குயிலோசை

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

ப.மதியழகன்


குயிலோசை

பூங்காவில்
ஆள்அரவமற்ற அச்சூழலில்
ஆலமரக் கிளையொன்றில
தனித்து அமர்ந்திருந்த போது
மெளனத்தின் வாசனையோடு
நிராகரிப்பின் அவஸ்தையையும்
குயில் கண்டுணர்ந்தது…..

அவனுடைய எண்ணற்ற
நிறைவேறாத ஆசைகளுக்காக
ஏக்கங்கொண்டு தவிக்கும் ஆழ்மனது
இப்படி குயிலாக வடிவெடுத்து
காதலி செல்லுமிடமெங்கும் பின்தொடர்ந்து
தன் ஸ்நேகத்தை
‘குக்கூ’வென் கூவி வெளிப்படுத்துகிறது
ஆனால் அவளின் ஆழ்மன குயில்வடிவம்
அவனைத் தேடி வரவில்லை.

மண்ணில் புதைந்த விண்மீன்

எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகள்
எனது பால்ய கால மனவெளியில்
கைக்கு எட்டாத தொலைவில்
சுடர்விடும் நட்சததிரக் கூட்டங்களாக
இடைவெளியின்றி நிரம்பியிருந்தன…

புவியீர்ப்பை எதிர்த்து
எனது உடல் அபரிதமாக
வளர்ச்சியடைய தொடங்கிய போது
இயற்கை அரணின் வாசல் திறந்து
எனது சுயப்பிரக்ஞை தவறிய
அபூர்வமான சில கணங்களில்
அந்த விண்மீன்கள் ஒவ்வொன்றாய்
பிரகாசமிழந்து மண்ணில் புதைந்தன

என் மனவானம் இருள் கவிந்து
பொலிவிழந்தது!

mathi2k9@gmail.com

Series Navigation