பழிக்குப் பழி

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்த அந்த 3 கொடூரர்களுக்கு உலகின் மிகச் சிரமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அது முடியும் என்று தோன்றவில்லை. வெகு சிரமமான அந்தகாரியத்தில் கடந்த ஒரு மணி நேரமாக கட்டாயத்தின் பேரில் ஈடுபட்டிருந்தார்கள். கடவுள் என்று ஒருவர் இருப்பாரேயானால், அவரும் துரதிஷ்டவசமாக நேர்மையானவராக இருப்பாரேயானால் நிச்சயமாக எதிர்காலத்தில் பழி வாங்குவதற்கு ஒரு வாய்ப்பையாவது அளிக்க வேண்டும். கண்ணுக்கு தெரியாத சூட்சமமான வேதனை ஆக்கிரமித்து அழுத்திக் கொண்டிருக்கிறது வெகு நேரமாக. இது மிகப்பெரிய அவமானமும் கூட. இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் நிச்சயமாக வரும்.

ஆனால் இந்த சமயத்தில் யாருக்கும் தெரியாமல் நாங்கள் அந்த தண்டனையை மீறிக் கொண்டுதானிருந்தோம். வாயில் விரல் வைத்தபடி நாங்கள் மூவரும் உதடுகளை கூட அசைக்காமல் பேசிக் கொண்டுதானிருந்தோம். அந்த மட ஆசிரியர் நினைத்துக் கொண்டிருக்கிறார். வாயில் வரலை வைத்துக் கொண்டு அமைதியாக மண்டியிட்டிருக்க வேண்டும் என்று கூறிவிட்டால். நாங்கள் அமைதியாக இருந்து விடுவோம் என்று. அவருக்கு எங்கே தெரியப் போகிறது நாங்கள் புதிதாக கண்டுபிடித்திருக்கும் இந்த தொழில் நுட்ப யுக்தி பற்றி. எங்கள் உதடுகள் அசையாது. எங்கள் நாக்கு கூட அசையாது, உதடுகளின் குறுக்கே விரலை வைத்திருப்போம். ஆனால் வார்த்தைகள் வந்து ​கொண்டுதானிருக்கும், செய்திகள் பரிமாறப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். இருப்பினும் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை.

கடந்த ஒரு நாளில் நிகழ்ந்த பல விஷயங்களை இங்கே சொல்லியாக வேண்டும். இல்லையெனில் எங்களது ரிவன்சின் நியாயம் புரியாமலே போய்விடும். அந்த ஆசிரியர் எங்களுக்க செய்த அநீதி யாருக்கும் தெரியாமலே போய்விடும்.

நான் ரொம்ப சமத்து அதோடு கூட மிகமிக நல்லவள் என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு 3 வது பெஞ்சில் 2 வதாக உட்கார்ந்திருக்கிறாளே சுகுனா, அவள் நேற்று என்ன செய்தாள் தெரியுமா? நாங்கள் மூவரும் அவளது டிபன் பாக்சில் உள்ள் தயிர் சாதத்தைத் திருடித் தின்று விட்டோமாம். அந்த ஊசிப் போன தயிர் சாதத்தை பார்ப்பவர்களால் நிச்சயமாக அப்படி சொல்ல முடியாது. திருடியிருக்கலாம் என்பது வரை ஒத்துக் கொள்ளலாம். ஆனால்அதை திங்க முடியுமா? என்ன? அவள் சொன்ன பொய்க்கு யார் தண்டனை கொடுப்பது. இன்று காலை வந்ததும் வராததுமாக எங்களது திட்டத்தை தீட்டினோம். நான் (சங்கர்) மூக்கை உடைக்கலாம் என்றுதான் கூறினேன். ஆனால் இந்த ஆசிரியர்கள் அதை கொலைக் குற்றமாக்கி தூக்கில் ஏற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிவா இந்த ஐடியாவைக் கொடுத்தான். அவள் உட்காரும் இடத்தின் அடியில் காம்பசை சொருகி வைத்து விடுவது என்று. ஆனால் நான் (சங்கர்) அதை கடுமையாக ஆட்சேபித்தேன். காரணம், அந்த தண்டனை ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய தனிச்சிறப்பு வாய்ந்த தண்டனை. வேறு யாருக்கும் அந்த தண்டனையை கொடுத்து, அந்த தண்டனையை அவமதிக்கக் கூடாது. அது ஆசிரியர் பால் பாண்டிக்கு மட்டுமே சொந்தமானது, அதில் யாரும் கைவைக்கக் கூடாது. அந்த அழகான காட்சியை எப்படி விவரிப்பது. அதில் அவர் உட்கார்ந்ததும் துள்ளிக் குதித்து எழும்பி கீழே விழுவாரே என்ன அருமையானதொரு காட்சி அது. தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள் என்று நான் விளக்கியதும்,அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். ஆனால் ரமேஷ் கூறிய அந்த தண்டனை மிக அழகானது. அவளது ஒற்றை பக்க ஜடையை கத்தரித்து விடுவது. ஆஹா அருமையான யோசனை.அவள் மொத்தமாக அடங்கி விடுவாள்.அவளது திமிரும அடங்கிவிடும். இனி நம் வழிக்கே அவள் வரமாட்டாள். ர​மேஷ் எப்பொழுதுமே புத்திசாலித்தனமாகத்தான் யோசிப்பான். அவனை எங்களுடன் இணைத்துக் கொண்டதற்கு காரணமே அவனது புத்திசாலித்தனம்தான்.

