மூடல்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

ஆபிதீன்


1

மாந்தீரிக யதார்த்தமெல்லாம் இல்லை; நிஜமாகவே இருண்டு திரண்டிருந்த பெரும் கருமேகம் ஒன்று கடைசியாக விமானத்தினுள் நுழைந்தது. மூடலாமா கூடாதாவென்ற விவாதங்களில் கலந்து கொள்ள வந்திருக்குமோ ? தெரியவில்லை. ‘டக் ‘கென்று விமானத்தினுள்ளிருந்த அத்தனை விளக்குகளும் அணைந்தாற்போன்றிருந்தது மட்டும் உண்மை. இருட்டு, இந்த மேகத்தின் குணம் மட்டும்தானா ? யார்மேலும் அதன் பக்கங்கள் பட்டுவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன், படு அதிகாரமாக , ‘தேக் kகர் ச்சலோ…! ‘ ( ‘பாத்துப் போ..! ‘) என்று சத்தமிட்டபடி அணைத்து வந்த அதன் பாதுகாவலருடையதுமல்லவா ? எதையும் நாம் துல்லியமாகச் சொல்லவே முடிவதில்லை…

அத்தனை பயணிகளும் ‘இது அதிசயமில்லை ‘ என்று அமர்ந்திருக்க , எழுதுகிறேன் என்று கிறுக்கும் எனக்குப் (சரியாகச் சொன்னாய்!) பக்கத்து வரிசையில் , ஒரு சீட் முன்னதாக , மேகம் படர்ந்து உட்கார்ந்தது என் யோகமென்றே சொல்ல வேண்டும்.

துபாயின் நவீன விமான நிலையம் அதிநவீனமாக ஆறு கிலோமீட்டர் தூரம் பயணிகளை எஸ்கலேட்டரிலேயே நடக்க விடுவதில் களைத்துப்போயிருந்த நான் , அப்போதுதான் விமானத்தினுள் நுழைந்து , என் இடத்தை ஒருவழியாகத் தேடி, சூட்கேஸை ஜாக்கிரதையாக வைக்கிறேன் பேர்வழியென்று ஓரிரு தமிழ் தலைகளைப் பதம் பார்த்து திட்டுவாங்கி, கேபினில் ஒருவழியாக வைத்து மூடி, அதை போகும் வரை வாகாகக் கண்காணிக்கவும் (பெட்டியில் ஒரு ஜட்டிவைத்திருக்கிறேன்) வெளியில் மிதக்கிற வெண் மேகங்களைப் பார்க்கவும், ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த அரபியிடம் தமிழில் பேசி அவரை நகரச் சொல்லிவிட்டு , அவர் நகராததால் ‘ரொம்ப டேங்க்ஸ்ங்க..! ‘ சொல்லியிருந்தேன். ‘அல்லாவே..இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பொழைப்பு.. ‘ என்று புலம்பிக்கொண்டே உட்கார்ந்தாலும் இன்னும் நடந்து கொண்டிருப்பதுபோலவே உணர்வு.

‘அரபி ‘க்கோ, ‘கந்துரா ‘ போட்டும் கூட ‘ஜந்துறா..! ‘ண்டு கண்டுக்கிட்டானே.. ‘ என்ற கடுப்பு

அரபியா! உன்னைத் தெரியாதா ? முகத்தில்தான் எழுதி ஒட்டியிருக்கிறதே ‘சபராளி ‘ என்ற சவக்களை. இன்னும் நீ அரபியல்ல என்று ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்கு கந்தூரா பாக்கெட்டில் கையை விட்டால் போதும். கொஞ்சம் பொட்டுக்கடலை வரும். எதற்கு இந்த பந்தா உனக்கு ? அதுவும் நாயாய் நடத்துபவனிடமிருந்து கொஞ்சநாள் விலகி நாயகியைப் பார்க்கப் போகிற நேரத்தில் ?

அரபு நாட்டின் தூசிப்புயல்களுக்காக அவதரித்த உடையை நீ அவனியெங்கும் பரப்ப அவசியமென்ன ? அவசியமெனில் ஒட்டகத்திலேறியல்லவா ஊர் போகவேண்டும் ?

நீயாவது பரவாயில்லை. ஏதோ ஆசையில் போட்டவன்போல் தெரிகிறது. சிலர் ஊரிலியே கலர் கந்துராக்களில் – சமயத்தில் அதே கலரில் தொப்பியோடு – வளைய வருவார்கள். ‘உம்மாடி..அரபி மாதிரியே இக்கிறாஹாம்மா..! ‘ என்று பொண்டுவ பெருமூச்சு விடுவார்களாம். அவர்கள் ஓவராக விட்டதால்தான் நாம் ஒட்டகம் மேய்க்கப் போனோம் என்பது இருக்கட்டும்; ‘ஜைன்..ஜைன்.ஜைன் ஜைன். ‘ என்று ஆசுரா பஞ்சாபோல ஆடிவரும் வார்த்தையைத் தவிர வேறெதுவும் தெரியாதவரெல்லாம் அரபியா ? மிஞ்சி மிஞ்சிப் போனால் புணரும்போது ‘மோய் ஈஜி அல்ஹின்.. ‘ என்று இவர்கள் முடித்தால்தான் உண்டு! நல்ல வேடிக்கை.

ஊரில் இறங்கிய இரண்டாம் நாளே அடகுக் கடை எங்கேயிருக்கிறது என்று அலைந்தாலும் அரபி டிரஸ்-ஐ மட்டும் ஏனோ சிலர் விடுவதில்லை.

மைக்கேல் ஜாக்ஸன் பிரபலமாக இருந்தபோது அச்சு அசலாய் அவனே போன்று நடையுடைகளுடன் என் நண்பனொருவன் சைக்கிளில் வருவான் ஊரில். பெயர் ஜகன். ‘சைக்கிள் ஜக்ஸன் ‘ என்றால்தான் திரும்பியே பார்ப்பான். ‘ஓய்..ஜாக்ஸன் மாதிரி பாக்குறக்கு இக்கிறியும், சரி. ஜாக்ஸன் மாதிரி இங்கிலீஸ் பேசுவியுமா ? ‘ என்று மாமா கேட்டதிலிருந்து உறவு ‘கட் ‘!. ‘நாமாக நாம் இருக்க வேண்டும் ‘ என்று நாளும் தத்துவம் பேசும் மாமாவே ஒ-ஸாமா போல்தான் இருப்பார். ‘அடியொற்றி நடக்க முடியாவிட்டாலும் முடியொற்றி நடப்பவர்கள் ‘ என்று ஒரு வழுக்கை எழுத்தாளன் கிண்டல் செய்தது அவரைத்தான்.

