எனக்கொரு மரணம் வேண்டுமடா…
Published September 11, 2003 • By
வேதா
வேதா

சொல்லாமல் தெரிய வேண்டும்
சொல்லவும் தனிமை வேண்டும்
சோகங்கள் சொல்லி அழ
சுகம் சுரக்கும் மார் வேண்டும்
காணாத ஏக்கமெல்லாம்
கண்நொடியில் கரைய வேண்டும்
கண்மணியை மடி சாய்த்து
கறையெல்லாம் கழுவ வேண்டும்
தேனூறும் தனிமொழியில்
தெரியாமல் தொலைய வேண்டும்
தெற்றுப்பல் சிரிப்பழகில்
உயிர் மெழுகாய் உருக வேண்டும்
பாதைவழி முளைவிட்டு
பார்வைகளில் பூக்க வேண்டும்
பாழ்பட்ட பக்கமெல்லாம்
பாசத்தால் புதைக்க வேண்டும்
உள்ளுக்குள் கூடுகட்டி
உயரத்தில் வசிக்க வேண்டும்
உலகத்து இன்பமெல்லாம்
உருவத்தால் உணரவேண்டும்
வேண்டுதல் வேண்டாமை இல்லாத நிறையாக
இனி வேறொன்றில்லாத வரமாக
வெளிளை மனசுக்குள் வேரோடு வேராக
விதையாக, விழுதாக, விதியாக, விடையாக
விருப்பமாய் இக்கணமே
எனக்கொரு மரணம் வேண்டும்!!
piraati@hotmail.com