சொல் ரசனை

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

பயணிஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ‘ரசனை’ என்னும் தலைப்பிலான கூட்டத்தில் பேசிய உரையின் அடிப்படையிலான கட்டுரை

சொற்கள் ரசனை. இது என்ன புதிதாக இருக்கிறது? சில விஷயங்களை ரசிப்பது நேரடியானது, – கவிதை, கதை, நாவல்கள், இசை, சமையல் என்று பல விஷயங்களை ரசிக்க முடியும். இது என்ன சொற்கள் ரசனை?
இது ஒரு முக்கியமான விஷயமெனப் படுகிறது. இது விஷயங்களின் அடிப்படையைத் தொடுகிற முயற்சியாகத்தான் அமையவேண்டியிருக்கும். எனவே, இது ஒரு prosaic-ஆன பேச்சாகத்தான் இருக்கும். ரசனையைப் பற்றிய பேச்சாக இருந்தாலும், ‘ரச’த்துக்கு முதன்மை தராமல் இருக்கும்.
Man is a speaking animal என்றார் Jean Piaget. விலங்குகளையும் மனிதரையும் பிரித்துக் காட்டுகிற இது, ஒலியெழுப்புதலை ஒட்டிய ஒரு கோட்பாடல்ல; சொற்களைப் பயன்படுத்துதலை ஒட்டிய கோட்பாடு. இது, மனிதனையும், பிற விலங்குகளையும் வேறுபடுத்திக்காட்டுவது என்னும் அடிப்படையில் அவர் சொல்கிறார்.
இங்கு பேசின பலர் கூறிய ரசனைகளைப் பார்த்தோமெனில், அவை சொற்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காணலாம். சொல் இல்லையெனில், கவிதை, கதை, போன்றவை கிடையாது. சொற்களை பெரும்பாலும் பயன்படுத்துகிற நாடகம், திரைப்படம் போன்றவை கிடையாது. அவை மட்டுமின்றி, சொற்களை அந்த அளவு பயன்படுத்தாத, சமையல், இசை போன்ற துறைகளிலும், அத்துறைகளுக்கான ரசனையை வெளிப்படுத்த, சொற்கள் தேவைப்படுகின்றன.
இனி, சொற்கள் என்பதைப் பற்றியும், ரசனை என்பதைப் பற்றியும் சுருக்கமாகப் பார்க்கலாம்.
முதலில், சொல் என்றால் என்ன? நம் தொல்காப்பியம் சொல்கிறது, எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. அதாவது, பொருள் கொண்ட ஒலிகள் சொற்கள் எனலாம். ‘வா’ என்ற ஒலிக்கு, அழைத்தல், come, என்கிற பொருள் இருப்பதால், அது சொல்லாகிறது. ஒரு சொல்லுக்கு என்ன வேலை இருக்கிறது? முதலாவதாக, சொல் ஒரு பொருளைக் குறிக்கிறது. அதாவது, ஒரு பொருளின் பொருண்மையையோ, அதன் குறியீட்டையோ குறிக்கிறது – Objects. இது ஒரு ஒலிபெருக்கி, microphone எனும் போது, இந்த வேலைதான் நடக்கிறது. இன்னொரு வேலை, அப்பொருளின் தன்மையைக் குறிப்பது – Attributes of objects. உயரமான மரம் என்னும்போது, உயரம் என்னும் கோட்பாட்டை, மரத்தின் தன்மையை அச்சொல் குறிக்கிறது. மூன்றாவதாக, Osborne என்னும் அறிஞர், இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதியில் முக்கியமான ஒரு கருத்தை முன்வைத்தார். Man has created a world of words. So, we live in two worlds – one, made up of objects, and the other, made up of words என்றார். இது முக்கியமானது. நாம் ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது, அச்சொல், ஒரு பொருளைக் குறிக்கலாம்; அதன் தன்மையைக் குறிக்கலாம். இதற்கும் மேலாக, சொல்லே ஒரு object-ஆக, ஒரு பொருண்மையான பொருளாக மாறிவிட்டிருப்பதைக் காண்கிறோம்.
இரண்டவதாக‌, சொல்லின் ரசனை பற்றிப் பார்ப்போம். முக்கியமாக, ஒரு சொல் இருப்பதே, ரசிக்கக்கூடிய விஷயம் தான். இது எப்படி? ஒரு சமுதாயத்தில், ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு சொல் இருக்கிறது என்றால், அந்தச் சமுதாயம், தங்களுக்கு இப்படி ஒரு சொல் வேண்டும் என்று உருவாக்கிக் கொண்டதால், அச்சொல் இருக்கிறது. இந்த அளவிலேயே, அது பற்றிய ஒரு கருத்து, ரசனை வந்துவிடுகிறது. நாம் இது குறித்து உரையாடப் போகிறோம் அல்லது கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளப் போகிறோம் என்று முடிவு செய்வதால் – அவசியம் எழுவதால் – அச்சொல் உருவாக்கப்படுகிறது.
