நிகழ்தலின் நொடி
ஷம்மி முத்துவேல்

பகர்தலும் புசித்தலும்
இரு வேறன்ன உணர்தலால்
இழுத்தும் பின்பு விடுத்தும்
பிணைக்கப் படுகின்றது
கடிகாரத்தின்
நிசப்த நொடிகள்
ஒரு யுகத்தின் ஆயுள் கொண்டு
நிகழ்வுகள் நீள்கின்றன
நிச்சலனத்தின் அசுர ஒளியில்
தாக்கம் கொண்டு
சுவரோர மேலிடுக்கில்
இருட்டு விழிகள் கொண்ட
வாலறுந்த பல்லியொன்றின்
நாக்கு நீட்டலில் ஒட்டியிருந்தது
இரையின் பரிதவிப்பு
வலைக்கயிறு இறுக்கி முடித்து
இறுமாந்த சிலந்தியின் அலட்சிய நோக்கு
பிரிந்த ஓர் நூலிழையின்
துணை கொண்டு ஊஞ்சலாய்
மரணப் பயணம்
அமானுஷ்ய அமைதி பரவ
மௌனம் காக்கிறது
சிலந்திவலை
ஷம்மி முத்துவேல்
சின்ன தாராபுரம்