இடைவெளி
ரமேஷ் கல்யாண்
வைத்த இடத்திலேயே
வைத்தபடி இருக்கும்பொருட்களுக்கும்
அதன் கலைப்புகளுக்கும் இடையே –
எழுதிய பக்கங்கள்
எழுதியபடியே இருப்பதற்கும்
அதில் ததும்பும் கிறுக்கல்கிளுக்கும் இடையே –
குடிநீர்க் குடம்
சுத்தமாக இருப்பதற்கும்
கை இடக் கலங்குவதர்க்கும் இடையே –
ஒரு துடைப்பம்
கச்சிதமாக இருப்பதற்கும்
குச்சிகள் சிதற கலைந்து கிடப்பதற்கும் இடையே –
ஒரு தூக்கம்
முழுமையாக சுவைக்கப் படுவதற்கும்
அடிக்கடி கலைக்கப் படுவதற்கும் இடையே
மாயச் சிறகென எழில் நலுங்குகிறது
ஒரு குழந்தையின் வருகை