திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்

This entry is in the series 20090724_Issue

பி.ஏ.ஷேக் தாவூத்


சமூக அக்கறையுடன் எழுதுவதாக சொல்லிக் கொள்ளும் நண்பர் சின்னக்கருப்பனின் கட்டுரையிலும், அதிலிருந்து நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலிலும் சமூக அக்கறை இல்லாததாலேயே மீண்டும் எதிர்வினையாற்ற வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன். இந்தியாவில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர் அதாவது இருவேளை உணவைக் கூட வயிறார உண்ணும் நிலையில் இல்லாதவர்கள். நீங்கள் குறிப்பிடும் வறுமை இவர்களை எல்லாம் திருடுவதிலோ அல்லது விபச்சாரத்திலோ தள்ளிவிடவில்லை. மாறாக கடுமையான உடலுழைப்பை கொடுத்து தம் பசியை போக்கி கொள்ளுகின்றனர். எவர்களையும் சுரண்டி தின்னாமல் வாழும் இவர்கள் எம்முடைய பார்வையில் அம்பானிகள் டாடாக்களை விட ஆயிரம் மடங்கு மதிப்பு மிக்கவர்களும் கூட. இவர்களில் 100 ல் ஒரு பகுதியினர் கூட இத்தகைய ஈனச்செயலான திருடுவதையோ அல்லது விபச்சாரத்தையோ தங்களது பிழைப்பாக எடுக்கவில்லை. திருட்டையும் விபச்சாரத்தையும் செய்பவர்கள் உடலுழைப்பை செய்யாமல் சொகுசாக வாழவேண்டும் என்ற குறுகிய மனநிலையில் இதை செய்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். பசிக்காக தான் இதை செய்கிறார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துகொண்டாலும் இத்தகைய இழிசெயல்களை செய்வதற்கு பதிலாக பிச்சையெடுத்து பசியாற்றிக் கொள்ளலாமே. திருட்டு, விபச்சாரத்தை பற்றி திரைப்படத்தில் காண்பிப்பதை மட்டுமே நிஜமென்று நம்பியிராமல் நிஜ உலகத்தின் நிலவரங்களையும் சின்னக் கருப்பன் அறிந்து கொள்ள வேண்டும்.

திருட வருகின்ற திருடனிடம் கூட மனிதநேயம் பார்க்கச் சொல்லும் சின்னக் கருப்பன் அவர்களே, நீங்கள் பேருந்தில் செல்லும்போது உங்கள் பையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாயை எடுக்கும் ஜேப்படி திருடனிடம் உனக்கு 500 ரூபாய் எனக்கு 500 ரூபாய் வைத்து கொள்வோம் என்றா (ஜெயகாந்தன் பாணியில் ) சொல்வீர்கள்? அல்லது திருடர்களைக் கூட மனிதநேயத்துடன் பார்ப்பதால் நீங்கள் வசிக்கும் இல்லம், கதவுகள் இல்லாமலா இருக்கின்றன? அல்லது கதவுகள் இருந்தாலும் தாழிடப்படாமலா இருக்கின்றன?

இன்றைக்கு திருட்டுக்கும் விபச்சாரத்திற்கும் நம்முடைய நாட்டில் கொடுப்பது குறைந்தபட்ச தண்டனைகளே. அதனால்தான் 25 முறை 50 முறை சிறை சென்றவர் என்றெல்லாம் பலரால் சாதனை செய்ய முடிகிறது. நம் நாட்டில் குற்றங்கள் பெருகி கொண்டே வருகிறதேயொழிய குறைந்தபாடில்லை. ஆனால் நீங்கள் சொல்கிற கையை வெட்டுகிற சட்டங்கள் உள்ள நாட்டில் திருட்டுகள் மிகவும் குறைவு என்ற சுடும் உண்மையை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

சமூக அக்கறையுள்ள ஒருவன் கடமையுணர்ச்சியுடன் கூடிய மனிதநேயத்தைத்தான் வெளிப்படுத்த முடியும். உதாரணமாக எல்லையில் நாட்டை காக்கும் பொருட்டு அந்நிய நாட்டு வீரர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு அவர்களின் உயிரை பறிக்கும் அதே இராணுவ வீரன் தான் நாட்டில் பெருவெள்ளம் ஏற்படுகின்றபோது மக்களின் உயிரை தம்முயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றுகிறான். மனித உயிர்களை மாய்க்கிறார்கள் என்பதற்காக இராணுவ வீரர்களுக்கெல்லாம் மனிதநேயமே இல்லை என்று சின்னக் கருப்பன் சொல்லுவாரா? இத்தகைய சித்தாந்த குழப்பத்திலிருந்து சின்னக் கருப்பன் போன்றவர்கள் விடுபட வேண்டும் என்பதற்காகவே நாம் இதை எழுதுகிறோம்.

இந்திய தேசத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்து இருப்பதற்கு அடிப்படை காரணம் இந்த நாட்டில் பேணப்படும் தனிமனித ஒழுக்கங்களே. அந்த தனிமனித ஒழுக்கத்தை தகர்த்து தரைமட்டமாக்க எவர் முயற்சித்தாலும் அதற்கு எதிராக களம் காண்பது தனிமனித ஒழுக்கத்தை பேணும் ஒவ்வொருவருடைய கடமையாகவே நாம் கருதுகிறோம். சிலருக்கு மனரீதியான சில குறைபாடுகள் இருக்கும். உதாரணமாக பார்க்கும் பல பெண்களை எல்லாம் காமக் கண்கொண்டு பார்த்து அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள நினைப்பது அதில் ஒருவகை என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. இதைப்போன்றதொரு குறைபாடுதான் ஓரின சேர்க்கையை விரும்பும் மனிதர்களின் உள்ளத்திலும் இருக்கிறது. அதாவது தன்னினத்தை சேர்ந்த ஆணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள நினைக்கும் மற்றொரு ஆணின் மனது எண்ணுவதும் இதில் ஒரு வகை. இதுவும் ஒரு உளவியல் குறைபாடு தான். ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் நண்பர் சின்னக் கருப்பன் முன்னதையும் ஆதரிப்பாரா? பிறன்மனை நோக்காமை பேராண்மை என்றல்லவா நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதற்கும் அனுமதி கேட்டு ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டார். மனம் ஒத்துப்போய் இருவர் எது செய்தாலும் குற்றமில்லை என்பது இவர்களின் வாதம். போதை பொருள் விற்பவனும் போதை பொருளை உபயோகிப்பவனும் மனம் ஒத்துப்போய் தானே செய்கிறார்கள். இவர்களும் தங்களுடைய செயல்களுக்கு சட்டரீதியான அனுமதி கேட்டால் இந்த நாடு தாங்குமா?

“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” இது தனிமனித ஒழுக்கத்திற்கு இந்த நிலம் கொடுக்கும் உச்சபட்ச மரியாதை. இங்கு உயிரை விட தனிமனித ஒழுக்கம் உயர்வானது. இத்தகைய தனிமனித ஒழுக்கத்தை தகர்க்கும் ஒரு செயலான ஓரின சேர்க்கை கண்டிக்கத்தக்கது. அதை ஆதரிப்பவர்கள் ஆட்சியாளர்களேயானாலும் கண்டிக்கத்தக்கவர்களே.

– பி.ஏ.ஷேக் தாவூத்

Series Navigation

About பி.ஏ.ஷேக் தாவூத்

பி.ஏ.ஷேக் தாவூத்

View all 14 articles →

நண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி?

This entry is in the series 20090709_Issue

பி.ஏ ஷேக் தாவூது


நீங்கள் ஓரின சேர்க்கைக்கு ஆதரவளிப்பதை பற்றியெல்லாம் எமக்கு எந்த கவலையுமில்லை.
ஆனால் நீங்கள் எடுத்த வைத்த ஒரு (குப்பை) வாதத்தை
(/* மதரீதியில், என்னுடைய மத புத்தகத்தில் என் கடவுள் இப்படி சொல்லியிருக்கிறார் ஆகையால், ஓரினப்பாலுறவை தடை செய்யவேண்டும் என்று பேசுபவர்கள், இந்த மனிதர்களை படைத்ததாக இவர்கள் நம்பும் அவர்களது கடவுள், ஏன் இந்த மனிதர்களை இப்படி படைத்தார் என்பதையும் தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். இவர்களுடைய கருத்தியலிலேயே இருக்கும் இந்த முரண்பாடு இவர்களுக்கு ஒளி காட்டட்டும். */ ) விபச்சாரிகளும், திருடர்களும், குடிகாரர்களும் தங்களுக்கான உரிமையாக இதே வாதத்தை எடுத்து வைக்கலாம் அல்லவா? அவர்களையும் கடவுள்தானே படைத்திருக்கிறார் இந்த குணநலன்களோடு. (ஒருவேளை விபச்சாரிகளையும் , திருடர்களையும் , குடிகாரர்களையும் அரவணைத்து ஆதரித்தது எம்முடைய கலாச்சாரம் என்று அடுத்த பாட்டு பாடினாலும் அதைப்பற்றியும் எமக்கு கவலயில்லை. )


P.A.Shaik Dawood.
(உதிரம் கொடுத்து உயிர் காப்போம்.
மக்களிடையே மனிதநேயம் வளர்ப்போம்.)
pasdawood@gmail.com

Series Navigation

About பி.ஏ ஷேக் தாவூது

பி.ஏ ஷேக் தாவூது

View all 3 articles →