எங்களது திட்டக்குழுவில் ஒரு வழியாக அந்த முடிவு எடுக்கப்பட்டது. காலை ப்ரேயிரின் போது அவளது ஜடையை அறுத்துவிடுவது என்று முடிவு செய்தோம். சிவா அருகில் உள்ள அவனது வீட்டிலிருந்து ஒரு பெரிய கத்தரிக் கோலை எடுத்து வந்தான். ஆனால் அந்த தீரச் செயலை செய்வது யார். என்னை விட தைரியமான மாணவன் வேறு யாரும் இல்லையாம். சிவாதான் கூறினான். அதை எப்படி நான் மறுப்பது. நான் வேறு நிஜமாகவே தைரியமானவனாக இருக்கிறேன். என்ன………. மாட்டிக் கொண்டால் தூக்கி போட்டிடு மிதிப்பார்கள். அதை நினைத்தால்தான் கால்கள் இரண்டும் லேசாக நடுக்கத்தை பெறுகின்றன. இருப்பினும் நான் என்ன காந்ந்ந்ந்தியா? புத்த்த்த்தரா? இன்னா செய்தாரை மன்னிப்பதற்கு

ப்ரேயர் தொடங்கியது. ஐயோாாாாா…………. அந்த நாராசமான பாடலை போட்டிடுத் தொலைத்தார்கள். ………”ஒரு தாய் மக்கள் நாம் என்போம்”………. அதை தாங்க முடியாமல் என் உடலுக்குள் என்ன நடந்தது தெரியுமா? …. பித்தநீர் கசப்பாக சுரப்பது போல் அடிநெஞ்சில் சுரந்து பின் மறைந்தது. பல நாட்களாக இந்த ஒரே பாடலை போட்டால் பின் என்ன செய்யும் . தினசரி வாந்தி எடுக்காமல் தப்பிப் பிழைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால் இந்த நல்ல குழந்தைகள் என்று பெயர் எடுத்த சுகுனா போன்ற நடிகைகள் முகத்தை சிரிச்சா மாதிரி வைத்துக் கொண்டு ஒரு போஸ் கொடுப்பார்களே? அதுமிகக் கடினம். அதற்கு மிகுந்ததைரியம் வேண்டும்.அந்த ஒரே விஷயத்துக்காக மட்டுமே நான் அவளை பாராட்டுகிறேன். அவள் கடைசிய வரை முகமூடி அணிந்தது போல் சிரித்த முகத்துடனேயே காணப்பட்டாள்.ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் அந்த முகத்தின் தன்மையே மாற இருந்தது. நான் பின் வரிசையிலிருந்து மெதுவாக அடிமேல் அடி வைத்து அவளை நெருங்கினேன். என்ன அழகாக சிரித்துக்கொண்டிருந்தாள் தெரியுமா? அவளுக்கே தெரியாமல் அவளது இரட்டை ஜடையை ஒற்றை ஜடையாக்கினேன். அவள் இன்னும் கவனிக்கவில்லை. ஆனால். பின்னே நின்று கொண்டிருந்த கீதா (அவளது தோழி) போட்டுக் கொடுத்து விட்டாள். அப்பொழுது கத்த ஆரம்பித்தவள் தான். அடிவயிற்றிலிருந்து தம் கட்டி 8 கட்டையில் சுருதி சுத்தமாக ஒரு நூறு பர்லாங்கு தூரத்திற்கு கேட்கும் அளவுக்கு வெறித்தனமாக கத்தினாள். கத்தியவள் கத்தியதோடு சும்மா விட்டாளா. கீழே படுத்து கொண்டு அந்தப் பக்கம் 4 முறை, இந்தப்பக்கம் 4 முறை என அங்கப்பிரதட்ஷணம் செய்வது போல உருள ஆரம்பித்துவிட்டாள். ஏதோ பாம்பு கடித்து விட்டதோ என பயந்து போன ஆசிரியர்கள் ஓடி வந்து அவளை தூக்கினார்கள். அது ஏன் அழும் பொழுது கால்கள் இரண்டையும் நீச்சல் அடிப்பது போல் உதைக்கிறாள் என்றுதான் புரியவில்லை.

அவளது ஷேவிங் செய்யப்பட்ட ஒருபக்க தலையை பார்த்தவுடனே புரிந்து விட்டது நிலைமை. ஹு இஸ் திஸ் புரூட்டஸ் என்று பால்பாண்டி வெறித்தனமாக கத்தினார். அவர் ஆங்கில ஆசிரியராம். யாருக்கு புரிகிறதென்று அவர் இவ்வாறெல்லாம் கத்துகிறார் என்றதான் தெரியவில்லை. இப்படித்தான் அவர் ஒவ்வொரு முறையும் எனது கோபத்திற்கு இலக்காகிப் போகிறார். நானும் அவரது பின்பாகத்தை எத்தனை முறைதான் பஞ்சர் செய்வது. அவருக்கு புததி வருவதே இல்லை. அதற்குள்ளாக அந்த கீதா வேகமாக என்னை நோக்கி கையை காட்டி விட்டாள்.

