ஆயிரம் தீவுகள்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

புகாரி, கனடா


கனடாவின் கிழக்கில், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில்
செயிண்ட் லாரன்ஸ் என்ற அழகிய நதி எல்லையாய் அமைந்திருக்கிறது.
சுத்தமான குடிநீருடன் அகன்று நீண்ட இந்த நதியின் 50 மைல் தூரத்திற்கு
1865 தீவுகள் அமைந்து பேரழகினைச் சொரிகின்றன.

ஆரம்பத்தில் ஏகப்பட்டத் தீவுகளை ஒரே இடத்தில் கண்ட அதிசயத்தில்
ஒரு பிரஞ்சுக்காரர் அவசரமாய் இட்ட பெயர்தான் இந்த ஆயிரம் தீவுகள்.
அவற்றைக் கண்டுவந்த அதே இரவு என் ஆனந்தத்தில் எழுதிய கவிதையே இது.

வரம் தரும் தேவதை
வாரி வாரி இறைத்த
வைரமணித் தொட்டில்களோ

வசந்தங்கள் தாலாட்ட
யொவனம் ததும்ப
நனைந்து நனைந்து
மிதக்கும்
நந்தவனங்களோ

வனப்புகள் புடைசூழ
மாலை வெயில் மஞ்சள் பூசி
நீராடி நாணுகின்ற
தங்கத் தாமரைகளோ

நிச்சயப் படுத்திய
அழகுப் போட்டிக்கு
அணி வகுத்த கன்னியரோ

தீர்வுக்குத் திணறித்
தப்பியோடியத் தலைவனைத்
தேடித்தான் நிற்கிறீரோ

அடடா…
பொழியும் அழகினில்
மூழ்கி மூழ்கியே
நானும்
சிலிர்ப்புக்குள்
சிக்கிக்கொண்டேன்

O

பறவைகள் மாநாட்டை
வேடந்தாங்களில் கண்டேன்

பூக்களின் மாநாட்டை
ஊட்டியில் கண்டேன்

அருவிகளின் மாநாட்டை
குற்றாலத்தில் கண்டேன்

தீவுகளின் மாநாட்டை
முதன் முதலில்
இங்குதான் காண்கிறேன்

இயற்கையே…
என்றென்றும்
உனக்கு என்
முதல் வணக்கம்

O

தீவுகளை இணைக்கும்
சின்னஞ்சிறு பாலம்
இங்குமட்டுமே
என்றறிந்தபோது…

விலகி விலகி
என்றும்
வீணாகிப் போகும்
நம் மனிதமனங்களையும்
இணைத்துப் போட
புதுப் பாலங்கள் வாராதோ
என்ற
ஏக்கம் எழுந்தது

O

நதியால்
தீவுகளுக்குப் பெருமையா
தீவுகளால்
நதிக்கு மகுடமா
என்றொரு
பட்டிமன்றமே நடத்தலாம்

அப்படியோர் அழகு
அந்த
லாரன்ஸ் நதிக்கு

O

ஓடாத ஓடங்களாய்
எங்கெங்கும்
தீவுகள்…
தீவுகள்…

அவற்றில்
ஓடிப்போய் நின்று…
ஓஹோ வென்று
உச்சக்குரலெழுப்ப
உள்ளம் மனுப்போடுகிறது

O

சிற்றோடைக் கரைகளில்
சின்னஞ்சிறு பருவத்தில்
காகிதக் கப்பல் விட்டுக்
களித்த நாட்களை
மனம் இன்று
ஒப்பிட்டுப் பார்க்கிறது

எந்தச் சிறுவனின்
அற்புத விளையாட்டோ
இந்தத் தீவுகளின்
சுந்தர ஊர்வலம் ?

O

திசைகளெங்கும் பரவித்
திளைத்தோங்கியத்
தீவுகளே… தீவுகளே…

நீங்கள்
நீராடி முடித்ததும்
மெல்ல எழுந்து
என்முன்
நடக்கத் துவங்கிவிடுவீர்களோ…

காத்திருக்கவா
நானிந்த நதிக்கரையில் ?

*

buhari@rogers.com

Series Navigation