அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

சின்னக்கருப்பன்


சமீபத்தில் அரசாங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடந்தபோதும், அதன் பின்னர் ஜெயலலிதா அரசு அவர்கள் மீது எடுத்த அடாவடி நடவடிக்கைகள் போதும், பல எழுத்தாளர்களும், பல பத்திரிக்கைகளும், ஜெயலலிதா அரசுக்கு ஆதரவாக எடுத்த நிலைப்பாட்டைக் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

அரசாங்க ஊழியர்கள் மீது பொதுமக்களுக்கு எந்தவிதமான நல்ல அபிப்ராயமும் கிடையாது என்பது உண்மைதான். எனக்கும் அவர்கள் மீது பாசம் கிடையாது. அரசாங்க ஊழியர்கள் மக்களுக்கு உதவும் நோக்கம் கொண்டவர்கள் அல்லர் என்பது என்னைப் பொறுத்த வரையில் என் அனுபவத்தைப் பொறுத்த மட்டில் உண்மை. ஒரு அரசாங்க ஊழியரை செருப்பால் அடிக்க நினைத்ததும் உண்டு. ஒவ்வொரு முறையும் அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து வெளியே வரும்போது லஞ்ச பிசாசுகள் என்று நான் திட்டாமல் வந்ததில்லை.

அரசு ஊழியர்கள் மீது மிகவும் வெறுப்பு பொது மக்களுக்கு இருப்பது உண்மைதான் என்றாலும், பல அரசு ஊழியர்கள் மெளனமாகப் பணி புரிந்து வருவதை மறுக்க முடியாது. பேருந்து ஊழியர்கள் அரசு ஊழியர்களிடையே மிகவும் திறமைசாலிகள் என்பதையும், குண்டும் குழியுமான சாலைகள், வேலையில் மிகுந்த அழுத்தங்கள் தரும் நிர்வாகம், கொள்ளளவிற்கு மேல் பன்மடங்கு மக்களை ஏற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், ஒத்துழைப்பும், புரிதலும் அளிக்காத பொதுஜனம் இவற்றிற்கிடையே பேருந்து ஊழியர்கள் ஆற்றும்பணி மிகச் சிறப்பானது என்பதை இங்கே பெருமிதத்துடன், அவர்கள் பற்றிய நன்றியறிதலுடன் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அரசு பேருந்து நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதற்குக் காரணம் நிச்சயம் இந்த ஊழியர்கள் அல்ல. ஊழல் மலிந்த நிர்வாகமும், அரசுமே காரணம் என்பதே வெளிப்படை. பெரும்பாலான ஊழல்கள் மேலிடத்தில் ஆரம்பித்து கீழே கசிபவைதான் என்பது அரசில் பணிபுரிபவர்களுக்கு தெரிந்த விஷயம்தான்.

பொதுமக்கள் ஆதரவு இல்லை என்பதே ஒரு பம்மாத்து. பொதுமக்களின் ஆதரவு எந்த வேலை நிறுத்தத்திற்கும் இருக்காது. விவசாயிகள் வேலை நிறுத்தம் செய்தால் நகரவாசிகளுக்குப் பிடிக்காது. பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் பேருந்து உபயோகிப்பாளர்களுக்குப் பிடிக்காது.

ஆக பொதுமக்கள் ஆதரவு இல்லாததால்தான் இந்த வேலைநிறுத்தம் தோல்வி அடைந்தது என்பது பொய். எந்த அளவுக்கு அரசாங்க ஊழியர்கள் ஊழல்வாதிகளோ அந்த அளவுக்கு பொதுமக்களும் ஊழல்வாதிகள்தான். அவசரமாக செய்து முடிக்க லஞ்சம் கொடுக்காத பொதுமக்களை நானும் பார்த்ததில்லை. அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள்தாம். அரசாங்க ஊழியர்களும் ஊழல்வாதிகள்தாம். பொதுமக்களும் ஊழல்வாதிகள்தாம். அதனால்தான், பெரும் ஊழல்வாதிகளைக் கூட மக்கள் கண்டுகொள்ளாமல் ஓட்டுப்போட்டு முதல்மந்திரிகளாக ஆக்குகிறார்கள். ஆகவே, ஏதோ பொதுமக்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்கள் என்பதும், அரசாங்க ஊழியர்களே மோசமானவர்கள் என்பதும் நம்ப இயலாதது. அரசாங்க ஊழியர்கள் மிக மோசமாக பொதுமக்களிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், ஓய்வூதியம் உண்டு என்ற அரசாங்கம் ஒப்புக்கொண்டு வேலையில் சேர்த்த பின்னால், அது கிடையாது என்று பல்டி அடிக்கும்போது அதனை மீட்கவும், அதற்காக போராடவும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது மொத்தமாக 2 லட்சம் ஊழியர்கள் வேலையிலிருந்தே தூக்கப்படுவது நிச்சயம் சரியல்ல.