பின் தேர்ட் டிகிரி பாணியில் நடத்தப்பட்ட விசாரணையில், திட்டக்குழுவில் பங்கேற்ற மூவர் வரை மாட்டிக் கொண்டோம். எதிரி நாட்டு ராணுவத்திடம் மாட்டிக் கொண்ட அகதியைப் போல ஆகிப் போனது எங்களது நிலைமை. வற்றாத ஜீவநதியைப் போல சுகுனாவின் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்து கொண்டிருந்தது. ஒரு வேளை அவள் இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்காலாம். தன் கண்ணில் கண்ணீர் இருக்கும்வரதான். இவர்கள் மூவரும் அடிபட்டுக் கொண்டிருப்பார்கள் என்று. கடந்த 3 மணி நேரமாக தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தாள். ஆனால் திட்டக் குழுவில் எப்பொழுது முடிவெடுக்கப்பட்டதோ அப்பொழுதே உடம்பை இரும்பாக்கிக் கொண்டுதான் செயலில் இறங்கினேன் நான்.

ஒரு பொது நலனுக்காக தியாகம் செய்வது என்று வந்துவிட்டால் வாய்க்கரிசி போட்டுக்கொண்டு செயலில் இறங்கிவிடவேண்டும் என்பது வீரர்களின் பொதுமொழி. அடி கொடுப்பதைவிட அடி வாங்குவதுதான் உண்மையான வீரம் என்று எம்.கே. காந்தி என்பவர் சொல்லியிருக்கிறாராமே. அவர் பிறந்த நாட்டில் பிறந்துவிட்டு நான் மட்டும் எப்படி வேறு விதமாக இருக்க முடியும். பெற்றுக் கொண்டிருக்கும் தண்டனைக்கு ஈடானது, செய்த செயலின் மகிழ்ச்சி.இரண்டும் ஒன்றையொன்று சமன் செய்து கொள்ளும். ஆனால், இந்த பால்பாண்டி ஏன் வானத்துக்கும், பூமிக்குமாக குதித்தார் என்றுதான் புரியவில்லை.

ஒற்றை பக்க ஜடை இல்லையென்றால் அப்படி என்ன ஆகிவிடப் போகிறது.. சாமிக்கு முடியெடுத்தா; புண்ணியம் என்கிறார்கள். அதே முடியை நான் எடுத்துவிட்டால். மடத்தனமாக கத்துகிறார்கள். ஒரு புரிதலே இல்லாமல் நடந்து கொள்வது இந்தியர்களின் வழக்கம்தான். என்ன செய்வது படிப்பு முடிந்ததும் அமெரிக்கா சென்றுவிட வேண்டும்.

தண்டனை கொடுக்கிறேன் என்கிற பெயரில், காதைப் பிடித்து திருகும் பழைய பழக்க வழக்கத்தை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பது என் கருத்து. காரணம் வலி ஒரு பிரச்சனை அல்ல. ரேடியோவுக்கு வால்யூம் ஏற்றுவது போல் கன்னாவின்னாவென காதை பிடித்து திருகிக் கொண்டு சரமாரியாக கேள்வி கேட்கிறார்கள். எப்படி அந்தகாதில் கேட்கும் அவர்களது கேள்விகள். பதில் சொல்வில்லையென்றால் கண்ணத்தில் வேறு அறைகிறார் அந்த பால்பாண்டி. இந்த மடத்தன்ஙகளையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாமல்தான் பால்பாண்டி அவர்களுக்கு காம்பஸ் வைத்தியம் செய்ய வேண்டியதிருக்கிறது. அவர் என் காதை பிடித்து திருகிக் கொண்டு கேட்கிறார்.

“ஏண்டா இந்த பச்ச குழந்தையோட தலைமுடிய கட் பண்ண”

இந்த நகைச்சுவை கேட்டு நான் சிரிக்காமல் இருந்தது பெரிய விஷயம். அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருப்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிய வந்தது. படைப்பின் விநோதத்தைத்தான் என்னவென்று சொல்வது. பால்பாண்டியிடம் நகைச்சுவை. அதில் முதல் நகைச்சுவை என்னவெனில், முதலில் அது மிகப்பெரிய தவறும் கூட. சுகுனா ஒரு பச்சை குழந்தையாம், இந்த உலகில் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள், தான் பழி வாங்க நினைக்கும் ஒருவனை காயப்படுத்துவதற்காக, தொடர்ச்சியாக 3 மணி நேரம் தன்னை கட்டாயப்படுத்திக் கொண்டு அழும் ஒரு பெண்ணை – அப்படிப்பட்ட ஒரு விநயம் மிகுந்த ஒரு குட்டி பிசாசை எப்படி பச்சை குழந்தை என்று சொல்லலாம் அந்த பால்பாண்டி. அவரை மன்னித்து விடுவதற்கு ஒரே ஒரு வலிமையான காரணமுண்டு. அது அவரது தலைமேல் உள்ள தரிசு நிலம். அவருக்குத் தான் தெரியும். அவ்வளவு நீள தலைமுடியின் அருமை. அவரது மனக்குமுறலும், என் மீதான வெறித்தாக்குதல்களும் ஒரு வித ஆதங்க மனோபாவம் தான் காரணம் என்பதால் அவரை மன்னித்து விடுமாறு என் உள்மனம் கூறியது.

