இரு கவிதைகள் : மரமறு மறுமரம், சொல்ல வந்தது…

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

மாலதி


—-
கதிர்ச்சூட்டுக்கு என்
தீர்க்க ரேகைகளை மறுத்து
ஒரு வெள்ளியும் கடந்ததுவோ
எனும்படி
பெருஞ்செடியும் குறுமரமும்
அல்லவுமாய் போல் ஒன்று
பச்சைக்குடை விரித்து
எனைக்கவிந்தது.
நான் மட்டும்
அந்த மர வளைப்பில்,
நாய்க்குடைக்குள்
மறுகியமரும்
நனைந்த புள்பேடாக.
கல்லறைக்குள் இருப்பது போல்
வலிகளற்று இனிமை மணத்தது.
அதன் பனி வெதுவெதுப்பில்
என் கனவுகள் குளிர்ந்தன.
காலமில்லா காலத்திலும்
கிளைத்துப் பரவின என்
தோட்டக்குருத்துகள்,
மரத்தை அண்ணாந்து
வியந்தபடி.
எனக்கே எனக்கான
ஒரு மரம் அது வரம்
அதன் வேர் வெடிப்புகளில்
என் சோகங்கள் உரம்.
மரம் என்னில் குவிந்து
உதட்டால் தொட்டது
என் உலர்பரப்பை.
தீவுகள் தீவனங்களாகித்
துண்டு துண்டாய்க் கரைந்தன
நீல மீன் வயிற்றுள்.
சுற்றிலுமான வெள்ளக்காடு
பாலைக்காற்றை ஈரத்தில்
வந்தித்துச் செங்கடலைத்
தேய்த்து இன்னும் சிவப்பாக்குமுன்
இதோ உதிர்கிறேன் உடலால்
பொடிப்பொடியாகி
இந்த மரத்துக்காக.

சொல்ல வந்தது…
—-
நீங்கள் வந்தது மறந்து
சென்றது பதிவாகிவிட்டது.
எப்படிச் சொல்வதென்றே
தெரியாமல் இருந்திருக்கிறது.
பிரிய மனமில்லாமல்
இன்னும் கொஞ்சம்
தங்கும்படிக்கும்
பேசியைக்கீழே
வைக்காமல் குரலைத்
தொடரும்படிக்கும்
கேட்கத் தயக்கமிருந்திருக்கிறது.
விலகினபின் எல்லாமே
சுலபமாகிவிட்டது.
பழைய பொழுதுகளின்
மறு அழைப்புகளால்
இறுக்கப் படும்போது
நூறு கொலைகளின் சாட்சியாகி
நீதிக்கு மறைந்து வாழும்
குற்றவாளி போலப்
புரண்டு புரண்டு
படுத்தபின்
தூங்கவும் முடிகிறது.
மன்னிக்கும் குணம்
மரத்துப் போனது
தவிர.

====
Malathi

Series Navigation

மாலதி

மாலதி