‘தாடியை ‘ட்ரிம் ‘ பண்ணுனா என்னா மாமா ? ‘

‘பைத்தியம். சிங்கம்லாம் ‘ட்ரிம் ‘ பண்ணிக்கிட்டா இக்கிது ? ‘ – முடியை கோதியபடி கர்ஜித்தார். காக்கா கத்துவது போல் இருந்தது. சபர் முடிந்து வந்த அவருக்கு சல்லிக்காசு கூட கொடுக்காத மாமி தொண்டையில் உட்கார்ந்திருந்தார்கள்.

அவரை விடுங்கள்; ஊர்போகிறவர்கள் அந்தந்த ஊர்/நாட்டு வழக்கப்படியும் கலாச்சாரப்படியும்தான் உடையணிந்து போக வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. சில ஊரில் கெளபீனம் மட்டுமே ஆண்களின் உடையாகவும் அதையும் தலையில் கட்டிக் கொண்டுதான் நடக்க வேண்டும் என்பது ஊர்ச் சட்டமாகவும் இருந்தால் என்னாவது ? விமானம் பறக்க வேண்டாமா ? ஏற்கனவே சோழன் டவுன்பஸ் மாதிரி ‘மஹாராஜா ‘வின் அத்தனை சாமான்களும் ஆடுகின்றன (அப்படிக் குனிந்தால் இப்படித்தான் ஆகும் மன்னா!). இந்த லட்சணத்தில் டிக்கெட் விலைக்காக சேட்டன்கள் வேறு போர்க் கொடி தூக்குவதில் (சட்டைப்பையில் எப்போதும் இருக்கும்) இனி நின்றுகொண்டு ஊர்ப்போக வேண்டியிருக்கலாம்.

உடை மட்டும் அவரவர் இஷ்டம். அட, இதற்குக் கூட சுதந்திரம் இல்லையென்றால் ?

அதற்காக மற்றவர்களை அதிர்ச்சியடையவும் வைக்கக் கூடாது!

பத்து வருடங்களுக்கு முன் , அல்-கோபர்-ன் (செளதி) அமெரிக்க கேம்ப்பில் விழா ஒன்றிற்கு போயிருந்த என் கஃபில்தான் சொன்னான். அவனை அழைத்தவரின் மனைவி , உடம்பெல்லாம் மூடியிருக்க புட்டத்தை மட்டும் இட்டத்திற்கு திறந்து வைத்திருந்தாளாம். அவள் ‘திட்டத்தில் ‘ மெள்ள என் அரபி கைவைத்து , காரணம் கேட்டதற்கு ‘அதிர்ச்சிக்கல்ல; அழகுக்கு! ‘ என்று ஃப்ரெண்ட்லியாக ஒரு ப்ரெஞ்சுக்காரி விளக்கியிருக்கிறாள்!. இதெல்லாம் ஓவர் , இல்லையா ? (இதையே ‘ஹிந்தி ‘ காட்டினால் ‘வட்டத்தை ‘யும் சேர்த்து அறுத்து விடும் சட்டம்!). இப்போதோ அந்த நகரம் துபாயையே மிஞ்சுவதாக கேள்விப்படுகிறேன்.ஆனால் பெண்கள் மட்டும் கார் ஓட்டக் கூடாது! ‘பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் ‘ என்ற இறை வசனம்தான் காரணமென முகமூடியரசு முன்மொழியலாம். அப்படியானால் ஆண்களுக்குப் போட்டியாக பாதசாரிகளின் மேல் கார் ஓட்டும் அடுத்த அரபு நாட்டுப் பெண்கள் மட்டும் காஃபிர்களா என்று கேட்டு என்னைக் கலவரப்படுத்தாதீர்கள்.

எங்கோ ஓடுகிறேனே…உடை பற்றியா சொல்லிக் கொண்டிருந்தேன் ? மாற்றமான கருத்து ஒன்றைச் சொல்லும்போது ‘சும்மா பொத்திக்கிட்டிருங்க… ‘ என்று சொல்வார்களே..அதுபோல இருந்தால் சரிதான்!

மனிதர்கள் அனைவருக்கும் பொருத்தமான ஒரு உடை (ஒரே உடையும் நல்லது!). கனவிலாவது இயலுமா ? பிரேம்ரவாத் , டிஜிடல் துல்லியத்தோடு குறிப்பிடும் அமைதியெனும் அற்புத உடை அழிந்தோ நாளாகிறது. என்னதான் செய்ய முடியும் ? Hyatta Regencyயின் ice-ringஐ பார்ப்பதற்குப் போனால் ‘பாகிஸ்தானியின் 48 மீட்டர்சல்வார்-கமீஸூம் சரியான உடையே; கைலி கட்டுபவன் மட்டும் வேண்டாம் ‘ என்றால் கோபம் வரத்தான் செய்கிறது. ஒரு லுங்கி , ரொம்பவே பொங்கி, கலவரமே செய்தது: ‘அவன்களுக்கு அது தேசிய ஆடைண்டா எங்களுக்கு இது! ஆகவே வுடனும் ‘. ஹோட்டல், தங்களின் பச்சைப் புல்வெளிகளில் வளரும் இச்சை எறும்பை வுட்டது. எளியவர்கள் உட்காரக் கூடாதென்பதற்காகவே ஒரு ஏற்பாடு! கப்சிப்! ‘என் காக்காவே கட்டெறும்பு உம்மைப் கடிக்குதா ? ‘ – பாட்டு.

முழங்கால் வரை மட்டுமே வரும் தோப் அல்லது மடித்த கைலியை உடுத்தி (கூடவே இடுப்பில் ஒரு கத்தி) மஸ்கட் அரபி வந்தால் விடாதா நிர்வாகம் ? பணம் எதையும் மூடும். மூட மூடப் பணம்! அக்கினி வெயிலானாலும் ஆங்கிலக் கோட்டு போடுவதும் அதற்குத்தான். சீசா பலகை போல நவீன பெண்கள் எப்போதுமே எதிர்! அவர்கள் மானாகுண்டிலிகோவாவாக மாறி வருகிறார்கள்.

