சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கதிரேசனுக்கு எரிச்சல் வந்தது:

– கெவின்! அய்ம் ·பெடப் வித் யூ. இட்’ஸ் என·ப் டுடே லெட்’ஸ் கோ..என்று எழுந்துகொண்டான்.

கதிரேசன் கெவினும் இனவிருத்தி விடுதியிலொன்றிலிருந்தார்கள். கதிரேசனுக்கு 35வயது, கெவின் என்கிற ஜூனியர் கதிரேசனுக்கு, எதிர்வரும் 10ந்தேதி 6 வயது தொடங்குகிறது. கெவினுடைய பிறந்த நாளுக்கென பரிசினை தேர்ந்தெடுக்கவே தந்தையும் மகனுமாக இனவிருத்தி விடுதிக்கு வந்திருந்தார்கள். கெவினுக்குத் தோதாக கணினி தரவுகளின் அடிப்படையில் அவனுடன் விளையாட ஒரு குட்டிப் பாப்பாவையோ, குட்டிப் பையனையோ தேர்ந்தெடுக்கவேண்டும். ஒருவாரமாகவே கதிரேசனுக்கு இது உலக மகா பிரச்சினை. தன் ஆண் நண்பன் ஆபிரகாமை கதிரேசன் விவாகரத்து செய்தபிறகு, குடும்ப நீதிமன்றத்திடம் மூன்று வருடங்கள் போராடி கெவினை ஒருவாரத்திற்கு முன் வீட்டிற்குக் கொண்டுவந்திருக்கிறான். ஆபிரகாம் செல்லம் கொடுத்து கெவினைக் குட்டிச்சுவராக்கிவிட்டதாக கதிரேசன் நினைத்தான். கதிரேசனும் ஆபிரகாமும் ஐந்தாண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள், அப்போதுதான் ஆபிரகாம் கருத்தரித்தான். இருவருமாக தங்கள் வாழ்க்கையை சட்டபூர்வமாக்குவது என தீர்மானித்து உள்ளூர் நகரசபையில் அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்கள். மருத்துவர்கள் ஆண் குழந்தை என்று அறிவித்தபோது நண்பர்களிருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. தானே கருவுற்றதுபோல கதிரேசன் நண்பனைக் கவனித்துக்கொண்டான். தனியார் மகப்பேறு மனையொன்றில் ஆபிரகாமைச் சேர்த்த அன்று கதிரேசன் இரவு முழுக்க தூக்கமின்றி தவித்திருக்கிறான். கெவின் பிறந்த ஆறாவது மாதம் மீண்டும் தம்பதிகளுக்குள் பிரச்சினை வெடித்தது. கெவினிடத்தில் ஆபிரகாம் அதிக உரிமை உள்ளவன்போலக் காட்டிக்கொண்டது கதிரேசனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அற்ப பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமின்றி இருவரும் சண்டைபோட ஆரம்பித்தார்கள். ஆபிரகாம் நடவடிக்கைகளிளும் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. வீட்டிற்குத் தாமதமாக வர ஆரம்பித்தான். ஒரு தனியார் ஏஜன்சியைப் பார்த்து கதிரேசன் ஆபிரகாமை வேவு பார்க்கக் கேட்டுக்கொண்டான். அவர்கள் கொடுத்த தகவல்கள் பிரச்சினைகளின் பரப்பை அதிகரித்ததெனலாம். இருவரும் குடும்ப நீதிமன்றத்தில் சுமுகமாக பிரச்சினையை தீர்த்துகொள்வதென்று சம்மதித்தார்கள். பெற்றவனென்றவகையில் கெவினை வளர்க்கின்ற உரிமை தனக்குத்தான் உண்டென்று ஆபிரகாம் சொல்ல, நீதிமன்றமும் குழந்தையை ஆபிரகாமுடன் அனுப்பி வைத்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த ஆறாவது மாதம், ஆபிரகாம் வேறொருவனோடு குடும்பம் நடத்துவதை அறிந்து மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்றதில் ஒருவழியாக கெவின் கதிரேசனுடன் இருக்கலாமென்று தீர்ப்பாகியது. இப்போது கதிரேசனுக்குள்ள பிரச்சினை கெவினை எப்படி பார்த்துக்கொள்வதென்பது.

