இவர்களது எழுத்துமுறை – 26 ஆதவன்

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

வே.சபாநாயகம்.



1. நான் முதன்முதலில் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான
ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப்போடும் தோசைகளை
சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக்கட்டும் குழந்தைகளைப்போல என்
பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும் சப்புக்கொட்டிக் கொண்டு
படிக்க ஆவலுடன் ஒரு ரசிகர்குழாம் இருக்கவில்லை. நான் தனியாக – கவனிக்கப்
படாதவனாக – இருந்தேன். படிப்பிலும் சராசரியாக, விளையாட்டுக்களிலும்
தைரியமும் சாமர்த்தியமும் இல்லாத காரணத்தால், பெரும்பாலும் புறக்கணிக்கப்
பட்டவனாக, என்னையே எனக்கு நிரூபித்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்
தினாலும் ஏக்கத்தினாலும் திடீரென்று ஒரு நாள் நான் எழுதத் தொடங்கினேன்.
எனக்கென்று ஒரு புதியஉலகம் – தனி உலகம் – நிர்மாணிக்கத் தொடங்கினேன்.
இந்த உலகத்தில் நான்தான் ராஜா; நான் வைத்ததுதான் சட்டம்.

2. 1962ல் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது முதன் முதலாகக்
காதலித்தேன். அந்த அனுபவம் என்னுள்ளே ஒரு புதுமையான கிளர்ச்சியையும்
உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. அதுவரையில், ஏதோ எழுதித்தள்ள வேண்டு
மென்ற வெறியும் ஆசையும் இருந்ததே தவிர, எதை, எப்படி எழுதவேண்டும்
என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏட்டில் படிக்கும் மிகப் பிரமாதமான
விஷயங்களும்கூட, வாழ்க்கையின் சில நிஜமான கணங்களுக்கு முன்னால்
எவ்வளவு அற்பமானவையென நான் உணர்ந்தேன். எதை எழுதுவது என்ற
பிரச்சினை போய், எதை எழுதாமலிருப்பது என்பது என் பிரச்சினையாகி
விட்டது. என் எழுத்து மலருவதற்குத் தன்னையறியாமல் அவள் பெரும் உதவி
செய்திருக்கிறாள்.

3. கல்லூரி வராந்தாவில் முளைவிட்ட என் முதல் காதல், ரெஸ்டாரெண்டுகளிலும்,
சினிமாத் தியேட்டர்களிலும் விகசித்து மலருவதற்கு வாய்ப்பில்லாமலே போய்
விட்டது. ஆனால் அதன்பின் நான் எழுதிய கதைகளில் வரும் ஆண்களும்
பெண்களும், ரெஸ்டாரெண்டுகள், சினிமாத் தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன்,
ரயில் முதலிய எல்லா இடங்களிலும் தடையில்லாமல் சந்தித்துக் கொண்டார்கள்,
அளவளாவினர்கள். ”ரெஸ்டாரெண்டும், சினிமாத் தியேட்டரும் வராத கதை
ஏதாவது நீ எழுதியிருக்கிறாயா?” என்று என் நண்பன் ஒருவன் கேட்டான்.
என்ன செய்வது, நான் புழங்கிய சூழ்நிலைகளையும், இடங்களையும் வைத்துத்
தானே என்னால் எழுத முடியும்?

4. என்னிடம் கதை எழுத ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு
கதையையும் மிகவும் யோசித்து , மிகக் கஷ்டப்பட்டுதான் எழுதுகிறேன்.
ஒவ்வொரு கதையும் நான் தவிர்க்கமுடியாமல் ஈடுபடும் தேடல். என்னை
நானே உட்படுத்திக் கொள்ளும் ஒர் பரீட்சை. ஒரு பிரச்சினை, ஒரு கருத்து,
ஒரு அனுபவம் அல்லது உணர்ச்சி – இவற்றின் சொல் உருவாக்கம், சித்தரிப்பு,
விவரணை, பகிர்ந்துகொள்ளல் ஆகியவற்றில் எனக்குள்ள திறமையின் பரீட்சை,
என்னையுமறியாமல் எனக்குள்ளே ஒளிந்திருக்கக்கூடிய ஆழங்களின்,
சலனங்களின் தேடல்.

5. ஒவ்வொரு கதையையும் எழுதியபின்பு என்னையும் என்னைச் சுற்றியுள்ள
மனிதர்களையும் முன்னைவிட நன்றாகப் புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும்
முடிகிறது. தாஜ்மகால் கதையை எழுதிய பிறகு, கணவன்-மனைவி சமத்துவம்
என்பது ஒரு இலட்சிய உருவகம் தானென்பதை நான் புரிந்து கொண்டேன்.

6. எழுத்து எனக்கு ஒரு பயணம். பூடகமாகவும் மர்மமாகவும் எனக்குச் சற்றுத்
தொலைவில், எப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்றைக் கிட்டப்
போய்ப பார்க்கும் ஆசையினால், பிரத்தியேக உலகத்தினுள்ளே சதா இயங்கிக்
கொண்டிருக்கும் பல சூட்சமமான உலகங்களை வெளிக்கொணரும் ஆசையினால்,
அல்லது எனக்கென்று ஒரு புதிய உலகம் நிர்மாணித்துக்கொள்ளும் ஆசையினால்,
நான் மேற்கொண்டுள்ள பயணம்.

7. எழுத்து எனக்கொரு அலங்காரச்சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வ
தற்காககோ, யாராலும் ஒப்புக்கொள்ளப்படுதற்கோ நான் எழுதவில்லை. இது
பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப்போல அல்ல.எழுதுவதை
என்னால் தவிர்க்கமுடியவில்லை. எனவேதான் எழுதுகிறேன். 0

Series Navigation