அவளை நினைக்கும்போது என் மாமி சொன்னது ஞாபகம் வருகிறது. இடுப்புக்கு மேல் தொங்கும் குட்டைப் பாவாடையோடு குதித்தாடியவள், பந்தை எடுக்கும்போதெல்லாம் பரவசப்படுத்தினாள். மயிரினும் மெல்லிய ஜட்டியைப் பார்த்து மந்தகாசம் புரிந்தது டி.வி.

‘ஜட்டியும்தான் எதுக்கு இந்த ஹைவானுக்கு ? ‘ – மாமியின் குரல்.

‘ஜெயிச்சபொறவு கழட்டுறதுக்குத்தான் ‘ என்றேன். மாமி ஓட்டம்! ‘ஹூம்..நல்ல மருமவன்; நல்ல மாமியாரு ‘ என்று இடித்தாள் என் மனைவி.

‘மறப்பு எதுக்கு மாமிக்கு ? நான் மறு-மவன்தானே புள்ளே..! ‘

‘ஆஹா, ரொம்ப பாஷை படிக்காதீங்க. அடிச்சே கொன்னுடுவேன் ‘. ‘அடிச்சே ‘வில் அநியாய அழுத்தம்!

மார்பில் முடியிருக்கும் மார்டினாக்களுக்கும் மன்றாடினாலும் மூடும் மேகத்திற்கும்தான் எவ்வளவு தூரம்! அடர்ந்த மேகத்தைப் பார்த்தாலே எங்கள் ஊர் எட்டு கெஜத் துப்பட்டிகள் ஞாபகம்தான். ‘வெள்ளைதான் எனக்குப் புடிச்ச கலரு! ‘ என்று எப்போதோ பாடிவிட்டேன், தெரியுமோ ? இப்போதெல்லாம் அவைகள் மெள்ள மெள்ள அழிந்து கொண்டு வருகின்றன. ‘உம்மனம்மா ‘ மாதிரி அந்த துப்படிகளைப் போட்டு அசிங்கப் படுத்துவர்களை மிதிக்க வேண்டுமென்று வெறி வந்த கல்லூரி காலம்….ஊர் வந்தால் ஃபிகர்கள் கண்ணைப் பறிக்கும் வெள்ளைத் துணியில், மையிட்ட மயக்கும் கண்களை மட்டும் காட்டிக் கொண்டு ( ‘உடலின் இரு ஜன்னல்கள் ‘ – மெளலானா தல்வார் ஹூசைன் சயீதி), துப்படிக்கு உள்ளே உள்ள கைகளை அப்படியே இடுப்புப் பக்கத்தில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு நடப்பார்கள் விஷேச நேரங்களில். உற்றுப்பார்த்தால் எங்கள் ‘ஹாஜத் ‘ நீங்க பீஜூத் நடனம்! இதில் பணக்கார வீட்டுப் பெண்கள் தங்கத்தை காட்டுவதற்கென்றே அடிக்கடி அங்கத்தை வெளியில் நீட்டி ஆட்டுவார்கள் ‘கலகல ‘வென்று.

ஆடுவது நம் இதயம் மட்டுமா ?

‘போட்டே இப்படிண்டா போடாம இந்தா என்னாவும் ?! ‘ என்று ஒரு போடு போடுவான் ஹமீது. தூ.. பட்டி!

இந்தக் கருமேகம் பார்த்தால் கருத்தென்ன சொல்வான் என்று அவன் நினைப்பு வந்தது. மேகம் இப்போது மெள்ள மிதந்து டாய்லெட்வரை போனது எந்த சீட்டும் இடிக்காமல். அழைத்துக் கொண்டு போனார் அவர். அல்லது சங்கிலியால் பிணைத்திருந்தாரா ? இருக்க முடியாது. கதவை சாத்திவிட்டு டாய்லெட்டுக்கு வெளியில் அவர் நிற்கிறார் பாதுகாப்புக்கு. சரி, அவர் டாய்லெட் போனால் மேகம் வெளியில் தனியாக நிற்குமே ?

என் பாட்டியாவும் இந்த மேகம் மாதிரிதான் இருந்தார்கள். ஆனால் பழுப்புமேகம். பத்துக்கு மேல் எண்ணத் தெரியாதென்றாலும் ‘விண்ணுக்கு மேலாடை ‘யை விரும்பிக் கேட்கும் மேகம். குஞ்சுமைதீன் கடையில் இருக்கும் கழுவவேபடாத , ஆனமுள்ள ஏனம் மாதிரி (கேரளாவிலிருந்து 70 வருஷங்களுக்கு முன் வந்தபோது அவனுடைய வாப்பா கொடுத்த பழைய ஏனம் அது – கழுவாமல்!) துவைக்கவே படாத துப்பட்டி. எத்தனை அழுக்கானால் என்ன, அதில் உயிர்ப்பூவின் வாசம் இருக்கிறது.

பாட்டியா ‘ஹயாத் ‘தாக இருந்திருந்தால் பேத்திகள் அழகான சுடிதாருக்கு மேலே அழகென்று தடிதாரைப் பூசுவதில் அகமகிழ்ந்துதான் போயிருப்பார்கள். சரியாக வளர்த்தால் சத்தியமாக சொர்க்கமல்லவா! மூடுவதற்குத்தான் எத்தனை அலங்காரங்கள்!

‘திறந்து போட்டுக் கொண்டு ‘ ஜியாரத்திற்காக டூரிஸ்டில் வரும் பெண்களைப் பார்த்தால் பாட்டியா எரிந்துதான் விழுவார்கள்.

‘தரிபியத் ‘ இல்லைடா தம்பிவாப்பா! ‘

‘மூடியிக்கிறதுதான் ‘தரிபியத் ‘ண்டா நாங்கள்லாம் பொறந்திக்கவே மாட்டோமே! ‘ . பாட்டியாவிடம் எதுவும் பகிரமுடியும் நான். தாயிடம் பேசத்தான் தயக்கம்.

