சூஸ்பொரி – கல்லூரிக் காலம் – 6

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

நம்பி


————-

‘கைய்ய முன்னாலதான் மடக்க முடியும். கால பின்னாலதான் மடக்க முடியும் ‘னு எப்பப் பாத்தாலும் தத்துவமா அவுத்து உடுற ‘தாய்ம்ஸ் ‘ வாசுக்கு தண்ணி காமிக்கனும்னு நெனச்சான் ‘ஆமினா ‘ சுரேஷ். சாதாரணமா ஆமினா கண் பட்டாலே எரியுற பல்பும் புகைஞ்சுடும். திட்டம் போட்டு களத்துல இறங்கினான்னா கதை கந்தல்தான்.

ராத்திரி எல்லாரும் தூங்குன அப்புறம் கல்லூரி வளாகத்துக்குப் போயி இருக்குற பெண்கள் கழிப்பறை எல்லாம் ‘தாயம்ஸ் வாசு தாகத்தில் தவிக்கிறார் ‘னு மூக்க பொத்திகி ட்டு எழுதிட்டு வந்துட்டான். அதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாலேயே ‘வாசு நீ என் உயிர் ‘ அப்படின்னு ஒரு தபால் பூரா ஸ்ரீராம ஜெயம் எழுதறமாதிரி எழுதி அனுப்பி ட்டான். ‘ வெல மோருல வெண்ணெய் எடுக்கலாம். மெஸ் சாம்பார்ல பருப்பு எடுக்க முடியாது ‘ அப்படின்னு அன்னய தத்துவத்த உதிர்த்திட்டு வந்த தாயம்ஸுக்கு தபால் அட்டை கெடச்சது. பயலுக்கு ஒன்னும் புரியல. நம்மள நெனச்சு ஒரு புள்ள இப்படி உருகியிருக்காளே அப்படின்னு குஜாலாயிட்டான்.

அந்த மெதப்புலேயெ தரைக்கு மேலெ ரெண்டு அடில நடக்குறான். கல்லூரி வளாகத்துல எல்லா புள்ளகளும் இவனேயே பார்கக்றது மாதிரி நெனப்பு. ஆனா நெசமாவே எல்லாம் அரை கிறுக்கன பார்க்குற மாதிரிதான் பார்க்குதுங்க. அதுங்களுக்குள்ள கழி ப்பறையில தவிக்கிறது இவந்தான்னு குசுகுசுன்னு விஷயம் பரவிடுச்சு. பய நெப்போலியன ராவா எத்துனது மாதிரி இப்படி எல்லாரும் நம்ம தத்துவத்துக்கு மயங்கி கெடக்குதுங்களே, இதுல யாரு நமக்காக உருகுறதுன்னு ஒரே தவிப்பு. இத பயலுகல்கிட்ட சொல்லவும் பயம். பொறமையில கலைச்சி விட்டுடுவானுவ. இப்படியா ரெண்டு நாளு தூக்கம் இல்லாம தவிச்சான்.

அப்பத்தான் அடுத்த கடிதம் வருது. ‘ உயிரே முதல் கடிதம் கிடைத்ததா ?. நான் செவ்வாய்க் கிழமை நீலப் புடவை கட்டி வருவேன். என்னைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் சிவப்பு பேண்ட்டும், பச்சை சட்டையும் போட்டுகிட்டு நூலகத்துக்கு வெளியே காத்திருக்கவும் ‘ ன்னு அதுல எழுதியிருந்திச்சி. என்னடா இது. ஏற்கனவே நெருப்ப குளிப்பாட்டின மாதிரி தகதகன்னு ரஜினிகாந்த் கணக்கா இருக்கோம். இதுல செருப்பால அடிக்கிற கலர்ல வரச் சொல்றாளேன்னு ஒரு கலக்கம். இருந்தாலும் நம்மள காதலிக்கறது யாருன்னு கண்டுபுடிக்கனும்னு மனச தேத்திகிட்டு, சிவப்பு பேண்டுக்கு அலைய ஆரம்பிச்சான். ஒன்னும் கிடைக்கல. புஷ்பந்தர்சிங் வெள்ள பேண்ட திருடி குங்கும கரைசல்ல தோய்ச்சு ஒரு வழியா தேத்திகிட்டான். அங்கங்க திட்டுதி ட்டா ஒரு மாதிரி இருந்தாலும் தைரியமா மாட்டிகிட்டு நூலகத்துக்கு பக்கத்துல யாரு நீல புடவை கட்டிகிட்டு வர்றதுன்னு காத்துக்கிடக்கான்.

‘சத்துணவு டாச்சர் ‘ வசந்தி – மகளிர் விடுதி மெஸ் ரெப் – நாளைக்கு மெஸ்ல கத்தரி க்காய் சாம்பாரும், வெண்டைக்காய் பொறியலும் போடலாமான்னு யோசிச்சுகிட்டே நீலப்புடவையில நூலகம் வர்றாள். உள்ள போகுற போக்குல ‘இவனுக்கு என்ன வந்தது. ஒரு வாரமா இப்படி அலையுறானே. பாவம்!. வெயில் அதிகம் போல ‘ அப்படின்னு ஒரு அனுதாபப் பார்வைய வீசிட்டுப் போனாள்.

பயலுக்கு பத்திக்கிட்டு. இவதான் அவள்னு பறக்குறான். சத்துணவுடாச்சர் தக்காளி கணக்கா இருப்பாள். மூனு பேரு மனு போட்டு தோத்து இருக்கானுவ. அது நம்மகிட்டா தானா வருதுன்னா , ‘மச்சி நீ அதிஷ்ட்ட கட்டைடா ‘.