ஆனால் தலைமையாசிரியர் என்று ஒருவர் இருக்கிறாரே. அவருக்கு தர்மராஸ் என்று தவறாக பெயர் வைத்துவிட்டார்கள். அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு தவறான புரிதலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் ஒருமண்டி விளக்கெண்ணைய் தடவிய பிரம்பிற்கும், மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக வெகு நாட்களாக தவறாக புரிந்து கொண்டே வாழ்ந்து வருகிறார். ஏதேனும் பிரச்சனை என்று வந்துவிட்டால் அவ்வளவுதான். மாட்டுக்காரன் குச்சியை எடுத்துக் கொண்டு ஓடி வருவதைப் போல. குதித்தோடி வந்து பிரம்பை சுற்றி சுறறி அடிப்பார். பின் நிதானமடைந்தவராய் என்ன நடந்தது என்று விசாரிப்பார். எனது வாழ்க்கை லட்சியங்களுள் இதுவும் ஒன்று. பயன்படுத்தப்படாத திரு. தர்மராஜின் மூளையை கடினமான கற்களைக்கொண்டு தட்டி வெளியேற்ற வேண்டும் என்று. அவருடைய பரிதாபமான மூளைக்காக இதை நான் சங்கடமின்றி செய்வேன்.

அந்த மேன்மை மிகுந்த மனிதர். என் பின்புறத்தில் தாக்கியதில் 7 ரத்தசிவப்பு வரிகள். இதை நான் வாழ்க்கை முழுவதும் மறக்கமாட்டேன் என்று மானசீகமாக அவருக்கு உறுதி கொடுத்து விட்டேன். ஒரு வெட்டப்பட்ட முடிக்கு இவ்வளவு பெரிய கொலைவெறித்தல்கள் அவசியமே இல்லையென்று யாருக்குமே அங்கு தோன்றவில்லை. ஆனால், நடுநிலைமை வாய்ந்த ஒருமனிதர் கூட அங்கு இல்லையே. என்ன நடந்தது. ஏன் நடந்தது என்பதை நேர்மையாக விசாரிக்க. கண்ணால் கண்டதையும், காதால் கேட்டதையும் மட்டுமே வைத்து எப்படி இவர்கள் மிகச்சாதாரணமாக இப்படியொரு முடிவுக்கு வர முடிந்தது. இவர்களெல்லாம் சூழ்நிலைக் கைதிகள். தீர விசாரித்து தீர்ப்பளிக்க லாயக்கற்றவர்கள். இவர்கள் நேர்மையின்றி ஒருசார்பாக நடந்து கொண்டதால் எனக்கு நேர்மை மீதே நம்பிக்கை போய்விட்டது. நாளை நான் நேர்மையின்றி ஏதேனும் ஒரு சூழ்நிலையில் நடந்து கொண்டால் அதற்கு இன்று நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியே காரணமாக இருக்கும்.

ஒரு வழியாக அவள் அடங்கினாள். அந்த ஆசிரியப் பேய்களும் தங்களது வீர சாகச விளையாட்டுக்களை நிறுத்தியிருந்தார்கள். இத்தனைக்கும் பிறகும் நான் அழவில்லை. ஆனால், சிவாவும், ரமேசும் அரைலிட்டர் அளவிற்கு அழுதிருந்தார்கள். இந்த பள்ளியில் ஒரு பிரச்சனை நடந்து அதற்குத் தண்டனையாக வெயிலில், சுடுமணலில் மண்டி போட வைக்க வில்லை என்றால். அவர்களுக்கு தின்கிற உணவு செரிமானம் ஆகாது. அப்பொழுது ஒரு ஆசிரியர் இவ்வாறு கூறியிருந்தார். அவர் பெயர் ரவீந்தரன்.

“இவனுகளயெல்லாம் உப்பு கொட்டி அது மேல மண்டி போட வைக்கணும்”

அவரை பார்த்து வைத்துக் கொண்டேன். அவரைப் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.அவர் சமீபத்தில்தான் புதிதாக ஒரு ஹீரோ ஹோண்டாவை வாங்கியிருந்தார். அவர் வேறு நடிகர் விஸயை போல தலைமுடியை வாரியிருந்தார். எனக்கு நிறைய தோன்றுகிறது. ஆனால் ஒன்னொன்னாகத்தானே செய்ய முடியும்.

