சேந்தனாரின் கடவுளர் இருவர், காதலியர் இருவர்

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

முனைவர் மு. பழனியப்பன்.


திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்ற இரு பகுதிகளையும் உள்ளடக்கியது ஒன்பதாம் திருமுறை. அகத்துறை சார்ந்த திருக்கோவையாரின் சாயல் இத்திருமுறையில் உண்டு. ஏறக்குறைய பத்துப் பதிகங்கள் அகத்துறை சார்ந்தன என்பது மேற்கருத்திற்கு அரண் சேர்க்கும்.

இத்திருமுறையுள் சேந்தனார் மொத்தம் நான்குப் பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றுள் மூன்று திருவிசைப்பாவில் அடங்கும். ஒன்று திருப்பல்லாண்டு ஆகும். இவற்றுள் இரண்டு திருவிசைப்பாக்கள் அகப்பொருள் அடிப்படையில் அமைவன. திருவாவடுதுறை இறைவனைக் காதலித்த மங்கை ஒருத்தியைப் பற்றித் தாய் கூறுவதாகவும், திருவிடைக்கழி முருகனைக் காதலித்தப் பெண் ஒருத்தியைப் பற்றித் மற்றோர் தாய் கூறுவதாகவும் இவ்விரு பதிகங்கள் அமைந்துள்ளன.

திருமுறை வரிசையில் திருவிடைக்கழி முருகனைப் பற்றிச் சேந்தனார் ஒரு பதிகத்தைப் பாடியிருப்பது முற்றிலும் புதுமையானது. இதுவரை எவரும் பாடாதது. இதற்கு முன்னுள்ள திருமுறைகளில் சிவன் பற்றிய செய்திகளே இடம் பெற்றிருக்க இத்திருமுறை அவற்றில் இருந்து இவ்வழியால் மாறுபடுகின்றது.

மேலும் இத்திருமுறையில் சேந்தனார் பாடிய பல்லாண்டும் குறிப்பிடத் தகுந்த மாற்றம் உடையதாகும். ஆண்டவனுக்கே பல்லாண்டு வாழ வாழ்த்தும் தன்மையதான இம்முறை வைணவ நடைமுறைக்குச் சரிசமமானது என்பது கருதத்தக்கது.

இவ்வாறு ஒன்பதாம் திருமுறை வேறுபட்ட பல கருத்து மாறுபாடுகளுக்கு இடமளித்து மற்ற திருமுறைகளில் இருந்து வேறுபட்டு நிற்கிறது என்பது போற்றத் தக்க உண்மையாகும்.

இத்திருமுறையுள் இடம் பெற்றுள்ள சேந்தனாரின் இரு அகச்சார்பு பதிகங்களும் தம்முள் வேறுபட்டமைகின்றன. சிவனைக் காதலித்த தலைவியின் காதல் மறைமுகமாகவும், நாகரீகமாகவும், எல்லை கடவாததாகவும் அவளின் தாயால் வெளியிடப் பெற்றுள்ளது.

முருகனைக் காதலித்த தலைவியின் காதல் – காதல் என்ற எல்லையைக் கடந்து காமம் என்ற எல்லையைத் தொட்டுவிடுகிறது. இவளின் காதல் இவளின் தாயால் வெளிப்படையாக, நேர்முகமாக, காதல் எல்லை கடந்ததாக வெளிப்படுத்தப் பெற்றுள்ளது.

மேலும் சிவனைக் காதலித்தவள் வயதில் மூத்தவளாக விளங்குகிறாள். முருகனைக் காதலித்தவள் வயதில் இளையவள். சேந்தனார் பாடிய இவ்விரு அகம் சார் பதிகங்களில் எதற்காக இவ்வேறுபாடு பின்பற்றப் பட்டுள்ளது என்பதை அறியத் தூண்டுவதாக இப்பதிகங்;கள் உள்ளன. அவற்றை விவரிப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

சிவனைக் காதலித்தவள்

வயது

இவள் அரிவை பருவத்தினள். அதாவது இருபத்தைந்து வயதை அடைந்தவள்(68). இவள் தையல் (63) என்றும், இளமான் (65) என்றும், சேந்தனாரால் குறிப்பிடப் பெறுகிறாள்.

இவளின் இயல்பு

இவள் திலக நுதலி(61). இவள் வெண்ணீறு அணிபவள். அஞ்ிசெழுத்து அன்றி

வேறு பேசாதவள்.

இவளின் காதல் வருத்தம்

இவள் சிவபெருமானின் நெடிய திண்தோளைப் புணர எண்ணும் காதல் நோக்கினள்(59). இவளின் அழகும், வளையல்களும் காதல் மெலிவால் இவளை விட்டு நெகிழ்ந்தன(66).

இவளின் எதிர்பார்ப்பு

இவள் சிவபெருமானின் கொன்றை மலர் மாலையைப் பெற்று அணிய விரும்புகிறாள்(60). இவள் சிவபெருமானின் அருளை எண்ணி அழிகிறாள்(58). இவள் சிவபெருமானின் திருவிளையாடல்களை ஓயாமல் சொல்லிய வண்ணம் உள்ளாள்.

இவ்வாறு சிவனைக் காதலிப்பவள் சிவவழிபாட்டுச் சிந்தனை மிக்கவளாக உள்ளாள். இப்பதிகத்தின் அடுத்து அமைவது முருகனைப் பற்றிய பதிகம். அதில் காணப் பெறும் காதலி இவளிலிருந்து மாறுபட்டவள்.

முருகனைக் காதலித்தவள்

வயது

இவள் மடந்தைப் பருவத்தினள் (73). அதாவது அரிவைக்குச் சிறியவள். சிறுமி(73), மெல்லியல் (69) என்ற இவளைப் பற்றிய வயதுக் குறிப்புகள் இப்பதிகத்துள் காட்டப் பெற்றுள்ளன.

இவளின் இயல்பு

இவள் வெருளும் மானின் விழிகளைப் போன்ற விழிகளை உடையவள்(76). கொவ்வைப் பழம் போன்ற இதழ்களை உடையவள்(73). துடி போன்ற இடையை உடையவள். சுடரோ, மதியோ, மின்னலோ, பவளத்தின் குழவியோ, சித்திரமோ, மணித்திரளோ, சுந்தரத்து அரசோ என இவள் முருகனைக் காண்கிறாள். இவளின் பார்வை முருகனின் புறஅழகு சார்ந்து அமைந்துள்ளது.

இவளின் காதல் வருத்தம்

இவள் காதல் வருத்த மேலீட்டால் பசலை நோயைத் தன் தனங்களில் பெற்றாள்(70). இவளின் இடையில் இருந்த மேகலை இவளின் மெலிவாள் நீங்;கியது(71). மேலும் இவள் காதல் வருத்தத்தால் மடல் ஏறவும் துணிந்தாள்(76). மடல் ஏற முயன்றாலும் இவளைக் கண்கொண்டு முருகன் பார்க்கவில்லை(77).

இவளின் எதிர்பார்ப்பு

முருகவேள் தனக்கு அருளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இவளிடம் இருந்தது.

மேற்கண்ட இருபெண்களில் அதிக காதல் வருத்தம் கொண்டவளாக முருகனைக் காதலித்தவள் காணப் பெறுகிறாள்.

சிவன் – முருகன் இருவரையும் தந்தை மகன் என்ற உறவுமுறை அமைப்பில் காணும் முறைமையின் பாற்பட்டதாக இப்பதிகங்கள் அமைந்துள்ளன. இவர்களைக் காதலிப்பதாகப் பதிகவழி அறியலாகும் இரு பெண்களும் வயது, காதல் திறம், வருத்தம் ஆகியவற்றால் வேறுபடுத்தப் பெற்று காட்டப் பெற்றுள்ளார்கள்.

இதற்கு என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. சிவன், முருகன் ஆகிய இரு தெய்வங்களுக்கு இடையே உள்ள உறவு முறை வயது வேறுபாடு, அருளலில் உள்ள எளிவந்த தன்மை, பக்தர்கள் அணுகும் முறை ஆகியனவே இவற்றிற்குக் காரணங்களாக அமைகின்றன.

இவ்வேறுபாடுகளின் அடிப்படையில் சில முடிவுகளுக்கும் வரமுடிகின்றது. சிவபெருமானின் பக்தர்கள் பக்தியில் முதிர்வு நிலையை அடைந்தவர்கள் என்றும், முருகனின் பக்தர்கள் பக்தியில் இளமைநிலையில இருப்பவர்கள் என்பதும் இப்பதிக வேறுபாட்டின் மூலம் பெறக் கூடிய இன்றியமையாத முடிவாகும்.

மேலும் தெய்வம் கருதிய காதல் பாடல்களைப் படைக்கும்போது அந்தத் தெய்வங்;களின் தன்மைக் கேற்ப மாறுபாடு கொண்டு பாடல்கள் படைப்பாளர்களால் படைக்கப்பெற்றுள்ளன என்பதும் தெரியவருகிறது.

இவ்வழியில் சேந்தனார் என்ற படைப்பாளர் ஒரே நிலையில் இருபதிகங்;களை வரையப் புகுந்தாலும் அவற்றில் சில மாறுபாடுகளைப் புகுத்தி அதன் மூலம் சில கருத்துக்களை பதிய வைக்க முனைந்துள்ளார் என்பது தெளிவு.

Muppalam2003@yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்