் சொல்றது ?”

“அவருக்கு முன்னால கதைக்கக்கூடாதென்டு பார்த்தனான். என்ன சொன்னாலும் நீங்க கதைச்ச முறை சரியில்லை.”

செற்றியில் காலாட்டிக் கொண்டிருந்த தங்கையும் தமையனோடு சேர்ந்து கொண்டாள். தாயும் பிள்ளைகளை ஆமோதிப்பது போலத் தலையாட்டிக் கொண்டே பேசினாள்.

“உங்கட அப்பா எப்பவும் இப்படித்தான். என்ன கதைக்கிறன் என்டு விளங்காம கண்டதையும் கதைச்சிருவார்.”

கருத்தை வெளியிட்ட விதம் சற்று ஏறுமாறாக இருந்தாலும் முழுக்குடும்பமும் எடுத்திருந்த முடிவையே அவர் செல்வத்திடம் குறிப்பிட்டிருந்தார். இப்போது எல்லாருமாகச் சேர்ந்து மாறி மாறி அவர் கதைத்த முறையில் குற்றம் கண்டுபிடிப்பது அவருக்கு சினத்தை உண்டாக்கிற்று.

“நீங்க சொல்றதைப் பாத்தா ஏதோ நானே என்ர பாட்டுக்கு முடிவெடுத்து கதைச்ச மாதிரியல்லோ இருக்கு.”

“இல்லையப்பா. அதைச் சொல்லேல்லை. எதையும் சொல்றதுக்கு ஒரு முறைதலையிருக்கு.”

“முறைதலை தெரியாதவன் என்டு சொல்றியோ ?”

“நான் அப்படிச் சொல்லேல்லையப்பா. மனம் புண்படாம கொஞ்சம் பக்குவமாச் சொல்லியிருக்கலாம்.”

“சம்மந்தம் வேண்டாம் என்டு சொன்னாலே மனம் புண்படத்தானே செய்யும். அதை எப்படிச் சொன்னாத்தான் என்ன ? முக்கியமா நீ பயந்தபடியாத்தானே நாங்க இப்பிடியொரு முடிவுக்கு வந்தது.”

“அப்பாவோட ஒன்டும் கதைக்காலேது”.. .. .. அவன் எழுந்து போனான்.

“உங்கட அப்பா தான் சொல்றதுதான் சரியென்டு சொல்வார். இன்டைக்கு நேத்தில்லை கல்யாணம் கட்டின நாளில இருந்து நானும் பாக்கிறன்.”

தாய் தன் புராதன ஆத்திரங்களை சமயம் பார்த்து புதுப்பித்துக் கொண்டு அடுப்படிப்பக்கம் போனாள். சொல்லி வைத்ததைப் போல மகளும் எழுந்து போனாள். கிழவருக்கு ஏன் வாயைத் திறந்தோம் என்று இருந்தது. இந்த மாதிரி நேரத்தில் பக்கபலமாக நின்று தார்மீக ஆதரவு தந்து முண்டு கொடுக்க வேண்டிய தாய்பிள்ளைகள் எடுத்தெறிந்து கதைத்து உதறிவிட்டுப் போனது பெருத்த ஏமாற்றம்.

வரவர என்ர பேச்சுக்கு மதிப்பில்லாமப் போச்சு இந்த வீட்டில் என்று யாருக்கும் கேளாமல் மெதுவாகச் சினந்தார். கேட்டுவிட்டால், மனைவி அதற்கும் ஒரு குத்துக்கதை சொல்லக்கூடும்.

அந்த வீட்டுப் பெண்களுக்கு அன்று சக்தி தொலைக்காட்சியில் “சித்தி” சீரியல் பார்க்கக் கிடைக்கவில்லை.

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்