அரியும் சிவனும் ஒண்ணு

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

ஜோதிர்லதா கிரிஜா


‘மீனா என்ன பண்ணிண்டிருக்கா ? ‘ என்று மெல்லிய குரலில் விசாரித்தார் சுப்பராமன்.

‘அழுது அழுது முகமெல்லாம் கோவைப்பழமாச் செவந்து கெடக்கு. அந்த உள்ளை விட்டு அவ வரவே இல்லை. நம்ம சொர்ணம்தான் அவளோட மல்லுக்கு நின்னு அவளைச் சாப்பிட வெச்சான். ‘

‘அப்படியா ? ‘ என்ற சுப்பராமன் ஏதோ சாமான் எடுப்பது போல் அந்தப் பக்கமாக வந்துசென்ற சொர்ணத்தின் புறமாக அவனை அளப்பது போல் தீர்க்கமாகப் பார்த்தார்.இரவு சரியாகத் தூங்காதவன் மாதிரி கலங்கிய விழிகளுடனும் அதைத்துக் கிடந்த முகத்துடனும் காணப்பட்ட சொர்ணத்தை அவர் பேர் சொல்லி அழைத்தார்.

‘என்ன, அண்ணா ? ‘ என்று கேட்டுக்கொண்டு தம் முன் அடக்க ஒடுக்கமாக வந்து நின்ற அவனை அவர் ஏற இறங்கப் பார்த்தார்: ‘ஏன் ஒரு மாதிரி இருக்கே ? …சரியாத் தூங்கல்லியா ? ‘

சொர்ணம் இதற்குப் பதில் சொல்லாமல், அவரையும் அவர் மனைவி அலமேலுவையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்றான்.

‘என்னாடா! நான் கேக்கறேன்…பேசாம நின்னா என்ன அர்த்தம் ? ‘

‘ஆமாண்ணா. சரியான தூக்கம் இல்லே! ‘

‘ஏன் தூக்கமில்லே ? ‘

.

‘என்னமோ தூங்க முடியல்லே. குழந்தை சதா கண்ணீர் விட்டிண்டிருக்கறச்சே எனக்கு எப்படித் தூக்கம் வரும் ? மனசிலே நிம்மதியே இல்லாம போயிடுத்து! ‘ -திடாரென்று ஏற்பட்ட அசட்டுத்துணிச்சலோடு சொர்ணம் பேசினான்.

குடும்ப விவகாரம் எதிலும் தலையிடாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றுஒரு பணக்காரக் குடும்பத்தில் ஒரு சமையற்காரனுக்கு இருக்கக்கூடிய நிலையை நன்கு உணர்ந்த விவேகத்தோடு நடக்கும் பண்புள்ள சொர்ணம் மீனாவின் துயரத்தால் இந்த அளவுக்குப்பாதிக்கப்பட்டுவிட்ட உண்மை அவர் நெஞ்சில் ‘சுருக் ‘கென்று தைத்தது. தாமும் அலமேலுவும் ‘கெஞ்சு கெஞ்சென்று ‘ கெஞ்சியும் முதல் நாள் முழுவதும் பட்டினி கிடந்த மீனா சமையற்காரன் சொர்ணத்துக்குக் கட்டுப்பட்டு உணவருந்தினாள் எனும் உண்மை அவன் பால் அவர்மனத்தில் ஒரு வகைப் பொறாமையை உண்டாக்கிற்று.

‘நானும் அலமேலுவும் வெளியே போயிருக்கிற நேரங்கள்ளே மீனாவைப் பத்திரமாப் பாத்துக்கோ. அந்தப் பயல் இந்தப் பக்கம் வராம கவனிச்சுக்கோ! ‘

சொர்ணம் மவுனமாய்த் தலை யசைத்தான்.

‘சரி. நீ போய் உன் வேலையைப் பாரு. ‘

சொர்ணம் அங்கிருந்து சென்றதும் சுப்பராமன் சிந்தனை தோய்ந்த கண்களால் மனைவியை நோக்கினார்: ‘என்னதான் சொல்றா அவ ? ‘

‘ ‘திரும்பத் திரும்ப சொன்னதையேதான் சொல்லிண்டிருக்கா … ‘கல்யாணம் வேண்டாம், கல்யாணம் வேண்டாம், கல்யாணம் வேண்டாம்… ‘ .!. ‘

‘அப்போ ? அந்த அய்யங்கார்ப் பையனைத்தான் பண்ணிக்குவாளாக்கும் ? ‘

‘அப்படி ஏதும் சொல்லல்லே…. ‘கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி இப்பவே என்னை வற்புறுத்தாதே…இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. என் மனசு ஆறக் கொஞ்சம்டயம் கொடுங்கறாள். ‘

அலமேலு பேசிய தோரணையை ஊன்றிக் கவனித்தவராய், அவள் மனத்தில் ஓடிய எண்ணங்களைப் படித்துவிட்டவர் போல், ‘ நீ என்ன சொல்றே, அலமு ? கொஞ்சம்விட்டுத்தான் பிடிக்கணும்னு நினைக்கிறே, இல்லியா ? ‘ என்று அவர் கேட்கவும், தன் மனத்துள் ஊடுருவ முடிகிற அவரது கெட்டிக்காரத்தனத்தைக் கண்டு தனக்குள் வியந்தவளாய், ‘உங்களுக்குத் தெரியாததா ? நான் சொல்றதுக்கு என்ன இருக்கு ?… கொஞ்சம் விட்டுப்பிடிச்சா நல்லதுன்னுதான் தோண்றது. அப்புறம் உங்க இஷ்டம், ‘ என்று சற்றே தயங்கியகுரலில் அந்த அம்மாள் பதில் கூறிவிட்டு, அச்சத்தோடு அவர் வாயையே பார்த்தவாறு நின்றாள். கடந்த முப்பது ஆண்டுகளாக அவருடன் புரிந்துவரும் தாம்பத்திய வாழ்வில், ‘உங்கள்இஷ்டம் ‘, ‘உங்களுக்குத் தெரியாததா ? ‘, ‘நான் சொல்றதுக்கு என்ன இருக்கு ? ‘ என்பனபோன்ற அடைமொழிகளைச் சேர்த்துப் பணிவோடு குழைத்துச் சொன்னால்தான் அவருடன் காலந்தள்ள முடியும் என்பதைத அவள் கண்டு பிடித்து வைத்திருந்ததோடு, மனைவிக்கும் ஓர்அபிப்பிராயம் இருக்கும் என்னும் நினைவே அற்றவராய் அவர் சின்னஞ்சிறு காரியம் முதல்பெரிய பெரிய காரியங்கள் வரை நடத்தி வருவதைப் பாராட்டாதிருக்கவும் கற்று வைத்திருந்தாள்.

உணர்ச்சிக் குவியலாகித் துள்ளிக் குதிக்காமல், அவர் சற்று அமைதியாய்க் காணப்பட்ட இந்த நேரத்தைப் பயன் படுத்திக்கொண்டு தன் மனத்திலுள்ளதை – அது சரியோ, தப்போ,அதை அவர் எப்படி எடுத்துக்கொள்ளுவாரோ என்னும் அச்சமின்றி – சொல்லிவிட வேண்டியதுதான் என்னும் முடிவுக்கு அவள் வந்தாள்.

‘அப்படின்னா, கல்யாணத்தைக் கொஞ்சம் தள்ளிப் போடலாம்னு நினைக்கிறியா ? ‘

‘தள்ளிப் போட்றதுதான் நல்லதுன்னு எனக்குத் தோண்றது. அவ சொல்ற மாதிரி அவ மனசும் ஆற வேண்டாமா ? ‘

‘உன் மனசு ஆறின மாதிரி அவ மனசும் ஒரு நாள் ஆறிவிட்டுப் போறது! ‘

‘என்ன சொன்னேள் ? ‘என் மனசு ஆறின மாதிரி ‘யா ? என்ன பேசறேள் நீங்க ? ‘

‘ உன் அம்மாஞ்சியைப் பண்ணிக்கணும்னு நீ இருந்தியா, இல்லியா ? ‘

‘ இதோ பாருங்கோ! இத்தனை நாள் கழிச்சு நீங்க இப்படி யெல்லாம் பேசறது கொஞ்சம் கூட நன்னால்லே! அவன் ஆசைப் பட்டானா, நானா ?… அவன் ஆசைப்பட்டதுக்குநானா பொறுப்பு ? இன்னொரு தடவை இந்த வார்த்தை சொல்லாதங்கோ! ‘ – அலமேலுவின்முகம் தக்காளிப் பழமாய்ச் சிவந்து, கண்களில் கண்ணீரும் எட்டிப் பார்த்துவிட்டது. சுப்பராமன் தம் தவற்றை உணர்ந்தவராய், ‘சே, சே! விளையாட்டுக்கு ஏதோ சொன்னா, அதை விபரீதமா எடுத்துண்டுட்டியே! ‘ என்று மனைவியைச் சமாதானப் படுத்த முயன்றார்.

‘போனாாப் போறது! இனிமே இப்படி ஒரு வார்த்தை சொல்லாதங்கோ! ‘

சிற்ிது நேரம் பேசாமல் இருந்த சுப்பராமன், ‘இருந்தாலும், மீனாவோட கல்யாணத்தைத் தள்ளிப் போட்றது அவ்வளவு சரியா எனக்குத் தோணல்லே. இந்தக் காலத்துப் பொண்ணுகளை – அதிலேயும் படிச்ச பொண்ணுகளை – நம்பறதுக்கில்லே! ‘

‘எதுக்காக அப்படிச் சொல்றேள் ? எம் பொண்ணு ஒரு நாளும் தப்பு வழிக்குப்போகமாட்டா! எஸ்ஸெஸ்ஸெல்ஸியோட நிறுத்திடுங்கோன்னு சொன்னேன். நீங்கதான் காலேஜ்ல சேர்த்தேள். இப்போ அந்தப் படிப்பையே கொறை சொல்றேள்! ‘

‘அலமேலு! இதோ பாரு, படிப்பினாலே இந்த மாதிரி விஷயங்கள்லே பொண்ணுகளுக்குத் துணிச்சலும் பிடிவாதமும் ஏற்பட்றதுங்கிறது உண்தைான். ஆனா, நம்ப முனியம்மா கதிரேசனோட ஓடிப் போகல்லியா ? அவ என்ன படிச்சவளா ? இதெல்லாம் அவா அவா தலை எழுத்து! படிப்பாவது, இன்னொண்ணாவது! ‘ என்று தாம் முதலில் வெளியிட்ட கருத்துக்குத்தாமே எதிர்ப்பும் தெரிவித்துக்கொண்டார் சுப்பராமன்.

‘இப்போ என்ன செய்யப் போறேள் ? ‘

‘எனக்கென்னமோ, சூட்டோட சூடா அவ கல்யாணத்தை முடிச்சுட்றதுதான் நல்லதுன்னு தோண்றது. ‘

‘அப்படியானா, பொண்ணு பார்க்க அவாளை வரச்சொல்லப் போறேளா ? ‘

‘சொல்லிட வேண்டியதுதான். எதுக்கும் மீனா காதுல ஒரு வார்த்தை போட்டு வை. ‘

‘என்னிக்கு வரச் சொல்லப் போறேள் ? ‘

‘இன்னிக்கு புதன் கிழமையா ?…வெள்ளிக்கிழமை யன்னிக்கு வரச் சொல்றேன்.பையனை நான் பார்த்தேன். அந்த அய்யங்கார்ப் பயலெல்லாம் இவனுக்கு முன்னாலே நிக்கமுடியாது! இந்தப் பையனை அவ பார்த்தா கண்டிப்பா அந்தப் பையனை மறந்துதான் ஆகணும்! ‘

அலமேலு தன்னையும் அறியாது முகம் சுளித்தாள். ‘இந்த மாதிரி மீனா கிட்டப்பேசாதங்கோ! ரொம்ப வருத்தப்படுவா. ஏற்கெனவே நொந்து கிடக்கா. ஒரு பொண்ணு வெறும் வெளி அழகைப் பார்த்துட்டு மட்டுமே ஆசைப்படுவான்னு நினைக்காதீங்கோ! ‘

சுப்பராமன் திகைத்துப் போய்ச் சற்று நேரம் சும்மா இருந்தார். மீனாவின் விஷயத்தில் தாம் நடந்து வந்திருக்கும் முறைக்கும், அலமேலு நடந்து வந்திருக்கும் முறைக்குமிடையேஇருந்த மகத்தான வேற்றுமையை நினைத்துப் பார்த்தவராய், ஒரு தகப்பனின் அன்புக்கும் தாயின் அன்புக்குமிடையே உள்ள வேற்றுமையை அது உணர்த்தியதால், இன்னதென்று புரியாத ஒரு விதப் போறாமைக்கு ஆளாகி அவர் மெளனம் சாதித்தார்.