முதலில் அரசாங்க ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் உரிமை உண்டா இல்லையா என்ற கேள்விக்கு வருவோம். நிச்சயம் இருக்கிறது. அரசாங்க ஊழியர்களுக்கும் போலீஸ் துறையில் பணிபுரிபவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தங்களது உரிமைகளையும் தங்களது குற்றச்சாட்டுகளையும் சரி செய்துகொள்ள தங்கள் வாழ்க்கைத்தரத்தில் தாழ்ந்து போகாமல் இருக்க குரல்கொடுக்க ஒரு இடம் வேண்டும். அதுதான் ஜனநாயகமாக இருக்கும். அந்த உரிமையைப் பறிக்கும் எஸ்மா டெஸ்மா போன்றவை தவறான சட்டங்கள்தான் என்பது என் கருத்து. இண்டெர்நேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் உருவாக்கிய அடிப்படை உரிமைகளின் கீழ், வேலை நிறுத்தம் செய்வதும் ஒரு அடிப்படை உரிமைதான். ஆனால், அந்த ஒரு காரணத்துக்காகவே, இந்தியா அந்த மாநாட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவருகிறது. அவ்வாறு கையெழுத்திட்டால், அரசாங்க ஊழியர்களுக்கும் போலீஸ் போன்ற அமைப்புக்களுக்கும் யூனியன் வைக்க உரிமையையும் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையையும் வழங்கவேண்டும்.

அத்தியாவசிய பணி பாதுகாப்புச் சட்டப்படி அரசு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐந்து நாட்களுக்குள்ளேயே, தாங்கள் பணியில் சேர முன்வந்த போது விசாரணை, ஒரு மாதச் சம்பளம் வெட்டு என்று அவர்களை பணியில் சேரவிடாமல் செய்கிறார்களெனில், இவர்கள் பணி அத்தியாவசிய பணி என்று சட்டம் அவர்கள் மேல் பாய்ந்தது எப்படி நியாயமாகும் ? (தமிழகத்து டெஸ்மாவில் அவசர அவசரமாக கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் அத்தியாவசிய வேலையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன!)

இடதுசாரி தொழிற்சங்கங்களாலும், திமுக அதிமுக தொழிற்சங்கங்களாலும் தொடர்ந்து வேலைநிறுத்தங்களைச் சந்தித்து வரும் பொதுமக்களுக்கு இப்படிப்பட்ட உரிமையே அவர்களுக்கு இல்லாமல் இருந்தால் நல்லது போலத்தான் தோன்றும். (திமுக ஆட்சியில் இருந்தால் அதிமுக தொழிற்சங்கம் வேலை நிறுத்தம், அதிமுக ஆட்சியில் இருந்தால் திமுக தொழிற்சங்கம் வேலை நிறுத்தம், யார் ஆட்சியில் இருந்தாலும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்) ஆனால், பொதுமக்கள் என்று சொல்லப்படுபவர்களும் பல நிறுவனங்களில் ஊழியர்களாக இருப்பவர்களே என்பதும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது.

ஆனால் வேலை நிறுத்தம் செய்ய சில அடிப்படைகளை உருவாக்கிக்கொள்வதும், அதன் அடிப்படையில் நிறுவனத்தின் மேலாளர்களும், நிறுவன ஊழியர்களும் ஒரு ஒப்பந்தத்துக்கு வருவதும் அவசியம்.

அரசாங்க ஊழியர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவர்களை சரியாக வேலை வாங்கத்தெரியாத அரசாங்கங்கள்தானே பொறுப்பு. அவர்களை வேலை செய்யவைக்க ஜனநாயகமுறைப்படியான நடவடிக்கைகளையே எடுக்க வேண்டுமே தவிர ஒரு சர்வாதிகார அணுகுமுறையோடு நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது.

இரண்டு லட்சம் அரசாங்கத் ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வேலை நீக்கம் செய்யும்போது, பெரும் சமூகப்பிரச்னையையே எதிர்கொள்ள நேரிடும்.