மண்டியிட்டிருக்கும்பொழுது ரமேஷ் இந்தரசகியத்தை என்னிடம், குரலைத் தாழ்த்திக் கொண்டு மகூறினான். எங்களுக்கு வேறு போரடித்துப் போய்விட்டது. அதனால் பேசத் தொடங்கியிருந்தோம். அந்த மட ஆசிரியர் வாயில் விரலை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று மிரட்டியிருந்தார்.

(இதுதான் இதுவரை நடந்து போன ப்ளாஷ்பேக்)

ரமேஷ் கூறிய அநத விஷயம் எனக்கு புதிது. நான் இதுவரை யோசித்து பார்த்தது கூட கிடையாது. அவன் கூறினான், ஆசிரியர் அடித்ததுமு; கதறித்துடித்து, அழ வேண்டுமாம். வாங்கிய அடியின் மூலம் எவ்வளவு வலிக்கிறது என்பதை, குரல்வளை தெறிக்க கத்தி கதறுவதன் மூலம் வெளிப்படுத்த வேண்டுமாம். அவ்வளவுதான் விஷயம் அந்த ஆசிரியர் மிரண்டுவிடுவார். தான் ஏதோ மிதமிஞ்சிய காரியத்தை செய்துவிட்டோமோ? என்று வருத்தப்படுவார். பின் அவர் பிரம்பை ஓங்கும் பொழுதே அவரது வேகம் குறைந்துவிடும். அவரது மனநிலை சீர்குலைந்துவிடும். அதனால் தான் நாங்கள் இருவரும் அவ்வளவு கதறித்துடித்து அழுதோம், ஆனால், நீயோ அழவில்லை. அதனால் உனக்கு வலிக்க வில்லை என்று நினைத்துவிட்டார் அந்த பால்பாண்டி. சில சமயங்களில் நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறான்.

எனது வருத்தம் அது இல்லை. உள்ளிருந்து சிரித்துக்கொண்டிருக்கிறாளே அந்த சுகுனா, ஏதோ சாதனை செய்துவிட்டது போல. அவள் சந்தோஷப்படும் விதமாக அவள் முன்னாள், அதுவும் கூலிப்படை அடியாள் போன்றிருக்கும் பால்பாண்டியிடம்அடி வாங்கியதைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஒற்றைப்பக்க தலையை வைத்துக் கொண்டு இவ்வளவு அலப்பறையை கொடுக்கும் அவளுக்கு ஏதேனும் ஒரு வகையில் சிறப்புத் தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற எனது ஆர்வம் எல்லை கடந்து போய் கொண்டிருந்தது.

வெகு நேரமாக வெயிலில் முட்டி போட்டுக் கொண்டிருந்தோம். லேசாக மயக்கம் வருவது போல் இருந்தது எனக்கு. காரணம் வெயில் அல்ல. அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த ஆசிரியர் அழகுமலை கூறிய வார்த்தைகள்தான்.

அழகுமலை : எவ்வளவு நேரமா மொண்டி போட்டிருக்கீங்க

ரமேஷ் : 4 மணி நேரம்மா சார்.

அழகுமலை: பரவால்ல, மாலை வெயில் உடம்புக்கு நல்லது, கீப் இட் அப்

நிச்சயமாக நல்லது தான். நானும் ஒத்துக் கொள்வேன். எப்பொழுதெனில் அந்த அழகுமலையை அரை நிர்வாணமாக்கி, ஒரு மணி வெயிலில் உட்கார வைக்கும் பொழுது. அலட்டிக் கொள்ளாமல் பொன் மொழிகளை உதித்துவிட்டு செல்லும் பாங்கு தமிழ்நாட்டுக்கே உரிய தனித்தன்மையானதுதான். ஆனால், அதை கேட்பவர் கேட்டுக்கொண்டு கேனத்தனமாக சிரிக்க வேண்டும் என்பதை எத்தனை பேர்தான் சகித்துக் கொள்ள முடியும். ஒரு ஒற்றை வார்த்தை மயக்கமுறச் செய்யமுடியும் என்றால் அவரது திறமையைத்தான் என்ன வென்று சொல்வது.

ஆனால் ஆசிரியர் அழகுமலை பரிதாபமானவர். சென்றவருடம் அவர்தான் எனது வகுப்பு ஆசிரியர். அவரது அறியாமை நிறைந்த வார்த்தைகளால் பல்வேறு வகையான விழுப்புண்களை பரிசாகப் பெற்றவர். ஆனா; இன்றுவரை அவருக்குத் தெரியாது. அதற்கெல்லாம் காரணம் நான்தான் என்று. அவர் ஒரு இன்னொசென்ட். தான் என்ன பேசுகிறோம் என்பதை அறியாதவர். கடவுளே அவரை மன்னித்துவிடு, நானும் மன்னித்துவிட்டேன். சென்ற வருடம் நாங்கள் அதி திறமையுடன் செயல்பட்டோம். ஆனால் இந்த வருடம் தான் எங்களது திறமை மங்கிவிட்டது.

பரிதாபப்பட்டு என்று சொல்ல முடியாது. ஆனால் வெயிலில் மய்ஙகி விழுந்து சிறுவர் கொடுமைச் சட்டத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது. என்று நினைத்தார்களோ என்னவோ? எங்களை வகுப்பறைக்குள் அனுமதித்தார் ஆசிரியர். நிழலுக்கு வந்ததும் எனது மூளை சுறுசுறுப்படைந்தது. என்னா; கடடுப்படுத்த முடியவில்லை பழிவாங்கும் எண்ணத்தை. திட்டங்கள் ஆழ்மனதுள் தன்னிச்சையாக தீட்டப்பட்டுக் கொண்டிருந்தன. (நானெல்லாம் அப்படியில்லை, நானெல்லாம் அன்பில் தோய்த்தெடுக்கப்பட்ட ஆத்மா என உறுதியாக நம்புபவர்களுக்கு மட்டுமே ஆட்சேபிக்க உரிமை உண்டு)

எனது பழிவாங்கும் படலத்தின் முதல் கட்டமாக எனது நோட்டின் கடைசிப் பக்கத்தில் எழுத ஆரம்பித்தேன்.

1) சுகுனா அலைஸ் நாடகக்காரி

2) பால்பாண்டி அலைஸ் ஹிட்லர்

3) தர்மராஜ் அலைஸ் காதுகேளாதோர் சங்க உறுப்பினர்
(காரணம் , முதலில் தண்டனை கொடுத்து விட்டு பின்னர் விஷயம் என்னவென்று கேட்பவருக்கு காது இருந்து தான் என்ன பிரயோஜனம்)

4)அழகுமலை அலைஸ் இன்னோசென்ட் மங்கி
(எனக்கு விருப்பம் இல்லைதான் இருப்பினும் ஆசையாய் உள்ளது.)

5) கீதா அலைஸ் பொம்பள எட்டப்பன் ஆர் எட்டப்பி

6) ரவீந்திரன் அலைஸ் உப்பு வியாபாரி
(இவருக்கு போனஸ் தண்டனை வழங்க வேண்டும் என்பது எனது சிறப்பு விருப்பம்)

சாக்கடைப் பள்ளத்தில் சுகுணா

நாற்றத்தைப் பற்றி உலகின் சிறந்த தத்துவ ஞானிகளால் ஆயிரம் பக்கங்களுக்கு விளக்கப்பட்ட ஒருபுத்தகத்தை (ஒருவேளை இருந்தால்) தலை கீழாக புரட்டிப் படித்து தெளிந்த ஒருவர் இன்னும் அதிகமாக அதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்புவாரேயானால், எங்கள் பள்ளி அருகே உள்ள அந்த சாக்கடைக்கு வந்தால் போதும். அவர் 7 ஜென்மங்களுக்கும் சேர்ந்தாற் போல் புரிந்து கொள்வார் நாற்றத்தைப் பற்றி. அப்படி ஒரு நாற்றம். இப்படியொரு நாற்றம் மிகுந்த சாக்கடையை பொறுத்து கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எங்கள் பள்ளிக்கு ஜனாதிபதியாக பார்த்து ஏதேனும் விருது கொடுக்கலாம். ஆனால் இங்குதான் தகுதிகள் அங்கீகரிக்கப்படுவதே இல்லையே.

அன்று ஒருநாள் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பொழுதுதான் எனக்கு இந்த சிந்தனை தோன்றியது. சுகுனாவை அதற்குள் தள்ளிவிட்டால் என்ன? நினைக்கும் பொழுதே சந்தோஷம் என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தேன். ஆனால்அவள், தனக்கு இப்படியொரு அநியாயத்தை செய்வது யார் என்பதை மட்டும் கண்டுகொண்டு விட்டால் அவ்வளவுதான். அவள் ஒரு பொம்பளை ஷேக்ஸ்பியர். ஒரு குட்டி நாடகத்தை எழுதி,இயக்கி, நடித்து காண்பித்து, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் பரிசையும் வாங்கி விடுவாள். ஆகையால் அவள் யாரால் தான் தள்ளப்படுகிறோம் என்பதை அறியாதவளாக இருக்க வேண்டும்.

என்ன செய்வது என கொடூரமாக யோசித்ததில் எனக்கு இந்த வழிதான் புலப்பட்டது. விஷயம் சுலபமாக முடிந்துவிடும் இவ்வாறு செய்துவிட்டால். அதாவது அவளால் பார்க்க முடியாமல் போய்விட வேண்டும் அவளது கண்கள் சிறிது நேரம் தெரியாமல் இருந்துவிட்டால்போதும். ஆனால் நினைக்கவே எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. அவளது கண்கள் துடித்து விடுமே. மிளகாய் பொடி என்றால் சும்மாவா? எனது பிரார்தனை எல்லாம் இதுதான்.அவளது கண்களுக்கு நிரந்தர பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது.

அந்த மளிகைக் கடைக்காரரிடம் எனது சந்தேகத்தை கேட்ட பொழுது அவர் என்னை முறைத்துப் பார்த்தார். அந்த பார்வையில் ஒரு மனைவி தன் கணவன் மீது கொண்டுள்ள சந்தேகப்பார்வையின் தெறிநிலை தெரிந்தது. தவறான ஆளிடம் கேட்டுவிட்டோமோ என்ற பயம் வந்து விட்டது எனக்கு. அவர் என்ன கண் மருத்துவரா? இந்த கேள்வியை ஒரு கண் மருத்துவரிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும். ஆனால் எனது ரகசியத் திட்டத்தில் ஓட்டை விழுந்து விட்டதோ, அவசரப்பட்டு திட்டத்தை வெளிப்படுத்தி விட்டோமோ? என்கிற பயம் வேறு என்னை தொற்றிக்கொண்டது.

கண்களில் மிளகாய்ப் பொடி விழுந்துவிட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியை எந்த நம்பிக்கையான ஆளிடம் கேட்டு தெறிந்து கொள்வது. நிச்சயமாக அதை தெரிந்து கொண்டுதான் நிறைவேற்ற வேண்டும் என்கிற உறுதியோடுதான் இருந்தேன். நேற்றுவரை. நேற்று எங்கள் வீட்டு: சமையலறையில் எனது அம்மாவின் கண்களில் மிளகாய் பொடி விழுந்துவிட்டது. சிறிது நேர கதறல், அழுகைக்குப் பின் சகஜ நிலைக்கு வந்துவிட்டார். இதை கடவுளின் சமிஞையாகவே எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அநத கடவுள் என்னுடைய ஆதரவாளன் என்பதை என்னால் நம்ப முடியவில்லைதான். இருப்பினும் துணிவைப்பற்றி சொல்வதற்கொன்ன. நான் வேறு இயற்கையிலேயே துணிவுள்ளவன்.

“எதிரி என்று வந்துவிட்டால் எதிரிதான். நியாயம் கிடைக்கவில்லையென்றால் பறித்துக் கொள்ள வேண்டியதுதான். யாரிடம் கேட்க வேண்டும். எதற்காக கேட்க வேண்டும். துணிவுள்ளவன் செய்வதுதான் நியாயம்”,

எனது சிந்தனை உரமேற்றப்பட்டுக் கொண்டிருந்தது, அவளது வருகைக்கா அந்த மரத்தடியில் வெகு நேரமாக காத்து;க கொண்டிருந்த போது. இன்று ஒரு சரித்திர நிகழ்வு நிகழப் போகிறது. ஒரு திமிர் பிடித்தவிளின் கொட்டம் அடங்கப் போகிறது. இன்னும் சில நிமிடங்கள்தான். நிர்ணயிப்பவர்களுக்கு மட்டுமே இவ்வுலகில் அமைதி கிட்டும். சகித்துக் கொண்டிருக்கும் இந்திய குப்பகைளில் நானும் ஒருவன் அல்ல. நான் தனித்தன்மை வாய்ந்தவன். முடிவெடுப்பேன். நிறைவேற்றுவேன்.

இந்த 2 மாதங்களில் மொட்டையடிக்கப்பட்டிருந்த அவளது தலையில் சிறிது முடி வளர்ந்திருந்தது. நான் எதிர்பார்த்தது போலவே தனியாகவே வந்து கொண்டிருந்தால். அந்த மிளகாய் பொடியை கைகளில் வைத்திருந்த போதே எரிச்கலைக் கொடுத்தது. கடைசி நேரத்தில் எனது முடிவில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் நிறைவேற்றுபவர்களுக்கு என்று தனிச்சிறப்பு வாய்ந்த குணம் ஒன்று உண்டு. அது, முடிவென்று ஒன்றை எடுத்துவிட்டால் அவ்வளவுதான், அவர்கள் பேச்சை அவர்களே கேட்கமாட்டார்கள்.

அவள் வந்து கொண்டிருந்தாள். எனக்குள் அப்படியொரு அக்தர் வேகம். மறைவிடத்திலிருந்து மிளகாய் பொடியை வீசியெறிந்தேன். அது காற்றில் பறந்து அவள் கண்களை பதம் பார்த்தது. இனி அடுத்த கட்ட நடவடிக்கை. ஆனால்……….. ஆனால்………….. எனக்கு ஏன் புரியாமல் போய்விட்டது. அவள் கத்தினால் அடுத்த மாநிலத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் கூட அலறியடித்தபடி எழுந்து தறிகெட்டு ஓடுவார்கள் என்று. அவள் குரல்வளைக்கு அப்படியொரு சக்தி. ஆனால் என்னுள் இருக்கும் அசாதாரணத் திறமை எனக்கே அப்பொழுதுதான் தெரிய வந்தது. நான் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தேன். அவளை சாக்கடையில் தள்ளுவதற்கு நேரம் கூடி வரவில்லை. அவள் இது போன்று கத்தி கொண்டிருக்கும் பொழுது, நான் அவள் அருகில் இருப்பது அவ்வளவு உசிதமான விஷயமாக இருக்காது.

அந்த நேரத்தில் சாலையில் 1500சிசி குதிரை சக்தி திறனுடன், ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீரனைப் போல், கண்மூடித்தனமாக (பதற்றத்தில் ஏன் கண்கள் மூடிக் கொள்கின்றன) ஓடிக்கொண்டிருந்தேன். இன்னும் அவள் குரல் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. கடவுளே ஒன்றரை கிலோமீட்டராவது கடந்திருப்பேனே என்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்கையில் அவளது குரலின் வலிமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் நேரம் சரியிலலை என்றால் ஒருவன் தப்பி ஓடிதான் என்ன பிரயோஜனம். எங்கள் பள்ளி தலைமையாசரியர் திரு. தர்மராஜ் ஒரு ஜாக்கிசான் ரசிகர் என்பது எனக்கு இதுநாள் வரை தெரியாமல் போய்விட்டது. என்னமாக டைவ் அடித்தார் தெரியுமா?. நான் ஓடி வந்து இடித்த வேகத்தில், ஒரு முழு சுற்று அந்தரத்தில், என்னவொரு லாவகமாக, அதைப் பார்க்க நூறு கண்கள் வேண்டும். ஆனால் மகிழ்ச்சி என்ற ஒரு விஷயம், குதூகலம் என்கிற அந்த ஒரு விஷயம் போர்க்கல பய நிலையிலும் ஏற்படும் என்கிற உண்மையை அப்பொழுதுதான் உணர்ந்தேன். அவர் சமீப காலமாக தனது முக அழகை கூட்டுவதற்காக கருப்பு கூலிங்கிளாசை அணிய ஆரம்பித்திருந்தார். வெயில் பொறுக்க முடியவில்லையாம்.இப்பொழுதான் தெரிகிறது, கருப்பு கண்ணாடி போட்டால் குத்து மதிப்பாகத்தான் அவருக்கு கண் தெரியும் என்று. ஏனென்றால் அந்த நேர் சாலையில் என்னை தாராளமாக தவிர்த்திருக்கலாம் அவர்.

இன்னொரு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது, அந்த நிமிடத்தில் …இல்லையில்லை, அந்த நொடியில் எனக்கேற்பட்ட பெருமையுணர்வு. நான் ஒரு இநதியன் என்கிற பெருமையுணர்வு. இந்தியாவில் பிறந்ததற்காக அடிக்கடி நான்பெருமையும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி இதையெல்லாம் மறைக்க முடியும். ம்……. திரு. தர்மராஜ் விழுந்த இடம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இதை நான் புரிந்து கொள்ளவே இல்லை. ஏன்……. ஏன்………. ஒரு தெருவில் திறந்தவெளி சாக்கடைதான் இருக்க வேண்டுமா? இரண்டு, மூன்று, நான்கு……… இந்தியாவில் அதற்கு மேலும் எதிர்பார்க்கலாம். தடுக்கி விழுந்தால், கடவுளே அது சாக்கடையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். கடவுளுக்கு உங்கள் மேல் பிரியம் இருக்கும் பட்சத்தில் உங்களை தரையில் விழ வைக்கலாம். அல்லது அவராலும் முடியாமல் போகலாம். அவரை அநாவசியமாக திட்டக் கூடாது. அப்படிப்பட்டதொரு வேண்டுதலை நிறைவேற்றுவது கடினமான விஷயம் இந்தியாவை பொருத்தவரை. ஆதலால் அவரை கருணையோடு மன்னித்து விடலாம்.

திரு. தர்மராஜ் சாக்கடையில் தனது புனித முழுக்கை நிறைவேற்றிக் கொண்டிருந்த சமயத்தில். எனது மூளையில் அட்ரீனல் கன்னபின்னாவென சுரக்க ஆரம்பித்துவிட்டது. என்னால் இன்னும் வேகமாக ஓட முடிகிறதென்றால், இன்னும் புரிந்து கொள்ளவில்லை உலகம் இந்திய ஓட்டப்பந்தய வீரர்களைப் பற்றி என்றுதான் அர்த்தம்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு

எங்கள் பள்ளியில் விடுமுறை எடுக்க வேண்டுமென்றால் விடுமுறைக் கடிதம் கொடுக்க வேண்டும். அப்படியில்லையென்றால் 2 பிரம்படி. வெட்டித்தனமாக உட்கார்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்க யாருக்குத்தான் நேரம் இருக்கிறது இங்கே. அடிப்பது ஒரு இயந்திரமாக இருந்தால் கணக்கு வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும். அதனிடம் இவ்வாறு கூறலாம், இன்னும் இரண்டடி சேர்த்துக் கொடு எனக்கு மேலுமொருநாள் விடுமுறை தேவையாய் இருக்கிறது. ஆனால் அடிப்பது ஆசிரியராய் அல்லவா இருக்கிறார். அவர் கோபத்தில் கதறிக் கொண்டே அடிப்பதை பார்க்கும் பொழுது சிறிது பரிதாபம் தோன்றுகிறது. அவருக்கு ஏற்படப் போகும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு நான் ஆளாகி விடுவேனோ? என்பதை நினைத்துப் பார்க்கையில் தாழ்வு மனப்பான்மையில் மனம் புழுவாய் துடித்துப் போகிறது.

– இரண்டாம் பாகத்தை பார்க்கவும்

Series Navigation

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்