இபின்னிப் பின்னே எறிந்தாள்!

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

கரு.திருவரசு


குளித்துவந்தாள் குழலைக் காயவிடுத்தாள் – நான்
கொடுத்துவிட்ட நினைவைக் காயவிடுத்தாள்!
‘பளிச் ‘சென்றே குழலைத் தட்டிவிடுத்தாள் – ஆசைப்
பரியையவள் என்னுள் தட்டிவிடுத்தாள்!

கூந்தலுக்குக் கன்னி ஆவிபிடித்தாள் – உடன்
கூற்றெனவே என்றன் ஆவிபிடித்தாள்!
பாந்தமுடன் கையால் நீவிவிடுத்தாள் – அவள்
பாவியென்றன் மனத்தை நீவிவிடுத்தாள்!

சடையாகக் குழலைப் பின்னிமுடித்தாள் – அதில்
சரியாக என்னைப் பின்னிமுடித்தாள்!
அடியிலொரு குஞ்சம் தொங்கவிடுத்தாள் – என்னை
அதனுடனும் கொஞ்சம் தொங்கவிடுத்தாள்!

கைவிரலில் சடையைச் சுற்றிப்பிடித்தாள் – அவள்
கண்வழியே எனையும் சுற்றிப்பிடித்தாள்!
பொய்யரவைத் தூக்கிப் பின்னேயெறிந்தாள் – எனையும்
‘பொத் ‘தெனவே தூக்கிப் பின்னேயெறிநிதாள்!

thiruv@pc.jaring.my

Series Navigation