‘அதப்பியம் பேசாதே படிய வுளுந்துடுவா…எதுக்கு எது சொல்றது ? தொறக்கற நேரத்துலெ தொறந்துதான் வைக்கனும். அது ‘துனியா ‘!. ‘ – பாட்டியா ரகசியம் திறந்தார்கள்.

‘துனியா இல்லே. துணியா! ‘

வேறென்ன சொல்லி விலக முடியும் நான் ? யா ரஹ்மானே, முடிவைச் சொல். நீயோ துத்திப்புக்குள் இருப்பவன் – உள்ளே உள்ளது குருமாவா அல்லது – மாப்பிள்ளைத் தோழன்களை கிண்டல் செய்வதற்கு வைக்கப்படுவது போல் – வெறும் முள்ளா என்று குழம்ப வைத்துக் கொண்டு. திறக்கவும் கூடாதென்ற கட்டளை. மூடியிருக்கும்வரைதான் ரகசியமென்றா ? அப்படியெனில் உன்னை விட துத்திப்புதான் தித்திப்பு. துதிப்பும் கூட.

ஒன்றை இன்னொன்று; அதை வேறொன்றென்று மூடி மூடி முட்டாளாக்கும் உலகம் (ஏன், இந்த உடலும் என்னவாம் ?) மெளனிக்க வைத்தாலும் ‘இஸ்லாம் என்ன துப்பட்டிக்குள்ளா இக்கிது ? ‘ என்ற கேள்வியை மட்டும் என்னால் மூடி வைக்க இயலவில்லை.

‘ஊர்ப்புள்ளையிலுவ போல ஒசுபா இல்லாம இவன் மட்டும் என்னா இப்படி அதபு கெட்டுப் போயி..! ‘ – பாட்டியாவுக்கு சங்கடம். ஆனாலும் மெல்லச் சொன்னார்கள் காரணத்தை. அதைக் கேட்டதும் என் முகமும் ஞாபகம் வந்து விட்டது!

சென்னையில் தங்கி கைலி கம்பெனிகளுக்கு Tricolor லேபிள் டிசைன் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் முதலாளி ஷேக் காக்காதான் அடிக்கடி சொல்வார் என்னிடம் : ‘தம்பிவாப்பா, உங்க பல்லை கொஞ்சம் சரி பண்ணுங்களேன்.. ‘

‘பளீர் ‘ வெள்ளையுடன் பளபளக்கும் அவர் பல்லைப் பார்த்து நான் சொல்வேன் : ‘சும்மா இருங்க காக்கா.. ‘பல்லாலெயா வரையிறேன் நான் ? ‘

‘அதுக்கில்லெ…பாக்க அலஹா இரிக்க வாணாமா ? கம்பி கட்டுனா கொஞ்ச நாள்லெ சரியாயிடும்லெ ? ‘

டிசைனுக்கு காசு வராது. டிசைன் செய்ய Rotring Penம் வராது. ஆலோசனை மட்டும் அள்ள அள்ள வரும்.

அந்த காக்கா ஒருமுறை ஜியாரத்திற்காக என் ஊருக்கு போய் அப்படியே என் வீட்டுக்கும் போய் மூன்று ரூபாய் பத்து காசு கொடுத்துவிட்டு வந்ததும் ஏனோ என் பல்லைப் பற்றி பேச்சே எடுக்கவில்லை. எனக்கே எப்படியோதான் இருந்தது. ஈறுகளும் சேர்த்துத் தெரியுமாறு நான் சிரித்துக் காட்டியும் ‘உம் ‘மென்றே இருந்தார். நானாக ‘கம்பி.. ‘ என்று துவக்கினால் ‘சூ, அதை வுடுங்க தம்பி.. டிசைன் பத்திப் பேசுவோம். அந்த.. மஞ்சள்லெ நீலம் உக்காரும்போது… ‘ என்று தவிர்த்தார்.

வெட்கப்படாமல் ஒருநாள் கேட்டே விட்டேன் அவரிடம். ‘ஏன் காக்கா இப்பல்லாம் பல்லுகம்பி பத்தி எதையுமே பேசமாட்டேங்கிறீங்க ? ‘

தன் பல்செட்டைக் கழட்டிவிட்டுச் சொன்னார் : ‘ ஒரு ஆளுண்டா பரவாயில்லே..ஒங்க குடும்பமே அப்படித்தான் இக்கிது! என்னா செய்யிறது ? அல்லாட படைப்புண்டு அப்படியே அக்குசெப்டு பண்ணிக்க வேண்டியதுதான்! ‘

பாட்டியா சொல்லும் காரணம் உண்மைதானா ? தெரியாமல் மஹா குரூபியை கல்யாணம் கட்டி, அவள் தன் ‘வித்தை ‘யைக் காட்டியவுடன் (அதுதாங்க அன்பு!) ‘அவ மனசுலெ மயங்கிட்டேன்.. ‘ என்று அசடு வழிய ஆண்கள் சொல்வதை ஊரில் நாம் கேட்டதில்லையா ? மூடாத பெண்களுக்கெல்லாம் கல்யாணமே நடப்பதில்லையா ? நிர்வாண சுந்தரிகளை க(ா)ட்ட அல்லவா நித்தமும் அலைகிறது உலகம்! இந்தப் பக்கம் பார்த்தால் ‘பங்கரை ‘யான என்னைப் போன்ற ஆண்களை , மூடியிருந்தாலும் சல்லடைக் கண்கள் பார்ப்பதில் சங்கடமுண்டே!

‘முதல்லெ மனசை ஒழுங்கா வச்சிக்க தெரியனும். நம்பனும். மத்ததுலாம் அப்புறம்தான்! ‘ என்றேன் பாட்டியாவிடம்.

‘உன் நூதனத்தையிலாம் ஒன் பொண்டாட்டிட்டெ வச்சிக்க ‘

‘ஹயாத் பாக்கியிந்தா நீங்க பாக்கத்தான் போறீங்க. எனக்கு வர்றவளை புர்ஹா, துப்பட்டி இல்லாமதான் வச்சிக்குவேன். வெளியிலேயும் கூட்டிட்டுப் போவேன் ‘ – துணிந்து சொன்னேன். நடமாடும் கூண்டாக மாற நாயன் சொல்லவேயில்லையே..! அழகென்பது குழப்பமான சொல்லென்று ‘அடோனிஸ் ‘ சொல்லாமலேயே தெரியும் எனக்கு!

