மானுட தருமம்

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

மணவழகன் ஆறுமுகம்


சிவா போன்…. இதோ வரேன்….வணக்கம் யாரு ? நான்தாண்ணா மணி பேசறன். ம்ம் சொல்றா. பாட்டிக்கு ரொம்ப முடியல. அப்பா உடனே புறப்பட்டு வரச் சொன்னார். எப்ப இருந்து . மதியானத்தில இருந்து. சரி நான் வர்றேன்

சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்த போதே தோன்றியது ஒரு வேளை பாட்டியை உயிரோடு காண்பது இதுதான் கடைசியாக இருக்குமோ என்று. சுயநினைவு சில சமயங்களில் தப்பிப்போவதை பாட்டியின் சில செயல்கள் எனக்குக் காட்டியது. தன்னிலை இழந்து ஏதோ ஒரு செடியைக் கையில் பிடிங்கி வைத்துக்கொண்டு இந்தா, இந்தா வாங்கிக்கோ என்று யாருமே அருகில் இல்லாதபோதும் அவரே புலம்பிக்கொண்டு இருந்தார். கொடுத்துக் கொடுத்துப் பழகிப்போன கட்டையாச்சே. அதான் தன்னிலை இழந்தும் தரும சிந்தனை இழக்கவில்லை. இதையெல்லாம் தூரத்தில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மாவாசை, பெளர்ணமி என்றார் இது போன்ற நிலையில் உள்ளவர்கள் அடித்து விடும் என்பார்களே. அம்மாவிடம் கூட கேட்டேன். ஆமாம், எதற்ிகும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றார். இது நடந்து எப்படியும் இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்குமே.

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் பாட்டியின் பழைய நினைவுகள் என் கண்முன் நிழலாடியது. நன்றாக எனக்கு நினைவிருக்கிறது, நானும் அக்காவும் சிறுபிள்ளைகளாக இருக்கும் போது, பாட்டி எங்களுக்கு வேலைகள் வைப்பார். விளையாட்டு புத்தியில் நாங்கள் அதை மறந்து இருந்துவிட்டு மாலையில் பயந்து பயந்து வீடு திரும்புவோம். பாட்டியும் பூசைக்கு தயாராய் இருப்பார். துடப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைச் சுற்றி சுற்றி துரத்துவார். ஆனால் ஒரு அடிகூட ஒருநாளும் அடித்ததில்லை. அக்காவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும். அப்பாவும் அக்காவுக்காக என்னைத்தான் திட்டுவார். நான் கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் சென்றுவிடுவேன். சமாதானத்திற்குப் பாட்டிதான் வருவார். வளர்ற புள்ள ராத்திரியில சாப்படாம இருந்தா குருத்து வாடி போயிடும் சாமி. வா சாப்புடு. உங்க அப்பனையும் அக்காவையும் நான் பேசிக்கிறன் பாட்டி சொல்லும். அக்காவின் முதுகில் ஒரு கையை வைத்து இன்னொரு கையால் அந்த கைமேல் அடித்து தம்பிய திட்டுவியா அடிச்சனா பாரு என்று பாட்டி சொல்லும். பாம்பும் சாகாமல், தடியும் உடையாமல் அடிக்கும் ரகசியம் எனக்கு அப்போது தெரியாது.

பாட்டி என்றால் கதை புத்தகம் என்று சொல்வார்கள். ஆனால் எங்கள் பாட்டியோ கதை களஞ்சியம். சிறுகதைகள், தொடர் கதைகள் அத்தனையும் கேட்டிருக்கிறோம். எத்தனை வகையான பாட்டுகள் வேண்டும். ஏற்றப்பாட்டு, உழவுப்பாட்டு, வண்டிப்பாட்டு, ஒப்பாரி, தாலாட்டு, நலுங்கு பாட்டு, சீமந்தப்பாட்டு, திருமணப்பாட்டு இன்னும் என்னென்னவோ.. அந்த பக்கத்தில் யாராவது இறந்து விட்டால் ஒலிபெருக்கியில் பாட்டியின் ஒப்பாரி ஒலிக்கும். எங்கள் பக்கத்தில் ஒரு பழக்கம் உண்டு, மழை சரியாக பெய்யவில்லை என்றால் ‘அம்மாயி கும்பிடுதல் ‘ என்று ஒன்று நடக்கும். அங்கேயும் பாட்டிதான் முதன்மை பாடகர். மற்ற பெண்கள் எல்லாம் பாட்டியைச் சுற்றி கும்மி அடித்துக்கொண்டு துணையாக பாடுவர். இது எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து நடக்கும் ஒன்று.

எனக்கு விவரம் தெரிந்தே எங்கள் நிலத்தின் சிலபகுதிகள் திருத்தப்படாமல், முள் காடாக இருந்திருக்கிறது. தாத்தாவுக்கு அப்பா இந்த நிலத்தை வாங்கும் போது அந்த பகுதியில் யாருமே இல்லையாம். ஒரே முள் காடாகத்தான் இருந்ததாம். தாத்தாவின் அப்பா, தாத்தா, பாட்டி மூவரும் தான் இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். எங்கள் நிலத்தில் உள்ள ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு வரலாறு பாட்டியிடம் உண்டு. கிராமத்துக்காரர்கள் மனிதர்களைவிட மண்ணையும், மரங்களையும் அதிகமாக நேசிப்பார்கள் என்பதை பாட்டி தாத்தா மூலம்தான் நான் தெரிந்துகொண்டேன். எனக்கும் கூட அந்த தாக்கம் உண்டு. ஊரைச் சுற்றி நிறைய மலைகள் உண்டு. மலையின் எந்த ஒரு இடத்திலும் பாட்டியின் பாதம் பாடாமல் இல்லையாம். மலையில் இருக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு கல்லிற்கும் ஒரு பெயர் சொல்வார். பூனை கல், கரடி கல், ஒளவையார் மேடு இன்னும் என்னென்வோ. முன்பெல்லால் நஞ்சை ஓட்டினால், நிலத்திற்கு தழைகளை போட்டுதான் அடி உரமாக மிதிப்பர். அதற்கான தழைகளை மலைகளில் சென்றுதான் கொண்டுவருவார்கள். பாட்டி எங்கள் நிலத்திற்கு மட்டுமல்ல, பணத்திற்காக அடுத்தவர் நிலத்திற்கும் தழை அறுக்கச் செல்வாராம். ஒரு கட்டு ஒரு அணாவோ, இரண்டு அணாவோ சொல்வார். நான் கூட பாட்டி தந்த ஓட்டை நாணயத்தை இடுப்புக் கயிற்றில் மாட்டி வைத்திருந்திருக்கிறேன்.

எப்படியும் பாட்டிக்குத் தொண்ணூறு இருக்கும் என்று நினைக்கிறேன். பாட்டிக்கு மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை. அத்தை திருமணம் செய்த உடனேயே இறந்து விட்டதாம். நான் பார்த்தில்லை. அக்காவை, அத்தையே வந்து பிறந்து விட்டாள் என்று சொல்லி அத்தையின் பெயராலேயேதான் பாட்டி அழைக்கும். பெரிய மகனை தாத்தா பாட்டி இருவருக்குமே பிடிக்காது. காரணம் பெரியப்பாவின் மனைவிதான். தாத்தா-பாட்டிக்கு மாதம் மாதம் தரும் அரிசியைக் கூட தரமாட்டார்கள். தாத்தாவிற்கு சின்ன மகனையும், பாட்டிக்கு நடு மகனையும் பிடிக்கும். தாத்தா இறந்து எப்படியும் ஐந்தாறு ஆண்டுகள் இருக்கும். தாத்தா இறக்கும் வரையிலும் வீராப்புடனேயே வாழ்ந்தார். பாட்டி மட்டும் என்ன ? சென்ற ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு வரை தனி வீட்டில், தானே சமைத்துத் தானே சாப்பிட்டு வந்தார். கண் சரியாக தெரியாம போய், மிகவும் மோசமான நிலையில் தான் அப்பா சண்டை போட்டு வீட்டிற்குக் கூட்டி வந்தார்.

பாட்டி அடிக்கடி சொல்லும் உங்க தாத்தா எட்டு கூத்தியா வச்சிருந்தாரர், இந்த மனுசங்கிட்ட நான் பாடாத பாடு பட்டேன் என்று. ஒரு நாளும் இந்த சாதனையைத் தாத்தா மறுத்ததில்லை. என்ன செய்ய, அந்த நாளைய உணவு முறை அப்படி. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து பாட்டி வழிப்போக்கர் யாருக்காவது சாப்பாடு போடாமல் இருந்ததை பார்த்தில்லை. ‘படையாச்சி ஊட்டு அம்மா , கொஞ்சம் குடிக்க தண்ணி கொடுங்க ‘ என்று கேட்டால் போதும் அவர்களுக்கு அன்று சாப்பாடு உண்டு.

வீட்டிற்குச் சென்றதும் பார்த்தேன்.பாட்டி வாழ்ந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்தார்.பாட்டி இறந்து விட்டதென்பதை அம்மா சொன்னார். சுற்றிலும் சிலர் ஏதேதோ கதைகள் பேசியபடி அமர்ந்திருந்தனர். ஏன்சாமி வந்திருச்சா! எப்ப சாமி வந்த! கிழவி செத்தாலா ? பொழச்சாலான்னு கூட வந்து பார்க்க மாட்டங்கிறியே. நல்லா இருக்கியா ? அந்த பொங்கலாயி உனக்கு எந்த கொறையும் வக்க மாட்டா! பாட்டி இப்போது கேட்காது என்பதாலோ என்னவோ அருகில் சென்று பார்க்க மனமில்லை. அங்கங்கே வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. எல்லா உறவுகளுக்கும் தகவல் சொல்லும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. தாத்தா இறந்த பொழுது நான் படித்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் வேலையில் இருக்கிறேனே. சிறப்பான முறையில் பாட்டியை கொண்டு சேர்க்க வேண்டும். எண்ணிக்கொண்டேன். பட்டாசுகள் முழங்க, பாட்டியின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. தாத்தாவின் அப்பா ஊராருக்கு இலவசமாக ஒதுக்கிக் கொடுத்த இடுகாட்டில் தாத்தாவுக்கு அருகிலே அடக்கம் செய்யப்பட்டது. ஒரு சகாப்பதம் முடிவுற்றது போல தோன்றியது. யோசித்துப் பார்த்ததில் அக்காவையும் அம்மாவையும் தவிர யாருமே அழுததாக ஞாபகம் இல்லை. எனக்கும் கூட இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்று தோன்றியது.. பழுத்த மட்டை உதிர்ந்து தானே ஆகவேண்டும்.

எல்லாம் முடிந்து ஊருக்குப் புறப்பட்டேன். ஊசி போட்டுட்டாங்கடா! என்னாது ? மூணு ஊசி . எப்படி மனசு வந்திச்சோ. அப்பா கூட அத தடுக்கல, காலமெல்லாம் கஷ்டப்பட்டுச்சி கிழவி, உயிர் போறதுக்குமா கஷ்டப்படனும் , போவும் போதாவது நல்ல படியா போகட்டுன்னு சொல்லிட்டார். அக்கா அழுதது. அடப்பாவிகளா! இது முறையா ? இல்லை இதுதான் முறையா….

இது வரையில் வராத கண்ணீர் இப்போது மெல்ல எட்டிப் பார்த்து…

***

a_manavazhahan@hotmail.com

Series Navigation

மணவழகன் ஆறுமுகம்

மணவழகன் ஆறுமுகம்