செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

முனைவர் மு. பழனியப்பன்


முனைவர் மு. பழனியப்பன்
தமிழ்ப் பேராசிரியர்
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை

செம்மொழி இலக்கியங்கள் என்ற ஒரு தொகுப்பு தற்போது தமிழ் இலக்கியப் பரப்பிற்குக் கிடைத்துள்ளது. இதன் முலம் தமிழ் செம்மொழி இலக்கியத் தகுதியைப் பெற்றிருக்கிறது. இந்தத் தகுதிக்கு மேலும் வளம் சேர்க்கச் செம்மொழி இலக்கியங்களில் உள்ளக் கருத்துக்களைக் களஞ்சியங்களாக்கிப் பலரும் எளிதில் பயன் கொள்ளச் செய்ய வேண்டும். இந்த நோக்கத்தினை எட்டுவதற்குரிய சில வழிமுறைகளை இக்கட்டுரைச் சுருக்கம் எடுத்துரைக்கின்றது.

செம்மொழி இலக்கியங்களைப் பற்பல குழுவினர் வலையேற்றம் செய்துள்ளனர். இவற்றுள் சிறந்ததைத் தேர்வு செய்து கொண்டுச் செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கல் என்பது அடிப்படைத் தேவையாகும். அக்களஞ்சியம் பின்வரும் நிலையில் பல்வேறு பகுப்புகளைக் கொண்டதாக அமைந்தால் பெரும்பயன் நல்கும்.

சொற்களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்களில் உள்ள சொற்களைப் பகுப்பாய்வு செய்கின்ற முயற்சியை முதலில் தொடங்க வேண்டும். பெயர்ச் சொற்கள், வினைச்சொற்கள், உரிச் சொற்கள், இடைச் சொற்கள் முதலான நிலைகளில் முதலில் பகுப்பாய்வு செய்து இந்தச் சொற்களை வகைமை செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக வினைச் சொற்களை முற்று, எச்சம், குறிப்பு, தெரிநிலை போன்ற துணைநிலைகளிலும் பகுப்பாய்வு செய்து கொள்ள வேண்டும். இதுபோன்று பெயர்ச் சொற்களையும் காரண, இடுகுறி, விரவு, அஃறிணை, உயர்திணை போன்ற வகைகளிலும் பிரித்துக் கொள்ளவேண்டும். இடைச்சொற்கள், உரிச்சொற்கள் போன்றவற்றையும் அவற்றின் துணைவகைகளுடன் பிரித்து அமைத்துக் கொள்ள வேண்டும். தற்போது நிறைவான செம்மொழி இலக்கிய இலக்கணச் சொற்பட்டியல் கிடைத்துவிடும்.

செம்மொழிக் களத்தில் உள்ள ஒரே இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். (இறையனார் களவியல் அகப் பொருள் பற்றிய செய்திகளை மட்டும் கொண்டது) இதனுடன் மேற்கண்ட சொற் களஞ்சியத்தை ஒப்பிட்டு ஆராய வேண்டும். அப்படி ஆராய்கின்றனபோது இந்த இலக்கியங்களின் காலமும், இந்த இலக்கியத்திற்கான இலக்கணத்தின் காலமும் ஒத்துப்போகும் சூழல் ஏற்படும். அப்படி ஏற்படுகையில் செம்மொழி நூல்களின் காலத்தையும், இலக்கண வரம்புகளின் காலத்தையும் தெளிவு படுத்திட முடியும்.

இந்தச் சொற்பகுதிகளை வைத்துக் கொண்டு இந்தச் சொற்களின் வளர்ச்சி, தேய்வு நிலை போன்றனவற்றை இதற்குப் பின்னுள்ள இலக்கண இலக்கிய நூல்களில் கண்டு கொள்ளவும் முடியும். சொற்களின் கட்டுமானம், சொற்றொடர்களின் அமைப்பு முறை முதலான கொண்டு செம்மொழி இலக்கியங்களின் காலத்தினை உணர்ந்து கொள்ளமுடியும்.

மொழியியல் செய்திகள்
செம்மொழி இலக்கியங்களில் உள்ள மொழியியல் செய்திகளையும் தொகுத்துக் களஞ்சியமாக்க இயலும். செம்மொழி இலக்கியத்தின் சிறப்புக்களுள் ஒன்று அதன் மொழிக் கொள்கை என்பதாகும். அந்த மொழிக் கொள்கை உருவாக்க, உறுதிப்படுத்த இந்தக் களஞ்சியம் உதவும்.

