Mr. & Mrs. Iyer

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

சந்திரசேகரன்


மரங்கள் உண்டு. ஆனால் அதைச் சுற்றி வந்து பாடும் பாடல்கள் இல்லை.

இசை உண்டு. ஆனால் உடை காணாத ‘இடை ‘ நடனங்கள் இல்லை.

குழந்தை சந்தானத்துடன், தனியே கல்கத்தா நோக்கி பஸ்ஸில் பயணமாகும்

தமிழ் பிராமணப்பெண் மீனாட்சி. அவளது பயணத்துணையாக வரும் இஸ்லாமிய

இளைஞன் புகைப்படக் கலைஞன் ராஜா செளத்ரி. இந்து-முஸ்லிம் மதக்

கலவரத்தின் கொடூரம். இதை வைத்து ஒரு உன்னதமான திரைப்படம்

வழங்கியுள்ளார் அபர்ணா சென்.

எதிர்காலக் கவலையின்றி, தன் தோழர், தோழியருடன் சந்தோஷ உச்சத்தில் பயணம்

செய்து வந்த இளைஞனை, தீவிரவாதிகள் நிர்வாணப்படுத்தி, மத அடையாளத்தை உறுதி

செய்து கொள்ளும் கொடூரம். அப்பொழுது அவன் காட்டும் பய, அவமான உணர்ச்சிகள்,

ஒரு யூதனின் சுயநலத்தால், அந்த வயோதிக இஸ்லாமிய தம்பதியரை பேருந்திலிருந்து

தீவிரவாதிகள் அப்புறப்படுத்தும் காட்சி – மதக்கலவரத்தின் கொடுமையை, அதன்

உக்கிரத்தை இக்காட்சிகளில் காணும்போது நம் அடி நெஞ்சில் பாறாங்கல்லை

வைத்து அழுத்திய தாக்கம்.

மீனாட்சி, ராஜாவைத் தன் கணவர் Mr.அய்யர் என்று பொய் கூறி அந்தத் தீவிரவாதிகளிடமிருந்து

காப்பாற்றுகிறாள். பின் அவர்களது மனத்தில் ஒருவருக்கொருவர் காட்டும் நேசம், சினேகம்

ஒரு அழகிய கவிதைக் காட்சிகளாக சொல்லப்படுகிறது. ராகுல் போஸ், ஆர்ப்பாட்டம் இல்லாத

அமைதியான நடிப்பு. மீனாட்சியாக வாழ்கிறார் கொன்கனா சென், அபர்ணா சென்னின் மகள்.

அந்த மத்தியதர தமிழ் பிராமணப் பெண்களுக்கே உண்டான பயம், படபடப்பு, எச்சரிக்கை உணர்வு,

பழைய சம்பிரதாயங்களில் ஒட்டியும் ஒட்டாமலும் ஈரெட்டான நிலமை என்று காட்சிக்கு

காட்சி, அந்தப் பாத்திரத்தை செதுக்கியிருக்கிறார். புகுந்த வீட்டிற்கு, தங்கள் நிலைமையை

தொலைபேசியில் ராஜா மூலம் உரைக்கும்போது, பின்னணியில், அந்த உறவினர்கள் நிஜத்தின்

வலி உணராமல் கேட்கும் மடத்தனமான கேள்விகளை சமாளிக்கும் காட்சி ஒரு உதாரணம்.

எதற்காக அந்த சிடுமூஞ்சியுடன் இருக்கும் சக பயணி பாத்திரம், கலவரத்தின்

கொடூரம் முற்றும் அழியாத ஊரடங்கு சட்டம் இருக்கும் நிலையில் அந்த யுவதிகள்

மீனாட்சியையும், ராஜாவையும், அவர்களது காதல் திருமணம் பற்றிக் கேட்கும் காட்சிகள்

போன்ற நெருடல்கள் இருந்தாலும், அவை வேறு பல காட்சி அமைப்பால் குறைகளாகத்

தோன்றவில்லை.

உதாரணத்திற்கு, அந்தக் காட்டு பங்களா வேலைக்காரக் கிழவர், மீனாட்சி, ராஜாவிடம்

காட்டும் அந்நியோன்னியம், நடு இரவில் காமிரா வழியாகத் துள்ளி ஓடும் மான்களைப்

பார்த்து மகிழ்ந்து, பின் அதே காமிரா வழியாகக் கொலை ஒன்றைக் கண்டு

மீனாட்சி மிரளும் எதிர்மறைக் காட்சிகளின் ஆக்கம்…, அதே கொலையைக் கண்டு, ஒடுங்கி

உட்கார்ந்து மெலிதாக ஓலமிடும் அந்தக் கிழவரின் பாத்திரப் படைப்பு…, கை வளையல்களில்

ஊக்கு (safety pin) மாட்டி கலைந்த ஒட்டுப் பொட்டுடன் மீனாட்சி தூங்கி எழும் யதார்த்தம்…,

இருவருக்கும் மன நெருக்கம் அதிகமாகி, மீனாட்சியையும், குழந்தை சந்தானத்தையும்

ராஜா புகைப்படம் எடுக்கும் காட்சிகளை soft-focus லென்ஸ் கொண்டு எடுத்த உத்தி….

என்று இத் திரைப்படத்தில் பல இடங்கள் மனதை நிறைக்கின்றன.

மனித நேயம் ஒரு பக்கம், மதக் கலவரம் இன்னொரு பக்கம் என்று எதிர் துருவங்களை

அற்புதமாக இணைத்துப் பக்குவமாகச் செய்த புதுமைக் காவியம்தான் இந்தத் திரைப்படம்.

ஒரு திரைப்படம் நல்ல திரைப்படம் ஆவது என்பது, எடுத்துக்கொண்ட விஷயம், சொல்லப்

பட்ட நேர்த்தி, காட்சிகளின் அமைப்பு, நேர்த்தியான முடிவு என்பதன் அடிப்படையில்

அமைவது என்பது என் கருத்து. Mr. & Mrs. Iyer ஒரு நல்ல திரைப்படம்.

( mcsekar@hotmail.com )

Series Navigation