கதிரேசனின் தகப்பன் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் குடியேறியிருந்தான். கதிரசன் பிறந்தது, அஸ்டிக்மாட்டிஸ பிரச்சினைக்காக கண்ணாடி அணிந்தது, பதினான்கு வயதில் உடன் படித்த சாராவோடு ஒதுங்கியது, தாவர ஊட்டவியலில்(Plant nutition) முதுகலையை முடித்து முனைவரானதுதென்று தனக்குள்ள அமெரிக்க குடியுரிமைக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டிருக்கிறான். உலக அளவில் சந்தையைக் கொண்டிருந்த ·புளோரிடா வேளாண் நிறுவனமொன்றில் கதிரேசன் முக்கிய ஆராய்ச்சியாளன். நிர்வாக இயக்குனரின் வயதைக் கணக்கிற்கொண்டு அவரது வேலைபளுவை குறைக்க ஓர் இணை இயக்குனர் பதவியை அவனது நிர்வாகம் கூடிய சீக்கிரம் ஏற்படுத்தவிருந்தது.

கெவின் வந்த நாள் தொடக்கம் அலுவலகத்திற்கு ஒழுங்காக செல்லமுடியாத கவலை கதிரேசனை அரித்துக்கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் இணை இயக்குனராக பதவி உயர்வு கிடைக்க இருக்கிற நேரத்தில் இப்படியொரு சிக்கல். அருகிலிருந்த சிறுகுழந்தைகளுக்கான காப்பகத்தில் இவனது விண்ணப்பம் காத்திருப்போர் பட்டியலிலில் இருக்கிறது. தனது குடியிருப்புக்கு அதிக தூரத்திலில்லை என நினைத்த பிற காப்பகங்களிலும் முடியாதென கையைவிரித்துவிட்டார்கள். அவனது முகவரி அவர்களது எல்லைக்குள் வரவில்லையாம். அப்போதுதான் ஒரு பேமி சிட்டரை ஏற்பாடு செய்யும் எண்ணம் உதித்தது. தேவைக்கேற்ப ரொபோ பேபி சிட்டர்களை அனுப்பிவைக்கும் நிறுவனங்கள் காளான்கள்போக நகரமெங்கும் இருப்பதை அறிந்தே இருந்தான். இந்த யோசனை எப்படி தனக்கு முன்கூட்டியே தோன்றாமற் போயிற்று என்று நினைத்து தன்னைத்தானே கோபித்துக் கொண்டான்.

வில்சன் அவென்யூவில் உள்ள நிறுவனமொன்றில் பேபி சிட்டர் ரொபோக்களை தயாரித்து அளிப்பதாகக் கூறினார்கள். இணைய தளங்களிலும் அந்நிறுவனத்தையும் அதன் தயாரிப்புகளைக் குறித்தும் கடுமையான குற்றசாட்டுகளில்லை. நம்பலாம் போலிருந்தது. வயது, நிறம், எடை.. என்ற பொதுவான தேவைகளைத் தவிர்த்து கைகள், கால்கள், தோலின் நிறம் தலைமுடியென நமது விருப்பத்திற்கேற்ப 5000 டாலரிலிருந்து 10000 டாலர்வரை அதற்குச் செலவாகுமென்றும், முன்பணம் செலுத்திய இரண்டு வாரத்தில் பேபி சிட்டர் வீட்டிற்கு வந்திடுமென்றும் நிறுவனத்தின் வலைத்தளம் தெரிவித்தது. முயற்சி செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. சோதனைச்சாலையிலிருந்து மறுநாள் மாலை வீட்டிற்குத் திரும்பியபொழுது ‘Ideal Baby Sitter’ என்ற பெயர்கொண்ட அந்நிறுவனத்திற்குச் சென்று தனது தேவையைத் தெரிவித்தான். மறக்காமல் விசேட தகுதிகளாக தென்னிந்திய பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்களைக் குறிப்பிட்டிருந்தான். அங்கேயும் இவனைப்போலவே ஓர் தமிழிளைஞன் வரைகலை வடிவமைப்பாளனாக (Graphic designer) இருந்தது பிரச்சினையை எளிதாக்கியிருந்தது. இரண்டாம் நாள் இளைஞன் உருவாக்கியிருந்த வடிவ அமைப்பு இவனுக்குப் பிடித்திருக்க, அதை ஆன் லைனில் உறுதி செய்தான்.

