ரமணன், NRI

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

சித்தாந்தன்


1-800-734-6154……

Please enter your pin number now…

******** the country code and destination number

011-91-44-26434158

எண்களின் சுழற்ச்சி ரமணனை லண்டன், ஜெர்மனி, வளைகுடா நாடுகள், ஆப்கானிஸ்தானம் வழியாக அவனது ஜன்மஸ்தானமான 27/6 ஆ, சக்கரத்தாழ்வார் தெரு, திருவல்லிக்கேணிக்கு connect செய்தது.

‘ஹலோ யாரு பேசறது ? ‘ தாய் சுகந்தியின் சன்னமான குரல். அன்றாடம் chennai telephones-ல் 9 மணி நேரம், அடுப்படியில் 2 மணி நேரம், சூரிய தொலைக்காட்சிக்கு 2 மணி நேரம், வீட்டின் மனைமாட்சிக்கு 2 மணி நேரம் என்ற பம்பர இல்லத்தறசியின் அலுப்பு அந்த குரலில் கேட்டது.

‘ரமணன் அம்மா… எப்படி இருக்க ? ?… ‘

‘டேய் ரமணா சொல்லுடா… நான் நன்னா இருக்கேன்… நீ எப்படி இருக்க… ? ? ? ‘

‘நான் ஃபைன் அம்மா…. அப்பா எப்படி இருக்கா ? ரம்யா… ? ? ‘

‘அப்பா சந்தி பண்ணிண்டு இருக்கர்ரா. ரம்யா என் ஐ ஐ டி class போய் இருக்காடா வர்ற நேரம் தான்.. ‘

‘ஓஹோ… என்ன புதுசா க்ளாஸ்… ‘

‘தெரிலடா… அவா காலேஜ்-ல எல்லாரும் சேந்து இருக்காளாம். அன்னிக்கு வந்தனா வந்து ரெண்டு பேரும் ஒரே அடம். சரி இப்போ ரொம்ப குளுருமே ? ‘

‘அவ்ளோ இல்லம்மா… Its ok… ‘ அக்மார்க் desi. ரமணனின் பதில் அமிதாப் பச்சன் நிகழ்ச்சியின் முதல் கேள்வியின் பதில் போல உடனடியாக வந்தது.

‘பாத்துக்கோடா… இன்ஷ்யூரன்ஸ் எல்லாம் வெச்சுண்டு இருக்கியோன்னோ… ? ? ? ‘ லைன் துண்டிக்கபட்டது ‘ச… புது card… சீப் டால்-னு பாத்தா… damn it… ‘ ரமணன்.

ரமணனுக்கு லைன் கிடைப்பதற்குள் அவனைப் பற்றி கொஞ்சம்… கணிப்பொரி இயலில் மேற்படிப்பு படிக்கத் துடிக்கும் கோடானு கோடி ஜூனியர் நாராயண மூர்த்திகளில் இருந்து சற்றே மாறுபட்டு, ந்யூக்ளியர்

ஃபிஸிக்ஸ் படிக்க வந்த அக்ரஹாரத்து அப்துல் கலாம். GRE-இல் நல்ல மார்க். விஸா வாங்குவதில்

பிரச்சனை இல்லை. ஆனால், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் டிக்கட் இன்றி, லக்கேஜ் இன்றி இவனுடன் சனி பகவான் ஃப்ளைட் ஏறியதை அவன் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. வந்த்து ஒரு காலெஜ், ஃபீஸ் கம்மி என்று, மாறியது ஒரு காலேஜ் என்று, அலை அடித்த அரச இலையாம் மாணவ வாழ்க்கைக்கு இவனும் ஒரு உதாரணம். தாய் நாட்டில் ஆறு லட்சம், டாலர் நாட்டில் பதினெட்டாயிறம் டாலர் என்று பல வங்கிகள் இவனுக்கு கடன் பட்டவை. ‘ட்ரிங்… ட்ரிங்… ‘

‘அம்மா… ‘

‘யாரு ரமணனா… சொல்லுடா கண்ணா… ‘

‘அப்பா ஹெல்த் எப்படிம்மா இருக்கு… ஷுகர் டெஸ்ட் பண்ணினேளா ? ? ? ‘

‘போன மாசம் பண்ணினதுதாண்டா… After food 140 இருக்கு… ‘

‘ம்ம்ம்… உனக்கு BP எப்படிம்மா இருக்கு… ? ? ‘

‘இருக்குடா… அப்பப்போ பஸ் விட்டு இறங்கும் போது ஒரு மாதிரி கிற்ங்கறது… ‘

‘மயக்கம் போட்டு விழுந்துட்டியா.. ? ? ‘

‘அப்படியெல்லாம் இல்லடா… பிஸ்லேரி பாட்டில் நீ சொன்னா மாதிரி எப்பவும் வெச்சுக்கறேன் கைல… அதுவே பாதி வெயிட்… சரி நன்னா படிக்கறியா… ? ? ‘

‘Sure-மா மிட் டெர்ம்மெ எக்ஸாம் வரைக்கும் எல்லாத்துலயும் A. மூணு பேப்பர் மொத்தம். one is tough… but my professor is quite impressed with me அம்மா… ‘ சுகந்தி திருவல்லிக்கேணியில் உதிர்ந்த பெருமிதப் புன்னகை டெனஸ்ஸி ஓக் ரிட்ஜில் ரமணனுக்கு உடனடியாக டெலிவரி ஆனது. ஏ டா & டா-க்கு நன்றி.

‘ரொம்ப சந்தோஷம் ரமணா… உடம்பையும் பாத்துக்கோ… தயிர் சேத்துக்க்றியோன்னோ… ? ? ‘

‘ஆங்.. இங்க fruits எல்லாம் போட்டு யோகர்ட் கிடைக்கறது. அன்னிக்கி Barbeque-ல கூட… ‘

நறுக்கென்று பச்சைமிளகாயைக் கடித்தது போல ஆனான் ரமணன்.

‘என்னது Bar-க்கு போறியா… ‘ ‘என்னடா இது… ‘ என்று அம்மா ஆயிரத்து இருணூரு வாட் மின்சாரத்தை குரலாய் பாய்ச்ச ‘நோ மா… Barbeque-னா தோட்டத்துல சமைக்கறது. கரி இல்லைன்னா காஸ் மேல வெச்சு காரட், ம்ம்… உருளைக்கிழங்கு… அந்த மாதிரிம்மா… ‘ என்றபடி சிக்கன் சாப்பிட ஆரம்பித்ததை செளகரியமாய் மறைத்தான். கடல் கடந்து வாழ்வதில் தான் என்ன ஒரு வசதி !!

‘பாத்துடா கண்ணா… பொய் சொல்ல மாட்ட தெரியும்… உன் தாத்தா ஜீயரோட வேதம் சொல்லிண்டவர்… ‘ சட்டென்று ஒரு கணம் அவனைக் கன்னத்தில் அறைந்தார் போல் உணர்ந்தான். ரமணன் மெக் டொனால்ட்ஸ் மோகி. பர்கர் கிங்-கின் சுவீகார புத்திரன். Assistantship கிடைக்காததால் அன்றாடம் செலவுக்கு குஜரத்தி கடை ஒன்ட்றில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ‘Let me get a H1, I will paint the town red ‘ ரகம். வேலை முடிந்து வருவதற்குள் அதிகாலை சூரியன் வானத்தில் அரிதாரம் பூசத்

தொடங்கிவிடும். அப்புறம் எங்கே சமைத்து, சாப்பிட்டு பணத்திற்காய் படுக்கையைத் துறந்தவன் மேலை

நாட்டுப் பணக்காரக் கையேந்தி பவன்களின் தத்துப் பிள்ளை.

‘இல்லம்மா.. I wont go against your… ‘ ஆரம்பித்த பொய்யை அறுவறுப்பாய் தொடர்ந்தவனுக்கு ஆரவமுத ஐயங்கார் அறைக்குள் நுழைந்தது அர்னால்டின் தேர்தல் வெற்றியை விடவும் அறுதியாகத் தெரிந்தது.

‘இந்தங்கண்ணா.. ரமணன் பேசறான்… ‘ அப்போது அவர் விடுத்த பார்வை சுகந்திக்கு மட்டும் தான் புரியும்.

‘உயிரின் உயிரே… ‘ பாடிக்கொண்டிருந்த ரேடியோ மிர்ச்சியை மாற்றி ஒலநாடாவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த சுதா ரகுநாதனை ‘ஜகதோதாரணா… ‘ பாடப் பணித்தார் அப்பா. துருபிடித்த சோப-கம்-பெட்

கிறீச்சிடாமல் மெதுவாக வந்து அமர்ந்தார். மகன் குரலைக் கேட்ட ஆனந்த்தில் ரிசீவரை பறிகொடுக்க மனம் இல்லை சுகந்திக்கு. ஃபெஸ்டிவல் லோனில் வாங்கிய டாடா ஃபோனில் ஸ்பீக்கரை அழுத்தினாள் சுகந்தி. ‘ரமணா.. அப்பாட்ட பேசுடா… ‘

‘ஹவ் ஆர் யூ அப்பா…. நன்னா இருக்கேளா…. ? ? ‘ அன்பு கலந்த மரியாதையுடன் பேசுவது அரவாமுத ஐயங்கார் பரம்பரையிலேயே ஊரி இருந்தது.

‘ம்ம்ம்ம்… விஷயத்துக்கு வாடா…. எவ்ளோ பணம் வெச்சுண்டு இருக்கை ? டிசம்பர்ல எவ்ளோ வேணும் ? ? ‘ ‘அப்பாக்கள் திருந்தப் போவதில்லை ‘ என்ற ஐதர் காலத்து உண்மையை உறுதிப்படுத்தியது இந்த வாக்கியம்.

‘ ஐ வில் நெவெர் டூ திஸ் டு மை கிட்ஸ்… ‘ மனதில் ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்தவன்.. ‘இல்லப்பா இட்ஸ் ஓ. கே. என்கிட்ட இருக்கு… ஐ கேன் மேனேஜ்… நோ ப்ராப்ளம்… ‘ என்றான்.

‘என்னடா மேனேஜ்… ? ? எங்க இருக்கு உன் கிட்ட பணம் ? ? ஆண்டாளுக்கு கொண்டையா ‘ என்று மணிவண்ணன் sarcasm template-ஐ தன் பாணியில் பேக்கேஜ் செய்து சிரித்தார். ‘ஓஹ்… ஹை ஷுட் ஹேவ் கால்ட் அப் வென் ஹீ வாஸ் நாட் அட் ஹோம்… ‘ என்று மனம் சொல்ல ‘அதான் பேங்க் பேலன்ஸ், transactions எல்லாம் ஈமெயில்ல அனுப்பினேனே… ? ‘

‘ஆங்… வந்துது… அது அங்குசம் வாங்கற காசுடா யானை யாரு வாங்கறது… ஃபீஸுக்கு என்ன பண்ண போற ரமணா… என்னடா… க்ரெடிட் கார்டா திருப்பி ? ‘

‘இல்லப்பா… நான் work பண்ற professor அடுத்த செமெஸ்டெர் funding எதிர் பாக்கறார்… ‘

‘சுத்தம்…! அவருக்கே சம்பளம் வரது இல்லியா… ? ‘ எகத்தாளத்துடன் ஐயங்கார் சிரக்க… ‘கம் ஆன் டாட் ‘ என்றான் ரமணன்.

‘சும்மா இருங்கோண்ணா… அவனே அங்கே ஸ்ரமப்பட்டுண்டு இருக்கான்… நீங்களும் வேற… ‘ தக்க சமையத்தில் ஆபத்பாந்தவி role பண்ண சுகந்திக்கு சொல்லித்தர உலகத்தில் யாரும் தேவை இல்லை.

‘இவனை யாருடா ஸ்ரமப்பட சொல்றா இப்போ.. ? ? கோபாலகிருஷ்ணன் புள்ளைக்கு விஸா கிடைக்கலை… இப்போ TCS-ல கிடைச்சு ப்ராஜெக்ட்-ல ஜெர்மன் போய்ட்டான்… நாம போறதுல நமக்கு வரலைன்னா, வர்ற இடத்துக்கு நாம போகணும். இப்போ அரவமுத ஐயங்கார் புள்ள ஹைட்றஜன் atom பத்தி படிக்கலைன்னு யாரு அழுதா.. ? ? பர்ஸுல வெள்ளையப்பன் இருந்தா தாண்டா பெத்த அப்பனுக்கே மதிப்பு ‘ ப்ராக்டிகல் சைக்காலஜியில் Ph. D முடித்தவர் போல அவர் பேசிய வார்த்தைகள் யதார்த்தச் சம்மட்டி எடுத்து ரமணனை எக்குத் தப்பாய் அடித்தன… பேச்சின் போக்கு ரொம்வே எரிச்சல் படுத்த, ‘அம்மா உங்களுக்கு தண்ணி கஷ்டம் இருக்கா ? ? டி நகர், ராஜீவ் ஆத்துல தண்ணி வாங்கறாளாமே… ‘

‘ம்க்கும்… தண்ணி வரது இல்ல… திருவான்மியூர்ல முப்பத்தி அஞ்சு லட்சத்துக்கு வீடு வாங்கலாம்னு பாக்கறேன்… என்ன ப்ரொஸீட் பண்ணட்டுமா… ? ? ‘ கெளரவம் சிவாஜி போல கர்ஜித்தார் அர்வாமுதன்.

‘கம்மான் அப்பா… மறுபடியும் மறுபடியும் யூ ஆர் ஸ்ட்ரெஸ்ஸிங் ஆன் தி ஸேம் பாயிண்ட்… விஷ்வேஷ்க்கு TCS-ல கிடைச்சது லக். எனக்கும் தானே கால் லெட்டர் வந்துது… ? யூ ஆர் கம்பேரிங் ஆப்பிள்ஸ் டு ஆரன்ஜஸ்… ‘

‘நன்னா பேசற்ப்பா…. சரி, போனதுலயும்னா நம்பளால shine பண்ண முடியலை… ‘ அடுத்த கூக்ளியை இறக்கினார் அப்பா.

‘டோன்ட் டெல் மீ டாட்… என் GPA 3.0. ப்ரொஃபஸர்கள் எல்லாம் ரொம்பவே இம்ப்ரெஸ்ஸெட்… தே ஆர் லுக்கிங் ஃபார் ஈவன் தெ ஸ்மால்லஸ்ட் ஆப்பர்டூனிடி டு ஃபண்ட் மீ… ‘ இயலாமையை இதை விட உருக்கமாய் சிந்து பைரவி சிவகுமார் கூட வெளிப்படுத்தியதில்லை…

‘பிரமாதமா பேசற… ஆனா பச்சை நோட்டுக்குத்தான் வழி இல்லை ‘

‘…… ‘-ரமணன்… ‘யோவ்… நீ பீ காம் நந்தனம் ஆர்ட்ஸ் ஈவினிங் காலேஜ்-ல படிக்காறச்சே உங்க அப்பா பொறுத்துக்கல. ? ? கிவ் மீ மை டைம் டாட் !! ‘ என்று மனதில் அவரைக் கடிந்து கொண்டான். சில சமயம் மெளனமாய் இருப்பதே சாலச்சிறந்தது என்பதை ரமணன் உணராமல் இல்லை. கண்டங்களின் distance gap-பில், இருபத்து ஆறு வருட generation gap கரைந்து போனது.

‘லிஸன் அப்பா… நான் ரொம்ப கஷ்ட பட்டு படிக்கறேன். என் ப்ரொஃபஸர் நன்னா புகழறார்… ஸோ,

கொஞ்சம் பொறுத்துக்கோங்கோ எனக்காக… ப்ளீஸ்… ‘ ப்ரொஃபஸருக்கு அந்த ப்ராஜக்ட் கிடைக்க சுகந்தி

தேனாம்பேட்டை ஆஞ்சனேயருக்கு ஆறு வாரம் வடைமாலையோடு உடனே மனதில் விண்ணப்பித்தாள்.

‘இதோ பாரு ரமணா… நான் உன்னை discourage பண்ணலை. என் பென்ஷன் பணம்… சுகந்தி சம்பளம்…

இதுல ஆறு லட்சம் IOB-ல கடன்… ரம்யாவோட ஜாதகம் வேற இப்பவோ அப்பவோங்கறது.. ‘ பத்து நிமிட சாட்டையடிக்கு பிராயச்சித்தம் செய்தன இந்த வார்த்தைகள்.

‘என்க்கு நன்னா புரியறதுப்பா… ஐ வில் பிகின் டொ ரீப் மை பெனிஃபிட்ஸ் ஸூன்… நிச்சியமா… ‘ என்று

கிரிமினல் வக்கீல் கட்சிக்காரனுக்கு தைரியம் சொல்வது போல பேசினான்.

‘எதோப்பா பாத்துக்கோ… ‘ ஆதங்க அரவாமுதன்!

‘sure-பா. டோண்ட் வொற்றி… ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப ஹெல்ப் பண்றா… அஷ்வினி கூட ஆறுதலா இருக்க்க்க்க்க்……….. ‘

‘யாருடா அஷ்வினி ? ? ? ஸட்டன் ப்ரேக் போட்டாள் சுகந்தி… சுருக்கென்றது ரமணனுக்கு!! கடனடைக்க வழி கேட்டால் காதலியைப் பற்றி உளரிட்டியேடா முட்டாள்… ‘ தன்னை தானே திட்டிக்கொண்டவனாய்… ‘ஐயோ…. ரிலேக்ஸ் அம்மா… அஷ்வினி இல்லை அஷ்வின்.. அஷ்வின்…!! ‘ இருதியில் இருந்த ‘இ ‘கரத்தைக் களைந்து இனியவளை பெற்றவர்களிடம் இருந்து தற்காலைகமாக மறைத்தான்… ‘வெங்கடேஷோட கஸின். போன செப்டெம்பர்ல வந்தான்… ‘

‘ஓ சரிடா… ‘ அம்மாவின் அரைகுறை நம்பிக்கை ரமணனை பெருமூச்சு விடச் செய்தது… ‘சரிப்பா… ஐ வில் கீப் யூ அப்டேட்டட் அபவுட் எய்ட்… எனக்காக வேண்டிக்கோங்கோ… ப்ளீஸ்… ரம்யா வரலை இன்னும்…. ? ‘

‘இல்லடா… ‘

‘சரிப்பா… நான் வீக் எண்ட் திருப்பி கால் பண்றேன்… அவளை இருக்க சொல்லுங்கோ… சரியா… ? ‘

‘கண்டிப்பா இருக்க சொல்றேன் கண்ணா… ‘

தொலைபேசியை வைத்து விட்டு, எதிரில் காத்துக்கொண்டிருந்த கோக் கேன்-ஐ கையில் எடுத்துத்தான். ஆள்க்காட்டி விரல் நகத்தால் உள்ளே சிறைப்பட்டு இருந்த கார்பன் டை ஆக்சைடுக்கு விடுதலை அளித்து ஒரு வாய் குடித்தான். பின் மண்டையில் சுளீரென யாரோ தாக்கியதைப் போல் அதிர்ந்தான். ‘ஓ மை

காட்… ஐ ஷுட் ஹாவ் பீன் அட் வொர்க் நெள… ‘. முக்கால் மணிநேர தாமதத்தை அவன் கடை முதலாளி பரேஷ் படேல் மன்னிக்கவே போவதில்லை. கண நேரத்தில் வாலட், சுரேஷ்-இன் கார் சாவி, குளிருக்கு ஜாக்கெட், கோக் கேன் அனைத்தையும் பாய்ந்து எடுத்தான். வாசலை நோக்கி பாய்ந்து, விளக்கை அணைத்து கதவை மூட முற்பட்ட போது தொலைபேசியாய் அலறினார் படேல். ‘எடுக்கலாமா வேண்டாமா… ? ? எடுத்து விட்டு சுரேஷ் மாதிரி பேசலாம்.. நோ… உன் குரலை அவர் தூக்க்த்துல கூட கண்டு புடிப்பார்… கார் flat ஆகி திரும்பி வந்து விட்டதா சொல்லலாம்…. ச…. சமைக்கறச்சே விரலை கட் பண்ணிக்கிட்டேன்னு கதை அடிக்கலாம்… மடையா… வீட்டு சமயல் turn அவருக்கு தெரியும்… படேல் ஒண்ணும் முட்டாள் இல்ல… கண்டு புடிச்சுடுவார்…. ரூம் மேட்டுகளுக்கு உடம்பு சரி இல்லன்னு எதாவது…. ம்ம்… landlady வந்துட்டாங்க… ‘ பத்து வினாடிகளிலில் பத்தாயிரம் சிந்தனைகளை பெண்டியம் IV வேகத்தில் ப்ராஸஸ் செய்தான். தொலைபேசியைய் எடுக்க, அறைந்தது அந்த முனை குரல்….. ‘இஸ் ரமணா தேர்… ? ? கிதர் மர் கயா வோ… ‘ பேசாமல் இருந்தான் ரமணன். ‘ஹலோ… ரமணா ஹை க்யா.. ? ‘ விடுவதாக இல்ல படேல்.

‘ஸ்பீக்கிங் மிஸ்டர் படேல்…. ரமணா ஹியர்… ஸாரி…. ஐ வாஸ் அபவுட் டு கால் யூ… ‘

சிவகாசி காளீஸ்வரி பட்டாசுகளை வார்த்தைச் சரமாக கோர்த்து அவன் உடல் முழுதும் சுற்றி காதருகே திரி வைத்து கொளுத்தியது போல் இருந்தது ரமணனுக்கு. ‘இர்ரெஸ்பான்ஸிபிள் ஃபெல்லோ… There are so many people waiting outside the shop here… you know the consequence of ONE HOUR DELAY (இந்த அழுத்தம் அந்த குரலில் வெளிப்பட்டது) to my business, dont you ? you guys beg so much and get the jobs… but once you are in….. அப்னே பாப் கே தூகான் சமஜ் லேதே ஹோ…. அபீ பீ கர் மேன் ஹோ க்யா… ? ‘

‘நஹி ஸர்…. ஐ லெஃப்ட் ஹோம்… ஃபோன் வாஸ் ரிங்கிங்க்…. ஐ கேம்…. ‘

‘அரே பாபா, ஐஸே பஹுத் குச் ஸுன் சுகா ஹூன்… அப் க்யா… ? ? ‘

‘நோ ஸர்… ஐ கால்ட் அப் மை பரெண்ட்ஸ் இன் இண்டியா….. I called up my parents in India… something urgent back home…. thats why… ‘ என்று அறைகுறை பொய்யை அனாயாசமாக உதிர்த்தான்.

அசரவில்லை படேல்… ‘come on… I have been trying to call you for such a long time… It was continuously engaged… A friend of mine came to our shop, saw it closed and called me on my cell phone… இத்னா குச் ஹுஆ ஹை யஹான் பே… have I not asked you to call home from here if you have to… you are negligent ரமணா… dont tell me cock and bull stories anymore… ‘ தனது தொல்வியை மெல்ல உணர ஆரம்பித்தான் ரமணன்… ‘ச…. இனிக்கு நாளே சரி இல்ல… ‘. ஒரு பெருமூச்சை இழுத்துக்கொண்டு கடைசி பிரம்மாஸ்திரமாக ‘ப்ளீஸ் believe me… there is a problem at home sir… ‘ என்றான் குரல் தழுதழுக்க… படேல் என்ற பெயர் அவரை இரும்பு மனிதர் ஆக்கி இருந்தது. ‘No ரமணா… you are fired…. ஆகே அப்னே பேலன்ஸ் லே ஜாஓ… ‘ தொலைபேசி மரணதண்டனைக் கைதியின் தலை போல துண்டிக்கப்பட்டது. ‘ச… முதல்ல அப்பா… இப்போ இவர்…. wont men ever understand… ? ‘ இன்னொரு வாய் கோக் உள்ளே போனது. இன்று அஷ்வினியிடம் அத்தியாயமாய் புலம்ப வேண்டி இருப்பதை வெறுப்புடன் உணர்ந்தான். சற்று முன்பு தான் தந்தையிடம் பணத்தை பற்றி கவலை இல்லை என்று சூளுறைத்து முடித்திருந்தான். மாதாந்திரச் செலவுகளுக்கு வந்த வருமானத்திலும் மண் விழுந்த இந்த சம்பவம் சற்று வேகமாகவே நடந்து முடிந்து இருந்தது. பணத்திற்கு எங்கே போவது ? ? படேல் இதை ஊர் முழுவதும் சொல்லி மற்ற முதலாளிகளிடமும் ‘free of cost image damage ‘ செய்து விடுவார். Fees கட்டவும் ஆறு வாரஙகளே மீதமுள்ளன. வீட்டு வாடகை, cell phone bill, நவம்பரில் அஷ்வினிக்கு பிறந்த நாள்… இவ்வளவுக்கும் பணத்திற்கு எங்கே போவது ? ‘பட்ட காலிலே படும்னு அம்மா சொல்லுவாளே… கம்மான் ரமணா…. யூ ஆர் பிகமிங் ஃபிலஸாபிகல்… ‘ தனக்குத்தானே ஆறுதலும், அனுதாபமும்

சொன்னவனாய் நடந்த சம்பவத்தை ஓரளவு ஜீரணித்தான். நிமிர்ந்து சுவற்றைப் பார்த்தான். பல்லவன் பேருந்தில் திருக்குறள் போல அமெரிக்க-இந்திய மாணவர்களின் தாரக மந்திரம் தென்பட்டது….

‘There are certain things in the wolrd that money cant buy… for everything else… there ‘s mastercard…. ‘ புதுத்தெம்பு வந்தவனாய்…. செல் ஃபோனில் அஷ்வினியின் எண்ணை அழுத்தினான், ரமணன், NRI.

ssangam2@uno.edu

Series Navigation