ஆசிரியர் பெயர்க்களஞ்சியம்.
செம்மொழி நூல்களைப் படைத்த ஆசிரியர்கள் பற்றியதானக் குறிப்புகளைத் தரும் ஆசிரியர் பெயர்க் களஞ்சியத்தையும் உருவாக்கிட வேண்டும். இதன் வழி செம்மொழிப்படைப்பாளர்களை இனம் காண முடியும்.

ஊர்ப்பெயர் களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்கள் தோன்றிய ஊர்ப் பெயர்கள் தொகுக்கப்பட வேண்டும். இதனோடு புலவர்களின் ஊர்கள், அரசர்களின் ஊர்கள் போன்றனவும் வெளிப்படுத்தப்படலாம். இவ்வாறு வெளிப்படுத்துகையில் அவற்றை இக்காலநிலையில் நிலவியல் கண்ணோட்டத்துடன் இணைய அளவில் வெளிப்படுத்த இயலும். இதன் காரணமாக தமிழர்கள் பரவி இருந்த பகுதிகளை அறிந்து கொள்ள இயலும்.

மேலும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஊர்ப்பெயர்களையும் வகைமை செய்ய வேண்டும். இவற்றையும் வரைபட அளவில் தரவேண்டும். இதன் காரணமாக தமிழர்களின் முந்தைய நிலப்பரப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள இயலும்.

முடிந்தால் ஊர்களின் பண்டைக் காலப் பெயர் தற்போது எவ்வாறு மருவியுள்ளது என்பதையும் கண்டறிந்து வெளிப்படுத்தலாம். தற்போதும் அதே ஊர்ப் பெயரைச் சொல்லி அழைக்க அது உதவும்.

உயிர்களின் களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்களில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளைப் படங்களுடன் அறிவியல் தகவல்களுடன் வெளிப்படுத்தும் களஞ்சியங்களை உருவாக்க வேண்டும்.

அறிவியல் செய்திகள்
செம்மொழி இலக்கியங்களில் காணலாகும் அறிவியல் செய்திகள் அதாவது நிலவியல் செய்திகள், வானியல் செய்திகள், பேரிடர் மேலாண்மைச் செய்திகள், இயந்திரவியல் செய்திகள், வேதியியல் செய்திகள், தகவல் தொடர்பு செய்திகள் போன்றவற்றையும் களஞ்சியங்களாக்கித் தரலாம்.

தொடர்களின் களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்களில் காணப்படும் புகழ் மிக்கத் தொடர்களைத் தொகுத்து ஒரு களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும். இவற்றை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வெளியிடலாம்.

அணிக் களஞ்சியம்.
செம்மொழி இலக்கியங்களில் உவமை அணி போன்ற பல அணிகள் பயின்று வந்துள்ளன. இவற்றில் பயின்று வந்துள்ள அணிகளைத் தொகுத்து வழங்கும் ஒரு களஞ்சியத்தையும் துணைக் களஞ்சியமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.

யாப்புக் களஞ்சியம்
செம்மொழிகளில் பயன்படுத்தப்படும் யாப்பு பற்றிய புள்ளி விவரங்களை அறிய யாப்புக் களஞ்சியம் அவசியமான தேவையாகும். தொல்காப்பியச் செய்யுளியல் நெறிப்படி செம்மொழி இலக்கியங்கள் படைக்கப் பெற்றிருக்கிறதா அல்லது ஏதேனும் மாற்றம் பெற்றுற்ளதா என்பதையும் இதன் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.

பாடுபொருள் களஞ்சியம்

தொல்காப்பியம் காட்டும் அகம், புறம் பற்றியதான பாடுபொருள் இலக்கணங்கள் எவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் அமைந்துள்ளன என்று கண்டு தெளியும்போது இவற்றின் காலத்தினை அறிந்து கொள்வதில் தெளிவு பிறக்கும். எனவே பாடுபொருள்கள் பற்றிய களஞ்சியங்களும் உருவாக்கப்பட வேண்டும்.

திணைத் துறைக் களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்களில் திணை, துறைப் பகுப்பு முறை என்ற முறை பயன்படுத்தப்பெற்றுள்ளது. இந்தப் பகுப்பிலும் தொகுப்புனை உருவாக்க வேண்டும். குறிஞ்சி நிலப் பாடல்கள் அனைத்தும் ஒரு பிரிவாக அமைப்பது போன்றதான களஞ்சியங்களை உருவாக்கிட வேண்டும்.

அறக்கருத்துக்கள் அடங்கிய களஞ்சியம்
அறநூல்கள் பெரும் அளவில் செம்மொழி இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றில் இருந்து உலகப் பொதுமையை வலியுறுத்தும் நல்ல அறக் கருத்துக்கள் தொகுக்கப் பெற்று களஞ்சியமாகத் தரப்பெறலாம். இவற்றையும் ஆங்கில மொழியில் பெயர்த்து வெளியிடலாம்.

இசை, நாடகக் குறிப்புகளுக்கான களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்கள் வழித் தெரியவரும் இசைக்கருவிகள், பண், இசை நுணுக்கங்கள் போன்றவற்றைத் தொகுத்து ஒரு களஞ்சியமாக்கலாம். இவற்றுள் உள்ள நாடகச் செய்திகள் அனைத்தையும் ஒரு களஞ்சியமாக்கலாம்.

மெய்ப்பாடுகளுக்கான களஞ்சியம்
இலக்கியத்திற்கு உணர்ச்சி முக்கியமான பண்பாகும். இந்த முக்கியமான மெய்ப்பாட்டு பண்புகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக் கொண்டு வந்து ஒரு தொகுப்பாக்கித் தருதல் மிக்கத் தேவையுடையதாகும்.

பண்பாட்டுக் களஞ்சியம்
குறிக்கத்தக்கத் தமிழ்ப்பண்பாடுகள் செம்மொழி இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றைத் தொகுத்துத் தக்க புகைப்படங்களுடன் தருவதாக இந்தப் பண்பாட்டுக் களஞ்சியம் அமையலாம்.

நாகரீகக் களஞ்சியம்
தமிழர் நாகரீகம் பற்றிய பல செய்திகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. இவற்றை இக்களஞ்சியம் வெளிக் கொணரல் வேண்டும்.

பழக்க வழக்கக் களஞ்சியம்
தமிழர் தம் பழக்க வழக்கங்கள் போன்றனவற்றைத் தொகுக்க இக்களஞ்சியம் உதவும். குழந்தை பிறந்ததும் செய்யும் சில வழிமுறைகள், இறந்தார்க்குச் செய்யும் வழிமுறைகள் முதலான பல பழக்க வழக்கச் செய்திகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த இந்த இழை உதவும்.

வரலாற்றுச் செய்திகளுக்கான களஞ்சியம்
இந்த இணைப்பில் தமிழக வரலாற்றைப் பற்றிய செம்மொழி இலக்கியப் பதிவுகள் இணைக்கப் பெற்றிருக்கும். இவற்றைத் தக்கச் சான்றுகளுடன் நிறுவும்படியான படங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள் முதலியன கொண்டு மேலும் சீர்மைப்படுத்தலாம்.

இனக்குழுக் களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்களில் பல இனக்குழுக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள முடிகின்றது. அவற்றைத் தொகுத்துத் தருவது இக்களஞ்சியமாக இருக்கலாம்.

ஆய்வுக்களஞ்சியம்
செம்மொழி இலக்கியங்கள் பற்றி இதுவரை நடந்துள்ள ஆய்வுகள், வெளிவந்துள்ள பதிப்புகள், விளக்கப்படுத்தியுள்ள உரைகள், முனைவர் பட்ட ஆய்வுகள், எம். பில் பட்ட ஆய்வுகள் முதலியன தொகுத்து இவ்விணைப்பாக வழங்கப் பெறலாம்.

மொழிபெயர்ப்புக் களஞ்சியம்
இதுவரை வெளிவந்துள்ள செம்மொழி இலக்கிய மொழிபெயர்ப்புகள் பற்றிய தகவல்கள் மற்றும் அவற்றின் பகுதிகள் அனைத்தும் இப்பகுதியில் கிடைக்கும்படி அமைத்தால் உலகம் யாவையும் செம்மொழித் தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளளும்.

செம்மொழி வரலாறு
தமிழ்ச் செம்மொழியாவதற்கு உழைத்த பெருமக்கள் பற்றிய செய்திகள் இவற்றில் கிடைக்கச் செய்யலாம்.

இவ்வாறு பற்பல நிலைகளில் இந்தக் களஞ்சியப் பணிகள் செய்யப் பெறலாம். இவற்றுக்குத் தக்கத் தமிழ் ஆய்வாளர்களும், தமிழறிஞர்களும் தங்கள் உழைப்பினை நல்க வேண்டும். குறிப்பாக திருப்பச் செய்தல், செய்ததையே செய்தல் என்பதைக் குறைக்க இந்தக் களஞ்சியம் உதவும். மேலும் இந்தக் களஞ்சியத்தை வளப்படுத்த அசைபடங்கள், புகைப்படங்கள், காணொலிகள், பேச்சொலிகள் போன்றன இணைக்கப்படலாம். இதன் வழி ஒப்பற்ற பணித்திட்டம் ஒன்றைச் செயல்படுத்திய பெருமை உலகத்தமிழருக்குக் கிடைக்கும்.

muppalam2006@gmail.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்