அன்று மாலையே பேபி சிட்டர் ரொபோ வீட்டிற்கு வந்திருந்தது. காரை கராஜில் நிறுத்திவிட்டு, கெவினை கையிற் பிடித்துக்கொண்டு லி·ப்டைப் பிடித்து ஏழாவது மாடியிலிருக்கும் தனது குடியிருப்புக்கான கதவினை நெருங்கியபொழுதுதான், அதைக் கண்டான்: காஞ்சிப்பட்டும், ஒற்றைப்பின்னலும், மல்லிகை சரமுமாக காத்திருந்த பேபி சிட்டரைப் பார்த்ததும் அதிர்ச்சி. 21ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாட்டில் கூட இப்டியொரு தமிழ்ப்பெண் கிடைக்க வாய்ப்பில்லையென்று தோன்றியது. உயிருள்ள ஜீவனா, பருப்பொருளா என்ற சந்தேகம் வந்தது. கைகுலுக்க யோசித்தான். அதுதான் கையை நீட்டியது, ஹாய் என்றான், கன்னத்தில் குழிவிழ இலேசாக புன்னகைத்தது. எப்படி வந்தாய், உங்கள் கம்பெனியிலிருந்து யாரேனும் அழைத்து வந்தார்களா என்று கேட்டான். பதிலில்லை மீண்டும் கன்னத்தில் குழிவிழ புன்னகை. பார்க்க நன்றாகத்தான் இருந்தது. பக்கத்தில் வந்தது, உரசிக்கொண்டு நின்றது. ரொபோ பேபி சிட்டருக்குப் பதிலாக ரொபோ பிராஸ்டியூட்டை அனுப்பிவிட்டார்களோ என்ற சந்தேகமும் எழாமலில்லை. ஆர்டர் எண்ணை சரிபார்க்கவேண்டும். நான் பேபி சிட்டர் கேட்டிருந்தேன், உன்னைப் பார்க்க வேறுவகைமாதிரி தெரிகிறதென்று அதனிடமே சொன்னான். தலையாட்டிவிட்டு, அவன் கன்னத்தை ஒற்றைவிரலால் தொட்டு, அடையாள அட்டையொன்றை அவன் கண்களுக்கு நேராக நீட்டியது: எண் BS 04321- உயரம், எடை, நிறம் என்ற தகவல்களுக்குக் கீழ் தயாரிப்பு என்ற இடத்தில் நிறுவனத்தின் பெயரும், உரிமையாளர் இடத்தில் இவனது பெயரும் இருந்தது. கெவினுக்கு BS04321ஐ மிகச் சுருக்கமாக அறிமுகப்படுத்திவைத்தான்.

