குறிப்புகள் சில-நவம்பர் 6 2003

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ரிலையன்ஸ், தாரளமயமாக்கல்-மருத்துவக் கல்வி-மருந்துகளும் உரிமங்களும்

சில வாரங்களுக்கு முன் தினமணியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பாளர்கள் எப்படி ரிலையன்ஸின்

விலை மாறுதல்களால் அவதியுறுகிறார்கள் என்பதை விளக்கி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.அதில்

உலகச் சந்தையில் மூலப்பொருட்கள் மலிவாகக் கிடைத்தாலும் சுங்கவரிகள் காரணமாக இறக்குமதி செய்வது சாத்தியமில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு உற்பத்தியாளர் சந்தையில் தன் ஏகபோக உரிமை காரணமாக மூலப்பொருட்களின் விலையை தன்னிச்சையாக நிர்ணயிக்கும் போது போட்டியை உருவாக்கி அரசு அம்மூலப்பொருட்களை உபயோகிப்பவர்கள நலனை பாதுகாக்க வேண்டும்.அதற்கு தகுந்தாற் போல் சுங்க வரிகைகள்/தீர்வைகள் மாற்றப்பட வேண்டும்.ஆனால் ரிலையன்ஸின் நலனை பாதுகாக்கும் விதத்திலேயே அரசின் கொள்கைகள் உள்ளன.இதனால் பாதிக்கப்படுவது யார் ?உபயோகிப்பாளரும், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் உள்ள நிறுவனங்களும்.சர்வதேச சந்தையில் மூலப்பொருட்கள் விற்கப்படும் விலைக்கும், ரிலையன்ஸ் விற்கும் விலைக்கும் வேறுபாடு அதிகமெனில் இறக்குமதியை எளிதாக்கினால் ரிலையனஸ் தன்னிச்சைப்படி விலையை நிர்ணயிக்க முடியாது.ஆனால் இங்கு தனியார்மயம் என்பது சந்தையில் போட்டியை ஊக்குவிப்பதாக இல்லாத போது யார் நலனுக்காக தனியார்மயம் என்ற கேள்வி எழுகிறது. இது போல் தொலைதொடர்புத்துறையில் அரசின் ஒருங்கிணைந்த உரிமைக் கொள்கையும் ரிலையன்ஸ் பயன் பெறும் வகையில் உள்ளது.இத்துறையில் ஆரம்பம் முதலே அரசின் கொள்கை சரியானது என்று கூற முடியாது. அதே சமயம் இந்த முடிவினால் பெரிய அளவில பயனடையப்போவது ரிலையன்ஸ். சில நூறு கோடிகளை அபராதமாகக் கட்டியபின்னும் ரிலையன்ஸ் தன் சேவைகளை விரிவாக்க இக்கொள்கை உதவும்.கிட்டதட்ட 3000 கோடி ரூபாய் அளவிற்கு ரிலையன்ஸ் பலன் பெறும் என்று மதிப்பிடப்படுகிறது.

(http://mynews.rediff.com/money/2003/nov/03guest.htm).அரசின் கொள்கை மாற்றத்தினால் ஏற்படும் சாதக,பாதக அம்சங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அரசின் கொள்கைகளால் ஒரு குழுமம் தொடர்ந்து பலன் பெறுவது லைசென்ஸ் ராஜ்ஜியம் வேறு விதத்தில் தொடர்கிறதோ என்ற சந்தேகம் எழுவது இயற்கை.

——————————————————————————————————————————

மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக் குறித்து உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் வரவேற்கப்பட வேண்டியவை.மருத்துவ கல்வியில் சிறப்பு பயிற்சி பட்டய படிப்பில் இட ஒதுக்கீடு கூடாது

என்பதும், இட ஒதுக்கீடு 50%த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதும் சரிதான்.தேசிய அளவில் மருத்துவ கல்வி குறித்து மத்திய அரசும், மாநில அரசுகளும் முக்கியமான முடிவுகளை இனியும் தவிர்க்க முடியாது.இப்போதுள்ள முறையில் பணம்தான் முக்கியமான தகுதியாக உள்ளது.ஒரு மருத்துவ கல்லூரி

ஆரம்பிக்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்ற நிலை உள்ளது. இந்தியா முழுவதும்

கல்லூரிகள் ஆரம்பிப்பது, மாணவர் சேர்க்கை,இட ஒதுக்கீடு குறித்து ஒரே மாதிரியான கொள்கை இருப்பது நல்லது. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு தேவை.அடுத்த கல்வி ஆண்டில் குழப்பங்களை தவிர்க்க

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உதவும் என்றே தோன்றுகிறது.

——————————————————————————————————————————

வளர்முக/வறிய நாடுகளுக்கு ஜெனரிக் மருந்துகளை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் வகையில் கனடாவில்

அறிவு சார் சொத்துரிமை குறித்த சட்டதிருத்தம் இந்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது நிறைவேற

சில வாரங்கள்/மாதங்கள் ஆகலாம்.இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம்.அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்களில் கனடாவிலிருந்து ஜெனரிக் மருந்துகளை பெருமளவில் மாநில அரசுகளே இறக்குமதி செய்ய

முயற்சிகள் செய்யப்படுகின்றன.இதன் மூலம் சில மாநிலங்களில் ஆண்டுதோறும் பல நூறு மில்லியன் டாலர்கள் மிச்சமாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மருந்து உற்பத்தியாளர்கள்(PhMRA) இதை

கடுமையாக எதிர்ப்பதுடன்,கனடாவின் கொள்கை அமெரிக்க மருந்து உற்பத்தியாளர் நலனைப்

பாதிக்கும் என்பதால் இத்தகைய முயற்சிகளை எதிர்ப்பதில் வியப்பில்லை.உரிமங்கள்(PATENTS)

மருத்துவ ஆராய்ச்சிக்கு அவசியம் அவை இல்லாவிடில் ஆராய்ச்சிகள் குறைந்து விடும்

என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.மருந்துத் தொழிலில் ஆராய்ச்சிக்கு செலவிடப்படும் தொகையைவிட

மார்க்கெட்டிங் செய்ய அதிக தொகை செலவிடப்படுகிறது, மேலும் மருந்து உற்பத்தியாளர்கள்

அரசு ஆதரிக்கும், அரசின் ஆராய்ச்சிக் கூடங்களில் செய்யப்படும் ஆய்வினை பெருமளவில் பயன்படுத்துவதால் இந்த வாதங்கள் சரியல்ல என்று இன்னொரு தரப்பினர் கூறுகிறார்கள்.கிளிண்டன் முன்வைத்த மருந்துகள் விநியோகத்திட்டம், கனடாவில் செய்யப்படும் சட்ட மாற்றம்,தென் ஆப்பிரிக்காவில் வழங்கப்பட்ட தீர்ப்பு போன்றவை உலகெங்கும் உரிமங்கள் காரணமாக மருந்துகள் கிட்டாமற் போவதை தவிர்க்க வேண்டும் என்று வாதிடும் இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு சாதகமாக உள்ளன. லத்தின் அமெரிக்க நாடுகளுடான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா உரிமங்கள் குறித்த விதிகளை அந்நாடுகள் அமெரிக்காவில் உள்ளது போல் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியிறுத்தி, அது ஏற்கப்பட்டால் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.

———————————————————————

ravisrinivas@rediffmail.com

Series Navigation