‘தம்பலச்சியை கட்டிக்கப்போறாரு போலக்கிது தம்பி! இந்த மொஹரக்கட்டைக்கி அதுதான் கெடைக்கும் ‘ –

என்னமோ இவர்களிடம்தான் ‘பவுனில் செய்த பண்டம் ‘ இருப்பது போல் என்ன ஒரு ஏளனப் பேச்சு! யாராக முதலில் இவர்கள் இருந்தார்கள் ? சே, என்னைப் போன்ற பல்லன்களெல்லாம் இந்தக் கிழவிகளை எதிர்த்து பேசவும் முடியாது. ஆனால் பல்லன்களிடம் மாட்டப்போகும் மணமகள்களின் கற்பனையோ வர்ற மாப்பிளையிலாம் நடிகன் கமல்ஜீத் மாதிரி இருக்கனும் (யூசுப் நபி எல்லாம் பழைய பேஷன்!) என்பது! அவன் சப்பாணியாக இருந்தாலும் சரிதான்.

பொத்திக்கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனால் பல்லை விட வேறொன்று எப்போதும் வெளியில் நீட்டிக் கொண்டு நிற்கிறதே..! என்ன செய்வது ? இருக்கட்டும். கல்யாணமான பிறகு என் புரட்சிக் கனவுகளை நனவாக்கியே தீருவேன். நான் தீர்ந்தாலும் சரிதான்! அவள் எப்படிப்பட்ட ஆலிம்ஷா வீட்டு பெண்ணாக இருந்தாலும் சரிதான்!

மனிதனை சோதனை செய்வதில் ஆண்டவனுக்கு இருக்கும் ஆனந்தமே தனிதான். எனக்கென்று அனுப்பி வைத்தான் பாருங்கள் ஒருத்தியை எட்டு கெஜ துப்பட்டியோடு!

2

கருமேகம் இப்போது சாப்பிட ஆரம்பித்தது. என்னைக் கண்கலங்கவைத்த ‘காந்தஹார் ‘ படத்தில் (இயக்கம்: Mohsen Makhmalbaf) முடிவற்ற கொடூரமான பயணத்தின் நடுவில், புர்காவின் உள்ளே சிறு கண்ணாடியை நுழைத்து தன்னை அலங்காரம் பண்ணிக் கொள்ளும் நஃபாஸ் ஞாபகம் வந்தாள் ஏனோ. சாதா மனிதர்களின் அவஸ்தைகள் இந்த மேகங்களுக்கு புரியுமா ? அல்லது சொல்லப்படவில்லையா ? யாரும் பார்க்காமல் எப்படி இது எடுத்து சாப்பிடும் (வாய் இருக்கிறதா ?) , உள்ளே ‘பரகா ‘ எனப்படும் மூக்குக் கவசமுண்டா என்று பார்க்கக் குறுகுறுத்தாலும் நாகரீகம் கருதி பார்க்கவில்லை. தன் ‘சொந்த ‘ மேகம் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் ஷோக்காக அதன் பாதுகாவலர் விழுங்குவதை மட்டும் சற்று எட்டிப் பார்த்தேன். என் வாயின் அகலத்திற்கு சற்றும் குறைவில்லை!

பக்கத்து ‘அரபி ‘யைப் பார்த்தேன். அவர் சூப்பராக சோற்றில் breadஐப் பிசைந்து முடித்து ஏனோ தனியாக டாயை அருந்திக் கொண்டிருந்தபடி என் தட்டைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஐயோ!

‘ஐயோ..! ‘ என்றாலே அஸ்மா அடிப்பாள் (டாயே..அதுக்குத்தான் வர்றேன்!)

‘அதென்ன தம்பலவன் மாதிரி ஐயோங்குறது ? ‘அல்லா ‘ண்டு சொல்லுங்க மச்சான்! ‘

‘அல்யோ! அல்யோ! ‘

என் கல்யாண தினத்தில் ஒரே ஆண்டவன் நினைப்புதான்! ‘இறைவனின் அழகிய முக்காடை மணமகனே விலக்க முடியும் ‘ என்றுவரும் ஒரு உருதுக் கவிதையின் நினைவு (இதற்கு ஒரு சூஃபிஸ முக்காடு!). ஆனால் அஸ்மா , ஆலிம்ஷாவை விட முரண்டு பிடிப்பவளாக இருந்தாள் புரிதலில். ‘அங்குமிங்கும் சாயும் ஒட்டகத்தின் திமில்போல நரகத்தில் (சரியாக உடையணியாத பெண்களின்) தலை இருக்கும் ‘ என்ற ஹதீஸ் (நபிமொழி) தந்த பயம்.

‘யா அல்லாஹ்.. ஸூரா சூரா நூர்ஐயும் ஸூரா அஹ்ஜாப்ஐயும் சரியாக விளங்கிக்கொள்ளாத ‘பண்ணை ‘யிடம் ஒப்படைத்து விட்டாயே என்னை. உன்னை… ‘ – பல்லைக் கடித்தேன்.

ஆண்டவன் செவிசாய்ப்பவன். இடதா வலதா என்று தெரியவில்லை. ஆனால் சாய்ப்பவன். உண்மைதான். ‘பண்ணை ‘ , மேய்க்க ஆரம்பித்து விட்டது! நல்லவேளையாக துப்பட்டியோடு படுக்கவில்லை அஸ்மா!

‘மாற்றத்தை , அது அறியாமல் மாற்றவேண்டும் ‘ என்று சூரியனில் உட்கார்ந்தபடி சுந்தாம்ஸ்கி சொல்லியிருப்பதால் அடுப்பாக உடல்கள் மாறும் எடுப்பான சமயத்தில் ‘வெளியில் போகும்போது அரை துப்பட்டியாவது போடேன் புள்ளே ‘ என்று அற்புதமாகக் கெஞ்சினேன். அடுத்து நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. ஆதரவு வேண்டும்!

‘ஊஹும். ‘ஒண்ணு அள்ளுது இன்னொன்னு அரைக்கிது ‘ண்டு ஹயாத்தலிவானுவ பேசுவானுவ! ‘

‘மெஷிண்டா அப்படித்தான்! ‘ – மூச்சிரைக்க மெல்லச் சொன்னாலும் அவள் சொன்னதில் உண்மையில்லாமல் இல்லை. நானே கல்லூரி காலத்தில் அம்மாதிரி கிண்டல்களை பண்ணியிருக்கிறேன். இப்போது நான் கூட்டிக்கொண்டு போகும்போது அப்படி ஒரு comment கேட்டால் என்னாவது ? எனக்கோ வீரம் என்றாலே தூரம். செருப்பால் என்னை நான் அடித்துக் கொண்டால்தான் உண்டு!

இவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அன்னை ஆயிஷா நாயகம் , அன்னை சஃபியா சம்பந்தமான ஹதீஸ்கள்..

‘உங்களை புத்திசாலிண்டுலெ சொன்னாஹா..! ‘ என்று அறைந்தாள்.

அடிப்பாவி , தெரிந்து விட்டதா உனக்கும் ?! முக்காடு போடாதவள் அடிமை என்றால் அடிமை, சுதந்திரமாக இருந்திருக்கிறாள் என்று அர்த்தம் இல்லையா ? போகிறபோக்கைப் பார்த்தால் எனக்கு துப்பட்டி போட்டுவிடுவாள் போலிருக்கிறதே! இவள் போடாவிட்டால் என்ன , சாவெனும் முக்காடுதான் சார்ஸ் என்றும் சார்ஸ்புஸ்ஸென்றும் சதா அலைகிறதே…. ஹலோ மலக்குல் மெளத்!

நல்லவேளையாக வெளியில் போகும்போது தனியாக அவளை (துப்பட்டியோடுதான் !) அழைத்துப்போகும் புரட்சிக் கனவை நனவாக்கினாள். அதற்கு ஒத்துக்கொண்டதே எங்கள் ஊரில் பெரிய விஷயம்தான். கல்யாணமானாலும் ‘ஒத்தத் துப்பட்டி ‘யோடு பெண்கள் போக முடியாது. எந்தப் பெண்ணும் ஒரு பெண் துணையோடுதான் போவார்கள். அப்படிப் பார்த்தால் நாலு பெண்டாட்டி கட்டியவரின் பெண்கள் , எட்டு பெண்களாக போக வேண்டி வருமோ ? கணக்கெடுப்பது சிரமம். அதெல்லாம் தெம்புள்ள வம்பர்களின் சமாச்சாரம். நமக்கெதற்கு ? இங்கே ஒன்றைத் தணிப்பதற்குள்ளேயே உள்ளெல்லாம் உதறி ஒடுங்குகிறது. ஸ்ஸ்ஸ்….!

தனியாக நாங்கள் அப்படி வருவதை தெருவில் பார்த்தவர்கள் உம்மாவிடம் வத்தி வைக்கப் போய் பொசுங்கிப்போனதுதான் மிச்சம். நானே எதிர்பார்க்கவில்லை! உம்மா ரொம்பவும்தான் மாறிவிட்டார்கள்!

‘அவன் பொண்டாட்டியோடதான் வர்றான். வரட்டுமே..நாங்களுவதான் விதியத்துப் போய் வூட்டுலேயே கெடக்குறோம். எங்க மாப்புள்ளைமார்க்கும் தஹிரியம் இல்லை.. ‘

ஆஹா! இனி அடுத்த முயற்சிதான். என் நண்பரொருவன் ஒரு பிராமணைப்பெண்ணை காதலித்து அவளை முஸ்லீமாக மாற்றி கல்யாணம் செய்தும் அவளை துப்பட்டி இல்லாமலேயே ஊரில் வலம் வரச் செய்தான். இதை மட்டும் ஊர் சகித்துக் கொண்டதற்கு நான்கு காரணங்கள்:

1. அந்தப் பெண் பேராசிரியர். (இஸ்லாம் பத்தி புத்தகம் எழுதுங்கம்மா..!)

2. ஒரு காஃபிரை இஸ்லாத்திற்கு கொண்டு வந்தான். (ராமகோபலனுக்கு செம அடி!)

3. அந்த அம்மா இன்னும் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளவில்லை (அல்லா சீக்கிரம் மாத்திடுவான்!)

4. நண்பன் வற்றவற்றக் குறையாத பணக்காரன். அதாவது தர்கா டிரஸ்டி!

இந்த நான்குக்கும் எனக்கும் சம்பந்தமில்லையானாலும் வேதாளத்தையே இறக்கியே தீருவேன். அப்போதுதான் நான் ஆணாதிக்கவாதியில்லை. ‘திண்ணியம் ‘ ஒதுக்கி பெண்ணியம் பேசும் புண்ணியரும் பாராட்டுவர்.

‘அஸ்மா, எப்ப இதையிலாம் தூக்கியெறியப்போறே ? ‘

அஸ்மா என்னை தீர்க்கமாகப் பார்த்தாள்.

‘நாங்கள்லாம் உசுரோட இக்கெ வாணாம் ? ‘ என்றாள்

‘ ? ? ? ‘

‘நம்ம பாளையம் , மூஞ்சிலெ ‘ஆசிட் ‘ ஊத்துனா என்னாவுறதுண்டு கேட்டேன் ‘

‘!!! ‘

‘ஆத்திர அவசரத்துக்கு ஒடனே வரமுடியாதே ஒங்களாலே மச்சான் அப்ப..! ‘

‘அதனாலெ ? ‘

‘அதனாலெ அல்ல, எதனாலேயும் ஊரோட ஒத்துத்தான் போவனும்மா.. ‘

அந்த பதில் என்னைப் பொசுக்கியது. இரண்டு வருடத்தில் ஒருமாதம் ஊரில் இருக்கிறவன் ஊராரை மதிக்காமலிருப்பது முட்டாள்தனம். இல்லையேல் கலவரங்களின்போது காப்பாற்ற மாட்டார்கள். ஊரின் பயத்திற்குக் காரணமுண்டு என்றாலும் தனித்துத் தெரிவதே பிரச்சனையாகிறதே! சல்லியூரிலிருந்து பெண்கள் சாரைக்காலுக்கு பஸ்ஸில் போய்த் திரும்புவது இப்போதெல்லாம் சாதாரணமாக இல்லைதான். வேறுஇனத்து நாகங்கள் விரட்டிக் கொத்துகின்றன. தனியே ஆட்டோவில் போனாலும் தர்மம் மீறுகின்றன. தப்பியோடி எங்கே போய் நின்றாலும் நின்ற இடத்திலிருந்து நெருப்பு ஆறு பொங்குகிறது…

என் மன ஓட்டத்தில் மேகத்தின் நிழல் விழுந்ததில் பயந்தேன். இன்னதென்று அனுமானிக்க முடியாத உருவங்களில் ஒரு பேய் உலா வந்தால் பயம் வராமல் என்ன செய்யும் ?

முழுத் துப்பட்டியைப் பார்த்தாலும் பேய் ஞாபகம்தான். ஆனால் சிரிப்பு காட்டும் பேய். சுற்றுப்புறத்திலுள்ள நெருக்கமான சொந்தங்களைப் பார்க்கத்தான் துப்பட்டி. அங்கேயும் வீட்டில் நுழைந்த உடனேயே அவர்களுக்கு கிடைக்கிற முதல் மரியாதை : ‘வாதனை…இந்த துப்பட்டியை வுட்டுத்தான் இரிங்களேன்மா..! ‘தான். அதாவது மூச்சு விடுங்கள் ராஹத்தாக!. சொந்தம் தாண்டினால் அதிக பட்சமாக ஐம்பது கிலோமீட்டர் வரை துப்பட்டி தாங்குமா ? எங்கே… ? டிரெயின் ஏறியதுமே ‘உம்மாடி.. ‘ என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் கழட்டி அடியில் வைத்துவிடுவார்கள் – பிளேனில் ஏறியதுமே ஜீன்ஸூக்கு மாறும் அரபிப் ‘பெங்குவின்கள் ‘ போல. இறங்குவது துப்பட்டி ஊராக இருந்தால் மீண்டும் மாட்டு துப்பட்டியை! இவர்களைத் துப்பட்டி இல்லாமல் கொஞ்சம் பார்க்கலாமென்றால் நத்தர்ஷா கந்தூரி நடத்தி நாலைந்து படங்களையும் பார்க்க வைக்கும் நகரம்தான் சல்லியூர் பையன்களுக்கு சாலச் சிறந்தது.

அங்கே ஆசையாய் பார்க்கப்போய் நான் அலறியடித்து ஓடிவந்த சம்பவங்களும் உண்டு. இதற்கா ஆசைப்பட்டாய் பாவகுமாரா ? பர்தா ஜோ உட்கயா தோ பே குல்ஜாயேகா..!

வருடங்கள் நிறைய ஆகிவிட்டன. அரபுநாடு வந்து ஆண்மை மறந்த நான், மறைப்பதே மனிதர்களுக்கு அழகென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். பாஸ்போர்ட்டும் பதாகாவும் இல்லாதவர்களை மறைக்க அரபிகளுக்கு புர்காக்கள் எப்படியெல்லாம் உதவுகின்றன! மதர்த்த முலை காட்டியலைந்த ‘மாதவிக்குட்டி ‘யும் இப்போது முழுக்க முண்டுடித்தி, முகமும் போர்த்தி , ‘சுரையா ‘ ஒரு குறையா ? ‘வென்று கேட்குமளவு பறைய வைத்துவிட்டாளே ! பாதுகாப்பு… மார்க்கம் வேறானாலும் சினிமா கதாநாயகிகளும் சில சமயம் அதைப்போட்டுக் கொண்டுதான் வில்லனிடமிருந்து தப்பிக்கிறார்கள் (கதாநாயாகர்களிடமிருந்தும்தான்!). முகம் காட்டி உடல் மறைத்தால் நன்றாகத்தான் இருக்கிறது. யாருக்கும் இடைஞ்சலில்லை.

அவர்களைத் தவிர ?

முற்போக்கு நண்பர்கள் , ‘உன்னைப்போல் ஒரு Hypocrite இருக்க முடியாதுடா… ‘You Fundamentalist..! ‘ என்று என்னை விளாசுகிறார்கள். அதிலொருவன், அவன் அலுவலகத்தில் இருக்கும்போது நான் அவன் வீட்டுக்கு போகக் கூடாதென்று தடை விதிக்கிறான். தனித்திருக்கிறாளாம் மனைவி. உலகத்துக்கே ‘சுப்பரா ‘ போடுவது போல ‘பேட்டா ‘ கட்டிய இன்னொருவன் உந்திச்சுழி காட்டிய உத்தமியை முந்தி உதைத்தவன். அடுத்தவன் , தன் மகளை பெண்கள் கல்லூரியில் விடாப்பிடியாகச் சேர்த்து அவள் பெண்கள் பஸ்ஸில் மட்டுமே போக வேண்டுமென்கிறான். நான்காகவன் மட்டுமே முழு புரட்சிக்காரன். கல்யாணமே செய்து கொள்ளவில்லை! ( அழகிப்போட்டியை ஆதரிக்கும் அம்மணிகளோடு கலவிசெய்தபடி ‘கலகம் ‘)~

இவர்களா எனக்கு ‘பட்வா ‘ வழங்குவது ? (பட்டுமாமாவை அழைப்பதுபோல் அப்படி எழுதுவதற்கே முதலில் நான் ‘ஃபத்வா ‘ வழங்க வேண்டும்!) ஆனால் முள்ளாகக் குத்தி உறுத்தல் ஏற்படுத்தியிருக்கிறார்கள். நன்றி சொல்லத்தான் வேண்டும் – முள்ளை முள்ளால் எடுக்க முடியாதென்று சிந்திக்க வைத்தததற்கு.

சிந்திப்பதிலுள்ள ஒரே சிரமம் ஆயுதங்களோடு திரண்டிருக்கும் எதிரிகளின் நினைவு முதலில் வருவதுதான்.

பின் யார் வேண்டுமானாலும் தலையில் துண்டு போட்டுக் கொள்ளட்டும். எனக்கென்ன ? நான் கதையின் இறுதிப்பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

விமானத்தின் உட்புறம், பணிப்பெண் மற்றும் பயணிகளின் அசைவுகள் அத்தனையையும் அங்குலத்திற்கு ஆயிரம் பக்கங்கள் வீதம் எழுதும் எழுத்தாளரிடம் மானசீகமாக ஒப்படைத்து விட்டு மேகத்தைப் பார்த்தேன். இன்னும் அதன் கருப்பு மாறவே இல்லை. ஒரு துளி கூட வெளிச்சம் பூசாத கருப்பு. எதிரில் பெரிதாகத் தொங்கும் மெல்லிய திரையின் பக்கம் அது திரும்பியிருந்த மாதிரி இருந்தது. அங்கே ‘மேக்மல்ஹார் ‘ பாடி மழையை வரவழைத்துக் கொண்டிருந்த அற்புதமான பாடல் முடிந்து ( உள்ளூர்க் குழாயில் மட்டும் ஒரு சொட்டு நீர் வரவழைக்கத் தெரியாத ராகம்!) மிகச் சரியான கோர்வையில் ‘ஆ.. இந்தா..! ‘ ஆரம்பித்திருந்தது பண்பாட்டைக் காக்க.

