தமிழக தேர்தல் கூட்டணி அலசல்

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

சின்னக்கருப்பன்


சென்ற தேர்தலின் நிலையே இந்த தேர்தலிலும் நீடிக்கும் என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. அதாவது காங்கிரஸ்+திமுக ஒரு கூட்டணியாகவும், விஜயகாந்த் தனியாகவும், அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் நிற்கலாம். தற்போது நிராதரவாக உள்ள மற்றொரு கட்சியான பாமக எந்த அணியில் சேரும் என்று கணிக்க முடியவில்லை. பாமக தனியாக நிற்க தயங்குகிறது. திமுகவோடு இணைவதை விட அதிமுகவோடு இணைவதை விரும்புகிறது. அல்லது காங்கிரஸ் தனியாக வந்தால் அதனோடு இணையவும் விரும்புகிறது. பாமக தனியாக நின்றால், வடக்கு மாவட்டங்களில் ஐம்முனை போட்டியாக ஆகும். தற்போது பாஜக கடுமையான முயற்சிகளை எடுத்து தன்னை ஒரு முக்கிய திமுக எதிர்ப்பு கட்சியாக போராட்டங்களை நடத்திவருகிறது. ஆகையால் சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜக அதிக வாக்குககளை பெற பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன.முன்னைப்போல விஜயகாந்துக்கு அதே எண்ணிக்கையில் வாக்குகள் வருமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் திமுக எதிர்ப்பு வாக்குகள் மூன்று நான்கு திசைகளில் சிதறுவதைத்தான் இந்த கூட்டணி காட்சிகள் சொல்லுகின்றன. ஆகையால் காங்கிரஸ் +திமுக வெற்றி என்பது முடிவான ஒன்று. அதிமுக அந்த வெற்றிக்கனியை பிடிக்க வேண்டுமென்றால் விஜயகாந்துக்கு வாக்களிப்பது வீண் என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும். இருந்தாலும், விஜயகாந்த் சளைக்கபோவதும் இல்லை. விஜயகாந்துக்கு எல்லா இடங்களிலும் டெப்பாஸிட் காலி என்று ஆகப்போவதும் இல்லை. ஆகையால் திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரவே பிரகாசமான வாய்ப்பு. காங்கிரஸ் வழக்கம்போல இருக்கப்போகிறது.
ஆனால், திமுகவிடமிருந்து காங்கிரஸ் விலகி அதிமுகவிடம் சேர்ந்தால், மக்கள் அலை அதிமுகவிடமே வரும். காங்கிரஸே அதிமுகவை தேர்ந்தெடுக்கிறது என்று மக்கள் பெருவாரியாக அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். அப்போதும் விஜயகாந்த் தனியாக நின்று தோற்பார். திமுகவும் படு மோசமாக தோற்கும். இதனை நிச்சயம் திமுக விரும்பாது. ஆனால் ”திமுக விட்டால் அதிமுக அதிமுக விட்டால் திமுக” என்ற நிலையை தாண்டி காங்கிரஸால் முன்னேறவே முடியாது. இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு எதற்காக தேவையில்லாமல் திமுகவின் ஆதரவை மத்திய அரசில் இழக்கவேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு அலையையே அதிமுக விரும்புகிறது. அதனால் எப்பாடு பட்டாவது அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் வரவேண்டும் என்று விரும்புகிறது. மம்தா பானர்ஜி மூலமாக காங்கிரஸிடம் அதிமுக கூட்டணிக்கு வலியுறுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்படி காங்கிரஸ் அதிமுகவுடன் சேராமல் திமுக கூட்டணியிலேயே நீடித்தால், திமுக எதிர்ப்பு ஓட்டுகளை ஒன்றிணைக்க, அதிமுகவின் கூட்டணியில் கம்யூனிஸ்டுகளும் விஜயகாந்தும் வரலாம் என்று கருத இடமிருக்கிறது. அதிமுக + விஜயகாந்த்+கம்யூனிஸ்டுகள்+ பாமக+ உதிரி கட்சிகள் என்ற மெகா கூட்டணியை அதிமுக உருவாக்கினால், நிச்சயம் அதிமுக வெற்றிபெறும் என்று கருத இடமிருக்கிறது. பாஜக மட்டுமே தனித்து விடப்படும்.