‘நீதான் அவளோட பேசி, அவ மனசைப் பக்குவப் படுத்தணும். ‘

‘எவ்வளவோ பேசியாச்சு. அந்தப் பேச்சை எடுத்தாலே அவ காதைப் பொத்திண்டு காட்டுக்கத்தல்னா கத்தாறா! ‘

‘அப்படியா ? ‘

‘சொர்ணம் கூடச் சொல்லிப் பார்த்தான். ‘

‘என்ன சொன்னான் ? ‘

‘… ‘வாழ்க்கையிலே இதெல்லாம் ரொம்ப சகஜம். இதையெல்லாம் பெரிசா எடுத்துண்டா வாழ முடியாது ‘ ன்னு சொன்னான். ‘ அப்பா அம்மா நமக்குக் கெட்டது செய்வாளா ‘ ன்னுஒரு நிமிஷம் நீயே அமைதியா யோசிச்சுப் பார்த்தியானா, நீ இப்படி அழ மாட்டே ‘ ன்னு கூடபுத்தி சொன்னான். அந்த முசுடுக்குத் துளியாவது ஒறச்சாத்தானே ? ‘

‘சொர்ணத்துக்கு அவ என்ன பதில் சொன்னா ? ‘

‘… ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத் தெரியும். உனக்கென்ன ? நீ பேசுவே.உன்னுடைய வாழ்க்கையிலே இந்த மாதிரி ஒரு சோகம் ஏற்பட்டிருந்தா, நீ இப்படி யெல்லாம்பேசமாட்டே! ‘ ன்னு சொல்லி அவனைப் பிடிபிடின்னு பிடிச்சுண்டுட்டா,,, ‘

‘சொர்ணம் அதுக்கு ஒண்ணும் சொல்லல்லியா ? ‘

‘அழுதான். ‘

‘அழுதானா! ‘

‘ஆமா…நான் மீனாவைக் கோவிச்சுண்டேன். அப்புறம் மீனா அவன்கிட்ட மன்னிப்புக் கேட்டுண்டா. ‘

இந்த நேரத்தில், ‘ இன்னிக்கு ராத்திரிக்கு என்ன கறி பண்ணட்டும் ? ‘ என்று கேட்டுக்கொண்டு சொர்ணம் அங்கு வந்து நின்றான். தொடர்ந்து, ‘அவரைக்காய், கொத்தவரங்காய் ரெண்டும் வாடிப் போகும் போல இருக்கு. ரெண்டையும் சேர்த்துப் பொரிச்ச கூட்டு வேணும்னா பண்ணிடட்டுமா ? வாழைக்காயை நாளைக்குப் பண்ணிக்கலாம், ‘ என்று தானேதன் எண்ணத்தை வெளியிட்டான்.

‘செய்யேன், ‘ என்றார், சுப்பராமன். சொர்ணம் போகாமல் தயங்கியபடி நின்றுகொண்டிருந்தான். ‘என்ன, சொர்ணம் ? ‘ எனும் கேள்வி தொக்கி நிற்க, அவர் அவனை வியப்போடு பார்த்தார். எச்சிலைக் கூட்டி விழுங்கிக்கொண்டதன் விளைவாக அவனது தொண்டைக் குமிழ் மேலும் கீழும் ஏறி இறங்கியதைக் கவனித்த சுப்பராமன் அவன் பேசத் தயங்குகிறான்என்று புரிந்துகொண்டவராய், ‘என்ன வேணும், சொர்ணம் ? ‘ என்று குழைவாய்க் கேட்டார்.அப்படி ஒரு குழைவையே அந்தக் குரலில் இந்த முப்பத்திரண்டு வருடங்களில் கண்டறியாத சொர்ணம், திடாரென்று தன்னைப் பற்றிக்கொண்ட துணிச்சலில், ‘இதிலே நான் தலையிட்றதுதப்பா யிருந்தா, மன்னிச்சுடுங்கோ, அண்ணா. இந்த மாதிரிக் கல்யாணங்கள் இந்தக் காலத்துக்கு அதிசயமில்லே. எத்தனையோ குடும்பங்கள்லே நடக்கிறது. உங்களுக்கு இருக்கிறதோஒரே பொண்ணு. அவ கண்ணீர் விட்டா, அதிலே நமக்கென்ன சந்தோஷம் ? .. அய்யங்கார்ப்பையனா யிருந்தா என்ன, அடிக்குமா ? ஏதோ, இந்த மட்டும் பிராமணப் பையனாவாவது இருக்கானேன்னு திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான் இந்தக் காலத்துலே நியாயம்! ‘ என்றான்.

தயங்கித் தயங்கிப் பேசினால், மேலே பேச விடாது அவர் அடித்துப் பேசித் தன்னை அடக்கிவிடுவாரோ என்னும் அச்சத்தில் அவன் மூச்சு விடாமல் பேசிமுடித்தான். இயற்கையில் தன்னிடம் இல்லாத துணிச்சலை வரவழைத்துக்கொண்டு வலியப் பேசியதாலோ என்னவோ, சொர்ணத்துக்குப் படபடவென்று வந்தது. கைகால்கள் தளர்ந்து நடுங்கின. மூச்சுவாங்கியது. முகம் வெளிறியது.

அலமேலு, ‘சொர்னத்துக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது ? ‘ என்னும்அதிர்ச்சியிலும் வியப்பிலும் மூழ்கியவளாய்க் கண்ணிமைக்காது அவனையே பார்த்துக்கொண்டுநின்றாள்.

‘என்ன சொன்னே ? ‘ என்று கூவிக்கொண்டு சுப்பராமன் இருக்கையை விட்டு எழுந்தார். ‘இது எங்க குடும்ப விஷயம். இதிலே யெல்லாம் நீ தலையிட வேண்டியது அநாவசியம். சமையல்காரனா லட்சணமா உன் வேலையை மட்டும் பாரு! ‘ என்று கொதிப்போடுஅவர் கூறிய சொற்கள் அலமேலுவையே அதிர்ச்சியடையச் செய்துவிட்டன.

சொர்ணம் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான். தளர்ந்த நடையில், குனிந்த தலையுடன் அவன் அந்த இடத்தைவிட்டு அகன்றான். அந்தக் காட்சி அலமேலுவின் கண்களைக் கலங்கச் செய்துவிட்டது. சுப்பராமன் ‘பொத் ‘ தென்று நாற்காலியில் உட்கார்ந்தார்.

‘என்ன, அப்படிப் பேசிப்பிட்டேள் ? சொர்ணம் இந்த வீட்டுக்கு வெறும் சமையல்காரனா மட்டுமா இருந்திண்டிருக்கான் ? ஏதோ தனக்குத் தோணினதைத் தானே சொன்னான் ? சொல்லிட்டுப் போறான்னு இருக்காம அவன் மனசைப் போடுப் புண்படுத்திட்டேளே ?அவன் கண்ணு கலங்கிடுத்து, கவனிச்சேளா ? ‘

சுப்பராமன் பதிலே பேசாது தம் கண்களை மூடிக்கொண்டார். இன்னும் சிறிதுநேரத்துக்கு அவர் வாயைத் திறக்கமாட்டார் என்பதைப் புரிந்துகொண்ட அலமேலு சொர்ணத்தைச் சமாதானப்படுத்துவதற்காக அவசர அவசரமாக அடுக்களைக்குச் சென்றாள்.

அங்கே சொர்ணம் கண்ணீர் வழிய உட்கார்ந்திருந்த நிலை அவள் என்ன சொன்னாலும் அவன் சமாதானமடைய மாட்டான் என்னும் உண்மையையே அவளுக்கு உணர்த்தியது.இருந்தாலும், அவனைத் தேற்ற முயலாவிடில் தானும் அவனை அதிகப்பிரசங்கி என்று கருதுவதாக நினைத்து அவன் வருந்துவான் என்னும் கவலையால் உந்தப்பட்டு, ‘அழாதே, சொர்ணம். ஏதோ கோவத்துலே உங்கண்ணா வாயிலே வந்ததைப் பேசிப்பிட்டார். அதுக்கெல்லாம் அர்த்தம்கிடையாது. நீ மனசிலே வெச்சுக்காதே…மறந்துடு! ‘ என்றாள். சொல்லும் போதே அவளுக்கும்கண்ணீர் வந்தது.

தேற்றுவதற்காக அலமேலு கூறிய சொற்கள் அவன் அழுகையைத் தீவிரமடையச்செய்தன. இனியும் தான் அங்கிருந்தால் அவன் துயரம் பொங்கிப் பெருகும் என்று உணர்ந்த வளாய்க் கணவரிடம் சென்றாள், அலமேலு. கண்கள் மூடியபடி, சிந்தனை வயப்பட்டவராய் சுப்பராமன் உட்கார்ந்திருந்தார்.

‘சொர்ணம் விக்கி விக்கி அழுதுண்டிருக்கான். எழுந்து போய்ச் சமாதானமா அவனுக்கு ரெண்டு வார்த்தை சொல்லிட்டு வாங்கோ! ‘

சுப்பராமன் கண்களைத் திறந்தார். செவாரியோடிய அந்தக் கண்களினின்று அவரும்மனத்துள் வருந்துவதைப் புரிந்துகொண்டவளாய் அலமேலு சற்று நிம்மதி யடைந்தாள்.

‘அப்புறம் பேசறேன் அவனோட! ‘ என்ற சுப்பராமன் எழுந்தார். சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் கிளம்பினார்.

*********

நடந்த எல்லாவற்றையும் கவனித்தபடி தன்னறையில் உட்கார்ந்திருந்த மீனா தந்தைவெளியில் புறப்பட்டுச் சென்றதும், சமையலறைக்குச் சென்றாள். அங்கே கறிகாய் நறுக்கிக் கொண்டிருந்த சொர்ணம் கண்ணீர் பார்வையை மறைத்ததாலோ அல்லது உணர்வு குழம்பி இருந்ததாலோவிரலை அறுத்துக்கொண்டுவிட்டதைக் கவனித்த மீனா, ‘ஐயய்யோ! கையை நறுக்கிண்டுட்டியா ? ‘என்றவாறு கூடத்துக்கு ஓடிச் சென்று துணி, பஞ்சு ஆகியவற்றை எடுத்து வந்தாள்.