ஆர்டர் எண்ணின்படி சரி. பேபி சிட்டர்தான் என்பதில் இப்போது சந்தேகமில்லை. அதன் ஸ்பரிசத்தில் கிறங்கியிருந்தான். ரொபோ என்பதை மறந்து நெருங்க நினைத்தபோது, கெவின், ”டாட்! டோண்ட் நீட் டு ஹரியப். யு’வ் ஆல் யுவர் டைம்.” என்றான். ‘பேசமாட்டாயா என்று பேபி சிட்டரிடம் கேட்டான். அதற்கும் அதே சிரிப்பு, இயலாது என்பதுபோல ஒரு தலையாட்டல். எரிச்சல் வந்தது. சரி உள்ளே வா என்றான். இம்முறை பலமாகத் தலையாட்டிவிட்டு தனது கைப்பையிலிருந்து ரீயூசபிள் தாளில் அச்சிடப்படிருந்த ஒப்பந்தத்தை நீட்டியது. நிறுவனத்திற்கும், வாடிக்கையாளர் கதிரேசனுக்கும் BS04321-எண்கொண்ட வுமனாய்டு பற்றிய உத்தரவாதமும் -விதிமுறைகளும் என்றிருந்தது. ‘இதில் என் விரல் பதிக்கவேண்டுமாவென வினவினான். தலையாட்டியது. மீண்டும் சிரிப்பு. படித்து பார்க்காமல் நான் விரல் பதிக்கமாட்டேனென்றவன் சாவியை கொடுத்து கதவைத் திறக்கசொன்னான். மூவருமாக குடியிருப்புக்குள் நுழைந்தார்கள். உட்காரச் சொன்னான். விருப்பமில்லாததுபோல நின்று கொண்டிருந்தது. இரவு ரொபோ பேபி சிட்டர் அதற்கென ஒதுக்கபட்ட அறையில் படுத்துக்கொண்டது. கதிரேசனும் கெவினும் வழக்கம்போல அவரவர் அறையில் உறங்கினார்கள். அன்றிரவு எத்தனை மணியென்று தெரியாது, திடீரென்று விழித்துக்கொண்டபொழுது, மார்புகள் தளும்ப கதிரேனை பேபி சிட்டர் அணைத்துக்கொண்டிருந்தது. கெவின் அறைக்கதவு திறந்திருக்க கதிரேசன் எழுந்து சாத்திவிட்டு வந்தான். எப்படி உபயோகிப்பதென்பதில் முதலில் கொஞ்சம் குழப்பமிருந்தது. நிறுவனம் அனுப்பிவைத்திருந்த செய்முறை விளக்கத்தை அடிக்கடிப் புரட்டிப்பார்த்து ஓரளவு புரிந்துகொண்டதும் பிடிபட்டுவிட்டது. அதற்குப் பிறகு அதனுடன் உறவுகொள்வது ஒரு விளையாட்டுபோல நிகழ்ந்தது.

நாட்காட்டியில் இரண்டுவாரங்கள் கடந்திருந்தன. கெவினுக்கும் ரொபோ பேபி சிட்டருக்குமான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்திருந்தது. இரவு படுக்கையின்போதுகூட அது தன்னுடன் படுக்கவேண்டுமென்று கெவின் அடம்பிடிக்கலானான். BS04321க்கு, ஏதாவதொரு பேர்வைக்கலாமென நினைத்து ஹாலிவுட்டிலும் கோலிவுட்டிலுமாக நடித்துக்கொண்டிருந்த நடிகை சாரு பட்டேல் பெயரையே சுருக்கி சாரு என்று வைத்தான். பேபிசிட்டருக்கும் அப்பெயர் பிடித்திருக்கவேண்டும் சந்தோஷமாகத் தலையாட்டியது. அப்போதுதான் திடீரென்று மூளையில் சட்டென்று ஏதோ விளங்கியது நிறுவனத்தை தொலைபேசியில் அழைத்ததில் நினைத்ததுபோலத்தான் பதில் கிடைத்தது. தயாரிப்பு விண்ணப்பத்தில் ரொபோ பேபி சிட்டர் பேசவேண்டும் என்ற குறிப்பிடவில்லை என்றார்கள். மீண்டும் நிறுவனத்திற்கு வரச்செய்து புதிதாகத் தயாரிக்கபட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடச்சொன்னார்கள். கூடுதலாக மூவாயிரம் டாலர் செலுத்த சொன்னார்கள். ஒருவாரத்தில் தானாக பேசுமென்றும் இல்லையெனில் தொடர்பு கொள்ளுங்கள் என்றார்கள். இப்போதெல்லாம் கெவினுக்குத் தேவையோ இல்லையோ கதிரேசனுக்கு ரொபோவின் தேவை கட்டாயமாக இருந்தது, முக்கியமாக இரவு வேளைகளில். நிறுவனம் அதுகுறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. BS04321 ரொபோவின் இக்கூடுதல் சேவைக்காக தனியாக மாதமொன்றிற்கு 5000 டாலர் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்று எழுதியிருந்தது கதிரேசனும் சம்மதம் தெரிவித்துவிட்டான்.

