வனாந்திரம்

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

ப.மதியழகன்


அந்தகாரம் கவிந்த கானகத்தில்
ஒரு வேந்தன்
தனியொருவனாக மாட்டிக் கொண்டான்
வந்ததோ மான் வேட்டைக்கு
திக்குத் தெரியாத காட்டில்
ஏதோவொரு விலங்குக்கு
இரையாகப் போகும் சூழ்நிலையை
நினைத்து மனமொடிந்தான்
கூவி அழைத்துப் பார்த்தான்
உதவிக்கு ஆட்களை
வனமெங்கும் நிசப்தம் நிறைந்திருந்தது
பின் தொடர்ந்து வந்தவர்கள்
கானகத்தின் இதயப் பகுதியை விட்டு
வெவ்வேறு திசையில் அலைந்தார்கள்
அவனது கிரீடத்திற்கான மதிப்பு
இக்காட்டில் கிடைக்காது
அரசகட்டளையை
இக்கானகம் ஏற்காது என்பதை எண்ணி
துயருற்றான்
பகட்டான உடைகள்
ஓநாய்களால் களைந்தெறியப்படலாம்
என அச்சம் கொண்டான்
இப்படியே காலம் கழிப்பதை விட
ஏதாவதொரு மிருகம் வந்து
தன்னை வேட்டையாடி
தனக்கு இக்காட்டிலிருந்தும்
உடலெனும் இக்கூட்டிலிருந்தும்
விடுதலை கொடுக்காதா
எனக் காத்திருந்தான்
அடர்ந்த, இருள் கவிந்த
அந்த வனாந்திரத்தில்.

ப.மதியழகன்

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்