‘பச்சைத் தண்ணீரிலே விரலை வெச்சுண்டு கொஞ்ச நேரம் இரு. ரத்தம் வர்றதுநின்னதும் கட்டுப் போடலாம். ‘ – சொர்ணம் அவள் சொன்னபடியே செய்தான். அவள், ‘எங்கே,விரலை நீட்டு, ‘ என்றாள். அவன் மருந்தை எடுத்து விரலில் தடவிக்கொண்டான். பஞ்சையும் அதற்குமேல் வைத்துக்கொண்டான். அவள் அவன் விரலில் கட்டுப்போட முயன்றபோது, ‘வேண்டாம், மீனா.கட்டு அவசியமில்லே, ‘ என்று மறித்தான்,

‘பஞ்சு விழுந்திடுமே, சொர்ணம் ? ‘

‘சரி. துணியை வெச்சுட்டுப் போ. நானே கட்டிக்கிறேன். ‘

‘நீயே எப்படி இடது கையால கட்டிப்பே ? நான் கட்டி விட்றேன். கையை நீட்டு. ‘

‘அவ்வளவு பணிவிடைக் கெல்லாம் நான் அருகதை யில்லாதவன். நான் கேவலம்சமையல்காரன் தானே ? ‘ எனும் சொற்கள் அழுகை கலந்த குரலில் அவனிடமிருந்து வெளிப்பட்டன. மீனாவின் மனம் சாம்பியது.

‘அப்பா கிடக்கார், சொர்ணம். அவரை நானே மதிக்கல்லியே ? நீ ஏன் இவ்வளவுமதிக்கணும் ? மனசை அலட்டிக்கணும் ? ‘ என்றபடி அவள் அவன் விரலில் கட்டுப் போட்டாள்.

‘பெரியவாளை அப்படி யெல்லாம் அவமதிச்சுப் பேசாதே, மீனா! ‘

‘பெரியவாளாம், பெரியவா! எதிலே பெரியவா ? வயசுலேதான் பெரியவா உங்கஅண்ணா! மனசிலே ரொம்பச் சின்னவாதான்! படிச்சு என்ன பிரயோசனம் ? இதிலே சம்ஸ்கிருதபுரொஃப்சராம், சம்ஸ்கிருத புரொஃபசர்! படிச்சுட்டா மட்டும் போறுமா, இல்லே வாய் கிழியப்பேசினா மட்டும் போறுமா ? ‘ என்று இரைந்தாள் மீனா. கூடத்தில் புடைவைத் தலைப்பை விரித்துப் படுத்துக் கொண்டிருந்த அலமேலுவின் காதிக் விழ வேண்டு மென்பதற்காகவே அவள்இரைந்து கத்தியதாய்த் தோன்றியது.

சற்று நேரத்துக்கு முன் ‘படித்து என்ன பயன் ‘ எனும் ரீதியில் மகளைச் சுப்பராமன்குறை கூறிக்கொண்டிருந்ததை நினைவு கூர்ந்த சொர்ணம் திகைத்தான். ‘ தந்தையும் மகளும்படிக்காமலேயே இருந்திருந்தால் ஒருகால் இம்மாதிரி தொந்தரவெல்லாம் இருக்காதோ ? ‘என்று அவன் தன்னைத் தானே கேட்டுக்கொண்டான்.

இரைந்து சத்தம் போட்டதில் மனம் கொஞ்சம் இலேசாகி விட்டிருக்கவே, ‘என்னால உனக்கு ரொம்பக் கஷ்டம், சொர்ணம்! எனக்குப் பரிஞ்சு பேசினதால தானே உனக்கு ‘டோஸ் ‘ கிடைச்சுது ? என்னை மன்னிச்சுடு, சொர்ணம். யாரார் தலையிலே எப்படி எப்படி எழுதி யிருக்கோ அப்படித்தானே எல்லாம் நடக்கும் ?… நீ பரிஞ்சு பேசிட்டா மட்டும் நடந்துடுமா ? ‘என்றாள் மீனா, மெதுவாக.

‘அப்படி யெல்லாம் சொல்லாதே, மீனா! ‘

‘ … ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத் தெரியும் ‘னு நான் கூட உன்னைத் தூக்கி எறிஞ்சு பேசிட்டேனில்லே, சொர்ணம் ?… என்னை மன்னிச்சுடு… ‘

‘அதெல்லாம் வேண்டாம், மீனா! உன் கல்யாண விஷயத்துலே நான் தலை யிட்டிருக்கக் கூடாதுதான். உன்னைத் தூக்கிச் சுமந்து வளர்த்த தோஷம்…. அஞ்ஞானம் அடிச்சுண்டுது….பேசிட்டேன்… பேசி யிருக்க வேண்டாம்தான்… நீ சொல்றாப்போல நான் பேசி இது நடந்துடுமா, என்ன ? ‘

ஏதோ யோசித்தபடி இருந்த மீனா, ‘சொர்ணம்! கூடத்து அலமாரியிலே, மேல்தட்டிலே, வலது பக்க ஓரத்துலே கெளரி சரித்திரம்னு ஒரு புஸ்தகம் இருக்கு. எனக்கு எட்டாது.கொஞ்சம் அதை எடுத்து இங்கே கொண்டு வாயேன்… உனக்கு சம்ஸ்கிருதம் படிக்கவருமோன்னோ ? ‘

ஒரு கணம் திகைப்போடு அவளை நோக்கிய சொர்ணம் ஏதும் கேட்காமல் எழுந்து சென்றான்.

சற்றுப் பொறுத்து அவன் எடுத்து வந்து கொடுத்த அந்தப் புத்தகத்தை வாங்கிஇப்படியும் அப்படியும் புரட்டிய மேனா, ‘ சொர்ணம்! உனக்கு இந்தக் கதை தெரியுமில்லியா ? ‘என்று கேட்டாள்.

‘தெரியும். ‘

‘அப்பா, தங்கிட்ட படிக்க வர்ற பசங்களுக்கு இந்தக் கதையை நடத்தும்போதுநீ கேட்டிருக்கியா ? ‘

‘ஓ. கேட்டிருக்கேன். ‘

‘ரொம்ப அழகாச் சொல்லுவாரில்லே ? ‘

‘ஆமாம். ‘அரியும் சிவனும் ஒண்ணு; அதை யறியாதவன் வாயிலே மண்ணு ‘ன்னுகதையை முடிப்பார்! ‘ என்று உற்சாகத்தோடு பதிலளித்த சொர்ணம், சொல்லக்கூடாத எதையோ சொல்லிவிட்டவனைப் போல் ‘நறுக் ‘கென்று உதட்டைக் கடித்துக் கொண்டான்.

‘அப்படி யெல்லாம் பேசறதுக்கும், இந்தக் கதையைச் சொல்றதுக்கும் இனிமேஅவருக்குத் தகுதி இருக்குன்னு நீ நினைக்கிறியா ? ‘ என்ற மீனா அந்தப் புத்தகத்தின் பக்கங்களைச் சுக்கல் சுக்கலாய்க் கிழித்தாள்.

சொர்ணம் பதறினான்: ‘என்ன மீனா இது ? என்ன காரியம் செஞ்சுட்டே! நல்லசம்ஸ்கிருதப் புஸ்தகத்தை இப்படிக் கிழிச்சுட்டியே! நாம செஞ்ச பாவத்துக்குப் புஸ்தகம் என்ன பண்ணும் ? ‘ என்றான். ஒருவேளை மீனாவுக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டதோ என்னும் கிலி அவனை நடுங்க வைத்தது.

‘நல்ல நினைவோடதான் இருக்கேன். பயித்தியம் கியித்தியம் பிடிக்கல்லே. நீங்கள்ளாம் சேர்ந்து எனக்குப் பிடிக்காத ஒருத்தனுக்குப் பலவந்தமா என்னைக் கல்யாணம் பண்ணிவெச்சேள்னா அப்போ பிடிக்கும் எனக்குப் பயித்தியம், ‘ என்ற மீனா கண்ணீர் உகுத்தாள்.

‘மீனா! மீனா! நீ அழாதயேன்…நீ அழறதைப் பார்த்தாலே எனக்கு என்னமோபண்றது… கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு இருக்கப் பழகிக்கோ. கடவுள் உனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார், ‘ என்ற சொர்ணம் கீழே சிதறிக் கிடந்த காகிதத் துண்டுகளைப் பொறுக்கக் குனிந்தான்.

‘சொர்ணம்! உனக்கு ஒரு அம்பது வயசு இருக்குமா ? ‘

நிமிர்ந்து பார்த்த சொர்ணம், ‘எனக்கு இந்த ஆனிக்கு அம்பத்தஞ்சு வயசு ஆயிடுத்து, ‘ என்றான். தொடர்ந்து, ‘ஏன் கேக்கறே, மீனா ? ‘ என்றான்.

‘சும்மாத்தான் கேட்டேன். அது சரி, நீ ஏன் கல்யாணமே பண்ணிக்கல்லே ? ‘

‘என்னமோ பண்ணிக்கணும்னு தோணல்லேன்னு வெச்சுக்கோயேன். ‘

‘முப்பத்திரண்டு வருஷமா நீ இந்த வீட்டிலே இருக்கே.. இல்லியா ? ‘

‘ஆமாம், அம்மா… ‘

‘உன் கல்யாணத்துக்கு எங்கப்பா எந்த விதமான முயற்சியும் எடுக்கல்லியா ? ‘

‘சே, சே!…கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எவ்வளவோ புத்திமதி சொன்னார். ‘ரெண்டு பேருமே இங்கே இருக்கலாம் ‘னு கூடச் சொன்னார். கல்யாணமாகி வெகு நாள் வரைக்கும் உங்கப்பாவுக்குக் குழந்தை இல்லாம இருந்ததாலே, ‘நீ தைரியமாக் கல்யாணம் பண்ணிக்கோ, உன் குழந்தைகளை யெல்லாம் நான் படிக்க வைக்கிறேன் ‘னு கூடச் சொன்னார். நான்தான் கேக்கல்லே… எம்மேலே உள்ள பிரியத்துனால தானே அண்ணா அப்படி யெல்லாம் பேசினார் ? அந்த நன்றி துளியாவது எனக்கு இருந்தா, இன்னிக்கு ஏதோ கோவத்துலே ஒரு வார்த்தை சொல்லிட்டார்னு இப்படிப் பொங்கிப் பொங்கி அழுவேனா ? செய்யறவாளுக்குச் சொல்றதுக்கு மட்டும் உரிமை இல்லியா ? ‘ என்று சொர்ணம் அங்கலாய்த்தான்.

‘அப்பாவைப்பத்தி எங்கிட்ட பேசாதே! புஸ்தகங்களை வண்டி வண்டியாக் கரைச்சுக்குடிச்சிருக்கிற அப்பாவை விட அஞ்சாவது வரைக்கும் படிச்ச அம்மாவே தேவலை போலிருக்கு! ‘

‘இதுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லே, கொழந்தே! எந்தக் காலத்துலேயும், எந்த தேசத்துலேயும் அம்மா அம்மாதான்! அப்பா அப்பாதான்!… எனக்கு மூணு வயசிலேயே அம்மா செத்துப் போயிட்டா. எங்கப்பா ரொம்ப வைதீகம். உங்க தாத்தா மாதிரி எங்கப்பாவுக்கும் ‘பண்ணிவைக்கிற ‘ உத்தியோகம் தான். ஆனா, உங்க தாத்தா உங்கப்பாவை நன்னாப் படிக்க வெச்சு, சம்ஸ்கிருதப் புரொஃபசர் ஆக்கனார். ..எங்க அப்பாவும் எனக்கு சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். ஆனா, ஏழாவது வகுப்போட என் படிப்பை நிறுத்திப்பிட்டார். எங்க ஊர்லே பள்ளிக்கூடம் கிடையாது. ஆறு மைல் நடந்து போகணும். ஆனா, அதெல்லாம் காரணமில்லே. நான் பரம்பரைத் தொழிலான உபாத்தியாயத்துலே ஈடுபடணும்னு எங்கப்பாவுக்கு எண்ணம். நானும் வீட்டிலேயே தமிழும் சம்ஸ்கிருதமும் படிச்சேன்… திடார்னு ஒரு நாள் அந்தத் தொழில் மேலேயும், என்னைப் படிக்க வைக்காத எங்கப்பா மேலேயும் எனக்கு ரொம்பக் கோவம் வந்தது. மனசைத் திடப் படுத்திண்டு ஒரு நாள் குடுமியை எடுத்துட்டு கிராப் வெச்சுண்டுட்டேன். ‘உன் கையாலேஜலம் கூடக் குடிக்க மாட்டேன் ‘னு சொல்லி எங்கப்பா என்னை வீட்டை விட்டுத் துரத்திட்டார். கிராப்பை எடுத்துட்டுத்தான் வீட்டுக்குள்ளே நுழையலாம்னு கண்டிஷன் போட்டார். அன்னிக்குக் கிளம்பினவன்தான்! அப்புறம் நான் அவரைப் பார்க்கல்லே. அப்போ எனக்குப் பத்தொம்பது வயசு இருக்கும்… ‘

‘கிராப்பு வெச்சுக்கணும்கிற ஆசை திடார்னு உனக்கு எப்படி வந்தது ? உபாத்திமைத் தொழில் மேலே ஏன் கோவம் வந்தது ? ‘

சொர்ணம் சிரித்துக் கொண்டான்: ‘மனசுதான் ஒரு குரங்காச்சே! என்னோட போறாத காலம். விநாச காலே விபரீத புத்தி! ஆனா, இப்போ அதுக்காக நான் வருத்தப்படல்லே. நான் சந்தோஷமாத்தான் இருக்கேன், இப்போ! நீ மட்டும் என் சொந்தப் பொண்ணாயிருந்தா அந்த ராகவனுக்கே உன்னைப் பண்ணி வைப்பேன். உனக்கு வாயால் ஆறுதல் சொல்றதைத் தவிர வேற எதுவுமே செய்ய முடியாத நிலைமையிலே இருக்கேன்கிறதை நினைக்கும் போது, எனக்கு மனசே வெடிச்சுடும் போல இருக்கு. ‘

மீனாவின் கண்கள் சிவந்தன: ‘போகட்டும். விட்டுத்தள்ளு… அப்புறம் நீ உங்கப்பாவைப் பார்க்கவே இல்லேன்னு சொன்னியே, அவர் இருக்காரா… இல்லே… ‘

‘நான் அவரை விட்டுப் பிரிஞ்சு ரெண்டு வருஷத்துக் கெல்லாமே அவர் காலமாயிட்டார். நான் இருந்த இடம் தெரியாததாலே எனக்குத் தகவலே யாரும் கொடுக்கல்லே. ஒரேபிள்ளையா யிருந்தும் கொள்ளி போடக் கூடக் கொடுத்து வைக்காம அவர் போய்ச் சேர்ந்தார். ‘

‘விட்டை விட்டுப் போய் என்ன பண்ணினே ? எப்படிப் பொழச்சே, சொர்ணம் ? ‘

‘வாத்திமைத் தொழில்லே கிடைச்சிருந்த வருமானம் கொஞ்சம் கையிலே இருந்தது. இந்த ஊர் ஓட்டல் ஒண்ணுலே செர்வர் வேலை கிடைச்சுது. அங்கேதான் நான் சமையல்கத்துண்டேன். பிரைவேட்டா ட்யூஷன் வெச்சுப் படிச்சு ஒரு வருஷத்துலே எட்டாவது பரீட்சையும்,அப்புறம் ரெண்டு வருஷத்துக் கெல்லாம் மெட்ரிகுலேஷனும் எழுதி பாஸ் பண்ணினேன். ‘

‘மை குட்னெஸ்! மெட்ரிகுலேஷன் பாஸ் பண்ணிட்டா நீ இப்படி… ‘

‘உஸ்! சத்தம் போடாதே. அம்மா காதுலே விழப் போறது… அப்பாவுக்கும் தெரியாது. தெரிஞ்சிருந்தாக்க, என்னை சமையல்காரனா வெச்சுக்க சம்மதிச் சிருந்திருக்கவேமாட்டார். என் படிப்புக்கு ஏத்த வேலையை வாங்கிக் கொடுத்து என்னைக் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளி யிருப்பார்! ‘

‘நீ அப்பா கிட்ட சொல்லி யிருந்திருக்கணும், சொர்ணம். பெரிய தப்புப் பண்ணிட்டே. அது சரி, நீ எப்படி அப்பா கிட்ட வந்து சேர்ந்தே ? ‘

‘ஓ, அதுவா ? அது கூட ஒரு சின்னக் கதைதான். நான் வேலை செஞ்சிண்டிருந்த ஓட்டலுக்கு உங்கப்பா ஒரு நாள் சாப்பிட வந்தார். அப்போ, உங்கப்பாவுக்கு இருபத்தெட்டு வயசுஇருக்கும். எனக்கு இருபத்த்துநாலு இருக்கும். உபாத்திமைத் தொழில்லேயே ஆயிரக் கணக்குலசொத்து சேர்த்து சொந்த வீடு கட்டி நிலங்களும் வாங்கிப் போட்ட சிவராம வாத்தியாரோடஒரே பிள்ளைன்னும், பள்ளிக்கூடத்திலே அவர் சம்ஸ்கிருத வாத்தியாராய் இருக்கிறதாயும் கேள்விப்பட்டேன். ‘அவருக்கு சமைச்சுப் போட ஆள் தேவையாம். போறியா ? ‘ ன்னு எங்க முதலாளி என்னைக் கேட்டார். சரின்னுட்டேன். நான் வந்து ரெண்டு வருஷத்துக் கெல்லாம் உங்கப்பாவுக்குக் கல்யாணமாச்சு. அதுக்கு அப்புறம் என்னைப் போகச் சொல்லிடுவார்னுதான் நினைச்சேன்.ஆனா அவர் என்னை நிரந்தரமா வெச்சுண்டுட்டார். எனக்கும் பிடிச்சுப் போச்சு. தங்கிட்டேன். ‘

கீழே இறைந்து கிடந்த தாள்களை யெல்லாம் எடுத்து ஒரு காலி டப்பாவுக்குள் போட்டு, சொர்ணம் மூடி வைத்தான்.

‘நீ போய்த் தூங்கு. போ! முகமெல்லாம் வாடி யிருக்கு. ‘

‘ஒரேயடியாத் தூங்கித் தொலைஞ்சாலும் நன்னாருக்கும், ‘ என்று சொல்லிக்கொண்டே மீனா எழுந்து சென்றாள். ‘ஆண்டவனே! ‘ என்று முணுமுணுத்தபடி சொர்ணம்குழாயடிக்குச் சென்றான்.

*********

‘மீனா! அவாள்ளாம் வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வராளாம். ‘

‘அப்படியா ? வரட்டும், வரட்டும்! ‘ என்னும் அழுத்தமான பதில் அவளிடமிருந்து வந்ததும், சொர்ணம் சற்றுத் திகைத்தான். கவலைப்பட்டு அழுவதை விடுத்து ஏதோ முடிவுக்குவந்து மனந்தேறிவிட்ட ஓர் ஒளியை அவள் முகத்தில் அவன் கண்டான்.

‘சொர்ணம்! உன் மேலே நம்பிக்கை வெச்சு உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா ? என்னைக் காட்டிக் குடுக்க மாட்டியே ? ‘

‘இல்லை. ‘

‘உன்னுடைய உதவி கூட எனக்கு வேணும். உன்னைத்தான் நம்பி யிருக்கேன். ‘

‘சொல்லு, மீனா! ஆனா, ஒண்ணு. உங்கப்பாவுடைய உப்பைத் தின்னு வாழ்ந்திண் டிருக்கேன்…அவருக்குத் துரோகம் செய்யும்படியான எந்தக் காரியத்துலேயும் என்னைஈடு படுத்தாதே! ‘

‘சொர்ணம்!… ‘சின்ன வயசுலேருந்து உன்னை எடுத்து வளர்த்தேன் ‘னு நேத்துபெருமை பேசினியே ? ‘ நீ அழுதா, என்னாலே தாங்க முடியல்லே ‘ன்னு சொன்னியே ? அதெல்லாம் பொய்யா ? உன்னை வளர்த்தவாளுக்கு நீ துரோகம் செய்யறது தப்புதான். ஒப்புக்கொள்றேன். ஆனா, நீ வளர்த்த ஒரு பொண்ணுக்கு நீயே துரோகம் செய்யறது மட்டும் தப்பாகாதா ? சொல்லு. ‘

‘மீனா! மீனா! நீ இப்போ என்னை என்ன செய்யச் சொல்லப் போறே ? தர்மசங்கடமான ஒரு நிலைமையிலே கொண்டு வந்து என்னை நிறுத்திடாதே. இதிலே யாருக்குதுரோகம் செய்யறது தப்புங்கிற கேள்விக்கே இடமில்லே. உங்கப்பா சொன்ன மாதிரி, இந்தவிஷயத்திலேயே தலையிடாம நான் ஒதுங்கி நின்னு உனக்காகக் கடவுளை வேண்டிக்கிறதுஒண்ணுதான் நான் செய்யகூடிய காரியம்… ‘

‘சொர்ணம்! நானும் உனக்கு வேண்டியவ. எங்கப்பாவும் உனக்கு வேண்டியவர்.அப்படி இருக்கிறப்போ எனக்காக மட்டும் நீ ஏன் பிரார்த்திக்கணும் ? எங்கப்பாவுக்காக நீபிரார்த்திக்கல்லேன்னா, அதுவும் ஒரு துரோகந்தானே ? ‘

‘கொழந்தே! நீ சுத்தி வளைச்சுப் பேசி என்னை ஜெயிச்சுடலாம்னு பாக்கறே.ஆனா, எதுக்குன்னுதான் புரியல்லே… ‘

‘அப்படிக் கேளு, சொர்ணம்! எனக்குப் பிடிச்ச ஒருத்தரை நான் பண்ணிக்கிறதுதப்புன்னு நீ நினைக்கிறயா ? என் விருப்பப்படி நடக்க அப்பா மறுக்கிறது சரின்னுநினைக்கிறயா ?… ‘

‘மீனா! உங்கப்பா செய்யறது சரின்னு நான் சொல்லவே இல்லே. நீ செய்யறதுதப்புன்னும் சொல்லல்லே.. அப்படி நெனைச்சா, உனக்காகப் பரிஞ்சு பேசி உங்கப்பாவோடகோபத்துக்கு ஆளாகி யிருப்பேனா ? ‘

‘ ‘ரெண்டு பேருக்குமே துரோகம் செய்யறது தப்புன்னு நீ நினைக்கிறது ரொம்பசரியா யிருந்தாலும், நியாயம்னு ஒண்ணு இருக்கு இல்லையா, சொர்ணம் ? ‘

‘ ……………! ‘

‘யார் பக்கம் நியாயம் இருக்கோ அவா பக்கம் நீ சேர வேண்டியது தானே ? ‘

‘மீனா! தன் பக்க நியாயம் இருக்குன்னு உங்கப்பா நினைக்கிறார். உன் பக்கம்நியாயம் இருக்குன்னு நீ நினைக்கிறே.. ‘

‘ அப்பாவும் நானும் நினைக்கிறது ஒரு பக்கம் இருக்காட்டும், சொர்ணம். யார்பக்கம் நியாயம் இருக்குன்னு நீ நினைக்கிறே ? ‘

‘மீனா! நீ என்னை ஜெயிச்சுட்டே! என்ன செய்யணுமோ, சொல்லு. செய்யறேன் – கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு! ‘

‘இந்த லெட்டரை அவர் கிட்ட கொடுத்துப் பதில் வாங்கிண்டு வரணும்… ‘

சொர்ணம் சுற்று முற்றும் பார்வையைச் சுழற்றினான். நான்காக மடிக்கப் பட்டிருந்த அந்தக் காகிதத்தை இன்னும் நான்காக மடித்துச் சின்னதாக்கித் தன் பொடி டப்பியில் வைத்துக் கொண்டான்.

‘நீ சொன்னபடியே செய்யறேன். ஆனா, இதிலே என்ன எழுதி யிருக்கேன்னுஎனக்குத் தெரியணும்! ‘ – சொர்ணத்தின் குரலில் கண்டிப்புத் தெறித்தது. மீனா கொஞ்சம்அதிர்ந்துதான் போனாள்.

‘ … இந்த மாதிரி… என்னைப் பொண்ணு பார்க்க வரப் போறாங்கிறதையும்,இந்த மாசம் முடியறதுக்குள்ளே எனக்குக் கல்யாணம் பண்ணிடணும்னு அப்பா தீர்மானிச்சிருக்கிறதையும் இதிலே எழுதி யிருக்கேன். இதிலேருந்து தப்பிக்கிறதுக்கு வழியும்

கேட்டிருக்கேன். ‘

‘சரி… ‘

‘உனக்கு என் மேலே நம்பிக்கை இல்லேன்னா அதைப் படிச்சுப் பாரு. நீ படிக்கணும்னுதான் நான் கவர்லே போடாம குடுத்தேன். ‘

‘நான் ஏன் படிக்கணும்மா ? நீ சொன்னா சரிதான்… இன்னிக்கு சாயந்தரம் கோவிலுக்குப் போறச்சே பாத்துக் குடுத்துடறேன். ‘

*********

சொர்ணம் ராகவனின் அறையை அடைந்த போது ராகவன் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான். சொர்ணத்தைக் கண்டதும் அவன் முகம் சற்றே மலர்ந்தது.

‘வாங்கோ, வாங்கோ!… ‘ என்று அவன் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டான்.அதில் அமர்ந்து கொண்ட சொர்ணம் கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான். படித்து விட்டு ராகவன் அதைத் தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டான்.

‘பதில் வாங்கிண்டு வரச்சொல்லி யிருக்கா. ‘

‘அப்படியா ?.. மிஸ்டர் சொர்ணம்! அந்தக் குடுமபத்திலே நீங்க ரொம்ப நாளா இருக்கேள். மிஸ்டர் சுப்பராமன் மனசை மாத்தற அளவுக்கு அவர்கிட்ட உரிமை யுள்ளவா யாரையும்உங்களுக்குத் தெரியாதா ? ‘

‘ஈசுவரா! அதுதானே நானே முழிச்சுண்டிருக்கேன்! மீனா ஒருத்திக்குத்தான் அப்பாவைப் பணிய வைக்கிற செல்வாக்கு உண்டு. இதிலே அவளுக்கே எதிரான்னா இருக்கார் அந்தமனுஷன் ? ‘

‘வேற வழியே இல்லையா ? உங்களுக்கு ஒண்ணும் தோணலியா ? ‘

‘அண்ணா மனசு மாற அந்த ஆண்டவந்தான் அருள் புரியணும். இது மனுஷாளாலே முடியற காரியமில்லே. அவரைச் சொல்றதுக்கும் குத்தமில்லே. ரொம்ப வைதீகமானபரம்பரை. அவர் ஒருத்தர்தான் படிச்சுட்டு வேலை பண்றவர், அவா குடும்பத்திலே. அவா பரம்பரையே உபாத்திமைப் பரம்பரை. மனுஷன் குடுமியை விடாம வெச்சுண்டு இருக்கிறதுலேருந்தே நீங்க தெரிஞ்சுண்டிருந்திருக்கணுமே! ‘

‘தெரியறது, தெரியறது! ‘

‘அந்தக் காலத்துலே நான் கிராப்பு வெச்சுண்டேன்னு – எங்கப்பா கூட, பண்ணிவைக்கிற பரம்பரைதான் – எங்கப்பா என்னை வீட்டை விட்டே துரத்திப்பிட்டார்… அந்த அளவுக்கு வைதீகப் பிச்சுகள் பெரும் அளவுக்குக் குறைஞ்சுட்டாலும், பெருங்காயச் சொப்பு காலியானப்புறமும் வாசனை யடிக்கிற மாதிரி இன்னும் ரெண்டொருத்தர் அப்படி இருந்துண்டுதான்இருக்கா! ‘

‘மத்தவா இருந்தா, அது நியாயம். நியாயமா இல்லாட்டாலும், அவாளைப் புரிஞ்சுக்கலாம். இந்த மனுஷன் – இவ்வளவு படிச்ச மனுஷன் – இப்படி இருக்காரே! ‘

‘அவர் கிட்டே யார் பேசறது ? அந்த அம்மாள் வாயில்லாப் பூச்சி. அவளை ஒண்ணுமே சொல்றதுக்கு இல்லே. அவளும் பழங்காலத்து மனப் போக்கு உள்ளவதான். ஆனாலும்,அவர் சம்மதிச்சுட்டார்னா, அவள் இதுகுக் குறுக்கே நிக்கப் போறதில்லே. ‘

‘நீர்தான் ஒரு வழி சொல்லுமேன்! ‘

‘உங்க ரெண்டு பேருக்காகவும் பிரார்த்தனை பண்றேன். அண்ணா மனசு மாறணும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன். இதைத் தவிர வேற எந்த வழியும் இருக்கிறதாத் தெரியல்லே. ‘

‘வெறும் பொண்ணு பார்க்கிறதோட நின்னு போயிட்டாத் தேவலை. கல்யாணத்துக்குத் தேதி குறிச்சுட்டா என்ன செய்யறது ? செய்யக் கூடாததைத்தான் செய்யவேண்டி வரும். ‘.

‘என்ன சொல்றேள் நீங்க ? ‘

‘அப்போ பார்த்துக்கலாம். அதைப் பத்தி இப்போ என்ன ? ‘ என்ற ராகவன் பதில்எழுத உட்கார்ந்தான்.

‘அப்போ, நீங்க எழுதிண்டிருங்கோ…நான் இப்படி கோவில் வரைக்கும் போயிட்டுபதினஞ்சு நிமிஷத்துல வறேன்.. ‘

*********

அன்றிரவு ஒன்பது மணிக்குத்தான் சொர்ணத்தால் ராகவனின் கடிதத்தை மீனாவிடம் கொடுக்க முடிந்தது. சுமார் அரை மணி கழித்து, ‘ என்ன எழுதி யிருக்கார் ? ‘ என்றுஅவன் அவளிடம் விசாரித்தான்.

‘சொர்ணம்! நீ எனக்கு தெய்வம் மாதிரி! கடிதத்துலே எழுதி யிருக்கிறதை உங்கிட்ட சொல்றதைப் பத்தி எனக்கு ஆட்சேபணை இல்லே. ஆனா, உயிரே போறதாயிருந்தாலும் நீ அதைப் பத்தி இங்கே மூச்சு விடக்கூடாது! ‘

சொர்ணத்துக்குப் பட பட வென்று வந்தது.

‘நீ சொல்லாமலே எனக்குப் புரியறது… அந்த மாதிரி அசட்டுத்தனம் எதுவும் பண்ணி இந்தக் குடும்பத்துக்குத் தீராப் பழியைத் தேடி வெச்சுடாதே! ஓடிப் போய் சுகமாவாழற தெல்லாம் சினிமாவிலேதான் நடக்கும்…. நிஜ வாழ்க்கையிலே அப்படி இல்லே. ‘

மீனாவின் கண்கள் அவளையும் அறியாமல் தாழ்ந்தன. அவள் சமாளித்துக்கொண்டு சிரித்தாள்: ‘சொர்ணம்! அப்படி யெல்லாம் நீ கற்பனை பண்ணிக்காதே. போலீசுக்கு ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுக்கச் சொல்லி யிருக்கார். அவ்வளவுதான். ‘

‘சந்தி சிரிக்குமே, மீனா! ‘

‘சிரிக்கட்டுமே.! யாருக்கென்ன ? தான் பெத்த பொண்ணோட சந்தோஷத்தைவிட தன் போலிக் கவுரவம் பெரிசுன்னு நினைக்கிறவாளைப்பத்தி எனக்கு அக்கறை இல்லே. ‘

‘அப்படின்னா ? அப்பா மேலே கேஸ் போட்ற அளவுக்குத் துணிஞ்சுட்டியா ? ‘

‘பின்னே, என்ன செய்யறது, சொர்ணம் ? ‘

பல ஆண்டுகளுக்கு முன் தான் பார்த்த ‘தியாக பூமி ‘ படமும், அதைத் தொட ர்ந்து, ‘நானும் பார்த்தாலும் பார்த்தேன், அம்மா மேலே கேஸ் போட்ற அப்பாவை இப்பதான்பார்த்தேன் ‘ என்று குழந்தை சாரு கோர்ட்டில் சொன்னதும் அவன் நினைவுக்கு வந்தன. ‘கடவுளே! அப்பாவும் பெண்ணும் ஒருவர் மீதொருவர் கேஸ் போடும் காலமா இது! ‘

‘மனுஷாளோட முயற்சிகளுக் கெல்லாம் அப்பாற்பட்ட ஒண்ணு இருக்கு,இல்லியா, மீனா ? ‘

‘நான் மறுக்கல்லியே, சொர்ணம் ? அதுக்காக நாம முயற்சியே பண்ணாமஇருக்கணும்கறயா ? ‘

‘உன்னோட பேசி ஜெயிக்க என்னால முடியாது, மீனா! நீயும் குழந்ததைஇல்லே… இருபத்து மூணு வயசு ஆறது. எதையும் யோசிச்சுச் செய்… ‘

மீனா இதற்குப் பதில் சொல்லவில்லை.

*********

அன்று காலை காப்பி குடிப்பதற்காகச் சமையலறைக்கு வந்த சுப்பராமன், தம்மைப்பார்த்துவிட்டுக் குற்ற உணர்வோடு பார்வையைத் தாழ்த்திக்கொண்ட சொர்ணத்தின் தோளைத் தொட்டு, ‘என்னை மன்னிச்சுக்கோ, சொர்ணம்! நீ என் சொந்தத் தம்பி மாதிரி. ஏதோஆத்திரத்துலே பேசிட்டேன். அதுக்கெல்லாம் அர்த்தமில்லே. மனசுலே வெச்சுக்காதே, ‘ என்றதும், சொர்ணம் துணுக்குற்று எழுந்து நின்றான்.

‘என்ன வார்த்தை சொல்றேள், அண்ணா ? நான் வந்து உங்களை மன்னிக்கிறதா ?உங்களுக்கு இல்லாத உரிமையா ? ‘

‘மீனா என்ன சொல்றா ? பையனைப் பிடிச்சிருக்காமா ? ‘

‘தெரியாது, அண்ணா. அவ எதுவும் சொல்லல்லே. ஆனா அவளுக்குப் பிடிக்கல்லேன்னுதான் தெரியறது…. நானும் அவளை எதுவும் கேக்கல்லே. ‘

‘கல்யாணமானா எல்லாம் சரியாப் போயிடும்… நாலு எழுத்துப் படிச்சுட்டாலே இந்தக் காலத்துப் பொண்ணுகள் தலை தெறிச்சுப் போறதுகள்! ‘ என்று சொன்னபடி அவர்சென்றார். அவர் போவதைப் பார்த்தபடி சொர்ணம் திகைத்து நின்றான். ராகவனுக்கும் மீனாவுக்குமிடையே தான் தபால்காரன் வேலை செய்து வருவது தெரிந்தால் அவருக்கு எப்படிஇருக்கும் என்று நினைத்துப் பார்த்தபோது அவன் மனம் திடுக்கிட்டது.

*********

ராகவனின் முகத்தைப் பார்க்கவே சொர்ணத்துக்கு வேதனையாக இருந்தது.