புது டில்லியில் நடக்கவுள்ள பன்னாட்டு உணவு மற்றும் விவசாய வணிக மேலாண்மையின் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும். கட்டிலிருந்து கதிரேசன் எழுந்ததைப் பார்த்ததும் கையைப் பிடித்து இழுத்து என்ன? என்பதுபோல கையை ஆட்டியது. ” சாரு! மூன்று நாட்கள் இந்தியா செல்கிறேன். ஏரோப்பிளேன் போல கைமேல் கைவத்து ஓட்டிக்காட்டினான். நேற்றே சொல்லியிருக்கவேண்டும், மன்னித்துக்கொள் என்றான். கெவினை பத்திரமாகப் பார்த்துக்கொள், அவன் வயதொத்த வலைத்தளங்கள் பக்கம் அவனது கவனமில்லையென குழந்தைகள் நலத் துறை எச்சரித்திருக்கிறது. தொடர்ந்தால் அவனை நம்மிடமிருந்து நீதிமன்றம் பிரித்துவிடும் ஆபத்திருக்கிறது, என்கிற தனது திடீர் அச்சத்தைத் தெரிவித்தான். அவள் புரிந்துகொண்டதன் அடையாளமாக வழக்கம்போல சிரித்தாள். உங்கள் அலுவலகக் கெடுபிரகாரம் ஒருவாரம் ஆகப்போகிறது அநேகமாக இந்தியாவிலிருந்து வரும்போது நீ பேசவேண்டுமென்றான். இல்லை என்றால் திரும்பி வந்ததும் உன்னை வேண்டாமென்று தலை முழுகிடுவேனென்ற அவனுடைய எச்சரிக்கையை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுபோல அதற்கும் சிரிப்பு. தலையிலடித்துக்கொண்டான், மீண்டும் சிரிப்பு.

காலை 9.30 மணிக்கெல்லாம் கதிரேசனுடைய பெண் உதவியாளர் யோவான் வந்திடுவாள். சரியாக பத்துமணிக்கு விமான தளத்தில் இருக்கவேண்டும். இப்போதே 8.50. குளியலறைக்குள் நுழைந்தான், கதவு மூடிக்கொள்ள: ஐந்து நிமிடம் காலைக் கடன், ஐந்து நிமிடம் முகச்சவரம், இரண்டு நிமிடம் ஆவிக் குளியல், மேலும் இரண்டு நிமிடம் உலர்த்திக்கொள்ள. குளியலறையை விட்டு வெளியில் வரும்போது 9.05. உடுத்த பத்து நிமிடம்-9.15. வெளியில் வந்து மகன் கெவினை அவசரமாகக் கொஞ்சி கன்னத்தில் முத்தமிட 9.17. கைப்பைய்யும் பெட்டியுமாக புறப்பட்டபோது பேபி சிட்டர் ரொபோ தமிழ்ச் சேனலொன்றில் ஒலியும் ஒளியும் பார்த்துக்கொண்டிருந்தது, தலையில், அவசரமாய் முத்தமிட்டு ‘பை’ என்றான். மெல்ல சிரித்தது. விழிகளில் நீர் கோர்த்திருப்பதுபோல தெரிந்தது. கற்பனையென்று நினைத்தான். லி·ப்டை நெருங்கியபொழுது. 9.19. லி·ப்டில் நுழைய இருந்த சமயம், காலையில் உடற்பயிற்சி செய்யாதது நினைவுக்கு வந்தது. படிகட்டுகளில் இறங்கி அதை ஈடுசெய்ய நினைத்தான். வார இறுதியில் காப்பீட்டுக்கழகம் வீட்டிற்கு வந்து எடைபார்க்கிறபொழுது 60 கிலோ இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லையெனில் பிரிமியத்தை அதிகரித்துவிடுவார்கள்.

படிகளில் இறங்கி ஹாலை அடைந்த போது மணி 9.29. நிறுவனத்தில் புதிதாக நியமிக்கபட்டிருந்த கதிரேசனுடைய உதவியாளர் நின்றிருந்தாள். தளிர் பச்சையில் ஸ்கர்ட், அதற்குப் பொருத்தமாக அதே வண்னத்தில் செயற்கைகற்கள் பதித்த ப்ராஸ்லெட், ஹோலோகிரா·பிக்கிலான மாலை. அவள் ஆணா பெண்ணா என்ற சந்தேகம் இருக்கிறது. அவளுடைய பார்வை சரியில்லை. ஏதோ வேவு பார்ப்பதுபோல பார்க்கிறாள். ஏன் அவன் லி·ப்ட் எடுக்கவில்லை? அவன் கண்களில் சுற்றித் தெரியும் கருவளையங்களுக்கு என்ன பொருள்? இரவில் சரியாகத் தூங்குவதில்லையா? தூங்கவில்லையென்றால் என்ன காரணம்? இப்படி பல கேள்விகள் மனதிற்குள் இருக்கவேண்டும். ஒவ்வொன்றும் அவளுக்கு அத்தியாவசியமாக இருக்கலாம்.

– குட்மார்னிங் யோவான்?

– மார்னிங்!. இரவு சரியாகத் தூங்கவில்லைண்ணு நினைக்கிறேன். கண்களைச்சுற்றிலும் கருவளையங்கள்.

யோவானிடமிருந்து வந்த கேள்வி இவன் நினைத்ததுபோலத்தான் இருந்தது. மறுத்தான். தேவையில்லாமல் வம்பை ஏன் விலைக்கு வாங்கவேண்டும் என்பதால் ஒரு வித எச்சரிக்கை. யோசித்ததில் அவளை மடக்குவதற்கு வழி கிடைத்தது.

– உன்னைப் பார்த்தால்தான் ஒழுங்காக தூங்காததுபோல இருக்கிறது. உன்னுடைய காருலே ஹேப்பி லேடிங்கிற பேருலே ஒரு பொம்மையைப் பார்த்தேனே.

– கதிர் உண்மையைச் சொல்லட்டுமா. எனக்கு ஆண்கள் பெண்கள் எல்லாம் வெறுத்துப்போச்சு. பொம்மைகள்தான் பாதுகாப்புண்ணு தோணுது. நீ கூட முயற்சிபண்ணி பக்கலாம், அதிக சிக்கல்கள்களில்லை. ரொம்ப பாதுகாப்பும் கூட எனக்குத் தெரிஞ்ச நிறுவனத்துலே நிறைய மாடல்கள் இந்த மாதத்துலே புதிதாக வந்துள்ளன. முகவரி வேண்டுமா?

– கேட்கும்போது கொடு, தற்போதைக்குத் தேவையில்லை. இப்பவே டாக்ஸி பிடித்தால்தான் பத்துமணிக்கு ஏர்போர்ட்ல இருக்கமுடியும்.

– இந்த வேகத்துலே நீ இருந்தா ஜாயிண்ட் டைரக்டர் போஸ்ட் உனக்குத்தான். டாக்ஸிக்கு அப்போதெ சொல்லிட்டேன், வந்திட்டுது. உனக்காகத்தான் காத்திருந்தேன்.

கதிரேசனும் யோவானும் டில்லியை அடைந்தபோது இந்திய நேரப்படி இரவு 8.00மணி.
* * * *

– சிறுநீரை இயற்கை வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம்னு சொல்றீங்க?

– ஆமாம். எங்கள் நிறுவனம் அதற்கான முயற்சிகளில்தான் இறங்கியிருக்கிறது. முறையாக உபயோகித்தால். அதிலுள்ள சோடியம் குளோரடைத் தவிர மற்றவைகளெல்லாம் இயற்கைவேளாண்மைக்கு உதவக்கூடியவைதான். 95 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. பிறகு கணிசமான அளவிற்கு யூரியா, பொட்டாசியம், பாஸ்பேட்ஸ். செயற்கை இராசயன உரங்களையோ, கிருமிநாசினிகளையோ பயன்படுத்த வேண்டியதில்லை. டாக்ஸின், கர்சினஜன்ஸ் பற்றிய கவலைகளுக்கு அவசியமே இல்லை. பெரும்பாலான மனிதருக்குத் தேவையானது பாதுகாக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான உணவு முறை.

– உங்கள் முயற்சிக்கு வரவேற்பிருக்குமா?

– இருந்தே ஆகணும் வேறுவழியில்லை. நிலத்தடி நீரை இழந்த இந்தியா போன்ற நாடுகள் சொட்டு நீர் பாசனத்தையெல்லாம் முயற்சி செய்து பார்த்துட்டாங்க. மெல்ல மெல்ல பல நாடுகள் இதில் ஆர்வம் காட்டலாம். எங்களை அழைத்தால் அதற்கான தொழில் நுட்ப அறிவை வழங்க தயாராக இருக்கிறோம்.

– மிஸ்டர் கதிரேசன் மற்றுமொறு கேள்வி? என்ற இந்திய பத்திரிகையாளரை யோவான் சாமர்த்தியமாக சமாளித்து அனுப்பி வைத்தாள்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்பாக மாநாடு எதிர்பார்ததைக்காட்டிலும் நன்றாக நடந்தது. இயற்கை வேளாண் துறையில் மாற்று முயற்சிகள் என்ற தலைப்பில் கதிரேசன் வாசித்த கட்டுரைக்கு நல்ல வரவேற்பு. இனி ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான். நாளைகாலை பத்து மணிக்கு விமானம். அதுவரை வரை என்ன செய்யலாம் என்று யோசித்தான். அப்பாவின் பூர்விகக் கிராமம் திருச்சிக்கு அருகில் இருந்தது. போய்வரலாமென்பது தீடீர் யோசனை. யோவானுக்கு வர விருப்பமில்லை அவள் டில்லியைச் சுற்றிபார்க்க விரும்பினாள். திருச்சி விமான நிலையத்தில் இறங்கியபொழுது மாலை நான்கு மணி. நேரே ஓட்டலுக்குப் போய் ஒரு குளியல் போட்டுவிட்டு மாற்றுடை தரித்துக்கொண்டு, வெளியில் வந்து டாக்ஸிபிடித்து கிராமத்தை அடைந்தான். அப்பா தன்னிடத்தில் கூறியிருந்த அதே அடையாளத்துடன் கிராமம் இருந்தது. அவரது விவரணையில் பெரிய அளவில் மாற்றமிருக்க வாய்ப்பில்லையென நினைத்தான். ஊரின் வடக்கே பஞ்சாயத்து ஆபீஸ், உணவுப்பொருள் பங்கீட்டுக் கடை, எதிரே ஆரம்பப்பள்ளி, நல்ல தண்ணீர் கிணறு, என்று அப்பா சொல்லியிருந்த அடையாளங்கள் காலத்தேய்மானங்களுடன் இருக்கின்றன. ஆரம்பப் பள்ளி இடத்தில் மேல் நிலைபள்ளி என்ற அறிவிப்புப் பலகை. நேரெதிரே இவர்களது பூர்விக வீடு.