***

அரசாங்க ஊழியராக இருப்பவர் என்ன என்ன ஆட்டம் எல்லாம் போடுகிறார் என்று பட்டியலிடுகிறார்கள். உண்மைதான். பெரும்பாலான அரசாங்க ஊழியர்கள், வட்டிக்கு கடன் கொடுத்து சம்பாதிப்பவர்களாகவோ, அல்லது வேலைக்கே போகாமல் தனியாக தொழில்வைத்து சம்பாதிப்பவர்களாகவோ, கையெழுத்துப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போகும் ஆட்களாகவோ, அல்லது வேலைக்கு வந்தும் வேலை செய்யாத ஆட்களாகவோ அல்லது வேலை செய்தாலும் உதவி கோரும் பொதுமக்களை கேவலமாக நடத்துபவர்களாகவோதான் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

ஆனால், இதெல்லாம் செய்யாமல் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மக்கள், கர்மசிரத்தையோடு, கொடுத்த கூலிக்கு வேலை செய்யவேண்டும் என்ற ஆழ்மன உந்துதலோடு, லஞ்சம் வாங்காமல் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு ஜனநாயக அரசாங்கம் அவர்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடாது. லஞ்சம் வாங்காமல் இருக்கும் ஒருவர் ஓய்வூதியத்தை நம்பியும், மாதாமாதம் வரும் சம்பளத்தை நம்பியும் வாழ வழி இருக்கவேண்டும். அதன் அடிமடியிலேயே கைவைக்கும்போது அந்த ஊழியர் என்ன உணர்வார் ? ‘சே நாமும் லஞ்சம் வாங்கி அடாவடி பண்ணியிருக்கவேண்டும் ‘ என்றுதானே நினைப்பார் ? அதுதான் ஆபத்தானது.

அரசாங்கம் என்ன அடிப்படைகளுக்கு ஒப்புக்கொண்டு ஒரு ஊழியரை ஒரு வேலையில் நியமித்ததோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். அதனை நம்பி, தன் வாழ்க்கையை நிர்ணயித்துக்கொண்டு ஊழியம் பார்க்கவருபவன் ஏமாற்றப்படக்கூடாது.

ஆந்திரபிரதேசத்தில் ஓய்வூதியம் கொடுக்க ஏறத்தாழ 2500 கோடி ஆகிறது என்றும் தமிழ்நாட்டில் 4300 கோடி ஆகிறது என்றும் அறிக்கைகள் வந்திருக்கின்றன. முதலில் எப்படி இவ்வளவு அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்தில் வேலை செய்கிறார்கள் ? அதிமுக அரசும் திமுக அரசும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கட்சி ஆட்களுக்கு வசதி செய்துதர இவ்வாறு அரசாங்க வேலைகளைப் பயன்படுத்திக்கொண்டார்களா ? இவ்வாறு வீங்கிப்போன அரசு ஊழியர் எண்ணிக்கைக்கு, 1964இலிருந்து ஆட்சியில் இருக்கும் திராவிடக்கட்சிகளின் பங்கு என்ன ? பெரும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்களாக இருப்பவர்களை விட தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேல் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. ஏன் இவ்வாறு வீங்கியது தமிழ்நாடு அரசுத்துறை ? மத்திய அரசிடமிருந்து ஆக்கப்பூர்வமான பணிகளுக்காகப் பெறப்படும் பணம் இவ்வாறு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கே செல்கிறது என்று அறிந்து மத்திய அரசு தமிழ்நாட்டு அரசை கண்டித்ததா ? பல அரசு ஊழியர்கள் வேலை செய்வதில்லை என்றால், அதற்குக் காரணம் அரசியல் செல்வாக்கு மூலம் வேலை பெற்றது காரணமா ?

இப்படிப்பட்ட அரசு ஊழியர்களை விட்டு விடுங்கள். எந்த அரசியல் செல்வாக்கும் இல்லாத, உருப்படியாக வந்து வேலையைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போகும் சாதாரண அரசு ஊழியர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களை எவ்வாறு குற்றம் சொல்லமுடியும் ? இப்படிப்பட்ட சில உருப்படியான அரசு ஊழியர்கள் பலர் இருப்பதால்தானே அரசு ஓடுகிறது ?

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்பது தவறு, மக்கள் வறுமையில்வாடும் ஒரு நாட்டில் இவர்கள் சலுகை பெறுவது தவறு என்பது போன்ற ஒரு சொத்தை வாதம் இருக்க முடியாது. முதலாவது இவர்கள் சலுகைக்காகப் போராடவில்லை. வேலையில் சேரும்போதே கொடுக்கப்பட்ட உத்திரவாதமான ஓய்வூதியத்தை நிறுத்துவதனால்தான் போராடுகிறார்கள். இவர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்தினால், ஒரு லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கும் மேலே எழுவார்கள் என்று அரசு உததரவாதம் கொடுக்கிறதா ? அரசு எப்படியெல்லாம் வீண் செய்கிறது என்று ஆய்வு இல்லாமல் சும்மாவேனும் அரசு ஊழியர்கள் ஊதியம் பற்றிப் பொருமுவது கண்ணியமற்ற செயல். அரசின் ஊழலுக்கு துணை போகும் செயல்.

அரசு ஊழியர்களின் பணி எப்படி அரசுக்கும் மக்களுக்கும் பயன்படுகிறது என்று ஒரு உள்தணிக்கை செய்து , அதன் பயன்பாடுகள் பற்றிய பிரக்ஞையை மக்களிடையே ஏற்படுத்த தொழிற்சங்கங்கள் முயல வேண்டும். தொழிற்சங்கங்களின் வேலை உறுப்பினர்களைப் பாதுகாப்பதே, ஊழியர்கள் மீது தீர்ப்பு வழங்குவதல்ல என்று சங்கங்கள் கொண்டுள்ள கொள்கை ஓரளவு சரிதான் என்றாலும், ஊழியர்களிடையே , மக்களை மதிக்கும் போக்கு, வேலையில் சிரத்தை காண்பித்து மக்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் போக்கு இவற்றை வளர்க்கும் விதத்தில் பயிற்சிகள் மேற்கொள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைக் கலாசாரத்தை வளர்க்க வேண்டும்.

எப்போதோ நடைமுறைபடுத்தியிருக்கவேண்டிய இந்த வழிமுறைகளை இப்போதேனும் மேற்கொள்வது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும்.

லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு லஞ்சம் ஊழல் செய்யும் அரசாங்க ஊழியர்களை தண்டியுங்கள். நான் ஆதரிக்கிறேன். ஏராளமான அரசாங்க ஊழியர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் கூறினீர்கள் என்றால், அதற்கு தகுந்தாற்போல, புதிய ஆட்களை அரசாங்க வேலைக்கு எடுப்பதை நிறுத்தி வையுங்கள். நான் ஆதரிக்கிறேன். 50 வயதுக்கு மேற்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் திட்டங்களைக் கொண்டுவாருங்கள். நான் ஆதரிக்கிறேன். அரசாங்க ஊழியர்களை மேலும் அதிகமாக வேலை செய்யவைக்க திட்டங்களையும், பயிற்சி வகுப்புக்களையும் கொண்டுவாருங்கள். நான் ஆதரிக்கிறேன். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் போன்ற திட்டங்களைக் கொண்டுவந்து திறமையையும் உழைப்பையும் கெளரவியுங்கள். நான் ஆதரிக்கிறேன். அதனை விட்டுவிட்டு, ஒரு நேர்மையான ஊழியன் நம்பியிருக்கும் ஓய்வூதியத்தில் கை வைத்தீர்கள் என்றால், அது என்ன காரணமாக இருந்தாலும், ஆதரிக்க இயலாது. அது அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை மீறுவதாகும்.

***

ஜெயலலிதா அரசு போன்று ஜனநாயக நெறிமுறைகளை தூசாக கருதும் சர்வாதிகார அரசு இதுவரை தமிழ்நாட்டில் வந்ததில்லை. அரசு ஊழியர் தலைவர்களை நடுராத்திரியில் கைது செய்யும் ஜெயலலிதா போன்ற லும்பன்களுக்கு ஜனநாயக நெறிமுறைகள் என்றாலும் என்னவென்று தெரியாது, அவருக்கு ஓட்டுப்போட்ட மாக்களுக்கும் ஜனநாயகம் என்றால் என்னவென்றும் தெரியாது. அதே மாக்கள், இன்று ஜெயலலிதாவின் அராஜக நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குவதும் எனக்கு ஆச்சரியமான விஷயமில்லை. ஆனால், படித்தவர்கள், சிந்தனையாளர்கள், மக்கள் நலத்தில் அக்கறையுள்ளவர்கள், ஜனநாயகவாதிகள் என்று நான் கருதிவந்த பலரும் இந்த சமயத்தில் ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாடு எடுத்திருப்பது எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமுமான விஷயம்.

***

இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ள ஓட்டைகளை தங்களுக்குச் சாதகமான கோடாலிக்காம்பாக ஆக்கிக்கொண்டு, அந்த அரசியலமைப்புச் சட்டத்தையே அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் ஜெயலலிதா, லல்லுபிரசாத் யாதவ் போன்ற புல்லுருவிகள். இவர்களை ஒப்பிடும்போது காங்கிரசோ அல்லது பாரதிய ஜனதா கட்சியோ ஆயிரம் மடங்கு மேலான ஜனநாயக அமைப்புகள். ஜெயலலிதா லல்லுபிரசாத் யாதவ் போன்ற அரசியல்வாதிகள் மத்தியில் அமர்ந்தால், இந்தியாவில் இருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயக நெறிமுறைகளுக்கும், சட்டம் ஒழுங்குக்கும் ஆபத்து. அதனைவிட ஆபத்து, இப்படிப்பட்ட அரசியல்வாதிக்கு ஆதரவு தரும் பத்திரிக்கையாளர்களும், படித்தவர்களும்.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation