சும்மா ஒரு ஞாயிற்றுக் கிழமைக் காலைப் பாட்டு

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue

மாம்பலம் கவிராயர்


முச்சந்திப் பிள்ளையாரே மூணாம் தெருமுனையில்
வச்சகல்லில் தாடியோடு வளம்சேர்க்கும் பெரியாரே
வக்கணையாய் கவிபொழிய வார்த்தை தாரும் – இன்றேல்
சக்கைதுப்பத் தமிழ்சினிமா போயிடுவேன் சாக்கிரதை.

பக்கத்து ஓட்டலில் தம்ளர் டபரா
கரண்டிச் சத்தமும் காசெட் வேதமும்
மொசைக் தரையில் கோலக் குழலும்
அருகில் கேட்கப் பொழுது புலர்ந்தது

மாமிகள் கூடும் இசையரங் கத்தில்
சிவப்புச் சட்டைகள் நிரம்பி வழிய
வெள்ளைக் காரர் நேற்றுப் பேசிய
சள்ளை மென்று தெருவில் பெரிசுகள்.

இணையம் சுளுவாய் வசப்படச் சான்றோர்
சொன்னபடிக்குத் தெருவிலே தோண்டிக்
கம்பி புதைத்துப் போனவர் போக
மழைக்குத் தெரியுமா பள்ளமும் மேடும் ?

பேருந்து ஓடா வீதியில் வண்டி.
போலீசுக் காரர்கள் கடந்து போக
சிகரெட் எடுத்துப் புகைக்க நின்றவன்
முத்துக் கருப்பனாய் என்னைப் பார்க்கிறான்.

சுந்த ரேசக் குருக்கள் பிள்ளை
சிட்னி கோயிலில் பூஜை செய்ய
நாளை பறக்கிறான். மொப்பெட் புரோகிதர்
சிக்னலில் சொல்லப் பச்சை விளக்கு.

தீவனம் தவிர்த்த எருமைகள் இழுத்துத்
தின்றது போகச் சுவரில் மிஞ்சிய
போஸ்டரில் ராத்திரி சீரணி அரங்கில்
பாஸ்டர் தினகரன் ஜபம்செயப் போகிறார்.

பிளாஸ்டிக் உறையில் கங்கா தீர்த்தம்
பின்-அப் படத்து முன்னே செருகி
ஏகாதசிக்குப் புத்தகம் போட்டதைக்
கடையிலே வாங்கினால் கையெலாம் ஈரம்.

வேட்டியில் துடைத்து வீட்டுக்கு வந்தால்
வழியை மறித்தொரு கூட்டம் நிற்குது.
திருப்பதிக் கோவில் பெருமாள் தன்னோடு
தித்திப்பு லட்டும் பக்கத்தில் கிடைக்குதாம்.

கம்ப்யூட்டர் ஜாதகம் கணித்துத் தரப்படும்
துண்டுச் சீட்டை வாங்கி ஒருத்தர்
துளசி மடிக்க வைத்துக் கொண்டு
செல்போன் ஒலிக்கக் காதில் சேர்க்கிறார்.

‘அம்மி கொத்தலயோ ஆட்டுக்கல் கொத்தலயோ
வெட்டு கிரைண்டரிலே அரைக்கும்கல் பொளியலியோ ‘
கையில் பிள்ளையோடு கட்டிடங்கள் பார்த்து
கடப்பவள் குரலோடு திரும்பி வருகிறேன்.

Series Navigation