ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


1994ம் ஆண்டு நவம்பர்மாதம் ஆறம் தேதி

வடகிழக்குப் பருவக்காற்று கோபமுற்றிருந்தது. ஐப்பசிமாதத்தில் அந்தத் தேதியில் பூமியெங்கும் சுபிட்ஷமழை பெய்யும் என்று ஆற்காடு கா.வெ. சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் கண்டிருந்தது..அந்தச் சுபிட்ஷத்தின் அளவினைச் சொல்ல மறந்ததால் ஆண்கள் நனைந்த கோவணத்துட.ணும், பெண்கள் திறந்த மார்புடனும் மழைக்கு ஒதுங்குவதற்கு மரத்தடிகளையும் ? சுமாரான வீடுகளையும் தேடவேண்டியிருந்தது. வற்றல் மாடுகளும், சினையாடுகளும் மெதுவாய் நடக்க ? முடிந்த கால்நடைகள் பாய்ச்சலில் ஓடின. அடை மழை. சோவென்று – அப்போதைகப்போது வயதாகிப்போன, பலவீனமான மரங்களை வேருடன் பறித்தோ, கிளைகளை உடைத்தோ வீழ்த்தும் பேய்காற்றுடன் கூடிய ஐப்பசி மாதத்து மழை; வயல்வேலைக்குச் சென்றால்தான் பிழைப்பு என வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை வயிற்றுப்பசியோடு காத்திருக்கவைக்கும் மழை. கிராமமே மழையின் சீற்றத்திற்கு வருந்திக் கொண்டிருக்க பார்வதியின் துயரவிருட்டில் தீக்குச்சிக் கனலாயொரு சந்தோஷம். அவளது அரை ஏக்கர் நஞ்சை, மீண்டும் அவளுக்குப் பாத்தியதையாகவிருந்தது. ராமசாமியின் விபத்தும், அதனைத் தொஇடர்ந்த ஆறுமாதப் போராட்டவாழ்விற்கும் ஆறுதலாக ஒரு சுமைதாங்கி. இராமசாமியின் இவிபத்து வழக்கை ஏற்றிருந்த வக்கீல் ஏகாம்பரம், திண்டிவனம் வரச் சொல்லியிருந்தார். ‘இந்த மழையிலா ? ‘ எனத் தலையைச் சொறிந்தத் தணிகாசலம், ஜெயம் வற்புறுத்தவே, வர இணங்கியிருந்தான். மழையின் போக்கைப்பார்த்து போக்கியப் பத்திரத்தைத் திருப்பிக் கொடுக்க சித்தமாயிருந்ததால் காசாம்பு முதலியும் உடன் வந்திருந்தான். மூவரும் வக்கீல் ஏகாம்பரம் வீட்டை அடைந்தபோது காலை மணி ஒன்பது. இவர்களுக்காகவே வக்கீலும் காத்திருந்தார்.

‘வாம்மா. பார்வதி! எப்படி இருக்கறீங்க ? இவர் யாரு, தணிகாசலமா ? முதல்நாள் கண்டது. அதுக்கப்புறம் காணலெயே ? பக்கத்துல யாரு ? ‘

‘நம்ம ஊரு காசாம்பு முதலிங்க. அவசரம் ஆபத்துண்ணா, இவருகிட்டதான் நாங்க போய் நிற்கணும். ஏதோ இல்லைன்னு சொல்லாம முடைக்கு உதவுவாரு. நம்ம பார்வதி நிலத்தை இவர்கிட்டதான் போக்கியம் போட்டிருக்குது ‘ – தணிகாசலம்.

‘அப்படியா! உட்காருங்க .. ‘ சொல்லிவிட்டுப் போன ஏகாம்பரம் போனவர்தான். பார்வதி தரையில் கால்கள் மடித்து உட்கார்ந்தாள். மற்றவர்கள் அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தார்கள் – .காத்திருந்தார்கள். அவர்கள் காத்திருந்த நேரத்தில் – வேலைக்காரியாகவிருக்கவேண்டும் – கூட்டிப் பெருக்கியவள், அலட்சியமாகத் துடைப்பத்தை மிகத் தாராளமாக செலுத்தி, அவர்களையும் சேர்த்துப் பெருக்கினாள். காத்திருந்தார்கள். பள்ளிக்குச் செல்வதற்காக, வீட்டு வாசலில் நிற்கும் ரிக்ஷாவைப் பார்த்துவிட்டு ஓடிவந்த வக்கீல் வாரிசுகள், பார்வதியைப் பார்த்துப் பயந்து பின்வாங்கின. .கை நீட்டி அழைத்தாள். அவை பின்வாங்கி ஒதுங்கி வாசலுக்கு ஓடின. இவர்கள் காத்திருந்தார்கள். ‘வக்கீலம்மா!.. ‘ என்றழைத்துக்கொண்டே உள்ளேவந்த காய்கறிக் கூடைகாரிகூட வியாபாரம் முடித்துப் போய்விட்டாள். காத்திருந்தார்கள். கரிமூட்டை லாரியொன்றில் இலவசமாகப் பயணித்துத் திண்டிவனம் வந்திருந்தார்கள். காலையில் பார்வதி புறப்படுவதற்குமுன் கொஞ்சம் ‘நீராகாரம் ‘ குடித்திருந்தாள். மற்றவர்கள் எப்படியோ ? பசிகுடலை புரட்டியது. மூன்றுநாளாக தீட்டில்வேறு இருக்கிறாள். அடி வயிற்றிலிருந்து, குடலனைத்தும் மேமெழுந்து ஊர்ந்தன.

‘ஹேவ் ‘ என்று ஏப்பமிட்டவாறு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே வக்கீல் ஏகாம்பரம் வந்து அமர்ந்தார்.

‘நம்ம ஆப்பிரம்பட்டு ராமசாமி லாரியில அடிபட்டுச் செத்தாரே, அந்தக் கேசைகூட நாந்தான் பார்க்குறேன். அந்தம்மா நேற்று வரும்போது நாலு தேங்காய் கொண்டுவந்து கொடுத்தாங்க. அதைப் பார்த்துட்டு, வீட்டுல ஆப்பம் போட்டுட்டாங்க. தேங்காய்ப் பாலாச்சா.. கொஞ்சம் மதமதன்னு நிக்குது. ஆமா அங்கெல்லாம் மழை எப்படி ? இங்கே ஒருவாரமா விடாமழை. பார்த்திருப்பீங்களே திண்டிவனமே தண்ணியிலே மிதக்குது. எப்படி வந்து சேர்ந்தீங்க ? ‘

‘அதையேன் கேக்கறீங்க. இவ்வளவு நாளா காஞ்சி கெடுத்த வானம், இப்போ பேஞ்சி கெடுக்குது. ஏரியெல்லாம் நெரம்பி தத்தளிக்குது. எங்க ஊர்ல ஏரியைத் தலையில வச்சுக்கிட்டுப் பயந்து சாகிறோம். இரண்டு பக்கமும் கலிங்கல் வழிஞ்சு, ஓடைகள்ல இடுப்பளவு தண்ணீர். ரோடெல்லாம் உடைஞ்சு கிடக்குது. நாலுகல்லு நடந்து லாரி புடிச்சு வந்தோம். ‘

‘காபி சாப்பிடறீங்களா ? ‘

‘வேண்டாமுங்க. உங்களுக்கு ஏங்க தொந்திரவு. வரக்குள்ள டாக்டைக்குப் போயிட்டுத்தான் வரோமுங்க. ‘

‘எனக்கு மிச்சம் பிடிக்கறீங்க. சரி விஷயத்துக்கு வறேன். எதிரிங்க எமகாதகப் பசங்க. கொஞ்சத்துலப் பிடி கொடுக்கலை. நாம கேசைத் தொடர்ந்து நடத்தியிருந்தா பெருசா ஒண்ணும் செஞ்சிருக்க முடியாது. ஒரு வழியா அப்படி இப்படின்னு மிரட்டி, ஒரு தொகையை அவனுங்கக் கிட்டயிருந்து வாங்கிட்டேன் ‘. தனது மேசை டிராயரைத் திறந்து ஒரு கவரொன்றைத் தூக்கி மேசையின் மீது போட்டார்.

தணிகாசலம்தான் பேசினான்.

‘தம்பி ஏகாமரம்..! நீங்க நம்ம பக்கத்து ஊர் பிள்ளைன்னு கேசை ஒங்கிட்டக் கொடுத்தோம். பார்வதியும் இந்தக் கேசைப் பெருசா நம்பியிருந்தாள். கரீம்பாய்கூட நல்ல தொகை வரும்ணு சொல்லியிருந்தாரே ? ‘

‘ஒழுங்காத்தான் முடிச்சிருக்கணும். அவனுங்கக்கிட்ட ஆர்சிபுக்கோ, இன்சூரன்ஸோ, லைசென்ஸோ ஒர் எழவும் இல்லை. போலீஸ் எஃப்..ஐ.ஆர்.ம் சரியில்லை. அப்புறம் எதைவச்சு அவனுங்கமேலக் கேசைப் போடறது ? இந்த மட்டும் அவனுங்க இறங்கி வந்ததே ஆச்சரியம். ஏதோ வந்தவரைக்கும் லாபம். இதுல இருபதாயிரம் இருக்குது. எனக்கு ஐந்தாயிரம் போக, பாக்கியை எடுத்துக்கிட்டு நடையைக் கட்டுங்க.. ‘

‘தம்பி இப்படிக் கோவப்பட்டா எப்படி ? பார்வதி தலையெழுத்து அப்படியிருந்தா யாரை நொந்துக்க முடியும். ? பார்வதி …ஏகாம்பரம் தம்பிகிட்ட அவர் சொன்ன ஐய்யாயிரத்தை, அவர் முகம் கோணாதவாறுக் கொடுத்திடு. ‘

‘ அண்ணே! நீங்களே எல்லாத்தையும் பாருங்க. அப்புறம் முதலியாரும் இருக்காரு. ஒரேயடியா அவர் பணத்தையும் பைசல்பண்ணிட்டுப் கையோடகையா பத்திரத்தை வாங்கிக் கொடுத்திடுங்க. ‘

தணிகாசலம் ஐந்தாயிரத்தை எண்ணிப் பிரித்து வக்கீல் ஏகாம்பரத்திடம் நீட்டியபோது, அவர் அலட்சியமாக வாங்கி மேசை டிராயரில்போட்டுப் பூட்டிக் கொண்டு நிமிர்ந்தார்.

‘நான் இதுவரைக்கும் இவ்வளவு கீழே எங்கேயும் இறங்கிப் போனதில்லை. ஏதோ நம்ம பக்கமாயிருக்கீங்க. மனசுக் கேக்கலை. ‘

‘ஏதோ தம்பி.. மாரியாத்தா புண்ணியத்துல நீங்க நல்லாயிருக்கணும். செத்த ராமசாமியும் சரி, நம்ம பார்வதியும் சரி சூதுவாது தெரியாதவங்க. ஆனாலும் கடவுள் இப்படிச் சோதிக்கக்கூடாது. ஏதோ கொறை நாளையும் சோர்ந்துடாம தள்ளணும். அந்தக் கவலைதான் எங்களுக்கு ‘ என்ற தணிகாசலம், வலதுபுறம் திரும்பி காசாம்பு முதலியாரைப் பார்த்தான். ‘முதலியாரே.. ஒங்கிட்டவிருக்கிற போக்கியப் பத்திரத்தை எடு. வக்கீல் தம்பியைவச்சே பைசல் பண்ணிக்குவோம். பத்திரத்தை கையில் வாங்கினாத்தான் பார்வதிக்கும் தெம்பு வரும். ‘

அன்று மாலை…

காசாம்பு முதலி, தணிகாசலத்துடன் பார்வதி, திண்டிவனத்திலிருந்து கிராமத்திற்குத் திரும்பிகொண்டிருந்தாள். போக்கியப் பத்திரத்தை வாங்கியதுமே பார்வதிக்கு மறுபடியும் விபத்துகுள்ளான ராமசாமி மீண்டதாகவே நினைத்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு ஆடி மழையாய் ஒரு சந்தோஷம். போக்கியத்திற்க்காக காசாம்பு முதலி ஒரு போகம் பயிரிட்டிருந்தான். இனி மழை நின்றவுடன் வழக்கம்போல ராமசாமியின் கனவுகளுடன் ‘சேடை கூட்டணும், அடியுரம் போடணும், விதை நாத்துண்ணு ‘ வரிசையா செலவுகள் நிற்கின்றன. இருக்கின்ற கொஞ்சம் பணமும் தொடர் தேவைகளுக்கே பற்றாது. பிறகு வரிசையாய் வாழ்க்கையை அடைத்துக் கொண்டிருக்கும் கற்களைப் புரட்டியாகவேண்டும். அப்படிப் புரட்டும்போது கற்களுக்கடியில் சிக்காமலும் இருக்க பழக வேண்டும் . இதைத்தான் ராமசாமியின் பாட்டன் செய்தான், தகப்பன் செய்தான், ராமசாமி செய்தான் இனி அவனுக்கு வாழ்க்கைப்பட்டுத் தாலியறுத்திருந்த பார்வதியும் செய்தாக வேண்டும்.

ஒழிந்தியாபட்டில் மூவரும் இறங்கி நாலு கல் நடந்து கிராமத்தை அடைந்தபோது, ஊரே அலோகலப்பட்டிருந்தது. ஏரியுடைந்து வெள்ளக்காடாயிருக்க, ஏரிக்குக் கீழேவிருந்த நிலங்களை மண் மூடியிருந்தது. பார்வதி காசாம்புமுதலியிடமிருந்து மீட்ட அரை ஏக்கர் நஞ்சையும் அதிலடக்கம்..

………

பி.கு.:2001ம் ஆண்டின் அறிக்கையின்படி* இந்தியாவின் மொத்தச் சாலைவிபத்துக்களின் எண்ணிக்கை 392000. இதில் உயிரிழந்தவர்கள்களின் எண்ணிக்கை 78900, படுகாயமடைந்தவர்கள் 399300. நன்கு கவனியுங்கள் இக்கணக்கு சாலைவிபத்துகளுக்கு மட்டுமே. இரயில், விமானம், மற்றும் படகு விபத்துகள் இதிலடங்கா. இது தவிர எமனுக்கு ஒத்துழைக்க சாதி, மதம், அரசியல், தீவிரவாதம், ஆஸ்பிட்டல், அலட்சியமென.. பிரத்தியேக இலாக்காக்கள் உள்ளன. ஜெய்ஹிந்த்

முற்றும்

*Road Safety Cell M/O Road Transport and Highways

***

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந்தேதி காலை மணி பத்து……

இன்றைய தேதியில் தமிழகக் கிராமங்களில் உள்ள உயிரினங்களை பிராணிகள், அப்பிரானிகளென இரண்டுவகையாகக் கொள்ளலாம். பிராணிகள்பாடு தேவலாம். கோடையில் பசியாறுவதற்குப் பதிலாக கோரைப் புற்களின் கட்டைகளில் முகத்தைச் சொறிந்துகொண்டு திரும்ப முடியும். அப்பிராணிகளுக்கு அதுவுமில்லை. தரித்திரத்தில் பிறந்து, தரித்திரத்தில் வாழ்ந்து, தரித்திரத்தில் சாகும் இப்பாரத ஜந்துக்களுக்கு அயோத்தியில் கட்டவிருக்கும் இராமர்கோவில் பற்றிய சுதேசி அறிவோ, அப்துல் கலாமின் கனவுகளோ, குறைந்தது ‘தமிழக அரசு ‘ முதலிடத்தை நோக்கிப் பயணம் செல்வதைப் பற்றியோ அக்கறையேதுமில்லை.. இவர்ளது அக்கறைகள் அனைத்தும் நடந்ததும், நடப்பதுமே. நடக்கப்போவதைப் பற்றியதல்ல. அது புளியேப்ப மனிதர்களுடையது. விபத்தில் செத்துப்போன பார்வதியின் புருஷன் ராமசமினுடைய பாட்டன் கோவிந்தசாமிக்கு சுதந்திரத்திற்கு முன்னே தன் குடிசையைக் கொஞ்சம் ‘தூலக்கட்டு ‘ வீடாக ‘ பார்க்க ஆசையிருந்தது, அவருடைய மகன் சின்னசாமிக்கும் சுதந்திரத்திற்குப் பின்னே அந்த ஆசைவந்தது. அவருக்குப் பின்னே கோவிந்தசாமியின் பேரன் ராமசாமிக்கும் இந்தியா சுதந்திரத்தின் வெள்ளிவிழா காணும்போது குடிசையைப் கொஞ்சம் பெரிதாகக் கட்டவேண்டுமென கனவுகண்டு விபத்தில் போய்ச் சேர்ந்துவிட்டான். இஇனி ராமசாமியின் வம்சாவழியினரில் எவரேனும் ஒருவருக்கு, இந்தியச் சுதந்திரத்தின் வைரவிழாவின் போது இந்த ஆசை வரலாம். அந்த நேரத்திலும் இருக்க இடமில்லாமல் தவிக்கும் ஏதோவொரு கடவுளுக்கு கோவில் கட்டத் தலைவர்கள் முஸ்தீபு செய்யலாம். ஆனாலிங்கே, கிராமத்து அப்பிராணி ராமசாமிகளுக்கு குடிசையைப் பெரிதாக்கிக் கொள்ளும் வாய்ப்புகள்மட்டும் கடைசிவரை வரப்போவதில்லை.

பார்வதி புருஷன் ராமசாமி பிணமாக போனபோது பார்வதியிடமிருந்த துக்கடா ஐஸ்வரியங்களும் துணைக்கு அவனோடு போய்விட்டன. பெரிய செலவுகளுக்கு கடன் கொடுத்து உதவிய காசாம்புமுதலி பார்வதியிடமிருந்த அரை ஏக்கர் நஞ்சையில் குறிவைத்திருந்தான். உதிரி செலவுகளுக்கு வாங்கிய கடனுக்கு உழவு மாடுகளையும், இருந்த நான்கு வெள்ளாட்டினையும் ஓட்டிச் சென்றனர். தாலி இழவு முடிந்த அன்றே, பக்கத்து கிராமங்களுக்குச் சென்று நெல் வாங்கிவந்து அவித்து, மூன்றுகல் நடந்து சென்று ரைஸ்மில்லில் அரைத்து, கடற்கரை குப்பங்களுக்குச் சென்று விற்று பிழைப்பை நடத்தவேண்டிய கட்டாயம்.. அன்ைறைக்கு குடிசைவாசலில் ‘சாணம் தெளிக்க ‘ எழுந்தவள் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். தலைவலி மண்டையைப் பிளந்தது. சுக்குக் கஷாயம் குடித்து, பாயைப் போட்டு கட்டையை நீட்டியிருந்தாள். ஜெயத்தின் புருஷன் தணிகாசலம் வீடுதேடி வந்தான்.

‘பார்வதி…. ‘

தணிகாசலத்தின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து, பாயைச் சுருட்டி ஓர் ஓரமாகவைத்துவிட்டு அவனுக்கொரு மணையைப் போட்டாள்.

