மார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்!

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

ஜோதிர்லதா கிரிஜா, சென்னை.


அடுத்தவர் கவனத்தை அதிகமாய்க் கவர்ந்திழுக்க
நடுத்தெருவில் உடையவிழ்த்து நாணங்கெட்டு நடப்பவர் போல்
அடுக்கடுக்காய்ப் பாலுவுறவுக் கதை – படங்கள் படைக்காதீர்!
கெடுக்காதீர் இளவயது உடம்புகளை, அடுக்காது !

தாவிடுவீர் பிறர் செய்த தவறடுக்கத் தந்திரமாய்
கோவில்களில் அம்மணமாய்ச் சிலைகள் பல இலையோவென
ஆவிபறக்கக் கேள்வி கேட்பீர், யாமறிவோம், யாமறிவோம்!
பாவிகளே அச்சிற்பிகளும் பாலுறவைத் தூண்டுவதால்!

ஆயினும் ஒன்றை மட்டும் வசதியாய் மறந்திடாதீர்!
ஆயிரம் ஆயிரமாய் இளைஞரின்று படிக்கின்றார் – ஆனால்
கோயிலுக்குச் சென்றிடுவோர் தம் தொகையோ மிகக் கொஞ்சம்;
ஆயமுடியாத் தீமைகளை அடுக்கடுக்காய்க் குவிக்காதீர்.

கம்பன் எழுதாக் காமரசமா எழுதிவிட்டோம் நாங்களென்று
வம்பர்கள் கேட்கிறார்கள்- வாதுக்கு இழுக்கிறார்கள் – உண்மையே யானாலும்,
உம்பர்கள் எழுப்புவரோ இப்படி ஓர் அசட்டு வினா ?
கம்பனைப் பொதுமக்கள் இலட்சத்திலா படிக்கிறார்கள் ?

சுவரெலாம் பாலுறவுக் கிறுக்கல்கள் சிலர் செய்வர்;
இவரெலாம் மனநோய் பிடித்தவராம் சிலர் சொல்வர்;
கவரலாம் வாசகரை இவ்வழியில் சென்றிட்டால் – என
‘விவரமாய் ‘ செக்ஸ் எழுதும் எழுத்தாளர்க் கென்ன நோயோ ?

‘எழுதியவன் நானென்று அறிந்திட்டால் இகழுவரே:
புழுதியை எறிந்தென்னைத் தூற்றுவரே ‘ என வெட்கி –
பழுதடைந்த மனமெனினும் சுவர்-எழுத்தாளரெல்லாம்
எழுதி அறிவிப்பதில்லைத் தம்பெயரை எழுத்தின்கீழ்!

பெண்மையின் நிர்வாணத்தை வெட்கமற்றுப் பிட்டுவைத்து
‘உண்மையை எழுதுகிறோம், உமக்கென்ன மறுப்பிதிலே ? ‘ என
வன்மையாய்ச் சாடுகின்ற வார ஏட்டு எழுத்தாளரோ
தன்மைகெட்டுத் தம் படம், முகவரியைத் தம்பட்ட மடிக்கின்றார்!

முதிராத மனம் கொண்டார், மொட்டவிழ்ந்த பருவத்தார் – மனம்
சிதறாது நிர்வாணம்தனை ரசிக்கும் திறனற்றார் – எனவேதான்
‘பதறாதீர்! கலைக் கண்ணால் பார்த்திடுவீர் ‘ எனும் பேச்சை – உளம்
அதிராது நியாயமென ஏற்பதற்கு இயலவில்லை.

‘மார்பினை ‘ விவரித்துத் தம் கதைகளில் எழுதிவிட்டால்,
மரபினைத் தகர்த்ததாய் இவர்களுக்குள் ஒரு மதர்ப்பு! – இவர்தம்
சார்பிலே கேட்கின்றேன், மனநோய் மருத்துவரே, ‘சதா சர்வதா ‘
மார்பு ஜெபம் செய்யுமிவர்க்கு வந்த நோய் என்ன நோயோ!

பாழ்படிந்த கற்பனையைத் தூண்டுகின்ற படைப்பெல்லாம்
சீழ்ப்பிடித்த புண்ணினைப்போல் சீரழிக்கும் இளைஞருடல்;
நோய்பிடித்த சந்ததிகள் உருவாகும் – இது சரியோ ?
காழ்ப்பின்றிச் சிந்திப்பீர், காட்டம் என்மேல் கொள்ளாமல்!

சுட்டி மாத இதழ் / நவம்பர்-டிசம்பர், 1982.

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா, சென்னை.

ஜோதிர்லதா கிரிஜா, சென்னை.