காங்கிரஸ் இருப்பதால் திமுக கூட்டணியிலும் சேர்க்கமாட்டார்கள். கம்யூனிஸ்டுகள் இருப்பதால், அதிமுக கூட்டணியிலும் சேர்க்கமாட்டார்கள். ஆகவே பாஜகவுக்கு வேறு வழியின்றி தனியாகத்தான் நிற்கவேண்டும். சென்ற தேர்தலில் விஜயகாந்த் ஓட்டை பிரித்தததால்தான் திமுக வென்றது. திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அனைத்தும் இப்போது ஓரணியில் அதிமுகவிடம் விழும். லோக்சபா தேர்தலிலும் விஜயகாந்த் ஓட்டுகளை அதிமுகவோடு கூட்டினால், பெரும்பாலான தொகுதிகளில் திமுக காலி என்பது தெரியும். இது நிச்சயம் கலைஞருக்கு தெரியும். என்னதான் காசு கொடுத்தாலும், மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. சென்ற முறை கொடுத்த காசை விட அதிகம் மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அப்படி கொடுத்தும் ஓட்டு விழாது என்றுதான் தோன்றுகிறது. ஆகவே முன்பை விட அதிக வாக்குக்களை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். இரு முனை போட்டி வந்தால், நிச்சயம் அதிமுக +விஜயகாந்த் அணிதான் வெற்றுபெறும். ஆனால், அதிமுக நிச்சயம் விஜயகாந்த கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியாது. அவர் நூறு தொகுதிகளிலிருந்து 60 தொகுதிகள் வரை கேட்கலாம். அப்படி கேட்டால், அறுபது தொகுதிகளை விஜயகாந்திடம் கொடுத்து தொங்கு சட்டமன்றம் மாதிரியான முடிவுகள் வந்தால், விஜயகாந்த் தனக்கு முதல்வர் பதவி என்று கேட்டால் அதிமுக இறங்கித்தான் ஆகவேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு ஜெயலலிதா ஒத்துகொள்ளமாட்டார். ஆனால், 60க்குக் கீழான தொகுதிகளை ஏற்றுகொண்டால், விஜயகாந்த் இதுவரை உழைத்தது வீணாகி விடும். ஏதோ ஒரு ஒப்பந்தத்தில் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் சேர்கிறார் என்று வைத்துகொண்டால், தமிழகத்தில் ஏறத்தாழ இருமுனை போட்டி வரும். இது தேர்தலை கூர்மையாக்கி திமுக தோற்பதற்குத்தான் வழிவகுக்கும்.
ஆகவே இந்த முறையும் திமுக வெற்றிபெற வேண்டுமென்றால், மூன்றாவது அணியை திமுக உருவாக்கி, அதன் மூலம் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க வேண்டும். அல்லது பாமகவை சேர்த்துகொள்ளாமல் விட்டு, அதன் மூலம் திமுக எதிர்ப்பு வாக்குக்களை பிரிக்க வேண்டும். ஆனால் பாமகவின் ஜாதி அரசியலால், தமிழகம் முழுவதும் நின்று வாக்குக்களை பிரிக்கும் திறன் இல்லை. ஆகவே வேறு வழியின்றி திமுக பாஜகவுக்கு ஓசி விளம்பரம் கொடுத்து திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கவேண்டும்.
சென்ற முறை திமுக விஜயகாந்துக்கு உதவியதாக வதந்தி. லோக்சபா தேர்தலின்பொது அதிமுகவுடன் கூட்டு சேராமல் இருக்க திமுக விஜயகாந்துக்கு அழுத்தம் கொடுத்தது என்றும் அரசியல் கிசுகிசுக்கள் கூறின.
