கடிதங்கள் – 01 ஜனவரி,2004

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்-கா.மெளலாசா- ரோஸாவசந்த் -அரவிந்தன் நீலகண்டன்-கோச்சா -மயிலாடுதுறை சிவா -நரேசு – சந்திரசேகரன்


ஆசிரியருக்கு,

சில ஆண்டுகள் தமிழில் எழுதாமலிருந்து, 2003ல் திண்ணையில் எழுதியது புதிய அனுபவமாக இருந்தது. இணைய இதழ்களில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த போதும், தமிழில் எழுத முயற்சி செய்தது திண்ணையில் தான்.திண்ணை மீது விமர்சனம் எழுதினால் கூட அதையும் அப்படியே வெளியிட்டும்,நான் எழுதியதை தொடர்ந்து வெளியிட்டும்,எழுதுமாறு ஊக்கமும் அளித்த திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு என் நன்றிகள்.அது போல் திண்ணை மூலமும்,மின்னஞ்சல்கள் மூலமும் கருத்துகளை தெரிவித்த வாசகர்களுக்கும் என் நன்றிகள்.நான் எழுத நினைத்த பலவற்றை எழுத முடியாமல் போனது-அதற்கு காரணம் நான்தான். தமிழில் ஒரு சில புதிய விஷயங்களையாவது அறிமுகம் செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்.என் எழுத்துக்களால் யாரவது மனம் புண்பட்டிருந்தால் மன்னித்திடுக.

சில காரணங்களால் 2004 ல் நான் தமிழில் எழுதுவதையும்,விவாதங்களில் பங்கேற்பதையும் பெருமளவு குறைத்துக் கொள்ளப் போகிறேன் -கிட்டதட்ட நிறுத்தி விடுவேன்.என் முழுக்கவனத்தையும் கோரும் பணிகள் பல உள்ளன.இன்னும் ஒரிரு ஆண்டுகள் நான் இவற்றில் முழுக்கவனம் செலுத்தியாக வேண்டும். எனவே திண்ணையில் தொடர்ந்து இந்த ஆண்டு எழுத இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதுவேன்.தமிழில் என் வலைக்குறிப்பேட்டில் தொடர்ந்து பதிவு செய்ய முயல்வேன். ஆசிரியர் குழுவினருக்கும், வாசகர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


விஸ்வாமித்திரரின் விபரீத புத்தி:

எழுத்து சுதந்திரத்துக்கு கொடிபிடிப்பதாக வேடமிட்டு ‘நாகூர் ரூமியையும் ‘ இஸ்லாத்தை தாக்கும் சந்தடி சாக்கிலே பல பீலாக்களை அள்ளிவிட்டிருக்கிறார்.

விஷ்ணுவின் அவதாரமாகிய ராமர் அவதரித்த இடமாம் அயோத்தி.. இடம் கிடம் என்று எதையாவது உளறி கோர்ட் கேஸ் என்று வம்பு தும்பில் மாட்டிக்கொள்ளாதீர். விஸ்வாமித்திரர்ர் தினசரிகளை படிப்பது இல்லையா ? சங்கராச்சாரியார் சமாதான பேச்சு-வார்த்தை என்ற பெயரில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தை சந்தித்து அயோத்தியை (காசியையும், மதுராவையும்) விட்டு கொடுத்துவிடுங்கள் என்று அலையோ அலையென்று அலைந்து சென்று கெஞ்சி கூத்தாடி மிரட்டிய செய்தியோ, அவருக்கும் அசோக் சிங்களுக்கும் வித்தியாசம் எதுவும்மில்லை என்று அவரின் ஒருதலை பட்சமான நடவடிக்கையை கண்டித்து முஸ்லிம் தனியர் சட்ட வாரியம் அவரின் pro VHP/RSS proposal- ஐ தூக்கி குப்பையில் போட்டது தெரியாதா ? அயோத்தி வழக்கு சம்பந்தமான செய்தியோ தெரியவில்லையாக்கும் (நாட்டில் இருக்கிறர்களா இல்லை வனவாசத்தில் இருக்கிறீரர் ?). இந்தியாவில் நடப்பது தெரியாமல் ஏதோ ராமரின் birth certificate -ஐ கையில் ஆதாரமாக வைத்துக்கொண்டு பேசுவதுபோல் ராமர் அயோத்தியில்தான் பிறந்தார்..பிறந்தார் என்று பிதற்றுகிறீரே. இந்த ஒரு உளறலை வைத்து நீதிமன்ற அவமதிப்பு கேசில் உம்மை நாகூர் ரூமி உள்ளே தல்ளிவிடப்போகிரார். பீலா விடும்போது அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாய் விடக்கற்றுக்கொள்ளுங்கள் (வரதன், நரேந்திரன் போன்றவர்களிடம் ட்யூசன் வைத்துக்கொள்ளுங்கள்).நீங்கள் சொல்வதுபோல் பாபர் அயோக்கியனா அல்லது ராமர் பெயரைவைத்து பொய்பித்தலாட்டம் கூறி நாட்டு மக்களை குழப்பி கலவரம் செய்து அரசியல் நடத்தும் RSS/BJP/VHP-யினர் உத்தமர்களா என்பதை கோர்ட் முடிவு செய்யட்டும். அதற்குள் அவசரப்பட்டு தீர்ப்பை எழுதாதீர்கள். (தற்போதைக்கு இந்திய வரலாறை மட்டும் திருத்தி எழுதிக்கொண்டிருங்கள் நீதிமன்றத் தீர்ப்பை திருத்தி எழுதுவதெல்லாம் தனி மெஜாரிட்டி வந்தவுடன் செய்துகொள்ளலாம்).

பல கோடி இந்துக்கள் பசுவை தங்கள் அன்னையாக தொழுகிறார்கள் என்பது தங்களின் அருள்வாக்கு. தாயை வெட்டி பிரியானி செய்து தின்கிற பலகோடி (நீங்கள் மட்டும்தான் பலகோடி என்ற வார்த்தையை பலமுறை உபயோகிக்கலாம் என்றில்லை) தாழ்த்தப்பட்ட(உங்களால்) பிற்படுத்தப்பட்ட (உங்களால்) இந்துக் தனையன்களை பற்றிய உங்கள் கருத்தென்ன ? தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் இந்துக்களா இல்லையா என்பது வேறு கேள்வி. நீங்கள் ஒரு வேளை ஆம் இந்துக்கள்தான் என்று ஒரு பேச்சுக்காக சொன்னாலும் சங்கரரும், சங்க்பரிவாரமும் ஒத்துக்கொள்ளவேண்டுமே) அடுத்த கேள்வி மாட்டுக்கறி தின்றவர்கள் இந்துக்களாக இன்னும் தொடர்ந்து வாழ தகுதியுண்டா ? அதாவது தாயைக்கொன்ற இல்லையில்லை தின்ற தனயன்களை தொடர்ந்து இந்து மதத்தில் இருக்க அனுமதிப்பீர்களா ? இல்லையென்றால் அவர்களையெல்லம் மதத்தைவிட்டு ஒட்டிவிட்டால் உங்களைபோன்ற ஒரு சிலர்தானே மிஞ்சுவார்கள் இந்து தர்மத்தை காக்க. பசுவை யார் காப்பார்கள் பால் யார் கரப்பார்கள் ?. (தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும் இந்துக்கள்தான் என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டாலும்..ஏனய்யா உங்களால் நடத்தப்படும், உங்களின் ஆதிக்கத்திலிருக்கும் மக்கள் தொடர்பு சாதனங்கள் தலித்துக்கும் மற்றவர்களுக்கும் நடக்கும் மோதலை ‘தலித்- சாதி இந்துக்கள் மோதல் என்று செய்தி தருகிறது)

ரம்லான் மாத்தில் கருனாநிதி குல்லா போட்டுக்கொண்டு கஞ்சி குடித்துவிட்டு இந்துக்களை ஏசுகிறாராம். நோன்பு திறக்க பள்ளி வாசலில் முஸ்லிம்கள் என்ன சோம பானமும் சுரா பானமுமா கொடுக்கிறார்கள் குடித்துவிட்டு உளர உலற உழர (உங்களால் ஏற்பட்ட குலப்பம் சாரி குழப்பம்) வேண்டுமென்றால் நீங்களும் பிள்ளையார் சதூர்த்திக்கு செல்வி செயலலிதாவை அழைத்து (கருனாநிதி போன்ற தாழ்த்தப்பட்டவர்கள்தான் சங்கராச்சாரியாரை பொறுத்தவரை தீட்டு உள்ளவராயிற்றே) பாலாபிசேகம் செய்து, வடை மாலை அனிவித்து, பிரசாதம் ஊட்டி முஸ்லிம்களை வெட்ட சாரி திட்டசொல்லுங்களேன்.

குல்லா போட்டு வருடா வருடம் கஞ்சி குடித்த அதே கருனாநிதி ‘TADA ‘ சட்டம் என்ற அல்வாவை முஸ்லிம்களுக்கு கொடுத்தது அப்பாவி இளைஞர்களை அள்ளிக்கொண்டு போய் சிறையில் போட்டது உங்களுக்கு தெரியாதா ? உங்களுக்கெல்லாம் எப்படி தெரியும் ? உங்கள் சார்பாகத்தான் சிறை செல்ல தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும் இருக்கிறார்களே. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழக முஸ்லிம்களை பொறுத்த்வரை கருனாநிதி துரோகி ஜெயலலிதா எதிரி.

மத நம்பிக்கை மத நம்பிக்கை என்கிறீர்களே, அது என்ன மத நம்பிக்கை ? செத்துப்போன பசுமாடு உயிரோடிருக்கும் தலித்துக்களை விட உயர்ந்தது என்பதா ? அதற்கு வக்காலத்து வாங்குவதா ? புரானங்களை வரலாறு என்று கூறுவது மத நம்பிக்கையா ?

ருஷ்டி இஸ்லாத்தையும் நபியையும் விமர்சிப்பதையும் ஈ.வே.ரா. இந்து மதத்தை விமர்சிப்பதையும் ஒப்பீடு செய்வது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலாகும். ஈ.வே.ரா இந்து மதத்தை விமர்சனம் செய்தது அதில் ஊடுருவியுள்ள வர்னாசிரமத்திற்காக (அடுத்தவரகளுக்கு சிரமம் கொடுக்கிறதே அதனால்), பிராமன ஆதிக்கத்திற்காக, சாதியத்தின் பெயரால் ஏற்பட்ட ஒடுக்குமுறைக்காக. இஸ்லாத்தில் இதுபோன்ற மோசமான அபத்தம் எதுவுமில்லை.

பரந்த மனப்பான்மை, சகிப்பு தன்மை போன்ற வார்த்தைகள் தங்களுக்கு உகந்தது அல்ல ஏழாம் பொருத்தம். தயவு செய்து எதிர்காலத்தில் தவிர்க்கவும்.

நட்புடன்

கா.மெளலாசா


அறிவு போலிகள் குறித்து இப்போதைக்கு இறுதியாக…

(இந்த ‘கட்டுரை ‘ முழுவதுமே ஒரு வெட்டி விஷயம்தான். இனி இது போல் எழுதும் எந்த நோக்கமும் இல்லை. இப்போதைக்கு இதுவே கடைசி. ஒரு பதிவிற்காக எழுதபடுகிறதே ஒழிய யாரையும் துன்புறுத்துவதற்காய் அல்ல. துன்புற்றவர்கள் மன்னிக்கவும். )

‘நல்ல மாட்டிற்கு ஒரு சூடு ‘ என்று சொல்வதுண்டு. இன்னும் இது போல் நிறைய பழமொழிகள் உண்டு. தயவு செய்து அவைகளை நினைவுபடுத்திகொள்ளவும். இதில் எதையும் நான் நீலகண்டனை நோக்கி நிச்சயமாய் சொல்லவில்லை.

1. ஒரு வழியாய் கடைசியில் நீலகண்டன் தர்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு நான் எழுதியதில் தேடிய, அவரின் உழைப்பு வீண்போகவில்லை. உருப்படியாய் ஒரு தவறை, ஹெய்ஸன்பர்க் என்ற பெயருக்கு பதிலாக, ஐன்ஸ்டான் என்று நான் பெரும் தவறாக குறிப்பிட்டிருந்ததை கண்டுபிடித்துவிட்டார். நிச்சயம் அவரை பாராட்டத்தான் வேண்டும்! சாதாரணமாய் சிந்திக்கும் எந்த ஒரு மனிதருக்கும் சந்தேகத்தின் பலனை எனக்கு அளித்து, இதை அவசரத்தில் வந்த ஒரு தவறாக பார்க்க தோன்றும். ஆனால் ஒரு வாழ்வா, சாவா தர்கத்தில் ஈடுபட்டிருக்கும் அவரால் (அவருக்கு தெளிவாகவே, இது ஒரு கவனியாமல் ஏற்பட்ட தவறு என்று தெரியும் என்றாலும்) அப்படி செய்யமுடியுமா ? இனி என்ன ? தர்கத்தில் தோற்றதை நான் ஒப்புகொண்டுதான் ஆகவேண்டும். என்ன செய்யலாம், பஜனை கோஷ்டியுடன் பேசி என்னை கழுவில் ஏற்ற முயற்சிக்கலாமா ? ஆனால் ரோஸாவசந்த் எங்கே இருக்கிறான் என்றே தெரியாது. இணையம் மூலம் மட்டுமே அடையாளம். வேண்டுமானால் பின்நவீனத்துவ, துப்பறியும் ஸயன்ஸ் ஃபிக்ஷன் ‘நான்காவது கொலையில் ‘ வரும் ஜெயமோகனின் ஜேம்ஸ்பாண்ட் கண்டுபிடிப்பான விஷ வைரஸை ஆட்டாச்மெண்டாக அனுப்பி பார்கலாம்.

மற்றபடி என்ன குடிகெட்டு போய்விட்டது. குவண்டம் மெகானிக்ஸ் குறித்த எனது புரிதலை முன்வைத்தால், இது ‘மேலோட்டமான படிப்பின் அடிப்படையில் ‘கிழிக்க ‘ முற்படும் மேதாவித்தனமா ‘ ? என்று தெரிந்துவிடும்.

2. நான் எழுப்பிய கேள்விக்கான பதிலை தவிர — (சாங்யம்/பெளத்தம், ஹெய்ஸன்பர்க்/ஷ்ரோடிங்கர் வாதங்களிடையே இருக்கும் ‘பல விதங்களில் ஒப்புமை ‘ பற்றிய விளக்கம்)- மற்ற பல விஷயங்கள் குறித்து நீலகண்டன் பேசியுள்ளார். ஆனாலும் நீலகண்டன் இந்த முறை கொஞ்சம் உருப்படியான விஷயங்களை சொல்லியுள்ளதாகவே நினைக்கிறேன். அவர் சொன்ன எல்லாவற்றையும் (சூர்யா பொய் சொல்லி, திரித்து, கற்பித்து என் தரப்பை உருவாக்க விரும்புவது போல்) முரட்டுதனமாய் என்னால் எதிர்த்து நிராகரித்து மட்டும் பேசமுடியாது. சில விஷயங்கள் எனக்கு தெளிவாக இல்லை. எனக்கு தெளிவாய் இல்லாத விஷயங்களை, தெரியாத -புரியாத விஷயங்களை, நீலகண்டன் போல் தடாலடியாக முன்வைக்கமுடியாது. உதாரணமாய், குவாண்டம் ஸ்டொக்காஸ்டிக் கால்குலஸ் தனக்கு தெரியும் என்பதாய் பாவனை செய்தபடி அவர் எழுதியதை சொல்லலாம். கூகுளில் quantum stochastic calculus என்று தட்டினால் எத்தனையோ பக்கங்கள் கிடைக்கும். அதை பக்கத்தை காஷேயில் போட்டால், அல்லது இது குறித்து பேசும் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருந்தால், QSC தெரிந்ததாக நினைத்துகொள்ளும் மனதை போல் என்னால் பாவனை செய்ய முடியாது. தனக்கு புரியாதவிஷயத்தை, புரிந்ததாக பாவனை செய்தது மட்டுமில்லாமல், ‘இன்ன காரணத்தினால் தான் எனக்கு தெரியாது என்று நினைக்கிறான் ‘ என்று சொல்லும் அபத்த தைரியமும் எனக்கு கிடையாது. என்னால் நிதானமாகத்தான் வரமுடியும். அதனால் ரிக் ப்ரிக்ஸ், முடிந்தால் ராமானுஜம் இதை எல்லாம் முடித்துவிட்டு இந்த விஷயத்திற்கு வர முயற்சிக்கிறேன். அதுவரை யாரும் நான் சொலவதற்கு எந்த நம்பகதன்மை இருப்பதாக நினைக்கவேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் வேறு என்ன பாதகம் இருக்கமுடியும் ? ( நீலகண்டன் எனக்கு QSC தெரியுமா என்று கேட்க விரும்புவாராயின், அதை ஹட்ஸனிடமோ, அல்லது பார்தசாரதியிடமோ நேரடியாய் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். )

3. வாழ்க்கையில் ஏற்படும் சில, தவிர்க்க முடியாமல் போகும் மிகவும் துன்பகரமான விஷயங்களில் ஒன்று, சூர்யா எழுதிய எதையாவது படிக்க நேர்வது. சூர்யாவின் அறிவும் சரி, சில விசயங்களை மாபெரும் தத்துவங்களாய் முன்வைக்கும் மிகையான தைரியமும் சரி, அது நரேஷின் தரத்தில் இருந்து எந்தவிதத்திலும் வேறுபட்டதல்ல. ஆனால் அவர் அதை வேறு அதிகாரமான தளத்தில் இருந்து கொண்டு செய்கிறார். அவர் செய்வது, கேட்பவன் புத்தியுடன் இருக்கும்போதே ‘கேப்பையில் நெய் வடிவதாக ‘ ஸீரியாஸாக, தானும் அதை நம்பிகொண்டு, ஒரு மாபெரும் உண்மையை போல் சொல்வது.

இன்று வரை இந்த சூர்யா என்ன உருப்படியாக எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. எழுதிய விஷயங்கள் எல்லாம் பத்து பைசா பெறாத விஷயங்களை, மாபெரும் தத்துவம் போல சொல்பவை. சினிமா குறித்து அவர் எழுதியவற்றையே இதற்கு உதாரணமாய் எடுத்துக்கொள்ளலாம். அவர் கொஞ்சம் உருப்படியாய் சொல்வதாய் தோற்றமளிக்கும் விஷயங்களை கொஞ்சம் கவனித்தால் ஜெயமோகன் எங்கேயாவது அதை சொல்லியிருக்க காணலாம். இப்படி ஒரு அறிவு புலத்தில் இருந்துகொண்டு, தமிழ் திரையுலகம் தந்த ஒரு மேதையான இளையாராஜா குறித்து அவதூறு தொனிக்க எழுத தயங்கமாட்டார். ஒரு முறையேனும் தன்னை நோக்கி கேட்கபட்ட கேள்விகளுக்கு நேர்மையாய் எதிர்கொண்டு பதில் சொன்னதில்லை. அவர் அவ்வாறு பதில் தராமல் ஓடுவது, ஏதோ ‘பேசுவது வீண் ‘ என்ற அர்தத்தில் செயவதாய் தோன்றும். ஆனால் இந்த யமுனா ராஜேந்திரனுடன் பதிவுகளில் அவர் செய்த மயிர்பிளக்கும் விவாதத்தை பார்க்க வேண்டும். ‘எழுத விரும்பவில்லை ‘ என்று சொல்லிகொண்டே பதில் கட்டுரை, அந்த பதில் கட்டுரைக்கான பதிலுக்கு ஒரு பதில் கட்டுரை, இப்படியே போயும் ஆத்திரம் அடங்காமல் மருதத்தில் கடைசியாய் ஒரு அபத்த கட்டுரை. இது எல்லாம் யமுனா முன்வைத்த சாதாரண விஷயங்களுக்கு இத்தனை எதிர்வினைகள். ஒவ்வோருமுறையும் ‘பேசவிருப்பமில்லைதான் ‘ என்ற பம்மாத்துடன் தொடங்குவதில் மட்டும் குறைச்சலில்லை. ஆனால் கையில் பதில்கள் இல்லையெனின் மூச்சுவிடுவதே தெரியாது. நான் கேட்டிருந்த எளிய விஷயங்களுக்கு இன்று வரை பதில் இல்லை. இப்போது சொல்வதையே எடுத்துகொள்வோம். ஆதாரபூர்வமாய் அவர் எழுதியுள்ள அபத்தங்களை, பொய்கள் குறித்து சொன்ன பின் என்ன பதில் வருகிறது என்று பார்போம். குறைந்த பட்சம் பொய் என நிறுவபட்ட தனது வாக்கியங்களுக்கு மன்னிப்பு கேட்கும் அடிப்படை நேர்மையாவது இருக்கிறதா என்று பார்போம்.

4. வழக்கம் போல் சூர்யா எழுதியது ‘ ‘களுக்கிடையில்.

‘ நீலகண்டன் அரவிந்தன் குவாண்டம் அறிவியல் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறார். ‘

அப்படித்தான் நானும் நினைத்துகொண்டிருக்கிறேன். அதாவது அது ஒரு கட்டுரை, அடுத்தபடியாய் அது குவாண்டம் இயற்பியல் குறித்தது. அதை சொல்லவும் செய்திருக்கிறேன்.

‘ அதில் அறியும்பொருள் அறியும்முறையை சார்ந்தே உள்ளது என்ற கருத்து சாங்கியம்- பெளத்தம் நிகழ்த்திய விவாதம் போல இருக்கிறது என்று டேவிட் ஹாரிஸன் சொன்ன வரியை மேற்கோள் காட்டுகிறார். ‘ ஹாரிசனும் நிச்சயமாய் அப்படி தெளிவாக எதுவுமே சொல்லவில்லை. ஹாரிசன் சொன்னதை நேரடியாய் திண்ணையில் தந்திருக்கிறேன். நீலகணடனும் ஹாரிசன் சொன்ன வரியை எந்தவகையிலும் மேற்கோள் காட்டவில்லை. மொட்டையாக ‘பலவிதங்களில் பிரபஞ்ச தரிசனத்தில் சாங்கியமும் பெளத்தமும் கொண்டிருந்த வேறுபாட்டினையும் இது குறித்து ஐந்தாம் நூற்றாண்டில் பாரதத்தில் நடந்த வாதங்களையும், ஸ்க்ராட்டிஞ்சரின் க்வாண்டம் இயற்பியல் மறுப்பும், ஹெய்ஸன்பர்க்கின் க்வாண்டம் வாதங்களும் மிகவும் ஒத்திருந்ததாக கூறுகிறார் இயற்பியலாளர் டேவிட் ஹாரிஸன் ‘ என்று சொன்னார்.

‘ரோசா வசந்த் அதை ஓர் இந்துமதவாத சதியாக காண்கிறார். ‘

இல்லை அப்படி நான் எங்கேயும் சொல்லவில்லை. அப்படி வாசிப்பு வர வாய்பிருக்காலாம். நான் வைத்த எதிர்வினை முக்கியமாக, நீலகண்டன் நாக. இளங்கோவனுக்கு வைத்த எதிர்வினைக்குதான். இந்த ஹாரிசன் விஷயம் பேசபடவேண்டிய விஷயமாக கூட எனக்கு முதலில் தோன்றவில்லை. தொடர்ந்து ஒரு ‘ஞானபூமி ‘ போன்ற பத்திரிகையில் வரவேண்டிய வகை கட்டுரைகளை நீலக்ணடன் எழுதிவந்தும், அவருடைய கட்டுரைகளில் விவேகானந்தரும், ராமகிருஷ்ணமடமும், அடிப்பட்ட அளவு விஞ்ஞானிகள் பெயர் அடிபடாத போதும் கூட நான் அப்படி சொல்லவில்லை. ‘சந்தடிசாக்கில் முடிச்சு போடுவதாக ‘ மட்டும் குறிப்பிட்டேன். அவ்வளவுதான்.

‘அவர் என்ன சொல்லியிருக்க வேண்டும் 1] அந்த அறிவியலாளர் அப்படி சொல்லவில்லை . 2] அவர் சொன்னதை அ. நீலகண்டன் திரிக்கிறார் 3]குவாண்டம் இயற்பியலுக்கும் கீழை சிந்தனைகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை . 4] அது குறித்து அறிவியலாளர் எதுவும் சொன்னது இல்லை ‘

நான் நீலகண்டன் திரித்ததாக சொல்லாவிட்டலும், அப்படி சொன்னால் அது ஒன்றும் மோசடி இல்லை.

Even allowing for the possibility that Sc


ய்dinger ‘s Wave Mechanics may have been influenced by Hindu philosophy, the parallels between the Buddhist-Hindu argument and the Heisenberg-Sc


ய்dinger aesthetic clash are striking.

ஹாரிசன் இணைதன்மை என்று (விளக்கமில்லாமல்) சொன்னதை ‘பலவிதங்களில் மிகவும் ஒத்திருந்தாதாக கூறுகிறார் ‘ என்று சொல்வதை திரிப்பது என்று சொன்னால் அது ஒன்றும் பெரும் மிகையாகாது. ‘மிகவும் ஒத்திருந்தது ‘ என்பதிலிருந்து, ‘இணைதன்மையைதான் சொன்னேன் ‘ என்று நீலகண்டன் இப்போது மாற்றி வேறு வியாக்யானம் கொடுத்து கொண்டிருப்பதை கவனிக்க வேண்டும்.

‘ஆனால் ரோசாவசந்த் என்ன சொல்கிறார் 1] நீலகண்டன் அரவிந்தன் அவ்வரியை மேற்கோள் காட்டியது தவறு, உள்நோக்கம் கொண்டது . ‘

சூர்யா அடுத்தவர் சொன்னதை முதலில் வாசிக்கவேண்டும். வரியை மேற்கோள்காட்டவில்லை என்பதைதான் நான் குற்றம் சொன்னேன். நீலகண்டன் எழுதியதை படித்தால், ஹாரிசன் இது குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு ஒரு தீஸிஸ்முடிவாக இப்படி சொன்னதாக தோன்றும். ஆனால் ஹாரிசன் சொன்னது மிக மிக மொட்டையான ஒரு வாக்கியம். உதாரணமாய் அவரிடம் ஒரு பார்த்தசாரதி சொல்லி, அதை சும்மா அவர் சொன்னால் கூட இப்படித்தான் எழுதமுடியும். (இப்படி பல உதாரணங்களும் உண்டு. ) இதை சொல்ல ஹாரிசன் எதற்கு, ரஜினிகாந்த் பாபா படத்தில் சொன்னால் போதாதா, என்று கேட்டிருந்தேன்.

‘ அம்மேற்கோளை சொல்லிய டேவிட்ஹாரிசன் ஒரு அறிவியலாளரே அல்ல . [அதற்கு ஆதாரம் ? அவர் அம்மேற்கோளை சொல்லியதுதான் ! . இதுதான் மதவாத தர்க்கம். என் மத நூலை மடையர்களும் பாவிகளுமே மறுக்கமுடியும். அவர்கள் மறுப்பதே அவர்கள் பாவிகள் மடையர்கள் என்பதற்கு ஆதாரம்] எந்த மேலோட்டமான வாசகனும் இணையம் மூலம் டேவிட் ஹாரிஸன் ஒரு முக்கியமான அறிவியலாளர் என்று காணமுடியும். ஆனால் ரோசாவுக்கு இது ஒரு பொருட்டே அல்ல. டேவிட் ஹாரிசன் ஆர் எஸ் எஸ் காரராக இருப்பாரோ என்று சந்தேகம் வேறு [ மதவாதம்.! என்னை மறுப்பவர் என் எதிரியை ஏற்பவரே] ‘

சூர்யாவின் திரிக்கும் புத்தி எல்லை மீறி போகிறது. (சூர்யாவிற்கு பிடித்த ஒப்புமையையே தரலாம்.) ‘சீதைக்கு ராமன் சித்தப்பா ‘ என்று சொன்னவரை மன்னிக்கலாம். ஆனால் ராமாயண உபன்யாசம் செய்பவரை போய் அப்படி சொன்னதாக சொன்னால் அதை குறித்து என்ன சொலவது ?

‘அம்மேற்கோளை சொல்லிய ‘தனால் அறிவியலாளர் இல்லை என்று, அல்லது அப்படி தொனிக்கும் ஒன்றை நான் எப்போது சொன்னேன். கடந்த பத்து வருடங்களில் அவர் எந்த ஆய்வும் செய்யவில்லை, இன்று நடந்து கொண்டிருக்கும் மாபெரும் அறிவியல் ஆய்வுகளில், விவாதங்களில், கடந்த 20 ஆண்டுகளாவே அவருக்கு எந்த பங்கும் இல்லை. சில நிமிடங்கள் செலவழித்து, இந்தியாவில் ஏதேனும் ஒரு இன்ஸ்டிடுயூட்டில், சாதரணமாக குவாண்டம் மெகனிக்ஸில் ஆய்வு செய்யும் ஒரு ஆரம்ப நிலை ஆய்வாளரின் பங்களிப்பு என்ன என்று பார்த்துவிட்டு ஹாரிசன் என்கே வைப்பது என்று யோசிக்கலாம். உதாரணமாய் http://www.imsc.ernet.in/physweb/people.html . உதாரணமாய் ஒரு POST DOCTORAL FELLOWவாக இருப்பவரின் ஆய்வுரீதியான பங்களிப்பை பாருங்கள். ஹாரிஸன் குவாண்டம் மெகானிக்ஸ் தொடர்பான 1982ஆம் வருட ஒரே ஒரு ஆய்வுதாளிற்கு எந்த மதிப்பும் கொடுக்க முடியாது.

ஆனால் சூர்யாவின் அறிவு திறனை பார்த்து மெய்சிலிர்க்கத்தான் வேண்டும். ‘எந்த மேலோட்டமான வாசகனும் இணையம் மூலம் டேவிட் ஹாரிஸன் ஒரு முக்கியமான அறிவியலாளர் என்று காண ‘க்கூடிய வகையில், நீலகண்டன் எந்த தகவலும் தராத நிலையில் அவரின் இணைய முகவரி தந்து, அதிலிருந்து மேற்கோள்கட்டி விவாதிக்கிறேன். எனக்கென்ன மெண்டலா ?

மிக முக்கியமாக ஹாரிசனின் இணையதளத்திலிருந்து அவரின் மிக அபத்தமான ஒரு உளரலை காரணகாரியத்துடன் எடுத்துகாட்டி, ‘அதன் மூலம் எய்ன்ஸ்டான், ஷ்ரோடிஞ்சர் நிலைபாடுகள், T. S. எலியட்டின் கவிதைக்கு இருக்கும் இரண்டுவகை இலக்கிய விமர்சனம் போன்றது ‘ என்று அவரின் அதிகபட்ச ஒளரலை முன்வைத்து, இப்படி ஒரு அறிவுதளத்தில் இருக்கும் அவர், மொட்டையாக சொன்ன ஒரு விஷயத்திற்கு என்ன மரியாதை தரமுடியும் என்பதுதான் நான் சொன்ன விஷயம். சூர்யாவிற்கு நான் சொன்னவிஷயம் புரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால் ‘ஹரிசன் அறிவியலாளரே அல்ல ‘ என்பதற்கு ஆதாரமே, ‘அவர் அம்மேற்கோளை சொல்லியதுதான் ! ‘ என்று நான் சொன்னதாக சொல்லி திரிப்பதும், அப்படி அவராகவே சொல்லிவிட்டு நவீனமதவாதம் அது இதென்று இஷடத்திற்கு பத்து பைசா பெறாத தத்துவங்க்ளை கொட்டுவதும், கபடத்தனம் நிறைந்த கேலிகூத்து என்று இல்லாமல் வேறு எப்படி அழைப்பது ?

5. இந்த லட்சணத்தில் ரவி ஸ்ரீனிவாஸ் வந்து என்னை திருத்தவேண்டுமாம், நன்றாய் வாயில் வருகிறது. அதை சூர்யாவை நேரடியாய் பார்க்க நேரிடும்போது சொல்லிகொள்கிறேன்.

விஷயத்தை கவனிக்க வேண்டும், ரவி ஸ்ரீனிவாஸும் நானும் மிக காட்ட்டமாக பதிவுகள் விவாதக்ளத்தில் சண்டை போட்டுள்ளோம். எனக்கு ‘பேதி ‘ இருக்ககூடும் என்ற கிணடலுடன் அவர் எழுதியிருக்கிறார். அவர் எழுதும் பல விஷயங்களில் எனக்கு முரண்பாடும், விமர்சனமும், எதிர்ப்பும் உள்ளது.

பெரியாரை குழிதோண்டி புதைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் பிரச்சனையில்லை என்றும், பெரியார் சொன்னதை எல்லாம் எப்படி அணுகுகிறேன் என்றும், ஒரு தலித் பார்வையில் வெளிபடும் பெரியார் மீதான விமர்சனம் மீது எனக்கு ஒப்புதல் உண்டு என்றும், இப்போது மட்டுமல்ல, ஏற்கனவே விவாதகளத்தில் சொல்லியிருக்கிறேன். ரவியோ ‘பெரியாரிய டார்ச் ‘ இன்று பயன்படாது என்று ரெண்டு கட்டுரை எழுதியுள்ளார். இதற்கு பிறகு சூர்யா பெரியாரிய மதாவாதி என்று எனக்கும், ரவிக்கும் ஒரு துண்டு போட்டு அதை விமர்சிக்கிறாராம். இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். ஞாநிதான் பெரியாரை மேற்கோள் காட்டி, உலகில் உள்ள எல்லாவற்றையும் கருப்பு -வெள்ளையாய் பார்த்து, அயோக்கியன் அல்லது மூடன் என்று பிரித்து, உலகின் உள்ள அத்தனை விஷயங்களுக்கும் வியாக்கியானம் தருகிறார். ஆனால் ஞாநிமீது இவர்களுக்கு அபாரமான மதிப்பு உண்டாம்!

சரி, சூர்யாவின் தகுதி என்ன ? ஒரு திறன் உள்ள ஒரு எழுத்தாளருக்கு, எந்த விமர்சனமும் பரிசீலனையும் இல்லாமல் ஜால்ரா அடிப்பதை தவிர அவர் செய்ததென்ன ? ரொம்ப காலமாய் ஜெயமோகன்தான் மாற்றுபெயரில் வந்து சூர்யா, ஜீவா, என்று எழுதிகொண்டிருப்பதாய் ஒரு குற்றசாட்டு உண்டு. இதில் உண்மை இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. அதை நானும் பதிவுகள் விவாதகளத்தில் ஒருமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். இரண்டு பொருட்களுக்குள் எந்த வித்தியாசத்தையும் நம்மால் சுட்டி காட்ட இயலவில்லை எனில் ‘இரண்டும் ஒன்று ‘ என்றுதான் பாவிக்கவேண்டும், என்பது ஒரு நவீன புரிதல். அதனடிப்படையில் பார்த்தால், சூர்யா, ஜீவா, சிவம் ஜெயமோகன் இவர்கள் முன்வைக்கும் கருத்துகளில் எந்த வித்தியாசத்தையும் காணமுடியாது.(அதில் அசட்டுதனமும், எழுத்து திறமையும், புத்திசாலித்தன்மும் வெவ்வேறு வகையில் இருப்பதை தவிர). ஆகையால் இதேல்லாம் ஒரே நபர்தான் என்று ஒருவர் நினைத்தால் அதில் எந்த தவறும் இல்லை. இந்த லட்சணத்தில், எந்த பரிசீலனையும் இன்றி சிந்திக்கும் அறிவை வைத்திருக்கும் ஒருவர் என்னிடம் மதவாதம் வெளிப்படுவதாக கூறுகிறார்.

6. என்னதான் நடந்திருக்கிறது ? நான் ஒரு வசதிக்காக சொல்கிறேன். யாரும் உடனே நம்பாமல் சோதித்து பார்த்து முடிவுக்கு வரலாம்.

நீலகண்டன் கட்டுரை எழுதினார். அதை படித்து ஹாரிசனையும் தேடி படித்து, ஹாரிசன் இணையத்தில் உலக ப்ரெளஸர்களின் பார்வைக்கு முன்வைத்துள்ள மிக அபத்தமான ஒளரலை பார்த்த பின்னும், நான் மூன்று வாரங்களாய் எதுவும் சொல்லவில்லை. நாக. இளங்கோவன் கட்டுரைக்கு நீலகண்டன் எதிர்வினை வைத்தார். அதற்கு நான் வைத்த மறு எதிர்வினையில், பல விஷயங்களில் ஒன்றாய் இந்த ஹாரிசனை பற்றியும் குறிப்பிடிருந்தேன். அதற்கு முன் பதிவுகளில் ஸோகல் (வேண்டுமென்றே) கணிதம் குறித்து சில ஓளரல்களை தனது கட்டுரையில் வைத்திருந்ததை குறிப்பிடும்போது, அதை எல்லாவகையிலும் மிஞ்சும் வகையில், நீலகண்டன் தனது ‘பல விதங்களில் மிகவும் ஒத்திருந்ததாக ‘ சொல்லும் வாதத்திற்கு ஆதரவாய் குறிப்பிடும் ஹாரிசன், ரொம்ப ஸிரியஸாய் ஒளரிவைத்திருப்பதை குறிப்பிட்டிருந்தேன்.

ரொம்ப வாதபூரவமாய் முன்வைக்கவிலை எனினும், எனது வாதம் என்ன ? ஹாரிசன் மொட்டையாக ஒரு பாபா பட வசன ஸ்டைலில் குறிபிட்டிருக்கிறார். குவாண்டம் இயற்பியலை பொறுத்தவரை கடந்த பத்துவருடத்திற்க்கு மேலாக அவருடைய பங்களிப்பு பூஜ்யம். அதுவும் தவிர கணிதம் குறித்து இத்தகைய ஒரு ஒளரலை, அதையும் மாணவர்களுக்கு பாடமாக சொல்லிதரும் ஒருவர் சொல்லும் ஒரு விஷயத்திற்கு என்ன மதிப்பு தரமுடியும் ?

நான் எதையும் நிறுவவில்லை என்பது உண்மைதான். சூர்யா பாணியில் இதை கொஞ்சம் பார்போம். நீலகண்டன் என்ன செய்திருக்க முடியும் ? ஒரு விஷயத்தில் ஒளரும் ஹாரிசன் இன்னோரு விஷயத்தில் சரியாய் ஏன் சொல்லியிருக்க கூடாது, என்று கேட்கலாம். (அந்த பாயிண்டை நீலகண்டனும் எழுப்பியிருந்தார்.) ஹாரிசன் சொன்ன விஷயம் இதுதான் என்று அவர் மொட்டையாய் சொன்னதை இப்போது விளக்கியிருக்கலாம்.

நீலகணடன் என்ன செய்தார் ? ஹாரிசன் ஒளரவே இல்லை. வசந்த் அபத்தமாக புரியாமல் ஒளருகிறார். ‘விவரமறிந்தவர்கள் ‘ வேறு மாதிரி சொல்கிறார்கள். உலகின் பெரிய ஆர்கைவில் ஹாரிசன் பேப்பர் போடாவிட்டால் என்ன ? அவருக்கு மூன்று முறை டான் விருது கொடுக்கபட்டிருக்கிறது. அவர் இயற்பியலை கற்பதில் மாணவர் எதிர் நோக்கும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

வசந்த் அடுத்து என்ன சொன்னான் ? ஹாரிசன் சொன்னது உலகமகா உளரல் என்பதை ஆதரபூர்வமாய் நிறுவமுடியும். ‘இயற்பியலை கற்பதில் மாணவர் எதிர் நோக்கும் சிக்கல்கள் குறித்து ஆய்வு ‘ செய்வது என்பது ஒழுங்கான அறிவியல் ஆய்வு செய்ய வராதவர்கள் செய்யும் வேலை. அது அறிவியல் கிடையாது. ஹாரிசனின் பங்களிப்பு என்று குவாண்டம் இயற்பியலில் பார்த்தால் அது முட்டை. இந்திய கல்வி நிலையத்தில் ஒரு சாதாரண ஆரம்ப நிலை ஆய்வாளரின் பங்களிப்பை விட குறைவானது. ஹாரிசன் சொல்வதை (அதுவும் மொட்டையாக சொன்னதை) ஸீரியஸாக எடுக்க காரணங்கள் எதுவும் இல்லை. அதற்கு நீலகண்டன் இன்னும் பதில் சொல்லவில்லை.

மீண்டும் நீலகண்டன் சொல்லியுள்ளார். அதை நீலகண்டன் உருப்படியாய் சில விஷய்ங்கள் சொல்லியுள்ளதாய் வசந்த் சொல்கிறான். அது என்ன ?

‘ஹெய்ஸன்பர்க்கின் எண்கோவை (Matrix) கணிதப்பார்வையும் சரி ஸ்க்ராட்டிஞ்சரின் அலை இயங்கியல் சமன்பாடுகளின் பார்வையும் சரி ஒரே இயற்கை நிகழ்ச்சி குறித்தவைதான். ஆனால் ஹெய்ஸன்பர்க் மற்றும் ஸ்க்ராட்டிஞ்சரின் தத்துவார்த்த பார்வைகளின் விளைவாக ஸ்க்ராட்டிஞ்சரும் ஹெய்ஸன்பர்க்கும் முறையே எண்கோவை (Matrix) கணிதப்பார்வையையும் அலை இயங்கியல் பார்வையையும் சங்கடத்துடன் ஏற்றனர். இவ்விரு பார்வைகளுக்குமிடையில் எழுந்த வாதத்தையே ஹாரிஸன் சாங்கிய-பெளத்த வாதத்துடன் ஒப்பிடுகிறார். இப்பார்வைகளுள் ஒன்று இருமையையும் (கார்ட்டாசிய பருப்பொருள்-ஆற்றல் எனும் இருமையைக் காட்டிலும் ஆழமான இருமை) மற்றொன்று பிரபஞ்ச அறிதலின் ஒருமையையும் கொண்டதாக இருந்தது. ஏற்கனவே ஹெய்ஸன்பர்க் இது குறித்து கூறுகையில் க்வாண்டம் இயற்பியலின் வெற்றி ஒருவிதத்தில் டெமாக்ரிட்டஸின் பருப்பொருட்கள் நுண்துகள் அணுக்களாலானது எனும் நிலைப்பாட்டிலிருந்து பிளேட்டோனிய கோலங்களே பிரபஞ்ச அடிப்படை எனும் நிலைப்பாட்டிற்கு சென்றதை குறிப்பதாக கூறினார். இக்குறிப்பிட்ட விஷயத்தை பொறுத்தவரையில் பிளேட்டானிய சிந்தனைக்கு அடிப்படையாக விளங்கிய பித்தோகாரஸ் சிந்தனையிலும் சரி பின்னர் பிளேட்டானிய சிந்தனையானது நியோ-பிளேட்டானிய சிந்தனையாக பரிணமித்ததிலும் சரி பாரத சிந்தனை மரபின் தாக்கம் மிகவும் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வரலாற்று உண்மையாகும். ‘

மேலே உள்ளதில் நீலகண்டன் பெரிதாய் எதுவும் சொல்லிவிடவில்லை, தெளிவாகவும் விளக்கமாவும் ஆதாரத்தோடும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் கடைசியில் ‘பாரத சிந்தனை மரபின் தாக்கம் மிகவும் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வரலாற்று உண்மையாகும். ‘ என்று சொன்னதை உடனடியாய் நீலகண்டன் சொல்கிறார் என்பதற்காக மட்டும் என்னால் மறுக்கமுடியவில்லை. அவ்வளவுதான். அதே நேரம் அவர் சொன்ன காரணத்திற்காக மட்டும் ஏற்றுகொள்ளவும் முடியாது. ஏற்கனவே வீம்பாய் ஹாரிசன் ஓளரலையே நியாயபடுத்த முனைந்தார். தனக்கு தெரியாத குவாண்டம் ஸ்டொக்காஸ்டிக் கால்குலஸை தெரிந்ததாய் காட்டிகொண்டதோடு நில்லாமல், அவருடைய ஜாதி காரணமாய்தான் நான் அவருக்கு தெரிந்திருக்காது என்று நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார். ஆகையால் இவர் சொன்ன ஒரேகாரணத்திற்காக வேறு விளக்கம் இல்லாத போது இதை ஏற்றுகொள்வது கஷ்டம்தான். நீலகண்டன் இன்னும் விரிவாக, மொட்டையான வாக்கியங்களை விட்டு எழுத முனைந்தால், மேலே ஏதாவது பேச முயற்சி செய்யலாம்.

சரி, ஹாரிசன் ஒளரியாதாக நான் சொன்னதை அவர் விஷயபூர்வமாய் மறுத்திருக்கிறாரா ? நிச்சயமாக இல்லை. ஹாரிசன் ஒப்பிடுகிறார் என்று மீண்டும் சொல்கிறாரே ஒழிய, (ஹாரிசனே அவருடைய இணையதளத்தில் விளக்கியிராத) சாங்கிய vs பெளத்த — ஷ்ரோடிங்கர் vs ஹெய்ஸன்பர்க் விஷயங்கள் ‘பல விதங்களில் மிகவும் ஒத்திருந்ததாக ‘ கூறியதை இப்போதாவது விளக்கியிருக்கிறாரா ? நிச்சயமாக இல்லை. ஆனால் கொஞ்சம் தனது வக்கியத்தை மாற்றிகொண்டார். அப்படி மாற்றிகொண்டு இதைத்தானே நான் சொன்னேன், நீ இப்படி ஏன் திருக்கிறாய் என்று அடுத்தவரை குற்றம் சொல்கிறார், இப்போது பழைய வாக்கியத்தை எப்படி மாற்றியிருக்கிறார் ?

‘ க்வாண்டம் இயற்பியலிற்கு இணையாக என்று கூட நான் கூறவில்லை – அதன் தத்துவ உள்ளீட்டுக்கு இணையாக என நான் கூறுகிறேன். ‘

ஒத்திருந்தது என்பதை இணைதன்மை என்று மாற்றிவிட்டார். சரி, அதையாவது விளக்கியிருக்கிறாரா ? ம்ஹும், அதை தவிர மற்ற எல்லா விஷயம் குறித்து பேசியிருக்கிறார். ஒரே ஷ்ரோடிங்கர், ஜார்ஜ் சுதர்சனம் இவர்களுக்கெல்லாம் இந்திய தத்துவம் ஈர்பளித்தது, இப்படியே போகிறது. சாங்கிய vs பெளத்த என்ன வாதம், ஷ்ரோடிங்கர் vs ஹெய்ஸன்பர்க் என்ன வாதம், இதில் எது பலவிதங்களில் மிகவும் ஒத்திருந்தது அல்லது இணைதன்மை கொண்டதாக இருந்தது. இதில் எதையும் விளக்கி தொலைக்காமல் என்னய்யா எழவு விவாதம் இது ?

இப்போது சூர்யா இடையில் வருகிறார். யார் என்ன சொல்கிறார்கள் என்று தெரியாமல் ஒரு பத்து பைசா பெறாத கட்டுரை. ஹாரிசன் ‘முக்கியமான அறிவியலாளர்தான் ‘ என்று கண்டுபிடித்து சொல்கிறார். எப்படி கண்டுபிடித்து சொல்கிறார் ? இணையத்தின் மூலம். இணையத்தின் மூலம் எப்படி கண்டுபிடித்து சொல்கிறார் ? ஒருவர் ‘முக்கியமான அறிவியலாளரா ? ‘ என்பதை அறிவியலுக்கு அவர் அளித்த பங்களிப்புகளை முன்வைத்து சொல்லவேண்டும். அவருடைய பங்களிப்பு என்ன என்று தெரிந்துகொள்ள, ஒரு குறைந்த பட்ச அறிவியல் அறிவு தேவை. அந்த அறிவு சூர்யாவிற்கு கிடையாது என்பதை அவரது இந்த கட்டுரையே தெளிவுபடுத்துகிறது. (ரோஸாவசந்துக்கு அந்த அறிவு மட்டுமில்லாது, அப்படி இருப்பதாக காட்டிகொள்ள ஜிகினாக்களும் கூட உண்டு என்றாலும், ஜிகினாக்களால் விளைந்த அதிகாரத்தின் அடிப்படையில் இல்லாது, ( உதாரணமாய் ஒரு திருவனந்தபுரம் பல்கலைகழகத்தில், முதுநிலை வேலை பார்த்துகொண்டு, சாத்தியப்படும் எல்லா பட்டங்களையும் அடுக்கி போட்டு, யாரார் என்ன என்ன, யாரை பற்றி, எப்பொழுது எழுதலாம் ‘ என்று வேதசகாய குமார் அசட்டுதனாமாய் ஒளரிகொட்டியது போல அல்லாமல் ) ஹாரிசன் சொன்ன விஷயத்தை நேரடியாய் எடுத்துகொண்டு பேசுகிறேன்.) சூர்யாவிற்கு அறிவியல் அறிவு இல்லாத நிலையில், அந்த அறிவு இருக்கும் ஒருவர் ஹாரிசனின் பங்களிப்புகளை பற்றி review செய்திருந்தன் அடிப்படையில் ஒருவேளை சூர்யா பேசலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி பேசும் அளவிற்கு கூட எந்த பங்களிப்பையும் ஹாரிசன் செய்யவில்லை. சூர்யாவிற்கு இப்படி சொன்னால் ஒரு வேளை புரியலாம். நான் இப்போது தட்டச்சு செய்துகொண்டிருக்கும் அறையிலிருந்து, மூன்று நிமிட தொலைவில் உள்ள இன்னோரு அறையில், குவாண்டம் இயற்பியலில் ஆய்வு செய்யும் ஒரு ஆரம்ப நிலை ஆய்வாளரின் பங்களிப்பு அளவிற்கு கூட அவரிடம் சொல்லிகொள்ள எதுவும் இல்லை. அப்படியானால் சூர்யா அவ்வளவு நம்பிக்கையாய் சொல்ல என்ன காரணம் ? நீலகண்டன் ஹாரிசன் ஒளரவில்லை என்றும், அவர் ‘நல்லவர், வல்லவர் ‘ என்றும் தொடர்ந்து ( ‘டான் விருது ‘ போன்றவை தவிர ஆதாரம் காட்டாமல்) சொல்லிவருவதுதான். இன்னும்விஷயபூர்வமாய், நீலகண்டன் இந்த சாங்கியம் vs பெளத்தம் —- ஷ்ரோடிங்கர் vs ஹெய்ஸன்பர்க், இருக்கும் முந்தய ‘பல விதங்களில் மிகவும் ஒத்திருத்தல் ‘ இப்போதைய ‘இணைதன்மை ‘ குறித்து எந்த உருபடியான விளக்கமும் தரவில்லை. ஹாரிசனும் தரவில்லை. ஆனால் அது எல்லாம் நிறுவபட்ட உண்மைகளாக சூர்யாவிற்கு தெரிகிறது. இதில் என்னிடம் மூரக்கமும், மதவாதமும் வெளிபடுகிறதாம், மீண்டும் நன்றாய் வாயில் வருகிறது, வாழ்க்கையில் சூர்யாவை நேரடியாய் சந்திக்காமலா போய்விட போய்கிறேன் ?

7. ரவி ஒரு முறை peer reviewed journals குறித்து பேசியதற்காக அவரிடம் பார்பனியம் வெளிபடுவதாக நீலகண்டன் சொல்லியிருந்தார். எனக்கு ரவி சொன்ன விஷயம் ஒப்புதலில்லை என்றாலும், ஒரு குறிபிட்ட தரமதிப்பீடுகளும் reviewவும் வைத்திருப்பதை பார்பனியம் என்று எப்படி சொல்லமுடியும் என்று புரியவில்லை. அதுவும் நீலகண்டன் தரும் பார்பனிய சான்றிதழுக்கு என்ன மரியாதை தரமுடியும். திருமாவளவனுக்கு, வரதன் என்பவர் அளித்த பதிலுடன், முழுமையாய் ஒத்துபோவதாய் அவர் சொன்ன ஒரு விஷயம் போதாதா ? ஆனால் பார்பனியத்தின் ஒரு பண்பு என்ன வெனில் அது தகுதி பற்றி பேசுவதல்ல. ‘தகுதியில்லாவிட்டாலும் நான் புத்திசாலி ‘ என்று சொல்லிகொள்வதும், தகுதி அடுத்தவனுக்கு இருந்தாலும் அவனை ‘முட்டாள் ‘ என்று சொல்வதுதான். அத்தகைய பார்பனியம்தான் சூர்யாவிடமும், முன்பு ஜீவாவிடமும் வெளிபடுகிறது. முன்பு விவாதகளத்தில் ஜீவா என்னை ‘ஒரு புத்தகத்தை கூட படித்திருக்க வாய்பில்லை ‘ என்று சொன்னபோது நீலகண்டன் ஆதரவாய் உள்ளிடுகை செய்ததை கவனிக்க வேண்டும்.

8. மீண்டும் நான் எழுதுவதற்கும், நீலகண்டன் எழுதுவதற்கும் உள்ள ஒரு இன்னோரு வேறுபாட்டை சொல்ல வேண்டியுள்ளது. இதை நானே சொல்வதற்கு எந்த நம்பகத்ன்மையும் கிடையாதுதான். வெறும் கோடிட்டுகாட்டத்தான் சொல்கிறேன். படிப்பவர்கள் தங்கள் அறிவு கொண்டுதான் முடிவுக்கு வரவேண்டும். மனதில் நினைப்பதை அப்படியே எழுத்தில் ஏற்றும் வகையில் மொழி இல்லை. அதானால் நான் விரும்பாத சில வார்த்தைகள், வாக்கியங்கள் என் விருப்பத்திற்கு மாறாக வந்திருக்க வாய்புண்டு, என்றாலும், நான்றாக பொய் என்று தெரிந்தே என்னிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை. ஆனால் நீலகண்டனுக்கு நான் ஹெய்ஸன்பர்கிற்கு பதிலாக எய்ன்ஸ்டான் பெயரை போட்டது ஒரு கவனகுறைவால் ஏற்பட்ட பிழை என்று மிக நன்றாக தெரியும்(மா ? என்று அவரே நெஞ்சை தொட்டு சொல்லலாம்). ஆனால் அது குறித்து அவர் இஷ்டத்திற்கு திரித்து பேசுகிறார். பழைய விவாதகளத்தில் நான் என்ன சொன்னேன் என்பதும், அதற்கு அளித்த விளக்கமும், மன்னிப்பு கேட்டதும் அவருக்கு நன்றாக நினைவு இருக்கும். ஆனால் அதை திரித்து ‘ ‘ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சிந்திக்க தெரியாதவர்கள்- அடியாட்களாக இருக்கத்தான் இலாயக்கு ‘ என்கிற தொனியில் எழுதியதாக சொல்கிறார். quantum stochatic calculus என்பதை, வெறும் வார்த்தையை மட்டும் கேள்விபட்டு விட்டு, அதை தெரிந்து கொண்டதாக வாசகர்கள் முன்னால் பாவனை செய்கிறார். அத்தோடு நில்லாமல் அவர் ஜாதி காரணமாய் தான் அவருக்கு QSC தெரிந்திருக்காது என்று நான் சொன்னதாகவும் திரிக்கிறார்.

எல்லோருக்கும் பொதுவான நேர்மை என்று எதுவும் இல்லை என்பது இன்றைக்கு தெளிவான விஷயம். ஆனால் தனக்கு ஒரு தர்கத்தை பயன்படுத்தினால், அதே வகை தர்கத்தை மற்றவருக்கும் பயன்படுத்துவதை நேர்மை என்று சொல்லலாம். ஹாரிசன் கணிதம் குறித்து ஒளரினால், இன்னோரு விஷயத்திலும் ஒளரி இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதாக, ‘அ ‘, ‘ஆ ‘ போட்டு நீலகண்டன் எழுதியிருந்தார். உண்மைதான், (ஆனால் நான் எதற்காக அதை சொன்னேன் ? நீலகண்டன் விஷயபூரவமாய் தனது ‘இணைதனமை ‘ குறித்து பேசியிருந்தால் பிரச்சனை இல்லை. ஹாரிசன் பெரிய ஆளாக்கும், அவரே சொல்லியிருக்கிறார் என்றுதான் வாதம் உள்ளது. அதனால்தான் ஹாரிசனைன் ஒளரலை முன்வைத்து, இப்படி ஒளருபவர் சொன்னதற்கு மரியாதை தரமுடியுமா என்பது என் கேள்வி.) ஆனால் நீலகண்டன் மற்றவருக்கு வரும்போது என்ன தர்கத்தை பயன்படுத்துகிறார் ? ஞாநிக்கு, ரவிக்கு அவர் எழுதியதை படித்து வாசகர்களே முடிவுக்கு வரலாம். இப்போது கூட அவரது வாதத்தை பாருங்கள். ஒரு பேச்சுக்கு ரவி சொலவது அபத்தம் என்று வைத்துகொள்வோம். நீலகண்டனின் லாஜிக் இப்படி போகிறது. ‘ரவி அபத்தம், அவர் EPWவில் கட்டுரை எழுதுகிறார். இதிலிருந்து EPWவின் தரத்தை தெரிந்துகொள்ளலாம். ‘ ஆனால் நான் மட்டும் ஹாரிசன் ஒளரியதை வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது.

இதுதான் இந்துத்வத்தின் பரிமாணம். அது கையில் கிடைக்கும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தும். தனக்கு எதிரான தர்கங்களையும் அதனால் சாதகமாய் பயன்படுத்திகொள்ள முடியும். லிபரலாகவும் தன்னை காட்டிகொள்ளும். இத்தகைய பரிமாணங்கள் மற்ற மத அடிப்படைவாதங்களுக்கு கிடையாது. இவர்தான் சூர்யா, ஜீவாவிற்கு அறிஞராய் தெரிகிறார். இதுதான் இந்த அறிவு போலிகளின் தரம்.

9. சூர்யாவும், யமுனாவும் பதிவுகள் விவாதகளத்திற்கு அவ்யப்போது வருவதானாலும், இந்த ‘கருப்பு ஸோக்கல் விவாகாரம் ‘ குறித்து ஒன்றை தவறவிட்டு விட்டனர். அது என்னவெனின் ரவி முதலில் அ. மார்க்ஸிற்கு எதிரான ஒரு தொனியில்தான் பேசி வந்தார். ‘kannan has written that this ‘blunder ‘ has been pointed out earlier itself ‘ என்றும் ‘கண்ணன் எழுதியுள்ளது (கறுப்பு தொகுப்பு குறித்து) சரியான தகவல்தான் என்று புரிந்து கொள்கிறேன். ‘ என்றும் எழுதியிருப்பதை காணலாம். ‘விவாதத்தின் ‘ போக்கில் ஜீவன் கந்தையா தனது கருத்தை சொன்னவுடன் தான், ரவி இதை கண்ணன் செய்யும் அரசியல் என்ற புரிதலுடன் தொடர்கிறார். கருப்பு செய்தது சொதப்பல் என்றாலும், அதை வைத்து இங்கே நடப்பது தனி நபர் அரசியல் என்பதாக அவர் எழுதுகிறார். மற்றபடி அவர் எழுதியது குறித்து சொல்ல எனக்கு எதுவும் இல்லை.

சூர்யா கேட்கும் கேள்வி : கருப்பு தொகுப்பாளர்கள் பின் நவீனத்துவத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்களா ? ஏதோ தங்களால் ஆன புரிதலுடன் செயல்படுகிறார்கள். ஒரு கல்வி துறை அறிவிஜீவி தளத்தில் நடந்த விஷயம் தெரியாமல் போனதால், அவர்களுக்கு புரிதலே இல்லை என்றாகிவிடாது. அவர்கள் சொன்ன கருத்துக்கு மதிப்பு என்ன ? அதை நம்பலாமா ? மதிப்பும் நம்பகத்ன்மையும் அவரவர்கள் தங்கள் சொந்த மூளை கொண்டுதான் அளிக்கவேண்டும். ஆனால் சூர்யா, கண்ணன் இவர்கள் கேள்வி எழுப்ப, பேச, இன்னும் வூடு கட்டி அடிக்க விரும்புவது, கருப்பின் தொகுப்பாளர்களை அல்ல, ஏதோ அ. மார்க்ஸ்தான் கருப்பை தொகுத்தது போல் ஒரு கற்பிதத்தை வைத்து, அவரை நோக்கிதான் இத்தனையும்.

கருப்பில் ஸொகல் கட்டுரை மொழிபெயர்பானது சொதப்பல்தான். அறியாமைதான். அதை யாராவது எடுத்துகூறத்தான் வேண்டும். யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் திமிருடன் ‘சிரித்து ‘ கொண்டு திண்ணையில் வந்துகூட எழுதலாம். ஆனால் விஷயமென்ன ? இதை ஒரு சாக்காக வைத்து அ. மார்க்ஸை வூடுகட்டி அடிப்பதுதான் பலரின் எண்ணம். அ. மார்ஸின் மேற்பார்வையில்தான் கருப்பு வெளிவந்துள்ளதா ? அதில் வந்த ஒவ்வோரு கட்டுரையையும் அவர் சரி பார்த்து, ஆமோதித்த பின்தான் அச்சுக்கு போனதா ? இப்போது சூர்யா அ. மார்க்ஸ் மட்டுமில்லாது ‘கறுப்பு இதழின் ‘மேற்பார்வையாளர்களான ‘ அ.மார்க்ஸ் பொ வேல்சாமி ‘ என்று சொல்லி வேல்சாமியையும் உள்ளே இழுத்துள்ளார். அ. மார்க்ஸுக்காவது பங்கு இருக்கும் என்று தோன்றுகிறது. வேல்சாமி எப்படி இங்கு வந்தார் ? இதுதான் விஷயமே. ஏதோ கருப்பு தொகுப்பு வெளிவரும்வரை கூட இருந்து பார்த்தது போல், நடந்த ஒரு சொதப்பலுக்கு, விரும்பும்வகையில் திரித்தல் செய்து, விரும்பும் நபரை வூடு கட்டி அடிக்கும், தனி நபர் அரசியல்தான் இது. ஃப்ரான்ஸிலிருக்குபோது கருப்பில் நான் எழுதிய கட்டுரை குறித்து எனக்கு அ. மார்க்ஸுடன் ஒரு சின்ன தொடர்பு கூட கிடையாது. அதில் சில மாற்றங்கள் செய்ததும் ஷோபசக்திதான்.

10. இந்த நூற்றாண்டின் மிக சிறந்த நகைச்சுவையை திண்ணையில் யமுனா ராஜேந்திரனின் கட்டுரையில் படிக்க நேர்ந்தது. அது கீழே.

‘ஸாக்கலைப் போலவே எச்சரிக்கையுணர்வுடன்தான் இக்குறிப்புக்களை நான் எழுதுகிறேன். பற்பல சமூக அரசியல் இலக்கியப் பிரச்சினைகளில் காலச்சுவடு கண்ணனுடன் உடன்பாடு காட்டுவதைவிடவும், இடதுசாரிகளான ரவி;சீனிவாசுடனும் அ.மாரக்சுடனும்தான் என்னால் அதிகமும் உடன்பாடு காட்டமுடியும். ரவி சீனிவாசின் அணுகுமுறையில் வித்தியாசப்பட்டாலும் கூட, வேதசகாய குமார், ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களுடனான அவரது சர்ச்சைகளில் ரவி; சினிவாசுடன்தான் நான் உடன்பாடு கொள்ள முடியும். அதைப் போலவே இந்துத்துவத்திற்கு எதிரான இந்திய இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பு நோக்கிய அ.மார்க்ஸின் சளையாத நடவடிக்கைகளினுடன்தான் என்னால் உடன்பாடு காட்டமுடியும். இவர்களுடான நட்புரீதியான கருத்து முரண்பாடு என்றே எனது குறிப்புகளைக் கருதுகிறேன். அதற்கான உரிமையை நான் கொண்டிருப்பதே எனது சுதந்திரத்திறகான முதற்படியென்றும் நான் நம்புகிறேன். ‘

11. இனி இதுபோல் வெட்டியாய் எழுதபோவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். போனவருடம் சொன்னது போலத்தான் சொல்லவேண்டும். எல்லோருக்கும் புத்தாண்டு வாழத்துக்கள். இந்த ஆண்டாவது, உருபடியான விஷயங்களுக்காக, உருப்படியான விதத்தில் சண்டை போடுவோம் (என்னையும் சேர்த்து). ரோஸாவசந்த்.


ரோசா வசந்த்தின் நேர்மையான அணுகுமுறைக்கு ஒரு புருடாக்காரனின் வந்தனம்

முதலில் ஒரு விளக்கம்: தனது அண்மைய எதிர்வினையில் ரோசா வசந்த் கூறியுள்ள விஷயம்: ‘நீலகணட்ன் ‘ஹாரிசன் கூறுகிறார் ‘ என்று சொல்லி சாங்கிய vs பெளத்த — ஷ்ரோடிங்கர் vs ஹெய்ஸன்பர்க் விஷயத்திற்க்கு முடிச்சு போடும் விதமாய் கூறியது இந்த பக்கத்தை மனதில் வைத்து மட்டும்தான். ‘ எனது முந்தைய எதிர்வினையில் அவர் இதே விஷயத்தை ‘ஐன்ஸ்டைன்-ஸ்க்ராட்டிஞ்சர் ‘ என குறிப்பிட்டிருந்ததன் அடிப்படையில் அவர் விஷயத்தை படிக்காமலே ‘கிழிக்கிறார் ‘ என எழுதியிருந்தேன். ஆனால் அவ்வாறல்ல என்பதும், அது வெறும் பெயரடுக்கலில் ஏற்பட்ட (யாருக்கும் ஏற்படும்) பிழையே என்பதும் தெளிவாகிறது. எனவே அது தொடர்பாக ரோசா வசந்த்தின் கிழிப்பு குறித்து எழுதியிருந்த விஷயங்கள் (அவை மட்டுமே) தவறு என ஒப்புக்கொள்கிறேன். இவ்விஷயத்தில் (இவ்விஷயத்தில் மட்டும்) திரு.ரோசா வசந்த்திடம் என் நிபந்தனையற்ற மன்னிப்பை பதிவு செய்கிறேன்.

சாதியமற்ற ரோசாவசந்த்:

ஆனால் என் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. சில விஷயங்களில் மேலும் உறுதிப்படும்படியாகவே திரு.ரோசா.வசந்த்தின் வாதங்கள் அமைந்துள்ளன. முதலில் விவாதகளத்தில் அவரது உள்ளீடு. திரு.திருமாவளவன் தலித் என்பதால் அவர் மூளைச்சலவைக்கு ஆட்பட்டார் என்பதுதான் ஆதிக்க சாதி மனோபாவமே தவிர ‘திருமாவளவன் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார் ‘ என கூறுவதே ஆதிக்க சாதி மனோபாவம் என்பது எந்த விதத்தில் சரி என்பது தெரியவில்லை. அதேசமயம் திருமாவளவன் தலித் என்ற ஒரு காரணத்தினாலேயே அவரை எவரும் எதுவும் சொல்லக்கூடாது அப்படி எவராவது ஏதாவது சொன்னால் அவற்றையெல்லாம் ஆதிக்க சாதிமனோபாவத்திலிருந்து எழுவது என சொல்லிவிடுவேன் என்பது மற்றொருவிதத்தில் ஆதிக்க சாதி மனோபாவமேயன்றி வேறென்ன ? ரோசாவசந்த்தின் வாதத்திலும் பின்னர், ‘இது இப்படி இருக்க மணிமாறன் சொன்னதில் நியாயம் இருப்பதாக நீலக்ணடன் சர்டிஃபிகேட் கொடுத்ததையும் கவனிக்க வேண்டும். அதற்கு கொடுத்த வியாக்யானம், ‘திருமாவளவன் என்ற ஒரு தலித்தை brainwashed என்றால், எல்லா தலித்தும் brainwashed என்று சொல்வதாய் அர்த்தம் செய்துகொள்ளமுடியாது ‘ என்பதுதான். அடடா, அதாவது ஒரே ஒரு தலித்தை என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு, இப்படி ஒரு சால்ஜாப்பும் சொல்லலாமா, பேஷ், பேஷ் ரொம்ப நன்னா இருக்கு! ‘ என்பதில் வெளிப்படும் மிரட்டலுக்கு whitemail , blackmail அல்லது நிறப்பிரிகை மெயில் என என்ன நாமம் சூட்டுவதென்பது தெரியவில்லை. என் கேள்வி வெகு எளிதானது, மணிமாறன் திருமாவளவன் ஒரு தலித் என்பதால் அவர் மூளைச்சலவை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளாரா ? இல்லை. அப்படியிருக்க இவ்விதம் அவர் கூறியதை ஒரு சாதிய வக்கிரமாக திரிப்பது எவ்வித அறிவு ஜீவி நேர்மைத்தனத்தில் சேர்த்தியோ ? இவ்வாறு ஒரு தனிநபர் விஷயத்தில் ஒருவரின் கூற்றினை திரிக்கும் மனோபாவம் கொண்ட அதே ‘முற்போக்கு பேர்வழி ‘ தெளிவாகவே ஒரு சாதிய குணாதிசயமாக பின்வரும் கருத்தை வைக்கிறார், ‘நாடார்கள் சுய சார்புடன் முன்னேறியது ஒரு சாதனை என்றாலும், அதுதான் ஒரு பெரும் ஜாதி வெறியாகவும், போய் கர்நாடகாவிலும் மற்ற மாநிலங்களிலும் கூட்டு வைக்கும் தன்மையாகவும் , இன்னும் இந்து ரவுடியிசத்திற்க்கு தேவையான அடியாளாகவும், தலித்கள் மீதான வன்முறையாகவும் வெளிப்படுகிறது. ‘ இந்த கருத்தை உள்ளிட்டவுடன் இந்த அபத்தத்தை தான் உணர்ந்ததாக கூறும் வசந்த் ஏன் இதை உடனே சரி செய்யவில்லை, சரி செய்யும் வசதி இருந்தும் ? எனும் அடுத்த கேள்வியும் எழுகிறது. இதற்கு அடுத்தப்படியாக கணக்கை தவறாக கரும்பலகையில் செய்த வாத்தியார் மாணவர்கள் சுட்டிக்காட்டியதும் அசடு வழிந்து ‘நீங்கள் கண்டுபிடிப்பீங்களா பாத்தேன் ‘ தோரணையில், ‘அது குறித்து மணிமாரன் எதாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன். ‘ என்பது தன்னுடன் சக-மானுடர்களின் அறிவின் மீது அவர் கொண்டுள்ள ‘பண்பட்ட மதிப்பிற்கு ‘ மற்றொரு உதாரணம். சாதியை எவ்விதத்திலும் குறிப்பிடாது, சாதிய அடிப்படையில் அல்லாது, திருமாவளவனை மூளைச்சலவை செய்யப்பட்ட மனிதர் என்று குறிப்பிட்டதை சாதிய திக்க மனோபாவம் என்கிற மனிதரின் இந்த உள்ளீட்டையும் அவரது சக மனிதர்களினை தன்னைக்காட்டிலும் கீழாக பார்க்கும் பார்வையையும் என்னென்பது ? இத்தகைய மனிதர் ‘நான் நாடார்களுக்கு சொந்தமாய் சிந்திக்க தெரியாது என்ற அர்த்ததில் எழுதவில்லை ‘ என கூறுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஏனெனில் அவர் முற்போக்கு பன்மொழி மேதாவியாயிற்றே!

இந்நிலையில் ரோசாவசந்த் மற்றொரு விசயத்தை மீண்டும் நினைவூட்டுகிறார், இதுவும் அவர் ஏற்கனவே கூறியதுதான். ‘வரலாறு காணாத வகையில் குஜராத்தில் பரிணமித்த, வன்முறைக்கான பழியை தலித்கள்மீதும், ஆதிவாசிகள் மீதும் போடும் புத்திசாலித்தனம் யாருக்கு வரும்! பழி மட்டுமா, இஸ்லாமியர்களின் எதிர் தாக்குதலும் கூட தலித்கள்மீது, ஆதிவாசிகள் மீதல்லவா இருக்கும். ‘ ஆனால் எனது குஜராத் கலவரம் குறித்த கட்டுரையிலிருந்து அவர் தலித்கள்மீது, ஆதிவாசிகள் மீதும் பழி போட்டதாக கூறியிருந்த இடத்தை கூறுகிறேன் ‘இடைநிலை வியாபாரிகளான இஸ்லாமியர்கள் மீது பால் உற்பத்தியாளர்களான அடித்தளமக்கள் மற்றும் பழங்குடி சமூகத்தினர் கொண்டிருந்த கோபம் ‘ குறித்து கூறிவிட்டு பின்னர் அவர்கள் கலவரத்தில் அதிகமாக ஈடுபட்டதாக ஆங்கில இதழ்கள் கூறியதாக கூறியுள்ளேன்1.. வனவாசிகள் மற்றும் தலித்துகள் இஸ்லாமியருக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதைக்குறித்து பல பதிவுகள் பல ஆங்கில ‘மதச்சார்பற்ற ‘ பத்திரிகைகளில் கூட வெளியாகியுள்ளதுடன் அதன் பொருளாதார பின்னணிகளும் கூட ஆராயப்பட்டன என்பதற்கு சான்றுகள் பல அளிக்கலாம். திரு.ரோசாவசந்த் விருப்பப்படும் பட்சத்தில் ‘அவுட்லுக் ‘ முதல் ‘தி ஹிண்டு ‘ வரை சில ஆதாரங்களை பழைய பேப்பர்களை புரட்டியோ அல்லது URLகளை தேடியோ அளிப்பதில் எனக்கு தயக்கமில்லை. ஆனால் இங்கே மற்றொரு கேள்வியும் எழுகிறது. ‘இஸ்லாமியர்களின் எதிர் தாக்குதலும் கூட தலித்கள்மீது, ஆதிவாசிகள் மீதல்லவா இருக்கும். இதை எல்லாம் ஒரு கூட்டம் செய்யும் திட்டமிட்ட சதி ‘ என்றெல்லாம் கூறுகிற ரோசா வசந்த் பங்களாதேஷில் தலித் மற்றும் வனவாசி சமுதாயங்கள் கடந்த சில பத்தாண்டுகளாகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அடியோடு மிகக்கொடூரமாக மிகவும் அவமானப்படுத்தப்பட்டு அழிக்கப்படுவதற்கு ஏன் எந்த முற்போக்கும் அல்லது பாலஸ்தீனிய பயங்கரவாதிகளின் ‘உரிமைக்காக ‘ டர்பனில் குரல் கொடுத்த தலித் அமைப்புகளும் ஒரு சிறு முனகலை கூட எழுப்பவில்லை என்பதை கூறுவாரா ? நிச்சயமாக அவர் ஏதும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளாரா என நான் கேட்கவில்லை. ஏனெனில் ஒரு மனிதர் உலகில் நடக்கிற அனைத்து விஷயங்களுக்கும் எதிர்வினை செய்யமுடியாது பாருங்கள் (ஆனால் நான் மட்டும் இணையதளம் இணைய தளமாக சென்று சமஸ்கிருதம் குறித்த ‘புருடாக்களுக்கு ‘ எதிர்வினை செய்து இந்த முற்போக்கு மடாதிபதிகளிடம் முழங்காலிட்டு பாவமன்னிப்பு வாங்கவேண்டும்!) அதுவும் ஏதோ சில மில்லியன்களே உள்ள பங்களாதேஷி தலித்துகளுக்காக! என்ன இருந்தாலும் ‘பாலஸ்தீனியர்’களுக்கும் தமிழக தலித்துகளும் உள்ள நெருங்கிய உறவா தமிழக தலித்களுக்கும் பங்களா தேஷ் தலித்துகளுக்கும் உள்ளது ?

ஆபரேட்டர்களும் ரோசாவசந்தின் கெடுவும்:

ரோசாவசந்த்: நான் சொல்லபோகும் விஷயம் குறித்து நீலகண்டன் கேள்விபட்டிருக்க வாய்பில்லை என்று நினைக்கிறேன்…Quantum Stochastic calculus என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. இதில் creation, preservation. annihilation (operators) என்று சில உபசமாச்சாரங்கள் இருக்கிறது. நம்ம ஊர் பிரம்மா, விஷ்ணு, சிவன் செயவதாய் சொல்லப்படும் படைத்தல், காத்தல், அழித்தல் விவகாரங்களை இதனுடன் முடிச்சு போடுவது பெரிய விஷயமல்ல. அவ்வாறு முடிச்சு போட்டவர் சாதரணமானவர் இல்லை, இந்த துறையில் சில அடிப்படை கோட்பாடுகளை உருவாக்கியவர்.(இவரும் ஸ்ரீவைஷ்ணவர்தான், சொல்வது நானல்ல, அவரே அவரை பற்றி பெருமையாய் சொல்லிகொண்டது) ஆனால் படிக்கும் எவருக்கும் இவர் (தனது புத்தகத்தின் முதல் பக்கத்தில்) போட்டுள்ள இந்த முடிச்சை ஸீரியஸாய் எடுத்துகொள்ள முடியாது. …இப்படி ஒரு வெள்ளைகாரர் இந்த அறிவியல் விவகாரங்களை பிரம்மா, விஷ்ணு, சிவா என்றே பெயர்போட்டு அழைக்கலாம் (அழைத்திருக்கிறார்!)2.

எனது எதிர்வினை: … க்வாண்டம் ஸ்டோசாஸ்டிக் கால்குலஸை நீலகண்டன் தெரிந்திருக்க முடியாது என்கிற இவரது ‘comment ‘. ஏனெனில் எனது கட்டுரைத்தொடரில் இதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயத்தை நான் கூறியிருக்கிறேன். க்வாண்டம் ஸ்டோசாஸ்டிக் கால்குலஸை எடுத்துக்கொள்ளலாம். ஹட்ஸன்- பார்த்தசாரதி சமன்பாடுகள் குறித்து அவரது பெயர் குறிப்பிடாமல் கூறும் வசந்த் அதில் வரும் ‘operators ‘ களுக்கு சிவன்-பிரம்மா-விஷ்ணு என பெயரிடப்பட்டதை கூறி இதனால் என்ன பெரிய விஷயம் என்கிறார். 3.

ரோசா வசந்த்:…தெரிந்து கொள்ளமுடியாது என்று நான் சொல்லவில்லை. இந்த சிவன், பிரம்மா, விஷ்ணு விவகாரத்தை மட்டுமே ‘கேள்விபட்டிருக்க வாய்ப்பிருக்காது என்று நினைக்கிறேன் ‘ என்று சர்வ ஜாக்கிரதையாகத்தான் எழுதினேன். இதற்கு இத்தனை குற்றச்சாட்டுகளா ? இப்போதும் அப்படித்தான் நினைகிறேன், ஏனெனில் அவர் சொலவது போல் ‘ஹட்ஸன்- பார்த்தசாரதி சமன்பாடுகளில் ‘ வரும் OPERATORகளுக்கு அப்படி ஒரு பெயர் இன்னும் ‘இடப்பட ‘வில்லை. அடுத்த திண்ணை வர 7 நாட்கள் உள்ளன. அதற்குள் நீலகண்டன் எங்கே இந்த ‘சிவன், பிரம்மா, விஷ்ணு ‘ விவகாரம் வருகிறது என்று ஆதாரபூர்வமாக குறிப்பிட்டால் நான் மண்ணை கவ்வியதாகவும், என்னைபற்றிய நீலகண்டனின் வாசிப்பு சரி என்றும் ஒப்புகொள்கிறேன். 4.

இப்போது:

முதலாவதாக ‘ஒரு வெள்ளைகாரர் இந்த அறிவியல் பிரம்மா, விஷ்ணு, சிவா என்றே பெயர்போட்டு அழைக்கலாம் (அழைத்திருக்கிறார்!) ‘ என்று கூறிய ரோசாவசந்த் ‘அதில் வரும் ‘operators ‘ களுக்கு சிவன்-பிரம்மா-விஷ்ணு என பெயரிடப்பட்டதை ‘ என்று நான் கூறியதற்கு (பெயர்போட்டு அழைத்தது என்பதை நான் ‘பெயரிடப்பட்டதை ‘ என்று கூறியதாலோ என்னவோ!) நான் ஆதாரம் காட்டவேண்டும் என்கிறார். இரண்டாவதாக இதனை QSCஐ நான் தெரிந்து வைத்திருப்பது எப்படி ரோசாவசந்த்தின் சாதியத்தன்மைக்கு நிகரான உயர்வு மனப்பான்மைக்கு சான்றாகும் என்பதும் தெரியவில்லை. ரோசா வசந்த்தை மண்ணைக்கவ்வ வைப்பது என் வேலையில்லை. இதற்கு உண்மையில் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அதுவும் இந்த ‘ஏழு நாள் கெடு ‘விற்கு உட்படுவதென்பது ஒருவரின் சுயமதிப்பையே குறைத்துக்கொள்வதுடன் ஒரு கீழ்த்தர விளையாட்டாக நான் உணர்கிறேன். அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இதுகுறித்து சில விஷயங்களை கீழே திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மீண்டும் இதற்கும் ரோசாவசந்த்தின் சவாலுக்கும் தொடர்பில்லை என்றும் ‘எனக்கு தெரியும் பார் ‘ என்று ரோசாவசந்த் இத்யாதிகளுக்கு காட்டிக்கொள்ளவோ அல்ல என்றும் கூறிவிடுகிறேன். பிரவுனிய இயக்க கூறுகளை க்வாண்டம் அமைப்பியலில் ஏற்கனவே ஹெய்ஸன்பர்க் கண்டறிந்திருந்தார். கணித ரீதியில் இதன் மூலமாக ஒரு ஒருமையை உருவாக்கும் முயற்சியாக ஹட்ஸன்-பார்த்தசாரதி பங்களிப்பினை கூறலாம். ஆனால் இவற்றிற்கு முன்னரே படைப்பு-காப்பு-அழிப்பு ‘ஆபரேட்டர்கள் ‘ அறியப்பட்டிருந்தன. இவை போசானிய குடும்ப துகள்களின் உருவாக்கம் குறித்தவை. 1967 தான் எழுதிய பாடநூலில் இந்த ஆபரேட்டர்களுக்கு இப்பெயர்களை அளித்தவர், வெள்ளைக்காரருமல்ல, இந்தியருமல்ல. அந்த இயற்பியலாளரின் பெயர் சகுராய்5.. (இந்த பரேட்டர்கள் விஷயத்தில் முக்கிய பங்களிப்பு அளித்திருந்த டைராக் இந்த ஆபரேட்டர்களை அவ்வாறு அழைக்கவில்லை.) பல பல்கலைக்கழகங்களிலும் இந்நூல் பாடநூலாக உள்ளது. க்வாண்டம் இயற்பியலின் தத்துவ உள்ளீட்டிற்கும் பாரத ஞான மரபுகளின் தத்துவ தரிசனத்திற்கும் இணைகளை கண்டவர்கள் இந்த விஷயத்தை அறியாதிருந்தனர் எனவேதான் அதைப்பற்றி ‘ஜல்லியடிக்கவில்லை ‘ என கூறுவது நம்ப கடினமான விஷயம். ஆனால் இவ்வாறு ‘ஜல்லியடித்த ‘ இயற்பியலாளரான (அப்படி அழைக்கலாம் என நினைக்கிறேன்) ப்ரிட்ஜாப் கேப்ரா முதல் ‘அரைலூசான ‘ டேவிட் ஹாரிஸன் வரை அல்லது சுபாஷ் கக் வரை இந்த நூலின் இருப்பையே தெரிந்துகொள்ளாதவர்களாக இருப்பார்கள் அல்லது 1967 இல் பாடநூல் ஒன்றிலேயே வெளியான இந்த விஷயம் ( ‘ஜல்லியடிக்கிற கூட்டத்திற்கு ‘) இன்னமும் பரவலாக தெரியவில்லை ‘ என கொள்வதற்கு மிக அதிகமான ‘willing suspension of disbelief ‘ தேவைப்படுகிறது. 1971 இல் கேப்ராவின் இந்த இணைத்தன்மை குறித்த கட்டுரை ‘Main currents in modern thought ‘ எனும் நூலில் வெளியானது. அதில் இந்த ‘ஆபரேட்டர்கள் ‘ குறித்து ஏதுமில்லை. பின்னர் 1976 இல் ‘தாவோ ஃப் பிஸிக்ஸ் ‘ வெளிவந்தது. இது குறித்து ஏதும் இல்லை. அதன் பிறகு ‘தாவோ ஃப் பிஸிக்ஸ் ‘ பல பதிப்புகள் வெளிவந்துள்ளது அதிலும் ஏதும் இல்லை. அதன் பின் பலநூல்கள் கிழக்கத்திய ஞான மரபுகளுக்கும் க்வாண்டம் இயற்பியலின் தத்துவ உள்ளீட்டிற்குமான இணைதன்மை குறித்து வெளியாகியுள்ளன. அவையும் இந்த ஆபரேட்டர்கள் சமாச்சாரம் குறித்து ஏதும் பேசவில்லை. ஏனெனில் ஒரு புராண பெயர்களை சில அறிவியல் விஷயங்களுக்கு கொடுப்பதற்கும் அதனால் ஒரு தத்துவ இணைத்தன்மையை கண்டு ‘ஜல்லியடிப்பதற்குமான ‘ வேறுபாட்டினை ‘ஜல்லியடிப்பவர்கள் ‘ உணர்ந்திருந்ததே காரணமாம். ஒருவிதத்தில் திரு.ரோசா வசந்த் கொடுத்த உதாரணம் மிகத்தெளிவாக தத்துவ இணைத்தன்மையை கண்டு ‘ஜல்லியடிப்பர்கள் ‘ எவ்வித விஷயங்களை தங்கள் ‘ஜல்லியடிப்பில் ‘ கலக்கவில்லை என்பதை தெளிவாக காட்ட உதவியுள்ளது. அதற்கு திரு.ரோசா வசந்த்திற்கு நன்றி. அதே சமயம் மன்னிக்கவும் ரோசா வசந்த், உங்கள் ‘ஏழு நாள் கெடுவில் நிரூபித்துக்காட்டு சவாலுக்கும் ‘ இந்த பதிவிற்கும் தொடர்பே இல்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டனின் போலி அறிவியல் வேடங்கள் கிழிக்கப்பட்டது குறித்து:

மிகுந்த மகிழ்ச்சி. நான் இதுவரை துக்ளக்கில் ஒரு வாசகர் கடிதம் கூட எழுதியது இல்லை. இந்த நிமிடத்தில் என் எழுத்துச் செயல்பாடுகள் திண்ணையில் மட்டுமே உள்ளன. எனவே ‘அங்கே போய் என்ன சொன்னாய் இங்கே போய் என்ன சொன்னாய் இங்கு மட்டும் ஏன் சொல்கிறாய் ‘ என்கிற படு தர்க்கமயமான கேள்வியின் மூலம் திரு.ரோசா வசந்த் மிக அழகாகவே என் போலி-அறிவியல்-வேடங்களையும், இன்னபிற ‘புருடாக்களையும் ‘ கிழித்துள்ளார். இந்த வேளையில் திண்ணை ஆசிரியர் குழுவினரின் பாரபட்சத்தையும் நான் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. திண்ணையில் ‘பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது ‘ 6.என வெளிவந்த கட்டுரை குறித்து அதை விமர்சித்து (ரோசாவசந்த் அகராதியின்படி ‘கோபமாக ‘) நான் அனுப்பியிருந்த எதிர்வினையை அப்படியே வெளியிட்டிருந்தார்கள்7.. ‘எவ்வளவோ கிறியேஷனிஸ்ட் வெப்ஸைட்கள் இருக்கிறதோல்லியோ அங்கெல்லாம் போய் சண்டைபோடாமல் இங்கே மட்டும் வந்து ரொம்பத்தான் சயிண்டிபிக்காக பேசினால் எப்படியாக்கும் ? ஏன் உங்க ஊரிலேயே சர்ச்சிலே உன்னோட உறவுக்கார பாஸ்டரெல்லாம் கன்னாபின்னான்னு கிரியேஷனிஸம் பேசறாளே அங்கெல்லாம் போய் சயிண்டிபிக்காக பேசாம இங்கே மட்டும் வந்து சத்தம் போடத்தான் ஹிந்துத்வ சூத்திரனுக்கு உரிமையோ ‘ என்றெல்லாம் படு நேர்மையும் அதைவிட அதிக பண்பும் கொண்ட ரோசாவசந்த் பாணியில் நாக்கைப்பிடுங்கிக் கொள்கிற மாதிரி அப்போதே கேள்வி கேட்டு ‘அரவிந்தன் நீலகண்டனின் போலி அறிவியல் வேடத்தை ‘ ‘கிழி ‘த்திருக்கலாம். என்ன செய்யட்டும் ரோசாவசந்த் அவர்களின் மூளையில் கொப்பளிக்கும் நேர்மையின் அலைநீளத்தில் அவர்கள் மூளைகள் வேலை செய்யவில்லை போலும்.

மொழி-கணிதம்-மற்றும் டேவிட் ஹாரிஸனின் அரைலூசுத்தனம்:

எந்த ஒரு மொழியின் இலக்கணமும் அந்த மொழிக்கு ஒரு செயற்கைத்தன்மை அளிக்கும் முயற்சியே ஆகும். இவ்விதத்தில் எந்த மொழியையும் அதன் செயற்கைதன்மைகளோடொப்ப செயற்கை மொழியாக காணமுடியும். இம்முயற்சியில் மிகத் திறமையுடனும் தன் இலக்கணம் ஒரு அதி-மொழி(meta language) தன்மையுடனும் இருக்க வெகு கவனம் எடுத்துக்கொண்டவரும் பாணினி என்பது மொழியியல் துறையிலும் சரி, செயற்கை அறிவுத்துறையிலும் சரி மிக பரவலாக ஒத்துக் கொள்ளப்பட்டுள்ள விஷயம்8.. பாணினியின் இலக்கண விதிகள் செயற்கை அறிவுத்துறை சார்ந்த ‘இயற்கை மொழி பதவியலில் ‘ (Natural Language Processing) பயன்படுத்தப்படுகின்றன. இது குறித்தே நான் ‘சம்ஸ்கிருதம் ஒரு செயற்கை மொழி எனும் அடிப்படையில் ‘ என கூறியிருந்தேன். இது இந்த அளவுக்கு பெரிதுபடுத்தப்படும் என தெரிந்திருந்தால் இன்னமும் கறாராக ‘சமஸ்கிருதத்தின் செயற்கைத்தன்மையின் அடிப்படையில் ‘ என்று கூறியிருக்கலாம். ஆனால் இதில் பெரிய அல்லது சிறிய புரட்டலையோ புருடாவையோ நான் காணவில்லை. உதாரணமாக அப்படி ஒரு ஆய்வுத்தாளே இல்லை என்றோ அல்லது அந்த ஆய்வுத்தாள் ஏதாவது ‘நியூஏஜ் ‘ பத்திரிகையில் வெளியிடப்பட்டு நான் அந்த பத்திரிகையை செயற்கை அறிவு குறித்த ஆய்வுத்தாள்கள் வெளியிடும் பத்திரிகை என்றோ கூறியிருந்தால் அதை புரட்டு அல்லது ‘புருடா ‘ எனலாம். குறைந்த பட்சம் ‘எனவே தோழர்களே இந்த ஆய்வுத்தாளின் அடிப்படையில் சமஸ்கிருதம் ஒரு தேவ பாஷையாக்கும் அல்லது சமஸ்கிருதமே கணினிகளுக்கு ஏற்றது ‘ என்றோ நான் கூறவில்லை. இதை கூறுகையில் ‘புதிதாய் சமஸ்கிருதம் வந்து இங்கே சாதிக்க எதுவும் இல்லை. ‘ எனக்கூறுவது இதே விஷயத்தை ‘கணினிக்கு மிகவும் உகந்த மொழி சமஸ்கிருதம் ‘ என மிகைப்படுத்தி கூறுவதற்கு எள்ளளவும் வேறுபாடற்ற ஒரு விஷயம். அதைவிட வேடிக்கையான விஷயம் இது குறித்து கடிதம் எழுதிய ஒரு பேர்வழி குறிப்பிட்டது, ‘அரவிந்தன் எழுதும் இது போன்ற (சமஸ்கிருதம் கணிணிக்கு ஏற்ற மொழி, இன்னும் சிலர் சொன்னது போல தேவ பாஷை) கருத்துக்களை படித்து விட்டு, யாரும் ஒன்றும் சொல்லாமல் இருந்தால், இது போல இன்னும் என்ன என்ன பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவாரோ ? ‘ என்கிறார்.9. ‘செயற்கை அறிவு ஆய்வில் மொழி அமைப்பியல் அறிதலுக்கு அம்மொழி பயன்படும் ‘ என்பதை ‘சமஸ்கிருதம் கணிணிக்கு ஏற்ற மொழி ‘ என்பதாக பொருள்படுத்தி ‘பொய் மூட்டைகளை ‘ கண்டுபிடிக்கும் இம்மேதையின் மேதாவிலாசம் மென்மேலும் ஒளிவீச வாழ்த்துக்கள். இதே அறிவொளியுடன் அல்லது இதற்கும் அதிகமான அறிவொளியுடன் அடிக்கடி அவர் கடிதங்கள் எழுத வேண்டுமென்று அவரையும் அக்கடிதங்களை தணிக்கையின்றி பிரசுரிக்க திண்ணை ஆசிரியர் குழுவையும் வேண்டுகிறேன்.

இனி ‘அரைலூஸ் ‘ டேவிட் ஹாரிஸன்: ஹாரிஸன் கணிதத்திற்கும் இயற்கை-மொழிக்குமான பொது அம்சங்களை விவாதிக்க அளிக்கிறார். ‘விவாதிக்க ‘ எனும் தலை ப்பின் கீழ் ஹாரிஸனால் அளிக்கப்பட்டிருப்பதால் அவை விவாதத்திற்குரியவை10. என்பது ஒருபுறமிருக்க, அவர் கூறுவதிலிருக்கும் ‘உளறலை ‘ குறித்து விவாதிக்கலாம். எந்த மொழியிலும் ஒரு வார்த்தைக்கு தன்னளவிலான பொருள் ஒரு குறிப்பிட்ட சூழலில் வேறு உரு எடுக்கக் கூடும். உதாரணமாக ‘நீலகண்டனின் நேர்மை ‘ என ரோசா வசந்த் குறிப்பிட்டால் அதில் நேர்மை எனும் பதத்திற்கு ‘மொள்ளமாறித்தனம் ‘ என பொருள் கொள்ளவேண்டும் என்பது ரோசா வசந்த் ‘பதிவுகளில்’ அதிகபட்ச நேர்மையுடன் ‘அதிகபட்ச நேர்மை என்றால் அயோக்கியத்தனம் ‘ என பொழிப்புரை கொடுக்காமலே திண்ணை வாசகரால் புரிந்து கொள்ள முடியும். அதைப்போலவே கணிதத்தில் எனும் குறியீட்டை அதன் பயன்படுத்தப்படும் சூழலுக்கு ஏற்பவே பொருள் கொள்ளமுடியும். ஆக கணிதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடு அதன் சூழல்விவரிக்கப்பட்டதற்கு ஏற்ப அது உணர்த்தும் பொருளில் மாற்றமடையும். அதற்கான எளிய உதாரணமே ஹாரிஸன் கொடுத்தது. இது குறித்து சில எளிமைக்குறைவான உதாரணங்களை கட்டுரையின் போக்கில் கொடுக்க முயற்சிக்கிறேன். ‘ஒரு வார்த்தையால் ambiguity இல்லாமல் எந்த பொருளையும் உணர்த்தமுடியாது. அவ்வாறு செய்ய இயலும் ஒரே மொழியின் பெயர் கணிதம். ‘ என்பது எவ்வளவுக்கு உண்மை ? கணித பதங்களான + அல்லது – தன்னளவில் என்ன பொருளுடையவை ? மற்றெந்த மொழிகளைக்காட்டிலும் ambiguity இல்லாத்தன்மை கணிதத்திற்கு உள்ளது என்பதற்காக அதில் செமாண்டிக் தன்மையே இல்லை என்பது மடத்தனம். ஒரே விஷயத்தை இரு கவிஞர்கள் இருவிதமாக பாடியுள்ளார்கள் என வைத்துக்கொள்வோம். அக்கவிதைகளை தத்தம் அழகியலைச் சார்ந்து இருவர் ஒன்றை வெறுத்து மற்றொன்றை விரும்பலாம். இத்தகைய ஒரு சூழல் கணிதத்திற்கு ஏற்பட முடியாதென்பதே க்வாண்டம் இயற்பியலின் எழுச்சிக்கு முன்பு வரையிருந்த நிலை. ஆனால் ஒரே க்வாண்டம் நிகழ்வுகளை குறித்து ஸ்க்ராட்டிஞ்சரும் ஹெய்ஸன்பர்க்கும் வெவ்வேறு கணித அமைப்புகளை முன்வைத்தபோது அவர்களுக்கு மற்றவரின் கணித அமைப்பு விரும்பத்தகாததாக மாறியதற்கு தர்க்கம் சார்ந்த அல்லது தற்சார்பற்ற objective காரணிகளை விட அழகியல் சார்ந்த மற்றும் தத்துவ தரிசனம் சார்ந்த காரணிகளே காரணமாயிருந்தது. கணித மொழியின் அழகியல் சார்ந்து ஒரு வித கணித பகர்தலை மற்றொரு கணித பகர்தலுக்கு மாற்றாக ஒரு அறிவியலாளர் தேர்ந்தெடுப்பதென்பதை வெளிக்காட்டும் பின்புலத்தில் ஹாரிஸனின் எடுத்துக்காட்டு மிகச்சிறந்த எளிமையான ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கணிதத்தில் பொருள் தரும் வாக்கியங்கள் கூட ஒரு குறிப்பிட்ட அறிதல் சட்டகங்களை பற்றியே அமையும். உதாரணமாக ‘ஒரு முக்கோணத்தின் உட்-கோணங்களின் கூட்டுத்தொகை 180 ‘ எனும் கணித வாக்கியம் யூக்கிளிடிய வெளியில் உண்மையாயிருக்கும். ஆனால் ஒரு கோளத்தின் பரப்பின் மீது அது உண்மையாயிருக்க முடியாது. சில தருணங்களில் கணிதத்தின் தர்க்க அமைப்பியல் சார்ந்த எல்லைகளை மீறி அல்லது அவை தகர்ந்த நிலையிலும் கணிதம் மொழியாக செயல்படுவதுண்டு. உதாரணமாக முனைப்புச்செயல்பாடுகளில் (point actions) பயன்படுத்தப்படும் Dirac delta function. இதன் வரையறை எவ்வாறெனில் ஒரு மாறுபடுகாரணி (variable)யின் மதிப்பானது 0 வாக அனைத்து delta(t) க்கும் இருக்கும், t யின் மதிப்பு 0 வாக இல்லாத வரை. delta(0) வின் மதிப்பு முடிவிலியாக இருக்கும். இது இணைக்கப்படுகையில் எதிர் முடிவிலியிருந்து நேர் முடிவிலிவரையாக இணைக்கவேண்டும். கணிதத்தின் தர்க்க அடிப்படையில் இத்தகையதோர் function அபத்தமானது. ஆனால் நாம் க்வாண்டம் இயற்பியலில் அதனை பயன்படுத்துகிறோம். மேலும் கணிதம் இயற்கை மொழிகளைப் போன்றே செமாண்டிக்ஸுடன் அமைந்துள்ளது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். (சுவாரசியமாக வெப்ஸ்டர் அகராதி செமாண்டிக் எனும் பதத்தின் சமஸ்கிருத வேர்ச்சொல்லை கொடுக்கிறது. இதை நான் கூறுவதால் சமஸ்கிருதம்தான் அகராதிகளுக்கு ஏற்ற மொழி என நான் ‘பொய் மூட்டைகளை ‘ அவிழ்த்துவிடுவதையும் பன்மொழி-கிழி-மேதாவியும், முற்போக்கு மகா சன்னிதானமும் இல்லாத பட்சத்தில் நான் என்னவெல்லாம் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுவேனோ எனும் தன் நேர்மையான அறிவொளி வீசும் அச்சத்தை விரைவில் ரோசாவசந்த்தின் விசிறி குழாமிலிருந்து யாராவது திண்ணைக்கு கடிதம் எழுதுவார்கள் என நம்புகிறேன்.) அமைப்புச்சூழலின் அடிப்படையில் எழும் பொருள் குறித்த செமான்டிக் தன்மை கணிதத்திற்கும் உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம். ‘கணிதம் மேல்குறுக்க இயலாத பொருட்கூறுகளை (semantics) உடையது. ‘ என்கிறார் ஜான் கஸ்டி.11. ஹாரிஸனின் விவாதத்திற்கான எடுத்துக்காட்டிலிருந்தே மேற்கூறிய அனைத்து தளங்களுக்கும் செல்லமுடியும். எனவேதான் அவரது கற்பிக்கும் திறன் குறித்த பட்டங்களை குறிப்பிட்டேன். அதாவது ஒரு இயற்பியலாளரான அவரது புலமை கற்பித்தலில் அதிலும் கணிதமற்ற-அறிவியலாளர்களல்லாத கலை-இலக்கிய மாணவர்களுக்கு கற்பித்தல் என்பதற்காகவே – அப்புலம் சார்ந்த பரிசான ‘டான் ‘ விருது வழங்கப்பட்டிருப்பதை கூறியிருந்தேன். மாறாக அவர் கருப்பா வெளுப்பா அல்லது அவருக்கு இந்த பரிசு கொடுக்கப்பட்டதால் அவர் கூறியது உண்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல. மேலும் NLPயில் ஒரு இயற்கை மொழியில் சூழலுக்கு ஏற்ப ஒரு பதம் பொருள் கொள்வதற்கு ஒப்பவே கணிதத்திலும் ஒரு பதம் அதன் சூழலுக்கு ஏற்ப பொருள் கொள்ளப்பட வேண்டியுள்ளது என்பதும் மிகவும் பரவலாகவே தெரிந்த விஷயம். இதில் பார்ப்பனியத்தையும் இன்ன பிற ஈயங்களையும், நிறம் சார்ந்த நம்பிக்கைகளையும் காண அசாத்திய அறிவு வேண்டும். இராமயணத்தில் ஆரிய சூழ்ச்சியை கண்டுபிடித்த ஒரு கூட்டத்ை சார்ந்தவர்க்கு அந்த அசாத்திய அறிவு வாய்க்கப்பெற்றதில் எந்த அதிசயமும் இல்லை.

அடுத்ததாக அந்த Dr.P.ராமானுஜன். இவர் குறித்த ரோசா வசந்த்தின் பண்பட்ட ‘கிழிப்புகள் ‘ பின்வருமாறு. ‘அப்பறம் யாரந்த P. ராமனுஜன், பாணினியின் சமஸ்கிருத இலக்கணம் மூலம் அல்காரிதம் உருவாக்கினாரா ? அப்படி ஒரு புருடாவை இணையம் முழுக்க, இந்துத்வ பக்கங்களில், மற்றும் டிஸ்கஸன் குரூப்களில் படிக்கிறேன். ‘

அதாவது அவர் யாரென்றே தெரியாமல் (அல்லது தெரிந்து கொண்டே தெரியாதது போல) பாணினியின் சமஸ்கிருத இலக்கணம் மூலம் அல்காரிதம் உருவாக்குவது என்பது ‘புருடா ‘ என ரோசா வசந்த் முடிவு செய்துள்ளார். என்ன ஒரு பகுத்தறிவு! குறைந்த பட்சம், பாணினியின் இலக்கணமே குப்பை என கொண்டாலும் கூட, இந்திய மொழிகளுக்கான மென்பொருள் உருவாக்கவேனும் பாணினியின் இலக்கணம் பயன்படுமே என்கிற அடிப்படை அறிவு கூடவா பண்பட்ட முறையில் ‘புருடாக்களை ‘ ‘கிழிக்கும் ‘ வேசத்தில் அற்றுப்போய்விட வேண்டும் ? னால் அதற்கு – பெங்களூரில் உள்ள C-DAC (அதுவும் ஹிந்துத்வ இயக்கமா என்பதை எதற்கும் ரோசா வசந்த், எதிலும் ‘ஹிந்துத்வ சூழ்ச்சியை ‘ கண்டுபிடிக்கும் மேதாவியான பிஜி மத்யூஸிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.) கணினி ஆராய்ச்சி மையத்திடம் கிடைக்கும் விஷயத்திற்கு ‘நாகர்கோவில் இருந்து கொண்டிருக்கிற நபரிடம் ‘ கேட்கிற ராய்ச்சி நேர்மை இருக்கிறது பாருங்கள்! வாசிக்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்! துரதிர்ஷ்டவசமாக நான் இந்த ராமனுஜன் குறித்து எந்த ஹிந்துத்வ இணைய தளத்திலும் காணவில்லை. C-DAC இணையதளத்தில் நான் முதன்முறையாக அவரது ஆய்வுகள் குறித்த செய்தியை கண்டேன். அவர் சமர்ப்பித்துள்ள துறைச்சார்ந்த ஆய்வுத்தாள்கள் ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.12. கிழிக்க விரும்புகிறவர்களுக்கு அந்த ஆய்வுத்தாள்களை (அவை இணையத்தில் இல்லை) தேடி எடுத்துக்கொள்வதில் எந்த சிரமமும் இருக்க முடியாது. அவர்கள் C-DAC முகவரியையும் கொடுத்துள்ளார்கள்.13. ஆனால் என்ன இதையெல்லாம் திரு.ரோசா வசந்த் ப்பூ வென ஊதிவிட முடியும். எப்படியும் பாணினியை பயன்படுத்தியதாலேயே ராமானுஜனின் விஷயம் புருடா என நிரூபித்தாயிற்று. அப்புறம் ராமானுஜன் இயங்கும் இணையத்தளமான C-DAC ம் ஹிந்துத்வ இணையத்தளமாகத்தான் இருக்கவேண்டும் ஏனென்றால் மேதாவியே கூறிவிட்டாரே, ‘அப்படி ஒரு புருடாவை இணையம் முழுக்க, இந்துத்வ பக்கங்களில், மற்றும் டிஸ்கஸன் குரூப்களில் படிக்கிறேன். ‘ அப்படியானால் C-DACம் கூட ஹிந்த்துத்வ சதிகாரர்களின் கூடாரமாகத்தான் இருக்கவேண்டும். தர்க்கம் ஐயா தர்க்கம்! ஒரு வேளை இந்த முரளி மனோகர் ஜோஷி வந்து இப்படி C-DACக்கு உள்ளே சமஸ்கிருத ‘அரக்கியை ‘ (பழைய திமுகவின் பண்படு மொழியில் சொன்னேன்) புகுத்தியிருப்பாரோ! 1990 லேயே C-DAC இந்த பிற்போக்குத்தனமான ‘புருடா ‘ வேலைகளில் இறங்கிவிட்டதாக தெரிகிறது.14. RSS-பார்ப்பன ‘புருடா ‘ வேலைகள் அக்மார்க் மதச்சார்பற்ற காலங்களிலேயே தொடங்கி ஜாம்ஜாமென நடக்கிறதாக தெரிகிறது.

ரோசாவசந்த்: ‘ரிக்கின் ‘ஆய்வுதாளை ‘ இன்றுவரை யாரும் ஸீரியஸாக ஏன் எடுத்து கொள்ளவில்லை என்பது குறித்து யோசிக்கவில்லை. உலகில் எத்தனையோ குப்பைகள் ஆய்வுதாள் என்ற பெயரில் வருகிறது. எல்லாவற்றையும் பொருட்படுத்தி கேள்விகேட்டு கொண்டிருக்கமுடியாது…. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமென்ன வென்றால், RSS கருத்துருவ பாதிப்புள்ள எத்தனையோ தேசி(desi) (சமஸ்கிருத பரிச்சயமுள்ள) பிள்ளையாண்டன்கள் இந்த துறையில் இருக்ககூடும். அவர்கள் கூட இதை ஸிரியஸாக எடுத்துகொள்ளவில்லை என்பதைத்தான், 18 வருட மெளனம் காட்டுகிறது. ஒரு ஆய்வுத்தாள் 18 வருடங்களாக யாராலும் கவனிக்கப்படாததால் அது குப்பை என்கிற ரீதியில் ரோசாவசந்த்தைப் போல கூற முடியாது.(இப்படி அவர் exactக கூறாவிட்டாலும் பொருள் அதுதான்.) ஏனென்றால் 25 வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட ஆய்வுத்தாள்கள் பின்னாட்களில் வெகு முக்கியமான தொழில்நுட்ப முன்னகர்தலுக்கு உதவியுள்ளன.

இந்த 18 வருட மெளனம் குறித்து நன்றாக ஆராய்ந்துதான் ரோசாவசந்த் கூறுகிறாரா தெரியவில்லை. NLP துறையில் மட்டுமே ரிக்கின் ஆய்வுத்தாள் சுட்டிக்காட்டும் பாணினிய அடிப்படையிலான அறிதல் அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இன்று பல ஆய்வுகள் இந்தியாவில் பாணினியின் இலக்கண அடிப்படையில் NLP துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக ஹைதராபாத் IIIT யில் மேற்கொள்ளப்படும் அனுசாரகா அமைப்பினை குறிப்பிடலாம். ’18 வருட மெளனத்திற்கு ‘ எடுத்துக்காட்டாக அதன் ‘வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள் ‘ பகுதியிலிருந்து ஒருபகுதியை தருகிறேன், ‘அனுசாரகா என்பது பாணினிய இலக்கணத்தால் தூண்டப்பட்ட தகவல் இயங்கியல் அடிப்படையில் (கணினி) இயந்திரம் சார்ந்த மொழிபெயர்ப்பிற்கான ஒரு அணுகுமுறை. பாரதிய மொழி ஏதேனும் ஒன்றினை அறிந்த ஒருவர் மற்ற மொழி உரைகளை அறிய இது வழிவகுக்கும். ’15. இதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒருவிதத்தில் ரிக்கின் ஆய்வுத்தாளுக்கும் அப்பால் முன்னகர்ந்திருப்பதை நாம் இதில் காணலாம். இதில் ஏற்படும் எந்த வெற்றிகர முடிவும் ‘செயற்கை அறிவு ‘துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதுடன் தொழில்நுட்ப அளவில் மின்னணு பிளவினை சமன் செய்யவும் உதவும். துரதிர்ஷ்டவசமாக இந்த ஆய்வுகளையெல்லாம் ரோசாவசந்த் ‘புருடா ‘, ‘குப்பை ‘, ‘உளறல் ‘ ஆகிய வகையறாவில்தான் சேர்ப்பார். 18 வருட மெளனத்தை குறித்து அத்தனை அதிகாரபூர்வமாக தெரிவிப்பவருக்கு NLP ஐ பாணினிய நோக்கில் காணும் ஒரு நூலே வந்தது கூடவா தெரியாமல் போயிருக்கும் எனும் கேள்வி எழலாம்16.. ஆனால் வருடத்துக்கு பல ‘குப்பை நூல்கள் ‘ வெளிவரலாம், நாகர்கோவில் மாதிரி பிற்போக்கான இடத்திலிருக்கிற ஒருவருக்கு அவை நல்ல நூல்களாக கூட தெரியலாம். அதையெல்லாம் ‘கிழி மேதாவி ‘ தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உண்டா என்ன ?

திருவிளையாடல் வசனம்தான் ஞாபகத்திற்கு வருகிறது: ‘ரோசா வசந்த்திற்கு (கிழி)அறிவு ஏராளம் ஏராளம். அதைவிட ணவம் ஏராளம் ஏராளம். ‘ கிழி-அறிவு என்பதை கிழிபடும் அறிவு அல்லது கிழிக்கும் அறிவு என இரு பொருள் பட எடுத்துக்கொள்ளலாம்.

1. அரவிந்தன் நீலகண்டன், ‘குஜராத்தும் நமது அறிவு ஜீவிகளும் ‘, திண்ணை 30-ஜூலை-2002.

2.ரோசா வசந்த், “சில எதிர்வினைகள்”, திண்ணை 12-12-2003

3.அரவிந்தன் நீலகண்டன், திண்ணை இதழின் கடிதங்கள் பகுதி 19-12-2003

4.ரோசா வசந்த், திண்ணை 26-12-2003

5.சகுராய், ‘Advanced Quantum Mechanics ‘ (அடிஸன் வீஸ்லி) 1967 பக். 27

6. ‘பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது ‘, திண்ணை (19-ஜூன்-2003)

7.திண்ணை இதழின் கடிதங்கள் பகுதி தேதி ஜூலை 18 2003.

8.உதாரணமாக காண்க: ஸ்டாவன் ஹோல்ட்ஸ்மன், Digital Mantras: The Languages of Abstract and Virtual Worlds. (The MIT Press, 1994) (பக் 12-13)

ப்ரிட்ஸ் ஸ்தால், Artificial Languages, Asian backgrounds or influences.(IAAS Newsletter, மார்ச் 2003) ‘மிகப்பழமையான செயற்கை மொழி பாணினிய சமஸ்கிருத இலக்கணம் எனும் அதிமொழியாகும். ‘ எனும் ஸ்தால் கணிதத்தில் குறிப்பாக கலிலியோவின் பின் இயற்கைமொழி வேர்களிலிருந்து முற்றிலும் நீங்கி இயங்கும் செயற்கைமொழியாக கணிதம் பரிணமித்ததையும் குறிப்பிடுகிறார். க்வாண்டம் இயற்பியலின் தொடக்கத்தில் சில இயற்கைமொழித்தன்மைகளை கணிதம் க்வாண்டம் பிரபஞ்ச நிகழ்வுகளை சமன்பாடுகளாக வெளிக்காட்டுகையில் சந்தித்தது. செயற்கை அறிவில், இயற்கைமொழியினை கணினிக்கு கொண்டு செல்ல செயற்கை-இயற்கை மொழி பரிணாமத்தில் ஒரு பங்கு வகித்த சமஸ்கிருத இலக்கணத்தின் தேவை எளிதாக புரிய முடிந்த ஒன்றுதான்.

9.கார்த்திக்ராம் ‘பதிவுகள் விவாததள உள்ளீடு – தேதி 21/12/2003 மற்றும் திண்ணை கடிதம் (19/12/2003)

10.http://www.upscale.utoronto.ca/GeneralInterest/Harrison/DevelQM/DevelQM.html

11.’Formally Speaking’, ஜான்.L.காஸ்டி, p. 527, ‘NATURE ‘, பாகம் 411, 31 மே 2001 (URL: http://www.cs.auckland.ac.nz/CDMTCS/chaitin/casti.html )

12.http://www.cdacindia.com/html/ihg/techps.asp (இவற்றுள் சில சமஸ்கிருதம் தொடர்பான ய்வரங்கங்கள் மற்றும் மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்டவை. சில அறிவியல் அமைப்புகள் நடத்திய கருத்தரங்கங்களில் சமர்ப்பிக்கப்பட்டவை.)

13.http://www.cdacindia.com/html/ihg/contact.asp

14.http://www.cdacindia.com/html/connect/3q2000/art10a.htm

15.)http://nlp.iiit.net/~anusaaraka/FAQ/faq-anu.html

16.அக்ஷார் பாரதி, விநீத் சைதன்யா மற்றும் ராஜீவ் சங்கால், ‘Natural Language Processing: A Paninian perspective ‘ பிரண்டைஸ்-ஹால் (இந்தியா) புது டெல்லி (1995) அரவிந்தன் நீலகண்டன்


தமிழ்சங்கங்கள் & FETNA

– கோச்சா –

இடம் பெயர்ந்த தமிழர்கள், தங்களின் அடையாளத்தைத் தேடி என்பதை விட சென்ற ஊரில் அன்னிய முகங்களைப் பார்த்து சற்று அந்நியமாக உணர்ந்த போது தங்கள் ஊர்காரர்களுடன் சங்கமித்து சங்கம் கண்டான்.

கூடி மகிழ்ந்தான். பாட்டும் கூத்தும் எனப் பல விழாக்கள் கண்டான். தமிழக அரசியல், கலை மக்களை கொணர்ந்து விழா எடுத்தான்.

ஆனால் ஒரு விநோதம், – தமிழகத்திலிருந்து இவன் அழைத்த சினிமாக்காரர்களில், உதிரிப் பூக்கள் எடுத்த ஜே.மகேந்திரன் இல்லை, குறும்படம் எடுத்த எடிட்டர் லெனின் இல்லை.

இலக்கியத்திலோ கி.ராஜ நாறாயணன் இல்லை, செயப்பிராகசம் இல்லை.

அரசியல்வாதிகளிலோ வந்தவர் எல்லோரும் தமிழகத்தை குழப்பியவர்களே…!!!

உழைத்துக் களைத்த அவனுக்கு கூடிக் களிக்க ஒரு சங்கம் தேவைப்பட்டது ஞாயம் தான். ஆனால் அதற்கு ‘இடம் பெயர்ந்த தமிழர் சங்கம் ‘ என்று பெயர் வைக்காமல் ‘தமிழ்ச்சங்கம் ‘ எனப் பெயர் வைத்தான்.

முத்தமிழ் சங்கங்கள் கண்ட நம் சங்ககால சமுதாயம் தொட்டு கடைசியாக நான்காம் தமிழ்ச்சங்கம் மதுரையில் பாண்டித்துரைத் தேவரால் ஏற்படுத்தப்பட்டது. ஆற்றிய தமிழ்ப் பணி பல உண்டு.

அதானால் தமிழ்சங்கம் என்பது தமிழர் பொழுதுபோக்குத்தாண்டி தமிழுக்கான பணிகானும் சங்கம் என்பது தொடர்ந்தது.

ஆனால் ஐயகோ, இந்த இக்காலக் தமிழ் சங்கங்கள் எடுத்திருக்கும் நிலை… ?

பொதுவாக என்ன செய்கிறார்கள்.. ?

ஒரு ஊரில் தமிழ் பேசும் சிலர் கூடினால், ‘தமிழ்சங்கம் ‘ ஆரம்பிக்கிறார்கள். அப்புறம் கலை நிகழ்ச்சி தான் கொண்டாட்டம் தான் எப்போதும்.

தமிழ்ப் பணி ஆற்ற வேண்டிய தமிழ்சங்கங்கள் இப்படித் தொலைந்து போக, சில தனி நபர்கள் ‘திருக்குறள் ‘ புத்தகம் மேன்மையாக கண்டார்கள். தமிழகத்திலேயே இல்லாத வண்ணம் ‘தென்றல் ‘ எனும் பத்திரிக்கையை கலிபோர்னியாவில் நடத்துகிறார்கள். தனி முயற்ச்சியாக ‘பாரதி ‘ குறுந்தட்டு வெளியிட்டார்கள். இணையத்தில் தமிழுக்கு விஞ்ஞான உதவி , தமிழ் குறியிடுகள், கணணித் தமிழ், இணையத் தமிழ் என தனிமனிதர்களாகத் தமிழ்ச்சங்கப்பணி கண்டார்கள்.

ஆனால், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பு விழாவிலோ, திருவிளையாடலை வைத்து நையாண்டி நாடகம் போடும் அளவுக்கு, கிழிந்து போய் கிடக்கும் தமிழ்நாட்டின் நிலை பற்றி ஒரு விழிப்புணர்வு நாடகம் காணவில்லை. விதிவிலக்காக, இலங்கைத் தமிழர்கள் போட்ட தொலைந்து போன சிறு பெண்ணைத் தேடும் நாடகம், இதயத்தைத் தொட்டது.

அப்படியெனில், பொழுதுபோக்கே தேவையில்லையா எனக் கேட்கலாம்… ? பொழுதுபோக்குத் தேவை தான். இம்மாதிரி சங்கங்களில் அது நல்ல சினிமாவில் இடையிடையே வரும் ‘விவேக் ‘ காமெடி போல் இருக்க வேண்டும். மூல நிகழ்ச்சியோ ஒரு நல்ல சினிமா தரத்தில் இருக்க வேண்டும். வெறும் கலைப்படம் என்ற பெயரில் வரும் அறுவைகளாகவும் இருக்கத் தேவையில்லை.

நான் அமெரிக்காவில் தற்போது வாழ்வதால், அமெரிக்கத் தமிழ் சங்கங்ளைப் பார்த்த அனுபவத்தில் இது எழுதப்படுகிறது.

இங்கிருக்கிற தமிழ்சங்கள் எல்லாம், ‘ ‘இடம் பெயர்ந்த தமிழர் சங்கம் ‘ ‘ என்று தங்களின் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டியது நன்று.

இல்லை முந்தைய தமிழர்கள் செய்தது போல், தமிழ்ப் பணி(யும்) ஆற்றி தற்போதுள்ள ‘தமிழ்ச் சங்கம் ‘ எனும் பெயரைத் தொடரலாம்.

அது மாதிரி ஒரு வேதனையான விஷயம்.

இந்தத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பில் ( FETNA ) நடக்கும் விழாவில், நிகழ்ச்சிகளை முடிவு செய்வதும், தமிழகத்திலிருந்து விருந்தினர்களை அழைப்பதும், பொருளுதவி செய்பவர்களே அதை தங்கள் இஷ்டம் போல் முடிவு செய்யும் நிலை.

அது விடுத்து, தமிழ்சங்கத்திற்கென்று ஒரு தர நிர்ணயம் வேண்டும். பொருளுதவி செய்பவர்களுக்கு மரியாதையும், அங்கிகாரமும் நிகழ்ச்சியில் தரலாமே தவிர , நிகழ்ச்சிகளின் தரத்தை முடிவு செய்ய வேண்டியது சங்கக் குழுவாகத் தான் இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் இருக்கும் எல்லா சங்கங்களைக் கலந்து தான் குழு அமைக்க வேண்டும்.

தனி மனித முறையில் தமிழுக்காக தொண்டு புரிந்தவர்களை குழுவில் இடம் பெயரச் செய்ய வேண்டும். அழைக்கப்பட வேண்டிய விருந்திணர்களை முடிவு செய்த பின், இந்த தர நிர்ணயம் செய்ய வேண்டிய குழுவின் அனுமதி பெற வேண்டும்.

அப்பொழுது தான் FETNA வின் அழைப்புக்கு ஒரு மரியாதை இருக்கும். FETNA விற்கும் ஒரு நிலைப்பாடு வரும்.

மேலும், எந்தவொரு அரசியல்வாதியாக இருந்தாலும், அவருடன் பல்வேறு கருத்துக் கொண்ட ஒரு குழு நேருக்கு நேர் நிகழ்ச்சியை FETNA மேடையில் கட்டாயாமாக வைக்க வேண்டும்.

அப்போழுது தான், FETNA அவர்களின் பிரச்சார மேடையாக இருக்காமல், தமிழ் மக்களின் மேடையாக இருக்கும்.

தமிழகத்தில் முகமூடி மனிதர்களின் உண்மை முகங்களின் உருவத்தைக் காட்டும் கண்ணாடியாக FETNA இருக்கும். அந்த FETNA அவர்களுக்கு பல முகங்கள் காட்டும் நிலையில் இருந்தால்… ?

அது இல்லாவிடில் அது நடைபெறும் வரை, FETNA- விற்கு விடுமுறை விடலாம்.

FETNA ஒரு திறந்த கலந்துரையாடலுக்கு தன்னை உட்படுத்தி தனது நிலைப்பாட்டையும், தரத்தையும் வடிவமைத்துக் கொள்வது அமெரிக்கத் தமிழருக்கும் தமிழுக்கும் நல்லது. செய்வார்களா…. ?

அக்கறையுடன்

கோச்சா gocha2004@yahoo.com


மதிப்புமிக்க அய்யா நக்கீரன் அவர்களுக்கு,

வணக்கம். கலைஞர் கருணாநிதிப் பற்றி தங்களின் வருத்தம் கண்டேன். என்னால் முடிந்த சிறு விளக்கங்கள்.

1. கலைஞர் தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் மாற்ற முயற்சி செய்தார் என்பது உண்மை, ஆனால் அதற்க்கு முன்பே நம் தமிழக பெற்றோர்கள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கி வந்தார்களே ? இது யார் குற்றம் ?

2. கலைஞர் ஆட்சியிலே தமிழ்க்கு என்று ஒர் துறையும், தனி மந்திரியும் அமைத்தவர். மேலும் தமிழகம் முழவதும் விளம்பர பெயர் பலகைகள் தமிழில் எழதப் பட்டது, மற்றும் அனைத்து அரசு ஆணைகளும் தமிழேலேய தரப் பட்டதும் உண்மை.

3. இரட்டை கிளாசு குடி நீர் முறை தவறுதான். ஆனால் இது மிகப் பெரிய சமுதாய குற்றம், இதற்கு முழுவதும் கலைஞர் எப்படி குற்றம் ஆவார் ? தலித் தலைவர்கள் திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் வந்த பிறகு தலித் கொடுமைகள் சற்று குறைந்து உள்ளது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

4. கலைஞர் வைகோவை நீக்கியது தவறுதான். ஆனால் காலங்கள் மாறி, இன்று தந்தை-மகன் உறவுப் போல உறவு மீண்டும் பலம் அடைந்ததை நீங்கள் ஏடுகளில் படாத்தீர்ப்பீர்கள். மேலும் இந்த தள்ளாத வயதிலும் இரண்டு முறை வேலூர் சிறைச் சென்று பார்த்தாரே கலைஞர் ? கலைஞர் வேண்டுகோளுக்கு இணங்க பிணையில் (ஜாமீனில்) வைகோ சிறையில் இருந்து வெளிய வருவது அனைவருக்கும் மகிழ்ச்சி அல்லாவா ?

5. கலைஞர் தன் மகனை வளர்க்கிறார் என்பது வழக்கம் போல் தேவையில்லாத குற்றசாட்டு. ஸ்டாலின் கட்சியில் கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக உழைப்பவர். மிசா சிறையில் துன்ப பட்டவர். கலைஞர் மகன் என்பதாலே சிறையில் பல துன்பங்களை அடைந்தவர். ஏன் நேரு இந்திராவை, இந்திரா ராசிவை, வளர்த்தது நாடே அறியுமே! தற்பொழது நாட்டை ஆளும் ஜெயலலிதா எம்.ஜீ.ஆருடன் சேர்ந்து நடித்தவர் என்பதை தவிர வேறு என்ன தகுதி உள்ளது ?

6. இலக்கியவாதியோ, அரசியில்வாதியோ பெருன்பான்மை தமிழக மக்களை பொறுத்தவரை ‘கலைஞர் ‘ வாழும் வரலாறு. ஆயிரம் பேர் குறை சொன்னாலும், அவரின் பங்களிப்பை தமிழகம் மறக்காது, மறக்கவும் முடியாது.

நன்றி. வணக்கம்.

மயிலாடுதுறை சிவா.

mpsiva23@yahoo.com


திண்ணையில் கட்டுரை எழுதும் சின்ன உத்தேசம் கூட அவருக்கிருக்கும் வேலைப்பளுவின் இடையில் இல்லாத ரோஸா வஸந்த் உண்மையிலேயே நேரம் கிடைக்குமாயின் எவ்வளவு எழுதுவார் என்பதற்கு சாட்சியாக கடிதங்கள் இருந்தன.

வீரப்பனின் ஆதரவாளன் என்று இரோசாவசந்தை நான் குற்றம் சாட்டியதாகக் குறிப்பிடுகிறார். நான் அவரைச் சொல்லவில்லை. தார்மீகக் கோபம் கொள்வதற்கு வசதியாக வீரப்பனின் ஆதரவாளராக மாறவும் நிறையபேர் காத்திருக்கிறார்கள் என்றுதான் சொன்னேன். அந்தக் கும்பலில் தன்னைத்தானே நுழைத்துக்கொண்டது இரோசாவசந்துதான்.

சக்தியும் சுகனும் ரெஸ்டாரண்டில் பாத்திரம் கழுவுகிறார்கள் என்று எழுதுவதை திண்ணை பிரசுரித்திருக்கிறது. சொபாசக்தியும் சுகனும் ரெஸ்டாரண்டில் பாத்திரம் கழுவினால் என்ன, அல்லது ரெஸ்டாரண்டை நடத்தினால் என்ன ? சோபா சக்தியும் யாரிடமும் சென்று ‘நான் ரெஸ்டாரண்டில் பாத்திரம் கழுவுகிறேன். அதனால் என்னுடைய கட்டுரையை உலகமகா கட்டுரை என்று ஒத்துக்கொள் ‘ என்று கேட்டார்களா ? வக்காலத்து வாங்குவதற்கும் ஒரு அறிவு நேர்மை வேண்டும். அது கூட இல்லாத இப்படிப்பட்ட வக்காலத்து வாங்குபவர்கள் இவர்கள் யாரை ஆதரிப்பதாக நினைத்து பேசுகிறார்களோ அவர்களுக்கே அவமானத்தைத்தான் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். சரி, இரோசாவசந்து தன்னைவிட குறைவாக வருமானம் வாங்கும் யாரையும் விமர்சிக்கமாட்டாரா ? அல்லது இதுவரை அவர் விமர்சித்த அனைவரது சம்பளத்தையும் கேட்டுத்தெரிந்து கொண்டபின்னரே விமர்சித்தாரா ?

நான் அவரது உணர்வு குறித்து எந்த மதிப்பும் இல்லாது கிண்டலடித்திருப்பதாகக் கூறுகிறார். அவர் இதுவரை எழுதிய கட்டுரை, கடிதங்களில் எல்லாவிடத்திலும் எனக்கு நேரமில்லை பிறகு பார்க்கலாம் என்ற வரிகளைக் காணலாம். திண்ணையில் எழுதுபவர்கள் எல்லோருமே ஏராளமான வேலைப்பளுக்களுக்கு நடுவே, குடும்ப சுமைகளுக்கு நடுவே எழுதுபவர்கள்தாம். வெட்டியாக உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருப்பவர்கள் அல்லர். ஒவ்வொரு கடிதத்தின் கடைசியிலும் ஏன் அவ்வாறு எழுதவேண்டும் ? திண்ணையில் எழுதுபவர்கள் எல்லாம் வெட்டிப்பசங்கள், என்னுடைய பொன்னான நேரத்தைச் செலவழித்து நான் எழுதுகிறேன் என்று குத்திக்காட்டவா ? அல்லது சர்வே எடுப்போமா ? யார் இரோச்சாவசந்தின் வேலையை விட அதிகமான வேலை செய்துகொண்டு அதே நேரத்தில் திண்ணையில் கட்டுரையோ கடிதமோ எழுதும்போது அதனை குறிப்பிடாமல் எழுதுவது என்று ? ஏறத்தாழ எல்லோருமே அந்த லிஸ்டில் இருப்பார்கள். திண்ணைக்குழு உட்பட. அவ்வளவு வேலைஇருப்பவர்கள் எழுதாமல் இருக்கவேண்டும். எழுதிவிட்டு திண்ணைக்கோ அல்லது திண்ணை வாசகர்களுக்கோ பிச்சைப் போடுகிறேன் என்ற எகத்தாளத்தில் எழுதக்கூடாது. இது அநாகரிகம். இதுதான் அவர் மற்றவர்கள் உணர்வு குறித்து கொண்டிருக்கும் மதிப்பு.

சிவக்குமார் திருப்பி பதில் சொல்லவில்லை என்றால் (இதற்கு ஒரு அழகான தமிழ் உவமை இருக்கிறது) தவறு செய்துவிட்டோம் என்று வாயை மூடிக்கொண்டு சென்றுவிட்டார் என்று திமிருடன் எழுதுகிறார் இரோச்சாவசந்து.

எதனைப் பார்க்கவேண்டுமென்றாலும், கூகுளில் ஒரு தட்டுத்தட்டித்தட்டித்தான் பார்க்கவேண்டும் என்று நிலையில் இருக்கும் இரோசாவசந்துக்கு ஏன் நேரமில்லை என்பது தெள்ளத்தெளிவாகவே தெரிகிறது. அவ்வளவு 4 மணிநேரம் செலவழித்தும் தன் தவறான முடிவையே நியாயப்படுத்தத் தேடியிருக்கும் இரோசாவசந்துக்கு 24 மணிநேரம் வேலை செய்தாலும் பத்தாது என்பதற்கு பண்டிட் விவகாரமே சாட்சி. இப்படிப்பட்ட ஆட்கள், இரோச்சாவின் கருத்திலிருந்து மாறுபட்டவர்களை, அறிவற்றவர்கள், முட்டாள்கள், அயோக்கியர்கள் என்று அவதூறு செய்து எழுதும் நீண்ண்ண்ண்ண்ட கடிதங்களை தனிக்கட்டுரையாகக் கவுரவுக்கும் திண்ணை ஆச்சரியத்துக்குரியது.

உத்தரபிரதேசத்தில் மட்டுமல்ல, அமெரிக்காவிலிருந்து தமிழகம் வரைக்கும் ஒரே மாதிரிப் பெயர்கள்தான். டாக்டர் வின்ஸ்டன் ஸ்மித் என்று ஒரு பெயரைப் பார்த்தாலும், வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று ஒரு பெயரைப் பார்த்தாலும் ஒரே அமைப்பின் கீழ்தான் வரும். டாக்டர் அல்லது வித்துவான் அந்த நபரின் உழைத்துப் பெற்ற தகுதி. வின்ஸ்டன் அல்லது மீனாட்சிசுந்தரம் அவரவர் பெயர். பிள்ளை அல்லது ஸ்மித் குடும்ப அல்லது கடைசிப் பெயர் (லாஸ்ட் நேம் அல்லது ஜாதிப்பெயர்).

பண்டிட் ஜவஹர்லால் நேரு என்ற பெயரில் பண்டிட் அவரது தகுதிக்கு கிடைத்த பெயர். ஜவஹர்லால் என்பது அவர் பெயர். நேரு குடும்பப்பெயர். விஜயலட்சுமி பண்டிட் என்ற பெயரில் விஜயலட்சுமி என்பது அவர் பெயர், (திருமணத்துக்கு முன்னால் அவரது பெயர் ஸ்வரூப் நேரு. ‘பண்டிட் ஸ்வரூப் நேரு ‘ அல்ல) பண்டிட் என்பது அவர் திருமணம் செய்த ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் என்ற காஷ்மீரி பிராம்மணரின் கடைசிப் பெயர். அப்போதும் அவர் ‘பண்டிட் விஜயலட்சுமி பண்டிட் ‘ அல்ல. வெறும் விஜயலட்சுமி பண்டிட் தான். அவரது சகோதரியின் பெயர் கிருஷ்ணா நேரு. அவர் திருமணமானதும் கிருஷ்ணா ஹத்தீசிங் னார். அவர் பண்டிட் கிருஷ்ணா ஹத்தீசிங் ஆகவில்லை.

நேரு குடும்பத்தில் பண்டிட் மோதிலால் நேருவும் பண்டிட் ஜவஹர்லால் நேருவுமே பண்டிட்கள். பெயருக்கு முன்னால் போடப்படும் பண்டிட் என்பது ஜாதிப்பெயராக இருந்திருப்பின், ஏன் இந்திராகாந்தி, பண்டிட் இந்திரா காந்தியாக கூறப்படவில்லை ? அல்லது கிருஷ்ணா ஹத்தீசிங் ஏன் கிருஷ்ணா பண்டிட் ஆகவில்லை ? அல்லது பண்டிட் கிருஷ்ணா கவில்லை ? ஏனெனில், பண்டிட் என்பது பெயருக்கு முன்பு வந்தால் அது தகுதி குறித்தது. பண்டிட் என்பது பெயருக்குப் பின்னால் வந்தால் அது அவரது குடும்பவழி குறித்தது. ஸ்மித் என்று கடைசிப்பெயர் கொண்ட டாக்டரைப் போல.

ராஜகோபால ஆச்சாரியர், ஆச்சாரிய கிருபளானி இருவருமே ஒரே ஜாதியா ? கிருபளானி என்பது கிருபளானி அவர்களின் குடும்பப்பெயர். ஆச்சார்ய என்பது அவரது தகுதி குறித்த பெயர். அவரது அண்ணனோ தம்பியோ அப்பாவோ தங்கையோ ஆச்சார்ய என்ற அடைமொழியோடு வரவில்லை.

இதில் சிவக்குமாரின் அறியாமை எங்கு தெரிகிறது ? இரோசாவசந்தின் குறுக்குப்புத்திதான் தெரிகிறது. சென்ற கடிதத்தில் நான் இதனை விளக்கியபின்னர் வன்மையாக பதில் வரும் என்றே எதிர்பார்த்தேன். இப்போது இவர் ஒரு காவல்காரரிடமிருந்து கூகுள்வரைக்கும் தன்னை நியாயப்படுத்தும் செய்திகளைத் தந்தபின்னர், என்னை ராஸ்கல் என்கிறார். (ராஜகோபாலாச்சாரியாரைப் பார்த்து நீயும் ஆச்சாரியா என்று கேட்ட காவல்கார பொற்கொல்லர் கதையைக்கூட நான் எழுதலாம்)

நான் சொல்வது சரி. நீ சொல்வது தவறு. நான் ஒரு விஷயத்தைப் பற்றி என்ன நினைத்துகொண்டிருக்கிறேனோ அதே போல, வார்த்தைக்கு வார்த்தை சொல்லாதவர் எல்லாம் அயோக்கியன், ராஸ்கல், ஜாதிவெறியன், இனவெறியன், லிபரல் வேஷம் போடுபவர். இவர் என்ன என்ன வார்த்தைகளை திண்ணை போரம் உயிருடன் இருந்தபோது உபயோகித்திருக்கிறார் என்பதை நான் அறிவேன். அவை எடிட் செய்யப்பட்டும் அவருக்கு கண்ணியம் வரவில்லை என்பதையும் நான் அறிவேன்.

நாயனார் நம்பூதிரிபாடு ஆகியோர் சாதிவெறியர் என்று நான் சொல்லவில்லை. அதே போல அவர்கள் ஜாதிவெறியர்கள் என்று ரோச்சாவசந்து குறிப்பிடுகிறார் என்று கூட நான் சொல்லவில்லை. அவர்கள் தங்கள் பெயரின் இறுதியில் வைத்திருக்கும் பெயர் எப்படி ஒரு குடும்ப அல்லது ஜாதிப்பெயரோ அதுபோல நேரு என்பதுதான் குடும்ப பெயர் அல்லது ஜாதிப்பெயர். பண்டிட் என்பது வித்துவான் போன்ற தகுதி அடிப்படை பெயர் என்றுதான் நான் குறிப்பிட்டேன். திரும்பி இன்னொரு முறை நான் எழுதியதை படித்துப்பாருங்கள் இரோச்சாவசந்து.

‘நேருவின் பண்டிட் ஒரு ஜாதிபெயர் என்றுகூட தெரியாமல், மீண்டும் மீண்டும் அதை நிறுவமுடியும் என்று அவர் தைரியமாய் சொன்னதின் உளவியலே ஒரு ஜாதிய உளவியல் என்பதுதான் நான் சொன்னது. ‘ என்று ரோச்சா எழுதுகிறார். நேருவின் பண்டிட் பெயர் அது அவர் தகுதி அடிப்படையில் வந்தது. இதனைச் சொல்ல என்ன ஜாதிய உளவியல் மண்ணாங்கட்டி வேண்டும் ? இரோச்சா ஒன்றும் தெரியாமல் உளறினால், அதற்கு ஏற்றாற்போல மற்றவர்கள் மீது ‘ஜாதிய உளவியல் ‘களை திணித்துக்கொண்டிருப்பாரா ?

****

வீரப்பன் விவகாரத்தை நான் அப்படி எழுதியதன் காரணம் உண்டு. வீரப்பன் விவகாரம் இன்று அமுங்கிவிட்டாலும், அவன் தமிழ்நாட்டின் ஒரே ராபின்கூடு போல தன்னைக் காட்டிக்கொண்டு பேரம் பேச ஆரம்பிக்கும்போது, திண்ணையிலேயே அவன் சார்பாக ஒரு கூட்டம் கருத்துக்களத்தில் எழுதிக்கொண்டிருந்தது.

அதனை இன்னும் திண்ணைப் பக்கங்களில் காணலாம். வீரப்பன் ஒரு திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன். அவன் தனித்தமிழ்நாடு போராளி வேஷம் போட்டதும், உடனே அவனை போலீஸ் பிடிக்கச் செல்லும்போது மக்கள் படும் துயரத்தைக் கண்டு புலம்ப ஒரு படை தயாராகிவிடுகிறது.

இது ஒரு திறமையான ஸ்ட்ராடஜி என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். வீரப்பனுக்கு நேரடியாக ஆதரவு தந்தால், மக்களும், பத்திரிக்கைகளும், போலீஸும் துப்பித்தள்ளிவிடுவார்கள். ஆகவே, மறைமுகமாக செய்திப்போரைத் துவங்கு. முதலில், வீரப்பனைப்பிடிக்கச் சென்ற போலீஸால், அங்கு உள்ள ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று பேசு. ஏழைகளுக்காக வக்காலத்து வாங்குவது என்பது வெகுமனத்திற்கு கவர்ச்சியான கருத்தாக்கங்களில் ஒன்று ஆயிற்றே. ( ‘நிலவும் பொது மதீப்பீடுகள், எளிதில் வெகுமனத்திற்க்கு கவர்ச்சியான கருத்தாக்கங்கள் இதை எல்லாவற்றையும் காட்டி மிரட்டி, நீங்கள் நேர்மையானது என்று நினைக்கும் ஒன்று குறித்துகூட, வெளிப்படையாய் சொல்ல உங்களை பயப்பட வைப்பதை வொயிட் மெயில் என்று சொல்லலாம். ‘- பேரறிஞர் இரோச்சாவசந்து)

தூக்கில் தொங்கப்போகும் ஒருவனைக் காப்பாற்ற, பொத்தாம் பொதுவாக தூக்கு போடுவது தவறு என்று தூக்குக்கு எதிராக போராடும் ஒருவனைப்பற்றி எண்டமூரி வீரேந்திரநாத் ஒரு நாவல் எழுதி குங்குமத்தில் தொடராக வந்தது. இதுவும் அது போன்றதே.

அவ்வாறு வீரப்பனைத் தேடிய போலீஸால் துன்புறுத்தப்பட்ட ஏழைகளுக்காகப் பரிந்து பேசியவர்கள் எங்காவது அவ்வாறு போலீஸ் ஏழைகளைத் துன்புறுத்தாமல் வீரப்பனைப் பிடிக்க முயலவேண்டும் என்று எழுதியிருக்கிறார்களா என்று தேடிப்பாருங்கள். இருக்காது. அரசு பயங்கரவாதத்தைப் பற்றி பேசுவதுதான் முக்கியமே தவிர, அரசினை நல்வழிப்படுத்துவதோ அல்லது போலீஸ் சீர்திருத்தமோ நோக்கமல்ல இவ்வாறு எழுதுபவர்களுக்கு. மக்களைக்கொல்லும் வீரப்பன் தேர்தலுக்கு நிற்கப்போவதில்லை. மக்களைக் கொல்லும் அரசாங்கம் மறுமுறை தேர்தலில் நின்றுதான் ஆகவேண்டும். வீரப்பன் தனிக்காட்டுராஜாங்கம் நடத்தினால் அவன் மக்களது கருத்தை அறிய தேர்தல் நடத்தப்போவதில்லை. எந்த தீவிரவாதி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் கருத்தை அறிய தேர்தல் நடத்தப்போவதில்லை. அது ‘மக்கள் போர் ‘ குழுவாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருந்தாலும் சரி, சோவியத் மற்றும் சீன சொர்க்கமாக இருந்தாலும் சரி. ஆனால், இவர்கள் தங்களுக்கு ஆதரவு சேகரிப்பது தேர்தல்கள் நடக்கும் ஜனநாயக நாட்டில் இருக்கும் போலீஸ் செய்யும் அத்துமீறல்கள் பத்திரிக்கையில் வருவதை வைத்துத்தானே ? இவர்களது பொற்கால ஆட்சியில் பத்திரிக்கையில் ஏதேனும் வந்தால்தானே ?

இந்த அடிப்படை கூட தெரியாமல், அரசு பயங்கரவாதம் என்று பேசுவது யாருக்கு கொடி பிடிப்பது என்பதை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.

நான் மெத்தப்படிக்காதவனாகவும் அசடனாகவும் இருப்பதில் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. தெரியாததை கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். நான் உலக இலக்கியங்கள் எல்லாவற்றையும் படித்தவனல்ல, எனக்கென ஒரு தனி வாசிப்பு கொண்டவனுமல்ல. சிக்கலான பிரமிளின் கவிதைகளை வாசித்தவனுமல்ல. ஆனால், என் கருத்துக்கள் தவறாக இருக்கலாம் என்றும், அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டினால் மாற்றிக்கொள்வேன் என்றும் கருதிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால், ‘இவன் அசடு, இவனுக்கெல்லாம் என்ன பதில் வேண்டிக்கிடக்கிறது ‘ என்ற ஒரு ஜாதிய உளவியலின் கீழ் இல்லாமல், ஜெயமோகன் திறந்த மனத்துடன் பதில் சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி.

நரேசு


Dear friends We have published kambaramayanam and many other tamil literature books in our website for free download.

http://www.chennainetwork.com

Please view the book and send your views to mailgcs@yahoo.com

With Best Regards

G.Chandrasekaran

www.chennainetwork.com

chennai.


Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்