‘உங்க யோசனைப்படி நடந்ததாலதான் இந்த்ப் பிரச்னையே இப்போ கிளம்பி இருக்கு. என் யோசனைப்படி போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்திருந்தா, இதைத் தவிர்த்திருக்கலாம். ‘

‘தவிர்த்திருக்கலாம்தான்! ஆனா, எங்க அண்ணா குடும்பத்து மானம் கப்பலேறி யிருக்குமே!. ‘

‘இப்ப மட்டும் என்ன ? கப்பலேறாமலா இருக்கப் போறது ? அதை விட இதுமோசமா யிருக்கப் போறது. ‘

‘என்ன சொல்றேள் நீங்க ? ‘

‘நான் சொல்லப் போறதை நீங்க பதறாம கேக்கணும். உங்க ஒத்தாசை இனிமேதான் அதிகமாத் தேவைப்பட்றது. ‘

‘என்ன செய்யணும் ? ‘

‘ ‘நான் செய்யச் சொல்லப்போற காரியம் ரொம்பத் தப்பான காரியந்தான். ஆனாலும் அதைச் செய்யறதைத் தவிர வேறே வழியில்லே… ‘

‘சொல்லுங்கோ. ‘

‘நான் தப்பான வழிக்குப் போறவனில்லே. மீனா என்னை நாலு பேர் அறியக் கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் அவளுக்கும் அவ மானத்துக்கும் ஒரு சின்னத் தீங்கு கூட வராமபார்த்துக்குவேன்… இந்த விஷயத்துலே நீங்க என்னை நம்பணும்…. பார்வையால கூட கண்ணியமா நடந்துக்குவேன்… நான் உங்களைச் செய்யச் சொல்லப் போற காரியம் கொஞ்சம் சிக்கலானதுதான். அதனாலதான் இவ்வளவு பெரிய பீடிகை போட வேண்டியிருக்கு… ‘

‘அவளைக் கடத்திண்டு போகப் போறேளா ? ராம, ராம! அடுத்த வெள்ளிக்கிழமைஅவளுக்குக் கல்யாணம். ‘

‘ ‘மிஸ்டர் சொர்ணாம்! கடத்திண்டு போறதுன்னு ஒரு தப்பான வார்த்தை சொல்லிட்டேளே ? அவளே விரும்பி என்னோட வரத் தயாரா யிருப்பா…யாரும் எதுவும் செஞ்சுக்க முடியாது.சட்டமே எங்க பக்கம் இருக்கு. ஒரு பொண்ணை வற்புறுத்திக் கட்டிக் குடுக்கிற வழக்கம் என்னிக்குத்தான் நிக்குமோ, தெரியல்லே… ஊருக்கு ஒரு பாரதியார் பிறக்கணும் போல இருக்கு! ‘

‘மீனா சம்மதிக்கணுமே ? ‘

‘சம்மதிப்பா… ‘

‘எனக்குத் தோணல்லே. ‘

‘அபசகுனம் மாதிரி அஸ்து பாடாதேயும். நான் விவரமா லெட்டர் எழுதித் தறேன்.காட்டிட்டு உடனே பதில் வாங்கிண்டு வாரும். பதில் எழுதச் சந்தர்ப்ப மில்லேன்னா, ‘ஓரலா ‘சம்மதம் வாங்கிண்டு வந்து சொல்லும், போறும்… ‘

‘மிஸ்டர் ராகவன்! இதெல்லாம் படிச்சவா செய்யற காரிய மில்லே! ‘

‘படிப்புக்கும் இதுக்கும் சம்பந்தமில்லேங்காணும்! இந்த மாதிரி விஷயங்களுக்காகக்கொலையே கூடச் செய்யறா, சுவாமி! ‘

‘சிவ சிவா! வாயாலே கூடச் சொல்லாதேயும்… வயித்தை என்னவோ பண்றது… ‘

‘அவ்வளவு மட்டமா என்னைப்பத்தி எண்ணாதேயும்… ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.அவ்வளவுதான். ‘

‘சொல்லுங்கோ. உங்க ப்ளான்தான் என்ன ? ‘

‘நாளைக்கு ராத்திரி பன்னண்டு மணிக்கு நான் காரை எடுத்துண்டு வருவேன். மீனா தனக்கு வேண்டிய சில அத்தியாவசியமான சாமான்களோட தயாரா யிருக்கணும்… நான் அவளை அழைச்சுண்டு போய் – பழநியிலே என் தங்கை இருக்கா – அவ கிட்டே விட்டுட்டு ராவோடராவாத் திரும்பிடுவேன். .. அதனாலே மீனாவையும் என்னையும் சம்பந்தப் படுத்தி யாரும் வம்பு பேச இடமில்லே. ‘

‘உங்க தங்கை சம்மதிச்சாளா ? ‘

‘ஓ! ‘

‘அவளுக்கும் குண்டு தைரியந்தான். ‘

ராகவன் சிரித்தான். சொர்ணம் தொடர்ந்தான்: ‘இந்த அக்கிரமத்தை யெல்லாம்பார்த்துண்டு என்னைக் கையைக் கட்டிண்டு உக்காந்திருக்கச் சொல்றீரா ? ‘

‘கையைக் கட்டிண்டு உக்காந்திருக்கிறதோட உம்ம வேலை முடியல்லே. நீரும்எங்களோட பழநிக்கு வந்துட்டுத் திரும்பணும்… ‘

‘நான் ஏன் வரணும் ? ‘

‘என் மேலே இருக்கிற சந்தேகத்தைத் தீர்த்துக்கிறதுக்காகத்தான்! மீனா பத்திரமான இடத்துலே இருக்கான்னும், அவளும் நானும் கண்ணியமானவான்னும் தெரிஞ்சா உமக்குநிம்மதியா யிருக்காதா ? ‘

‘கூட வர்றதுனால மட்டும் உங்க கண்ணியத்தை நான் தெரிஞ்சுண்டுட முடியும்னுநீங்க எதிர்பார்க்கிறது எனக்கு வேடிக்கையா இருக்கு. நான் உங்க கூட இல்லாத நேரங்கள்எவ்வளவோ இருக்கு. இல்லியா ? ‘

‘நியாயமான கேள்விதான். நான் உங்களுக்குச் சத்தியம் வேணும்னாலும் பண்ணித்தறேன். அதோ, என் மேசை மேலே இருக்கிற சுவாமி விவேகானந்தர் படத்தைச் சாட்சியாவெச்சு நான் உங்களுக்கு வாக்குறுதி குடுக்கறேன். மீனாவுக்குச் சிறு தீங்கும் நேராது… ‘

‘நீங்க இவ்வளவு சொல்றச்சே, உங்களோட பழநி வரைக்கும் வந்து காவல் காக்கிறஉத்தேசம் எனக்கில்லே. பெரியவா சொல்லுவா, ‘மதில் காவலோ, மனசு காவலோ ‘ன்னு. மீனாவும் அப்படி ஒண்ணும் அசடு இல்லே. ‘

‘சரியாச் சொன்னேள்.. இன்னொரு விஷயம் இருக்கு. அதுக்கு நீங்க சம்மதிச்சாத்தான் இந்தத் திட்டம் இடைஞ்சல் இல்லாம நடக்கும்…. ‘

‘என்ன செய்யணும் ? ‘

‘தூக்க மாத்திரை நாலு தரேன். உங்க அண்ணாவும் அவர் மனைவியும் நான் காரைஎடுத்துண்டு வந்து மீனாவைக் கூட்டிண்டு போகும்போது ஆழ்ந்து தூங்கணும், இல்லையா ? அதுக்குத்தான்… என்ன அப்படிப் பாரர்க்கிறீர் ?… நான் ஒண்ணும் அயோக்கியனில்லே…. ஆளுக்குரெண்டு மாத்திரை பாலிலே போட்டுக் குடுத்துடும்… தூக்கம் கொஞ்சம் பலமா வரும். அவ்வளவுதான்… பயப் பட்றதுக்கு ஒண்ணுமில்லே… ‘

‘இதெல்லாம் ரொம்ப மோசடியான காரியமா யிருக்கு. நான் சம்மதிச்சாக் கூட, மீனா இதுக்குச் சம்மதிக்கவே மாட்டா. ‘

அட, மீனா சம்மதிச்சுட்டான்னு வெச்சுண்டு பேசுவோமே!… நான் சொன்னபடி ராத்திரி பாலிலே கலந்து குடுத்துடும். ‘

‘அவா ரெண்டு பேரும் பால் குடிக்கிற வழக்கமில்லே. ‘

‘அப்படியானா, பொடி பண்ணி ரசத்திலேயோ, மோரிலேயோ போட்டுச் சாப்பாட்டிலே கலந்துடும்… அந்த மாதிரி மூஞ்சியை வெச்சுக்காதேயும், சொர்ணம்… இந்தக் கல்யாணத்திலேருந்து தப்பறதுக்காக மீனா கிணத்துலே, குளத்துலே விழுந்து உயிரை விட்டா அந்தப் பாவம் உமக்குத்தானே ? ‘

‘மிஸ்டர் ராகவன்! எனக்கு ரொம்ப நடுக்கமா யிருக்கு. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணச் சொல்றேள்… இதுக்கு நான் சம்மதிக்க முடியாது.. உயிரை விட்டுட்ற அளவுக்கு மீனா அசடு இல்லே. தனக்குக் கிடைக்காத ஒண்ணுக்காக உயிரை விட்றதைவிட கிடைச்ச ஒண்ணை வெச்சுண்டு திருப்திப் பட்டுக்கிற புத்திசாலி அவ! ‘

‘உமக்கு அந்த அனுபவம் கிடைக்கல்லே, சொர்ணம்! ‘இட் ஈஸ் பெட்டெர் டு ஹேவ் லவ்ட் அண்ட் லாஸ்ட் தேன் நெவெர் டு ஹேவ் லவ்ட் அட் ஆல் ‘ னு இங்கிலீஷ்லேசொல்லுவா. ஆனா நாங்க லூஸ் பண்றதுக்குத் தயாரா யில்லே. ஒரு பொண்ணு மேலே ஒருஆணுக்கு ஏற்பட்ற அன்பை உம்ம வாழ்க்கையிலே ஒரு முறையாவது நீர் உணர்ந்திருந்தா, எங்க ஏமாற்றம் உமக்குப் புரியும்… நீர் பிரும்மசாரியாவே உம்ம காலத்தை கழிச்சுட்டார்… ‘

சொர்ணத்தின் கண்கள் சிவந்தன: ‘அப்படிச் சொல்லாதங்கோ, சார்! நானும் மனுஷந்தான்… எனக்கும் அந்த அனுபவம் உண்டு. பார்க்கப்போனா, நான் குடுமியை எடுத்துட்டுகிராப்பு வெச்சுண்டதே ஒரு பொண்ணுக்காகத்தான்! ‘

சொர்ணம் பழைய நினைவுகலில் லயித்தவனாய்ச் சற்று நேரம் சும்மா இருந்தான்.அவன் கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதைக் கண்டதும் ராகவன் துணுக்குற்றான்.

‘வெறும் புறக் கவர்ச்சியைப் பத்திச் சொல்றேன்னு நினைக்காதீர். உடம்புக்கு அப்பால் – ஏன் ? மனசுக்கும் கூட அப்பால் – ஆத்மான்னு ஒண்ணு இருக்கோல்லியோ ? அந்த ஆத்மார்த்த ரீதியிலே ஒரு பொண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படக்கூடிய தூய்மையான பிணைப்பைப் பத்திச் சொல்றேன்… ‘

‘நீங்க ஏன் அவளைக் கல்யாணம் பண்ணிக்கல்லே ? ‘ – சொர்னம் கண்களைத் துடைத்துக்கொண்டு சிரித்தான். ‘ நாலு நாளுக்கு முந்தி கூட, ‘நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கல்லே ‘ ன்னு மீனா கேட்டா. ஏதோ பதில் சொல்லி மழுப்பிட்டேன். நான் ஏதோ அந்தப் பொண்ணையே மனசிலே வெச்சுண்டு இப்படியே இருந்துட்டேன்னு என்னைப் பத்தி ஒசத்தியாச் சொல்லிக்கல்லே. என்னமோ தெரியல்லே. ஒரு விரக்தியிலே முப்பத்தஞ்சு வயசு வரைக்கும் இருந்துட்டேன். அதுக்கப்புறம் அந்த எண்ணமே தோணல்லே. அன்பு செலுத்துறதுக்கு அண்ணாவும் அவர் மனைவியும் இருக்கிறப்போ அது அவசியமாவும் படல்லே…இப்படியே இருந்துட்டேன்… ‘

‘நீங்க ஏன் அந்தப் பொண்ணைப் பண்ணிக்கல்லே ? ‘

‘அந்தப் பொண்ணுதான் என்னைப் பண்ணிக்கல்லே…. பண்ணிக்கல்லேன்னு சொல்றதை விட, பண்ணிக்க முடியாம போயிடுத்துன்னு சொல்றதுதான் சரி! …நாலு வீடு தள்ளி கோமதின்னு ஒரு பொண்ணு இருந்தா. நல்ல, படிச்ச குtuம்பம். ஒரு நாள் அவ, ‘ நீ குடுமியை எடுத்துடேன். உன் மூஞ்சியை அந்தக் குடுமிதான் கெடுக்கிறது. கிராப்பு வெச்சிண்டா நீ ரொம்ப அழகா யிருப்பே ‘ ன்னு சொன்னா. அப்படிச் சொன்னப்போ அவளுக்குப் பதினஞ்சு வயசு இருக்கும். எனக்குப் பத்தொம்பது வயசு. இன்னொரு நாள், ‘பிரைவேட்டாவாவது படிச்சு நீ மெட்ரிகுலேஷன் தேறிடேன் ‘ னு சொன்னா. எனக்கு ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சல். ‘ கிராப்பு வெச்சிண்டு, மெட்ரிகுலேஷனும் படிச்சுட்டா, நீ என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா ‘ ன்னு பளிச்னு கேட்டுட்டேன்!… ‘- இளமை திரும்பப் பெற்றவன் போல் முகம் சிவக்கச் சில விநாடிகள் சொர்ணம் புன்னகையோடு அமர்ந்திருந்தான்.

‘அதுக்கு அவ என்ன சொன்னா ? ‘

‘அதுக்கு அவ என்ன சொன்னா ? ‘ என்று கடந்து சென்றதை நினைவுபடுத்திக் கொள்ளுபவன் போல் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் சொர்ணம்.

‘ஒரு நிமிஷம் வெக்கப்பட்டுண்டு நின்னா. மூஞ்சி ரத்தமாச் செவந்து போச்சு. ‘அதுக்குநாலு வருஷமாவது ஆகுமே. அது வரைக்கும் எங்காத்துலே என்னை வெச்சுக்க மாட்டாளே ? ‘ அப்படின்னு வேதனையோட சொன்னா. ‘ சிரமப்பட்டு ராவும் பகலும் படிச்சு இன்னும் சீக்கிரமாவே படிப்பை முடிச்சுட்றேன். அது வரைக்கும் காத்திண்டிரு ‘ன்னு சொன்னேன். ‘எவ்வளவு சிரமம் எடுத்துண்டாலும், மூணு வருஷமாவது ஆகும்… அது வரைகும் தாக்குப் பிடிக்கிறது கஷ்டமாச்சே ? ‘ன்னா. ‘இருந்தாலும், முயற்சி பண்றேன் ‘னா. மறு நாளே நான் கிராப்பு வெச்சிண்டேன். எங்கப்பா, ‘அப்படியே போயிடு ‘ன்னுட்டார். கிளம்பிட்டேன். போறதுக்கு முன்னாலே கோமதியைப் பார்த்துச் சொல்லிண்டேன். ‘மெட்ரிகுலேஷன் படிச்சுட்டு வறேன் ‘னு சொன்னேன். தன்னாலே முடியற வரைக்கும் அப்பா அம்மா கெடுபிடியைத் தாக்குப் பிடிக்கிறதாச் சொன்னா. ‘லெட்டர் கிட்டர் எழுதக்கூடாது ‘ன்னு கண்டிப்பாச் சொல்லிட்டா. நியாயம்னுதான் பட்டுது. இந்த ஊருக்கு வந்து ஓட்டல்லே வேலைக்குச் சேர்ந்தேன். மூணே வருஷத்துலே மெட்ரிகுலேஷன் பரீட்சை எழுதினேன். ரிசல்ட் வர்ற வரைக்கும் பொறுக்கல்லே. ஊருக்குப் புறப்பட்டுட்டேன்… எங்கப்பா நான் கொள்ளி போடாமலே போய்ச் சேர்ந்துட்டிருந்தார்….முதல்லே கோமதியாத்துக்குத்தான் போனேன். கோமதியோட அம்மா கோமதி பிரசவத்துக்காக வரப்போறதாச் சொன்னா… எனக்கு உலகமே தலைகீழாச் சுத்தித்து…மாப்பிள்ளை யாரு, என்னன்னு சம்பிரதாயமான கேள்வி கூடக் கேக்கத் தோணாம அடுத்த வண்டியிலேயே புறப்பட்டுட்டேன்…. அந்த ஷாக்குலேருந்து விடுபட்றதுக்கு எனக்கு ஏழெட்டு வருஷமாச்சு….மெட்ரிகுலேஷன் பாஸ் பண்ணிட்டு செர்வர் வேலை செய்யறது கெளரவக் குறைச்சல்னு கூடத் தோணாம அந்த வேலையிலேயே தங்கிட்டேன். … எல்லாம் பழங்கதை… ‘

ராகவன் அசையாமல் உட்கார்ந்திருந்தான். சொர்ணம் தொடர்ந்தான்.

‘எதுக்காக இவ்வளவும் சொல்றேன்னா, உங்க மனசைப் புரிஞ்சுக்கிற தகுதி என்னை விட வேற யாருக்கும் இருக்க முடியாதுங்கிறதை நீங்க புரிஞ்சுக்கணும்னுதான்…நானும் மனுஷன் தான். மரக்கட்டை இல்லே! ‘

‘இவ்வளவு தூரம் பேசற நீங்களே எங்க திட்டத்துக்கு உதவி செய்யல்லேன்னா,வேற எப்படி நாங்க எங்க காரியத்தைச் சாதிக்கிறது ? ‘

சொர்ணம் இதற்கு விடை சொல்லாமல், சில நிமிடங்கள் சும்மா இருந்தான். மேலும்கீழும் ஏறி இறங்கிய அவன் புருவங்களினின்று அவனது சிந்தனையின் தீவிரப் போக்கை உணர்ந்து கொண்டவனாய், சாதகமான பதிலே அவன் வாயிலிருந்து வரவேண்டும் என்னும் வேட்கையோடுராகவன் அவன் முகத்தயே பார்த்தவாறு பொறுமையாக இருந்தான்.

‘சரி, சார்…. உங்க இஷ்டப்படியே ஆகட்டும். ஆனா, ஒண்ணு. மீனா கொஞ்சம் பயந்தாலோ, தயங்கினாலோ கூட நான் இதிலே ஒத்துழைக்க முடியாது. உங்க திட்டத்தை மீனா எந்த அளவுக்கு வர்வேற்கிறாங்கிறதைப் பொறுத்துத் தான் இருக்கும் நான் உதவறதும் உதவாததும். ‘

‘அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். மீனா கண்டிப்பாச் சம்மதிப்பா. ‘

மாத்திரைகளை வாங்கிக்கொண்ட சொர்ணம் ஒரு பெருமூச்சுடன் புறப்பட்டான்.

*********

சுப்பராமனும் அலமேலுவும் புடைவைக் கடைக்குச் சென்றிருந்த சமயம் பார்த்துச்சொர்ணம் மீனாவிடம் ராகவனின் கடிதத்ததைப் பற்றி விசாரித்தான். மீனா பதில் சொல்லாமல்கடிதத்தையே அவனிடம் நீட்டினாள்.

‘வேண்டாம், வேண்டாம். ராகவன் எங்கிட்ட எல்லாம் சொல்லியாச்சு. துக்க மாத்திரைகூடக் கொடுத்திருக்கார். நீ என்ன செய்யப்போறே ? ‘ – ‘அவன் சொல்லியிருக்கிறபடிச் செய்துவிடாதே ‘ என்னும் வேண்டுகோள் படபடப்பு நிறைந்த அவன் சொற்களில் தொக்கி நின்றது.

‘உன் மனச்சாட்சிக்கு விரோதமான காரியந்தான் இது! இருந்தாலும் நீ எனக்காகஇதைச் செஞ்சுதான் ஆகணும், சொர்ணம்! ‘

சொர்ணம் திகைத்துப் போய், வாயடைத்து நின்றான். தன் சொந்த மகள் இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வந்து அதைத் தன்னிடமே சொல்லுகையில் ஒரு தகப்பனுக்கு ஏற்படக்கூடிய திகைப்பும் அதிர்ச்சியும் அவனை ஆட்கொண்டன.

‘என்ன சொல்றே, மீனா! இதுக்கு நீ சம்மதிக்கப் போறியா ? உன்னைப் படிக்க வெச்சது இதுக்குத்தானா ? நீ இதுக்குச் சம்மதிக்க மாட்டேங்கிற தைரியத்துலே நான் ராகவன் கிட்ட ‘சரி ‘ன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். உன்னைத்தான் நம்பி யிருக்கேன், மீனா. இப்படிப்பட்ட ஒரு துரோகத்தை நான் இந்தக் குடும்பத்துக்குச் செய்யும்படியா வெச்சுடாதே… இதிலேருந்து நான் ஒதுங்கி யிருக்க வேண்டியதுதான் நியாயம். ‘ – சொர்ணம் மூச்சு விடாமல் பேசினான்.

மீனா அவனைப் பரிதாபகரமாய்ப் பார்த்தாள். ‘நீ அழுதா என்னாலே தாங்க முடியாது, அது, இதுன்னு அன்னிக்குச் சொன்னியே! அதெல்லாம் பொய்தானே ? சந்தர்ப்பம் வரும்போதுதானே தெரியும், யாராருக்கு எவ்வளவு அன்புன்னு! ‘ – மீனா கொடுமையாகப் பேசி அவனதுமனத்தின் வலுவற்ற பகுதியைச் சீண்டினாள். அவள் எதிர்பார்த்தபடியே சொர்ணத்தின் முகம் வாடிப் போயிற்று.