அதே போல இந்த தேர்தலுக்கு விஜயகாந்த் அதிமுகவுடன் சேர்ந்துவிடாமல் இருக்க விஜயகாந்துக்கு திமுக அழுத்தம்கொடுக்குமா அல்லது அதனையும் மீறி விஜயகாந்த் அதிமுகவுடன் சேருவாரா என்று பார்க்கவேண்டும். அப்படி விஜயகாந்த் அதிமுகவுடன் சேர்ந்தால், திமுகவுக்கு வேறு வழியே இல்லை. பாஜகவை மறைமுகமாக ஆதரித்துத்தான் ஆகவேண்டும்.
மற்றொரு கூட்டணி கிச்சடியை பார்த்தால், திமுகவுடன் விஜயகாந்த், அதிமுகவுடன் காங்கிரஸ். இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்லமுடியாது. திமுக எதிர்ப்பு அரசியல் நடத்திவிட்டு தற்போது விஜயகாந்தால் திமுகவுடன் இணைய முடியாது. ஆகவே இது நடக்காத கூட்டணி என்றுதான் தற்போதைக்கு வைத்துகொள்ள வேண்டும். அரசியலில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும், தற்போதைக்கு இதற்கு வாய்ப்புகள் குறைவு என்றுதான் கருதுகிறேன்.
மற்றொரு கூட்டணி என்று யோசித்தால், திமுக தனியாகவும், அதிமுக தனியாகவும், காங்கிரஸ்+ விஜயகாந்த்+பாமக கூட்டணியும் நிற்பதை எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் வாய்ப்பு பிரகாசமாக இருப்பது காங்கிரஸ் விஜயகாந்த் கூட்டணிக்குத்தான். விஜயகாந்த ஆதரவாளர்கள் பெரும் உற்சாகம் அடைவார்கள். காங்கிரஸ் கூட தன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று பெரும் பணத்தை கொட்டலாம். பாமகவும் படு தீவிரமாக தரையில் இறங்கும். இதில் கடைசி நேரத்தில் மதிமுக இணைவதற்கும், திருமாவளவன் இணைவதற்கும் கூட வாய்ப்புகள் உண்டு. இப்படிப்பட்ட கூட்டணி நிச்சயம் பெரு வெற்றி பெறும். முடிவுகள் சற்று சிக்கலாகத்தான் இருக்கும். பல இடங்களில் நூறு இருநூறு வாக்குகளில் ஒரு கட்சி செயிப்பது நடக்கலாம். இதனால், எம்.எல்.ஏ சீட்டுகள் கூட மூன்றாக பிரியவும் வாய்ப்புள்ளது. இப்படி ஆகும்போது, முதன்முறையாக அதிமுக, திமுக இரண்டுமே பெரும்பான்மையை எட்டமுடியாமல், காங்கிரஸ்+விஜயகாந்த் கையில் ஆட்சியின் முடிச்சு அமைய நேரிடும். ஆனால் இப்படிப்பட்ட தேர்தல் கூட்டணியின் முடிச்சு காங்கிரஸிடம்தான் இருக்கிறது. இதற்கு விஜயகாந்த் நிச்சயம் ரெடியாகத்தான் இருப்பார். ஆனால் சோனியாவும் மற்ற டெல்லிவாலாக்களும் இப்படிப்பட்ட முயற்சியை எடுப்பார்களா என்பது சந்தேகமே. இதனை உடைக்க திமுகவும் அதிமுகவும் பகீரத பிரயத்தனம் எடுப்பார்கள். சென்ற லோக்சபா தேர்தலின்போது இப்படிப்பட்ட கூட்டணியை விஜயகாந்த் முயன்றும் முடியாமல் போனது.