1937-ல் தாமஸ் என்பவர் தனது ஆராய்ச்சியில், அரேபிய மொழியில் ஒட்டகம் தொடர்புடைய 6000 சொற்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். பிரான்ஸ் போஅஸ் என்ற அறிஞர், எஸ்க்கிமோக்களை பற்றிய தனது ஆய்வில் பனியைக் குறிக்க 400-க்கும் மேற்பட்ட சொற்கள் வழங்குவதாக கூறுகிறார். எஸ்க்கிமோக்கள் பனியின் வெவ்வேறு பரிமாணத்திற்கும் வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, புதிதாய் விழுந்த பனி, உறைந்த பனி, உறைந்து, சூரிய ஒளியில் உருகி, மீண்டும் உறைந்த பனி, என்கிற வெவ்வேறு பரிமாணங்களுக்கு, அவர்கள் தனித்தனியே சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அந்த வேறுபாடு அவசியமானது. அந்த சொற்களின் பொருள் வேறுபாட்டை, ‘ரச’ வேறுபாட்டைக் கண்டு, உணர்ந்து வாழ்வதுதான் ரசனை. நம்மைப் பொறுத்தவரை, பனி வெறும் பனிதான். முதலில் விழுந்த பனிக்கும், முந்தைய நாள் விழுந்து இறுகியுள்ள பனிக்கும் நமக்கு ரச வேறுபாடு இல்லை. அந்த வேறுபாட்டை நம்மால் ரசிக்க முடியவில்லை. முக்கியமாக, சொற்களைப் பயன்படுத்தி ரசிக்க முடியவில்லை. இந்த ரசனை வேறுபாட்டை எஸ்கிமோக்கள் செய்திருக்கிறார்கள்.
ஹெரொல் மற்றும் கிராண்டே என்னும் இருவர், ஹோப்பி மொழியை ஆராய்ந்ததைப் பற்றிப் படித்தபோது, ஒரு தகவலைக் கண்டேன். ஒரு திறந்திருக்கும் பாத்திரத்தை மூடி ஒன்றை இட்டு மூடுவதற்கு, ‘ஊட்டா’ என்ற சொல்லையும், ஒரு பாத்திரத்தின் மீது வேறொரு பொருளை வைத்து மூடுவதற்கு ‘மொனாமோ’ என்ற சொல்லையும் ஹோப்பி மொழி பயன்படுத்துகிறது. இந்த வேறுபாட்டில் ஒரு ரசனை இருக்கிறதில்லையா?
மேற்கண்ட பிற மொழி எடுத்துக்காட்டுக்கள், சொற்கள் திகழ்வதிலேயே உள்ள ரசனையைப் பற்றி மேற்கோடிட்டு காட்டவேயாகும். இந்த ரீதியிலேயே, தமிழில் சில விஷயங்களுக்கு சில சொற்கள் இருக்கின்றன என்பதையே நாம் ரசிக்கக் கூடிய ஒன்றாகப் பார்ப்பதில்லை. எடுத்துக்காட்டாக, ‘கம்பலை’ என்கிற சொல். பல இலக்கியங்களில் இது பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ஒரு சொல்லாக இதை நாம் ரசித்திருக்க மாட்டோம். கண்ணகி, கண்ணீரும் கம்பலையுமாக வந்தாள் என்ற சொற்றொட‌ரில் உள்ள கம்பலை என்ற சொல்லுக்கு என்ன பொருள்? நாம் பேசிவிடுகிறோம்; அழுதுவிடுகிறோம். ஆனால், சமயங்களில், அழுகையூடே பேச வரும்போது, அழுகை மேலோங்கி, பேசும் சொற்கள் ஏதுமே புரியாமல், வெறும் பேசும் முயற்சியாய், ஒலிகளாய், முழுமையான சொற்கள் ஏதுமின்றி அழுகையுடன் கலந்து வரும். நமக்கேகூட, நாம் என்ன பேசுகிறோம் என்ற சொற்றொடர் அமைப்பு சரியாக இருக்காது. கேட்பவருக்கோ, ஒன்றும் புரியாது – நாம் ஏதோ பேச முயற்சிக்கிறோம் என்பதைத் தவிர. அதன் பெயர் கம்பலை.
அடுத்ததாக, ‘விழலுக்கு நீர் பாய்ச்சி மாய மாட்டோம்’ என்கிற பாரதியின் வரிகளைப் பார்ப்போம். ஓரிடத்தில் மிகுதியாகித் தங்கி நிற்கும் நீர், அங்குள்ள தாவரங்களை வளர்க்காது, அழுக வைத்து, அழியச் செய்து கொண்டிருக்கும். அத்தகைய நிலப்பகுதிக்கு விழல் என்று பெயர். இப்போது, பாரதியின் வரியை மீண்டும் பார்ப்போம். செல்வமாகக் குவிந்து சீரழிந்துக் கொண்டிருக்கிறது இங்கிலாந்து. அப்படிப்பட்ட ஆங்கிலேயருக்கு, இந்தியர்களாகிய நாங்கள் உழைத்து மாய மாட்டோம் என்கிறார் பாரதியார். இந்த இடத்தில் பயன்பட்டிருக்கிற, விழல் என்ற சொல் இருப்பதே ஒரு ரசனை தான்.
இப்படி மெல்லிய வேறுபாடுகளைக் காட்டும் சொற்களின் அழகுதான் – இப்படிப்பட்ட ஒரு ‘ரச’த்துக்கு ஒரு சொல் உருவாக்கி நாம் பயன்படுத்துகிறோம் என்பது தான் – சொல் ரசனை.
ஆகையால் இங்கே வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், நாம் வார்த்தைகளைக் கவிதையில் ரசிக்கிறோம்; கதையில் ரசிக்கிறோம்; நாடகத்தில் ரசிக்கிறோம்; இன்னும் பல வகைகளில் ரசிக்கின்றோம். இவை போக‌, இப்படிப்பட்ட ஒரு சில சொற்கள் – நமது ‘ரசனை’ வெளிப்பாடாகத் தோன்றிய சொற்கள் இருப்பதற்காகவே – அவற்றின் அடிப்படைப் பொருளுக்காகவே, அவற்றை ரசிக்க முடியும்.

msridharan@gmail.com

Series Navigation

பயணி

பயணி