‘வாங்கண்ணா.. குந்துங்க. என்ன சேதி ? ‘

‘உன்னைதாம்மா பார்க்க வந்திருக்கேன். ‘

‘ சொல்லுங்க ‘

‘நம்ம காசாம்பு முதலி விஷயமா வந்திருக்கேன். முடைக்கு உதவியிருக்கான். நாமளும் வாக்குத் தவறக்கூடாது. அவனுக்கு நாம சொன்னபடி ஏரி நஞ்சைக்கு போக்கியப் பத்திரம் எழுதிடணும். ‘

‘நான் சொல்றதுக்கு என்ன இருக்குது ? இருப்பது அரை ஏக்கரு. அதையும் கொடுத்திட்டு என்ன பண்ணுவதுண்ணு யோசிக்கிறேன். வேற வழியே இல்லையாண்ணே ? ‘

‘வழியென்ன வழி. கொடுத்தப் பணத்தைத் தூக்கிப் போட்டா மூதி ஒழியறான். நமக்கு ஆகணுமே. ‘

‘ரெண்டு பொட்டை புள்ளைகளை வச்சிருக்கேன். எல்லாத்தையும் வாரிகொடுத்துட்டு நான் என்ன செய்யப்போறேன். எவ்வளவு நாளைக்கு வாழப்போறேன். ‘

‘பார்வதி! ஏம்மா இப்படி பேசற ? இந்த மாதிரி சமயத்துல மனசைத் தளரவிடக்கூடாது. நாளைக்கு ராமசாமி கேஸு ஜெயிச்சுதுனா மீட்டுக்கப்போற. ஓம்பிள்ளைங்க முகத்தைப் பார்க்கணுமில்ல ‘.

‘ அண்ணே உங்களுக்குத் தெரியாதா ? எங்களுக்குண்ணு இருப்பது ஏதோ கொஞ்சம் உள்ளங்கை நிலம். அதையுமிப்ப புருஷன் எழவு முடிஞ்ச கையோடு தொலைக்கனும்னா மனசு கேக்கலை. ‘

‘ என்னம்மா புரியாதவளாயிருக்கிற ? பணம் கொடுத்தவனுக்கு வேறு என்ன வழி இருக்குது ? அவன் கடன் கொடுத்தது உன் நஞ்சையை குறிவைத்துதான். அன்றைக்கு இந்த ஊர்ல ஒரு பேமானிப்பய, காச முடிஞ்சுகிட்டு வரலை. அவன் வந்தான். அவ்வளவு ஏன் ? ஒன் சொந்தக்காரபய ஒருபய எட்டிபார்த்திருப்பானா ? என்னமோ பேசற! எந்த யோசனையும் பண்ணாம காசாம்பு முதலிக்கு போக்கியத்தை எழுதிக் கொடு. அடுத்த புதன்கிழமை ஒரு கேசு விஷயமா என் வக்கீல பார்க்கலாம்னு போறேன். கையோட ஆக்சிடெண்ட் கேசையும் அவர் கிட்டேயே கொடுத்திடலாம். என்ன சொல்றே ? ‘

‘ இல்லாத கொடுமை, எதை எதையோ பேசுறேன். மனசுல ஒண்ணூம் வச்சிக்காதண்ணே ‘ சொல்லிய பார்வதி தன் முகத்தினைத் திருப்பி முந்தானை முனையால் கண்களைத் துடைத்துக்கொண்டு, மூக்கைச் சிந்தி சுவற்றிலிட்டாள்.

‘ என்ன செய்யறது அனுபவிக்க வேண்டியதை அனுபவச்சிதான ஆகணும். நான் காசாம்பு முதலியைப் பார்த்து விஷயத்தைத் சொல்றேன் வரட்டுமா ‘. தணிகாசலம் எழுந்து கொண்டான்.

1994ம் ஆண்டு பிப்ரவரிமாதம் 20ந்தேதி காலை மணி பதினொன்று….

தணிகாசலம், ஜெயத்தையும் பார்வதியையும் அழைத்துக் கொண்டு திண்டிவனத்தில் வக்கீல் சடகோபாச்சாரியைப் பார்க்கச் சென்றபோது, குடையை விரித்துக் கொண்டு வெளியே பயணிக்கவிருந்தார். கட்சிகாரனைப் பார்த்த சந்தோஷத்தை குடையில் மறைத்து வரவேற்றார்.

‘வாய்யா.. தணிகாசலம். எங்கே காணலையேன்னு பார்த்தேன். உனக்குக் கடுதாசி எழுதியிருந்தேனே கிடைச்சுதா ? அது என்ன வாழைத்தாரா ? உள்ளே குமாஸ்தா நிக்கறான் பாரு. அவங்கிட்ட கொடுத்திடு. சரி இவா யாரு சொல்லலையே ?

‘ நம்ம கிராமந்தான். எதிர்த்த வீடு. கிட்டத்துல ஆக்சிடெண்ட்ல, இவங்க புருஷன் செத்துட்டாரு. அந்தக் கேஸ் விஷயமா உங்களைப் பார்க்கலாம்னு கூட்டிக்கிட்டு வந்தேன். ‘

‘அப்படியா ? நான் மோட்டார் விபத்து கேசுகள் எல்லாம் எடுக்கறதில்லை; அதற்கென்றே வக்கீலுங்க இருக்காங்க; பொதுவா பீஸ் எதுவும் வாங்கறதில்லை; ஜெயிச்ச பிறகு பர்செண்டேஜ் கணக்கு. உங்க பக்கத்துப் பையன். பேரு ஏகாம்பரம். இந்த மாதிரி கேசெல்லாம் ஒழுங்கா செய்யறாண்ணு கேள்வி. நம்ம குமாஸ்தாவைக் கேளுங்க. விபரமாச் சொல்வான். கொடுக்க வேண்டியதையும் கொடுத்துட்டுப் போங்க. நான் கொஞ்சம் வெளியே போகணும். ‘

‘அப்ப நம்ம குமாஸ்தாவை பார்த்துட்டுப் போறோமுங்க ‘

‘ செய்! அடுத்த மாதம் உன்னோட ஹியரிங் வருது. தேதி ஞாபகமில்லை. குமாஸ்தாவிடம் தேதியை மறக்காம குறிச்சு வாங்கிட்டுப் போ. சாட்சிகளை நான் சொன்னமாதிரி ஏற்பாடு செய்திருக்கணும்.. ஞாபகமிருக்கட்டும்.

1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினைந்தாம்தேதி…..

திண்டிவனம் பெருமாள்கோவில் தெருவில் இருந்தான் இவக்கீல் ஏகாம்பரம். ஆப்பிரம்பட்டு மாசிலாமணிகவுண்டர் மகன். வீட்டு விசேஷங்களுக்கு பத்திரிகையடித்தால் மிராசுதார் எனப் வார்த்தைப் பிரயோகம் செய்யும் அளவுக்கு நிலபுலங்கள். கிராமத்தில் மாசிலாமணிக்கு அந்தஸ்திற்குத் தகுந்தார்போல பஞ்சாயத்து போர்டு எலெக்ஷன் பிரச்சினை, ஊர்த் திருவிழா, வரப்புச் சண்டை, பங்காளிச் சண்டையென ஊரை இரண்டாகப் பிரித்து முனிசீப் கோர்ட்டிலிருந்து ஹைகோர்ட்வரை ஏதேதோ ரூபத்தில் வருடத்தின் பெரும்பான்மையான நாட்களில் வழக்குகளிருந்தன. அவரே ஒரு வக்கீல் அளவுக்கு வளர்ந்திருந்தார். சட்டங்கள்பற்றிய மேலெழுந்தவாரியான சங்கதிகள் தெரியும். வருடத்திற்கு முன்னூறு மூட்டை நெல், ஐம்பது மூட்டை மணிலா, இலட்ச இலட்சமாக சவுக்கு விற்கின்ற பணம் என்கின்ற இத்யாதி தகுதிகளுடன் வக்கீல்கள் வீட்டில் காத்துக் கிடக்கவேண்டியிருக்கிறதே என அதிகமாகவே வருந்தியிருந்தார். இந்த வக்கீல்களுக்கு பேரேடு வைத்துக் கொண்டு கொடுக்கும் ‘ஃபீசையும் ‘ கணக்கிட்டு மலைத்துவிட்டார். விளைவு, வீட்டில் ஓரளவு படித்த மகனை வக்கீலாக்கிவிட்டு, பெருமாள் கோவில் தெருவில் ஒரு வீட்டினையும் வாங்கிப் போட்டர். ஏகாம்பரம் வக்கீல் தொழிலை ஓய்வாகவும் அரசியலைத் முழுநேரத் தொழிலாவும் செய்துவந்தான்.

அரசியலும், சட்டமும் சேர்ந்தே உபயோகத்திலிருக்கும் அலுவலகம். வழக்கம்போல எல்லா வக்கீல்களிடமும் இருக்கின்ற அரிச்சுவடி சுட்டப் புத்தகங்கள் தவிர பைண்ட் செய்யபட்ட பன்சால் மற்றும் பட்நாகர் எழுதிய மோட்டார் ஆக்ஸிடெண்ட் பற்றிய புத்தகங்கள். பார்வதி இரண்டாவது முறையாக தன் புருஷன் கேஸ் விஷயமாக அவனிடம் வந்திருக்கிறாள். அறைமுழுக்க அவனது அரசியல் கட்சிக்காரர்கள் அடைத்துக்கொண்டிருந்ததால் இவள் தயங்கி நின்றாள்.

‘வணக்கம்ய்யா ‘

‘வாம்மா..! எங்க வந்த ? என்ன விஷயம் சொல்லு ? ‘

‘எங்கேசு பத்திய தகவல் தெரிஞ்சிதுங்களா ? ‘

‘அதைத்தான் சொல்லவந்தேன். ஒங்கேசுல எதுவும் சரியில்லை. போலீஸ்காருங்க எஃப்..ஐ.ஆர் போடலை. சம்பந்தபட்ட வேன் டில்லி ரிஜிஸ்றேஷனாம். ‘

‘ஐயா!.. இப்படி சொன்னா எப்படிய்யா ? இரண்டு பொட்டை புள்ளைங்களை வச்சுகிட்டு நடுத்தெருவுல நிக்கிறன். இந்த கேசைத்தான் மலைபோல நம்பியிருந்தேன். ‘

இங்க பாரும்மா. இதுமாதிரில்லாம் இங்க புலம்பக் கூடாது. என்னை முழுசாச் சொல்லவிடு. அவசரப்டாத. பிரச்சினையில்லாம செக்ஷன் 140ல பிக்சட் காம்பன்சேஷன் ஏற்பாடு செய்யலாம்னுதான் இருந்தேன். ஆனால் எதிரிங்கக்கிட்ட ஒரு எழவும் இல்லையாமே. நாளைக்கு ஜட்ஜ்மெண்ட் வாங்கிட்டு நாக்கையா வழிச்சுகிறது. சொன்னாப் புரிஞ்சிக்கணும். அவனுங்கள நைஸா காம்ப்ரமைஸுக்குக் கொண்டுவந்து முடிஞ்சமட்டும் கறக்கறதுதான் புத்திசாலித்தனம் ‘

‘ஐயா.. எம்புருஷன் போன கையோட எங்களுக்குண்ணு இருந்த அரை ஏக்கர் நஞ்செயும் இப்ப போக்கியத்துல நிக்குது. அதை

மீட்கறதுக்கு வழித் பொறந்தா மாரியாத்தா புண்ணியத்துல நீங்க நல்லாயிருப்பீங்க ‘

‘வருத்தப்பாடாதம்மா. உன்னோட நிலத்தை போக்கியத்திலிருந்து மீட்கறதுக்கு நானாச்சி. அடுத்த வாரத்துல அவனுங்களை வரச்சொல்லி நான் பேசறேன். பிறகு நான் சொல்றமாதிரி நடந்துக்கோ. இரண்டுவாரம் கழித்து தணிகாசலத்தோட வந்து பாரு. இப்பத் தரியமா போயிட்டுவா. ‘

பார்வதி வக்கீல் ஏகாம்பரம் வீட்டைவிட்டு வெளியேறியபோது அவள் புருஷன் ராமசாமியை விபத்துக்குள்ளாக்கின வேனுக்குச் சொந்தக்காரன் உள்ளே நுழைந்துகொண்டிருந்தான்.

மீண்டும் அடுத்த வெள்ளிக்கு…

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 3 சென்ற இஇதழ் தொடர்ச்சி..

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ந்தேதி காலை 8 மணி..

ஜெயத்தையும், பார்வதியையும் தவிர மற்றவர்கள் செங்கற் பொடி தேய்த்து பல் துலக்கிவிட்டு டா. குடித்தாயிற்று. பார்வதியை ஜெயம் எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்தாள். ‘பச்சை தண்ணீர்கூட பல்லில் படக் கூடாது ‘ எனப் பிடிவாதமாக இருந்துவிட்டாள். பார்வதிக்காக

ஜெயம் பட்டினிக் கிடப்பதைப் பார்த்த அவள் புருஷன் தணிகாசலம், தனியாக அழைத்து போய் அவளுக்கென டாக்கடையில் வாங்கிவந்திருந்த இட்டலிப் பொட்டலதை எடுத்துப் பிரிக்க அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. வாங்கி அதனை அங்கே சுற்றித் திரிந்த நாய்க்கு எறிந்தாள்.

‘ போய் ஆக வேண்டியதைப் பாரு.. டாக்டரு என்ன சொல்றாருன்னு கேளு. பலகாரம் சாப்பிடற நேரமாயிது. . ஒரு வாய் வெத்திலையிருந்தா கொடு. காலையிலிருந்து வாய் நம நமங்கிது ‘ என்று சொன்னவள், புருஷன் கொடுத்த வெற்றிலையைக் கொண்டுபோய் பார்வதியிடம் கொடுத்தாள்;

‘அக்கா வெத்திலை போடு, பசி எடுக்காது ‘ என்று சொன்ன ஜெயத்தின் மனதைக் கண்டு நெகிழ்துபோன பார்வதி,

‘வேண்டாம் நீயே போட்டுக்க.. என் தலையெழுத்து நான் கஷ்டப் படறேன். உனக்கென்ன வந்தது. அண்ணங்கூட போயிட்டு ஒரு கிளாஸ் டாத் தண்ணியாவது குடிச்சுட்டு வா ‘ என்று கம்மிய குரலில் சொன்னபோது, ஜெயத்தினால் துயரத்தினை அடக்க முடியவில்லை. வாயில் முந்தானையை வைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். அங்கே ஒரு சின்னக் கூட்டமே கூடிவிட்டதைப் பார்த்து, ஆஸ்பத்திரி ஆள் ஒருவன் அதட்டிவிட்டுச் சென்றான்.

டாக்டரைப் பார்தத சிறிது நேரத்திற்குள் தணிகாசலம் பெண்களிடம் ஓடிவந்தான்.

‘ என்னண்ண சொல்றாங்க ? அவரை எப்பக் கொடுப்பாங்களாம் ? ‘ பார்வதிக்கு புருஷனை எப்படி அழைப்பது என்பதில் குழப்பமிருந்தது. இது வேறுமாதரியான குழப்பம்.

‘போஸ்ட்மார்ட்டம் செஞ்சிட்டாங்க. டாக்டர் ஐந்நூறு ரூபாய் வாங்கிட்டான். இப்பப் போயிட்டு போலீஸ்காரங்கக்கிட்டருந்து எப்.ஐ.ஆர். காப்பி வந்துச்சுனா. சர்டிபிகேட்டையும், பொணத்தையும் கொண்டுபோயிடலாங்கிறான். ‘

‘அய்யய்யோ அப்புறம் ? ‘

‘அப்புறமென்ன அப்புறம். கொஞ்சங்கூட இரக்கமத்த பசங்க. அந்த நாய் அதை நேற்றே சொல்லியிருக்கணும். அதற்குள்ள எதற்குக் காச கொடுத்தீங்க ? பாடியைக் கொடுக்கும்போது, கொடுக்கலாமில்லை.. நாளைக்கு மறுபடியும் கேட்டுத் தொலைச்சாண்ணா என்ன பண்ணுவீங்க ? ‘

‘வாஸ்தவம் மாமா நீங்க சொல்றது. இவரு இப்படித்தான்.. எதையாவது செஞ்சிட்டு வந்து முழிப்பாரு. ‘ நாளைக்குப் பார்வதிக்குப் பதில் சொல்லவேண்டுமே என்கிற இய்ல்பான பயம் ஜெயத்திற்கு.

‘ ஜெயம் நீ சும்மாயிரு. அண்ணன் என்ன செய்வாரு. அவங்க இப்படி இருக்கும்போது நாம செஞ்சுதானெ ஆகணும். விடு. அதை பெரிசுபடுத்தாதே.. எம்மகராசனே போயிட்டாரு. இதுலதானா என் குடி முழுகிடப்போகுது ‘

ஜெயம் பார்வதியின் பதிலில் சமாதானமடைந்தாள்.

தணிகாசலம் பெரியவர் ஆறுமுகத்திடம், ‘ மாமா நீங்க இங்கேயே இருங்க. நான் ஜெயத்தையும் பார்வதியையும் அழைத்துக்கொண்டு கோட்டைமேடு ஸ்டேஷனுக்குப் போயிட்டு வந்திடறேன் ‘. என்றான்.

காலை 10 மணி….

தணிகாசலம் கோட்டைமேட்டில் இறங்கியவுடனே, பொடிகடை கறீம்பாயைத் துணை சேர்த்துக் கொண்டான். கறீம்பாயை கோட்டைமேடு சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் தெரியும். ஸ்டேஷனுக்கு எந்த அதிகாரி வந்தாலும் கறீம்பாயை தெரிந்து கொண்டு வந்துவிடுவார்கள். சுற்றுவட்டாரத்தில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் கறீம்பாயிடம் வந்தால் விஷயம் முடிந்துவிடும். எந்தெந்த கேஸுக்கு போலீஸ்காரர்கள் எவ்வளவு எதிர்பார்பார்பார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆளும் கட்சிக்காரர்களாயிருந்தால் கூட பிரச்சினையென்றுவந்துவிட்டால் கறீம்பாய் இல்லாமல், ஸ்டேஷனில் கால் வைக்க முடியாது..

தணிகாசலமும் கறீம்பாயும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது கான்ஸ்டபிள் ஒருவர் தீவிரமாக பற்குத்திக் கொண்டிருந்தார். பற்றொருவர் அரதப்பழசான மேசையில் பழுப்பு ரிஜீஸ்தரில் எழுதிக் கொண்டிருந்தார். வாயுத் தொல்லையால், அடிக்கடி எழுந்து உட்கார்ந்தார்.

‘என்ன ஏட்டய்யா ரெண்டு நாளா டூட்டியிலே காணோம். அவுட் ஆப் ஸ்டேஷனா ? ‘ எதோ ஜோக் சொல்லிவிட்டவர்போல கறீம்பாய் கடகடவென்று சிரித்தார்..

‘வாங்க கறீம்பாய். வயித்துல பிராப்ளம். எது சாப்பிட்டாலும் செரிக்கமாட்டேங்குது. நெஞ்செரிச்சல் வேறு. நானும் பார்க்காத வைத்தியமில்லை ‘

‘அப்படாங்களா! சாயந்திரம் வீட்டுபக்கம் வாங்க. நான் ஒரு வைத்தியம் சொல்றேன். ஆனா மீனு, முட்டை கோழி அப்படாண்ணு எதையும் கிட்டச் சேர்க்கக் கூடாது.. இரண்டு மாதத்துக்கு ஒழுங்கா இருக்கணும். முடியுமா ? ‘

‘வேற ஏதாச்சும் பத்தியமில்லாத வைத்தியம் சொல்லுங்க பாய்.. என்னால முடியாததைச் சொல்லாதீங்க. அப்புறம் இன்ஸ்பெக்டரு ஐயா

உங்களைப் பார்க்கணும்னு சொல்லிக்கிட்டுருந்தாரு. வெரால் மீன் வேணுமாம். எங்கயாவது பக்கத்துல ஏரி குளத்துள மீன் பிடிச்சா ஏற்பாடு பண்ணுங்க. ‘

‘ஆமாய்யா பொம்பிளை முதற்கொண்டு எங்கிட்ட கேப்பீங்க. நான் சொல்றதை எதையும் செய்யமாட்டாங்க. சரி உங்க ஐயா எங்க ?. ‘

‘ ஐயா.. ‘வேணு எம்போரியம் வரைக்கும் போயிருக்காரு. வீட்டுக்கு இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில் அனுப்பச் சொல்லி ஆள் அனுப்பனா, நாயுடு காசு கேட்கிறராம்.. விசாரிச்சுட்டு வரேன்னு போயிருக்காரு. என்ன சாவடி விவகாரமா ? ‘

‘ஆமாங்க ஏட்டய்யா. அவரு பொணம் திண்டிவனத்திலேயேக் கிடக்குதுங்க. இரண்டு நாளா தண்ணிவென்னியில்லாம கிடக்கோம். நீங்கதான் மனசுவெச்சு.. ‘ ஜெயம் முடிக்கவில்லை.

‘மனசென்னம்மா மனசு… பொறம்போக்குப்பசங்க, நேற்றுக் கண்டமேனிக்கு எங்களைத் திட்டினாங்களாமே ? ஐயா ரொம்ப கோவமாயிருக்காறு.. அந்தக் கிழவன் ஆறுமுகம் எங்கே ? போயிட்டு அந்த ஆளோட வாங்க. ‘..

‘இல்லைங்க நேற்று விபத்து நடந்தது காலையில. சப்-இன்ஸ்பெக்டர் ஐயா வர நேரமாயிடுத்து. அதுல ஊர் ஜனங்க, அதிலும் இளவட்டங்க கொஞ்சம் அவசரப்பட்டுட்டாங்க. அதிலேதான் ஆறுமுக மாமா அப்படி கேட்டுட்டாரு. ‘- தணிகாசலம்

‘ அந்தக் கிழவன் கொஞ்சம் விவகாரமானா ஆளாமே.. கொஞ்சம் தட்டிவைக்கணும்ணு ஐயா சொல்லிக்கிட்டிருக்காரு. கும்பல் சேர்ந்தா நீங்க என்னவானா சொல்லப் போகுமா ? எங்களுக்கும் ஆயிரத்தெட்டு ஜோலி இருக்குய்யா. நாங்க என்ன இங்க ஆட்டிக்கிட்டா. இருக்கோம். ‘

‘ஏட்டய்யா விடுங்க. அதைப் பெரிசுப்படுத்தாதீங்க. யோவ் தணிகாசலம் கையிலே எவ்வளவு இருக்குது ?

‘ஐந்நூறுங்க ‘ தணிகாசலம் ரூபாய் நோட்டுக்களை கறீம்பாயிடம் கொடுத்தான். ‘

‘இதை நாங்கப் பின்னாடிதான் தேய்ச்சுக்கணும். நீங்களே வச்சுக்குங்க. இன்ஸ்பெக்டரு ஐயா வந்திடுவாறு. அவர்கிட்ட நேரா பேசிக்குங்க. உங்க எதிர்பாட்டி, அதான் கார்க்காரன் உங்கமேல கம்ப்ளெயிண்ட்கொடுத்திருக்கான். செத்துட்டவன் பொண்டாட்டி பேரு என்ன பார்வதியா ? அவளும் ஆறுமுகமும் சேர்ந்து அவங்க காருலவிருந்த டேப் ரிக்கார்டர திருடிட்டாங்களாம். ‘

‘ ஐயா!.. அவனுங்க வெளங்க மாட்டாங்க, நான் புருஷன பறிகொடுத்துட்டு நிக்கிறன். எம்மேல இப்படியொரு பழியா. மாரியாத்தாதான் கூலி கொடுக்கணும். ‘

‘ ஏம்மா பார்வதி. கொஞ்சம் சும்மாயிரு. ஏட்டு இந்தாங்க கூட ஒரு ஐந்நூறு. வச்சுக்குங்க. காரியத்தை முடிங்க. இன்ஸ்பெக்டர் ஐயாக் கிட்ட கறீம்பாய் சொன்னார்ணு சொல்லுங்க. எப்.ஐ.ஆர். காப்பியைக் கொடுங்க பிறகு வந்து பார்க்கிறேன். ‘

‘பாய் ஐயா கிட்ட நீங்கதான் சமாதானம் சொல்லணும். மோட்டார் ஆக்ஸிடெண்ட் கேசு. ஒழுங்கா கோர்ட்ல போட்டு கேசு ஜெயிக்கணும். இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுக்க மறந்துடாதீங்க இப்ப விட்டா அவனுங்க பிறகு எட்டி பார்க்கமாட்டானுங்க. ‘

‘ ஏட்டு நான் பொறுப்பு.. நீங்க எப்.ஐ.ஆர கொடுங்கன்னு சொல்றேன்ல்ல. கேக்கணும். சும்மா வளவளன்னு பேசாதீங்க ‘

பார்வதியையும் ஜெயத்தையும் அழைத்துக்கொண்டு தணிகாசலம் திண்டிவனத்தை அடைந்தபோது மதியம் மணி இரண்டாகியிருந்தது..

மீண்டும் அடுத்த வெள்ளிக்கு….

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


சென்ற வாரத் தொடர்ச்சி….

1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ந்தேதி பிற்பகல் மணி 2

விபத்து நடந்து நான்கு மணி நேரம் ஆகியிருந்தது..கொளுத்தும் வெய்யிலில், தார்ச்சாலையில் கிடந்த ராமசாமியின் உடல் கருத்து இறுகிக்கொண்டு வந்தது..விபத்துச் செய்தி பரவிய வேகத்தில், உறவினர்கள் தெரிந்தவர்களென சுற்றிலுமிருந்த கிராமங்களிலிருந்து பொடிநடையாகவே ஓடிவந்தவர்கள், பொய்யாகவோ மெய்யாகவோ துக்கத்தை வெளிப்படுத்திவிட்டு, கொதிக்கும் தார்ச்சாலையில் சிறிது நேரம் கால் மாற்றி நின்று, பின்னர் நிழல் தேடி ஒதுங்கினர். சாலையின் எதிரெதிர் திசைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து, பேருந்துப் பயணிகளிடம் வேர்க்கடலை, முறுக்கு, இளநீ, சோடா வியாபாரம். ஒரு சில சிறிய வாகனங்கள் வரிசையை உடைத்துக் கொண்டு தொடர்ந்து பயணிக்க, பாதை ஏதேனும் கிடைக்குமா என்று முயற்சித்தது. விபத்துக்குச் சம்பந்தமில்லாத ஒரு கூட்டம், அவைகளைத் துரத்திச் சென்று கல்லெறிந்தது. இந்தச் சந்தடியில் நாயொன்று ராமசாமியின் உடலருகேச் சென்று காலைத் தூக்க, ஒரு பெரியவர் வெற்றிலை எச்சிலை, உதட்டைக் குவித்து இரு விரல்களுக்கிடையில் பீச்சித் துப்பிவிட்டு, நாயின் பிறப்பு குறித்து கேள்வி எழுப்பி, கல்லைத் தேடினார். இரண்டொருவர் சூழ்நிலை மறந்து சிரிக்கவும் செய்தனர்.

கேசவன் கடையில் டா வியாபாரம் இறக்கைக் கட்டிப் பறந்தது. டா கேட்டவர்களுக்கு நான்கைந்து நாட்களாக விற்காமல் கிடந்த மசால்வடையையும் சேர்த்துக் கொடுத்துவிட்டு; காசை மறக்காமல் கேட்டு வாங்கி மேசையில் போட்டான். இப்படி ஏதேனும் எதிர்பாராத காரணமிருந்தால்தான் அவன் கடையில் கூட்டத்தைப் பார்க்க முடியும்.. கேசவன் மதிப்பீட்டின்படி இன்றைக்குக் கூட்டம் அதிகம்.. – தலைப்பாகையுடனும், தலைப்பாகையில்லாமலும் – சட்டையுடனும் சட்டையில்லாமலும் – வதங்கிய உடல்களை அழுக்கேறிய சால்வைகளில் மறைத்து பொது அறிவை தினத்தந்திகளில் வளர்த்து, குத்துக் காலிட்டு உட்கார்ந்து பீடி குடிக்கும் கூட்டம் – நிறையப் பேசி குறைவாகச்ாதிக்கும் கூட்டம் – எல்லாம் தெரிந்ததாக பாவலாசெய்துக் கொண்டு எளிதாக ஏமாறும் கூட்ட.ம் – சராசரி தமிழர்க் கூட்டம். டாயைக் குடித்து முடித்து, மடியிலிருந்து ஓலை பையிலிருந்து நரம்பெடுத்த வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி, சொத்தைக் களிபாக்கினை கடைவாய்பற்களில் வைத்து கடித்து உள்ளே தள்ளி, கூடவே புகையிலைக் காம்பை சேர்த்து அடக்கிக்கொண்ட ஆனந்தக் கவுண்டர் ‘போலீஸுக்கு தகவற் போயிட்டுதா ? என்ற கேள்வியை தன் சக கிராம வாசியான ஆறுமுகச் செட்டியாரிடம் எழுப்பினார்.

‘பொன்னுகண்ணு செட்டியார் பத்து மணிக்கே, போன் போட்டு சொல்லிட்டாராம். இன்ஸ்பெக்டர் இல்லையாம். ஏதோ பந்தோபஸ்துக்கு விழுப்புரம் போயிட்டாராம்.. ஏ.எஸ்.ஐ, கள்ளச் சாராய கேஸுக்கா திண்டிவனம் கோர்ட்க்கு போயிருக்காராம்.. ஸ்டேஷனில் ரைட்டர் மட்டும்தான் இருக்காராம்.. சோம்பேரி நிர்வாகத்தினர்; சொல்லுகின்ற காரணங்கள். எப்பச் சீக்கிரம் வந்திருக்காங்க ?.. போனமாசம் இப்படித்தான் இதே இடத்துல நடந்த ஆக்ஸிடெண்டுக்கு விடிகாத்தாலதான் வந்திருக்கானுங்க. செத்தவரு நம்ம எக்ஸ். எம்.எல்.ஏ மாமனாரு. பொறுத்து பொறுத்து பார்த்த எம்.எல்.ஏ., விழுப்புரத்திலிருந்த எஸ்பியை கூப்பிட்டு லெப்ட் அண்ட் ரைட்டா வாங்கிட்டாரில்ல. ‘ -ஆறுமுக செட்டியார்.

‘யோவ் பெருசு சும்மா இரு. நீ ஏதாச்சும் சொல்லிவைக்க, அவனுங்க காதுக்கு எட்டுச்சுன்னா நம்மை கடிச்சி குதறிடுவானுங்க. அதற்குவேறத் தனியா எலும்பு போடனும் ‘ – டா கடை கேசவன்.

மாலை மணி ஐந்து…

விபத்து நடந்து ஏழுமணி நேரம் ஆகியிருந்தது. ராமசாமியின் உடல் கூட்டத்தினரின் கவனங்களில் அலட்சியப்படுத்தபட்டுக் கிடந்தது. இப்போது ஏதேனும் ஒரு நாய் வந்து காலைத் தூக்கினால், பார்வதி மட்டுமே கல்லெடுக்கவேண்டியிருக்கும். அதற்குப் பிறகு யாரேனும் இரத்த உறவுகள் வேண்டுமென்றால் அவள் பின்னே ஓடிவரலாம்.

கேசவன் டாக் கடைக்கு பார்வதியைக் கைத்தாங்கலாக அழைத்துவந்தவள் அவளோடு எந்த நேரமும் வேலிக்கானச் சண்டையில் மல்லுக்கு நிற்கும் பக்கத்து வீட்டு ஜெயம். துன்பம் நேரிட்டது எதிரிக்கேயென்றாலும் உதவ ஓடிவரும் கிராமத்துக் குண வழக்கபடி நேசக்கரம் நீட்டியிருந்தாள். பார்வதியை உட்கார வைத்தவள், கலைந்து கிடந்த முந்தானையை சரிசெய்து, இடது தோளில் வாங்கி பின் இடுப்பிற் செருகினாள். உடலில் ஒட்டிக் கிடந்த சாலைப் புழுதியைத் தட்டி விட்டாள். சிக்கலாகக் விழுந்து கிடந்தக் பார்வதியின் கூந்தலை பின் கழுத்தருகே இடதுகையிற் பற்றி அவளது கழுத்து வியர்வையை முந்தானையால் அழுந்தத் துடைத்துவிட்டு, இடைஞ்சலாகவிருந்த தனது பிளாஸ்டிக் வளையல்களை முழங்கைக்குத் தள்ளி நிறுத்தி, பார்வதிக்கு-லாவகமாக கோடாலி முடிச்சுப் போட்டு முடித்தாள். கலைந்து கிடந்த பார்வதியின் நெற்றிக் குங்குமத்தைச் சரி செய்ய எத்தனித்த வலது கரத்தை வெடுக்கெனப் பின்வாங்கிக்கொண்டு கேசவனைப் பார்த்தாள். கேசவன் தயாராக உடைத்து வைத்திருந்த சோடாவை ஜெயத்திடம் நீட்டினான். வேண்டாமென்று முதலில் அடம்பிடித்த பார்வதி, ஜெயத்தின் புருஷன் தணிகாசலத்தின் அணைப்பிலிருந்த தன் பிள்ளைகளைப் பார்த்த திருப்தியில், கொடுத்தச் சோடாவை மடமடவென்று குடித்து, மீண்டும் மயங்கி ஜெயத்தின் தோள்களைப் பற்றி ஒருக்களித்துச் சாய்ந்தாள்.

மாலை மணி ஏழு….

‘இங்கே யாரும்மா பார்வதி ?.. ‘ பழுப்புநோட்டும் கார்பனுமாக கோட்டைமேடு ஏ.எஸ்.ஐ. கேசவன் டாக்டைக்குள் தலையைக் குனிந்து உள்ளேவந்தார். கூட்டம் அமைதிகாத்தது. டாக் குடித்துக் கொண்டிருந்த இரண்டொருவர், கிளாஸைப் பக்கத்திலிருந்த பெஞ்சில் வைத்துவிட்டு எழுந்து நின்றனர்.

‘வாங்க இன்ஸ்பெக்டரு அய்யா.. இப்படி பெஞ்சுமேல குந்துங்க.. மவரசான் வீண் வம்பு தும்புக்குப் போகமாட்டான். இப்படி கொள்ளையிலே போயிட்டான். போனவன் ரெண்டு பொட்டை புள்ளைகள வாரிக் கொடுத்துட்டுப் போயிருக்கான்.. ஆத்தா கொற நாளுக்கும் என்ன பாடுப் படப்போகுதோ ? ‘ கிராமத்தில் அறுவடை நாட்களில் கை முறுக்கு விற்கும் சாவித்திரி கிழவியின் புலம்பல்.

‘ஏ..கிழவி! ஒம்புலம்பல நாளைக்கு ஒப்பாரியில வச்சுக்க. இப்ப அய்யா கேக்குற கேள்விக்கு அவங்களைப் பதில் சொல்ல விடுங்க ‘ – டா கடை கேசவன்.

‘ஏங்க நாங்க இங்க பொணத்த வச்சிக்கிட்டு தண்ணி வெண்ணில்லாம காலையிலிருந்து கிடக்கோம். நீங்க என்னடான்னா சாவகாசமா வறீங்க ?. ‘ -ஆறுமுகச் செட்டியார்

‘நீ யாருய்யா ? செத்தவனுக்கு என்ன வேணும் ? ‘

‘ஆறுமுகமுங்க.. ராமசாமி ஊர்க்காரங்க ‘

‘ஊர்க்காரானாயிருந்தா ? உங்க ஊர்க்காரங்ககிட்டப் பேசினா எடுபடும். எங்கக்கிட்டப் பேசகூடாது. ‘

‘ஏங்க இங்க என்ன நான் தப்பா பேசிட்டேன். ? இங்கே பத்துமணி நேரமா பொணத்தை ரோட்டுலபோட்டுட்டுகிடக்கோம். அங்கப் பாருங்க செத்தவன்புள்ளைகள. அன்னம் ஆகாரமில்லாம புறாாக்குஞ்சுகளா சோர்ந்துகிடக்குதுங்க. வெளியில போக்குவரத்தில்லாமா, பஸ்ஸுல ஜனங்க தவிச்சுக்கிட்டு… எங்க தலையெழுத்துய்யா. பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து இப்படித்தான் விமோசனமில்லாம கிடக்கோம்.. நீங்க பொழைக்கத் தெரிஞ்சவங்க.. நாங்கத்தான் ஓட்டப்போட்டுட்டு ‘கவர்மென்ட், ‘ ‘மசுருன்னு ‘ காலத்துக்கும் காத்துக் கிடக்க பழகிக்கிட்டோம். ‘ – துண்டை உதறி தோளில் போட்டபடி ஆறுமுகம் எழுந்திருந்தார்.

‘யோவ் நில்லுய்யா.. விட்டா நீ பாட்டுக்கு பேசிட்டுப்போற. மனசுல என்ன பெரிய நாட்டாமைன்னு நினைப்பா….. ‘

‘சார் விடுங்க ஏதோ பெரியவர். வேகத்துல பேசிட்டார். நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க. ? ‘ டா கடை கேசவன்.

‘என்னய்யா பெரியவர். கிழவனைக் கொஞ்ச அடக்கமா இருந்துக்கசொல்லு. சாகப்போறவயசுல சங்கடம் தேடிக்க வேண்டாம். லாடங்கட்டி காயடிச்சுறுவோம். ‘

‘இல்லை..சார். நம்ம நாட்டு நிலைமை தெரியாம, நீதி நேர்மைன்னு சதா பெட்டிஷன்போட்டுகிட்டு அலைவாரு. மத்தபடி நல்ல மனுஷன் ‘ – இளைஞன் ஒருவன் குரல் கொடுத்தான்

‘ தம்பி நீ போப்பா.. ஆளாளுக்கு ஏதாவது சொல்லிகிட்டு.. இன்ஸ்பெக்டர் அய்யாவை வேலை செய்ய விடுங்க ‘ மீண்டும் டா கடை கேசவன்.

‘என்ன ? போலீஸ்காரன்கிட்டேயே கிலுகிலுப்பு ஆட்டறிங்களா ?. நாளைக்கு ஸ்டேஷனுக்கு வாங்க பேசிக்கிறேன். ‘

பார்வதியைப் பற்றிய தகவல்களையும், ராமசாமியைப் பற்றிய தகவல்கைளையும் எழுதி முடித்து நிமிர்ந்த ஏ.எஸ்.ஐ.,

‘ யோவ் கேசவன்..பாடியை திண்டிவனம் முனிசிபல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். நீங்க பாட்டுக்கு மசுராச்சிண்ணு வீட்டுக்குப் கொண்டு போயிடாதீங்க. ஆம்புலன்ஸ் வந்துகிட்டிருக்குது. நான் முத்தியால் பேட்டையிலிருந்து ஆட்டோவில வந்திருக்கன். எல்லாத்தையும் கவனத்துல வச்சிக்குங்க. நான் கிளமபறேன்.

‘ ஆகட்டுங்க. ‘ டா கடை கேசவன் பக்குவாகப் பேசி அனுப்பிவைத்தான்.

இரவு மணி பத்து…

முன்னிரவு பின் நிலாக்காலம். தமிழ்நாடு அரசின் மின் விளக்குகள் எப்போதும்போல சோர்ந்திருந்தன. திண்டிவனத்தின் காலடியில் கிடந்தது அந்த முனிசிபல் ஆஸ்பத்திரி. நாட்டின் தரித்திரத்தை அங்கீகரிக்கும் அரசின் அடையாளம் திண்டிவனத்தை ஒட்டிய நாற்பது கி.மீ எல்லையிலான துர்மரணங்களை அரசுச் சம்பிரதாயங்கள் அறிய முயற்சிக்கும் சவப் பரிசோதனை இடமும் அதுதான். அதன் ஆரோக்கியமே பரிதாபமாக இருந்தது. ஆஸ்பத்திரி கூரையில் மங்களூர் ஓடுகளைப் பாதுகாத்தது என்னவோ அரச மரத்து பழுத்த இலைகளும், சைக்கிள் டயர்களுமே. காரை பெயர்ந்து, வெள்ளை மறந்து, காமராஜர் காலத்து ஒட்டடைகளும், புதிய பழைய சிலந்திவலைகளுமாக, குளவிக் கூடுகளுடன் அரைத் தூக்கத்திலிருந்தது.

டூட்டி டாக்டர், தனது நாற்காலியை வருகின்ற அவசரங்களுக்கு அடையாளமாக நிறுத்திவிட்டு, பாண்டிச்சேரியிலிருந்தார். ஜெயத்தின் புருஷன் தணிகாசலம் – நான்காவதுமுறையாக – கொஞ்சமான பயத்துடன் – வெள்ளை புடவையும் பெரிய மார்புமாய், சற்று முன்னர் ஒரு பெரிய நோட்டில் ‘ராமசாமி ‘ உடல் வருகையின் காரணத்தை, வேண்டியத் தகவல்களுடன் பதிவு செய்துவிட்டு, ‘ராணி முத்து ‘ வாசிப்பில் ஆழ்ந்திருக்கும் கனத்தச் சரீரப் நர்ஸை கேட்டபோது, தணிகாசலம் எதிர்பார்த்தது போலவே சுருக்கென அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.

‘ ஏய்யா.. ‘வந்திடுவார்னு ‘ எத்தனை முறை சொல்றது. கிராமத்தானுவங்கிறது சரியாயிருக்குது. கோவிந்தசாமி…. ‘

சிகரட் பிடித்துக் கொண்டிருந்த அட்டெண்டர் கோவிந்தசாமி, சாவகாசமாக நடந்துவந்தான்.

‘என்ன செய்யற ? அந்த ஆளு சும்மா வந்து தொந்திரவு கொடுக்கான். டாக்டர் வந்திடுவார்னு சொல்லு. எவ்வளவு செலவாகுங்கிறதை விவரமாச் சொன்னியா ? ‘

‘எல்லாத்தையும் சொல்லீட்டம்மா.. ‘

‘பிறகென்ன ? யோவ் அங்காலப் போய்ட்டுப் படு டாக்டர் வந்தா கூப்பிட்டுச் சொல்றேன் ‘

தணிகாசலம் மீண்டும் அரசடிக்குத் திரும்பிய போது, உடலுடன் வந்திருந்த கிராமத்து உயிர்கள் சுருண்டு கிடந்தன. முந்தானையை தரையில் விரித்து முழங்கையைத் தலைக்கு வைத்து பார்வதியும் ஜெயமும் அடுத்தடுத்து முடங்கிக் கிடந்தனர். தூக்கமிழந்திருந்த பார்வதி தணிகாசலத்தின் வருகையை உணர்ந்திருக்க வேண்டும் எழுந்து உட்கார்ந்தாள்.

‘என்னம்மா பார்வதி ?.. ‘

‘சொல்லுண்ணா.. ‘

‘என்னத்தை சொல்றது. டூட்டி டாக்டரு காலையிலதான் வருவாருண்ணு அட்டெண்டர் சொல்றான் ‘

‘பேச்சுக்குரல் கேட்டு ஜெயமும் எழுந்துகொண்டாள் ‘

‘நீதான் கிட்ட இருந்து பாரேன். அக்காவை என்னத்துக்கு கேட்டுங்கடக்கிற ? ‘ -ஜெயம்.

‘பிரச்சினை அது இல்லை. ஆம்புலன்ஸ்காரன் நிக்கிறான். காலையில ஊருபோயி சேர்ந்ததும் அவனுக்குப் பட்டுவாடா பண்ணனும். இங்க ஆஸ்பத்திரி செலவு வேற இருக்குது. டாக்டருக்குக் கொடுக்கணும். அறுக்கருவங்களுக்கு வாய்க்கரிசி போடணும். அவனுங்க குடிக்காம பொணத்துல கையை வைக்கமாட்டாங்களாம், அட்டெண்டர் இருநூறு வாங்கிட்டான். இன்னும் ஆளுக்கு ஒரு ஐம்பதாவது கொடுக்கணும். டவுனுக்குப் போயிட்டு காடாதுணி, ஆர்.எஸ்.பதி.தைலம், நூல்கண்டு, பன்னீர்ன்னு ஒரு பெரிய லிஸ்டே கொடுத்திருக்காங்க, வாங்கிட்டு வரணும். ‘

‘எங்கிட்ட ஒத்த தம்பிடி இல்லைன்னா.. என்ன செய்யப் போறேன் ? அங்காளம்மா…! ‘ -பார்வதி.

‘தெரிஞ்சுதானோ என்னவோ காசாம்பு முதலியும் வந்திருக்கான். அவன்கிட்ட கைமாத்தா வாங்கிக்குவோம். பொறவு பாத்துக்கலாம். நாளைக்கு மொறையா நடந்துக்கோ. கை காலு மிச்சமிருந்தா ஒழைச்சுச் சம்பாதிச்சுக்கலாம் ‘

‘சரிண்ணா.. உங்க இஷ்டப்படி செய்யுங்க ‘ பார்வதிக்கு இப்போதைக்கு முடிந்தது தலையாட்டுவது. ஆட்டினாள்.

மீண்டும் அடுத்த வெள்ளிக்கு….

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


1994ம் ஆண்டு ஜனவரிமாதம் பத்தாம் தேதி காலை மணி பத்து.

அந்த விபத்துபற்றிச் செய்தி வந்தபோது, பார்வதி தனது அரை ஏக்கர் நஞ்சை நெல் விளைச்சலைப் பார்வையிட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள்.

விளைந்த நெல்லை வீட்டில் கொண்டுவந்துசேர்ப்பது, தலைப் பிரசவத்திற்குக் காத்திருப்பது போல.. எந்த வில்லங்கமுமில்லாமல் வீடு வந்து சேர வேண்டும். கதிர் முற்றிச் சோலை பழுக்க ஆரம்பித்திருந்தது. வருடா வருடம் குதிரைவால்சம்பா பயிரிடுவது வழக்கம். இந்த வருடம் ‘பொன்னி ‘. திண்டிவனம் கமிட்டியில நல்ல விலைகிடைக்குதுண்ணு கேள்விபட்டு எல்லோரையும் போல ‘ பொன்னி ‘க்கு ஆசைப்பட்டு, ராமசாமி திருச்சிற்றம்பலத்திலிருந்து விதைநெல் கொண்டுவந்தான். காலாகாலத்தில நாற்றங்காலிட்டு, நடவின்போது சேடைகூட்டுவதற்கு முன்னதாக, பூவரசு மரங்களில் ‘இலை கழித்து ‘, சேர்த்த நான்குக் கட்டுகளையும், வீட்டுக் குப்பையிற் சேர்த்த ஐந்து வண்டி எருவினையும் அடியுரமாக இட்டு, காத்திருந்து, ஒரு முறைக்கு இருமுறையாக, பார்த்துப் பார்த்து ‘பரம்பு ‘ ஓட்டி, முழங்கால் சேற்றில் நடவு நட்டு காத்திருந்த, சொர்ணவாரி சாகுபடி. பிறகு அப்போதைக்கபோது களை, குருத்துப்புழுவிற்கு வேப்பம்பூ புண்ணாக்கு, மேலுரமாக யூரியா. அரை ஏக்கர் விவசாயின்னாலும் ராமசாமிக்கு அனைத்தும் அத்துபடி. விதை அளவு, நாற்றங்கால் – நடவு, உரம் மற்றும் தண்ணீர், பயிர் பாதுகாப்பு,… ஊருக்கே யோசனை சொல்லக்கூடியவன். விளைச்சலைப் பார்த்தபோது, பார்வதி மனம் நிறைய ராமசாமி.

ராமசாமிக்குக் காம்புகளோடு கூடிய விரிந்த மார்பு, அதிற் குறைந்தும் கூடியும் பரவியிருந்த மயிற்கண் ரோமம், பெரிய முகம், அதற்கொத்த நாசி. நாசி துவாரங்களை அடைத்துக்கொண்டு அடர்ந்த மீசை, அவனோடு எப்போதும் ஒட்டியிருக்கும் வேப்பம் பூ மனம்… சந்தோஷ நாட்களைவிட துக்க நாட்களில்தான் அவன் அவளை அதிகமாகச் சேர்ந்திருக்கிறான். அவர்கள் குடிசையில் வறுமையும் அதைச் சார்ந்த துக்கமும் அதிகம். கமலத்தின் உடலில் எச்சிலூறியது. ஊமை வெய்யிலும் ஊதற்காற்றும் சேர்ந்துகொள்ள உடல் சிலிர்த்தது., இடுப்பிலிருந்த முந்தானையை எடுத்துப் பிரித்துத் தலையிற் சுற்றியவள் வீட்டிற்குத் திரும்பினாள்..

‘இன்னும் ‘ஒரு தண்ணீர் ‘ தேவைப்படும். தைமாதக் கடைசி. வாய்க்கால் காய்ந்துவிட்டிருப்பது, ஏரித்தண்ணீர் வற்றிக் கொண்டிருப்பதற்கான அடையாளம். அடுத்தப் பாய்ச்சலுக்கு, மதகுல ‘தொட்டி ஏற்றம் ‘ போடணும். இல்லைன்னா தலை நிமிர முடியாது. விளைச்சலை நம்பி வரிசையா பிரச்சினைகளிருக்கு. பழைய தொல்லை முடிஞ்சபாடில்லை. களத்து மேட்டிலேயே கண்ணுப் பிள்ளைக்கு போன வருடம் விதைக்கு வாங்கிய நெல்லுக்குக் கலத்துக்கு நாலு மரக்கால்னு அளக்கணும். அப்புறம் நாலு வருசமா, நாத்தனார் சரோஜா கல்யானத்துக்குக் காசாம்பு முதலிகிட்ட புரோநோட்டுமேல வாங்கிய கடன், வட்டியும் அசலுமா வளர்ந்து மென்னியப் புடிக்குது. விதை நெல்லுக்குப் போக, மிகுந்ததைக் குறுவைச் சாகுபடிவரை வைத்துக்கொண்டு வயிற்றை கழுவணும். பிறகு எப்போதும் போல கார்த்திகை மாசத்துல ‘கூத்து நெல்லுங்காரங்கக் ‘ கிட்ட அரிசி வாங்கி பொழைப்பை நடத்தணும்…. ‘ ம். இழுத்து மூச்சு வாங்கினாள்.

‘தாயே மாரியாத்தா! உன்னைத் தாண்டியம்மா மலைபோல நம்பியிருக்கன் ‘ குளத்தடி மாரியம்மனை, மார்பில் மண்பட விழுந்து கும்பிட்டு எழுந்தபோதுதான், அந்தச் செய்தி.

‘ஏம்மா பார்வதி நம்ம ராமசாமியை வேன் அடிச்சுட்டுதாமே ? ‘ தேவையை கருதி இரண்டாவது முறையாக திரும்பவும் சொன்னார்; நிஜத்தை நிழலில் மறைக்கும் வித்தையிற் தேர்ந்த தில்லைக்கண்ணு செட்டியார். விபரீதத்தைப் பக்குவாமாக இறக்கிவைத்துவிட்டு அவளைப் பார்த்தார். மார்புக் கூட்டின் ஏற்ற இறக்கம் அவர் நெடுந்தூரம் ஓடி வந்திருப்பதை உறுதிப் படுத்தியது. செய்தியின் பயங்கரத்தை வாங்கிக் கொள்ள அவளுக்குச் சில விநாடிகள் பிடித்தன.

ராமசாமி – பார்வதி திருமணம் குமளம்பட்டு பெருமாள் கோவிலில்வச்சு சுறுக்கா முடிஞ்ச திருமணம். உள்ளூர் தெருக்கூத்தில், கர்ண மோட்சத்தில் கர்ணன் ஆகவும், ஆர்யமாலாவில் காத்தவராயனாகவும் படுதா விலக்கப்படும்போதெல்லாம், அவனது தேஜசைக் கண்டு ‘வயசுப் பெண்கள் ‘ மோகித்துப் பேசியபேச்சு இவளையும் சந்தோஷப்படுத்தியிருக்கிறது. ஊர்த்திருவிழாவின் இறுதி நாளன்று, ‘முறையானவர்களின் ‘ மேல் மஞ்சட் தண்ணி ஊற்றுகின்ற வழக்கப்படி, சாமி ஊர்வலத்தில் ‘சகடைக்கு ‘ முட்டுக்கட்டைப் போட்டு வந்த ராமசாமி மேல் மஞ்சட்தண்ணீரை ஊற்றிவிட்டு அவள் ஓடி ஒளிந்ததும் அதற்கு அடுத்தகிழமை பெண்கேட்டு இவள் வீடு தேடி அவன் வந்ததும் கிராமத்துப் பெண்கள் பேசிப் பேசி புளித்த செய்தி..

வினோபா புண்ணியத்தில் ராமசாமி அப்பா சின்னசாமிக்கு, ஒருகுழி மனை பூமிதானமாக கிடைத்திருந்தது. தானமாக கிடைத்த மனையில், இருக்கின்ற குடிசையைப் பெருசாக்க ஆசைபட்டு, கடைசிவரை அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ளாமலேயே அவர் போய்ச்சேர்ந்தார். கொஞ்ச நாளாக தகப்பன் ஆசையை நாமாவது நிறைவேற்றியாகனும் என்கின்ற வேகத்தில், ராமசாமி தெரிந்தவர்களிடம் கேட்டு சவுக்குக் கம்புகளும், பனையோலையும் வாங்கிவைத்திருந்தான். இதற்காகவே காத்திருந்ததுபோல மறுநாள், ஆளுங்கட்சிகாரன் ஒருவன் சும்மாக் கிடந்த மனையில் ஒரு கம்பை நட்டு கொடியேற்றிவிட்டுப் போக, அதற்கு மறுநாள் எதிர்கட்சிக்காரன் அவன் பங்கிற்கு ஒரு கம்பை

நட்டுக் கொடியேற்றப்போக, ராமசாமி தாலுக்கா ஆபிஸிலிருந்து கலெக்டர் ஆபீஸ்வரை மனு போட்டுக்கொண்டிருக்கிறான். இன்றக்கும் அதற்காகத்தான் வானூருக்கு ‘தாலுக்கா ஆபிஸ்வரை போயிட்டுவரேன் ‘, என்று போனவன் இப்படித் துக்க செய்தியா திரும்புவான்னு பார்வதி நினைக்கவில்லை.

செய்தியின் உக்கிரத்தைப் புரிந்துகொண்டு ‘ என் ராசாவே ‘ என அவள் குரலெழுப்ப, பக்கத்து அரசமர கிளைகளில் வெய்யிலுக்காக ஒதுங்கியிருந்த இரண்டொரு காகங்கள் அரண்டு பறந்தன. மயங்கி விழ இருந்தவளை, ஊர்த் திடலில் சாணி பொறுக்கிக் கொண்டிருந்தப் பெண்களில் இருவர் ஓடிவந்து தாங்கிப் பிடித்தனர். அவர்களை உதறிவிட்டு, ஆவேசம் கொண்டவள்போல தலைதெறிக்க ஓடினாள்

1994ம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி காலை மணி பதினொன்று.

அவள் அந்தப் பிரதான சாலையை அடைந்தபோது திருவிழாப்போலக் கூட்டம். இவளை குறிவைத்து பரிதாப விமர்சனங்கள். உச்சுகள். ஏற்கனவே அறிந்த, கேள்வியுற்ற சாலை விபத்துகள் பற்றிய தகவல் பறிமாற்றங்கள். மீண்டும் மீண்டும் முகங்கள், இரண்டு, நான்கு, எட்டு, பதினாறு எனப் பெருகி மொய்க்கும் கண்கள். அவற்றின் ஆர்வப் பார்வைகள்.

இரண்டொரு பழகிய முகங்கள், தீவிர துக்கத்தைச் சுமந்துகொண்டு இவளை நெருங்கி நிற்கின்றன.. அவற்ைறை ஒதுக்கிக் கொண்டு ராமசாமியை – அவளது உயிரைத் தேடினாள். கிடைத்த இடைவெளியில் விழுந்து புரண்டு தலையிலடித்துக் கொண்டு கதற, இன்னும் பெரிதாகக் கூட்டம்.. அவளது எதிர்வீட்டுப் பெண்மணி, பார்வதியின் இரு பெண்களையும் முன்னே தள்ளி விடுகிறாள்.

ராமசாமியின் உடல் மீது போட்டிருந்த தென்னங்கீற்று அகற்றப்படுகிறது.

கைகள் துவண்டு விரைத்திருக்க, கரும் பழுப்பு இரத்த சாயத்தில் தோய்த்த கேசம். வலம் இடம் குழப்பத்தில் கால்கள், ஒருக்களித்த தலையில் காது துவாரத்தில் இரத்தம் கசிந்து உலர்ந்திருந்தது. பிறகு அவளுக்குப் பிடித்த நாசி துவாரங்களை அடைத்த மீசையிலும் புள்ளி புள்ளியாய் இரத்த மணிகள். நிறைய ஈக்கள். இறைந்து கிடந்த கண்ணாடித் துண்டுகள். திட்டுத் திட்டாய் இரத்தம்..இரத்தம் இரத்தம்..

கூட்டம் மொத்தமும் வெடித்து ‘ஹோ ‘வென்று புலம்புகிறது. அந்தப் புலம்பல்களிலிருந்து வேறுபட்டு உரத்து, அறிந்த முகங்களிடமெல்லாம் தன் துக்கத்தை விண்ணபித்துவிட்டு, வெகு நேரம் ஒலித்த பார்வதியின் அழுகை, கொஞ்ச கொஞ்சமாக அடங்கி ஒற்றைக் குரலாக துவண்டு கம்முகின்றது. பார்வதி மயங்கிச் சாய்ந்தாள்.

அடுத்த வெள்ளிக்கு…..

Na.Krishna@wanadoo.fr

Series Navigation