ராஜத்தின் மனோரதம்.

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

எஸ். ஜெயலட்சுமி


காலை நேரம். பெசண்ட் நகர் பீச் சுறு சுறுப்பாகி விட்டது. மக்களின் விழிப்புணர்வு அதிக ரித்திருப்பது வாக்கிங் போகிறவர்களின் எண்ணிக்கை
யில் தெரிந்தது. ராஜம் அவள் தங்கை மாலதி, அவள் கணவர் மணி மூவரும் வாக்கிங் போய்க் கொண்டிருந் தார்கள்.

’’ஹலோ குட்மார்னிங் மணி என்ற குரலைக் கேட்டு மூவரும் திரும்பினார்கள். மெரூன் கலர் டீ ஷர்ட்டும் கறுப்புக் கலர் பேண்டும் கண்ணாடியும் அணிந்தபடி வந்தவர் அருகில் வந்ததும் ”யு.எஸ் லேர்ந்து எப்ப வந்தாப்ல? என்றார்
மணியும், ’’ஹலோ, கிருஷ்ணன் குட்மார்னிங்’’ என்றார்.
‘’மிஸஸ் மணி, அமெரிக்கா ட்ரிப் எல்லாம் எப்படி யிருந்தது? திவ்யா குழந்தைகள் எல்லாம் எப்படி யிருக்கா? மணி, பேரன்களோடு நன்னா பொழுது போயிருக்குமே?’’ பேசிக்கொண்டே போன கிருஷ்ணனை
இடைமறித்து ‘’க்ருஷ்ணா, ஒன் கொழந்தைகளெல்லாம் எப்படியிருக்கா? இங்க வராளா? என்றார் மணி

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு எடத்தில இருக்கா. மூத்த பையன் ஆஸ்த்ரேலியா. ரெண்டாவது பையன் துபாய். பொண் சிங்கப்பூர். நாங்க

மெட்ராஸ். அதனால நாங்க எல்லாரும் வருஷத்துக்கு
ஒரு தரம் இந்த நாலு எடத்தில ஏதாவது ஒரு எடத்தில
15 நாள் சேர்ந்து இருக்கலாம்னு தீர்மானம் பண்ணி யிருக்கோம். இந்த டிசம்பர்ல எல்லாரும் இங்க வந்துட்டுப் போயாச்சு. அடுத்த வருஷம் ஆஸ்த்ரேலியா’
என்றார்.
க்ருஷ்ணன் எல்.என்.டி யில் வேலை பார்த்து ரிடயர் ஆகி மெட்ராஸிலேயே செட்டி லாகியிருக்கிறார். மணியும் க்ருஷ்ணனும் ஒன்றாகப் படித்தவர்கள். மணி மாலதிக்கும் மூன்று குழந்தைகள.
“நாமும் இதுமாதிரிப் பண்ணலாமே. தீபாவளிக்கு அல்லது நியூ இயர் அன்னிக்கு எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு வருஷம் ஒவ்வொருத்தர் வீட்டிலும் கொண்டால்லாமே என்றாள் மாலதி.
“ ஓ கொண்டாடலாமே! இது மணி

ராஜம் தன்னுடைய அறுபதாம் வயதுக் கொண்டாட்டத்தின் போது எல்லோரும் சேர்ந்து வந்ததை நினைத்துப் பார்த்தாள்.

ராஜத்தின் கணவர் சதாசிவம் ஸ்டேட் பாங்கில் மானேஜராக இருந்து திருநெல்வேலி யில் ரிடயர் ஆன பின் அங்கேயே செட்டிலாகி விட்டார். மூத்த பையன் ராஜ கோபாலன் யு.எஸ்.ஸில் இருக்கி றான். இரண்டாவது பையன் நடராஜன் சிங்கப்பூரில். மூத்த பெண் விமலா டில்லியில். இரண்டாவது பெண்

கமலா கனடாவில். எல்லோருக்கும் கல்யாணம் ஆகிப் போன பின் எல்லோரும் ஒன்று சேர்ந்து இருக்க முடிய
வில்லையே என்ற குறை யிருந்து கொண்டே யிருந்தது.
ராஜமும் சதாசிவமும் ஒரு முறை சிங்கப்பூர் போய் வந்தார்கள். மூத்த பெண் விமலாவின் குழந்தை ஆண்டு
நிறைவுக்கு டில்லி போய் வந்தார்கள். அதோடு சரி. அதன் பின் எங்குமே போக முடியவில்லை. நாலு பேரும் பேசி, அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் சாக்கிலாவது ஒன்றாக வந்து சேர்ந்து இருக்கலாம் என்று தீர்மானம் செய்தார்கள்.

ராஜத்துக்கு ரொம்பவே சந்தோஷமாக
இருந்தது. பார்த்துப் பார்த்து எல்லாம் சேகரித்தாள். பேத்திகளுக்குப் பட்டுப் பாவாடை வாங்கினாள். பேரன் கள் எவ்வளவு வளர்ந்திருப்பார்களோ? அவர்களுக்கு என்ன வாங்க வேண்டுமோ? பெண்களுக்கும் நாட்டுப் பெண்களுக்கும் பட்டுப் புடவை வாங்கலாமா? என்று சதாசிவத்திடம் யோசனை கேட்டாள். அவர்கள் வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். எல் லோரும் வருவதால் வடகம் தயார் செய்ய ஆரம்பித் தாள். கட்டுக் கட்டாக அப்பளம் வாங்கி வைத்தாள். பொடி வகைகள், நார்த்தங்காய் ஊறுகாய், வேப்பிலைக் கட்டி எல்லாம் தயார் ஆனது. முறுக்கு மாலாடு எல்லா மும் ரெடி, ஆனால் முன்போல் தன்னால் ஓடி யாடி வேகமாக எல்லாம் செய்ய முடியவில்லை. என்பதும் தெரிந்தது. முன்போல் பஸ்ஸில் ஏறி இறங்குவதும் மாடிப்படிகளில் ஏறி இறங்குவதும் சிரமாகத் தோன்றி

யது.ஆனாலும் குழந்தைகள் எல்லோரும் வரும் சந்தோ
ஷத்தில் வலியை மறந்து அலைந்து கொண்டிருந்தாள்.

முதலில் மூத்த பையன் ராஜ கோபாலனும் அவன் மனைவி சுசீலா, பேத்தி அனுஷா பேரன் அர்ஜுனும் வந்தார்கள். அவர்களுடன் கடைசிப்
பெண் கமலா, மாப்பிள்ளை ராம்குமார், குழந்தைகள் அகிலா, ஆனந்த். மறுநாள் சிங்கப்பூரிலிருந்து நடராஜன், ஜெயந்தி, மஹிமா, மூன்றாவது நாள் டில்லியிலிருந்து
விமலா, மாப்பிள்ளை தியாகராஜன், பேத்தி ஜமுனா.
எல்லோரும் வரப்போகிறார்கள் என்பதால் 15 நாட் களுக்கு முன்பே சமையல் வேலைக்கு உதவியாக ஒரு மாமியை ஏற்பாடு செய்திருந்தாள் ராஜம்.

ஆனால் எல்லோரும் வந்த பின் மாமியால் வரமுடியாமல் போய்விட்டது. மாமி பஸ் ஸில் ஏறும் போது கீழே விழுந்ததில் முழங்காலில் அடிபட்டு மாவுக்கட்டு போட்டுக் கொண்டிருப்பதால் வர முடியாது என்று மாமியின் பையன் வந்து சொல்லி விட்டுப் போய்விட்டான். கல்யாண சீசன் என்பதால் உட
னடியாக ஒருவரும் கிடைக்கவில்லை. சரி நாலு பெண்மணிகளும் நாமும் தான் இருக்கிறோமே என்று ராஜம் நினைத்தது தான் தவறாகப் போச்சு.

காலையில் காபி போடுவ
திலிருந்தே பிரச்சனை ஆரம்பமானது. அமெரிக்கா,

கனடாவிலிருந்து வந்தவர்களுக்கு ஜெட்லாக் பிரச்சனை. இரவு பகல் நேர வித்தியாசத்தால் அவர்களுக்குத் தூக்கப் பிரச்சனை! சதாசிவத்திற்கு சுகர் இருப்பதால் அவர் காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு மாத்திரை சாப்பிட வேண்டும். வந்தவர்கள் காலையில் பப்பாளிப் பழம் ஓட்ஸ்கஞ்சி தான் சாப்பிடுவோம் என்றார்கள். சிங்கப்பூர் காரர்களும் அப்படியே. இவர்கள் எல்லோரும் மத்தியானம் சாதம் சாப்பிட்டால் டில்லி மாப்பிள்ளைக்கு ரொட்டி வேண்டும் என்பாள் விமலா. ரொட்டிக்குத் தகுந்த சப்ஜி தேட வேண்டும். அமெரிக்கா, கனடா குழந்தைகள் ஏதோ ஜூஸ் குடித்துக் கொண்டே யிருப் பார்கள்! டில்லிக்காரர்களுக்கு இரவில் சாப்பாடு வேண்டும். சதாசிவத்துக்கு இரவில் சப்பாத்தி வேண்டும். மற்றவர்களோ இட்டிலி, தோசை, இடியாப்பம் செய்ய லாமே என்பார்கள்.

அன்னிக்கு ஒருநாள் எல்லோருக்கும் கீரை பிடிக்குமே என்று அரைக்கீரை வாங்கி விட்டாள். அதை ஆய்ந்து புல், குப்பை பார்த்து நறுக்க யாருமே முன்வரவில்லை. போறும் போறும் என்றாகி விட்டது.
வாழைத்தண்டு நல்ல ஃபைபர், என்றார்களே தவிர அதையும் பொறுமையாக உட்கார்ந்து நறுக்க முடிய வில்லை. ஒருநாள் புயல் சின்னம் காரணமாக விடாமல் மழை பெய்தது. அன்றும் மறுநாளும் மார்க்கெட் போக வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் சாக்குச் சொல்ல

ஆரம்பித்தார்கள். “ஐயே, மார்க்கெட்டுக்குள்ள ஒரே சேறும் சகதியுமா இருக்கும். நான் வரலை என்று நழுவி னார்கள். கடைசியில் சதாசிவம் தான் போய் அத்தனை யும் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வந்து சேர்ந்தார். ராஜத்துக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

குழந்தைகளுடன் சாவகாசமாக உட்கார்ந்து பேசலாம் என்றால் அவர்கள் வீட்டிலேயிருந் தால் தானே! போரடிக்கிறது என்று வெளியே கிளம்பி விட்டார்கள். பெரியவனுக்கு பத்தமடைப்பாய் வாங்க வேண்டுமாம். கல்லிடைக் குறிச்சியில் யாரோ ஒரு
ஃப்ரண்ட் வீட்டுக்குப் போய் ஏதோ சாமான் கொடுக்க வேண்டுமாம். அந்தப் பக்கம் போவதால் அப்படியே பாபநாசம் அருவிக்கும் போகலாம் என்று ப்ளான்
பண்ணி எல்லோரும் கிளம்பினார்கள். முட்டு வலியால் ராஜமும் போகவில்லை. சதாசிவமும் வேலை இருந்ததால் போக முடியவில்லை.

கனடா மாப்பிள்ளை க்ருஷ்ணாபுரம் சிற்பங்களெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்ன தால் திருச்செந்தூர் போகும் வழியில் அங்கேயும் போய் வந்தார்கள். எல்லோருமாக கன்யாகுமரிக்கும் ஒரு ட்ரிப் அடித்தார்கள்.
ஆர்.எம். கே. வி போய் பட்டுப் புடவைகள், பாவாடைகள் குழந்தைகள் டிரஸ் வாங்கவே
ஒருநாள் சரியாகப் போய்விட்டது! “அம்மா, நான் திருப்

புகழ் கத்துக்கறேன் கேக்கறியா?’’ என்றாள் விமலா ஆசையாக. ‘’க்ராண்ட்மா நான் டான்ஸ் ஆடிக்காட்ட றேன் பாக்கறியா? என்றாள் பேத்தி அருமையாக. பேரனோ’’நான் கீ போர்ட் வாசிக்கட்டுமா? என்றான். ஆனால் ஒருநாள் கூட குழந்தைகளோடு சேர்ந்து
அவர்கள் பாடுவதையோ ஆடுவதையோ வாசிப்ப தையோ சாவகாசமாக்க் கேட்க முடியவில்லை. ஏதோ ஒரு வேலை குறுக்கிட்டுக் கொண்டே யிருந்தது.அவர்
களுக்கு அதில் ரொம்பவே மனக் குறை. பாட்டி தாத்தா வுக்கு எல்லாம் பாடி ஆடி நடிச்சுக் காட்டணும்னு
ஊர்லேர்ந்து வரதுக்கு முன்னாடி அப்பா அம்மா சொன்னா. ஆனா பாட்டி ரொம்பவே பிஸி! என்றார்கள்.
பெரியவர்களுக்கும் மனக் குறைதான். அம்மாவுக்கு திருப்புகழ் பாடிக்காட்ட முடியவில்லையே என்ற குறை ஒருத்திக்கு என்றால் இன்னொருத்திக்கு நாராயணீயம்
சொல்லிக்காட்ட முடியவில்லையே என்ற குறை.

’’அம்மா, எனக்கு உக்காரை எப்படிப் பண்ணணும்னு காட்டிக் கொடேன் எனக்குச்சரி யாகவே வரலை’’என்றாள் கமலா. ’’அம்மா எனக்கு அதி ரசமும் வெல்லச் சீடையும், உங்க மாதிரி ஸாஃப்டா பண்ணத் தெரியலைன்னு, உங்க பிள்ளை சொல்லறார். அம்மாகிட்ட கேட்டு கத்துக்கோன்னு சொல்லியிருக்கார். கொஞ்சம் பண்ணிக் காட்டறேளா?’’ இது ரெண்டாவது நாட்டுப்பெண். அம்மா ஒன்னோட ஸ்பெஷல் பாகற்காய்
பச்சடிக்கு என்னல்லாம் வெக்கணும். என்ன பக்குவம்னு

செஞ்சு காட்டேன் என்றாள்’’ விமலா அவள் பங்குக்கு. ஆனால் ஒவ்வொன்றாக செஞ்சுகாட்ட முடியவில்லை.
திடீரென்று அதிரசம் செய்யவேண்டுமென்றால் மாவு தயார்செய்து பாகுவைத்து பக்குவம் செய்ய வேண்டுமே.
கூடமாட ஒத்துழைக்க அவர்களுக்கு நேரம் இல்லை!
எப்படியோ நாளும் பொழுதும் ஓடி விட்டது. பிறந்த நாள்
இரவே ஒவ்வொருவராகக் கிளம்பி விட்டார்கள்.

கிளம்பு முன் ‘’அம்மா, அப்பா
ஒவ்வொரு வருஷமும் இது போல நாங்க எல்லோரும்
வரலாமா என்று ப்ளான் பண்ணியிருக்கோம். எங்க ப்ளான் எப்படி?’’ என்றார்கள்.
‘’இல்லை இல்லை நானும் ஒங்கப்பாவும் உங்க ஒவ் வொருத்தர் வீட்டுக்கும் வரலாம்னு யோசனை பண்ணி வெச்சிருக்கோம். இத்தனை வருஷமா வயசான ஒங்க பாட்டி தாத்தா இருந்ததால ஒரு இடமும் போக முடியல. அப்பாவும் ரிடயர் ஆயாச்சு. அதனால நாங்க ரெண்டு பேரும் வந்து ஒங்க கூட இருக்கலாம்னு நெனச்சிண்டிருக்கோம்’’ என்றாள் ராஜம் அவசரமாக.

மறுநாள் கொஞ்சம் சாவகாசமாக சதாசிவம் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தபோது, ‘’குழந்தைகள் வந்துட்டுப் போனது வெறிச்னு இருக்கு.
அவாகிட்ட, நீங்க வரவேண்டாம், நாங்க வரோம்னு சொல்லிட்டேனே. நான் அப்படிச் சொல்லியிருக்கக்
கூடாதோன்னு இப்ப தோணறது.’’ என்றாள் ராஜம்.

“இல்ல, ராஜம் நீ சொன்னது தான் சரி. ஒனக்கும் வயசாறது இல்லையா? நீயும் சீனியர் சிட்டிசன்
ஆயாச்சு. நான் தான் பாத்தேனே! எல்லாரும் ஒண்ணா ஒரே சமயத்தில வந்தா நம்மால சமாளிக்க முடியலை. ஒவ்வொருத்தரோடும் தனித்தனியா பேசி அவாளோட
திறமைகள், பிரச்சனைகளப் பகிர்ந்துக்க முடியலை.
பேரக் குழந்தைகளுக்கும் அந்தக் குறையிருக்கு. நம்ம
குழந்தைகளுக்கும் அப்படித் தோணறது. அது நியாயம் தானே? நாம அவா கூடப் போய் இருந்து அவாளோட பிரச்சனை, ஆசைகள், திறமைகள் எல்லாதையும் அவா கூடவேயிருந்து பார்ப்போம், கேட்போம். அவா கேக்கற தைக் கத்துக் குடுப்போம். நமக்கும் நன்னா பொழுது போகும். அவா வர இந்தக் கொஞ்ச நாள்ள நாம அவாகூட முழுசா இருக்க முடியாது. அங்க போனாதான் அது சாத்தியமாகும். அதனால மனசப்போட்டு அலட்டிக்காதே. நாம ரெண்டு பேரும் கொழந்தைகள் இருக்கும் இடத்துக்குப் போயிட்டு வருவோம், அவா கூடவே கொஞ்ச நாள் இருந்துட்டு வருவோம் ஒனக்கும் ஒரு மாறுதலாயிருக்கும்’’ என்றார்.

அந்த வருடமே ராஜம், சதாசிவம் தம்பதிகள் அமெரிக்கா, கனடா போக விசாவுக்கு அப்ளை பண்ணி போய் விட்டார்கள்

*********************************************************

Series Navigation