ஆமினா ஒன்னுவிடாமா CBI, FBI மாதிரி எல்லாத்தையும் கண்கானிச்சு வச்சுகி ட்டு அடுத்த கடிதம் போட்டான். ‘உயிரே, நான் யாரென்று தெரிந்திருக்கும். என்னை நீங்களும் விரும்பினால் மஞ்சள் பேண்டும், சிவப்பு சட்டையும் போட்டுகொண்டு எனக்குப் பிடித்த சூஸ்பொரி வாங்கி வாருங்கள். நான் மஞ்சள் புடவையில் வரும் நாளில் என்னிடம் கொடுங்கள். அப்படியே எனக்காக ஒரு தத்துவமும் சொல்ல வேண்டும் ‘ என்று அன்புக் கட்டளை வேறு.

தத்துவமெல்லாம் தூசு. வாயத் தொறந்தா தானா கொட்டும். தாயம்ஸுக்கு இந்த பேண்டு விஷயம்தான் படுத்துது. இந்த தடவ மஞ்சள் பொடியெல்லாம் கதைக்கு ஆவாதுன்னு, ‘சைண்டிஸ்ட் ‘ புத்தகம் வாங்க வச்சிருந்த பணத்த எடுத்துகிட்டு போயி புதுசா துணி எடுத்து தைக்க கொடுத்துட்டான். தையல் கடையில தீ மிதிக்க போறீங்களான்னு கேட்டதுக்கு கோவம் வரல. தானா வர்ற காதலுக்கு இதக்கூட செய்யலன்னா எப்படின்னு மனச தேத்திகிட்டான்.

ஒரு வாரமா மஞ்சள் பேண்டும், சிவப்பு சட்டையும் போட்டுகிட்டு கல்லூரி வளாகத்தையே தாயம்ஸ் கலக்குறான். சத்துணவுடாச்சர் பத்து நாளைக்கு ஒரு தடவை சாயம்போன மஞ்சள் புடவை ஒன்னு கட்டுவாள். அதுவரைக்கும் தாயம்ஸ் கிறுக்கனாட்டம் அலைஞ்சத பொம்பள புள்ளங்க எல்லாம் ‘இவனுக்கு என்ன தாகம். இப்படி விவஸ்தை இல்லாம அலையிறான் ‘னு திட்டுனாளுங்க.

ஒரு வழியா சத்துணவுடாச்சர் மஞ்சள் புடவையில எட்டாவது நாள் தரிசனம் கொடுத்தா. தாயம்ஸ் துள்ளி குதிச்சி ஓடிப்போயி, சூஸ் பொரிய கொடுத்துட்டு ‘மாமா, மச்சான்னா மாசக் கணக்கா ஆவும். அண்ண, அக்கான்னா அன்னைக்கே முடியும் ‘னு தத்துவம் சொல்லிட்டு மப்பா சிரிச்சான். சத்துணவு டாச்சருக்கு உதறல் எடுக்குது. என்ன இந்தப் பய சம்மந்தம் இல்லாம உளறிக் கொட்டுறான். கிட்ட நின்னா கடிச்சு வச்சிருவான்னு தலைதெறிக்க ஓடிப்போயிட்டா.

தாயம்ஸுக்கு தாங்கல. வெட்க்கத்துல ஓடுறான்னு நினைச்சிகிட்டான். ‘கத்தரிக்கா குத்துக் கண்ணக் காரி கைநிறைய சூஸ்பொறி தரேன் வாடி ‘ ன்னு பாடிகிட்டு விடுதிக்கு வந்து ஆட்டம் போடுறான்.

இந்தப் பயல் ஆப்பு அடிக்கிறதே தெரியாம இன்னம் தத்துவம் அவுத்து வுடுறானே. இன்னம் கொஞ்சம் போட்டுத் தாக்கனும்னு அடுத்த கடிதம் போட்டான் ஆமினா. இந்தத் தடவை , ‘நீங்கள் கொடுத்த சூஸ்பொரி மண் எண்ணெய் நாத்தம் அடிச்சுது. இனி மே அந்தக் கடையில வாங்கதீங்க. என்னைக்கும் அழியாம இருக்கற மாதிரி மரப்பாச்சி பொம்மை வாங்கிட்டு வாங்க ‘.

தாயம்ஸுக்கு கொஞ்சம் நிம்மதி. செருப்பால அடிக்கிற நிறத்துல பேண்டு போட சொல்லலன்னு. அடுத்த நாளே தேடிப்பிடிச்சு மரப்பாச்சி பொம்ம வாங்கிட்டான். காலையி லே கல்லூரிக்குப் போயி சத்துணவு டாச்சர மறிச்சி கொடுத்தான். கடுப்பாயிட்டாள். ‘ என்ன நினைச்சுகிட்டு இருக்குற. எங்கப்பா யாரு தெரியும்ல. DSP. உடம்புல ஒரு எலும்பு இருக்காது. தாகமா இருந்திச்சின்னா போயி தண்ணி குடி. இப்படி அலையாதே ‘ அப்படின்னு எல்லா சைடுல இருந்தும் டோஸ் விட்டா.

தாயம்ஸுக்கு வயித்த கலக்கிடுச்சு. என்னாச்சு இவளுக்குன்னு யோசனையில விடுதி கழி ப்பறைக்கு போனா அங்க கிறுக்கியிருக்கு, ‘தாயம்ஸுக்கு தாகம் ‘னு. எந்த நாயோ நம்மள கிறுக்கனா அலையவுட்டுருக்குன்னு அப்பத்தான் புரிஞ்சது.

அதுலருந்து பய உண்ணுறதுக்கும் உறிஞ்சறதுக்கும் தவிர வேற எதுக்கும் வாய தொறக்கறது இல்ல. அப்புறம் எங்க தத்துவம் சொல்றது.

***

nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி