சி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

வைதீஸ்வரன்


(28. 12. 2003 சேலம் தமிழ்ச்சங்கத்தில் நடந்த விளக்கு விருது வழங்கும் விழாவில் வாசிக்கப்பட்டது.)

இன்று ஒரு முக்கியமான மூத்த கவிஞன் அவன் வாழும் காலத்திலேயே, தகுதியுள்ள ஒரு குழுவால் கெளரவிக்கப்பட்டு அவருக்குப் பாராட்டும் பணமுடிப்பும் வழங்குவது மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன்.

மேலும், பரிசளிக்கும் குழு சார்ந்தவர்கள் கவிஞன் வாழும் ஊருக்கே வந்து அவனுக்கு மரியாதை செய்வது இன்னும் விசேஷமானது. இது மணியின் பால் உள்ள பரிவையும் மதிப்பையும் மேலும் நிதர்சனமாக்குகிறது.

எனது நெடு நாளைய நண்பர், எனது சக கவிஞர் சி. மணி அவர்கள் ‘விளக்கு ‘ பரிசுக்கு முற்றிலும் தகுதியானவர் மட்டுமல்ல… இந்த வயது வரை அவர் இதற்காக காக்க வைக்கப்பட்டிருக்க வேண்டாமோ என்று எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது.

சி.சு செல்லப்பாவின் ‘எழுத்து ‘ பத்திரிகை ஒரு நான்கைந்து பெயர்களை கவனம் கொள்ளத்தக்க புதுக் கவிஞர்களாக அறிமுகப்படுத்தியது. அதில் முக்கியமான ஒருவராக சி.மணி கருதப்பட்டார்.

அவர் ஆசிரியர் பயிற்சிக் கல்விக்காக சென்னையில் குடி பெயர்ந்த போது தான் அவருக்கு செல்லப்பாவும் எழுத்து பத்திரிகையும் தெரிய வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த அறிமுகம் கூட நண்பர் ந. முத்துசாமியின் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் அனுமானம்.

1960 காலகட்டம்—-எழுத்து பத்திரிக்கை புதுக்கவிதை இயக்கத்தை நெறிப்படுத்தி ஸ்தாபிக்க முயன்று கொண்டிருந்த காலகட்டம். புதுக்கவிதை நிலைக்க வேண்டிய நியாயங்களையும் அதன் திசைகளை சோதனைகள் மூலம் தெளிவுபடுத்தி அதற்கு அங்கீகாரத்தை ஏற்படுத்துவதும் ‘எழுத்து ‘ பத்திரிகையின் முக்கியமான லட்சியமாக இருந்தது.

இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது சி.மணியின் கவிதைகளும், கவிதை இயல் பற்றிய அவர் கட்டுரைகளும் ‘எழுத்து ‘ பத்திரிகையின் நோக்கங்களுக்கு ஏற்புடையதாக, ஆதார உதாரணங்கள் தோற்றுவிப்பதாக அமைந்தன என்பது என் கணிப்பு. அறுபதுகளில் புதுக்கவிதை முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு இரண்டு விதமான பிரச்னைகள் எதிர்ப்பட்டன ஒன்று மலிந்து மக்கி சாரமற்றுப் போன மரபுக் கவிதைகளின் அலங்காரங்கள்-

இறுக்கமற்று தழுதழுக்கும் அதீத உணர்ச்சிப் பெருக்கு — இவைகளில் இருந்து கவிதையை மீட்பது. இரண்டாவது, மேற்கில் அறிவியல் சார்ந்த விஞ்ஞான அணுகுமுறைகளைப் பயன்படுத்தி புதிய வடிவங்களையும் புதிய சப்தத்தையும் உருவாக்கிக் கொண்ட புதுக் கவிதைகளில் சாதனைகளை தேர்ந்தறிந்து தமிழ் கவிதைகளுக்கு ஒரு ஆரோக்கியமான பாதிப்பை ஏற்படுத்துவது.

மேற்கூறியவை புதுக்கவிதை எதிர்கொண்ட பொதுவான சவாலாக தோன்றினாலும், ‘எழுத்தில் எழுதிய கவிஞர்கள் இத்தகைய பிரச்னையை முதல் முதலாக சந்தித்து தீர்வு காண வேண்டிய கட்டத்தில் இருந்தார்கள் என்பது என் கருத்து.

கவிஞர் சி.மணி ஆங்கில இலக்கியம் பயின்றவர். தமிழ்கவிதை மரபை நன்கு கற்றறிந்து ஆழமான பாண்டித்யம் உடையவர். படைப்பாற்றலும் வாழ்க்கைத் தத்துவங்கள் பற்றிய நுண்மையான சிந்தனைகளும் கொண்டவர்..

இந்த அறிவியல் தேர்ச்சியின் பலத்தில் அவர் சோதனை முயற்சிகளாக படைத்த ‘நரகம் ‘, ‘பச்சையம் ‘ ‘வரும்போகும் ‘ போன்ற நீண்ட கவிதைகள் ஆங்கில கவிதைகளின் குரலையும் தமிழ் மரபின் அடையாளங்களையும் பிரக்ஞையுடன் உபயோகப்படுத்தி ஒரு புதிய வடிவத்தை தமிழுக்கு தந்த முயற்சிகள். நவீனமாகிவரும் வாழ்க்கை சூழல்கள், கலாசார மாற்றங்களை சரிவர புரிந்து கொள்ள முடியாமல், தள்ளவும் முடியாமல் அள்ளவும் முடியாமல் அவதிப்படும் பாமர மனிதனின் பாலுணர்வு சார்ந்த உளவியல் பிரச்னைகள், வாழ்க்கையை நுனிப்புல் மேயும் தமிழ் சமுதாயப் பான்மைகள் இவைகள் தான் கவிஞர் மணியின் கவிதைகளுக்கு ஆதாரமான கருப்பொருள் என்பது என் கிரகிப்பு.

சி. மணி தமிழ் புதுக் கவிதைப் படைப்பில் புதிய திசைகளைக் காட்டியதோடு மட்டும் திருப்தி அடைந்துவிடாமல் தமிழ் சிறுபத்திரிகை பிரசுரங்களிலும் அக்கரை கொண்டவராய் அந்தத் துரையிலும் ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டியது இங்கே பெருமையுடன் நினைவு கூர வேண்டும்.

அவரும், ந.முத்துசாமி, கிருஷ்ணசாமி போன்ற நண்பர்களும் சேர்ந்து 1968ல் ‘நடை ‘ என்ற சிறு பத்திரிகையை கணிசமான முதலீடு செய்து தொடங்கினார்கள்… ‘நடை ‘ பத்திரிகை காலாண்டு பத்திரிகையாக திட்டமிடப்பட்டது. சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து ‘ சிறுபத்திரிகைக் களத்தில் எவ்வாறு அழுத்தமான பதிவை ஏற்படுத்தியதோ, அந்தப் பதிவின் இன்னொரு கிளையாக மேலும் விரிந்த தளத்தில் புதிய அம்சங்களோடு மிளிர்ந்தது நடை.

எழுத்து பத்திரிகைக்கு ஏற்பில்லாத சில புதிய கலை நோக்கங்கள் நடை இதழின் தொடக்கத்திற்கு காரணமாக அமைந்ததென்று தெரிகிறது… நடை, இலக்கியம் மட்டுமில்லாமல் பிற நுண்கலைகளின் பரிவர்த்தனைகளுக்கும் ஒரு ஊடகமாக இயங்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டது.. தமிழ் நாட்டின் சிறந்த ஓவியர்களின்

சித்திரங்கள் அதில் வெளியிடப்பட்டன… ந.முத்துசாமியின் நவீன நாடகங்கள் பிரசுரமாகின. இது காறும்

தனித்த துறைகளாக கருதப்பட்ட ஓவியங்களும் கவிதைகளும் இணக்கம் கொண்டு அவற்றின் ஆதார வேர்கள் ஒன்று தான் என்ற பிரக்ஞையை வாசகர்களுக்கு ஏற்படுத்தி ரஸனையை தரமாக்கியது.

நடையில் மிகுந்த கலை நயத்தோடு வெளிவந்த ஆடையற்ற பெண்ணின் கோட்டுருவப் படமும் அதற்கு பொருத்தமான ‘ஆசை ‘ என்ற என்னுடைய கவிதையும் எழுத்து பத்திரிகையில் வெளிவந்திருக்க முடியாது… புதுக்கவிதைக்கு இன்னொரு பரிமாணம் கூட்டி அதை செழுமைப் படுத்திய முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன ‘நடை ‘ மூலம் தான் அறிமுகம் பெற்றோர் என்று சொன்னால் அது தவறாகாது என்று கருதுகிறேன். அவருடைய பல அருமையான கவிதைகள் நடையில் பிரசுரமாகியுள்ளன…

நவீன ஓவியங்கள் பற்றிய கட்டுரைகள் நடையைத் தவிர வேறு தமிழ் பத்திரிகைகளில் அப்போது நான்

கண்டதாக நினைவில்லை. வே. மாலி என்ற புனைப்பெயரில் சி.மணி அவர்கள் புதுக் கவிதையின் அக புற வடிவங்களில் மிகுந்த சுதந்திரத்துடன் நிறைய உத்திகளை சாத்தியக் கூறுகளை செய்து காட்டினர்…புல்லாங்குழல் மாலியின் மனோதர்ம நிரவல்கள் போல் அவைகள் நூதனமாக வடிவ ஒழுங்குடன் கட்டமைக்கப்பட்டன.

நடை பத்திரிக்கை ஒரு குறிப்பிட்ட வாசகர் வட்டத்தை விரிவுபடுத்தி இலக்கிய விழிப்புணர்ச்சியை தூண்டிவிட்டது என்பதை எவரும் மறுக்கமுடியாது. மேலும் நடையை தொடர்ந்து வெளிவந்த சிறு பத்திரிக்கைகளின் மலர்ச்சிக்கும் நடை ஏதோ ஒருவிதத்தில் காரண ஊக்கியாக இருந்தது எனவும் எண்ணத் தோன்றுகிறது…..இரண்டு ஆண்டுகளே நீடித்து 8 பிரதிகளுடன் நின்று விட்டபோதிலும் அது நிறுத்தப்படுவதற்கு அடிப்படையான காரணம் தொடர்ந்து பத்திரிகையின் தரத்தைக் காப்பாற்றும் ஏற்புடைய நல்ல படைப்புகள் கால வரையறைகளுக்குள் வராதது தான் என்று தெரிவிக்கும் ஆசிரியர் கூற்று வித்யாசமாகவும் பாசாங்கற்றதாகவும் தொனிக்கிறது.

நண்பர் மணி அவர்கள் பல வருடங்களாக எழுதுவதில்லை. அவர் தொடர்ந்து எழுதாதது என் போன்ற சக கவிஞர்களுக்கு வருத்தமாகவும் தமிழுக்கு இழப்பாகவும் இருக்கிறது.

இருந்தாலும் அவர் எழுதி வைத்திருக்கும் கவிதைகள் இன்றும் உயிர்ப்புள்ளதாக இன்றைய தலை முறைக் கவிஞர்களுக்கு ஒரு செறிந்த அனுபவம் தருவதாக அமைந்துள்ளதை நான் உணர்கிறேன். இலக்கிய ஆர்வத்தின் காரணமாக அவர் அடைந்த பொருள் நஷ்டமும் கணிசமானது என்பதை நான் அறிவேன்.

சமீபத்தில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் முதுகலை மாணவி ஒருவர் ‘சி.மணி – வைதீஸ்வரன் கவிதைகளில் படிமங்கள் ‘ என்ற தலைப்பில் கருத்தாய்வு சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுக்கொண்டார் என்று தகவலை இங்கே தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன்.

சி.மணி ‘நடை ‘ யில் எழுதிய ‘முடிவு ‘ என்றொரு அருமையான கவிதை ஒன்று சாவைப் பற்றிய சிந்தனையுள்ளதாக இருக்கிறது.

‘முடியாதா சாவை சுடுகாட்டில் எரித்து விட ? என்று சவாலுடன் தொடங்கும் இந்தக் கவிதை, அழிவைத் தவிர்க்கமுடியாது என்று தத்துவார்த்தமான நியதிகளை பிரஸ்தாபித்து…

‘முடியுமா சாவை சுடுகாட்டில் எரித்துவிட ? என்ற நிராசை கலந்த ஞானத்துடன் முடிகிறது.

சி.மணி போன்ற நல்ல கவிஞர்கள் அவரை ஆதர்சமாகக் கொண்டு இன்று எழுதிவரும் இளங் கவிஞர்கள் மூலம் நீடித்து வாழ்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவரைத் தேர்வு செய்து கெளரவிக்கும் ‘விளக்கு ‘ பரிசுக் குழுவிற்கும் அதை அன்புடன் ஏற்றுக் கொண்ட நண்பர் மணிக்கும் என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

சி. மணியும், நானும் இருவருமே சேலத்தை சேர்ந்தவர்கள் என்று எண்ணும்போது எனக்கு கொஞ்சம் கர்வமாகவும் இருக்கிறது ‘.

——-

Series Navigation

வைதீஸ்வரன்

வைதீஸ்வரன்