இந்த கூட்டணியில் இந்த கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாவிட்டாலும், இவர்களுக்கு பாதகமில்லாத நிலை ஏற்படும்.காங்கிரஸை பொறுத்தமட்டில் 234 தொகுதிகளில் 60 தொகுதிகளை திமுகவிடமிருந்து வாங்குவதே பகீரத பிரயத்தனமாக இருக்கிறது என்பது கண்கூடு. சென்ற முறை திமுக பல தொகுதிகளை காங்கிரஸிடம் கொடுத்துவிட்டதால்தான் அது மைனாரிட்டி அரசாக ஆனது என்று திமுகவினர் கருதுகிறார்கள். ஆகையால் தற்போதைய நிலையில் இதே 60 தொகுதிகளை மீண்டும் பெறுவதே கடினம். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் நூறு தொகுதிகளாவது தங்களுக்கு வேண்டும் என்று கேட்டுகொண்டிருக்கிறார்கள். இது நிச்சயம் கிடைக்காது. அப்படி நூறு தொகுதிகளை திமுக காங்கிரசுக்கு கொடுத்தால்,வெறும் 134 தொகுதிகளில் எப்படி திமுக ஜெயிக்க முடியும்? விதிவசத்தால் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுகவுக்கு இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டால், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க திமுக ஒப்புக்கொள்ளுமா? நிச்சயம் ஒப்புக்கொள்ளாது. ஆகையால், காங்கிரசுக்கு நூறு தொகுதிகள் கிடைக்காது என்பது மட்டுமல்ல, தற்போதைக்கு 60 தொகுதிகள் கூட கிடைக்காது என்பதுதான் உண்மை. இது காங்கிரஸ் அவல் கொண்டுவரவும், திமுக உமி கொண்டுவரவும், ஊதி ஊதி திமுக தின்பது போன்றதுதான். காங்கிரஸின் வாக்குவங்கி இல்லையேல் திமுக ஜெயிக்க முடியாது என்ற நிலை இருக்கும்போது மத்திய அரசாங்கத்தில் ஆதரவு என்ற ஒரே விஷயத்துக்காக திமுகவின் அத்தனை அவமரியாதைகளையும் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் சந்தித்துகொண்டிருக்கிறது. ஆனால், விஜயகாந்துடன் இணைந்தால், 100 தொகுதிகளில் காங்கிரசும், 100 தொகுதிகளில் விஜயகாந்தும், மற்ற தொகுதிகளில் இந்த கூட்டணியுடன் இணையும் மற்ற கட்சிகளுக்கு கொடுக்க 40 தொகுதிகளும் உண்டு. முக்கியமாக வட மாவட்டங்களில் இருக்கும் பாமகவுக்கு இந்த தொகுதிகள் வழங்கப்படலாம். இப்படிப்பட்ட ஒரு அருமையான வாய்ப்பு மூன்று கட்சிகளுக்குமே மற்ற கூட்டணிகளில் கிடைக்காது.
காங்கிரசுக்கு நல்லது, காங்கிரஸின் எதிர்காலத்துக்கு நல்லது என்று பார்த்தால், காங்கிரஸ்+விஜயகாந்த்+பாமக கூட்டணிதான்.
திமுகவுக்கு நல்லது என்று பார்த்தால், திமுக+காங்கிரஸ்+பாமக கூட்டணி கூடவே மும்முனை போட்டி அல்லது நால்முனை போட்டி.
அதிமுகவுக்கு நல்லது என்று பார்த்தால், அதிமுக+விஜயகாந்த்+கம்யூனிஸ்டுகள் கூட்டணி அல்லது அதிமுக+காங்கிரஸ்+கம்யூனிஸ்டுகள் கூட்டணி.
விஜயகாந்துக்கு நல்லது என்று பார்த்தால், காங்கிரஸ்+விஜயகாந்த் கூட்டணி அல்லது அதிமுக+விஜயகாந்த்+கம்யூனிஸ்டுகள் கூட்டணி.
பாஜகவுக்கு நல்லது என்று பார்த்தால், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்று இரண்டே கூட்டணிகளாக போட்டியிடுவதும், மூன்றாவது அணியாக பாஜக மட்டுமே நிற்பதும். இதனால் இரண்டு கட்சிகளும் பிடிக்காதவர்கள் பாஜகவை தேர்ந்தெடுக்க வாய்ப்புண்டு.
பாமகவுக்கு நல்லது என்று பார்த்தால், அவர்கள் காங்கிரஸ், விஜயகாந்த் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைவதுதான். அது நடக்கவில்லை என்றால் அதிமுக கூட்டணியில் இணைவது.

Series Navigation