வீட்டில் யார் இருக்கக்கூடும்? என்ற கேள்வி. டாக்ஸியிலிருந்து இறங்கிக் கொண்டான். டாக்ஸியை பின்தொடரச் சொல்லிவிட்டு நடந்தான். முன்பக்கம் தாழ்வாரமில்லை, சுவர்கள் மாத்திரம் நின்றிருந்தன. கிளிகளும் கொடிகளும் நிறைந்த தேக்கு மரக்கதவினைப் பற்றி அப்பா கூறியிருந்த ஞாபகம். அப்படியேதுமில்லை. பின்புறம் மண்சுவர் எழுப்பி கூரை வேய்ந்திருந்தார்கள். வாயல்புடைவையும், பவழம் பின்னிய சங்கிலியுமாக இருந்த பெண்மணி இவனைப் பார்த்ததும் எழுந்துவந்தாள்.

– யாரு?

– முருகசாமியின் மகன் கதிரேசன், அவள் உள்வாங்கிக்கொள்ள ஏதுவாக சில நொடிகள் அமைதியாக இருந்தான். பிறகு தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து வந்திருக்கேன்’, என்றான்.

முருகசாமியின் மகன் கதிரேசன் என்ற சொற்கள் பெண்மணியை உலுக்கிப்போட்டிருக்கவேண்டும். பொலபொலவென்று கண்ணீர் சிந்தினாள்.

– அப்பா வரலையா? மூக்கைச் சிந்தியபடி கேட்டாள்.

– இல்லை நான் மட்டும் வந்திருக்கேன்.

– உள்ளே வா, இப்பவாவது வழிதெரிஞ்சுதே, என்றாள்

பெண்மணியைத் தொடர்ந்து சென்றான். கூரை வீட்டிற்குள் இருவரும் நுழைந்தார்கள். உட்கார் என்றவளாய் பாய் எடுத்து போட்டாள்.

– நீங்க?

– உனக்கு அத்தை. எப்படித் தெரியும். வந்தால் போனால்தான் தெரியும். நல்லா இருக்கியா?

– இருக்கேன் நீங்க எப்படி தனியாவா இருக்கீங்க.

– ஆமாம் இருக்கேன்.

– உங்க மாமா இறந்து இருபது வருடத்துக்கு மேலே ஆகுது. சரசு ஒருத்தித்தான். உங்க அப்பனுக்கு சின்னவயசுலே எடுத்த அவ போட்டாவை அனுப்பி வச்சிருக்கேன். அவள் உனக்குத்தான் என்றெல்லாம் எழுதினேன். ஆனா உங்கப்பன் மாத்திரம் அது நாம தீர்மானிக்கிற விஷயமில்லைண்ணு எழுதுவான். இருந்தாலும் மனசுகேக்கலை, ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள் இங்கே நீங்க வரக்கூடுமென்று நம்பினேன். இதோ இப்ப வரலையா? தகப்பன் இல்லாத பெண்ணாச்சேண்ணு செல்லமா வளர்த்தது தப்பாப் போச்சு. யாரோ சினேகிதி சொன்னாண்ணு என்னை இங்கே அந்தரத்திலே நிறுத்திட்டு உங்கபக்கந்தான் புறப்பட்டு போயிட்டா.

– அமெரிக்காவுக்கா?

– ஆமாம். இங்கேயே நல்ல வேலைகள் கிடைக்குமென்று சொன்னாங்க எனக்குத் துணையா இங்கேயே இரு, எங்கேயும் போகாதேண்ணு சொன்னேன். உங்க அப்பனுக்கிருந்த அதே பிடிவாதம் அவளுக்கும். கிளம்பிட்டா.

– அங்க எங்கேண்ணு தெரியுமா?

அத்தை முகவரியை கொடுத்தாள், புளோரிடா என்றிருந்தது. அவள்காட்டிய புகைப்படத்தைப் பார்த்தான். அதில் சாரு என்று கதிரேசன் பெயர்சூட்டிய BS 04321 ரொபோ பேபி சிட்டர் சிரித்துக்கொண்டிருந்தது.

———————————————————————
nakrish2003@yahoo.fr

Series Navigation