‘எப்படி இதைப் பார்க்க விடுகிறார் பாதுகாவலர், ஹராமல்லவா ? ‘ ( ‘என்ன ஒரே ஹராம்.ஹராம்..! ‘ – ஓவியம் வரைந்தபடி சதுரங்கம் ஆடும் ஒப்பற்ற நான் ஒப்பாரி வைத்ததற்கு ‘ஒப்பாரி வைப்பதும் ஹராம் ‘ என்றார் ஒருவர்!) என்று அவரைப் பார்த்தால் அவரோ குறட்டை விட ஆரம்பித்திருந்தார் – குடை மறந்து!

‘மஹாராஜா ‘ கொடுக்கும் நல்ல விஷயம் ‘ஜூகூப்ஸ ரஸம் ‘ கலந்த தண்ணி வகைகள்…

இப்போது திரையும் தூக்கப்பட்டு, விளக்குகள் அணைந்து, என்னையும் பைலட்டையும் தவிர மற்றவர்கள் உறக்கத்தில் கிடந்தார்கள். இல்லை. மேகமும் தூங்கவில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறது ?

என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறதோ ?

* ‘அல்லாஹூம்ம அரினல் ஹக் ஹக்கன் வ அரினல் bபாதிலன் bபாதிலா ‘ – எனக்கு மிகவும் பிடித்த துஆவை ஓதிக் கொண்டு கண்ணயர்ந்து , வழக்கம்போல என் பேகம் என்னைத் திட்டிய கனவொன்று வந்ததில் ( ‘ கைப்படம் இல்லேண்டா காலை வைக்காதிங்க! ‘) சோகம் கொண்டு விழித்துக் கொண்டேன். சென்னை வர இன்னும் ஒருமணி நேரம் இருக்கலாம். இப்போது எத்தனை கிலோமீட்டர் உயரத்தில் இருக்கிறோம் ? ரொம்ப அவசரம்! உடனே மூத்திரம் பெய்தாக வேண்டும் போலிருந்தது எனக்கு. முட்டிக் கொண்டு வந்தது முத்திரப்பை தெறிப்பது போல்.

வேகமாகப் போகிற நிலையிலும் மேகம் பார்த்தேன். இல்லை. ஆண்கள் , பக்கத்தில் போனாலே அடிப்பதுபோல முறைக்கும் அழகுக் காவலர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார் இன்னும். இவரை விட்டுவிட்டு மிதந்து மிதந்து எங்கே போயிருக்கும் இந்த மேகம் ?

பச்சையில் ‘vacant ‘ sign தெரிந்ததால் டாய்லட் கதவை அவசரமாகத் தள்ளித் திறந்தேன்.

கலைந்திருந்தது மேகம்.

(முற்றும்)

abedheen@yahoo.com

http://abedheen.tripod.com/

அருஞ்சொற்பொருள்

கந்துரா , தோப் – அரபி ஆண்கள் அணியும் நீளமான அங்கி

ஜைன் – நல்லது, சரி

ஆசுரா – முஹர்ரம் மாதம் பிறை 10-ல் ‘ஷியா ‘க்கள் நடத்தும் விழா

மோய் – தண்ணீர்

சபராளி – பிரயாணி (சஃபர் : பிரயாணம்)

ஹிந்தி – இந்தியர்கள்

ஹைவான் – மிருகம்

உம்மனம்மா – கிழவிகளை தமாஷாகக் குறிப்பிடுவது

ஹாஜத் – ஆசை

கஃபில் – பொறுப்பாளர் , முதலாளி

காஃபிர் – சிலைவணக்கம் செய்பவர்

மறப்பு – படுதா/திரை

ஆனம் – குழம்பு

ஏனம் – பாத்திரம்

தரிபியத் , ஒசுபு – ஒழுக்கம், ஒழுங்கு

அதப்பியம் – (ஆபாசமான) வெட்டிப்பேச்சு

‘படிய வுளுந்துடுவா ‘ – செல்லமாகத் திட்டுவது

துனியா – உலகம்

ஜியாரத் – இறைநேசர்களின் சமாதியைத் தரிசித்தல்

துத்திப்பு – சஹன்களை மூடும் – கடின காகிதத்தால் செய்யப்பட்ட- அலங்கார மூடி (சஹன் : தட்டு)

பங்கரை – அவலட்சணம்

தம்பலச்சி / தம்பலவன் – ஹிந்துங்களைச் சொல்வது

ஸூரா நூர் (பேரொளி) & ஸூரா அல்-அஹ்ஜாப் (சதிகார அணியினர்) – திருக் குர்ஆனின் 24வது மற்றும் 33வது அத்தியாயங்கள்

‘ஹயாத்தழிவான் ‘ – திட்டு (ஹயாத் – உயிர்)

மலக்குல் மெளத் – இஸ்ராயில் அலைஹிவஸ்ஸலாம் (உயிரைப் பறிக்கும் மலக்கு (மலக்கு : வானவர்/ஜின்))

ராஹத் – நிம்மதி

பதாகா – அடையாள அட்டை

பேட்டா – தலைப்பாகை

சுப்பரா – (சோத்துக் களரிகளின் போது) உணவு வைக்க விரிக்கப்படும் நீளமான துணி

ஃபத்வா – மார்க்கத் தீர்ப்பு

கைப்படம் – மோதிரங்களோடு கூடிய தங்க வளையல்

* துஆ (பிரார்த்தனை) – ‘இறைவா, உண்மையை உண்மையாகவும் பொய்மையை பொய்மையாகவும் காட்டு! ‘

Series Navigation

author

ஆபிதீன்

ஆபிதீன்

Similar Posts