‘இப்படி யெல்லாம் கொடூரமாப் பேசிப் பேசித்தான் நீ என்னை இந்த விஷயத்துலே சம்பந்தப்படுத்திட்டே. நான் கொஞ்சம் கல் மனசா யிருந்திருக்கணும். இல்லாததனாலதான் விஷயம் இவ்வளவு மோசமாயிடுத்து. ‘

‘இப்ப என்ன மோசமாயிடுத்து, சொர்ணம் ? பிடிச்ச ஒருத்தனோட நான் போறது மோசம்னா, பிடிக்காத ஒருத்தனோட போறது விபசாரமில்லியா ? ‘

சொர்ணம், ‘சிவ, சிவா! ‘ என்றபடி தன் காதுகளைப் பொத்திக்கொண்டான்: ‘ஒரு படிச்ச பொண்ணு வாயிலே வர்ற வார்த்தையா இது ?… நீ பேசிப் பேசியே என்னைப் பனியவெச்சுடலாம்னு நினச்சிண்டிருக்கே! இந்தத் தடவை நான் ஏமாறப் போறதில்லே…. பெத்தஅப்பா அம்மா ஒரு நாளும் உனக்குக் கெடுதல் பண்ண மாட்டா… ‘

‘சரி, சொர்ணம்! நமக்குள்ளே அநாவசியமா வாக்குவாதம் எதுக்கு ?… உன் உபதேசத்தை எல்லாம் நிறுத்திக்கோ!… கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு, நான் என் திட்டப்படி தான் நடக்கப் போறேன். அப்பா அம்மா கண்ணுலே படாம நானே போயிக்கிறேன். நீ காட்டிக்குடுத்தாலும் எனக்கு அதைப் பத்தி அக்கறை இல்லே. இருக்கவே இருக்கு கிணறு, குளம்,குட்டை எல்லாம். என் மாதிரிப் பொண்ணுகளுக்காகத் தானே எல்லாம் கட்டி வெச்சிருக்கா,பெரியவா ? ‘

சொர்ணம் விதிர்விதிர்த்துப் போனான். ‘இவள் செய்தாலும் செய்வாள் ‘ என்று அவனுக்குத் தோன்றியது. இருந்தாலும், கடைசியாக ஒரு தடவை முயன்று பார்த்துவிடும் எண்ணத்துடன், ‘மீனா! நீ இவ்வளவு அசடா! இருபத்துமூணு வருஷத்துப் பந்தத்தையும் ஒரே நொடியிலே உதறிட்டுஎவனையோ நம்பிக் கிளம்பிப் போறேன்கிறியே ? ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கல் மனசு இருக்கமுடியுமா!… அவன் உன்னைக் கைவிட மட்டான்னு என்ன நிச்சயம் ? ‘ என்று மீனாவை அவன் அதட்டுகிற குரலில் வினவினான்.

‘அப்பா அம்மா பார்த்துப் பண்ணி வைக்கப் போறதும் எவனோ ஒருத்தன் தானே ? அவன் மட்டும் என்னைக் கைவிட மட்டான்னு என்ன நிச்சயம் ?… அவனை நம்பி அப்பா அம்மாவை விட்டுட்டுக் கிளம்புற ஒரு பொண்ணு கல் மனசுக்காரி இல்லேன்னா, தானே தேடிண்ட ஒருத்தநோட கிளம்பிப் போயிட்ற பொண்ணு மட்டும் கல்மனசுக்காரி ஆயிடுவாளா ? ‘

சொர்ணம் விட்ட பெருமூச்சு மலைப் பாம்பின் சீறலைப்போல் இரைந்து வெளிவந்தது. வெகு நேரம் அவன் மெளனமாக நின்றான். மீனாவும் நீதிபதியின் தீர்ப்பை எதிர்நோக்கும் குற்றவாளியின் கவலையுடனும் பரபரப்புடனும் அவனையே பார்த்தபடி நின்றாள்.

‘பழநிக்குப் போனதுக்கு அப்புறம் அப்பாவுக்கு எழுதுவியா ? ‘

‘ஆமா. கொஞ்ச நாள் கழிச்சு எழுதுவேன். குறைஞ்சது ஒரு மாசமாவது கழிஞ்ச அப்புறம்! ‘

‘ராகவன் இங்கே தான் இருப்பாரா ? ‘

‘ஆமா. தனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லிடுவார். அப்பா-அம்மா மனசு மாறி இதை நடத்தி வைக்கிற வரைக்கும் நாங்க காத்திண்டிருப்போம். ‘

‘மீனா! உங்க அப்பாவை விட்டுத்தள்ளு. அவர் ஆண்பிள்ளை. உங்க அம்மா மனசு என்ன பாடு படும் ? அதை நினைச்சுப் பார்த்தியா ? ‘

‘எனக்குப் பிடிச்ச ஒருத்தருக்கு நான் வாழ்க்கைபட்றதைத் தடுத்து எனக்குப் பிடிக்காத ஒருத்தனுக்கு என்னைப் பண்ணிக் குடுத்தா, என் மனசு என்ன பாடு படும்னு நினைச்சுப்பாக்காதவா மனசு என்ன பாடு பட்டா எனக்கென்ன வந்தது, சொர்ணம் ? ‘

சொர்ணம் மறுபடியும் மெளனமானான். சற்றுப் பொறுத்து, ‘அந்தப் பகவான் மேலே பாரத்தைப் போட்டுட்டு உங்க இஷ்டப்படியே செய்யறேன். நீ இதுக்காகக் கிணத்துலே குளத்திலே விழ வேண்டாம். அந்தப் பாவமும் எனக்குத்தானே ? அந்தப் பாவத்துக்கு இந்தப் பாவம் தேவலை, ‘ என்ற அவன் தன்னிரு கக்களையும் கூப்பியவாறு நின்றான். அவன் கண்களில் நீர் முட்டி நின்றது.

*********

சுப்பராமன் காலையில் கன் விழித்தபோது, மணி ஏழு. என்றுமே தமக்கு அவ்வளவு தூக்கம் வந்ததில்லையே என்று வியந்தவராய் அவர் சோம்பல் முறித்தவாறு எழுந்து கூடத்துக்கு வந்தார். ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடும் அலமேலு கூடத் தூங்கிக்கொண்டிருந்தாள். சமையலறை விளக்குக் கூட எரியாதிருந்த நிலை அவருள் ஒரு திகிலைக் கிளர்ந்தெழச் செய்தது. ‘சொர்ணம், சொர்ணம்! ‘ என்று அவர் இரைந்து குரல் கொடுத்தார். பதில் இல்லை. மீனாவின் அறைக்குச் சென்று பார்த்தார். மீனாவையும் காணவில்லை. அவர் குழப்பத்துடனும் பரபரப்புடனும் அந்த வீடு முழுவதும் சுற்றிப் பார்த்தார். பின்னர் திகிலுடன் தம் படுக்கை யருகே சென்று நின்றார். படுக்கையின் அருகில் இருந்த நாற்காலியில் ஒரு காகிதம் நான்காக மடித்து வைக்கப் பட்டிருந்தது. அவர் நடுங்கும் கைகளால் அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தார்.

சொர்ணம்தான் அதை எழுதி யிருந்தான். முதலிலிருந்து முடிவு வரை எதையும் ஒளிக்காமல் தான் அவருக்குச் செய்துவிட்ட துரோகச் செயலை அவன் விளக்கி மன்னிப்புக்கோரியிருந்தான். பழநியில் மீனாவின் இருப்பிடத்தையும் அவன் குறிப்பிட்டிருந்தான். கடித்த்தின் கடைசிப் பகுதி அவரைத் துடிதுடிக்கச் செய்துவிட்டது.

: ‘அண்னா! நான் உங்களுக்குச் செய்த துரோகத்தைக் கடவுள் கூட மன்னிக்க மாட்டார். சின்னஞ்சிறு வயதிலிருந்து நான் தூக்கிச் சுமந்த குழந்தைக்காக இந்தப் பாவத்தைச் செய்யத் துணிந்தேன். காரணம் எதுவாக இருந்தாலும், பாவம் பாவம்தான் என்பதை நான் மறுக்கவில்லை.

யாருடைய முகத்திலும் விழிக்க எனக்கு விருப்பமில்லை. எந்த முகத்தோடு நான் உங்களைப் பார்ப்பேன் ? மன்னிக்க முடியாத இரண்டகச் செயலைப் புரிந்துவிட்டு, ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி நான் உங்களிடம் எப்படி நடிப்பேன் ? முப்பத்திரண்டு வருஷங்களாக நிழல் போல் உங்களோடும் மாமியோடும் ஒட்டிப் பழகிவிட்டுக் கடைசியில் இப்படிப்பட்ட ஒரு துரோகத்தைத்தான் உங்களுக்கு என்னால் செய்ய முடிந்தது என்னும் நிலை என்னை எப்படிப்பட்ட கழிவிரக்கத்திலும் வேதனையிலும் ஆழ்த்துகிறதென்பதை நீங்கள் அறிய மாட்டார்கள்.

இந்தத் துரோகத்தை நான் செய்திராவிட்டால், இதைவிட மோசமான ஒரு துரோகத்துக்கு வித்திட்ட பாவியாகி யிருந்திருப்பேன். கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்கி நீங்கள் இருவரும் நோற்காத நோன்பெல்லாம் நோற்று, சாதி சமய பேதம் பார்க்காது நாகூருக்குச் சென்று அல்லாவையும், வேளாங்கண்ணிக்குச் சென்று மேரியையும் வேண்டிக்கொண்டு, திருமணமாகி ஏழு ஆண்டுகள் கழித்துப் பிறந்த ஒரே பென் குழந்தை தனக்குப் பிடிக்காத பலவந்தத் திருமணத்திலிருந்து தப்புவதற்காகக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளுவதற்கு இருந்தாள். நீங்கள் உடனே நினைப்பீர்கள், ‘ இந்தச் சொர்ணத்தை அப்படியெல்லாம் பயமுறுத்தி, மீனா தன் திட்டத்துக்குப் பணிய வைத்திருக்கிறாள் ‘ என்று. கிடையவே கிடையாது. மீனாவின் சுபாவங்களைப் பற்றி ஒதுங்கியிருந்த உங்களைவிடவும் ஒட்டிப் பழகிய எனக்குத்தான் அதிகமாய்த்தெரியும். இப்படிச் சொல்லுவதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். அந்தக் கோரத்தைவிட, இந்தக் கோரம் மேல் என்பதாலேயே நான் அவர்களுக்கு உதவி செய்தேன். ஆனாலும், தப்பு தப்புதான். துரோகம் துரோகம்தான்….

பொறுக்க முடியாத வயிற்றுவலி காரணமாக நம் தோட்டத்துக் கிணற்றில் விழுந்து தர்கொலை செய்து கொள்ளுவதாய்ப் போலீசுக்கு எழுதிப் போட்டுவிட்டேன். அதனால், நீங்களே தைரியமாக என் தற்கொலையைப்பற்றிப் போலீசுக்குத் தெரிவிக்கலாம்.. ‘

மேற்கொண்டு படிக்க முடியாத படி கண்ணீர் கண்காளை மறைக்க, தள்ளாடிய கால்களைச் சமநிலைக்குக் கொண்டுவர இயலாது, சுப்பராமன் நாற்காலியில் பொத்தென்று அமர்ந்த்ார்.

‘அன்னா! தற்கொலை செய்து கொள்ளுவது பாவமாக இருக்கலாம். ஆனாலும், அதைத் தவிர வேறு வழியற்ற நிலையில் இருப்பவரைக் கடவுள் கட்டாயம் மன்னிப்பார். எலும்பும் சதையும் இடையே ஒடும் இரத்தமுமாக நான் உயிரோடு உங்கள் முன் நின்று, ‘ நான் இப்படியெல்லாம் செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள் ‘ என்று கதறினாலும் நீங்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை.

முப்பத்திரண்டு வருஷங்கள் நிழல் போல் உங்களோடு ஒட்டிக்கொண்டிருந்த உறவின்பெயராலும், உங்களுக்குச் செய்துவிட்ட துரோகத்தால், மனச்சாட்சியின் உறுத்தலைத் தாள முடியாமல் உயிரையும் விடத் துணிந்த மானி என்னும் தகுதியின் பெயராலும் உங்களிடம் நான்விடுக்கும் கடைசி வேண்டுகோள், ‘மீனாவை விரைவில் அழைத்து வந்து அந்தப் பையன் ராகவனுக்கே அவளை மணமுடித்து வையுங்கள் ‘ என்பதுதான்..

நான் உயிரை மாய்த்துக்கொண்டது பற்றி யாருக்குமே தெரிய வேண்டம். இந்தக் கடிதம் பற்றிய செய்தியும் யாருக்கும் தெரிய வேண்டாம்!

உங்கள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக! மீனாவுக்கு என் ஆசிகள்.

நன்றி மறவாத,

சொர்ணம். ‘

jothigirija@vsnl.net Published in Ananda Vikatan / 18.2.1968

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா