அவன் அவள் காதல்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

சத்தி சக்திதாசன்


பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து அலுத்துப் போனவளாக லதா அங்குமிங்கும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள். சுற்றிவர நின்றிருந்த அனைவரும் தன்னையே உற்றுப் பார்ப்பது போன்றதொரு பிரமை. மோகனுக்காக காத்திருந்த வேளையில் பல பஸ்வண்டிகள் அந்தத்தரிப்பை தாண்டியும் தான் ஓரு பஸ்சிலும் ஏறாதது குறித்து குறித்து சகலரும் தன்னை வினோதமாகப்பார்ப்பது அவளது மனதை முள்ளாக நெருடியது.

‘சே என்ன மனிதர் இவர் ஒரு பெண்ணை இப்படியா காக்க வைப்பது ‘ என மோகனை மனதிற்குள் திட்டிக்கொண்டாள் . சரி இனி அங்கு நிற்பதில் பிரயோசனமில்லை என எண்ணி நடக்கத்தொடங்கும் போது மோகனது மோட்டார்பைக் கிரீச்சிட்டுக்கொண்டு அவளருகே வந்து நின்றது. சினம் கொண்ட முகத்துடன் அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.

வழியெல்லாம் பலவிதமாய் மன்னிப்பு கேட்டுக்கொண்டே மோகன் கடற்கரையை வந்தடைந்தான். காதலனின் கனிவான மன்னிப்புக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாய் லதாவின் முகம் மறுபடியும் மலர்ந்தது.

ஒரு ஓரமாய் இருவரும் அமர்ந்து கொண்டார்கள் ‘ மோகன் நான் படிப்பை முடித்து எட்டு மாதங்களாகின்றது , இன்னும் ஒரு வேலயும் கிடைத்தபாடில்லை , தம்பியும் , தங்கையும் என்னையே நம்பி இருக்கின்றார்கள். என்ன செய்வது என்றே புரியவில்லை எத்தனை காலம்தான் அப்பா தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பார் ? ‘ என்று அங்கலாய்த்துக்கொண்டாள்.

சற்றே தங்கமாக ‘ லதா என்ன சிறு பிள்ளை போல வீணான சிந்தனைகள் , சற்று பொறுமையாக இரு விரைவில் எமது திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றேன் , பின்பு உனது துன்பங்களுக்கு ஓர் விடிவு வந்து விடும் ‘ என்றான் மோகன். இந்தப்பதிலைக் கேட்டு சற்றே றுதலடைந்தவளாக தனது சம்பாஷணையைத் தொடர்ந்தாள்.

அன்றும் வழக்கம் போல் மோகன் அவளை அவளது வீட்டுக்கு அடுத்த தெருவில் இறக்கி விட்டு , அவளிடம் விடை பெற்றான். விட்டை நோக்கிச்சென்ற லதாவை எதிர் பார்த்தவண்ணம் அவளது அப்பா , பரமசிவம் வாசலிலே காத்திருந்தார் .

‘ அப்பா என்ன இங்கேயே உட்கார்ந்திருக்கின்றீர்கள் ? ‘ என்றாள் லதா . ‘மாம் அம்மா உனது எதிர்காலத்தையே மாற்றியமைக்கக்கூடிய ஓர் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது அதைப்பற்றி உன்னுடன் பேசுவதற்காகவே காத்திருக்கின்றேன் ‘ என்றார் பரமசிவம் . அதைத்தொடர்ந்து தனது முதலாளி தன்னை இன்று அழைத்து , தன் மகன் சேகர் லதாவை பலதடவைகள் பார்த்திருப்பதாகவும் அவனுடைய மனத்தை அவளிடம் பறி கொடுத்து விட்டதாகவும் கூறி , எதுவித செலவும் அவர்களுக்கு ஏற்படாதவாறு முதலாளியே அவர்களது திருமணத்தை நடத்தி வைப்பதாகவும் கூறி அவளின் சம்மதத்தை அறிந்து கூறுமாறு கேட்டதாகவும் கூறினார் .

மேலும் மிகவும் மலர்ந்த முகத்தோடு அவர்களின் குடும்ப பிரச்சனைகள் அனத்துமே இதன்மூலம் தீர்ந்துவிடும் என்று கூற ி ‘லதா உன்னைப்போன்ற ஒரு அதிர்ஷ்டமுள்ள ஓர் பெண்ணைப்பெற்றதற்காக நான் இறைவனுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் ‘ என்று கண்களில் நீர் மல்க , உணர்ச்சி ததும்பக்கூறினார்.

தங்கள் கடைக்குட்டியான தங்கை மாலதிக்கு பிறப்பளித்த அடுத்த நாளே இவ்வுலகை விட்டு அவர்களின் தாய் மறைந்தபோது லதாவுக்கு வயது று தான். தாயற்ற குழந்தைகளை கண்ணுக்கு கண்ணாக பாசத்தை ஊட்டி வளர்த்த அந்தத்தந்தையின் சைக்கனவு நிறைந்த கண்களின் பரிதாப ஏக்கம் அவளின் மனத்திரையில் சோக நாடகத்தை அரங்கேற்றியது.

தலையைக்குனிந்து கொண்டே தனது அறைக்குள் நுழைந்தாள். அடுத்த அறையினுள் அவளது தம்பி சுதாகரும் , தங்கை மாலதியும் படித்துக் கொண்டிருந்தார்கள்.அந்த இளம் உள்ளங்களில் என்ன விதமான எதிர்காலம் கற்பனை வானில் சிறகடித்துக் கொண்டிருக்கும் என்று எண்ணுகையில் அவளது கண்கள் பனித்தன.அன்று இரவு படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் லதா .

மனத்திரையில் ஒருபுறம் தந்தையின் பாசமிகு முகமும் , மறுபுறம் சுதாகரின் கறுப்பு வெள்ளை டிவியில் கலர்க்கனவு காணும் ஏக்கமும் , மாலதியின் டாக்டராக வேண்டும் எனும் எதிர்பார்ப்பும் மாறி , மாறி திரைப்படம் போன்று ஓடிக்கொண்டிருந்தது.இறுதியாக ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாக கண்களை இறுக மூடினாள்.

மறுநாள் வெளியே கிளம்பும்போது தயங்கியவாறு பரமசிவத்தை நெருங்கியவள் ‘அப்பா நீங்கள் நேற்று என்னுடன் பேசிய விடயம் குறித்து இரண்டு நாட்கள் அவகாசம் தாருங்கள் ‘ என்றாள் ‘தாரளமாக , உன் வாழ்க்கையை நிர்ணயிக்கும் உரிமையை உனக்கு தரமாட்டேன் என்று நினைத்தாயா அம்மா ? ‘ என்றார் பரமசிவம் .

‘ நான் வெளியே போய்விட்டு வருகின்றேன் அப்பா ‘ என்றவாறு வெளியே கிளம்பியவளின் மனத்தில் தன் தந்தையின் பெருந்தன்மை இமயத்தை ஒத்தது என்னும் எண்ணம் பெருமிதத்தைக் கொடுத்தது.

விரைவாக தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தும் கடை ஒன்றில் நுழைந்தவள் , அவசரம் , அவசரமாக மோகனுடன் அவனது அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அவனுடன் முக்கியமான ஒரு விடயத்தை பேச வேணும் என்றும் கட்டாயம் தன்னை வழக்கமாகக சந்திக்கும் கடற்கரையில் சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டாள்.

அலையலையாய் மனத்தோடு நினைவுகள் மோத பக்கத்திலிருந்த வாசிகசாலைக்குள் நுழைந்தவள் , அங்கே இருந்த அன்றைய பேப்பரை விரித்துக் கொண்டாள் அதிலே அன்றைய அவளது பலனின் கீழ் ‘ உணர்ச்சிகளுக்கிடையில் நடக்கும் போரட்டத்தில் , தீர்க்கமான முடிவெடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள் ‘ என்று குறிக்கப்பட்டிருந்தது .

அவளது சுயசரிதை எனும் அந்தக்காவியம் அந்தப்பத்திரிக்கையில் திரைப்படமாக ஓடியது. கடந்தகால நினைவுகள் நிகழ்காலத்தை செயலற்றதாக்கியது.திடாரென விழித்துக்கொண்டவள் போல் நேரத்தைப் பார்த்தவள் அவசரமாக எழுந்து ஓடினாள் ம் இன்னும் சிறிது நேரத்தில் மோகனைச்சந்திக்கும் இடத்தை சென்றடைய வேண்டும்.

கடற்கரையை நெருங்கும்போதே ஒற்றை மரம் போல் நிற்கும் மோகனின் உருவம் தென்பட்டது. ‘ என்ன லதா , என்ன அப்படி தலைபோகின்ற அவசரம் ‘ எனக்கேட்ட மோகனிடம் நேற்று தன் தந்தையுடன் நடைபெற்ற சம்பாஷணை முழுவதையும் எடுத்துக்கூறினாள் . மோகனின் நெற்றி கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கியது,சிந்தனைச்சக்கரம் வேகமாக சுழலத்தொடங்கியது.

‘ லதா உன் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவு படுத்தினாயா ? ‘ என்றான் மோகன் , ‘ இல்லை மோகன் , உங்களுடன் பேசி உங்கள் தற்போதைய சூழலை அறியாமல் என் அப்பாவின் மனதை உடைக்க நான் விரும்பவில்லை .அவரது கடந்தகாலமோ ஓர் முள்பாதை , இப்போதுதான் ஒருவாறு கல்பாதையை அடைந்துள்ளார் னால் அவரது கனவுலகில் காணும் அந்த பூப்பாதையை குலைக்கும் ஓர் பாவியாக நான் இருக்க மாட்டேன் மோகன் ‘ என்று விம்மிக்கொண்டே கூறினாள் .

‘ என்ன லதா உன்னை நான் கைவிட்டுவிடுவேன் என்று எண்ணி விட்டாயா ? என்னை நீ புரிந்து கொண்டது அவ்வளவு தானா இன்றே நான் எனது அப்பாவிடம் பேசி , நாளை உன் வீட்டில் வந்து பெண் கேட்கச்சொல்லுகின்றேன் போதுமா ? ‘ என்றான் மோகன். ‘ அந்தஸ்திலே நீங்களோ ஓர் மலை , நான் ஓர் சிறு மடு , உங்கள் அப்பா எங்கள் உறவை ஏற்றுக் கொள்வாரா மோகன் ? ‘ ஏக்கமாகக் கேட்டாள் லதா . ‘ லதா உண்மையான அன்புக்கு முன்னால் அந்தஸ்து என்ன அந்தஸ்து , என் அப்பா என் சைக்கு குறுக்கே நிற்க மாட்டார் ‘ என நம்பிக்கையாக கூறினான் மோகன் .

பின்பு இருவரும் கிளம்பினார்கள் . இரு காதல் நெஞ்சங்களிலும் இருவேறு எண்ணங்கள் ஊற்றெடுத்தோடியது .

லாதவை வழக்கமான இடத்தில் இறக்கிய பின் , வீட்டை நோக்கி தனது மோட்டார் பைக்கை செலுத்திய மோகனின் மனதில் தன் தந்தை மகாதேவனின் முகம் தென்பட்டது . என்றுமே அவன் கேட்டது எதனையுமே மறுத்தவரில்லை அவன் தந்தை.

விளையாட்டு பொருட்களிலேயே தன்னுடைய விருப்பத்திற்கு எதிராக போகாத அவன் தந்தை தனது வாழ்க்கை துணையை தெரிவு செய்யும் முடிவை கடைசிமட்டும் மறுக்கமாட்டார் என உறுதியாக நம்பினான் . தன்னயும் தன் தங்கை சாந்தாவையும் அவன் அப்பா மகாதேவனும் , அம்மா பார்வதியும் கண்ணின் இமையாக வளர்த்து வந்ததை அவன் மனம் நினைத்து பார்த்தது.வீட்டினுள் நுழைந்த அவன் , அங்கே நிலவிய நிசப்தத்தின் மூலம் அப்பா இன்னும் பிசில் இருந்து திரும்பவில்லை , அம்மா கோவிலுக்கு போய்விட்டாள் , சாந்தா டென்னிஸ் ட்டம் முடிந்து இன்னும் திரும்பவில்லை , இவ்வாறாய் தனது மனதிதிற்குள் கூறியவனாக , தனது அறையினுள் நுழைந்தான்.

சிறிது நேரம் கழித்து அப்பாவின் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது , மோகனுக்கு தெரியும் சரியாக இன்னும் அரை மணி நேரத்தில் அப்பா , உடை மாற்றிக்கொண்டு ஓய்வெடுப்பதற்காக ஹாலினுள் உள்ள சோபாவில் அமர்ந்திருப்பார் என்று . சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு , பேப்பரைக் கையிலெடுத்துக்கொண்ட மகாதேவனைனை மெல்ல நெருங்கிய மோகன் ‘அப்பா உங்களுடன் நான் என் சொந்தப்பிரச்சனை பற்றி பேசலாமா ? ‘ என்று கேட்டான் .

என்றுமில்லாதவாறு இன்று ஏனிந்த பீடிகை என வியந்தவராக ‘ ம் ‘ என்றார். சடசடவென்று தனது காதல் கதையை தந்தையிடம் அவிழ்த்து விட்டான் மோகன். கொஞ்சம்,கொஞ்சமாக அவ்ரது முகபாவம் மாறியது ‘ மோகன் , காதல் என்பது இளஞர்களிடையே ஏற்படும் ஓர் உணர்ச்சியலை அதை உறிஞ்சி விட்டு பின்பு உதறி விடவேண்டும் . உனக்கு அதனை உதறி விடும் தருணம் வந்து விட்டது ‘ என்றார் அமைதியாக.

‘ அப்பா வாழ்ந்தால் , லதாவினுடன் தான் வாழ்வேன் இல்லையானால் எனக்கு வாழ்க்கையே இல்லை ‘ என்றான் . ‘ மோகன் திரும்பவும் கூறுகின்றேன் உன்னுடைய வாழ்வை மட்டும் இது பாதிக்க போவதில்லை , சாந்தாவை பற்றி எண்ணிப் பார்த்தாயா ? என்றார் . ‘அப்பா , சாந்தாவின் வாழ்வை எந்தவிதத்திலும் என் தீர்மானம் பாதிக்காது ‘ என்றான் மோகன்.

மகாதேவனின் அமைதிக்கோலம் கடற்கரை காற்றிலே பறந்தோடும் சுண்டல் சுற்றும் காகிதம் போல பறந்தோடியது , கைகள் வாசற்படியை நோக்க நீண்டன . ‘ மோகன் , நீ விரும்பிய பெண்ணை நீ மணந்து கொள்வதானால் , நமது உறவு இன்றோடு அறுந்தது , எவளோ ஓர் ஊர் , பேர் தெரியாத பரதேசிக்காக நான் எனது சொத்துக்களை சேர்க்கவில்லை , அவள் தான் வேணுமென்றால் எனது எல்லைக்கப்பால் தான் உன் வாழ்க்கை . இதுதான் என் முடிவு ‘ ணித்தரமாக ஒலித்தது அவரது குரல் .

உடுத்த உடையுடன் வாசற்படியைக் கடந்தான் மோகன், காதல் வாழவேண்டுமானால் , காகிதத்தில் உருவான காசுக்கு விடை கூறவேண்டும் என்ற கசப்பான உண்மையை உணர்த்திய தன் தந்தையின் மனத்தை எண்ணி வியந்தான் . கருணையே உருவானவர் என் தான் எண்ணிய தன் தந்தையின் மறுபக்கத்தைக்கண்ட அதிர்ச்சியிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.

மனக்கண்ணில் அவன் தாயின் உருவமும் . தங்கையின் உருவமும் மாறி , மாறி தோன்றி நெஞ்சை உலுக்கியது . நண்பன் குமாரிடம் நடந்தவற்றைக்கூறினான் . ‘டேய் மோகன் பணத்தையே பெரிதென மதிக்கும் இந்த போலிச்சமுதாயத்திலே , காதலுக்காக உன் எதிர்காலத்தையே பணயம் வைத்த உன்னை என் நண்பனாக அடைய நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும் , உன் பிரச்சனைகள் விலகும் வரை நீ என்னுடனேயே தங்கலாம் ‘ என்றான் குமார்.

அன்று இரவு முழுவதுமே அவன் நெஞ்சம் செந்தணலில் விழுந்த புழுவைப்போல துடித்தது.அடுத்தநாள் காலை எழுந்ததுமே , குமார் மூலம் , லதாவைச் சந்திப்பதற்கான ஏற்படுகளைச்செய்து , வழமையான இடத்தில் லதாவைச் சந்தித்தவன் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சூறாவழியைப் பற்றி விபரித்தான் .

தான் அழகாக வளர்த்தெடுத்த சைப்பூந்தோட்டதிலே பேரிடியொண்று விழுந்து அந்தத்தோட்டமே சாம்பலாகி விட்டது போன்ற உணர்வலையால் தாக்கப்பட்டாள் லதா . ‘ ஜயோ மோகன் , எமது சைக்கனவு கனியுமுன்னரே கருகி விட்டதே ‘ எனக்கதறியழுதாள் . ‘ அழாதே லதா , நான்தான் சகலதையும் தூக்கி எறிந்து விட்டு உன்னத்தேடி வந்து விட்டேனெ ‘ என றுதல் கூறினான் மோகன்.

மோகனின் றுதல் லதாவின் மனத்திற்கு சிறிது இதமாக இருந்தாலும் அவள் மனம் சமாதானமடையவில்லை. மோகன் , பரமசிவம் , தம்பி , தங்கை கிய நால்வரின் முகங்களும் மாறி , மாறி மனத்திரையைக் கிழித்துக் குதறியது. பல மணி நேரம் மோகனுடன் பல நிகழ்வுகளை விவாதித்தபின் வீடு வந்து சேர்ந்தாள் .

மோகன் மனம் மிகவும் குழப்பமடந்தவனாக குமாரின் வீட்டை நோக்கி சென்றான். திடாரென லதாவின் மனம் அவனுக்கு ஓர் புரியாத புதிராக இருந்தது .

நடந்த நிகழ்வுகளால் லதா குழப்பமடைந்து இருப்பது அவனுக்கு தெரிந்து இருந்தாலும் அவள் பேச்சுக்கள் சற்று விசித்திரமாக இருந்ததை உணர்ந்தான்.குமாரிடம் நடந்ததை விளக்கியவன் தலையை கைகளில் புதைத்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டான்.அருகே அமர்ந்து றுதல் கூறத்தொடங்கிய குமார் , தனிமைதான் அப்போது மோகனுக்கு மருந்து என்று எண்ணி தான் வெளியே சென்றான்.

மோகனுக்கு தன் உலகம் ஏனோ வெறுமையாகத் தெரிந்தது , தனது தாய் , தங்கை கியோரின் நினைவுகள் இதயத்தை கொளுத்தியது , மறுபுறம் லதாவின் காதல் நினைவுகள் வேதனையை இரட்டிப்பாக்கியது . இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் எல்லாவற்றுக்கும் காரணமானஅவன் தந்தை மீது த்திரம் அதிகமாகியது.

தன்னுடைய படுக்கையில் படுத்தபடியே தன்னுடைய வாழ்க்கையை அலசி ராய்ந்து கொண்டிருந்தாள் லதா . முதலிலேயே தனக்கு தலைவலி என்றும் , தன்னை ஒருவரும் குழப்ப வேண்டாம் என்றும் தன்னுடய தம்பியிடமும் , தங்கையிடமும் கூறியிருந்தாள்.தன் தந்தை தங்களுக்காக செய்திருந்த தியாகங்களை நினைவு கூர்ந்தாள்.அந்த தந்தைக்கு இனியாவது வாழ்வில் கொஞ்சம் நிம்மதி கிடைக்க பண்ணுவது தனது கடமைஎன லதா எண்ணினாள்.

காதலை உயிராக மதிக்கும் மோகனுக்கு தான் கொடுக்கும் பரிசு , அவனையும் , அவனது குடும்பத்தையும் பிரித்து , அவனது வசதியான வாழ்வை அவன் இழப்பதுதான் என்றால் , தன்னுடைய காதல் எவ்வளவு சுயநலம் மிகுந்தது என எண்னினாள். மோகன் தன்னுடைய தம்பி , தங்கை , அப்பா கியோரின் எதிர்காலத்திற்கு பொறுப்பு எடுத்தாலும் அதை நிறைவேற்ற அவன் படவேண்டிய பாடுகளை எண்ணிப்பார்க்கையில் தன்னுடைய வாழ்வுக்காக தான் மற்றவர்களின் நிம்மதியைக் கொல்லும் ஓர் சுயநலவாதியாக மாறக்கூடாது என எண்ணினாள்.

தீர்மானமான ஓர் முடிவுக்கு வந்தவளாய் கண்களை இறுக மூடிக்கொண்டாள் , மூடிய கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணிர் வழிந்தோடியது. அடுத்தநாள் காலையில் முதல் வேலையாக த்னது தந்தையை பார்த்து தலையைக்குனிந்தவாறு ‘ உங்கள் முதலாளியிடம் , எனக்கு சம்மதம் என்று கூறிவிடுங்கள் அப்பா ‘ என்று கூறினாள். ‘ நான் இறைவனை தினமும் வேண்டியது நிறைவேறியது , என் மகள் என்னை மிகவும் பெருமை கொள்ள வைத்து விட்டாள் ‘ என்றார் பரமசிவம் மிகவும் பரவசத்துடன் .

லதாவின் குனிந்த தலைக்கு காரணம் பெண்களுக்கே உரிய நாணம் என் அவர் எண்ணினார் . அவர் கண்டாரா ? குனிந்திருந்த அந்தக்கண்களில் தேங்கியிருந்த கண்ணீர்க்குளத்தை.அவளது தம்பி சுதாகருக்கோ குதூகலம் , தனது கலர்க்கனவுகள் எல்லாம் நிஜமாகப் போகின்றது என்று. னால் தங்கை மாலதி மட்டும் சிறிது சஞ்சலப்பட்டாள்,தனது சகோதரியின் கண்களில் தென்பட்ட உறுதியால் பின்னர் தன்னை தேற்றிக்கொண்டாள்.

வழக்கமாக மோகனை சந்திக்கும் இடத்தில் அவனை சந்தித்துக் கொண்டவள் ‘ மோகன் இதுவே எனக்கும் , உங்களுக்குமிடையிலான கடைசி சந்திப்பு ‘ என்றாள் . ‘ லதா என்ன கூறுகின்றாய் , ஏன் இந்தச் தண்டனை ‘ என்றான் மோகன்.

அவனது கண்களை சந்தித்தால் எங்கே தனது கண்ணீரைக்கண்டு கொள்வானோ என்ற அச்சத்தில் வேறு பக்கம் , பார்த்தவாறே ‘ உங்களுடன் எனது வாழ்க்கை வசதியாக இருக்கும் , எனது தம்பி , தங்கை , அப்பா கியோரின் வாழ்வை சுபீட்சமாக்க முடியும் என்று எண்ணியே உங்களுடன் பழகினேன் , னால் நீங்களோ உஙகள் குடும்பத்தை பகைத்துக்கொண்டு நடுத்தெருவில் நிற்கின்றீர்கள் , நான் எனது அப்பா பார்த்து வைத்திருக்கும் சேகரையே மணமுடிப்பது என்று தீர்மானமாக முடிவெடுத்து விட்டேன். தயவு செய்து என்னை மறந்து விட்டு உங்களுக்கென ஓர் வாழ்வைத்தேடிக் கொள்ளுங்கள் ‘ என்றாள் லதா அவள் இதயம் சீமெந்துத்தரையில் விழுந்த கண்ணாடியைப்போல் சிதறியது.

‘ லதா எமது காதலின் எடையை பணம் என்ற தராசுக் கல்லைக் கொண்டு அளக்க நீ முடிவெடுத்த பின் எனக்கு என்ன வாழ்க்கை இருக்கின்றது ? உன்மீது கொண்ட காதலுக்காக என் குடும்பத்தையே பகைத்தேன் , தந்தையின் கம்பெனியில் பார்த்து வந்த உயர்ந்த வேலையையே தூக்கி எறிந்தேன்.னால் , பணத்துக்காக நீ என்னையே துக்கி எறிந்து விட்டாய் . நான் போகின்றேன் லதா னால் வசதியான வாழ்வைத்தேடி அல்ல என் இதயத்தில் கொழுந்து விட்டெறியும் உன் நினைவுகளை தொலைக்கக்கூடிய ஓர் இடத்திற்கு . சுயநலமின்றி இவ்வுலகில் வாழ்ந்தால் கடைசியில் சுயநினைவே அற்று போய்விடும் , நான் போகின்றேன் லதா , போகின்றேன் ‘ என உணர்ச்சி ததும்ப கூறியவன் , திரும்பிப் பார்க்காமலே தனது மோட்டார் பைக்கில் ஏறிப்பறந்தான் .

உலகம் முழுவதும் இருண்டு விட்டது போலவும் , தன்னை ஒரு பாதளத்தில் உருட்டி விட்டது போலவும் , தான் முடிவேயில்லாத ஓரு பள்ளத்தை நோக்கி உருண்டு கொண்டிருப்பதைப் போலவும் உணர்ச்சிகளால் தாக்கப்பட்டாள் லதா.

யாருமே இல்லாத ஓர் மூலைக்கு சென்று கதறி அழுதாள் , அப்போது ‘ லதா ‘ என்னும் குரல் கேட்டு திடுக்கிட்டவளாய் திரும்பினாள் அங்கே மோகனின் நண்பன் குமார் நின்று கொண்டிருந்தான் .

‘ லதா , மோகன் மிகவும் குழம்பிய நிலையில் உன்னைத்தேடி வந்தான் , அவனின் சமீபத்திய மனநிலையால் , கவலைப்பட்ட நானும் அவனைப் பின் தொடர்ந்தேன் , இங்கே என்ன நடந்தது ? ‘ என்றான் . அழுகை மாறாமலே நடந்தது முழுவதையும் விபரித்தாள் லதா . ‘ லதா நீ ஓருகணம் அவசரப்பட்டு விட்டாயோ என நினைக்கத்தோன்றுகின்றது , மோகனின் புனிதமான மனத்தை நீ அறியவில்லை , அவன் ஓருபோதும் தன் பொறுப்புக்களில் இருந்து பின் வாங்கியிருக்க மாட்டான் .

சிறுவயதிலேயே , தந்தை , தாயை இழந்த எனக்கு அவன்தான் , படிப்பு முடியும் வரை உதவினான் என்ற விடயம் உனக்குத்தெரியுமா ? ‘ என்றான் குமார். ‘ அண்ணா அத்தகைய உத்தமரை அவரது தாய் தந்தையிடம் இருந்து பிரித்த பாவத்திற்கு நான் ளாகலாமா ? இத்தகைய நன்மை புரியும் உள்ளம் கொண்டவரிடம் இருந்து வசதிகளைப்பிரிப்பது எத்தனயோ பேருக்கு அவர் செய்யக்கூடிய உதவிகளை நிறுத்துவது போல அல்லவா ? அப்படிப்பட்ட ஓர் சுயநலம் கொண்ட மனம் படைத்தவளல்ல நான் . எனக்கும் , மோகனுக்கும் ஏதாவது உதவி புரிய எண்ணினால் தயவு செய்து என் முடிவை மாற்ற முயற்சிக்காதீர்கள் ‘ என்றாள் லதா.

‘ லதா உன் தியாகத்திற்கு நான் தலை வணங்குகின்றேன் , என் நண்பனுக்கு உன்னைப்போன்ற ஓர் நல்ல உள்ளத்தை நேசிக்கும் பாக்கியம் சிறிது காலமாவது கிடைத்ததிற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். உனக்கு கிட்டும் வாழ்க்கை , மகிழ்ச்சிகரமாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ‘ என்று கூறி விடை பெற்றான் குமார். இப்படியான நல்ல உள்ளங்களை இனி வாழ்க்கையில் சந்திப்போமா ? என்று வருந்தியபடி, தனது காதல் நினைவுகள் கொடுத்த வேதனாயால் உதிர்த்த கண்ணீர்த் துளிகளை துடைத்தவாறு வீடு நோக்கி நடந்தாள் லதா .

கல்யாண ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தது , அவளது அப்பா பரமசிவத்தை இவ்வளவு சந்தோஷமாக அவள் இதுவரை பார்த்ததில்லை,தனது தியாகத்திற்கு இந்த அளவிற்காவது பயன் கிடைத்ததை எண்ணி ஓரளவு மனதை தேற்றிக்கொண்டாள்.

லதாவின் நினைவுகளால் வதைக்கப்பட்ட மோகன் , குமார் வீடு வந்து தாயும் , தங்கையும் வருந்தி அழைத்ததினால் வீடு திரும்பினான்,தந்தையின் முகத்தை ஏறெடுத்து பார்க்கக்கூட அவன் விரும்பவில்லை.

வினாடிகள் நிமிடமாக , நிமிடங்கள் மணியாக , மணி நாட்களாக பறந்தோடி கல்யாண நாளும் வந்தது.

தோழிகளும் , உறவினர்களும் சேர்ந்து லதாவை ஓர் தேவதை போன்று அலங்கரித்திருந்தார்கள் . வீடு முழுவதும் அழகான தோரணங்கள் அசைந்தாடிக்கொண்டிருந்தன. பரமசிவம் பட்டு வேட்டி பளபளக்க அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார் . வீடே களை கட்டி இருந்தது.பெண்னை திருமண மண்டபத்திற்கு அழைத்துச்செல்ல கார் வர இன்னும் அரை மணி நேரமே இருந்தது .

அப்போது வாசலில் ஓர் மணிச்சத்தம் கேட்டு சுதாகர் அங்கே போனான் அவனது , கையிலே லதாவிற்கு விலாசமிடப்பட்ட ஓர் கடிதத்தை கொடுத்தான் ஓர் பையன் . அவசரம் , அவசரமாக ஓடி வந்து லதாவின் கையிலே அதைக்கொடுத்தான் சுதாகர்.தனது அறையினுள் சென்று அதைப்பிரித்தாள் லதா ,

எனது அன்பிற்குரியவளே லதா !

உன் வாழ்க்கையில் , உன் அனுமதியின்றி புகுந்ததிற்காக முதலில் என்னை மன்னித்துவிடு . நேற்றுச் சாயந்தரம் வரை உன் மனதில் இருக்கும் சோகத்தை அறியாமல் இருந்து விட்டேன் . நான் உன்மீது கொண்ட காதலினால் , நான் ஓரு முழு சுயநலவாதியாக மாறி இட்டேன் , உன்னுடன் தனிமையில் பேசி உன் விருப்பத்தை அறியாமலே உன்னைக் கஷ்டத்திற்கு உள்ளாக்கி விட்டேன். உனது காதல் விவகாரம் முழுவது நான் அறிந்துகொண்டேன் . இவ்வளவு பெரிய தியாக மனப்பான்மை படைத்த உன் முன்னால் நான் மிகச்சாதாரணமானவன் . மோகனுடன் சேர்ந்து நீ உன் புதுவாழ்க்கையை அமைக்கும் வேளையிலே , நீ என்னை மணம் புரிய சம்மதம் தெரிவித்தாய் என்ற இனிமையான நிஜமாகி , நிழலான நினைவைச் சுமந்து கொண்டு நான் எனது டாக்டர் சேவையை ஓர் அகதிகள் முகாமிலே புரிந்து கொண்டிருப்பேன். மோகன் நிச்சயம் உன்ணை புரிந்து கொள்வான் அவன் கையிலும் இந்நேரம் இதே போன்ற ஓர் கடிதம் இருக்கும்.விடைபெற்றுச் செல்லுகின்றேன்.

வணக்கம்

சேகர்

அப்படியே சரிந்து விட்டாள் லதா , சரிகை பூத்த சேலை கசங்கியது . மாலதியின் கூக்குரல் கேட்டு ஓடி வந்த பரமசிவம் கடிதத்தை எடுத்து வாசித்து விட்டு குலுங்கியழுதார் , ‘ என்ன காரியம் செய்யத் துணிந்தாய் அம்மா , உன் விருப்பத்திற்கு எதிராக போகக்கூடியவனா உன் அப்பா ? பணம் என்ன பணம் , உன் மகிழ்ச்சிதான் எனது லட்சியம் , புறப்படு உடனே மோகனைச் சென்று பார்ப்போம் ‘ என்று அவளை இழுத்து , பெண்ணழைப்பிற்காக வந்திருந்த காரில் ஏறினார் .

மாலதியும் ஓடிச்சென்று ஏறினாள். கனவுலக் கலர் டாவி உடைந்து நொறுங்கியதையும் பொருட்படுத்தாமல் சுதாகரும் காரினுள் ஏறினான். சீறிக்கொண்டு கிளம்பியது கார் , ஓர் மங்கலான மலர்ச்சி தோன்றியது லதாவின் முகத்தினிலே.போகும் வழியில் தெருவோரத்தில் ஓர் கூட்டம் நின்றது . அதன் நடுவே , லதாவிடம் கடித்ததை கொண்டு வந்த பையன் , கார் ஒன்றினால் மோதப்பட்டு , அறிவு மயங்கிய நிலையில் விழுந்திருந்தான் , அவன் கையிலே இரத்தத்தில் தோய்ந்த கடிதமொன்று தொங்கிக்கொண்டிருந்தட் , ம் அது மோகனுக்கு விலாசமிடப்பட்டு , சேகரினால் அனுப்பப்பட்ட கடிதம். அப்போ ? மோகன் கையில் அந்தக்கடிதம் எட்டவில்லையா ?

அல்லகல்லோலப்பட்டு மோகன் வீட்டை அடைந்தார்கள். அங்கே அவன் வீட்டு வாசலில் ஓர் அம்பியூலன்ஸ் நின்றிருந்தது. அவர்களைக் கண்டதும் நாய் போல் அவளை நோக்கி பாய்ந்தார் மகாதேவன் . ‘ சண்டாளி என் மகனைப் பைத்தியமாக்கி விட்டு , இப்போ எங்களை பைத்தியமாக வந்தாயா ? ‘ என்று அவர் சொல்லுவற்கும் , பேந்த , பேந்த முழித்துக் கொண்டிருக்கும் மோகனை இருவர் பிடித்து அம்பியூலன்ஸில் ஏற்றுவதற்கும் சரியாக இருந்தது .

மோகன் , மோகன் எனக்கதறினாள் லதா , அவனோ அவள் யாரென்று புரியாத நிலையில் வண்டியில் ஏறினான் . திகைத்துப்போய் பேசச்சக்தியற்றவராக நின்ற பரமசிவம் , கதறியழுதுகொண்டிருந்த லதாவின் திசையிலிருந்து சிரிப்பொலி கேட்டு திரும்பினார் , ம் லதா பயங்கரமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள் , தலையிலிருந்த பூமாலையை பிய்த்தெறிந்து கொண்டே பேய் போன்று சிரித்துக் கொண்டிருந்தாள் , அவளருகே கதறியழும் தம்பி , தங்கை , அப்பா ஒருவரையுமே அறியாத நிலையில் சிரித்துக்கொண்டிருந்தாள்.அந்த விட்டிலிருந்து அடுத்த வண்டி அவளை ஏற்றிக்கொண்டு பைத்தியக்கார ஸ்பத்திரிக்கு புறப்பட்டது .

ஒரு கையிலே சுதாகரையும் , மறுகையிலே மாலதியையும் பற்றிய நிலையிலே அந்த கேட்டுக்கு வெளியே சென்றார் பரமசிவம் . மனைவி எனும் மின்சாரத்தை இழந்த வீட்டில் , லதா எனும் கைவிளக்கை ஏற்றி அதன் ஒளியில் வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்தார் , இன்று விதி எனும் சூறாவளி , பணம் எனும் ஜன்னல் வழியே அந்த கைவிளக்கையும் அணத்து அவர் இல்லத்தையே இருளில் மூழ்கடித்து விட்டது .

அந்த ஸ்பத்திரியின் வாசலினுள் சிந்தனை வயப்பட்டவனாக நுழைந்து கொண்டிருந்த குமாரிடம் ‘ தம்பி , கவனம் பாதையிலே வரும் கல்லை பார்த்து நடவுங்கள் ‘ என்றார் அருகே வந்த அந்த வயோதிபர் . அவரிடம் தன் சோகங்களை சுருக்கமாக சொல்லி முடித்தான் குமார். பின்னர் யாரையோ கண்டவன் அந்த வயோதிபரைப் பார்த்து

அதோ அந்த சுவருக்கு பக்கத்தில் நின்று , சுவரைப்பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றானே ஒருவன் , அதுதான் காதலை புனிதமாக மதித்து , அதற்கு முன்னால் பணம் , அந்தஸ்து எதுவுமே பெரிதல்ல என தூக்கி எறிந்த

அவன்.

அதற்கு எதிர்த்தாற்போல் தனக்குத்தானே நியாயம் பேசிக்கொண்டிருகின்றாளே ஒருத்தி , அதுதான் காதல் தெய்வீகமானது என்று , காதலுக்காக அந்தக் காதலையே தியாகம் செய்த

அவள்.

sathnel.sakthithasan@bt.com

Series Navigation